22 Aug 2020

அடாத மழையிலும் விடாத பயணம்!

 

அடாத மழையிலும் விடாத பயணம்!

செய்யு - 541

            சுப்பு வாத்தியார்ர வுட்டுருந்தா சென்னைப் பட்டணத்துக்கும் டிவியெஸ்ஸூ பிப்டிய எடுத்துக்கிட்டு பத்திரிகெ வைக்கக் கெளம்பியிருப்பாரு. வண்டி கையில இருந்தா யானை பலம் வந்தவர்ரப் போல இருந்தாரு. ஆயில் கலந்த பெட்ரோல்ல வாங்கி வவுத்த நெரப்பி தீனியப் போடறாப்புல டேங்க நெரப்பி ரோடே இல்லாத ஊருக்கெல்லாம் போயிட்டும் பத்திரிகைய வெச்சிட்டும் கெடந்தாரு. சென்னைப் பட்டணத்துல இருந்த அக்காக்காரவுகளோட ஒறவுக, லாலு மாமா, முருகு மாமா ஒறவுகளுக்கு மட்டும் கடெசீயா பத்திரிகைய வைக்கலாம்ன்னு வெச்சிருந்தாரு சுப்பு வாத்தியாரு. அந்த நாள்ல மழை கொஞ்சம் கடுமையா பிடிக்க ஆரம்பிச்சிருந்துச்சு. விட்டு விட்டு பேஞ்சிட்டு இருந்த மழெ வுடாம தொடந்தாப்புல வலுத்தாப்புல பெய்ய ஆரம்பிச்சது.

            பெரும் மழையில பெரும் பயணம் டிவியெஸ்ஸூ பிப்டியில ஆவாதுங்றதாலத்தாம் அவரு வண்டிய எடுக்கல. சென்னைப் பட்டணத்துக்குப் பத்திரிகைகளையும், சவுளிகளையும் எடுத்துக்கிட்டு பஸ்ஸூப் பிடிச்சி தனியாளாவே கெளம்பிட்டாரு சுப்பு வாத்தியாரு. விகடுதாங் திருவாரூரு கொண்டு போயி பஸ்ஸ ஏத்தி விட்டாம். சென்னைப் பட்டணத்துக்கு ஆர்குடி வழியா போறது கொஞ்சம் சுலுவுன்னாலும் அவரு திருவாரூரு போயித்தாம் போவாரு. வேலங்குடி பெரியவரோட ரயில்லயும், பஸ்லயும் சென்னைப் பட்டணம் போயி உண்டான பழக்கம் அது. அப்பிடிப் போனாத்தாம் ராசியா இருக்குங்ற நெனைப்பு வேற இருந்துச்சு.மழையோட மழையாத்தாம் அவரு சென்னைப் பட்டணத்துக்கு பஸ்ஸ ஏறுனாரு. விகடுவும் கூட வர்றதா சொல்லிப் பாத்தாம். சுப்பு வாத்தியாரு வேண்டாம்ன்னுட்டாரு.

            "பஸ்ல போறப்பத்தாங் தனியா போவேம். சென்னைப் பட்டணத்துல எறங்குனா ஒடனே சந்தானம் வந்து அழைச்சிப்பாம். பெறவென்ன? அவங் கூடவே அவ்வேம் காருலயே ஒவ்வொரு எடமா பாத்து வெச்சிப்புட்டு வந்துப்புடுவேம். யிப்போ நீயி சென்னைப் பட்டணத்துக்கு வர்றதுக்கு லீவெ எடுத்தீன்னா கலியாணத்துக்குப் பெற்பாடு பின்னாடி தங்காச்சியக் கொண்டு போயி அஞ்ஞ குடி வைக்கவும் லீவு எடுத்தாவணும். தேவையில்லாம ரண்டு லீவா போயிடும். பத்திரிகெ வைக்குறதுக்கு நாம்ம போயிட்டு வந்துடுறேம். நீயி வூட்டுல இருந்த பாத்துக்கோடாம்பீ!"ன்னு அதுக்கு வெளக்கத்தெ சொல்லி விகடுவெ தங்க வெச்சிட்டாரு சுப்பு வாத்தியாரு.

            சுப்பு வாத்தியாரு சென்னைப் பட்டணம் போயி எறங்குனதும் பெருமழையா இருந்துச்சு. சந்தானம் அத்தான் கோயம்பேட்டு பஸ் ஸ்டாண்டுலேந்து கார்ல வெச்சு, தண்ணியில போற படகெப் போல அழைச்சிட்டுப் போயி வூட்டுல தங்க வெச்சுக்கிட்டு ஒரு எடம் பாக்கியில்லாம அழைச்சுட்டுப் போனுச்சு. மழை நாளுக்கு நாளு வலுத்து சென்னைப் பட்டணமே வெள்ளத்துல மெதக்க ஆரம்பிச்சதும் சந்தானம் அத்தான் பத்திரிகைய சீக்கிரமா வைக்கணும்ன்னு ரொம்ப மெனக்கெட்டுச்சு. வேலங்குடி செட்டெல்லாம் திருவேற்காடு குரூப்பா மாறுனதுல அவுங்களுக்கெல்லாம் பத்திரிகெ வைக்குறதுல எந்தச் செருமமும் யில்லாமப் போச்சு. பெரியவரோட புள்ளீயோ அத்தனையும் மலரு அத்தாச்சி வூட்டுக்குத் தெரண்டு வந்து ஒரே எடத்துல பத்திரிகையக் கொடு மாமான்னு வாங்கிடுச்சுங்க.

            வேலங்குடி சின்னவரு மவனான கார்த்தேசு அத்தான் வூட்டுக்கு மட்டும் சுப்பு வாத்தியாரு ஒரு கொடைய மழையிலப் பிடிச்சிக்கிட்டுத் தனியா போயி பத்திரிகையையும் சவுளிகளையும் வெச்சிட்டு வந்தாரு. மூர்த்தோலைக்கு ரண்டு பேத்துமா வந்துட்டுப் போனதுல சந்தோஷங்றதெ சுப்பு வாத்தியாரு சொன்னாரு. "தம்பிய கட்டி வைக்க முடியலங்றது வருத்தம்ன்னாலும், ஒன்னய விட்டுக் கொடுத்துட முடியாது மாமா! யப்பா யம்மா வாராததெ கொறையா நெனைச்சிக்கிடாதே மாமா!"ன்னுச்சு கார்த்தேசு அத்தான். "பங்காளியோளா இருந்துட்டு ஒரு தெருவுலயே ரண்டு துருவமா பிரிஞ்சிக் கெடக்குதீயேளடா!"ன்னு வருத்தப்பட்டுக்கிட்டு அங்கேருந்து கெளம்பி மலரு அத்தாச்சி வூட்டுக்கு வந்து திரும்பவும் சந்தானம் அத்தான் வூட்டுக்கு வந்துச் சேந்தாரு சுப்பு வாத்தியாரு.             அடுத்ததா சென்னைப் பட்டணத்துல சுப்பு வாத்தியாரு லாலு மாமவோட ரண்டாவது பொண்ணு குயிலிக்கும், லாலு மாமாவோட மவ்வேன் வேலனுக்கும், முருகு மாமாவோட மூணாவது மவ்‍வேன் சுமன் வூட்டுக்கும் வைக்க வேண்டியதா இருந்துச்சு. குயலி, சுமன்னு ரெண்டு பேத்தோட வூடும் பள்ளிக்கரணையில இருந்துச்சு. வேலனோட வூடு தரமணியில இருந்துச்சு. அங்க வெச்சு முடிஞ்சிட்டா வேல முடிஞ்சிடுது சென்னைப் பட்டணத்தப் பொருத்த வரையில பத்திரிகெ வைக்குற வேல. மழை நாளுக்கு நாளு மூர்க்கம் அடைஞ்சிட்டு இருந்துச்சு. கிட்டத்தட்ட சென்னைப் பட்டணம் வங்காள விரிகுடா கடலு பட்டணத்துக்குள்ள பூந்தாப்புல மெதக்க ஆரம்பிச்சிருந்துச்சு. இருந்தாலும் அந்தத் தண்ணியில போற வாகனத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லாம இருந்துச்சு. ஒலகத்துலயே தண்ணியில படகெப் போல போற ஆட்டோ, காரு, பஸ்க, ரண்டு சக்கர வாகனங்கள சென்னைப் பட்டணத்துலத்தாம் பாக்க முடியுங்றது போல இருந்துச்சு.

            மொதல்ல வேலனோட வூடு இருந்த தரமணிப் பக்கமா கார்ர வுட்டுச்சு சந்தானம் அத்தான். வழி நெடுக தண்ணி. தண்ணியில போயிட்டே இருக்குற வரைக்கும் காருக்கு எந்தப் பெரச்சனையும் இல்ல. நிப்பாட்டுன்னாத்தாம் பெரச்சனெ. நிப்பாட்டுறப்ப மட்டும் தண்ணியில்லாத எடமா பாத்து நிப்பாட்டிக்கிட்டா போச்சு. தண்ணியில கார்ர நிப்பாட்டுன்னா புகை போற குழாய்க்குள்ள தண்ணிப் பூந்துட்டுன்னா கார்ர கெளப்புறது சாமானியம் யில்ல. சென்னைப் பட்டணத்துல இப்பிடி தண்ணியில ஓட்டி ஓட்டி சந்தானம் அத்தானுக்குப் பழக்கமா போயிருந்ததால செருமம் இல்லாம ஓட்டிட்டுப் போனுச்சு. சுப்பு வாத்தியாருதாம் பயந்துகிட்டெ போனாரு. அவருக்குக் கடல் பயணம் போறாப்புலயே இருந்துச்சு. இவுங்க வேலனோட வூட்டுப் பக்கம் போனப்ப வேலன் வூட்டுல யில்ல. பிந்து மட்டுந்தாம் இருந்துச்சு. அதுகிட்டெ பத்திரிகையையும், சவுளிகளையும் வெச்சிக் கொடுத்துட்டு, வேலனுக்கும் இந்த மாதிரிக்கின்னு போன அடிச்சி விசயத்த வெளக்கிட்டு, மழையக் காரணங் காட்டி சீக்கிரமா கெளம்புறதா சொல்லிப்புட்டு கெளம்புனாங்க.

            தரமணிக்குத் தண்ணியில கார்ல வெச்சு நீச்சல் அடிச்சுப் போனாப்புல இருந்தா, பள்ளிக்கரணப் பக்கம் சந்தானம் அத்தானோட காரு போவ முடியாத அளவுக்குச் சேறும் சகதியுமான ஒலையில நீச்சலடிச்சுப் போறாப்புல இருந்துச்சு. எங்கப் பாத்தாலும் விகடு வேலை பாக்குற கோட்டகத்துல இருக்குறாப்புல சேறும் சகதியுமா இருந்துச்சு. அதெ சென்னையில ஒரு கோட்டகம்ன்னுத்தாம் சொல்லணும். தண்ணியில கூட மெதந்துப் போயிடற காரு சேரு சகதின்னா மொதலையோட வாயில மாட்டுன யானையா ஆயிடுது. கார்ர ஒரு எட்டுலேந்து இன்னொரு எட்டுக்கு ஓட்டுறதெ பெரும்பாடா இருந்துச்சு. அந்தாண்ட இந்தாண்ட நவுற முடியாத அளவுக்கு செருமமா இருந்துச்சு. சந்தானம் அத்தான் சொன்னுச்சு, "நீயி பத்திரிகையக் கொடுத்துட்டு போ மாமா! மழை கொஞ்சம் நின்னு ரோடு சரியான பெறவு கொடுத்து வுட்டுப்புடுறேம்! நீயிச் சொல்லுற எடமெல்லாம் சமுத்திரத்துல நீந்திப் போற எடமால்லா இருக்கு!"ன்னு.

            "அந்தப் பயலுவோ வறட்டுக் கெளரவம் பிடிச்ச பயலுவோ! சென்னை வரைக்கும் போயி பத்திரிகெ வைக்கமா வந்துப்புட்டதா நெனைப்பானுங்க. ஏம் அந்தக் கொறை? நமக்கும் நேர்ல போயிப் பத்திரிகெ வெச்சாம் நெறைவுபடும். ஒரு நாளு ரண்டு நாளு இருந்தெ வெச்சிட்டுப் போறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஏம் மாமா நீயி கலியாணச் சோலிய வெச்சுக்கிட்டு ரண்டு நாளு, மூணு நாளு இஞ்ஞ தங்கிட்டு! செரி வா வெச்சிட்டே போயிடுவேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "ரோடும் சேறா இருக்கே! எறங்கி நடந்துன்னா போயிடுவோமா?"ன்னு சுப்பு வாத்தியாரு கேட்டதுக்கு, "கார்ர வெச்சுக்கிட்டு நடந்துப் போன நல்லா இருக்காது மாமா!"ன்னு சந்தானம் அத்தான் குருட்டுத் தனமான ஒரு முடிவெ எடுத்து கார்ர அந்த புதுசா உருவாகியிருந்த நகருக்குள்ள வுட்டதுல, காரு சேத்துல மாட்டிக்கிட்டு அந்தாண்ட இந்தாண்ட நவுத்த முடியாமப் போயிடுச்சு.

            "செரி மாமா! காரு கெடந்தா கெடக்கட்டும். நாம்ம இந்தச் சேத்துல எறங்கிப் போயி பத்திரிகைய வெச்சிக்கிட்டு இதெ ஒரு வழிப் பண்ணிப்போம். நீயி வேட்டிய மடிச்சி மொழங்காலுக்கு மேல தூக்கிக் கட்டிக்கோ. நாம்ம பேண்ட மடிச்சி முட்டிக்காலுக்கு மேல விட்டுக்கிடறேம்!"ன்னு கார்ர வுட்டு சேத்துலயும் சகதியிலயும் மழைக்கு ஒரு கொடையப் பிடிச்சிக்கிட்டு எறங்கி போயிப் பத்திரிகைய ரண்டு வூட்டுலயும் வெச்சிட்டு வந்துச்சுங்க.

            அப்பதாம் சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "நாம்மதாங் நல்ல எடத்துல வண்டிய நிறுத்திப்புட்டு எறங்கி நடந்துப் போயி பத்திரிகைய வெச்சிட்டு வந்துப்புடலாம்ன்னு சொன்னேம். கேக்க மாட்டீயேன்னுட்டியளே யம்பீ! அப்பிடிப் போயிருந்தா இந்நேரத்துக்கு வெச்சிட்டு வண்டியக் கெளப்பிட்டுப் போயிருக்கலாம்!"

            "அத்து கெடக்கு வுடு மாமா! எல்லாம் ஒரு அனுபவந்தாம்!"ன்னச்சு சந்தானம் அத்தான்.

            "ன்னடாம்பீ அனுபவம்? வேலங்குடியில நீயிப் பாக்காத சேறா? இஞ்ஞ வந்துதாங் புதுசா அனுபவத்தெக் கத்துக்கிடறதப் போல பேசுதீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நம்ம காரு அந்த மாரி காரு மாமா! எப்பிடிச் சேறா இருந்தாலும் கெளம்பிடும். வெசயம் ன்னான்னா சேத்துக்குள்ளயே சக்கரம் சுத்துதே தவுர அதுக்குப் பிடிமானமா பிடிச்சி நவுற ஒரு கிரிப்பு கெடைக்க மாட்டேங்குது!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "யிப்பிடி பேசிட்டு இருந்தா பேசிடிட்டே இருக்க வேண்டியதுதாங். வண்டிய எடுக்கற வழியப் பாப்பேம்பீ!"ன்னு சுப்பு வாத்தியாரு சொன்னதுல, ஒரு நாளு முழுக்கப் போராடி அங்க இங்கன்னு ஆளுகளப் பிடிச்சிக் கொண்டாந்து வண்டிய எடுக்க வேண்டியதாப் போச்சு.

            ஒரு வழியா அங்கப் பத்திரிகைய வெச்சிட்டுத் திரும்புனா, சந்தானம் அத்தான் சொன்னுச்சு, "வந்தது வந்திட்டே மாமா! மாப்புள்ளப் பையனையும் பாத்துட்டேன்னா கொறையில்லாம போயிடும்!"ன்னுச்சு. "அதுவும் செரிதாம்! நாமளும் அதெத்தாம் நெனைச்சிட்டு இருந்தேம். மழையிலப் போட்டு செருமம் பண்ணணுமான்னு ஒரு யோஜனெ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அத்தெல்லாம் ஒரு செருமமும் யில்ல மாமா!"ன்னு சந்தானம் அத்தான் பாலாமணிக்குப் போனைப் போட்டா, மொதல்ல ரூம்ல இருக்கேம்ன்னவேம், கொஞ்ச நேரத்துல கிளினிக்குல இருக்கேம்ங்றாம். இன்னும் கொஞ்ச நேரத்துல ஆஸ்பிட்டலுக்குப் போயிட்டேம் அஞ்ஞ வந்துப்புடுங்கங்றாம். அடிக்கிற அடைமழையில அவ்வேம் வேற போன் மேல போனப் போட்டுக் கொழப்புனதுல சந்தானம் அத்தான், "நீயிப் பாட்டுக்கு ஊர்ரப் பாக்க கெளம்பிருக்கலாம்! ஒன்னயப் போட்டு வேற இதுல இழுத்துப்புட்டேனே மாமா! யிப்போ ன்னா பேயாம பாக்காமலே கெளம்பிப்புடுதீயா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "ஏம்பீ! அதுக்கு நீயி போனப் போட்டு கேக்கமலாவது இருந்திருக்கணும். போனப் போட்டுக் கேட்டுப்புட்டு போவலன்னா மருவாதியா இருக்குமா? யிப்போ எங்கப் போவணும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. 

            "ஒம் மருமவ்வேம் போனப் போட்டுக் கொழப்புனதுல நாலு பக்கத்துலயும் காரு திரும்பி நாலு தெசையிலயும் போறாப்பு சக்கரம் நிக்குது மாமா. இப்போ அந்தச் சக்கரங்க போறது அரும்பாக்கத்துக்கு ஆஸ்பத்திரிக்கி மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "பெறவென்ன? வுடு வண்டிய!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            கடல் போல தேங்கியிருந்த தண்ணியில காரு போல இல்லாம, படகு போல தண்ணியக் கிழிச்சிட்டுதாங் போனுச்சு சந்தானம் அத்தானோட காரு. ஆஸ்பத்திரிக்குப் போனா அங்க நிக்க எடமில்லாம எல்லா எடத்துலேந்தும் தண்ணி ஒழுவுது. வெளியில ஆத்தப் போல ஓடிட்டு இருக்குற தண்ணி உள்ளாரயும் அப்பைக்கப்போ எட்டிப் பாத்துட்டு ஓடிட்டுப் போவுது. உக்கார எடமில்லாம ஒடைஞ்ச நாற்காலிகளா கெடக்குது. அதுல செருமப்பட்டு உக்காந்து பேச ஆரம்பிச்சா, பாலாமணி பாட்டுக்கு சுயபுராணம் பாட ஆரம்பிச்சிட்டாம், இந்த ஆஸ்பத்திரியில நாம்ம ஒருத்தெம் இல்லன்னா ஆஸ்பத்திரியே கெடையாதுங்ற மாதிரிக்கி. வெளியில மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுன்னா இவ்வேம் தற்பெருமெயில வெளுத்துக் கட்டுறாம். அது மழை வெள்ளத்தெ வுட பெரு வெள்ளமா போவ அதுல ரண்டு பேரும் மூழ்கிடறாப்புல ஆயிடுச்சு சுப்பு வாத்தியாருக்கும், சந்தானம் அத்தானுக்கும். ஒரு வழியா அவ்வேம் பேச்ச முடிச்சப்போ சென்னை மாநகரம் வெள்ளத்துல மூழ்கியிருந்துச்சு.

            சுப்பு வாத்தியாரு கெளம்புறப்போ ஒரு வார்த்தெ பாலாமணிகிட்டெ சொன்னாரு, "யக்கா மவ்வேம்! பேரு சந்தானம்! இஞ்ஞ பெருங்கையி! ஒத்தாசி ஒதவியா இருப்பாப்புல!"ன்னு. அதெ கேக்க கேக்க பாலாமணி மொகத்துல எரிச்சல் தாங்க முடியல. "நாமளுந்தாம் சென்னைப் பட்டணத்துல முக்கியமான ஆளு. நமக்குத் தெரியாதே ஆளே இஞ்ஞ கெடையாது. மினிஸ்டர் வரைக்கும் ஒடம்பு சரியில்லன்னா நாம்மத்தாங் டிரீட்மெண்டு! எந்த ஐயெயெஸ் ஆபீஸரா இருந்தாலும் நம்மகிட்டத்தாங் வருவாங்க! பெரிய பெரிய கடையெ வெச்சிருக்குற கோடீஸ்வர்ரேங் கூட நம்மகிட்டெ வந்து வெயிட்டிங்கப் போட்டுத்தாங் ட்ரீட்மெண்ட பண்ணிட்டுப் போறாம்! இந்த சென்னை சிட்டியில நம்பர் ஒன் ஆயுர்வேத டாக்கடர்ன்னா அத்து இந்த பாலாமணித்தாம்! ஒலக அளவுலயும் பெஸ்ட் டாக்கடர் இன் ஆயுர்வேதான்னா நம்மத்தாங்! அப்பிடிப்பட்ட நமக்கு எதுக்கு பெறத்தியாரோட ஒத்தாசி ஒதவி?"ன்னாம் பாலாமணி இளிச்சாப்புல.

            சுப்பு வாத்தியாருக்கு அதெ ஏம்டா சொன்னோம்ன்னு ஆயிடுச்சு. இருந்தாலும் பேச்ச அத்தோட விட்டுட முடியாதே. அதால சமாளிச்சாரு,"சொந்தத்துல ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு ஆவப் போறேம். ஒறவுல ஒருத்தர்ர ஒருத்தரு தெரிஞ்சிக்காம இருக்கக் கூடாதுல்லா. ஒஞ்ஞளால சில ஒத்தாசிக ஒதவிக அவுகளுக்கு ஆவலாம். அவுகளால சில ஒத்தாசி ஒதவிக ஒஞ்ஞளுக்கு ஆவலாம். யாரால யாருக்கு ஆனான்னா அதால சொந்தந்தான பெலப்படும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நம்மால அவுங்களுக்குச் சில ஒத்தாசி ஒதவிக ஆவலாம்ன்னு சொன்னீயளே! அத்துச் செரி! இஞ்ஞ சென்னை சிட்டியில நம்மளப் பத்தி ஒஞ்ஞளுக்குத் தெரியாது யில்ல. ஏகப்பட்ட பேரு நம்மகிட்டெ பாக்கணும்ன்னு நிக்குறாம். நேரந்தாம் யில்ல! அதுவும் இந்த மழைக்காலத்துல நாம்ம சில மருந்துகளக் கொடுத்தா ஜூரம், சளின்னு எதுவும் வாராது!"ன்னு சொல்லிட்டு சில மருந்து டப்பாக்களையும், மருந்து பாட்டில்களையும் எடுத்து ஒரு பாலிதீன் பையில போட்டுக் கொடுத்து, "இந்த மருந்துகள மழைக்காலம் முடியுற வரைக்கும் காலையிலயும் ராத்திரியும் எடுத்துக்கிடுங்க!"ன்னாம் பாலாமணி.

            ஒண்ணும் சொரமும், சளியும் இல்லாம அந்த மருந்தெ ஏம் எடுத்துக்கிட்டுன்னு சுப்பு வாத்தியாரு மனசுல ஒரு கேள்வி இருந்தாலும், அதெ வாங்காமப் போயி அத்து ஒரு குத்தமா போயிடக் கூடாதுன்னு நெனைச்சிக்கிட்டு அதெ கையில வாங்கிட்டாரு. "ஓ! ரண்டு பேருல்லா இருக்கீயே!"ன்னு சொல்லிக்கிட்டு, இன்னொரு பாலிதீன் பையில மருந்து டப்பாக்களையும், பாட்டில்களையும் போட்டு சந்தானம் அத்தானுக்கு இன்னொண்ணப் போட்டுக் கொடுத்தாம். சந்தானம் அத்தானும் எதுவும் சொல்லாம அதெ வாங்கிடுச்சு. வாங்கிக்கிட்டு, "யப்பாவுக்குக் கடெசீக் காலத்துல வாதம் வந்து இழுத்துக்கிட்டு ரொம்ப செருமப்பட்டுச்சு. ஆயுர்வேதத்துலததாம் கடெசீயாப் பாத்தேம். ரண்டு வருஷம் அதுக்குப் பெறவு இருந்துச்சு!"ன்னுது சந்தானம் அத்தான்.

            "நம்மகிட்டெ கொண்டாந்திருந்தீங்கன்னா வாதத்தெ எடுத்து வுட்டு நூறு வயசுக்கு இருக்க வெச்சிருப்பேம்!"ன்னாம் பாலாமணி.

            "யப்போ நமக்குத் தொடர்பு யில்லாமப் போயிடுச்சுல்லா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அதாங் பெரச்சனெ! நம்ம கண்ணுல பட்டுருந்தா கொணப்பாடு கண்டுருக்கும்! வாதம்லாம் நமக்கு சப்ப மேட்டரு. கைய வெச்சாவே கொணம் கண்டுப்புடும்! வாதத்தெ கொணம் பண்ணுறதுலதாங் நாம்ம எக்ஸ்பர்ட்!"ன்னாம் பாலாமணி.

            "நாம்ம ராத்திரிக்கே ஊருக்குக் கெளம்புறேம். மழெ வேற பலமா இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இந்த மழையிலயா கெளம்புதீயே மாமா! நம்ம ரூம்ல இருந்துப்புட்டு மழெ நின்னு தண்ணி வடிஞ்ச பெற்பாடு கெளம்புலாமே!"ன்னாம் பாலாமணி சுப்பு வாத்தியார்ரப் பாத்து.

            "கலியாணச் சோலிங்க இருக்கு. போனா இன்னும் கொஞ்சம் வைக்க வேண்டிய பத்திரிகைய வெச்சிப்புடலாம்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அப்பிடின்னா செரி!"ன்ன பாலாமணி சொல்லிட்டு இருக்குறப்பவே ரண்டு காப்பி வந்துச்சு பேப்பர் கப்புல. அதெ ஆஸ்பத்திரியில வேல பாக்குற ஆளு குடையப் பிடிச்சிட்டுப் போயி வாங்கி வந்திருந்தாரு. பவ்வியமா அதெ வாங்கிக் கொடுத்தாம் பாலாமணி. அதெ வாங்கிக் குடிச்சிப்புட்டு கெளம்புனாங்க சந்தானம் அத்தானும், சுப்பு வாத்தியாரும்.

            கெளம்பி வார்றப்ப சந்தானம் அத்தான் கேட்டுச்சு, "ஏம் மாமா! ரொம்ப மண்டெ கணம் பிடிச்சப் பயலா இருப்பாம் போலருக்கே. இவனெ எங்க கண்டுப் பிடிச்சே? இவனெ வுட பெரிய பெரிய ஆயுர்வேத கிளினிக்க வெச்சிருக்கிற டாக்கடர்ருல்லாம் நமக்குத் தெரியும். அவ்வேம்லாம் எல்லாம் எம்மாம் பணிவா இருக்காம் தெரியுமா? இவ்வேம் இந்த அலப்பு அலப்புறானே!"ன்னு.

            "அத்து என்னவோப்பா! சின்ன வயசுதான. படிச்ச படிப்புக்கான கெர்வம். வயசு கொஞ்சம் ஆனா செரிபட்டு வந்துடும்ன்னு நெனைக்கிறேம். பொண்ணும் புள்ளயும் சாடிக்கேத்த மூடியா இருந்தா செரித்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இப்பவே வயசு கொஞ்சம் ஆனாப்புலதான மாமா இருக்கு! என்னவோ நீயிச் சொன்னா செரித்தாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான். காரு தண்ணியக் கிழிச்சிக்கிட்டு மதுரவாயல் சந்தானம் அத்தானோட வூட்ட நோக்கிப் போனுச்சு. அங்கப் போனதும் சந்தானம் அத்தானுக்கும் தனம் அத்தாச்சிக்கும் பத்திரிகையையும் சவுளியையும் வெச்சி முடிச்சிட்டு அன்னிக்கு ராத்திரியே பத்து மணி வாக்குல கோயம்பேட்டுல பஸ்ஸூ ஏறுன சுப்பு வாத்தியாரு, திருவாரூரு வந்து மறுநாளு காலையில எட்டாம் நம்பரு பஸ்ல பத்து மணி வாக்குல மழையோட மழையா வூடு வந்து சேந்தாரு. அவரு கெளம்புனப்ப ஆரம்பிச்ச மழை அவரோட சென்னைப் பட்டணம் போயி அவரு திரும்பி ஊரு வர்றப்பயும் திரும்பி அவரோட ஊரு வந்து சேந்தும் நிக்க மாட்டேன்னு ஊத்திக்கிட்டெ இருந்துச்சு. ஊத்துற மழையையும், ஏறுற வெலையையும் யாரு பிடிச்சு நிறுத்த முடியும்?

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...