நம்மள விட்டுட்டுப் படத்தெ எடுக்குறவன் யாரு?
செய்யு - 551
ஒரு வழியா பொண்ணு மாப்புள்ளையோட சாப்பாட்ட
முடிச்சு மண்டபத்த விட்டுக் கெளம்ப ரண்டரை மணிக்கு மேல ஆயிடுச்சு. பொண்ணுக்கும் மாப்புள்ளைக்கும்
போவ ஒரு இன்னோவா காரு இருந்துச்சு. காருக்குன்னு கொடுத்திருந்த காசியில வாங்கியிருந்தா
அந்தக் கார்ல வர வேண்டியவங்க அவுங்க. இப்போ வாடகைக்கு எடுத்திருந்த இன்னோவா கார்ல
பொண்ணு மாப்புள்ளைய ஏத்தி, அத்தோட இன்னும் ரண்டு வேனுங்க நின்னதுல கடெசீயா மண்டபத்து
மிச்சமிருந்த ஒறவுக்காரவுங்கள அந்த வேனு ரண்டுலயும் எத்தி வுட்டாச்சு. வேனு கெளம்புற
நேரத்துல ராசாமணி தாத்தா சொன்னிச்சு, "ஒண்ணு நேரத்தோட கெளம்பி நாலரைக்குள்ள
போவ முடியும்ன்னா நேரா பொண்ணு வூட்டுப் பாக்கப் போயிடுங்க. இல்லாட்டி அப்பிடியே
ஆவுடையாரு கோயிலுக்குப் போயி சாமியக் கும்புட்டுப்புட்டு, மொல்லமா ஆறு மணிக்கு மேல
போயிடுங்க! தாலி கட்டுன நேரம் கூடிப் போச்சுன்னு மாப்ளே சொல்லி வருத்தப்பட்டுகிட்டு
இருக்காப்புல! பண்ணுற முடிவெ செரியாப் பண்ணிப் போயிச் சேருங்க!"ன்னு.
அதுக்குப் பாலாமணி சொன்னாம், "ஆவுடையாரு
கோயிலுக்குப் போயிட்டு அப்பிடியே இன்னும் ரண்டு கோயிலுக்குப் போற வழியில வேண்டுதலு
இருக்கு. அதுக்கும் போயிட்டுதாம் போவணும்"ன்னு.
"மழைக்காலமா இருக்குறதால நேர்ரா வூட்டுக்கு
வந்துப்புட்டுக் கூட நாளைக்கு நெதானமா கோயிலுக்குப் போயிட்டு வந்துப்புடலாம்! நம்ம
நல்ல நேரம் நேத்து ராத்திரி ஆரம்பிச்சி கலியாணம் முடியுற இந்நேரம் வரைக்கும் மழையில்ல.
மழையில்லாதப்பவே வூடு சேந்துப்புடறது நல்லதுல்லா! ராத்திரிக்கி வானம் எப்பிடி இருக்குன்னு
சொல்ல முடியாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"இத்து வேண்டுதலு மாமா! கலியாணத்தெ
முடிச்சிட்டு சிலதெ செய்யுறதா வேண்டிருக்கிறேம். கலியாணத்துல கொஞ்சம் நேரமாச்சு. ரொம்ப
நேரம்லாம் ஆவாது. போனமா கும்புட்டமா, வேண்டுதல செஞ்சமான்னு வந்துப்புட்டே இருப்பேம்!"ன்னாம்
பாலாமணி.
"கலியாணம் மொல்லமா ஆரம்பிச்சி மொல்லமா
நடந்தாலும் முடிஞ்ச வேகத்தப் பாத்தீயல்லா! இனுமே எல்லாம் வேக வேகமா நடக்கும். அவ்வேம்
வேண்டுதலு இருக்குன்னு சொல்றதலா அதெ செஞ்சிப்புட்டாம்ன்னா மனநெறைவா போயிடும்டி வெங்கு!"ன்னுச்சு
சரசு ஆத்தா ஒத்து ஊதுறாப்புல.
அதுக்கு மேல யாரு என்ன சொல்றதுன்னு புரியாம
பாலாமணிப் போக்குல போறதுதாங் நல்லதுன்னு சனங்க எல்லாம் மெளனமா இருந்துச்சுங்க. அந்தப்
படியே போறதுன்னு முடிவாச்சு. "மழெ நேரம்! இருட்டு வாரறதுக்குள்ள பாத்துப் பதனமா
சூதனாமா வந்துப்புடணும்!"ன்னு எளிமையா முடிச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
பொண்ணு மாப்ளே ஏறி உக்கார இன்னோவா காரு,
பின்னாடியே ரண்டு வேனும் கெளம்ப தயாரா நின்னுச்சு. சுப்பு வாத்தியாரு சந்தானம் அத்தானையும்,
ராமு அத்தானையும் பாத்து, "நீங்களும் பொண்ணு மாப்புள்ளையோட தொணைக்குப் போயி
வூடு வந்துச் சேருங்க!"ன்னு சொன்னாரு. அதெ கேட்டுக்கிட்டு ரண்டு அத்தான்களும்
தங்களோட குடும்பத்தெ தூக்கிப் போட்டுக்கிட்டு பின்னாடி போறதுக்குத் தகுந்தாப்புல
கார்ரக் கொண்டுப் போயி நிறுத்திச்சுங்க.
சுப்பு வாத்தியாரு ஒரு வேனைக் காசியப் பாக்காம கொண்டாந்தது நல்லதாப்
போயிட்டுன்னு நெனைச்சிக்கிட்டாரு. இந்த வேன்ல சுருக்கா வூடுப் போயிச் சேந்தாத்தாம்
மித்த மித்த வேலைகளப் பாக்க முடியும்ன்னு, "நாஞ்ஞ இந்த வேன்ல கெளம்பி மின்னாடிப்
போயி பண்ண வேண்டிய ஏற்பாடுகளெ பண்ணி வைக்கிறேம். கலியாணத்துக்கு இஞ்ஞ வர்ற முடியாதவங்க
பொண்ணு மாப்புள்ளையப் பாக்க வூட்டுக்கு வந்திருப்பாங்க. அவங்களையும் பாத்து கவனிச்சிக்கிட்டு
இருக்கேம். பொண்ணு மாப்புள்ளையும் போவ வேண்டியக் கோயிலுக்குப் போயிட்டு ஆறு மணிக்கு
மேல வந்துப்புடட்டும்! அதுக்கு மேல தாமசம் பண்ணிப்புட வாணாம்!"ன்னாரு ராசாமணி
தாத்தாவப் பாத்து சுப்பு வாத்தியாரு.
அதெ கேட்டு, "அப்பிடியே பண்ணிப்புடு
மாப்ளே!"ன்னு சொல்லி மறுநாளு காலையில ஆரம்பிச்சிப் பாக்குக்கோட்டைக்கு அனுப்ப
வேண்டிய அழைப்புலேந்து மொத்தமா முடிக்க வேண்டிய மூணு அழைப்புகள பத்தியும் சுப்பு வாத்தியாரும்,
ராசாமணி தாத்தாவும் கலந்துக்கிட்டாங்க. அது முடிஞ்ச பிற்பாடு சுப்பு வாத்தியாரு எடுத்துட்டு
வந்த வேன்ல விருத்தியூரு பெரிம்மா, பெரிப்பா, பரசு அண்ணனோட குடும்பம், தேன்காடு சித்தி,
சிப்பூரு பெரிம்மா, வெங்கு, ஆயி, விகடு எல்லாத்தையும் ஏத்தி அவரும் ஏறிக்கிட்டாரு.
சுப்பு வாத்தியாரோட வேன் கெளம்பி மின்னாடிப் போவ ஆரம்பிச்சது. அதெ தொடர்ந்து இன்னோவா
காரு கெளம்ப, பின்னாடி நின்ன ரண்டு வேனுங்களோட சந்தானம் அத்தான், ராமு அத்தானோட காரும்
கெளம்புனுச்சு. மண்டபம் இருக்குற தஞ்சாரூ ரோட்டுலேந்த பாக்குக்கோட்டை டவுனு வரைக்கும்
ஒண்ணா வந்த வாகனங்க ஆர்குடி ரோடு வந்ததும் பிரிய ஆரம்பிச்சதுங்க. ஆர்குடி ரோட்டுல
சுப்பு வாத்தியாரோட வேனு வேகம் பிடிச்சிது.
"வேன் எந்த எடத்துலயும் நிக்க வாணாம்.
நேரா வூட்டுக்கு வுட வேண்டியதுதாங். கூத்தாநல்லூரு கேயெம்டி கடையில மட்டும் நிறுத்தி
ஒடனே சுருக்கா பலவாரத்த சட்டுப்புட்டுன்னு எடுத்துப்புடணும். அதுக்கு தயாரா இருந்துக்கிடுங்க!
எலே யம்பீ! போனப் போட்டு பலவாரம்லாம் தயாரா இருக்கான்னு கேட்டு, நாம்ம கெளம்பி ஒரு
மணி நேரத்துல வந்துப்புடுவேம்ன்னு சொல்லிப்புடு! யில்லன்னா நாம்மப் போயி நிக்குற
நேரத்துலத்தாம் அதெ தயாரு பண்ணிட்டு நேரத்த வளத்திப்புட்டுக் கெடப்பானுவோ!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
விகடு ஒடனே கேயெம்டி ஸ்வீட்ஸ்க்குப் போன
அடிச்சி வெசயத்தக் கேட்டாம். பலவாரம்லாம் பன்னெண்டு மணிக்கே தயாராயி அட்டைப் பெட்டியில
எடுத்துட்டுப் போவ கடைக்கு மின்னாடி கொண்டாந்து வெச்சாச்சுன்னாரு ஸவீட்டுக் கடைக்காரரு.
அதெ சுப்பு வாத்தியார்கிட்டெ சொன்னாம் விகடு. "அத்துச் செரித்தாம்டாம்பீ! நாம்ம
அப்பிடித்தானே சொன்னேம். இந்நேரத்துக்கு நாம்ம அதெ எடுத்துட்டு வூடப் பாக்கப் போயிருந்திருக்கணும்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு பெருமூச்செ வுட்டுக்கிட்டு. சுப்பு வாத்தியாரு கொஞ்சம் ஆசுவாசம்
ஆயிட்டார்ங்றதெ புரிஞ்சிக்கிட்டு விருத்தியூரு பெரிம்மா, "காரு, கட்டிலு, பீரோவப்
பத்தி கேட்டீயா?"ன்னுச்சு. பரசு அண்ணனும், "ஆம்மா சித்தப்பா! நாமளும் கேக்கணும்ன்னு
நெனைச்சேம்! கலியாண அலமலப்புலயே நின்னீயா? போட்டுத் தொந்தரவு பண்ண வாணாம்ன்னு கேக்கல!
அப்பாவ வெச்சிகிட்டு வேற செருமமா போச்சு!"ன்னுச்சு பரசு அண்ணன் செயராமு பெரிப்பாவக்
காட்டி.
சுப்பு வாத்தியாரு ஒண்ணும் புரியாம முழிக்க,
"அதெ ஏஞ் சித்தப்பா கேக்குறே? யப்பா கலியாணம் மதமதன்னு நடக்க அதெ பாத்துப்புட்டு
நாஞ்ஞ உக்கார, இத்துப் பாட்டுக்கு பாக்குக்கோட்டை டவுனுக்குப் போயி டாஸ்மாக்கு எங்கன்னு
வெசாரிச்சி ஒரு குவார்ட்டர்ர உள்ளார தள்ளிட்டு வந்துப்புட்டு. செரியா நாகவல்லி மூர்த்தம்
முடிஞ்சி பட்டத்தெ கட்டி ஒறவுக்காரவுங்கள வெச்சிப் போட்டோவ எடுத்துக்கிட்டு இருக்குறப்பே
இது பாட்டுக்கு மேடையில ஏறிடுச்சு. யப்போ நீயி எஞ்ஞ இருந்த சித்தப்பா?"ன்னுச்சு
பரசு அண்ணன்.
"கலியாணம் தாலி கட்டி முடிஞ்சாத்தாம்
சனங்க கெளம்ப நிக்குதேன்னு பந்திக்கு அழைச்சிட்டுப் போயிட்டு நின்னம்டாம்பீ. அந்தக்
கூட்டத்தெ நம்மாள சமாளிக்கவே முடியலடாம்பீ. பெறவு கலியாண வெளையாட்டுல்லாம் நடந்துச்சுப்
பாரு. அப்பதாங் கொஞ்சம் கூட்டம் முடிஞ்சதேன்னு மேடைக்கு வந்தேம்!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"அத்து எவம்டா நம்மள வுட்டுப்புட்டு
படத்தெ எடுக்குறவேம்? கம்பச் சுத்திக்கிட்டு அரிவாளச் சுத்திக்கிட்டு எறங்கிப்புடுவேம்டான்னு
நல்ல வேளையா மேடைக்குக் கீழே சத்தத்தெ வுட ஆரம்பிச்சிடுச்சு யப்பா! காருக்கு மின்னாடிக்
கொண்டு போயி படத்தெ எடுங்கடா? கட்டிலு பீரோலுக்கு மின்னாடி, பாத்தரப் பண்டங்களுக்கு
மின்னாடி படத்தெ எடுங்கடா, நம்மள வுட்டுப்புட்டு எவ்வம்டா படத்தெ எடுக்குறதுன்னு ஒரே
சலம்பலு!"ன்னுச்சு பரசு அண்ணன்.
"பெறவு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"பெறவென்ன பெறவு? சந்தானம், ராமு,
விகடு, நாம்ம எல்லாம் சேந்து அப்பிடியே தள்ளிக்கிட்டுக் கொண்டாந்து சந்தானத்துக் கார்ல
தள்ளுனோம். தள்ளி அப்பிடியே நானும் சந்தானமும் மறுக்கா பாக்குக்கோட்டை டவுனுக்கு
வுட்டு டாஸ்மாக்குல இன்னொரு குவார்ட்டர வாங்கி ஊத்துனப் பெற்பாடுதாங் அடங்குனுச்சு
யப்பா. அப்பிடியே மெல்ல கொண்டாந்து சாப்புட வெச்சு ஐயனராட்டம் நம்ம வேன்ல கொண்டாந்து
உக்கார வெச்சாச்சு. அப்பிடியே உக்காந்திருக்குப் பாரு ஒம்மட யண்ணன்!"ன்னுச்சு
பரசு அண்ணன்.
செயராமு பெரிப்பா நல்ல போதையில இருந்துச்சு.
"என்னடாம்பீ! கார்ர காணுங்றாம்? கட்டிலு பீரோவ எவ்வேம்டா தூக்கிட்டுப் போனது?
ஒரு பாத்திரப் பண்டத்தெ காங்கலயே? கலியாணத்துக்கு வந்தச் சனங்க எடுத்துக்கிட்டுப் போனுச்சா?"ன்னு
நாக்குக் கொளறுனபடியே கேட்டுச்சுப் பெரிப்பா.
சுப்பு வாத்தியாரு நெதானிச்சு யோசனையப்
பண்ணி வார்த்தையப் போட ஆரம்பிச்சாரு. "மொதல்ல அப்பிடித்தாம் முடிவெ பண்ணது.
பெறவு குடி வைக்கப் போறது சென்னைப் பட்டணத்துலதானேன்னு யோஜனெ பண்ணி இங்க வாங்கி வெச்சி
அங்கக் கொண்டு போயித் தேவையில்லா காசிச் செலவுன்னு வுட்டாச்சு!"ன்னு.
"அதுல ன்னா செலவுன்னு நெனைக்குறே
நீயி? கலியாணத்துல நாலு ஒறவுக்காரச் சாதிக்கார ஊருக்கார சனங்க பாக்க வாங்கி வெச்சத்தாங்
நமக்குப் பெருமெ. கொஞ்சமா நஞ்சமா செய்யுறே? அதெ எடுத்துக்கிட்டுப் போவக் கூட மாப்புள
வூட்டுச் சனங்ககிட்டெ காசி இல்லாதது மாதிரிக்கிப் பேசுறே? எல்லாம் நீயி கொடுக்குற
எடம்? ஏம் கலியாணத்துல கூடவா ரண்டு நகெ நட்டெ போடக் கூடாதுன்னு செட்டு நகையப் போட்டு
வுட்டே?"ன்னுச்சு பெரிம்மா.
"கலியாணம் எளிமையா இருக்கட்டுன்னு
சொன்னாவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஆம்மா கலியாணம் ரொம்ப எளிமையாத்தாம்
நடந்துச்சு. வேட்டு வெச்சு வெடிச்சானுவோளே அரை மணி நேரத்துக்கு, அதுக்குக் கூட காசி
நாப்பதினாயிரம்ன்னுல்லா சொன்னானுவோ. மண்டபத்துக்கு வெளியில பாத்தீல்லா! என்னவோ கொடி,
தோரணம், அலங்கார வளைவு, வெளம்பரத் தட்டின்னு? அதுக்கே ரண்டு லட்சத்துக்கு மேல ஆயிருக்கும்பா!
ன்னவோ சொல்றானாம் வேதாந்தம், அதெ கேட்டு வந்தவேம் சொன்னானாம் சித்தாந்தம்!"ன்னுச்சு
விருத்தியூரு பெரிம்மா.
"வுடுங்க யக்கா! கலியாணம் நல்ல வெதமா
நடந்து முடிஞ்ச வரைக்கும் சந்தோஷந்தாம்! நமக்கும் ஒரு கடமெ வுட்டுச்சு. மூணு அழைப்ப
முடிச்சி குடித்தனம் கொண்டு போயி வெச்சிட்டா கதெ முடிஞ்சது. இனுமே அவுங்கவுங்க குடும்பம்,
அவுங்கவுங்க பாத்துக்கிட வேண்டியதுதாங்!"ன்னுச்சு வெங்கு.
"நீயி சொல்லுவேடியம்மா! காசி இருக்குற
கையி. இல்லாதவேம் நெலையில நெனைச்சிப் பாரு!"ன்னுச்சு பெரிம்மா.
"செரி அதெ பின்னாடி பேசிப்பேம். யிப்போ
வூடுப் போயி ஆவ வேண்டியதெ பத்திப் பேசுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பேச்ச
மாத்தி வுடுறாப்புல.
"வூடுப் போயி ன்னா? போயி எறங்குனா,
ஆவ வேண்டிய காரியம் ஆயிட்டெ இருக்கும். பொண்ணு மாப்புள வந்த ஒடனே ஆலாத்தி எடுத்தாவணும்.
உக்கார வெச்சு சாப்புட கொடுத்து கோயிலுக்குக் கொண்டாரணும். பெறவு ஆவ வேண்டிய காரியத்துக்கு
பாலு, பழம், இனிப்புன்னு தயாரு பண்ணி வைக்கணும். அதுக்கேத்தாப்புல சாப்பாட்ட தயாரு
பண்ணணும். வேன வுட்டு வூட்டுல காலடி எடுத்து வெச்சா அதது அதுபாட்டுக்கு ஆயிட்டே இருக்கும்.
அதாங் சாமாஞ்செட்டுக தயாரா இருந்த வேல முடிஞ்சது!"ன்னுச்சு பெரிம்மா.
"பீரோல்ல வாங்கி பத்திரமா பூட்டி
வெச்சிருக்கேம்!"ன்னுச்சு வெங்கு.
"அடுத்தா பொண்ணு மாப்புள்ளைய அதெ
போல பூட்டி வெச்சா முடிஞ்சது! அவ்ளதாங்!"ன்னு சொல்லிச் சிரிச்சிது. சனங்களும்
அதெ கேட்டுச் சிரிச்சிது. வேனும் சிரிப்புச் சத்தத்தோட பல வெதமா பேசப் பேசப் போயிட்டே
இருந்துச்சு.
சுப்பு வாத்தியாரு சொன்னபடியேத்தாம் வேன் எங்கயும்
நிக்காம வந்து கூத்தாநல்லூரு கேயெம்ட்டி ஸ்வீட்ஸக்கு மின்னாடி நின்னுச்சு. வேனு நிக்குறதுக்கு
மின்னாடியே விகடுவும், பரசு அண்ணனும் கோதாவுல எறங்க தயாரா இருந்தாங்க. வேக வேகமா ரண்டு
பேத்தும் எறங்கி அட்டைப் பொட்டியில கட்டி வெச்சிருந்த பலவாரப் பொட்டிகளையல்லாம் ரண்டு
நிமிஷத்துக்குள்ள வண்டியில ஏத்தி வேக வேகமா
கெளப்பி நாலு இருவதுக்குள்ள வூடு வந்துச் சேந்தாங்க.
"வேனுகாரரோட ஒத்துழைப்பு ரொம்ப
பெரிசுடாப்பா!"ன்னு சொல்லிகிட்டே தடுமாறிகிட்டெ எறங்குனுச்சு செயராமு பெரிப்பா.
வூட்டத் தொறந்து அதெ மொதல்ல மாடி மேல ஏத்தி ஒரு பாயைப் போட்டு படுக்க வெச்சானுச்சு.
அதே நேரத்துல பொண்ணு மாப்புள்ளையப் பாக்கன்னு கலியாணத்துக்கு வாராத சனங்களும் ஏழெட்டுப்
பேரு வூட்டுக்கு மின்னாடி நின்னாங்க. அவுங்கள எல்லாத்தையும் வேக வேகமா கூப்புட்டு உள்ளார
உக்கார வெச்சானுச்சு.
*****
No comments:
Post a Comment