8 Aug 2020

மறதியில் தொலைந்த ஞாபகங்கள்

 

மறதியில் தொலைந்த ஞாபகங்கள்

            சுமார் மூன்று மணி நேரத்துக்கு முன்பு படித்த ஒரு நல்ல விசயத்தை மறந்து விட்டேன். படிக்கும் போதே இந்த விசயத்தை மறந்து விடக் கூடாது என்றும் மூளையில் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவோடும் படித்ததுதான். எப்படி மறந்தது என்று தெரியவில்லை. இப்படிப் பிடிவாதமாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விசயங்கள் மட்டும் எப்படியோ மறந்து விடுகிறது.

            எந்த விசயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேனோ, அதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருந்தால் கூட அவ்வளவு பெரிய விசயமாக இருந்திருக்காது. மறந்து விட்ட காரணத்தாலே மறந்த அந்த விசயம் ரொம்ப பெரிய விசயமாகப் போய் விட்டது.

            நானும் எதில் படித்தேன் என்று குமிந்திருந்த தினத்தாள்களில் தேடுகிறேன். மூன்று மாதங்களுக்குண்டான தினத்தாள்கள் முன்னால் குமிந்துக் கிடக்கிறது. நிச்சயம் இந்தத் தாளாகத்தான் இருக்கும், அந்தத் தாளாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக் கொண்டே இருக்கிறேன். அந்த விசயத்தைப் படிக்கும் போது பக்கத்தில் படித்த விசயங்களையெல்லாம் ஞாபகத்தில் கொண்டு வந்து தேடுகிறேன். ஆனால் படித்த அந்த விசயம் மட்டும் ஞாபகத்தில் வந்து தொலைய மாட்டேன்கிறது.

            ஒரு மணி நேரமாய் தினத்தாள்களோடு தேடித் தேடி அலுத்த பின்னும் மறந்த அந்த விசயத்தை ஞாபகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் குறைந்தபாடில்லை. நிச்சயமாக அந்த விசயம் இத்தனை தினத்தாள்களின் மத்தியில் எங்கோதான் ஒளிந்து கொண்டிருக்கிறது. எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டாமல் போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.

            அதற்குப் பிறகும் அரை மணி நேரம் ‍தேடியிருப்பேன். டீத்தூள் வாங்கியாரச் சொல்லி எவ்ளோ நேரமாவுது என்ற மனைவியின் குரலால் அதற்கு மேல் தேடலைத் தொடர முடியாமல் போய் விட்டது. டீத்தூளை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த பின் அடுத்தடுத்து வேலைகள் வந்துப் போனதில் அந்தத் தேடுதலை அத்தோடு நிறுத்த வேண்டியதாகி விட்டது. மனம் மட்டும் விடாமல் அவ்வபோது மனதுக்குள்ளயே படித்த அந்த விசயத்தைப் பற்றித் தேடலை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகத் தூங்கும் போது கனவிலும் தினத்தாள்களை நான் தேடிக் கொண்டிருந்தேன்.

            எங்காவது தனிமையாகச் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாலோ, எங்காவது ஒலிக்கும் பாட்டைத் தன்னையறியாமல் கேட்டுக் கொண்டிருந்தாலோ மறதியில் தவற விட்ட அந்த விசயம் ஞாபகத்துக்கு வந்து விடுகிறது. ஆனால் அந்த விசயம் மட்டும் ஞாபகத்துக்கு வர மாட்டேன்கிறது. உடனே மனதானது மறுபடியும் மெனக்கெட்டு அந்த விசயத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க முயல்கிறது. அருவமாய் ஏதோ ஒரு விசயம் அப்போது ஞாபகத்துக்கு வருகிறது. அந்த அருவம் வந்ததுமே மனதுக்குள் ஒரு திருப்தி வருகிறது. ஆனால் அருவமாய் வரும் அந்த விசயம் என்னவென்று மட்டும் புரிந்து கொள்ளவோ, விளக்கத்திற்குக் கொண்டு வரவோ முடியவில்லை.

            இப்போதும் மறந்துப் போன அந்த விசயத்தை ஞாபகப்படுத்திப் பார்ப்பது தொடர்கதையாகத்தான் இருக்கிறது. அப்படி ஞாபகப்படுத்திப் பார்ப்பதும் ஏதோ ஒரு சுகமாகத்தான் இருக்கிறது. ஆனால் பாருங்கள்! அந்த விசயம் மட்டும் ஞாபகம் வந்து விடக் கூடாது என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அப்படி ஞாபகம் வந்து விட்டால் ஞாபகப்படுத்திப் பார்க்கும் சுகம் திரும்ப கிடைக்குமோ என்னவோ?

            உங்களுக்கும் இப்பிடி ஏதாவது சம்பவங்கள் இருந்தால் அதைப் பகிர்ந்து கொண்டு ஆராயலாம். இருக்க வேண்டுமே? இருந்தால் நமக்கும் ஒரு துணை கிடைத்து விட்டார் என்ற விசயத்தில் நானும் பாக்கியவான்தான்.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...