22 Aug 2020

யார் மண்டையில் என்ன இருக்கிறது?

 

யார் மண்டையில் என்ன இருக்கிறது?

            கல்வியில் எந்த முறை சரியயென்று சொல்லத் தெரியவில்லை. நான் மூன்றாம் வகுப்பு வரை ஒன்று, இரண்டு, மூன்று,... என்று இருநூறு வரை சொல்லிக் கொண்டே இருந்தது ஞாபகம் இருக்கிறது.

            ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுப் போட்ட முதல் வகுப்பில், காங்கிரீட் போட்ட இரண்டாம் வகுப்பில், ஓடு போட்ட மூன்றாம் வகுப்பில் என்று ஒவ்வொரு வகுப்பிலும் சொல்லிக் கொண்டே இருந்தேன். இவை தவிர அவ்வபோது வகுப்பறை வெளியில் இருக்கும் வேப்பமரத்தடிக்கும், வாதா மரத்தடிக்கும் மாறும் போது அங்கேயும் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

            ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதைக் கேட்டு மற்றவர்கள் அதைப் பின்தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படிச் சொல்வதை தினமும் சிலேட்டில் வீட்டுப்பாடமாக எழுதிக் கொண்டு போக வேண்டும். ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்ததும் அதில் சாக்பீஸால் டிக் மார்க் வாங்கி விட வேண்டும். டிக் மார்க்கை முடித்து விட்டு ஆசிரியர் வகுப்பறையை ஒரு வட்டமடிக்கும் போது எல்லாரும் சிலேட்டைத் தூக்கிப் பிடித்து டிக் மார்க்கைக் காட்ட வேண்டும். யாருடைய சிலேட்டில் டிக் மார்க் இல்லையோ அவர்களுக்குப் பின் பக்கம் மொத்து மொத்தொன்று விழும். யாருக்கு மொத் விழுந்தாலும் ஒட்டுமொத்த வகுப்பே விழுந்து விழுந்து சிரிக்கும்.

            இருநூறு வரையுள்ள எண்களுக்குள் கூட்டுதல், கழித்தல் என்று இப்படியேத்தான் மூன்றாம் வகுப்பு வரை சென்றது. இதைத் தவிர வேறெதும் அதிகமாக கணக்கில் அப்போது கற்றதாக ஞாபகம் இல்லை. ஆனால் இந்த எண்களுக்குள் புகுந்து விளையாடுவோம். மூன்றாம் வகுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வாய்பாட்டைத் திணித்து விடுவார்கள். அதுவும் தினமும் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன் ஒரு கோரஸ் பாடி விடுவோம். நான்காம் வகுப்பை முடிப்பதற்குள் வாய்பாடு தலைகீழாக சொல்வது வரை அத்துப்படியாகி விட வேண்டும். கிட்டிப்புள் விளையாடும் போது ஸ்கோர் சொல்வதில் அட்சரம் பிசகாது. ஸ்கோர் தப்பாகச் சொல்லி அவுட் ஆன சரித்திரம் அநேகமாக இல்லை.

            இப்படிப் படித்து வந்ததுதான் சரியென்று சொல்வதற்கில்லை. இப்போது இருக்கும் முறை தவறென்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அடிப்படையான ஒரு பிரச்சனையைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. எட்டாம் வகுப்பைப் படித்து முடிக்கும் ஒரு மாணவருக்கு வாய்பாடு தெரியாமல் இருக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

            இன்றைய வாழ்க்கையில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் எல்லாவற்றையும் கணிப்பொறியோ, கணிப்பானோ எளிமையாகச் செய்து விடுகிறது. இரண்டு எண்களைக் கூட்ட சொன்னால் நம் கையிலிருக்கும் மொபைலை வாங்கி அதில் கால்குலேட்டரில் கூட்டிச் சொல்லும் பிள்ளைகள் அதிகமாகி விட்டார்கள். அன்றாட வாழ்க்கையில் கூட்டல், கழித்தல் எதுவும் தேவையில்லை என்று சொல்லும் அளவுக்கு அதைச் செய்ய கருவிகள் இருக்கின்றன. மாணவர்கள் அதைக் கணக்கில் கருவிகள் உதவியின்றி செய்து ஆக வேண்டியிருக்கிறதே.

            இந்த அனுபவங்களை வைத்துக் கொண்டு எப்படியாவது மாணவர்களின் மனதில் வாய்பாட்டைத் திணித்து விடுவது என்ற நோக்கில் பழைய முறைதான் சரியென்று தினமும் வகுப்பு ஆரம்பிக்கும் போதே வாய்பாட்டைக் கோரஸ் முறையில் சொல்ல ஆரம்பித்த நெடுநாட்கள் கழித்தும் அது மாணவர்களின் மண்டையில் ஏறுவதாகத் தெரியவில்லை. வாய்பாட்டை வீட்டுப்பாடமாக எழுதி வரச் சொல்லியும் அவர்கள் எழுதி வரவில்லை. முன்னைக் காலம் போல் இப்போது மொத் மொத்தெல்லாம் போட்டு விட முடியாது. கெஞ்சிக் கூத்தாடி எப்படியோ எழுதி வாருங்கள் என்றுதான் கேட்க வேண்டியிருக்கிறது.

            நீண்ட நாட்களாகப் போராடியும், ஏன் இப்போது இருக்கும் மாணவர்கள் மண்டையில் எதுவும் ஏற மாட்டேன்கிறது? ஏன் இவர்களால் வீட்டுப்பாடம் என்று எழுதி வரச் சொன்னால் அதை அவர்களால் எழுதி வர முடியவில்லை? என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்தக் காலத்தில் எங்கள் மனதில் மட்டும் இவையெல்லாம் எப்படி ஏறித் தொலைந்தது? நாங்கள் மட்டும் எப்படிச் சரியாக வீட்டுப் பாடங்களை எழுதிக் கொண்டுப் போனோம்? என்று மனதுக்குள் கேள்வி மேல் கேள்வி எழும் போது ஆயாசமாக இருக்கிறது.

            இந்தப் பிள்ளைகளுக்காகவே யூடியூப்பில் எப்படியெல்லாம் வாய்பாட்டை எளிமையாக மனதில் பதிய வைப்பது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் பார்த்துச் சொல்லிக் கொடுத்தால் அதாவது மனதில் நிற்கிறதா என்றால், அதுவும் சொல்லிக் கொடுக்கும் அந்த நேரத்தில்தான் நிற்கிறது. ஒரு சிறு பொழுது கழிந்தால் போதும் அவ்வளவுதான். மறுநாள் அப்படியே மறந்து விடுகிறார்கள். அவர்களின் மனப்போக்கே வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

            நான் இப்படியே பேசிக் கொண்டு போய் மனன முறையை வலியுறுத்துகிறேனா, அல்லது பழைமையைத் தாங்கிப் பிடிக்கிறேனா என்று தெரியவில்லை. இப்படிப் பேசுவதால் மாணவர்கள் மனதில் நிறைய செய்திகளை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு சில அடிப்படையான செய்திகளையாவது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது. அதுவும் அவர்களின் நினைவில் தங்க மாட்டேன்கிறதே என்றால் அதற்குக் காரணம் அவர்களின் மனதில் நிறைந்திருக்கும் சோட்டா பீமும், மொபைல் கேம்ஸ்களும்தாம் காரணமா? அவர்கள் அதைப் பேசும் வேகத்துக்கும், விளையாடும் வேகத்துக்கும் என்னிடம் கொடுத்து அதைச் சாதாரண வேகத்தில் விளையாடச் சொன்னாலும் என்னால் முடியாது என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...