7 Aug 2020

பேயம் காய்ய வெச்சு சுத்துன சடங்கு!

 

பேயம் காய்ய வெச்சு சுத்துன சடங்கு!

செய்யு - 529

            மறுநாளு மூர்த்தோலைக்கு மின்னாடியே சடங்கெ சுத்தியாவணுங்றதால சனங்க நாலு மணி வாக்குலயே எழும்ப முயற்சிப் பண்ணி முடியாமப் போயி அஞ்சு மணி வாக்குல எழும்புனுச்சுங்க. விகடுவும் சுப்பு வாத்தியாரும் மட்டும் நாலு மணி வாக்குலயே எழுந்திரிச்சி மாடியச் சுத்தமா கூட்டி முடிச்சி பெஞ்சுகளயும் ப்ளாஸ்டிக் நாற்காலிகளயும் பந்திக்கு ஏத்தாப்புல எடுத்துப் போட்டு வேலய ஆரம்பிச்சிட்டாங்க. சனங்க எழுந்திரிச்சிக் குளிச்சி முடிச்சி தயாராவ ஆறு மணி ஆயிடுச்சு. அதுக்குப் பெற்பாடு இருந்த சனத்துக்கு எல்லாத்துக்கும் காப்பியப் போட்டுக் கொடுத்து, காலச் சாப்பாட்டுக்கு கேசரி, பொங்கலு, இட்டிலி, சட்டினி, சாம்பாரு, போண்டான்னு தயாரு பண்ணி முடிக்க எட்டு மணி வரைக்கும் ஆச்சுது. அந்த சமையலு வேலைய வெங்கு, ஆயி, தேன்காடு சித்தின்னு மூணு பேருமா நின்னு மும்மரமா பாத்து முடிச்சதுங்க. சனங்க ஒவ்வொண்ணும் சாப்புட்டு முடிக்க எட்டரை எட்டே முக்கால் மணி வரைக்கும் ஆச்சுது.

            சடங்கெ காலையில ஒம்போது மணிக்கு மேல ஆரம்பிச்சி பத்து மணிக்குள்ள முடிச்சிடறதுன்னு ஒரு ஏற்பாடு. பத்தரை மணிக்கு மேல மாப்புள்ள வூட்டுச் சனங்க வந்த பெற்பாடு மூர்த்தோலைய எழுதிப்புடலாம்ங்றது திட்டம். அதுக்கேத்தாப்புல நேரம் ஒத்துழைச்சது. அத்தோட சடங்குக்கும், மூர்த்தோலைக்கும் வர்ற ஒறவுக்கார சனங்க ஒவ்வொண்ணும் காலங்காத்தாலயே ஏழு மணியிலேந்து வர்ற ஆரம்பிச்சிட்டுங்க. அதுகள வரவேத்து நாற்காலிக பெஞ்சுகள எடுத்துப் போட்டு, ஒவ்வொண்ணுத்துக்கும் சந்தனம், கல்கண்டு கொடுத்து, காப்பியக் கொடுத்து தொடந்தாப்புல விகடுவுக்கும், சுப்பு வாத்தயிருக்கும் தொடர்ச்சியா வேல இருந்துக்கிட்டெ இருந்துச்சு. வந்தவங்களோட ரண்டு வார்த்தெ பேசி காப்பியக் கொடுத்து அவுங்க பாதி குடிச்சப் பெறவுதான எழும்பி அந்தாண்ட இந்தாண்ட கெடக்குற வேலயப் பாக்க முடியுது. அதுல நேரம் போயிட்டு இருந்ததுல விகடுவாலயும், சுப்பு வாத்தியாராலயும் ரண்டு பேத்தால மட்டும் அன்னிக்கு காலச் சாப்பாட்ட சாப்புட முடியல.

            சென்னைப் பட்டணத்துலேந்து சந்தானம் அத்தான், ராமு அத்தான், மாரி அத்தான், சுப்புணி அத்தான், மலரு அத்தாச்சி, கலா அத்தாச்சி எல்லாம் குடும்பத்தோட எட்டு மணி வாக்குல மூணு கார்ல வந்துப்புட்டுங்க. வேலங்குடியிலேந்து குமாரு அத்தான் குடும்பத்தோட செயா அத்தையக் கூப்டுகிட்டு வந்துச்சு. வேலங்குடி சின்னவரு குடும்பத்துலேந்து யாரும் வாரல. ஆனா சென்னைப் பட்டணத்துலேந்து சின்னவரோட மவ்வேம் கார்த்தேசு அத்தான் மட்டும் குடும்பத்தோட வந்திருந்துச்சு. அவுங்கள உக்கார வெச்சிக் காப்பியக் கொடுத்து, குளிச்சி முடிச்சிட்டு வாரதுக்கு ஏற்பாடு பண்ணி ஒருத்தரு தொணை நிக்க வேண்டியதா இருந்துச்சு. 

            சுப்பு வாத்தியாருக்கு வடவாதியில இருந்த குமரு மாமாவோடயும், வீயெம் மாமாவோடயும் பேச்சு வார்த்தெ இல்லாம போனதால மூர்த்தோலையப் பத்தி எதுவும் தகவல் சொல்ல. ஆனா பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தா போன் மூலமா தகவல சொல்லிருந்துச்சு. பொண்ணு வூட்டுலேந்து யாரும் நேர்ல வந்துச் சொல்லாததால வார முடியாதுன்னு போன்லயே ரண்டு பேத்தும் சொல்லிட்டதாவும், கலியாணத்துக்கு மட்டும் மண்டபத்துக்கு வந்துப்புடுறதாவும் அவுங்க சொன்னதா கேள்வி.

            ஒம்போது மணிக்கு மின்னாடியே சடங்கே சுத்துற வேலைய ஆரம்பிச்சாச்சு. சாமி மாடத்துக்கு எதுத்தாப்புல செய்யுவ உக்கார வெச்சி காரியங்க ஆரம்பமானுச்சு. தெருவுலேந்தும் சனங்க வர்ற ஆரம்பிச்சாங்க. அவுங்கள மாடிக்கு அழைச்சிட்டுப் போயி காலச் சாப்பாட்ட முடிச்சி வுட்டு பம்பரமா சொழண்டுகிட்டுக் கெடந்தாங்க விகடுவும், சுப்பு வாத்தியாரும். சடங்கெ சுத்துறப்போ மாமங்ற முறையில கோவில்பெருமாள் நாது மாமாதாம் நின்னுச்சு. சடங்கெ சுத்துறதுக்கான எல்லா மொறைகளையும் விருத்தியூரு பத்மா பெரிம்மாத்தாம் பாத்துச்சு. பச்சரிசி, பொட்டுக்கடலெ, எள்ளுன்னு எல்லாத்துலயும் பிள்ளையார்ரப் பிடிச்சி, கற்கண்டெ எடுத்து வெச்சி, பேரீச்சம் பழம், சாக்லெட்டுகள, பழங்கள தட்டுகள்ல, வெத்தலை பாக்குன்னு எடுத்து வெச்சி, சந்தனத்தக் கரைச்சி,  செய்யுவ சோடிச்சி வெச்சி எல்லாம் தயாரான பெற்பாடு பாத்தா அப்பதாங் வாழைப்பழத்தெ வாங்காம வுட்டது ஞாபவத்துக்கு வருது.

            தாம்பாளத்துல ஆப்பிளு, ஆரஞ்சு, மாதுளம், கொடிமுந்திரி, மாம்பழம்ன்னு எல்லா பழமும் இருக்கு. வாழப்பழம் மட்டும் இல்ல. கூடத்துலயும் சாமி மாடத்துக்கு மின்னாடியும் ஒறவுக்கார சனங்களும், தெருக்கார சனங்களும் நிக்குறப்பத்தாம் தெரிய வருது இது. வந்திருக்குற சனங்களுக்கு வெத்தலைப் பாக்கு பூவோட ஒரு பழத்த கொடுக்கணும்னாலும் செருமம்தாம். அவுங்களுக்குப் பழத்தெ கொடுக்குறது கெடக்கட்டும். யிப்போ சடங்குக்குப் பேருக்காச்சும் ரண்டு வாழப்பழெம் வேணுமில்லையா!

            நேத்திக்குத் திருவாரூர்ல சாமாஞ் செட்டுகள வாங்கிட்டுக் கடெசீயா வாழைப்பழத்தெ வாங்கிக்கிட்டா நசுங்கிடாம கொள்ளாம எடுத்துட்டு வந்துப்புடலாம்ன்னு திட்டம் பண்ணிக்கிட்டு விகடுவும் சுப்பு வாத்தியாரும் இருந்ததுல, கெளம்புற நேரமா பாத்து மழை நசநசன்னு அடிச்சதுல அதெ வாங்க மறந்துட்டாங்க. அத்தோட ஏழு பையில வாங்கி வெச்சி ரொம்பிப் பிதுங்கித் தள்ளுற நெலையில இருந்ததுல வாங்குன சாமாஞ் செட்டுகள சூதானமா வூடு கொண்டாந்து சேத்தா போதும்ன்னு இருந்த நெலமையில வாழைப்பழ ஞாபவமே இல்லாம போயிடுச்சு. வூட்டுல சாமாஞ் செட்டுகள எடுத்து வெச்சப்பவும் பேச்சு பராக்குல அதெ மறந்தாச்சு.

            கோவில்பெருமாள் மாமா, "இப்போ எங்கப் போயி வாழைப்பழத்துக்கு அலைஞ்சி அதுக்கு ஒரு அரைமணி நேரம் ஆவுமே! பெறவு மாப்புள வூட்டுல வந்து நின்னு மூர்த்தோல எழுதணும்ன்னா சங்கட்டமா போயிடும். எதுத்தாப்புல கொல்லையிலதாங் வாழெ மரம் இருக்குமே!"ன்னு மாடியில நின்னு சாப்பாடு பரிமாறிகிட்டு நின்ன விகடுவெ கெளப்பிக்கிட்டு அங்கப் போனுச்சு. எத்தனையோ வாழைக் குத்து இருந்ததுல இப்போ ரண்டுதாங் இருந்துச்சு. அதுல ஒரு பேயங் கட்டெ மட்டும் ஒசரத்துல கிட்டதட்ட அரை தென்னெ மரத்து ஒசரத்துல குலை வுட்டுருந்துச்சு. வாழக்காயாத்தாம் இருந்துச்சு. "நல்ல வேள நாம்ம நெனைச்சது வீண் போகல! நம்ம வூட்டு மரத்துலயே இருக்குடா! அதாம்டா கெட்ட நேரத்துலயும் ஒரு நல்ல நேரங்றது!"ன்னுச்சு நாது மாமா. ஒடனே அது விகடுவெ வுட்டு ஒரு ஏணி மரத்தெ கொண்டாரச் சொல்லி, அதெ மரத்துல சாய்ச்சிது. ஏணி மரத்தெ சாய்ச்சதுக்கு எதுத்தாப்புல மரத்தெ தாங்கிப் பிடிச்சிக்கச் சொல்லிட்டு சடசடன்னு ஏணியில ஏறிடுச்சு. நாது மாமா ஏணிய எடுத்தாரச் சொல்லி இப்பிடிச் சட்டுபுட்டுன்னு ஏறும்ன்னு விகடு எதிர்பாக்கல.

            "மாமா! எதுக்கு இந்த சோலியப் பாக்குதீயே! சித்தெ நேரந்தாம் பொறுத்தீகன்னா வடவாதிக்கு வண்டிய வுட்டா ஒரு சீப்பு வாழையப் பழமாவே  வாங்கிப்புடலாங்! இப்பிடிக் காயா பறிச்சிக்கிட்டு கெடக்க வாணாம்!"ன்னாம் விகடு.

            "அடெ ச்சும்மா கெடடா! சடங்கெ ஆரம்பிச்சிட்டு நிறுத்தப்படாதுங்றேம்! சித்தெ நீயி வாழெ மரத்தெ மட்டும் தாங்கலா பிடிச்சுக்கோ. பேயங்கட்டெ தாங்கும். நாம்ம ன்னா சருகப் போலத்தாம் இருக்கேம். நம்மள என்னத்தெ பிடிச்சிக் கீழெ தள்ளி வுட்டுப்புடப் போவுது?"ன்னுச்சு நாது மாமா.

            நாது மாமா சொன்னதும் செரித்தாம். குடிச்சி குடிச்சி சரக்கெ அடிச்சி அடிச்சி, நாது மாமா சரக்கெ குடிச்சதா, சரக்கு நாது மாமாவ குடிச்சதான்னு தெரியாத அளவுக்கு எலும்பும் தோலுமாத்தாம் இருந்துச்சு நாது மாமா. அதெ அப்பிடியே ஒரு கொழந்தையப் போல தூக்கி இடுப்புல வெச்சிட்டுக் கூட போயிடலாம். எடைன்னு பாத்து கிலோ முப்பதஞ்சுலேந்து நாப்பதுக்குள்ளத்தாம் இருக்குற அளவுக்கு இருந்துச்சு ஒடம்பு. மொகத்துல தோலுல்லாம் ஒட்டி மொகத்தப் பாக்குறதுக்கே எலும்புக் கூட்டெ பாக்குறாப்புலத்தாம் இருந்துச்சு. ஒடம்புல வேட்டியும், சட்டையும், தோள்ல துண்டும் இல்லன்னா நாது மாமாவுக்கும் எலும்பு கூட்டுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. அது இருந்த நெலமைக்குத் தென்னை மரத்துல ஏறுறாப்புல கூட வாழை மரத்துல ஏறியிருக்கலாம். வாழை மரத்துல அப்பிடி ஏறுனா வழுக்காம இருக்கும்ன்னா அப்பிடித்தாம் ஏறியிருக்கும் நாது மாமா.

            ஒரு வழியா நாது மாமா ஏணியப் பிடிச்சி ஏறி ரண்டு வாழக்காயெ காம்புக்கு மேல பிடிச்சாப்புல இழுத்து பறிச்சிட்டு எறங்குனுச்சு. "பாத்தியாடா யிப்போ சித்தெ நேரத்துல வேல முடிஞ்சிட்டு! நம்ம வூட்டுல இருக்குற பழத்தெ வைக்குறது விசேடம்டா! ஏம்டா எத்தனெ வாழெ கட்டெ கெடந்த கொல்ல. யிப்பிடி வெச்சிருக்கீயே? சித்தெ கொல்லைய கவனிச்சா ன்னடா?"ன்னுச்சு நாது மாமா.

            "ஏம் மாமா! பூவம் பழத்ததானெ பொதுவா இதுக்கு வெச்சிப்பாங்க. நீயிப் பாட்டுக்குப் பேயம் பழமா கூட யில்ல, காயெ பறிச்சிட்டு வருதீயே?"ன்னாம் விகடு.

            "பூவ்வேம் பழத்த்துக்கு எஞ்ஞடா கட்டெ போட்டு வெச்சிருக்கே? ச்சும்மா யில்லாததப் பாத்தியே பேசிக்கிட்டு? இருக்குறது என்னவோ ஆவுறது என்னவோ அந்தக் கதையப் பத்திப் பேசுடா! யிப்போ இதுல ன்னா கொறைஞ்சுப் போச்சு. சாத்திரத்துக்கு ரண்டு வாழப்பழெம். ன்னா பழெமா யில்லாம காய இருக்கு. கொஞ்ச நாளு ஆன்னா இந்தக் காயித்தானே பழெங்றேம்! பெறவென்ன?"ன்னுச்சு நாது மாமா.

            விகடு அதெ பத்தி ஒண்ணும் பேயாம, "நீயிக் கெளம்பிக் காரியத்தெ பாரு மாமா! நாம்ம ஏணியக் கொண்டுப் போயி வெச்சிட்டு மாடிக்குப் போறேம். யாராச்சும் சாப்புடாமா இருக்காங்களா ன்னான்னு பாத்தாவணும். வர்றேம்!"ன்னாம்.

            "எலே நீயி சாப்புட்டியாடா?"ன்னுச்சு நாது மாமா.

            "ஆவணும் மாமா!"ன்னாம் விகடு.

            "மொதல்ல ஒன்னயப் பாருடா! நீயி பாட்டுக்கு மூர்த்தோல எழுதுற நேரத்துல மயக்கம் அடிச்சிக் கெடக்கப் போறே? பெறவு ஒன்னயத் தூக்கிட்டு மொகத்துல தண்ணிய அடிச்சிட்டு நிக்கணும். நாலு பேத்த மின்னாடி நின்னு கவனிக்கிறவேம் தன்னயக் கவனிச்சிக்கிடுறதா யில்லையா? இதுல காப்பித் தண்ணி டீத்தண்ணின்னு எதையும் குடிக்கிறதில்ல. காலயிலேந்து வெறும் வவுத்தோட நிக்குறாம்! யப்பா அஞ்ஞ சாப்புட்டுச்சா இல்லியாடா?"ன்னுச்சு நாது மாமா.

            "தெரியல மாமா! சாப்புடலன்னுத்தாம் நெனைக்கிறேம்!"ன்னாம் விகடு.

            "நாமன்னா வாரட்டுமா இதெ கொடுத்துட்டு?"ன்னுச்சு நாது மாமா.

            "வாணாம் மாமா! ஆவுற காரியம் ஆவட்டும்! நீஞ்ஞ அஞ்ஞ நின்னாவணும்!"ன்னாம் விகடு.

            "இதல்லாம் செரியா வக்கனையா சொல்லு! சாப்புடுறதுல மட்டும் கொட்டைய வுட்டுப்புடு!"ன்னு சொல்லிட்டு, நாது மாமா கெளம்பிப் போயி சடங்கெ சுத்துற வேலையில பேயங் காயோட களம் எறங்குனுச்சு. அத்தனெ ஒறவுக்கார சனங்களும்,‍ தெருக்கார சனங்களும் இருக்க விருத்தியூரு பெரிம்மாவும், நாது மாமாவும் மின்னாடி நின்னு சடங்கெ சுத்தி ஒம்போதே முக்காலுக்கே முடிச்சதுங்க. ஒரு காரியத்தெ கச்சிதமா மின்னாடி நின்னு நேரத்துக்கு முடிக்கிறதுல விருத்தியூரு பத்மா பெரிம்மாவ அடிச்சிக்கிட முடியாதுங்றதெ அது நிரூபிச்சுச்சு. அதெ முடிச்சிட்டுதாங் பத்மா பெரிம்மா சாப்புட மாடிக்கு வந்துச்சு.

            "நம்ம வேல முடிஞ்சிடுச்சுடாம்பீ! இனுமே மாப்புள வூட்டுக்கார்ரேம் வந்தா ஓலைய எழுதி முடிச்சிப்புட்டா வேல முடிஞ்சது! ஓலெ எழுதுற வாத்தியாரு, மேள தாளம் கொட்டுறவங்களாம் வந்துப்புட்டாங்களான்னு பாத்தீயாடா?"ன்னுச்சு சாப்புட உக்காந்த பெரிம்மா.

            "பாக்குறேம் பெரிம்மா!"ன்னாம் விகடு.

            "அதெ பாருடா மொதல்ல!"ன்னுச்சு பெரிம்மா. விகடு மாடிய வுட்டு எறங்கிக் கீழே வந்தாம். யாரும் வந்திருக்குறாப்புல தெரியல.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...