27 Aug 2020

சனிக்கெழம சினிமா!

சனிக்கெழம சினிமா!

செய்யு - 546

            விஷேச நாள்லதாம் பூவன் பழத்துக்குக் கிராக்கி இருக்கும். மத்த நாள்கள்ல அது வதியழியும். அதெ போலத்தாம் முகூர்த்த நாள்ல மண்டபம் கெடைக்கறதப் போல வேன் கெடைக்கிறதும் கஷ்டம். அந்த நாள்ல வேன்காரவுங்களோட சவாரி அதிகமா இருக்கும். அதுக்காக முன்கூட்டியே சொல்லி அச்சாரத்தெ பண்ணி வெச்சிட்டா செளரியமா இருக்கும். பொண்ணு அழைப்புக்குன்னு ஒரு வேனோ, ரண்டு வேனோ வரும். அதுல சில சொந்தக்கார சனங்க போனாலும் வூட்டுக்கு வந்திருக்குற சனங்க அத்தனை பேத்தையும் அதுலயே அழைச்சிட்டுப் போவ முடியாதுன்னு, கூடுதலா சனங்க இருக்குற பட்சத்துல அவுங்கள அந்த வேனோட அழைச்சிட்டுப் போவ கூடுதலா ஒரு வேன் நமக்குன்னு இருக்குறது செளரியந்தாம்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு.

            ஒருவேள சொந்தக்கார சனங்க வூட்டுக்கு வராம மண்டபத்துக்கு வர்றாப்புல ஆயிட்டுன்னா அவரு நிச்சயம் பண்ணப் போற வேனு தண்டமாத்தாம் போவும். தண்டமா அப்பிடி ஒரு வேன நிச்சயம் பண்றதும் அவருக்கு இருந்த பணப்பிடிப்புல தேவையில்லாத சமாச்சாரமாத்தாம் பட்டுச்சு. தண்டம்ன்னாலும் அந்த வேனு ‍தன் குடும்பத்தோட சுய கெளரவத்தோட தொடர்பு இருக்குறதா அவரு நெனைச்சாரு. பொண்ணு வூட்டுச் சனங்க மொத்ததும் அவுங்க அனுப்பிச்ச வேன்லயே வந்துப்புட்டதா‍ சொல்லிடக் கூடாது இல்லியா. அதுக்காக ஒரு வேன்காரனுக்கு முன்பணத்தெ கொடுத்து சனிக்கெழமே மத்தியானமே வேன கொண்டாந்து வூட்டுல போட்டுடுன்னுட்டாரு. ஒரு வேளை அந்தக் கணக்க தாண்டிச் சனங்க வந்து குமிஞ்சிட்டா இருக்குற சனங்கள பாக்குக்கோட்டையில வுட்டுப்புட்டு, இன்னொரு சவாரிய திட்டைக்கும் பாக்குக்கோட்டைக்கும் அடிச்சிக் கொடுத்துப்புடுன்னும் வேன்காரர்கிட்டெ சொல்லிட்டாரு.

            வெள்ளிக்கெழமெ ராத்திரி பொண்ணு அழைப்பப் பத்தி கலந்துக்கிட்ட பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தா மூணு வேன அனுப்புறதா சொன்னுச்சு. அத்தோட மத்தியானமே கெளம்பி வர்றாப்புல தயார் நெலையப் பண்ணிப்புடுங்கன்னுச்சு. மழைக்காலமா இருக்குறதால மின்னாடி கெளம்புறதுதாங் செளரியம்ன்னு சொன்னுச்சு. மண்டபத்துல நடக்கப் போற வேடிக்கெ நெறைய இருக்குறுதால தெருக்கார சனங்கள எவ்வளவு கெளப்ப முடியுமோ அந்த அளவுக்குக் கெளப்பி அந்த வேன்ல போட்டுக் கொண்டாரவும் சொன்னுச்சு ராசாமணி தாத்தா. அதெ கேட்டுக்கிட்டு, மூணு வேனுன்னா நாம்ம எதுக்கு அநாவசியமா ஒரு வேனுக்கு முன்பணத்தெ கொடுத்து நிப்பாட்டி வைக்கணும்ன்னு திடீர்ன்னு மாத்தி யோசிச்சாரு சுப்பு வாத்தியாரு.

            பணம் வாங்குறதெ மட்டும் திட்டம் போட்டு செய்யுற பயலுவோ இந்த விசயத்தையும் முங்கூட்டியே சொல்லிருந்தா வேனுக்குக் கொடுக்க வேண்டிய காசியாவது மிச்சமாயிருக்குமேங்றது அவரோட நெனைப்பு. வேனை வாண்டாம்ன்னு சொல்லிப்புடுவோமான்னு ஒரு நிமிஷம் யோசிச்சவரு, மறுநிமிஷமே அந்த வேன்ல நாலு பேரு போனாலும் சரித்தாம் நமக்குன்னு ஒரு வேனு இருக்குறது நல்லதுதாம்ன்னு திரும்பவும் திடீர்ன்னு மாத்தி நெனைச்சாரு. நம்ம இஷ்டத்துக்குக் கலியாணம் முடிஞ்சிக் கெளம்ப கொள்ள வசதியா இருக்குமுன்னு நெனைச்சாரு. எப்படியோ மூணு வேனு வர்றதால நாம்ம ரண்டு வேனு எடுக்குறாப்புல ஒரு நெலை இருக்குறதா ஒரு கற்பனை கணக்கப் போட்டுக்கிட்டு அதுல ஒரு வேனு எடுக்குற காசி மிச்சம்ன்னு யோசிச்சாரு சுப்பு வாத்தியாரு, அவரு கொடுத்திருக்குற காசிலத்தாம் அந்த மூணு வேனும் வருதுன்னு புரியாம.

            வெள்ளிக் கெழமெ சாயுங்காலமாவே விருத்தியூரு பெரிம்மா, பெரிப்பா, பரசு அண்ணனோட குடும்பம், கோவில்பெருமாள் நாது மாமா, நாகு அத்தையோட குடும்பம், கொல்லம்பட்டி சாமிநாத ஆச்சாரியோட குடும்பம், வாழ்க்கப்பட்டு பெரிம்மாவோட குடும்பம், சிப்பூரு பெரிம்மா சின்னம்மாவோட குடும்பம், பாகூரு சித்தியோட குடும்பம், வேலங்குடி குமாரு அத்தானோட குடும்பம், தேன்காடு சித்தியும் ரண்டாவது மவனும்ன்னு எல்லாரும் கெளம்பி வந்துட்டாங்க. அன்னியிலேந்தே சுப்பு வாத்தியாரோட வூடு கலியாண கலை கட்டிடுச்சு. மழை வேற வுடாம அடிச்சிட்டு இருந்துச்சு. வூட்டை வுட்டு சனங்க யாரும் வெளியில கெளம்ப முடியாம இருந்துச்சு. நெனைச்ச நேரத்துக்கு வெளியில பொழிஞ்ச மழைத்தண்ணியப் போல காப்பித் தண்ணியா வூடு முழுக்க நெரம்பி வழிஞ்சது.

            பொண்ணு அழைப்புல ஆரம்பிச்சு கலியாணம் முடியுற வரைக்குமாச்சி மழை இல்லாம இருந்தா வசதியா இருக்கும்ன்னு சொன்னிச்சு விருத்தியூரு பெரிம்மா. மனுஷங்ககிட்டெ அப்பிடிச் சொல்லலாம், பொழிஞ்சுகிட்டு இருக்குற வானத்துக்கிட்டெ அதெ யாரு போயி சொல்லுறது? ஆன்னா அது சொன்ன வாய் முகூர்த்தமோ என்னவோ சனிக்கெழமெ காலையிலேந்து மழையில்ல. மத்தியானமே பொண்ணு அழைப்பெல்லாம் முடிச்சி பொண்ண அலங்காரம்லாம் பண்ணணும்ன்னு சொன்னதால சனங்க எல்லாம் பன்னெண்டு மணி வாக்குலயே சாப்பாட்ட முடிச்சித் தயாரா இருந்துச்சுங்க. பொண்ணு அழைப்புக்குன்னு வர்ற சனங்களுக்கும் சாப்பாடு செஞ்சு தயாரா இருந்துச்சு. வந்த ஒடனே சாப்பாட்ட முடிச்சு கெளம்புறதுன்னு திட்டம் பண்ணிக்கிட்டு சனங்க உக்காந்துக் கெடந்துச்சு. சுப்பு வாத்தியாரு சொல்லி வுட்டுருந்து வேனும் அந்த நேரத்துக்கே வந்துக் கெடந்துச்சு. பொண்ணு அழைப்புக்கான வேனுங்கத்தாம் வந்துச் சேரல.

            ஒரு மணி வாக்குல வரும்ன்னு காத்துக் கெடந்தா வேனு ரண்டு மணி ஆகியும் வாரல. ரெண்டு மணிக்காவது வரும்ன்னு காத்துக் கெடந்தா வேனு மூணு மணி ஆகியும் வாரல. மூணு மணிக்காவது வரும்ன்னு காத்துக் கெடந்தா வேனு நாலு மணி ஆகியும் வாரல. நாலு மணிக்காவது வரும்ன்னு காத்துக் கெடந்தால வேனு அஞ்சு மணிக்குத்தாம் வருது. அதுவரைக்கும் போன் மேல போன அடிச்சிக் கேட்டா இத்தோ கெளம்பிட்டு, அத்தோ கெளம்பிட்டு, பாதி வழி வந்துட்டு, முக்காவாசி வழி வந்துட்டுன்னுத்தாம் பாக்குக்கோட்டையிலேந்து பதிலு வருதே தவுர வேனு வந்தபாடில்ல. அஞ்சு மணிக்கு வேனு வர்ற வரைக்கும் சனங்க காத்துக் காத்துக் கெடந்து சோந்துப் போனதுதாம் மிச்சம்.

            பேசாம வூட்டு வாசல்ல கெடக்குற வேன்ல பொண்ண அழைச்சிட்டுப் போயிட்டா, வர்ற வேன்ல மிச்ச சனங்க வந்துச் சேரட்டும்ன்னு கூட நேரம் ஆவ ஆவ ஒரு யோசனெ உண்டாச்சு. அதெப்படி மாப்புள வூட்டுல வந்து பொண்ண அழைக்காம நாமளா கொண்டுப் போயி வுடுறதுன்னு அதுக்கு ஒரு எதிர் யோசனை உண்டானதுல மொத யோசனை அப்பிடியே மழைக்காலத்துல கண்டுக்கிடாத விசிறியைப் போல கெடந்துச்சு.

            மத்தியானமே வேனு வந்து கெளம்பிடலாம்ன்னு இருந்ததால மேக்கொண்டு சாப்பாட்டுக்குன்னு எந்த ஏற்பாட்டையும் வேற பண்ணாம வெச்சிருந்தாரு சுப்பு வாத்தியாரு. வர்ற சனங்களுக்கு ஆக்கி வெச்சிருந்த சோறு, சாம்பாரு, ரசம், கறிகாயி எல்லாம் வேற ஆறிப் போயி அப்படியே கெடந்துச்சு. நேரம் ஆவ ஆவ மவனெ வுட்டு சாமாஞ் செட்டுகள வாங்கியாரச் சொல்லி கேசரியும், பாத்தும், காப்பியும், போண்டாவும்  போட வெச்சு நாலு மணி வாக்குல ஒரு டிபன்ன ரெடி பண்ணி இருக்குற சனங்கள சாப்புடச் சொல்லிட்டாரு. பொண்ணு அழைப்புக்குன்னு வர்ற சனங்களுக்கு இனுமே அதெ போட்டுப்புடுவேம்ன்னுட்டாரு. மத்தியானம் முப்பது பேத்து வரைக்கும் வருவாங்கன்னு கணக்குப் பண்ணி சமைச்ச சாப்பாடு வீணாப் போயி கெடந்துச்சு.

            அஞ்சு மணி வாக்குல வந்த வேனுலேந்து பொண்ணு அழைப்புக்குன்னு வந்து லாலு மாமா, ஈஸ்வரி, சுந்தரின்னும் இன்னும் சில பாக்குக்கோட்டை சனங்க சீக்கிரம் சீக்கிரன்னு கெளம்பி நின்ன சனங்களை வேக வேகமா கெளம்புனுச்சுங்க. விருத்தியூரு பெரிம்மாதாம் கேட்டுச்சு, "அடி யென்னடியம்மா நீஞ்ஞ! மத்தியானம் பன்னெண்டு மணியிலேந்து கெளம்பி நிக்குற சனங்கள கெளம்பு கெளம்புன்னா என்னடியம்மா சொல்றது? கெளம்பி நிக்குற சனங்களப் போயி சீக்கிரம் கெளம்புன்னா பறந்துப் போயா வேன்ல உக்கார முடியும்?"ன்னு.

            "வேனுக்கார்ரேம் வந்தது லேட்டு. வர்ற வழியில பஸ்ஸூம் லாரியும் மோதி மதகடி ரோட்டுல விபத்து ஆயி ரண்டு மணி நேரத்துக்கு மேல ரோட்டெ மறிச்சிப் போட்டுப்புட்டாம். அந்தாண்ட இந்தாண்ட ஒரு வாகனம் நவுர முடியல. அதெ வந்து போலீஸ்கார்ரேம் சரி பண்ணி அனுப்புறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. ரண்டு பக்கமும் எந்த வாகனமும் வேகமா நவுர முடியல. ரண்டு பக்கமும் ரண்டு கிலோ மீட்டரு தூரத்துக்காவது வாகனமா நின்னிருக்கும். எல்லாம் ஒண்ண வெலக்கி ஒண்ணு கெளம்பி வந்து சேர்றதுக்குள்ள இப்பிடியாயிடுச்சு!"ன்னுச்சு லாலு மாமா.

            "அந்தச் சங்கதிய போன்ல சொல்லித் தொலைய வேண்டித்தானே? கெளம்பி உக்காந்திருக்குற சனங்களாச்சும் ஆசுவாசமா இருந்திருக்கும்லா!"ன்னுச்சு நாது மாமா.

            "அந்தக் கதெயெ ஏம் கேக்குதீயே? போறதுக்கு நேரமாவுமான்னு வேனுக்காரனெ கேட்டாக்கா பத்து நிமிஷத்துல போயிடுவேம், பத்து நிமிஷத்துல போயிடுவேம்ன்னே சொல்லுதாம். செரித்தாம் சொன்ன நேரத்துக்கு கொஞ்ச மின்ன பின்ன ஆனாலும் வந்துப்புடலாம்ன்னு பாத்தா இம்மாம் நேரம் ஆயிடுச்சு!"ன்னுச்சு லாலு மாமா. ஒடனே வந்திருந்த சனங்களுக்கு வேக வேகமா டிபன்ன வைக்கச் சொல்லி சாப்பாடு ஆனுச்சு. அந்தச் சனங்க மத்தியானத்துலேந்து சாப்புடாம கெடந்திருக்கும் போல. வைக்க வைக்க வேகமா சாப்புட்டு முடிச்சதுங்க.

            லாலு மாமா மட்டும் மத்தியானச் சாப்பாடு இருந்தா அதையே போடுங்கன்னு சொல்லி சாப்புட்டுச்சு. அதுக்கு நல்ல பசி போல. சாப்பாட்ட முடிச்சி ஒரு ஏப்பத்தெ வுட்ட லாலு மாமா, "ந்நல்ல நேரத்துல பொண்ண அழைக்க கெளம்புனம்டா!"ன்னுச்சு. அதுக்குப் பெறவு பொண்ணு அழைப்புக்கான சம்பிரதாயங்களை வேக வேகமா முடிச்சி வேனு கெளம்புறப்போ ஆறு மணிக்கு மேல ஆயிடுச்சு. மத்தியானத்துக்கு மேல கெளம்ப வேண்டிய பயணம் சாயுங்காலத்துக்கு மேல ஆயிடுச்சு. அது வரைக்கும் சும்மா ஓஞ்சிருந்த வானம் அப்பத்தாம் படபடன்னு அடிக்க ஆரம்பிச்சது. சனங்க ஒவ்வொண்ணும் கொடையப் பிடிச்சிக்கிட்டு ஓடிப் போய் வரிசையா நின்ன மூணு வேன்ல ஏறுனுச்சுங்க. சுப்பு வாத்தியாரு பிடிச்சிருந்த வேன்ல ஏறுறதுக்கு ஆளே இல்லை. அதுக்குன்னு வேன சும்மா போவ முடியாதுன்னுட்டு விகடுவோட அஞ்சு பேர்ர பிடிச்சு அந்த வேன்ல அடைச்சி வுட்டாரு. வேனு கெளம்புறப்போ பிடிச்ச மழை ஆர்குடியத் தாண்டி அரைமணி நேரம் போவுற வரைக்கும் வுடல. பெனாட்டி எடுத்துட்டு.  ஒருவேள வேனுங்க மத்தியானமே வந்திருந்தா மழை இல்லாமலயே கெளம்பிப் போயிருந்திருக்குமோ என்னவோ, யிப்போ மழையில நனைஞ்சு சுத்தமா அலம்பி விட்டாப்புல போனுச்சுங்க வேனுங்க ஒவ்வொண்ணும்.

            பாக்குக்கோட்டை மாடடிக்குமுளை வைரம் கலியாண மண்டபத்தெ நெருங்க ஒரு கிலோ மீட்டரு தூரம் இருக்குறப்பவே வரிசையா மாநாட்டுக்குக் கட்டுறாப்புல கொடிகளா கட்டியிருந்துச்சு. அங்கங்க அலங்கார தோரணங்க, அலங்கார வளைவுக, அத்து நல்லா இருட்டுல தெரியுறாப்புல ஏகப்பட்ட டியூப்லைட்டுக, கலர் கலர் லைட்டுக வேற கட்டிருந்துச்சு. யாரோட கலியாணத்துக்கு இப்பிடி ஒரு ஏற்பாட்டெ பண்ணியிருக்காங்கன்னு பாத்தா ஒவ்வொரு எரநூறடிக்கும் எடையில இருந்த பெரிய பெரிய ப்ளக்ஸ்ல ராசாமணி தாத்தா ஆசிர்வாதம் பண்ணுறாப்புல பாலாமணியும், செய்யுவும் இருந்ததெப் பாத்து இந்த ஏற்பாடுங்க எல்லாம் அவுங்க வேன்ல போயிட்டு இருக்குற கலியாணத்துக்குத்தாங்றது சனங்கப் புரிஞ்சிக்கிட்டுங்க. அந்த ஏற்பாடுகளப் பாக்குறப்போ ஒரு நடுத்தர குடும்பத்துக்கான கலியாண ஏற்பாடுகளாவே தெரியல. என்னவோ பெரிய பணக்கார்ரேம் யில்ல அரசியல்வாதிக் குடும்பத்துக் கலியாணத்தெ போலத்தாம் தெரிஞ்சிது.

            பணக்காரனுக்கோ, அரசியல்வாதிக்கோ அந்த அளவுக்குத் தொடர்புக இருக்கும். அத்தனெ பேத்துக்கும் அழைப்பு வெச்சி அவுங்க தங்களோட பந்தாவ காட்டிக்கிட்டுத்தாம் ஆவணும். இந்தக் கலியாணத்துக்கு ஏம் இப்பிடி ஏற்பாட்டப் பண்ணி பந்தாவக் காட்டிக்கிடணும்ன்னு நெனைச்சாம் விகடு. அவ்வேம் அப்பிடி நெனைச்சிட்டு இருக்குறப்பவே வேனுங்க வைரம் கலியாண மண்டபத்துக்கு மின்னாடி நின்னுச்சு. வேனு நின்னு சனங்க எறங்க ஆரம்பிச்சதுமே வானத்துல பல வெதமா வானவேடிக்கை ஆரம்பமானுச்சு. வெடிச்சத்தம் காத கிழிச்சது. இருவது நிமிஷத்துக்கு மேல வானத்தையே பாத்துக்கிட்டு நிக்குறாப்புல ஆயிடுச்சு. பொண்ண வரவேற்குறதுக்கான ஏற்பாடுன்னு அதெ சொல்லிக்கிட்டாங்க. அத்தோட இன்னொன்னையும் சொன்னாங்க, அந்த வான வேடிக்கைக்கு மட்டும் சிலவு நாப்பதினாயிரம்ன்னு.

            நாப்பதினாயிரமான்னு சுப்பு வாத்தியாரு வாயைப் பொளந்து வானத்தை அண்ணாந்து பாத்தப்போ அவரு கொடுத்திருந்து காசியில நாப்பதினாயிரம் கரியாயி வானத்துல பொகையாப் போயிக்கிட்டு இருந்துச்சு. சனங்களும் அதெ கேட்டு மெய்மறந்து நின்னது வாக வேடிக்கைக்கா? நாப்பதினாயிரத்துக்கான்னு தெரியல. அத்தோட, "கலியாணம்ன்னா கலியாணம் இத்து ன்னடா மினிஸ்டரு வூட்டுக் கலியாணமா இருக்கும் போலருக்கே!"ன்னு அங்க நிக்குற சனங்க சொன்னதெ கேட்டு சுப்பு வாத்தியாரு சந்தோஷப்படுறதா, துக்கப்படுறதான்னு புரியல. கலியாணச் சிலவுக்கு அவரு கொடுத்த மொத அறு லட்சமும், பெற்பாடு கொடுத்த ரண்டு லட்சமும் ஏம் பத்தாதுன்னு இப்போ புரிஞ்சது அவருக்கு.

            வரிசையா கலியாண மண்டபத்து ரோட்டுக்கு ரண்டு பக்கமும் வெச்சிருந்த கொடிக, தோரணங்க, அலங்கார வளைவுக எல்லாத்தையும் கலியாணம் முடிஞ்ச பெற்பாடு என்னத்தெ பண்ணுவானுங்கன்ன யோசிச்சாரு சுப்பு வாத்தியாரு. எல்லாத்தையும் குப்பையில கொண்டுப் போயி போடப் போறதெ வுட வேறென்னத்தச் செய்யப் போறாங்கன்னு ஆறுதல பண்ணிக்கிட்டாரு. அங்க முக்கோணம் முக்கோணமா பறந்துகிட்டு இருந்த கொடியப் பாத்து ஒண்ணும் புரியாம சுப்பு வாத்தியாரு அந்தக் கொடியப் பத்தி வெசாரிச்சாரு. அதுதாங் விஸ்வகர்ம சமூதாயத்துக்கான கொடின்னு சொன்னாங்க. ஓ இதுதாங் விஸ்வகர்ம சமூதயாத்துக் கொடியான்னு அதெ ஆச்சரியமா பாத்துக்கிட்டாரு.

            வெச்சிருந்த ப்ளக்ஸ் ஒவ்வொண்ணுலயும் சிவஸ்ரீ ஜோதிட சிகாமணி ராசாமணி இல்ல திருமண விழான்னு பெரிசு பெரிசா எழுதியிருந்து அதுல ராசாமணி தாத்தாவும், சரசு ஆத்தாவும் மேல சிரிச்சாப்புல இருந்தாங்க. அதுக்குக் கீழே பாலாமணியும், செய்யுவும் சிரிச்சாப்புல நின்னாங்க. அதுக்குக் கீழே அகில உலக ஆயுர்வேத மருத்துவத் திலகம் டாக்டர் பாலாமணி வெட்ஸ் செய்யுன்னு எழுதியிருந்துச்சு. அதுக்குக் கீழே பாலாமணி குடும்பத்து நண்டு சிண்டுலேந்து நாவர வண்டு வரைக்கும் ஒண்ணு விடாம மொகத்தக் காட்டுற படங்களா இருந்துச்சு. அதுக்குக் கீழே டெரர் பாய்ஸ், வயலன்ட் பாய்ஸ், நாட்டி பாய்ஸ் குரூப்ன்னு என்னன்னவோ போட்டு ஏகப்பட்ட பேர்களா எழுதியிருந்துச்சு. படிக்க ஆரம்பிச்சா கலியாணம் முடிஞ்சும் படிச்சுக்கிட்டெ இருக்கலாம்ன்னு பட்டுச்சு.

            வெச்சிருந்த ப்ளக்ஸ்ல ஒண்ணுல கூட சுப்பு வாத்தியரோட படமோ, வெங்குவோட படமோ இல்ல. நல்ல வேள பொண்ணோட படத்தையாவது பாலாமணியோட சேத்துப் போட்டானுவோளேன்னு நெனைச்சிருந்திருப்பாரு சுப்பு வாத்தியாரு. சனிக்கெழம ராத்திரியில ஒரு சினிமாப் படத்தெ பாக்குறாப்புல இருந்துச்சு அவருக்கு. அதுவும் ஷங்கர் படத்து சினிமா காட்சியப் போலவே இருந்துச்சு. நடக்குறது நெஜமான கலியாணத்துக்கான பொண்ணு அழைப்பா? யில்ல சினிமா படத்துக்கான பொண்ணு அழைப்பான்னு ஒரு நிமிஷம் யோசிச்சுத் தெளிஞ்சாரு சுப்பு வாத்தியாரு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...