3 Aug 2020

வாசிப்பதில்லை என வருத்தப்பட முடியாது!

வாசிப்பதில்லை என வருத்தப்பட முடியாது!

            யாரும் வாசிப்பதே இல்லை என்று நாம் வருத்தப்பட முடியாது. முன்பு வாசிப்பதற்கான நேரம் இருந்தது. வாசித்தார்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தின் வாக்கில் பி.எஸ்ஸி. சுவாலஜி படித்து விட்டு வேலையில்லாமல் இருந்த சின்னுவின் அண்ணன் கட்டிலில் படித்துக் கொண்டு எதையாவது படித்துக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டால், வேலைக்குப் போவதற்காகப் படித்துக் கொண்டிருப்பதாகச் சொல்வார். அவர் படித்ததெல்லாம் நாவல் புத்தகங்கள். முன்பக்கம் மாய மோகினிகளின் படம் போட்டிருக்கும். சாணித்தாளில் அச்சிடப்பட்டிருக்கும். அந்த வயதில் வேலைக்குப் போவதற்காக அந்தப் புத்தகங்களையெல்லாம் படிக்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டது இப்போதும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கிறது.
            இன்னொரு அண்ணன் இருந்தார். அவர் பரமுவின் சித்தப்பா. பரமு மட்டுந்தாம் அவரைச் சித்தப்பா என்பான். நாங்கள் எல்லாம் அவரை அண்ணன் என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தோம். அவர் இரும்புக்கை மாயாவி புத்தகங்களாகப் படித்துத் தள்ளிக் கொண்டிருந்தார். இது தவிர வெங்கிட்டு அண்ணனும், தங்கராசு அண்ணனும் ரகசியமாக ஏதேதோ புத்தகங்களைப் படிப்பதாகப் பேசிக் கொள்வார்கள்.
            இப்போது யோசித்துப் பார்க்கும் போது இடுப்பில் ஒரு கைலி, தோளில் ஒரு துண்டை மட்டும் போட்டுக் கொண்டு திண்ணைக் கட்டிலிலோ, கோயில் மரத்தடியிலோ படுத்துக் கொண்டு அவர்கள் பாட்டுக்கு எப்படி மணிக்கணக்கில் புத்தகங்களை வாசித்துத் தள்ளினார்கள் என்பதை நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. அப்போதெல்லாம் பாடப்புத்தகங்களை கையில் வாங்கினால் முதல் வேலையே அது எத்தனைப் பக்கம் இருக்கிறது என்று பார்ப்பதுதான். இந்த அண்ணன்கள் என்னவோ சின்ன சைஸிலிருந்து, தலையணை சைஸ் வரை பலவித அளவுகளில் புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்களே என்று நினைக்க நினைக்க அவர்கள் மேல் தனியான ஒரு பயபக்தியே வந்து விடும்.
            அதே இப்போதைய காலம் என்றால் சின்னுவின் அண்ணனாக இருந்தாலும், பரமுவின் சித்தப்பதாக இருந்தாலும், வெங்கிட்டு அண்ணனாக இருந்தாலும், தங்கராசு அண்ணனாக இருந்தாலும் அவர்களின் கையில் ஒன்று டிவி ரிமோட் இருந்திருக்கும் அல்லது செல்போன் இருந்திருக்கும். அப்போது தெருவில் யாரோ ஒருத்தர் வீட்டில்தான் டிவிப் பெட்டி இருந்தது. அந்த ஒரு பெட்டியைத்தான் தெருவே கூடி தேர் இழுப்பது போல பார்த்துக் கொண்டிருந்தது. டெலிபோனும் தெருவுக்கு ஒரு வீட்டிலோ, இரண்டு வீட்டிலோதான் இருந்தது. செல்போன் என்பதையே கற்பனை பண்ணியோ, நினைத்துப் பார்க்கவோ முடியாத காலமாக இருந்தது. அவர்கள் அப்படி எதையோ வாசித்துத் தள்ளியதற்கு அது ஒரு காரணம் என்றால், அவர்கள் கல்லூரி போனவர்கள் என்ற ஒரே காரணத்தால் ஊரில் கிடந்த சேக்காளிகள் அவர்களை சீட்டு விளையாடுவதற்கும், தாயம், ஆடு புலி ஆட்டம் விளையாட சேர்த்துக் கொள்ளாமல் போனது மற்றொரு காரணம்.
            கல்லூரி சென்று படித்து வேலையில்லாமல் கிடந்ததாலேயே அவர்கள் தனித்து விடப்பட்ட சீவன்களைப் போலத் திரிந்தார்கள். நேரம் அவர்களுக்கு அநேகமாக அதிகமாக இருந்தது. அந்த நேரத்தை எதையாவது பண்ணித்தாம் ஆக வேண்டும் என்ற நிலை அவர்களுக்கு. அவர்கள் எப்படியோ நேரத்தைப் போக்குவதற்கு காசு கொடுத்து வெகுஜன நாவல்களாவது வாங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காலம் என்றால் ஓசிக்கு வெகுஜன நாவல்களை வாங்கிக் கொடுத்திருந்தாலும் படித்திருக்க மாட்டார்கள்.
            இதை எப்படி இவ்வளவு அடித்துச் சொல்கிறேன் என்றால் சின்னுவின் அண்ணன் மகன் இருக்கிறானே! அவனை இப்போது பார்ப்பதற்கு குட்டி யானையைப் போல இருக்கிறான். எந்நேரத்துக்கும் ஒரு கையில் பாக்கெட்டை வைத்துக் கொரித்துக் கொண்டும், மறுகையில் செல்போனை வைத்துக் கொண்டு நோண்டிக் கொண்டும் இருக்கிறான். பள்ளிக்கூடத்தில் அஞ்சுப் பாடத்துக்கும் சேர்த்து தொண்ணூறோ, தொண்ணூற்று ஐந்தோ வாங்குகிறான். அவனிடம் "கொஞ்சம் பேப்பர் பாரேன்டா!" என்றால், "டைம்! இல்ல அங்கிள்!" என்று அசால்ட்டாகச் சொல்லி விட்டு, அடுத்த விநாடியைக் கூட வீணாக்க விருப்பமில்லாதவனைப் போல சிப்ஸைக் கொரிப்பதையும், செல்லை நங் நங் என்று நோண்டுவதையும் அவனையறியாமல் ப்ரோகிராம் செய்யப்பட்ட ஒரு மெஷினைப் போலச் செய்ய ஆரம்பித்து விடுகிறான். 
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...