செய்யு - 526
அன்னிக்கு ராத்திரி சுப்பு வாத்தியாரு
விகடுவப் பக்கத்துல உக்கார வெச்சி கணக்கெ போட
ஆரம்பிச்சாரு. பொண்ணோட கலியாணத்துக்கு எம்மாந்தாம் செலவாவும்? எம்மாந்தாம் செலவு
பண்ணுறதுங்றதப் பத்தி அவருக்கு ஒண்ணும் பிடிபடல.
சரசு ஆத்தா வந்து காருக்குன்னு வந்து கேட்டுட்டுப்
போன காருக்கான பணத்துலேந்து கணக்கெ போடச் சொல்லி ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு.
காருக்கு ஒரு பத்து லட்சம், கலியாணச் சிலவுக்குன்னு ஒரு ஆறு லட்சம், தேக்க மரத்து கட்டிலு,
பீரோ, டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள்ன்னு அது ஒரு ஒண்ணரை லட்சம், போட வேண்டிய
நூத்துப் பவுன்ல நாப்பது சொச்சம் பவுனுதாங் கையிருப்புல இருக்குதுங்றதால அறுவது சொச்சம்
பவுனெ வாங்குறதுக்கு எப்பிடியும் அது ஒரு பன்னெண்டு லட்சம், பாத்திரம் பண்டம்ன்னு அது
எப்பிடியும் ஒரு ஒண்ணரை லட்சம், மூர்த்தோலை செலவுன்னு பாத்தா அது ஒரு ஒண்ணரை லட்சம்,
கலியாணத்துக்கான பிற செலவுன்னு பாத்தா அது எப்பிடியும் ஒரு ஒண்ணரை லட்சம்ன்னு எல்லாத்தையும்
கூட்டிப் பாத்தப்போ முப்பத்து மூணு லட்சத்துல போயி நின்னுச்சு.
இந்தக் கணக்கெ அவரு சொல்ல சொல்ல விகடு
போட்டு முடிச்சிச் சொல்லக் கேட்டதும் சுப்பு வாத்தியாருக்கு ஒரு நிமிஷத்துக்கு இதயத்
துடிப்பே நின்னு மூச்சே நின்னுப் போயிடும் போல இருந்துச்சு. "பெரிய லட்சாதிபதியா,
கோட்டீஸ்வரனா இருக்க வேண்டியவேம் பண்ண வேண்டிய கலியாணம்டா இத்து!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு முணுமுணுத்துக்கிட்டு.
சுப்பு வாத்தியாருக்கு கையிருப்புன்னு
பாத்தா ரிட்டையர்டு ஆனதுல வந்து காசி, மவ்வேன் இத்தனெ வருஷம் பாத்த வேலையிலேந்து சேமிச்ச
காசின்னு சேத்துப் பாத்தா பன்னெண்டு லட்சந்தாம் தேறுனுச்சு. கூட்டிக் கழிச்சுப் பாத்தப்போ
மேக்கொண்டு இருவத்தோரு லட்சம் தேவையா இருந்துச்சு. அதெ நெனைச்சப்போ சுப்பு வாத்தியாரு
பெருமூச்செ வுட்டுக்கிட்டாரு.
"கார்ல அஞ்சு லட்சம்ன்னே வெச்சுக்கோயேம்,
கலியாணச் சிலவுல மூணு லட்சம்ன்னே வெச்சக்கோயேம், பவுன்ல ஒரு எட்டு லட்சம்ன்னே வெச்சுக்கோயேம்
அவுனுக நிக்குற நெலையால பதினாறு லட்சம் கூடப் போவுதுடாம்பீ! நம்ம குடும்ப நெலமைக்கு
ஏத்தாப்புல மாப்புள அமைஞ்சிருந்தா இப்போ கையிருப்புல இருக்குற பன்னெண்டு லட்சமே போதும்
கடங் கப்பியில்லாம் கலியாணத்தெ முடிச்சிப்புடலாம். மேக்கொண்டு அப்பிடியே சிலவு கூட
ஆனாலும் ரண்டு மூணு லட்சந்தாங் ஆவும். அதெ சமாளிச்சிப் புடலாம். இப்போ ஒஞ்ஞ யம்மா
பண்ணி வெச்சிருக்குற வேலைக்கு இருவத்தோரு லட்சத்தெ தெரட்டியாவணும். ஊரு ஒலத்துல வேற
டாக்கடர்ரு மாப்புளன்னு பேரு ஆயிப் போச்சு. இனுமே இதுலேந்து பின்வாங்குன்னா ஊரு ஒலகத்துலயும்
அசிங்கமாத்தாம் போவும். இதெல்லாம் நெனைச்சித்தாங் நாம்ம செல விசயத்துல முடியாதுன்னு
நின்னேம். அதெத் தாண்டி எல்லாம் நடந்து முடியுதுன்னா இப்பிடித்தாம் நடக்கணும்ன்னு இருக்கும்
போலருக்கு. அதெ மாத்த யாரால முடியும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
மவ்வேன் ஆறு லட்சத்துக்குப் பாங்கியில
லோன் போடுறேன்னு சொன்னதுக்கே அத்து எட்டு ஒம்போது லட்சம் வரைக்கும் கட்டுறாப்புல
வந்து நிக்கும்ன்னு சொன்ன சுப்பு வாத்தியாரு இப்போ இருவத்தி ரண்டு லட்சத்துக்கு எங்க
பணத்தெ தெரட்டுறதுங்ற யோசனையில மவ்வேனோட கலந்துகிட்டு இருந்தாரு.
"ஏம்டாம்பீ! வேலையே யில்லாத ஒருத்தனுக்கு
ஒந் தங்காச்சியக் கட்டிக் கொடுத்து இந்த முப்பத்து மூணு லட்சத்தெ பாங்கியில டிபாசிட்
பண்ணி வுட்டா வருஷத்துக்கு எட்டு பெர்சென்ட் வட்டின்னு வெச்சிக்கிட்டாலும் ரண்டரை லட்சத்தெ
தாண்டிக் கொடுப்பாம்டா. மாசத்துக்கு அதெ கூறு போட்டின்னா இருவதாயிரத்துக்கு மேல வாரும்டா!
ஒரு மாசத்துக்கு முக்கி முக்கிச் சிலவெ பண்ணாலும் பத்தாயிரத்துல குடும்பத்தெ ஓட்டிப்புடலாம்!
இத்து ன்னான்னா கதெ இப்பிடி நடக்குது நம்ம வூட்டுல!"ன்னு சுப்பு வாத்தியார்ரே
தொடந்தாப்புல பேசிட்டு இருந்தாரு.
பேசிட்டெ இருந்தவரு, "எம்மாம்டா வந்துச்சு
பெரட்ட வேண்டியது?"ன்னாரு மறந்தாப்புல.
"இருவத்து ஒண்ணுப்பா!"ன்னாம்
விகடு.
"பெரட்டிட முடியுமாடா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"எதுத்தாப்புல கெடக்குற கொல்லையா
கொடுத்தாலும் எட்டு ஒம்போது லட்சத்துக்கு மேலயா கேப்பாம்? அதுவும் நம்ம மொடை தெரிஞ்சுப்
போச்சுன்னா அஞ்சு லட்சத்துக்குக் கூட கேக்க மாட்டாம். பத்து பதினோரு மா நெலத்தெ வித்தா
ஆறெழு லட்சத்தெ தாண்டதடா. இருக்குற வூடெ ஒண்ணும் பண்ண முடியா. இருக்குற நகெ நட்ட போட்டாவணுங்றதால
அதெ எதையும் அடவு வைக்க முடியா! ஏம்டாம்பீ! மூர்த்தோலத்தாம் எழுதலியே! பேயாம வாணாம்ன்னு
வுட்டுப்புட்டா ன்னா? ஏம் போட்டு மல்லுகட்டிக்கிட்டு சொமையத் தூக்கிட்டு மூச்சு பிடிக்குதே?
மல்லாக்க தள்ளுதுன்னே நிக்கணும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு எரிச்சலானாப்புல.
விகடு அதுக்கு ஒண்ணும் பதிலெச் சொல்லல.
பேயாம சுப்பு வாத்தியாரோட மொகத்தையேப் பாத்துட்டு இருந்தாம்.
பெறவு சுப்பு வாத்தியாரே பேசுனாரு,
"ஒஞ்ஞ யம்மா மட்டும் செரியா இருந்திருந்தா அந்த வேலையத்தாம் பண்ணிருப்பேம்! நீயுந்தாம்
ன்னாத்தா பண்ணுவே? நீ எதாச்சும் சொன்னா தங்காச்சியக் கட்டிக் கொடுக்குறதுக்கு யோஜனெ
பண்ணிட்டுத் தாட்டி வுடுறதா சொல்லும் ஒங்கம்மா! நெலமெ இந்த மாதிரிக்கிச் சுத்தலாவக்
கூடாதுடா மவனே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
சுப்பு வாத்தியாரு அப்பிடிச் சொன்னதும்
ஒரு நிமிஷம் எதுவும் பேசல. பெறவு அவரே பேசுனாரு, "பேங்க்
லோன்னா எம்மாம்டா கொடுப்பாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"தெர்யலப்பா! நாம்ம அப்பிடிப் போயி
இதுவரைக்கும் நின்னதில்லலப்பா!"ன்னாம் விகடு.
"சொசைட்டில எம்மாம் கொடுப்பாம்ன்னா,
நாம்ம இருந்தப்போ ரண்டு லட்சம் வரைக்கும், மூணு லட்சம் வரைக்கும் கொடுத்தா ஞாபவம்.
நாம்ம ரிட்டையர்டு ஆயி மூணு வருஷம் ஆவப் போவுது. எப்பிடியும் நாலு லட்சம் வரைக்கும்
கொடுப்பாம்ன்னு நெனைக்குறேம்!"ன்னு சுப்பு வாத்தியாரு தனக்குத் தானே பேசிக்கிறாப்புல
பேசுனாரு.
"நாளைக்கி வெசாரிச்சிச் சொல்றேம்ப்பா!"ன்னாம்
விகடு.
"ஒண்ணும் அவ்சரம் ல்லே! மொல்ல வெசாரிச்சி
வையி! நாம்ம ஒரு திட்டம் பண்ணி வெச்சுக்கணும்! மூர்த்தோல முடியட்டும். காரியத்துல
எறங்கிப்புடலாம். நாம்ம பாட்டுக்கு கடனெ ஒடனே வாங்கி வெச்சிக்கிட்டு இப்போ சுத்தப்படாது.
அவனுங்களே கிறுக்குப் பிடிச்சப் பயலுவோளா இருப்பானுவோ போலருக்கு. இதுக்கு எடையில
நாலு எடத்துல பொண்ணப் பாத்தாலும் பாப்பானுவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. ரொம்ப
நாளைக்குப் பிற்பாடு சுப்பு வாத்தியாரு மவனெ கொல்லைப் பக்கமா கூட்டி வெச்சி சிலுசிலுன்னு
அடிக்கிற காத்துக்கு மத்தியில பேசுனதும் கலந்துக்கிட்டதும் அன்னிக்குத்தாம். அது நாளு
வரைக்கும் ஏன்னா ன்னா, ஏதுன்னா ஏதுங்ற மாதிரிக்கி ஒண்ணு ரண்டு வார்த்தைக பேசிக்கிறதோடசெரி.
இவ்ளோ வெலாவாரியா எதையும் கலந்துக்கிறதும் பேசிக்கிறதும் யில்ல. அவுங்க ரண்டு பேரும்
இப்பிடி பேசிக்கிட்டெதப் பாக்குறப்போ வெங்கு, ஆயி, செய்யுலேந்து எல்லாத்துக்கும் ஆச்சரியந்தாம்.
ஒரு மனுஷனுக்கு மனசுல உள்ளதெ எல்லாத்தையும்
பேசிட்டா பாரம் கொறையும்பாங்க. அதுக்குப் பெறவு அந்த மனுஷன் நிம்மதியா தூங்குவாம்பாங்க.
ஆன்னா, அன்னியிலேந்து சுப்பு வாத்தியாரு சரியா தூக்கம் பிடிக்காம தடுமாறுனாரு. தூக்கத்துக்கு
இடையிடையில விழிச்சி உக்காந்து எதையோ யோசிச்சிக்கிட்டு இருக்குறாப்புல உக்கார ஆரம்பிச்சாரு.
அவரு யோசிக்கிறதெப் பாக்குறப்போ எதையோ ஒரு அறிவியல் கண்டுபிடிப்ப கண்டுபிடிக்க நிக்குற
விஞ்ஞானியப் போல இருந்தாரு. அவரோட மனபாரம் அதிகரிச்சாப்புல இருந்தாரு.
மறுநாளே விகடு அவனுக்குத் தெரிஞ்ச வாத்தியாருமாருககிட்டெ
வெசாரிச்சி சேதிகள சொன்னாம். "யப்பா சொசைட்டில ஆறு லட்சம் வரைக்கும் லோன் தர்றாங்களாம்!
பேங்குலயும் ஆறு லட்சம் வரைக்கும் வாங்கலாமாம் நம்ம சம்பளத்துக்கு! சொசைட்டில லோன்
போடுறதா இருந்தா ஒரு மாசத்துக்கு மின்னாடியே தகவலச் சொல்லி விண்ணப்பத்தப் பண்ணிப்புடணுமாம்!"ன்னாம்.
"பெரட்ட வேண்டிது இருவத்து ஒண்ணுன்னுத்தான
பேசிக்கிட்டேம். ஆம்மா நேத்திக்குப் இருவத்து ஒண்ணு லட்சத்துக்கு கணக்கு வந்துடுச்சு.
இப்போ பன்னெண்டு பெரட்ட முடியும்ன்னா, மிச்சம் ஒம்போது லட்சத்தெ தேத்தணுமேடாம்பீ!
எதுத்த கொல்லையா? நெல புலத்தையா எதெ விக்கலாம்ன்னு ஒமக்கு மனசுல தோணுது? ஏன்னா மிங்கூட்டியே
அதுக்கான வேலய காதும் காதும் வெச்சாப்புல ஆரம்பிச்சத்தாங் சரியான நேரத்துக்கு அதுலயும்
காசி கைக்கு வந்து சேரும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"இருக்குறதெ வித்தா மறுக்கா காசி
வர்றப்ப வாங்கிக்க முடியுமா?"ன்னாம் விகடு. சுப்பு வாத்தியாரு சிரிச்சாரு.
"அதெப்பிடிடாம்பீ முடியும்? நெலமும் எடமும் கை மாறுறது கண்ணுக்கும் தெரியாது,
காதுக்கும் கேக்காது. கண்ணுங் கண்ணும் வெச்ச மாதிரிக்கி முடியும், காதுங் காதும் வெச்ச
மாதிரிக்கி முடியும். விக்குறது சுலுவு, வாங்குறதுன்னா அதுக்குன்னு யோகம் இருந்தாத்தாம்
நெலபுலம், எடத்து வெசயத்துல. இத்து நம்ம அனுபவம்! ஒரு எடத்தெ வாங்குறதுன்னு வந்துப்புட்டா.
அந்த எடம் நம்ம பேத்துக்கு அமையுறது சாமானியம் யில்ல. நாலு பேத்து ன்னா நாப்பது பேத்து
அதுக்கா மல்லுகட்டுவாம்! வாங்க வுடாம அடிக்கிறதுக்கு வெலையக் கூட்டி அத்தனெ தகிடுதித்தமும்
பண்ணுவாம். அந்த எடமோ, நெலமோ நம்ம கைக்கு வந்தாவணும்ன்னு தலயெழுத்து இருந்ததாங் வந்துச்
சேரும்ன்னா பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அப்பிடின்னா விக்க வாண்டாம்!"ன்னாம்
விகடு.
"பெறவெப்பிடிடா ஒம்போது லட்சத்துக்கு
வழியப் பண்ணுறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"வட்டிக்கு வாங்குனா சமாளிக்க முடியாதாப்பா?"ன்னாம்
விகடு.
"ஒம்போது லட்சத்துக்கு மாசத்துக்கு
மூணு வட்டின்னாலும் கட்டி மாள முடியுமாடா? யோஜனெ பண்ணுடா? ஆமாம் போ! நீந்தாம் ன்னா
பண்ணுவே? எந்த எடத்துல யோஜனெ பண்ணணுமோ அந்த எடத்தெ வுட்டுப்புட்டு, சம்பந்தம் யில்லாத
எடத்துல ஒம்மய நிறுத்திப்புட்டு யோஜனெ பண்ணணுடான்னா நீந்தாம் பாவம் ன்னத்தெ பண்ணுறது?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு மொல்லமா.
பெறவு அவரே சொன்னாரு, "ஒவ்வொண்ணா
பாப்போம். வழி எப்டி கெடைக்குதுன்னு பாக்கலாம். எறங்கியாச்சு! இனுமே யோஜனெ பண்ணிட்டு
நிக்க முடியாது. மின்ன வெச்ச கால்ல பின்ன வெச்சா சுத்தப்பட்டு வாராது! இப்பிடியொரு
நெலமெயச் சமாளிக்கணும்ன்னு இருந்துருக்கும் போல! சமாளிப்பேம் வா! நல்ல வேளடாம்பீ ஒரு
தங்காச்சியோட போனுச்சு ஒமக்கு!"ன்னு மெல்லிசா சிரிச்சாரு சுப்பு வாத்தியாரு.
அவரு சிரிச்சாரே தவுர அதுல அவ்ளோ சோகமும் பாரமும் தளும்புனுச்சு. மனுஷன் சோகமா கூட
சிரிக்கி முடியுங்றதெ அப்ப சுப்பு வாத்தியாரு மொகத்தப் பாத்தா தெரிஞ்சிக்கிடலாம்.
அதெத்தாம் வள்ளுவரு, இடுக்கண் வருங்கால் நகுகன்னு சொன்னாரோ என்னவோ!
*****
No comments:
Post a Comment