9 Aug 2020

இலையில்லாமல் வந்தச் சாப்பாடு!

இலையில்லாமல் வந்தச் சாப்பாடு!

செய்யு - 531

            மூர்த்தோலைய எழுதிட்டுச் சாப்புடலாம்ன்னு உக்காந்திருந்த சனங்களுக்குச் சாப்பாடு ஒண்ணரை மணி வாக்குலதாம் வந்து எறங்குது. சித்துவீரன்தான் மொத ஆளா போயி நின்னு எறக்குற வேலையப் பாத்துச்சு. முருகு மாமாவுக்குக் கோவம்ன்னா தாங்க முடியாத கோவம். "பன்னெண்டு மணிக்கு மின்னாடி கெளம்புன மினிடாரு வண்டி திருவாரூர்லேந்து இஞ்ஞ வாரதுக்கு ஒண்ணரை மணி நேரமாடா ஆவும்?"ன்னு சத்தம் போடுது. வந்த எறங்குன சாப்பாட்ட கொண்டாந்த பாத்திரத்துலேந்து இங்க வெச்சிருந்த பாத்திரங்களுக்கு மாத்துற வேலய ஆளாளுக்கு நின்னுப் பாத்து வேகமா வேகமா காரியம் நடக்குது. அதெ மாத்தி முடிச்சிட்டு வண்டியக் கெளப்ப பாத்தா முருகு மாமா மினிடாரு வண்டி மின்னாடி நின்னுகிட்டு, "வண்டிய அந்தாண்ட இந்தாண்ட எவனும் எடுக்கக் கூடாது! எடுத்தா கொலதாம் வுழும்!"ங்குது. அதோட சத்தம் வேற காட்டுக்கத்தலா நாலு ஊருக்குக் கேக்கும் போலருக்கு. நல்ல காரியம் அதுவுமா மூர்த்தோலைய எழுதிட்டு இப்பிடி ஒரு பெரச்ச‍னெ கெளம்பும்ன்னு யாரும் எதிர்பாக்கல.

            "ஏம் இப்பிடி பண்ணுதீயே?"ன்னு ஊரு பெரிசுங்க கேட்டாக்கா, "நாம்ம சாப்பாட்டுக்காக இம்மாம் நேரம் காத்துக் கெடந்தோம்லா! சாப்பாட்ட தாமசமா எடுத்தாந்த அவனும் அம்மாம் நேரம் வரைக்கும் காத்துக் கெடக்ணும். அதாங் அவனுக்குக் கொடுக்குற தண்டனெ. அவ்வேம் நாமல்லாம் சாப்பாடு முடியுற வரைக்கும் நின்னு எப்ப பந்தி முடியுதோ அப்பத்தாங் கெளம்புனும்!"ன்னு அடம் பண்ணுது முருகு மாமா. லாலு மாமாவும் அதுக்கு ஒத்து ஊதுறாப்புல, "மின்னாடி வண்டிய எடுக்கப் படாது. வண்டிச் சாவியப் பிடுங்க உள்ளாரப் போடுங்க! எல்லாம் முடிஞ்ச பெற்பாடு கொடுத்து வுடலாம்! மீறி நடந்தா வண்டிய ஒடைச்சி சின்னா பின்னா பண்ணிப்புடுவேம்!"ங்குது.

            மினிடாரு வண்டிக்கார்ரேன், "அய்யா! தயவு பண்ணிப் புரிஞ்சுக்கோங்க. அஞ்ஞ சாப்பாட்ட ஏத்தி வுட்டப்போ மணி சரியா பன்னெண்டே காலுக்கு மேல. பாத்திரத்துல சாம்பாரு, ரசம், மோருன்னு தண்ணி வகையறா வேற இருக்கு. ரோட்டு வேற செரி கெடையாது. தளும்பி ஊத்திடக் கூடாதுன்னு பாத்துப் பதனமா கொண்டாறதுக்கு நேரமாயிடுச்சு. இப்போ வண்டில்ல காலிப் பாத்திரங்களா கெடக்குது. இப்போ போவச் சொன்னாக்கா இருவது நிமிஷத்துல திருவாரூரு போயிடுவேம்! புரிஞ்சுக்கோங்க! நாம்ம போயி இதெ எறக்கி விட்டுப்புட்டு இன்னும் ஒரு சவாரிப் போயாவணும். இப்போ நாம்ம தாமசமா வர்றப்போ ஒஞ்ஞளுக்குக் கோவம் வர்ற மாதிரித்தானே நாம்ம இனுமே போவ வேண்டிய சவாரிக்கு தாமசமா போன சவாரியச் சொன்னவங்களுக்குக் கோவம் வரும். வயசுல மூத்தவங்களா இருக்கீயே! கொஞ்சம் கூட யோஜனெ பண்ணி மாட்டேங்குதீயளே? பெரியவங்க நெறையப் பேத்து நிக்குதீயே! வண்டியே கெளப்ப வுடுங்க!"ன்னாம் கெஞ்சுனாப்புல.

             "செரிதாங் வுடுங்க. பாவம் அவ்வேம் ன்னா பண்ணுவாம்? மணி அப்படி ஒண்ணும் ஆவல. ஒண்ணரைதானே ஆவுது. சாப்புடுற நேரந்தாம். கொஞ்சம் மின்ன பின்ன ஆவுது. வூட்டுல சில நாளுல மூணு மணிக்குல்லாம் சாப்புடுறது இல்லியா? அப்பிடி நெனைச்சிக்கிட வேண்டியதுதாங். ன்னா யிப்போ கொறைஞ்சுப் போச்சு? சாப்பாடு வர்ற வரைக்கும் நாமளும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு நல்ல வெதமா பேசிக் கலந்துக்கிட்டுத்தான இருந்தேம். நாம்ம உக்காந்துப் பேசணும்ன்னு ஆண்டவேம் நெனைக்குறாம்ன்னு நெனைச்சுக்கோங்க! எடுத்து வெச்சுப் போட்டாக்கா அஞ்சு நிமிஷத்துல பந்தியத் தயாரு பண்ணிடலாம். இஞ்ஞ வழக்கு வெச்சிட்டு நிக்குற நேரத்துக்கு ஆவ வேண்டிய காரியத்தெ பாத்தா மாப்புள்ள வூட்டுக்காரவங்களும் சட்டு புட்டுன்னு சாப்புட்டுக் கெளம்பலாம் பாத்துக்கோங்க!"ன்னு பரமுவோட அப்பா சமானதானத்தப் பண்ணி வுட்டாரு.

            எதையும் கேக்காம அடம் பண்ணிட்டு வண்டிக்கு மின்னாடி நின்னுட்டு இருந்த முருகு மாமாவையும், லாலு மாமாவையும் கையப் பிடிச்சி, சந்தானம் அத்தானும், ராமு அத்தானும் மாடி மேல பந்திக்குக் கொண்டாறதுக்குள்ள பெரும் பாடா போச்சு. ரண்டு பேத்தையும் மேல கொண்டு போனதுக்குப் பிற்பாடுதாங் மினிடோருக்காரன் வண்டிய எடுத்துக்கிட்டுக் கெளம்புனாம். "செரியான முட்டாக் கூதியா இருப்பானுவோ போலருக்கு!"ன்னு அவ்வேம் வேற முருகு மாமாவையும், லாலு மாமாவையும் சத்தம் வெச்சுட்டுப் போறாம். நல்லவேளையா ரண்டு பேரும் மாடி மேல இருந்ததால அவ்வேம் வெச்ச சத்தம் அவுங்க காதுல வுழாம போனுச்சு. யில்லன்னா அது ஒரு களேபரம் ஆயிருக்கும். அப்பிடி ஆவாம போனது சுப்பு வாத்தியாரு போன ஜென்மத்துல பண்ணுன புண்ணியந்தான்னு சொல்லணும்.

            செரிதாம் பந்தியப் போடலாம்ன்னு பாத்தா வாழையிலையக் காணும். பொதுவா இது மாதிரிக்கிச் சாப்பாட்டு தயாரு பண்ணிக் கொடுக்கறவங்க எத்தனெ சாப்பாடு சொல்றோமோ அத்தனெ சாப்பாட்டுக்கு எலையையும் எண்ணி வெச்சிப்புடுவாங்க. அவுங்க கணக்குல எலை கணக்கும், அப்பளக் கணக்கும், வடை கணக்கும் கனகச்சிதமா இருக்கும். அவுங்களோட எண்ணிக்கையே எலை, அப்பளம், வடைய வெச்சித்தாங். இந்தச் சாப்பாட்ட தயாரு பண்ணிக் கொடுத்த திருவாரூரு ஆளு எலையைக் கொடுக்க மறந்தானோ, வண்டியில எடுத்துட்டு வந்தவன் வாங்க மறந்தானோன்னு தெரியல. மொத பந்திய மொனை எலையப் போட்டுத்தாங் துவக்குவாங்க. ஒட்டுமொத்தமா பந்திக்குப் போடறதுக்கு வாழை எலையே இல்லாதப்ப என்னத்தெ பண்ணுறது? எதெப் போட்டுத் துவங்குறது?

            காலைப் பந்திக்கு டிபன் சாப்பாட்டுக்குன்னு சுப்பு வாத்தியாரு வாங்கி இருந்த எலைங்க ஒரு அம்பது போல மிச்சம் கெடந்துச்சு. அவசரத்துக்கு வேற வழியில்லன்னு அதெ போட்டுப் பந்தி ஆரம்பமாச்சுது. டிபன் சாப்பாட்டுக்குன்னு வாங்கியாந்த எலையா இருந்தாலும் எலைக பெரிசா இருந்ததால மத்தியானச் சாப்பாட்ட வைக்குறதுல செருமம் இல்லாமப் போச்சு. மாடியில ஒரு நேரத்துல நாப்பது பேரு உக்காந்து சாப்புடுற அளவுக்கு பெஞ்சுகளப் போட்டு நாற்காலிகப் போட்டுருந்துச்சு. மொதல்ல மாப்புள்ள வூட்டுச் சனங்களாப் பாத்து உக்கார வெச்சு பந்தி நடந்துச்சு.

            பந்தி நடந்துக்கிட்டு இருக்குறப்பவே அடுத்தப் பந்திக்கு வாழையெலை வேணுமேன்னு எதுத்த கொல்லையில பூந்து இருந்த ரண்டு வாழைக்குத்துல இருந்த அத்தனெ எலைகளையும் வெட்டி மொட்டையடிச்சதுல வாழைக்கண்ணுகளப் பாக்கவே பரிதாபமா இருந்துச்சு. எலெ வேணுங்ற மனுஷனோட அவசரம் வாழை மரம் உசுரோட இருக்கணுமேங்ற நெனைப்பே இல்லாம பண்ணிடுச்சு. அப்படி அறுத்து எடுத்த அந்த எலைக இன்னும் ஒரு பந்திக்குத் தாங்கலாம். அடுத்ததா பந்தி பரிமாறதுக்குன்னு நின்ன இளவெட்டுப் புள்ளீயோள வுட்டு, ஊருல யாரு வூட்டுல வாழை மரம் இருந்தாலும் எலைய அறுத்துக் கொண்டாங்கடான்னு ஊருப் பெரிசுங்க அனுப்பி விட்டதுல ஆளாளுக்கு ஒவ்வொரு திக்குல பசங்க பறந்தாங்க. ஊருன்னா ஊரு இங்க பெரிய வாழைக் கொல்லைகளும் பெரிசா எங்கயும் கெடையாது. வூட்டுக்குன்னு ரண்டு மூணு வாழை மரங்க இருக்குற ஊருதாம் இது. அதுவும் எல்லா வூட்டுலயும் இருக்குமான்னு சொல்ல முடியாது.

            அத்தோட முடியல விசயம். விகடுவையும் கெளப்பி வுட்டு வடவாதியில, கூத்தாநல்லூர்ல எங்க எலை இருந்தாலும் கையோட வாங்கிக் கொண்டாடான்னு குமாரு அத்தானெ பின்னாடி உக்கார வெச்சு கெளப்பி வுட்டாங்க. இப்படி ஆளுக்கொரு பக்கமா பறக்க வேண்டியதா போச்சு மத்தியான சாப்பாட்டு நேரத்துல. விகடுவுக்கு ஒரு வெதத்துல வருந்தந்தாம். மூர்த்தோலைக்கு வர்றவங்கள வாங்கன்னு கூப்புடவும் முடியாமப் போயி, யிப்போ சாப்பாடு பரிமாறுற நேரத்துல நின்னு கவனிக்கவும் முடியாமப் போயிட்டேன்னு.

            வடவாதி பெரிய டவுனா? அது டவுனுக்கும் கிராமத்துக்கு இடைப்பட்ட ஒரு ஊரு. காய்கறிக் கடைங்க இருக்குன்னாலும் சாப்பாட்டு எலைக இல்ல. இருக்குற காய்கறிக் கடையில ஒவ்வொண்ணா ஏறி இறங்குனா, பச்செ வாழையெலை கெடையாது, சருவு கட்டுன்னா இருக்கு வாங்கிக்கிறீயளான்னு கேக்குறாங்க.  இதெ வுட்டா அடுத்ததா கூத்தாநல்லூரு போயித் திரும்புறதுன்னா எப்படியும் முக்கால் மணி நேரத்துக்கு மேல ஆயிடும். அதுக்குள்ள அடுத்த பந்திக்கு எலையில்லாம போச்சுன்னா என்னத்தெ பண்ணுறது? மளிகைக் கடையில வாழை எலை மாதிரி இருக்குற தாளு எலைங்கன்னா சட்டுபுட்டுன்னு வாங்கிட்டுக் கெளம்பிடலாம்ன்னு ஒரு யோசனெ வந்தவனா விகடு, "ஏம் அத்தாம்! தாளு எலெதாம் சட்டுப்புட்டுன்னு கெடைக்கும். அதெ வாங்கிட்டுப் போவலாமா?"ன்னு கேட்டாம்.

            அதுக்குப் பின்னாடி உக்காந்திருந்த குமாரு அத்தான், "செரியா யோஜனெ பண்ண மாப்ளே! இப்போ இருக்குற நெலமைக்கு அதாங் செரிபட்டு வரும்! வாங்கிட்டு சட்டுப்புட்டுன்னு கெளம்புவோம்!"ன்னுச்சு. சரின்னு  மாடக்கண்ணு மளிகெ கடையில பூந்து பந்திக்குப் போடுற அந்த தாளு எலைகள ரண்டு கட்டு வாங்கிட்டுத் திரும்பி வந்தா, நாது மாமா அதெ பாத்துப்புட்டு கடுப்படிக்குது, "இந்த எலையிலப் பந்திப் பரிமாறுன்னா சாப்புடுறவேம் கெளரவக் கொறைச்சலா நெனைக்க மாட்டாம்! புத்தி எங்கடா போவுது ஒஞ்ஞளுக்கு? போங்கடா எங்க எலெ கெடைச்சாலும் வெரசா கொண்டாங்கடா!"ங்குது. வேற வழி இல்லாம விகடுவும், குமாரு அத்தானும் திரும்ப கூத்தாநல்லூர்ர பாக்க வண்டிய வுட்டு அங்க ஒரு காய்கறிக் கடையில நூத்து அம்பது எலைதாங் கெடைச்சதுன்னு அதெ வாங்கிட்டு திட்டைக்குத் திரும்புனாங்க. அவுங்க திரும்புனப்போ மணி மூணரை இருக்கும்.

            மாப்புள்ள வூட்டுச் சனங்களுக்குச் சாப்பாட்ட முடிச்சி அவுங்கள கெளப்பி வுட்டுருந்தாங்க. அவுங்கள நின்னு வழியனுப்ப கூட வாய்ப்புல்லாம போயிடுச்சு விகடுவுக்கு. எலைக்கட்டத் தூக்கிட்டு மாடிக்குப் போனா எந்தத் தாளு எலையில பந்தி பரிமாறக் கூடாதுன்னு நாது மாமா சத்தம் போட்டுச்சோ அந்த எலையிலத்தாம் அப்ப பந்தி நடந்துக்கிட்டு இருந்துச்சு. கிட்டதட்ட பந்தி முடியுற நெல. இன்னும் இருவது முப்பது பேத்துச் சாப்புட்டா முடிஞ்சிடும். இவுங்க வாங்கிட்டு வந்த எலையில நெறைய மீறும் போல இருந்துச்சு.

            "எப்போ போன பயலுவோ எப்படா திரும்புதீயே?"ன்னுச்சு நாது மாமா.

            "ச்சும்மா இரு சித்தப்பா நீயி! ஒன்னாலத்தாம் அலைச்சலு. ன்னா வெயிலு தெரியுமா? எத்தனெ எடம் அலைஞ்சி வாங்கிட்டு வந்திருக்கோம் தெரியுமா? திடீர்ன்னு போயி எரநூத்து எலைய அதுவும் வாழை எலையா வாங்கிட்டு வான்னா எப்பிடி வாங்குறது? இதெல்லாம் முங்கூட்டியே கடையில சொல்லி வெச்சிருந்தாத்தாம் கடைக்கார்ரேம் வாங்கி வெச்சிருப்பாம். அத்து யில்லாம அவ்வேம் வாழ எலைய வாங்கி வெச்சி நட்டப்படுவானா? தேவ நாள்ல அதுவும் அம்புட்டு எலைக்கு எஞ்ஞப் போறதுங்ற நெனைப்பே யில்லாம சாப்பாட்ட ஏற்பாடு பண்ணவுக இருந்தா என்னத்தெ பண்ணுறது? திடீர்ன்னு எரநூத்து எலென்னு போயி நின்னா நீயே யோஜனெ பண்ணு சித்தப்பா! இதென்ன ஒஞ்ஞ கோவில்பெருமாளுன்னு நெனைச்சியா? நெனைச்ச நேரத்துக்கு வாழக்கொல்லையில பூந்து எலைய அறுத்துட்டு வாரதுக்கு?"ன்னுச்சு குமாரு அத்தான்.

            "அவனுங்கள ஒண்ணுச் சொல்லாதே யப்பா நாகு வூட்டுக்காரா! விகடுவெ காலையில சாப்புட்டானான்னு கேளு? அங்கன இங்கனனுன்னு அலைஞ்சிட்டுக் கெடந்தாம். சாப்புட்டுருக்க மாட்டான்னு நெனைக்கறேம்!"ன்னுச்சு பத்மா பெரிம்மா.

            "எலே ன்னடா கதெ நடந்துருக்கு?"ன்னுச்சு நாது மாமா.

            "சாப்புடணும் மாமா!"ன்னாம் விகடு.

            "ஆம்மா இதெ சொல்லிக்கிட்டெ நில்லு! இதுக்கு மேலன்னா எலையில சாப்பாட்டாப் போட்டு ஒமக்கு ஊட்டித்தாம் வுடணும்டா! ஒம் வயசுக்குல்லாம் ஓடுற ஓட்டத்துல சாப்புடணும்டா! இப்பிடியா சாப்புடாம கெடக்குறது? அதுவும் தேவைக்கார நீயிச் சாப்புடாம கெடந்தா, தேவைக்கு வந்தவங்கள எஞ்ஞள எப்பிடிடா கவனிப்பே?"ன்னுச்சு நாது மாமா.

            "நாஞ்ஞ இஞ்ஞ சாப்பாட்டப் பாத்திட்டு நின்னுருந்தா சித்தப்பா! நீயி தரையில சாப்பாட்டப் போட்டுத்தாங் சாப்பிட்டுருக்கணும் பாத்துகோ!"ன்னுச்சு குமாரு அத்தான்.

            "ஏம்டா போட்டுச் சாப்புட ஒரு தட்டுக் கூடவாடா யில்லாம போயிடும் வூட்டுல? பேசுறாம் பாரு பேச்சு?"ன்னுச்சு நாது மாமா.

            "யிப்பிடியே நீயி பேசிட்டெ உக்காந்திரு. நீயி சாப்புட்டல்லா. ஒம் கதெ ஆயிடுச்சு. அவனுக யின்னும் சாப்புடல. அவனுக ரண்டு பேத்தையும் உக்கார வெச்சி சாப்பாட்டப் போடுங்க! பாவம் பயெ காலையிலேந்து சாப்புடாம நிக்காம்!"ன்னுச்சு பத்மா பெரிம்மா. அதுக்குப் பெறவுதாம் கடெசிப் பந்தியா உக்காந்து விகடு சாப்புட்டு முடிச்சாம், காலைச் சாப்பாட்டையும் மத்தியானச் சாப்பாட்டையும் சேர்த்து ஒரே சாப்பாடா.

            ஒரு தேவையச் செய்யுறப்போ ஒண்ணு ரண்டு சிக்கலு வந்துதாங் சேரும். சிக்கல்லயே ஒரு‍ தேவையச் செஞ்சு முடிச்சதுன்னா அத்து செய்யுவோட மூர்த்தோலைதாங். கடெசீயா சாப்புட்டு முடிச்சி சுப்பு வாத்தியாரு பெருமூச்செ வுட்டுக்கிட்டாரு, "நல்ல வேள! கலியாணம் அவனுவோ எடத்துலயே பண்ணுறாப்புல போவுது. அப்பிடியில்லாம நாம்ம நடத்துறாப்புல இஞ்ஞ இருந்துச்சுன்னா அதுலயும் இந்தப் பயலுவோ உள்ள பூந்து உபகாரம் பண்றாப்புல உபத்திரவத்தெ பண்ணி வுட்டுப்புட்டுக் கலியாணத்தெ நாறடிச்சிப்புடுவானுவோ! காசிப் போறது அப்பிடிக் காசியாப் போயித் தொலையட்டும்! நம்மால பெராணன வுட்டுக்கிட்டுக் கெடக்க முடியாதுடாப்பா!"ன்னாரு.

            "தேவையச் செய்யுறவங்கள அவுங்க போக்குல வுட்டுப்புடணும். எடையில பூந்து தேவையில்லாம பொறுப்ப ஆளாளுக்கு எடுத்துக்கிடக் கூடாது. அப்பிடி எடுத்துக்கிட்டா செரியா செஞ்சு முடிக்கணும்! மாமா! ஒம் பக்கமும் தப்பு இருக்கு. நீயி எப்பிடி ஒவ்வொண்ணையும் கண்ட மேனிக்குப் பொறுப்புல வுட்டுப்புட்டு கவனிக்காம இருந்தே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "மாப்புள வூட்டுக்காரப் பயலுவோல்ல அவ்வேம் சித்துவீரன் கொஞ்சம் பெரச்சனெ பிடிச்ச ஆளு. அவனால தேவையில்லாம பெரச்சன வார்ற வாணாம்ன்னு நெனைச்சு அவ்வேம் பொறுப்புல செலதெ வுட்டா, அதாலயே பெரச்சனெ ஆயிப் போயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அத்துச் செரி! அவனுவோ எதுக்கு நம்ம எல்லைக்குள்ள உள்ள வாரானுவோ!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அத்து வந்துப்பா! மாப்புள வூட்டுக்கார்ரேம் பெறத்தியானா இருந்தா இப்பிடிக்கு நடக்காது. அவனும் சொந்தக்காரனால்லா போறாம். அதெ தவிக்க முடியாது!"ன்னு சாமதானம் பண்ணுறாப்புல ஒரு வெதமா பேசி முடிச்சாரு சுப்பு வாத்தியாரு.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...