8 Aug 2020

பரபரன்னு எழுதி முடிஞ்ச ஓலை!

 

செய்யு - 530

            மூர்த்தோலை எழுதுறதுக்கு வாத்தியாரையும் காணல, மங்கல வாத்தியத்துக்கு மேள தாளத்தையும் காணலையேன்னு விகடு சித்துவீரனுக்குப் போன அடிச்சாம். அதுக்கான ஏற்பாடுகள செஞ்சி வுடுறதா சித்துவீரன் சுப்பு வாத்தியார்கிட்டேயிருந்து அச்சாரத்தெ வாங்கிட்டுப் போனது ஒங்களுக்கு நல்லாவே ஞாபவம் இருக்கும். பத்து மணிக்கு மேல மாப்புள்ள வூட்டுலேந்து சனங்க மூர்த்தோலை எழுத வந்துடுவாங்கங்ற நெலையில மணி பத்தே கால தாண்டிட்டு இருந்துச்சு. எந்த நேரத்துலயும் மாப்புள்ள வூட்டுச் சனங்க வந்துடுவாங்ற நெலமெ. விகடு சித்துவீரனுக்குப் போனெ அடிச்சா, "பதினோரு மணிக்கு மேலதான தேவ. அதுக்குள்ள வந்துப்புடுவாங்க. அவ்சரப்படாதே!"ன்னாம் சித்துவீரன் அதுக்கு. செரின்னு போன வெச்சிட்டாம் விகடு.

            பத்மா பெரிம்மா மாடியிலேந்து சாப்புட்டது எறங்குனுச்சு. "மேளக்காரவோ இன்னுமா வாரமா இருக்காங்க? சடங்குக்கே வந்து மங்கல வாத்தியம் கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். அதுக்கு ன்னா ரண்டு காசியா கொடுக்கப் போறே? ன்னவோ மூர்த்தோல எழுதுற நேரத்துக்குன்னு கணக்கா வாரச் சொன்னது போல பண்ணியிருக்கீயேளடா! போனா போவுது அதெ வுடு. மேள நாதஸ்வரம் சத்தம் கேக்க வாணாமா மூர்த்தோல எழுதுற நேரத்துலயாவுது? அப்பவாச்சும் வந்துப்புடுவாங்களா ன்னா? மாப்புள்ள வூட்டுச் சனங்க வர்றப்போ அதெ வாசிச்சாச்சதானே மங்கலகரமா இருக்கும். மொறையா நேரத்துக்கு வர்ற ஆளாப் பாத்து சொல்லி வுடுறதில்லையா? இந்நேரத்துக்கு மங்கல வாத்தியம் கேக்கணும்டா!"ன்னுச்சு பெரிம்மா.

            "போன அடிச்சிக் கேட்டுட்டேம்! இத்தோ வந்துடுவேம்ன்னு சொல்றாவோ!"னனாம் விகடு.

            "என்னத்தெ போன அடிச்சிக் கேட்டே போ! ச்சும்மாவா வந்து அடிச்சிட்டும் ஊதிட்டுப் போவப் போறாவோ? அதெ நேரத்துக்கு வந்து செஞ்சாத்தானே நமக்கு மனசுக்குத் திருப்திப்படும்! அதுக்கேத்த ஆளாப் பாத்துல்லா அச்சாரம் பண்ணி வைக்கணும்! யப்பா மேல நிக்குதுப் பாரு! கூப்புடு! நாம்ம கேக்குறேம்!"ன்னுச்சு பெரிம்மா.

            விகடு மாடி மேல ஏறுனாம். சித்துவீரங்கிட்டெயிருந்து போன் வருது. எடுத்தாம் விகடு. "நீயி இப்போ எஞ்ஞப்பா நிக்குறே? நாம்ம இஞ்ஞ ஒரு ஆளு செரியான அலைச்சல்ல இருக்கேம். கெளம்பி வண்டிய எடுத்துக்கிட்டு மூலங்கட்டளெ வரைக்கும் வா! மோளக்காரவுங்க எறங்கி அஞ்ஞ நிக்குறதா போன அடிக்குறாங்க! நீயி வந்தேன்னா நாம்ம ரண்டு பேத்துமா கொண்டாந்துப்புடலாம்! நாம்ம மூலங்கட்டளெ போயிட்டு இருக்கேம்! கெளம்பி வந்துப்புடு அஞ்ஞ!"ன்னாம் சித்துவீரன்.

            விகடு இதெ மாடியில நின்னு பந்தியப் பாத்துகிட்டு நின்ன சுப்பு வாத்தியார்ரப் பாத்துச் சொன்னாம். "ஏம்டாம்பீ! மாப்புள்ள வூட்டுலேந்து வர்ற நேரத்துல அவுங்கள நீயி வரவேக்க வாசல்ல நிக்குறதா? அலைஞ்சிட்டுக் கெடக்குறதா? கடெசீ நேரத்துல வெச்சி இப்டிக் கழுத்தறுக்குறாம் அந்தப் பயெ! செரிப் போயிப் பாத்து பக்குவமா கொண்டா! அவ்சரப்படாம கொண்டா! மேளதாளம் ல்லன்னாலும் மூர்த்தோலய எழுதலாம். கவனமா போடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            விகடு டிவியெஸ்ஸ எடுத்துக் கெளப்பிக்கிட்டுப் போனாம். ராத்திரி மழையில நனைஞ்சிகிட்டெ வந்த வண்டி ஆச்சரியமா ஒடனே ஸ்டார்ட்டு ஆனுச்சு. நெலமையோட அவசரம் அதுக்கும் புரிஞ்சதோ என்னவோ! ஆனாலும் என்னத்ததாம் வேகமா போனாலும் இருவது நிமிஷத்துக்குக் கம்மியா போயிட முடியாது மூலங்கட்டளைக்கு. ஓகையூர்ரத் தாண்டி போறப்ப சித்துவீரன் மோளக்காரர்ல ஒருத்தர்ர வண்டியில பின்னாடி உக்கார வெச்சிட்டுக் கொண்டு வருது. மோளக்காரரு மோளத்த மடியில ஒரு பக்கமா வெச்சிக்கிட்டு உக்காந்து இருக்காரு. விகடுவப் பாத்தது, "சடுசா போ! மூலங்கட்டளையில ரண்டு பேத்து நிப்பாங்க. ஆளப் பாத்தின்னாவே தெரியும். நீல சட்டெ ஒண்ணு, பச்சை சட்டெ ஒண்ணு பாக்குறதுக்கு பளபளன்னு பட்டெ போல இருக்கும். கடுசா கொண்டா! நாம்ம மின்னாடிப் போயிட்டு இருக்கேம்!"ன்னுச்சு சித்துவீரன்.

            மூலங்கட்டளையில அந்த ரெண்டு பேத்தையும் கண்டுபிடிச்சி விகடு வண்டியில வெச்சு மூணு பேருமா திட்டைக்கு வந்துச் சேந்தப்போ மணி பதினொண்ணே கால் இருக்கும். பத்தரைக்கு மேல மாப்புள வூட்டுச் சனங்க வந்து சீரெல்லாம் எடுத்து வெச்சு முச்சந்தியில இருக்குற கோயிலுக்குக் கொண்டு போயி எடுத்துட்டு வந்துட்டு இருக்காங்க. செரியா அவுங்க கோயில்லேந்து வூட்டுக்குள்ள நொழையுற நேரமா பாத்து கொண்டாந்து எறக்கி வேக வேகமா மங்கல வாத்தியச் சத்தம் கேக்க உள்ளார வர்றாப்புல பண்ணியாச்சு. பதற்றத்துலயும் பரபரப்புலயும் விகடுவுக்கு வேர்த்து வழியுது. விகடு வாசல்ல ஒரு பார்வெ பாத்துட்டு உள்ள நொழைஞ்சாம். மேக்கால மூணு வேனு, ஒரு காரு, ‍நெறைய பைக்குக கெடந்துச்சு. அதுலத்தாம் மாப்புள வூட்டுச் சனங்க வந்திருக்கணும்.

            "பொண்ணோட யண்ணங்கார்ரேம் முக்கியமான நேரத்துல எங்கடா போயித் தொலைஞ்சே? நீயி ஒரு ஆளு நின்ன வாஞ்ஞ வாஞ்ஞன்னு சொல்றது எப்பிடி? இஞ்ஞ நாஞ்ஞ, சந்தானம், ராமு, யப்பா, தெருவுல உள்ளவங்கன்னு நின்னு சொல்லிட்டு இருக்கேம்! வெரசா உள்ள போ!"ன்னு வெளியில வந்த நாது மாமா திட்டிட்டுப் போவுது. அதுக்குள்ள வந்து உக்காந்திருக்குற சனங்களுக்குக் காப்பியும் கேசரியும் பஜ்ஜியும் கொடுத்தாவுது. அதெ வந்திருந்த தெருக்கார சனங்களும், உறவுக்கார சனங்களும் வேக வேகமா கொடுத்து முடிச்சாங்க. வெளியில பந்தல்லேந்து திண்ணை வரைக்கும், கூடத்துலேந்து சமையல்கட்டு வரைக்கும் சனங்களோட தலையா தெரியுது. திண்ணையில வந்து மேலண்டைப் பக்கமா  உக்காந்து வாத்தியக்காரவுங்க வாசிச்சிட்டு இருந்தாங்க.

            நடுக்கூடத்துல ராசாமணி தாத்தா, லாலு மாமா, முருகு மாமா, சுப்பு வாத்தியாரு, சந்தானம் அத்தான், ராமு அத்தான், மாரி அத்தான், பரசு அண்ணன், ரண்டு பக்கத்துச் சொந்தகார சனங்க, தெருவுல முக்கியமான பெரிசுங்கன்னு கலந்துகட்டி எல்லாரும் பாயில உக்காந்திருக்காங்க. கூடத்தெ தாண்டியிருந்த எடத்துல பெண்டுகளா உக்காந்து இருந்துச்சுங்க. பாலாமணிக்கும் செய்யுவுக்கும் அவுங்க ரண்டு பேத்த மட்டும் நாற்காலியப் போட்டுக் கூடத்துல கெழக்கப் பாக்க உக்கார வெச்சிருந்தாங்க.

            "ன்னா மாப்புள வாத்தியார்ரு வர்ற வரைக்கும் பாப்பேமா? நாமளே எழுதிப்புடுவோமா? நாம்ம எழுததாத மூர்த்தோலையா ன்னா? ன்னா பெரிய வாத்தியாரு? நாம்மத்தாங் பெரிய வாத்தியாரு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            அப்பத்தாங் இன்னும் மூர்த்தோலைய எழுதுற வாத்தியார்ரு வரலேங்ற விசயம் விகடுவுக்கு ஒரைக்குது. என்னாச்சுன்னு வெசாரணையப் போட்டா, சித்துவீரன் மோளக்காரரக் கொண்டாந்து வுட்டுப்புட்டு வாத்தியார்ர அடுத்துக் கொண்டு வர்றதுக்குப் போயிருக்குறதா சொல்றாங்க. நல்ல வேளையா சித்துவீரன் போட்டோ எடுக்குற ஆளுக்குச் சொல்லி விடுறேன்னு சொல்லாம போச்சு. வடவாதி தட்சிணா ஸ்டூடியோவுலேந்து அவரு ஒருத்தருதாங் செரியான நேரத்துக்கு வந்து சடங்குலேந்து ஒவ்வொண்ணுத்தையும் படத்தெ பிடிச்சிட்டு இருந்தாரு. வடவாதியில ஒண்ணுக்கு நாலா ஸ்டூடியோ யில்லாம போயிருந்தா அதெ சொல்லுற பொறுப்பையும் சித்துவீரன் கையில எடுத்திருக்கும். இப்பிடி ஒவ்வொண்ணுலயும் தாமசம் ஆயிட்டு இருந்ததெ நெனைச்சப்போ சுப்பு வாத்தியாருக்கு எரிச்சலா இருந்துச்சு. நல்ல வேளையா இதெல்லாம் சித்துவீரன் பண்ணி வுட்டு தாமசம் ஆயிட்டு இருந்துச்சு. இதெ நெல சுப்பு வாத்தியாரு ஏற்பாடு பண்ணிருந்து அப்பிடி ஆயிருந்தா சித்துவீரன் தாண்டித் தலைகுப்புற வுழுவுறதெ தடுக்க முடியாது.

            "லாலு! அந்தப் பயலுக்குப் போன போட்டு ன்னா ஏது வெவரம்ன்னு வெசாரி! மணி பதினொண்ணரைய தொடுது!"ன்னுச்சு முருகு மாமா.

            லாலு மாமா போனப் போட்டுக் கேட்டா, "யித்தோ நெருங்கிட்டேம். நீஞ்ஞ ஆவ வேண்டிய ஆரம்பிச்சிச் செஞ்சிட்டு இருங்க. வந்துட்டேம்!"ன்னுச்சு சித்துவீரன்.

            "எலே எல்லாம் முடிஞ்சிட்டுடா! வந்தா எழுதிப்புடலாம்! நேரங் கடக்குது பாரு!"ன்னுச்சு லாலு மாமா.

            "யித்தோ வந்துட்டேம்!"ன்னு சொன்ன சித்துவூரன் அடுத்த ரண்டு நிமிஷத்துல வாத்தியாரோட உள்ள நொழைஞ்சது. காத்துல கலைஞ்சிருந்த சித்துவீரனோட தலைமுடி சிட்டா பறந்து வந்த வேகத்தச் சொல்லாம சொன்னுச்சு.

            "கல்யாணத் தேவ ஒண்ணு வந்துப் போச்சு. அதெ முடிச்சிட்டு வண்டியில கெளம்புன்னா பாதி வழியில பஞ்சரு ஆயிடுச்சு. ஒடனே சித்துவுக்குப் போன போட்டு வர்றதுக்குள்ள சித்தெ நேரமாயிடுச்சு. நேரந்தாம் இருக்கே!"ன்னு சடசடன்னு அச்சடிச்சிருந்த மஞ்சள் காகிகத்துல வெவரங்கள கேட்டு வேக வேகமா நிரப்புனாரு வாத்தியாரு. எழுதி முடிச்சி மூர்த்தோலைய சத்தமா வாசிச்சாரு. வாசிச்சுக்கிட்டெ கெட்டி மேளம் கெட்டி மேளம்ன்னாரு. "மூர்த்தோலை நெறைவு!"ன்னு வாத்தியாரு சொல்ல, "எப்பிடியோ நேரத்துக்கு ஓல எழுதுறது முடிஞ்சிடுச்சு!"ன்னு சொல்லிக்கிட்டெ சரசு ஆத்தா, சுந்தரி, நீலு அத்தெ எல்லாம் சேந்துக்கிட்டுக் கைய தட்டுனுச்சுங்க.

            "இதென்ன புதுப்பழக்கமா இருக்கு கைய தட்டிக்கிட்டு? ன்னாடா இத்து மாப்புள வூட்டுச் சனங்க?"ன்னுச்சு சந்தானம் அத்தான் விகடுவெ பக்கத்துல கூப்ட்டு.

            ரெண்டு பக்கத்துலயும் கையெழுத்த வைக்குறவங்க கிட்டெ வாங்கன்னு வாரச் சொல்லி கையெழுத்தப் போட வைச்சாரு வாத்தியாரு. மொதல்ல இதெ முடிச்சிட்டு வாசிக்க வேண்டிய வேலைய நேரத்தெ பாத்து மாத்தி செஞ்சாரு வாத்தியாரு. அது முடிஞ்சதும் அதெ கேட்ட சனங்க, "ஐப்பசி பதினாறுல கலியாணத்தெ வெச்சிருக்காங்க. ந்நல்ல மழைக்காலம்லா!", "கலியாணம் நடக்குற அன்னிக்கு பெருமழையா யில்லாம இருக்கணும்!", "பொண்ணு மாப்புள பச்சரிசிய தின்னுத் தொலையாம இருக்கணும்!"ன்னு சனங்க பல வெதமா பேசிக்க ஆரம்பிச்சதுங்க. ஓலை எழுதி முடிஞ்சதும் பாலாமணி ரண்டு பவுன்ல எடுத்தாந்த சங்கிலிய செய்யுவுக்குப் போட்டு வுட்டுச்சு.

            "எத்தனெ பவுனுடா?"ன்னுச்சு நீலு அத்தெ.

            "ரண்டு!"ன்னாம் பாலாமணி.

            "ன்னடா நீயி? டாக்கடர்ரா இருந்துகிட்டு அஞ்சு பவுன்ல போடுறது யில்ல! இப்பிடிப் பண்ணிப்புட்டீயேடா?"ன்னுச்சு நீலு அத்தெ. அதுக்கு என்னத்தெ பதிலெச் சொல்றதுன்னு திருதிருன்னு முழிச்சாம் பாலாமணி.

            "முழிக்காதடா! கலியாணத்தெ பண்ணியாவது நெறைய நகெ நட்டெ எடுத்துப் போடு!"ன்னுச்சு நீலு அத்தெ.

            "அதெல்லாம் பொண்ணு வூட்டுல எடுத்துப் போட்டு வுடுவாங்க. மாப்ளே ஒண்ணுத்துக்கும் கவலெ பட வாணாம்!"ன்னுச்சு தம்மேந்தி ஆத்தா. சனங்க எல்லாம் சிரிச்சதுங்க. பாலாமணி தம்மேந்தி ஆத்தாவ மொறைச்சுப் பாத்தாம்.

            "எப்டியோ எல்லாம் பன்னெண்டுக்குள்ள முடிஞ்சதுல சந்தோஷம்! சாப்பாட்ட ஆரம்பிச்சா அத்து ஒரு மணி நேரமாவும் முடிய. சாப்புட்டு உக்காந்திருந்தோம்ன்னா மணி ஒன்றரை முடிஞ்சா கெளம்பிப்புடலாம்!"ன்னுச்சு முருகு மாமா.

            "பன்னெண்டுக்குள்ள முடிஞ்சதுன்னா நாம்ம அலைஞ்சி ஓஞ்சதால முடிஞ்சது!"ன்னு காலர்ரத் தூக்கி வுட்டுக்கிடுச்சு சித்துவீரன்.

            "எல்லாத்தையும் ஏற்பாட்டெ மொறையா பண்ணிருந்தா பதினொண்ணரைக்குள்ளயே எல்லாம் நெதனாமா முடிஞ்சிருக்கும். இப்பிடி அரக்கப் பரக்க ஆயிருக்காதேடா மாப்ளே!"ன்னுச்சு விகடுகிட்டெ பக்கத்துல நின்னுகிட்டு இருந்த சந்தானம் அத்தான்.

            "பந்திய ஆரம்பிச்சிப்புடலாமா?"ன்னுச்சு லாலு மாமா.

            "சாப்பாடு வந்தா ஆரம்பிச்சிப்புடலாம்! வந்தாத்தானே ஆரம்பிக்கலாம்!"ன்னாங்க பந்திப் பரிமாறதுக்காகத் தயாரா இருந்த தெருவுல இருந்த இளஞ்செட்டுக. அப்பத்தாங் சித்துவீரன் ஏற்பாடு பண்ணி வுட்ட மத்தியானச் சாப்பாடு வந்துச் சேரலங்ற விசயம் எல்லாத்துக்கும் ஒரைக்க ஆரம்பிச்சிது.

            "எலே எஞ்ஞடா அவ்வேம் சித்துவீரன்? கூப்புடு அவனெ! போனப் போடச் சொல்லு! எல்லாத்திலயும் இப்பிடி லேட்டடிச்சிட்டு கெடக்காம்!"ன்னுச்சு லாலு மாமா.

            "பேசிட்டேம் சித்தப்பா! மினிடோரு வண்டியில கெளம்பிட்டாம் பன்னெண்டு மணிக்கு மின்னாடி. வந்துப்புடும் சித்தெ பொறுங்க! அது வரைக்கும் பேச வேண்டியதெ பேசிப்புடலாம்!"ன்னுச்சு சித்துவீரன்.

            "நீயி வர்றதுக்கு மின்னாடியே அதெல்லாம் பேசி ஆயாச்சு. நீயி அஞ்ஞயும் இஞ்ஞயும் அலைஞ்சிட்டுக் கெடந்ததுக்கு யாரு ன்னத்தா பண்ணுறது? இஞ்ஞ நடக்குறது கொள்ளுறது என்னத்தாம் தெரியுது ஒனக்கு?"ன்னுச்சு முருகு மாமா.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...