7 Aug 2020

ஒரு நாள் ஒரு பொழுது இல்லையென்றால்...

 

ஒரு நாள் ஒரு பொழுது இல்லையென்றால்...

            ஒரு நாள் ஒரு பொழுது இல்லையென்றால் மனிதரால் வாழ முடியாது. அது என்ன? என்று ஒரு விடுகதையைப் போட்டால் அதன் விடை என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

            இதற்கு விடையாக அலைபேசி, தொலைக்காட்சி, பேஸ்புக், டிவிட்டர், யூடியூப், மொபைல் விளையாட்டுகள், ஆன்லைன் சூதாட்டங்கள் என்று நீங்கள் எதைச் சொன்னாலும் இதற்குச் சரியான விடை அவை அத்தனைக்கும் ஆதாரமாக இருக்கும் மின்சாரந்தாம்.

            மூச்சுக் காற்றுக்கு அடுத்தப்படியாக பேன் காற்று இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்ற சூழல் உண்டாகி விட்டதா இல்லையா? இயற்கையான காற்று நம்மை விட்டு அகன்று நாளாகி விட்டதுதானே!

            ஏசிக் காற்றோ, பேன் காற்றோ இல்லையென்றால் உடம்பு வியர்த்து வடிகிறது. அதற்காக எந்நேரமும் மின்சாரம் இருந்தாக வேண்டியிருக்கிறது. சிறிது நேரம் மின்சாரத் தடைபட்டாலும் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனநிலை நாட்டில் பல பேருக்கு இருக்கிறது. மின்சார வாரிய ஊழியர்களைத் திட்டித் தீர்த்து விட்டுதான் மறுவேலைப் பார்க்கிறார்கள்.

            ஒரு நாள் ஒரு பொழுது மின்சாரம் இல்லையென்றால் நாட்டில் உள்ள வீடுகள் பைத்தியக்கார விடுதிகளாக ஆகி விடும் போலிருக்கிறது. நிலைமை அப்பிடி இருக்கிறது.

            மின்சாரத்துக்குத் தகுந்தபடி நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோமோ என்று நினைக்கும் வகையில் நமது இயக்கம் மின்சாரமாகவும், மின்சாரம் சார்ந்தும் மாறிக் கொண்டிருக்கிறது. அந்த மின்சாரத்துக்கு ஏற்ப மனிதரது இயல்புகள் மாறிக் கொண்டிருக்கின்றன. இப்போது இருக்கும் மனித இயல்புகள் பெரும்பாலும் அப்படிப்பட்டவைதாம். மனிதரது உண்மையான இயல்புகளை அறிய வேண்டும் என்றால் ஒரு மாதமாவது மின்சாரம் இல்லாத சூழலில் மனிதரை விட்டுப் பார்க்க வேண்டும்.

            அலைபேசிக்குச் சார்ஜ் போட நினைக்கும் போது மின்சாரம் இல்லாமல் போனால், ஆர்வமாக மெகா சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மின்சாரம் போனால் அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் யாருக்கு இருக்கிறதோ அவர்களே மின்சாரத்தின் அடிமைகளாக இல்லாமல் இருக்கிறார்கள் என்று கொள்ளலாம். அநேகமாக அப்பிடி இருப்பவர்கள் நாட்டில் நூத்துக்கு அரைக்கால் தேறினாலும் ஆச்சரியந்தாம்.

            யோசித்துப் பார்க்கும் மின்சாரம் நரம்பு மண்டலத்தோடு தொடர்புடைய ஒன்றாக மனிதச் சமூகத்துக்கு மாறி விட்டது. மின்சாரம் இல்லையென்றாலலே உடம்பு வியர்க்க ஆரம்பித்து விடுகிறது, கோபம் தலைக்கேறி விடுகிறது, எப்போது மின்சாரம் வரும் என்று பதற்றம் அதிகமாகி விடுகிறது, இப்படியோ போனால் நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்ற பயம் உண்டாகி விடுகிறது. இவையெல்லாம் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளின் எதிரொலி.

            பேன் ஓடாவிட்டால் சிறு குழந்தையும் இரவில் உறங்க மறுக்கிறது. உறக்கமின்மையும் ஒரு வகை நரம்பு சம்பந்தப்பட்ட நோய்தான். மின்சாரத்துக்கும் நரம்பு மண்டலத்துக்கும் இப்பிடி ஒரு மறைமுகத் தொடர்பு உண்டாகி நாளாகி விட்டது. மின்சாரம் உடலில் பாய்ந்தாலும் முதலில் பாதிக்கப்படுவதும், அதிர்ச்சியாவதும் நரம்பு மண்டலமாகத்தான் இருக்கிறது.

            இந்த மின்சாரப் புராணம் எதற்கென்றால்... நேற்று ஒரு நாள் எங்கள் திட்டை கிராமத்தில் மின்சாரம் இல்லாமல் போய் விட்டது. மின்மாற்றியைத் தாங்கியிருந்த போஸ்ட்டுகள் இரண்டும் செல்லரித்துப் போனது போல் கம்பிகளை மட்டும் நீட்டிக் கொண்டு எலும்புக் கூடாய் நின்றதில் அதை மாற்றும் வேலைகளில் இறங்கினார்கள் மின்வாரிய ஊழியர்கள்.

            பழைய எலும்புக்கூட்டுப் போஸ்டை மாற்றி புதிய சதையுடன் கூடிய போஸ்டை நிறுவி முடித்து மின்சாரத்தை ஒவ்வொரு வீடாய் அனுப்பி வைப்பதற்குள் இரவு பனிரெண்டு மணி ஆகி விட்டது. அதற்குள் ஒவ்வொருத்தருக்கும் போட்டிருந்த ஆடைகள் அத்தனையும் மழையில் நனைந்தது போலாகி விட்டது.

            மின்சாரம் இன்றி செத்தப் பிணமாய்த் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஓய்ந்ததில் அவரவர்களின் வாய்கள் ஓயாமல் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டன. அலைபேசிகள் ஸ்விட்ச் ஆப் ஆனதில் பல பேருடைய மனநிலை அவுட் ஆப் ஆர்டர் ஆகியது.

            வெகு முக்கியமாக சுற்றாமல் நின்ற மின்விசிறியைப் பார்க்கச் சகிக்காமல் ஒவ்வொருத்தரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். வெளியிலும் அவ்வளவுப் புழுக்கம். தெருவோரம் ஒரு மரத்தை நட்டு வைக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது எல்லோருக்கும் எழ, வீராவேசமாய் பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் நின்றிருந்த மரங்களைப் பற்றி உரை நிகழ்த்தினார்கள்.

            அநேகமாக நாட்டில் மின்சாரம் இல்லையென்றால் மக்கள் அதைத்தான் செய்வார்கள். அதாவது மரத்தை நடுவார்கள். வீட்டைச் சுற்றிலும் ஏசியை வாங்கிப் பொருத்தி வைக்க மாட்டார்கள், மர மட்டைகளைத்தான் வைத்துப் பராமரிப்பார்கள். ஒரு விதத்தில் மரங்களை அதிகமாகக் காவு வாங்கியதில் முக்கியமானப் பங்கு மின்சாரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கும் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ? தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல இருக்கிறதா என்ன?

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...