23 Aug 2020

துடைத்து அள்ளுதல்!

துடைத்து அள்ளுதல்!

செய்யு - 542

            சாயுங்காலம் பள்ளியோடம் வுட்டு வந்தா தங்காச்சி செய்யுவ டிவியெஸ் பிப்டியில வெச்சு அழைச்சிக்கிட்டு அவளோட தோழிகளுக்குப் பத்திரிகெ கொடுக்கப் போற ஒரு வேல விகடுவுக்கு இருந்துச்சு. அப்பிடி ஒரு நாளு கெழக்கால பாலகுறிச்சி, சேந்தங்குடி, மாவட்டகுடின்னு போனா, இன்னொரு நாளு மேற்கால நாகங்குடி, பண்டுதகுடி, கூத்தாநல்லூர்ன்னு அழைச்சிக்கிட்டுப் போனாம். அந்த ஊர்க எல்லாத்தையும் தார் ரோட்டோட போறப்ப மேம்போக்கா பாத்துட்டுப் போனதுதாங். ஒவ்வொரு கிராமத்துலயும் உள்ளாரப் பூந்துப் பாத்தது கெடையாது. செய்யுவோட பத்திரிகெ வைக்கப் போறப்பத்தாங் உள்ளாரப் பூந்து தெரு தெருவா பாக்க வாய்ப்பு கெடைச்சிது விகடுவுக்கு. திருவாரூர்ல பொறந்த திருவாரூரு பெரிய கோயில கவனிச்சுப் பாக்காத ஆளுங்க இருக்குற மாதிரிக்கி, இந்த ஊர்லயேப் பொறந்து பக்கத்துப் பக்கத்து ஊர்ல இருக்குற உள் தெருவுகள எல்லாத்தையும் பாக்கமாத்தாம் இவ்வளவு காலம் இருந்திருந்தாம் விகடு.

            ஒவ்வொரு தெருவும் ரொம்ப வித்தியாசமா ஒண்ணு அகலமா, ஒண்ணு குறுகலா, ஒண்ணுல ரண்டு மூணு வூடு மட்டும்ன்னும், ஒண்ணுல ஏகப்பட்ட வூடுகங்கன்னும் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். சில தெருக்கள்ள ஒண்ணுல பூந்து இன்னொண்ணுல வெளிவர முடிஞ்சது. சிலதுல போன வழியே திரும்பி வர்றாப்புல வயக்காட்டுல போயி முடிஞ்சது. ஒரு தெரு முழுக்க ரண்டுப் பக்கமும் கருவக்காடுமா, நடுமத்தியில மட்டும் ஒரு கூரை வூடுமா இருந்துச்சு. ரொம்ப சில தெருக்கள்ளத்தாம் வரிசையா வூடுகளா இருந்துச்சு.  கூரை வூடு, ஓட்டு வூடு, மாடி வூடுன்னு வெத வெதமான வூடுக, ‍இடையிடையில ஒண்ணு ரண்டுன்னு ரண்டடுக்கு மாடி வூடுன்னு ஒவ்வொரு ‍தெருவுக்குள்ளயும். சில வூடுங்க தெருவ முட்டிக்கிட்டு வெளியில வந்தாப்புலயும், சில வூடுக தெருவுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லாததப் போல உள்ளடங்கியும் இருந்துச்சுங்க. பெரும்பாலான வூடுகளுக்கு மின்னாடி காம்பெளண்டு சுவரோ, வெளியோ இல்லாம தெருவத் தாண்டுனா வீட்டோட திண்ணைக்குப் போயிடுறாப்புலத்தாம் இருந்துச்சு.

            போறப்ப இடையிடையில வந்த மழை பல வெதமான வீடுகள்ல ஒதுங்க வெச்சிட்டு. மழைக்காக ஒதுங்குன ஒவ்வொரு வூடும் பள்ளியோடத்தெப் போல பல வெதமான பாடங்கள நடத்துனுச்சு. ஆடோ, மாடோ இல்லாத வூடுகள அபூர்வமாத்தாம் பாக்க முடிஞ்சது. ஒரு கிராமங்றது ரொம்ப உள்கிராமமா மாற மாற ஆடும் மனுஷங்களும் ஒரே திண்ணையில இருந்தாங்க. வூட்டுக்குப் பக்கத்துலயே மாடு ம்மான்னு கத்திக்கிட்டெ இருந்துச்சு. பெரும்பாலும் வண்டியப் போட்டுட்டு விகடுவும், செய்யுவும் மழைக்காக ஒதுங்குன ஒவ்வொரு வூட்டுலயும் ஆடுகளும் ஒதுங்குனுச்சுங்க. ஆடுகள்ன்னா ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வெதம். சிலது கருப்பா, சிலது வெள்ளையா, சிலது வெள்ளையும் கருப்புமா, சிலது செவப்பா. எந்த ஆடும் மனுஷனோட பழகவோ, மனுஷனோட மனுஷனா ஒட்டிக்கிடவோ கொஞ்சம் கூட கூச்சப்படல. அது பாட்டுக்கு ஒட்டி ஒரசிக்கிட்டு நின்னுச்சுங்க. ம்மே ம்மேன்னு ஏதேதோ பேசுனுச்சுங்க. மழெ நின்ன அடுத்த கனமே மனுஷன வுட வேகமா வுழுந்தடிச்சு ஓடுனுச்சுங்க.

            செய்யுவோட தோழிங்க ஒவ்வொரு வூட்டுல பத்திரிகெ வைக்குறப்பவும் டாக்கடர்ரு மாப்ளேங்றதெ ரொம்ப ஒசத்தியாப் பாத்தாங்க. அக்கம் பக்கத்துக் கிராமத்துல பத்திரிகைகள வெச்சு முடிச்சி அதுக்குப் பின்னாடி, ஆர்குடிக்கு ஒரு நாளும், ஒரத்தநாட்டுக்கு ஒரு நாளும் விகடு‍வெ அழைச்சிட்டுப் போயி அங்கேயும் கூடப் படிச்ச தோழியோளுக்குப் பத்திரிகெ  வெச்சா செய்யு. ஆர்குடியில வெச்ச தோழிங்க வூடுல்லாம் மாடி வூடுகங்ளா இருந்துச்சு. ஓரளவுக்கு நடுத்தரமான வசதியான குடும்பத்துப் பொண்ணுங்கத்தாம். செய்யுவோட ஒவ்வொரு தோழிங்களோட பிரியமும் விகடுவுக்கு ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு. அப்பிடியொரு அனுவத்தெ அதுவரைக்கும் அவ்வேம் உணர்ந்ததில்ல. செய்யுவோட ஒவ்வொரு தோழிங்களும் விகடுவெ அண்ணா அண்ணான்னு கூப்ட்டு பாசத்துல உருக வெச்சிப்புட்டாங்க. ஆனா ஒரத்தநாட்டுல போதும்பொண்ணு வூட்டப் பாத்தப்பத்தாம் விகடுவுக்கு ரொம்ப பரிதாபமா இருந்துச்சு.

            அந்தப் பொண்ணோட வூடு ஊருக்குக் கடைசியா தன்னந்தனியா இருந்துச்சு. சின்னதா ஒரு குடிசை வூடு. அந்த வூட்டுல அஞ்சுப் பொண்ணுக. அஞ்சுப் பொண்ணுகளும், அதுகளோட அப்பா அம்மான்னு ஏழு பேத்தும் அந்தக் குடிசைக்குள்ள எப்பிடி இருப்பாங்கன்னு நெனைச்சப்போ பாவமாத்தாம் இருந்துச்சு.

            அந்த வூட்டுல நாலாவது பொண்ணுதாம் போதும்பொண்ணு. அதுதாங் செய்யுவோட ஆர்குடி கமலாம்பாள் காலேஜ்ல படிச்சது. அந்த வூட்டுல எந்தப் பொண்ணுக்கும் கல்யாணம் வேற ஆவாம இருந்துச்சு. அஞ்சாவது பொண்ணான போதும்பொண்ணோட தங்காச்சி நர்சிங் காலேஜ்ல படிச்சிட்டு இருக்குறதா சொன்னாங்க. ரொம்ப செருமத்துக்கு எடையில படிக்க வைக்குறதாவும் மொத மூணுப் பொண்ணுகள பத்தாப்பத் தாண்டி படிக்க வைக்க முடியலன்னும், நாலாவதான போதும்பொண்ணையும், அஞ்சாவதான அதோட தங்காச்சியையும்தாம் பத்தாப்பத் தாண்டி மேக்கொண்டு படிக்க வைக்க முடிஞ்சதா சொன்னாங்க அவுங்களோட அப்பாவும் அம்மாவும்.

            போதும்பொண்ணு ஒரத்தநாட்டுல ஒரு தனியாரு பள்ளியோடத்துல வாத்திச்சியாப் போயி மாசம் மூவாயிரம் வாங்குறதா சொன்னுச்சு. தங்காச்சிய எப்படியாச்சும் படிக்க வெச்சு நர்ஸாக்கிட்டா குடும்பத்தோட பாரம் கொஞ்சம் கொறையும்ன்னு சொன்னுச்சு. விகடுவப் பாத்து, "செய்யு மட்டும் ல்லன்னா வெச்சுக்கோங்க ண்ணா! நம்மாள ஆர்குடி காலேஜ்ல எம்மெஸ்ஸியப் படிச்சே முடிச்சிருக்கவே முடியாதுண்ணா! அப்பைக்கப்போ பணத்தெ கொடுத்து ஒதவிப் பண்ணுணது செய்யுதாண்ணா! நம்ம குடும்பத்துல அந்த அளவுக்கு வசதி ல்லண்ணா! ஏதோ ஆசையில படிக்க வெச்சிப்புட்டாங்க. செய்யு மட்டும் ல்லண்ணா சமாளிச்சிருக்கவே முடியாதுண்ணா! அதுல கூட நெறையப் பணம் வாங்குனது கொடுக்காமலே இருக்குண்ணா. நிச்சயம் நல்ல வேலைக்குப் போயி அந்தப் பணத்தெ முழுக்க கொடுத்துடுவேம்ண்ணா! நமக்குன்னு தெரிஞ்ச ந்நல்லா பழகுற ஒரே ஆளுன்னா அத்து செய்யுதாண்ணா! வேற யாருகிட்டெயும் நமக்குப் பழக்கமே கெடையாதுண்ணா!"ன்னுச்சு போதும்பொண்ணு.  அதெ கேக்குறப்பவே விகடுக்கு கண்ணுல்லாம் கலங்கிடுச்சு.

            "அந்தப் பணத்தெ தார வாணாம். சம்பாதிச்சு பணம் சேருறப்போ படிக்கணும்ன்னு ஆர்வமுள்ள வசதியில்லாத ஒரு பொண்ணுக்குக் கொடுத்தாவே போதும், எஞ்ஞளுக்குக் கொடுத்த மாரித்தாம்!"ன்னாம் விகடு. அதெ கேட்டுட்டு ரொம்ப நன்றிண்ணான்னுச்சுப் போதும் பொண்ணு.

            செய்யு பத்திரிகைய வெச்சுக் கொடுத்துட்டு, அவசியம் கலியாணத்துக்கு வந்துப்புடணும்ன்னா. போதும்பொண்ணு கண்டிப்பா வந்துப்புடுறதா சொன்னா. கெளம்புறப்ப செய்யு விகடுகிட்டெ எரநூத்து ரூவாய வாங்கி போதும்பொண்ணு கையில திணிச்சிட்டு வந்தா. போதும்பொண்ணுக்கு அது தர்மசங்கடமா இருந்தாலும் செய்யுவக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு கண்ணுல தண்ணி வுட்டுச்சு. அத்தோட வர்ற வழியில யோகிபாயி வூட்டுல நிரஞ்சனிக்குக் கொடுத்து முடிச்சதோட செய்யு கொடுக்க வேண்டிய பத்திரிகை எல்லாம் கொடுத்து முடிஞ்சது. 

            திட்டையில தெருவுலயும் கொடுக்க வேண்டிய பத்திரிகைகள கொடுத்து முடிச்சாரு சுப்பு வாத்தியாரு. கிட்டதட்ட பத்திரிகை அத்தனையும் கொடுத்து முடிச்ச பிற்பாடு அடுத்த கட்ட வேலையா யோகிபாயப் பாத்து மூணு லட்சத்தெ மூணு வட்டிக்குக் கடனா வாங்கிட்டு நகெ வாங்குற வேலையில எறங்குனாரு. வட்டிக்குக் கடனா வாங்குற பணத்தெ முடிஞ்ச வரைக்கும் தள்ளுனா கொடுக்குற வட்டி அந்த மாசத்துக்குக் கொறையுமேங்ற கணக்குல அதெ வாங்குறதெ கடைசியா வெச்சிருந்தாரு சுப்பு வாத்தியாரு. சொன்னபடிக்குக் கலியாணத்துக்குப் போட வேண்டிய நூத்து பவுன்ல கையில இருந்த நாப்பது பவுனு போவ, மிச்ச அறுவது பவுன வாங்க வேண்டியதா இருந்துச்சு. இதுவரைக்கும் கலியாணச் சிலவு, காருக்கு, கட்டிலு பீரோக்குன்னு கொடுத்தப் பணம் அத்தோட ஜவுளி, பத்திரிகெ அடிக்க, வைக்க ஆன பணம்ன்னு போவ மிச்ச இருந்த பணத்தெ முழுசையும் போட்டு, அத்தோட யோகிபாய்கிட்டெ வாங்குன மூணு லட்சத்தையும் சேத்துக்கிட்டுக் கலியாணப் பொண்ணுக்கு வாங்க வேண்டிய, ‍போட வேண்டிய நகைகள வாங்குறதுக்கு தஞ்சாவூரு கார்ர எடுத்துக்கிட்டு, அந்தக் கார்ல வெங்கு, ஆயி, செய்யுன்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுக்கிட்டு கெளம்பினாரு சுப்பு வாத்தியாரு.

            சுப்பு வாத்தியாருக்கு அந்த நகை நட்டையும் திருவாரூர்ல வாங்கணும்ன்னுத்தாம் நெனைப்பு. ஆன்னா செய்யு தஞ்சாவூர்ல போயி டாட்டா கோல்ட் பிளஸ்லத்தாம் எடுக்கணும்ன்னு பிடிவாதமா நின்னா. செரித்தாம் தஞ்சாவூரு கெளம்புங்க காரு வர்றதுன்னு சுப்பு வாத்தியாரு சொன்னப்பவே ஆயி சொன்னா, "மாமா! இதுவுங் போன்ல வந்தச் சேதியாத்தாம் இருக்கும்! ரிமோட் கன்ட்ரோல் நல்லா‍‍வேவேல செய்யுது!"ன்னு.

            "இதுவரைக்கும் ஆடியாச்சு. ஆட்டம் முடியப் போவுது. இன்னும் கொஞ்சந்தானே. அதெயும் ஆடிப்புட்டா திருப்தியாப் போயிடும். முழுக்க நனைஞ்ச பெற்பாடு முக்காடு என்னத்துக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            தஞ்சாவூர்ல நெக்ளஸ், செயின், தோடு, வளையல்ன்னு எல்லாத்துலயும் ரண்டு மூணு செட்டகளா வாங்குனுச்சுங்க சனங்க. அத்தோட மாப்புள்ளைக்கு வாங்க வேண்டிய பிரஸ்லெட், மோதிரம், செயின்னு வாங்குனுச்சுங்க. எல்லாம் சேத்து அம்பத்து எட்டுப் பவுனுக்கு வந்து நின்னுச்சு. அதெ ஒவ்வொண்ணா பாக்குறப்ப எல்லாம் அதெ போட்டோ எடுத்து வாட்ஸாப்புல பாலாமணிக்கு அனுப்புறதெ ரகசியமா பாக்காதது போல பாத்திருந்துட்டு ஆயி வந்து வூட்டுல விகடுகிட்டெயும், சுப்பு வாத்தியாருகிட்டெயும் சொன்னா. அப்பிடியெல்லாம் போட்டோ எடுத்து அனுப்பி பாக்க முடியுங்றதெ இப்பயும் நம்ப முடியாத ஆளெப் போல கேட்டுக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. விகடு, "ஒமக்கு வேற வேல ல்லியா? வெச்சிக்கப் போறவங்க அவுங்க! அவுங்களுக்குப் பிடிச்சாப்புல எடுத்துக்கிட்ட வரைக்கும் செரித்தாம்!"ன்னாம் ஆயிகிட்டெ. எல்லாரும் போயிப் பாத்து வாங்குன நகெ நட்டா இருந்தாலும், அநேகமா அத்து எல்லாம் செய்யுச் சொல்லி, அதாச்சி செய்யுகிட்டெ பாலாமணி வாட்ஸாப்புல சொல்லி வாங்குன நகையாத்தாம் அதெல்லாம் இருந்திருக்கும்.

            தஞ்சாவூர்ல வாங்கியாந்த ஐம்பத்தெட்டு பவுனு நகெ, அத்தோட வெங்குகிட்ட இருக்குற நகையில எதாச்சும் ரண்டு பவுனுக்குச் சேத்து அது அறுவது பவுனாச்சுன்னா, கையில பொண்ணுக்குன்னு எடுத்து இருக்குற நாப்பது பவுனையும் சேத்து நூத்துப் பவுனா போட்டுப்புடுறதுன்னு திட்டத்தெ பண்ணிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. கலியாணத்துக்கு வேண்டிய வெள்ளி நகைகளையும் தஞ்சாவூர்லயே வாங்கி முடிச்சிருந்தாரு சுப்பு வாத்தியாரு. பவுனு, வெள்ளி வாங்குற வேல முடிஞ்சதும் அடுத்தகட்ட வேலைகளுக்குத் தயாரானாரு சுப்பு வாத்தியாரு. அவரு கையில இருந்த பணம் மொத்தமும் இப்போ சுத்தமா காலியாயிருந்துச்சு. கிட்டத்தட்ட இருந்த பணம் அத்தனையையும் இதுவரைக்கும் தொடைச்சி அள்ளிருந்தாரு சுப்பு வாத்தியாரு.

            அடுத்த கட்டமா பணத்துக்காக ஓகையூர்ல இருந்த நெலத்தையும், திட்டையில இருந்த நெலத்தையும் ஒரு வருஷத்துக்கு அம்பத்து அஞ்சாயிரத்தெ வாங்கிக்கிட்டு வெவசாயம் பண்றதுக்கு ப்ளாட்டுக்கு எழுதிக் கொடுத்தாரு. விநாயகம் வாத்தியாரோட தம்பிக்கிட்டெ கேட்டு நாப்பதினாயிரத்தெ கை மாத்தா வாங்கிக்கிட்டாரு. சொந்தக்காரவுங்க யாருகிட்டெயும் பணத்தெ வாங்கக் கூடாதுங்றதுல ரொம்ப தெளிவாவும் பிடிவாதமாவும் நின்னு குடவாசல்ல இருந்த விகடபிரசண்டரு வாத்தியாரோட மவ்வேனுங்ககிட்டெ பொண்ணுக்குக் கலியாணம்ன்னு கெஞ்சிக் கூத்தாடி எண்பதினாயிரத்தெ மூணு வட்டிக்கு வாங்கிட்டு வந்தாரு.

            இப்போ கைக்கு வந்தப் பணத்தெ வெச்சு வூட்டுக்கு பெயிண்ட வெச்சு முடிச்சாரு சுப்பு வாத்தியாரு. அது ஒரு முப்பதாயிரத்த முழுங்குனுச்சு. அந்த அளவுக்கு ரயிலு பொட்டிப் போல வீட்டெ வடக்காலயும் தெக்காலயும் இழுத்துக் கட்டியிருந்தாரு சுப்பு வாத்தியாரு. அதெ முடிச்சி அடுத்ததா ஒரு கடைக்கு நாலு கடையா திருவாரூரு கடைத்தெருவுல விகடுவ வெச்சிக்கிட்டு அலையோ அலையுன்னு அலைஞ்சு கொட்டோஷன வாங்கிக்கிட்டு கடெசீயா லிங்கம் பர்னிச்சர்ல வெல கம்மியா இருக்குறதப் பாத்துட்டுக் கலியாணத்துக்கு வைக்க வேண்டிய வெங்கலப் பாத்திரம்ங்க, எவர்சில்வரு பாத்திரம்ங்க, குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, மெத்தைன்னு வேண்டிய சாமானுங்க அத்தனையும் வாங்கிட்டு அந்த சாமாஞ் செட்டுகள ஒரு டாட்ட ஏசியப் பிடிச்சி அதுல விகடுவையும் ஏத்தி வுட்டு வூட்டுக்கு அனுப்பி வெச்சாரு சுப்பு வாத்தியாரு.

            பெறவு ஒரு நாளு விகடுவ பின்னாடி உக்கார வெச்சு டிவியெஸ்ஸூ பிப்டியில அழைச்சிட்டுப் போயி நாகவல்லி மூகூர்த்தத்துக்கு வாங்க வேண்டிய தாலிய திருவாரூரு மைதீன் கோவிந்தராஜூ ஜூவல்லரியில எடுத்துட்டு வந்தாரு சுப்பு வாத்தியாரு. அன்னிக்குன்னு பாத்துதாம் நெடுநாளைக்குப் பெறவு வண்டி கெளம்பு முடியாதுன்ன அடம் பிடிச்சதுல நொந்துப் போயிட்டாரு சுப்பு வாத்தியாரு. விகடுதாம் தெருவெ ரண்டு சுத்து சுத்தி வந்து பெடலப் போட்டு ஸ்டார்ட் பண்ணி கொடுத்தாம். வண்டிய டர்டர்ருன்னு கெளப்பி எதுத்தக் கொல்லையக் கடந்தப்போ தூத்தல் போட ஆரம்பிச்சது. "ன்னடா இத்து மழெ வாரலன்னு நெனைச்சேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. பின்னாடி வண்டியில உக்காந்திருந்த விகடு வானத்தெ அண்ணாந்து பாத்தாம். மேகமா கருமையாத்தாம் இருந்துச்சு. அப்பிடியே அவ்வேம் கண்ணுக்கு எதுத்தக் கொல்லையில இருந்த தென்னை மரங்கப் பட்டுச்சு. நாலு மரங்க கிட்டதட்ட்ப பட்டுப் போயிருந்துச்சு நல்ல மழைக் காலத்துல. இருந்த ரண்டு வாழைக் குத்துகளும் பழுத்துப் போயி சரிஞ்சிக் கெடந்துச்சுங்க.

            அன்னிக்குன்னுப் பாத்து நகைக் கடைக்குள்ள நொழைஞ்சா, வீயெம் மாமாவும் கோகிலா மாமியும் அதெ நகெக் கடையில நகெ எடுத்ததப் பாத்ததும், சுப்பு வாத்தியாரு ஒதுங்கி வந்துட்டாரு. வீயெம் மாமா விகடுவப் பாத்துப்புட்ட, "ன்னடாம்பீ! தங்காச்சிக் கலியாணத்துக்கா!"ன்னுச்சு. "ம்!"ங்ற மாதிரிக்கித் தலையாட்டிட்டு விகடுவும் வெளியில வந்துட்டாம். அவுங்க ரண்டு பேத்தும் நகைய எடுத்துட்டுக் கெளம்பி வெளியில போன பெற்பாடுதாங் சுப்பு வாத்தியாரு உள்ளாரப் போயி தாலிய எடுத்தாரு.     தாலிய குங்குமம், பூவுல்லாம் வெச்சு ரொம்ப பவ்வியமா கொடுத்தாங் நகெக் கடையில. கடைய வுட்டு வெளியில வந்ததும், "ன்னடாம்பீ! இந்தப் பயெ பாக்குறாப்புல தாலிய வாங்குறாப்புல ஆயிடுச்சே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. விகடுவுக்கு அந்தக் கேள்விக்கு என்ன பதிலெச் சொல்றதுன்னு தெரியல. பேசாம மெளனமா நின்னாம்.  தாலிய வாங்கிட்டு வண்டிய எடுத்தா மழை ச்சோன்னு அடிச்சித் தள்ளுனுச்சு. அதுல நனைஞ்சிக்கிட்டெ வூடு சேந்தாங்க விகடுவும், சுப்பு வாத்தியாரும். இப்போல்லாம் மழை பேஞ்சா ஒதுங்கி நின்னுட்டு வார்ற பழக்கம் இல்லாம போயிடுச்சு ரண்டு பேத்துக்கும். எந்த மழை அடிச்சாலும் அதுல எருமெ மாடுகளப் போல நனைஞ்சிட்டு வர்றப் பழகிட்டாங்க. அதுல சுப்பு வாத்தியாருக்குச் சளி பிடிக்கல. விகடுக்குத்தாங் அடிக்கடி சளி பிடிச்சி அவ்திப்பட்டுக்கிட்டுக் கெடந்தாம். 

            தாலி உட்பட எல்லாத்தையும் வாங்கி முடிச்சி வூட்டுக்கு வந்த சுப்பு வாத்தியாரு கையில இருந்த பணத்தெ எண்ணிப் பாத்தாரு. நாப்பதாயிரம்தாம் இருந்துச்சு. இந்த நாப்பதாயிரம் போவ கையில இருந்த பணத்தெ அனைத்தையும் மறுபடியும் சாமாஞ் செட்டுகளா வாங்கித் தொடைச்சி அள்ளியிருந்தாரு சுப்பு வாத்தியாரு. கிட்டத்தட்ட கலியாணச் சிலவுக எல்லாம் அவருக்கு முடிஞ்சிருந்தாலும் கலியாணத்துக்குன்னு பந்தல போட்டாவணும், நாலு டியூப் லைட்டையாவது கட்டியாவணும், கலியாணத்துக்கு வர்ற முடியாதவங்க வூட்டுக்கு வந்தா அவுங்களுக்கு எதாச்சும் உபசரிப்ப பண்ணியாவணும்,‍ தெருவுல இருக்குற சனங்க பாக்குக்கோட்டைக்கு வந்துட்டுப் போவ ஒரு பஸ்ஸப் பிடிச்சி விட்டாவணும், ‍அத்தோட வூட்டுக்கு வர்ற ஒறவுக்கார சனங்களுக்குன்னு ரண்டு வேன்களையாச்சும் பிடிச்சாவணும்ன்னு அதெ எல்லாத்தையும் அந்தக் காசியில சமாளிச்சிப்புடலாம்ன்னு நெனைச்சிட்டு இருந்தாரு சுப்பு வாத்தியாரு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...