6 Aug 2020

காலந்தோறும் குடிப்பழக்கம்

காலந்தோறும் குடிப்பழக்கம்

            குடி முக்கியமான இயக்க வஸ்துவாகி விட்டது. உடல் எந்திரத்தில் தொடங்கி நிர்வாக எந்திரம் வரை இயங்க அதுவே காரணமாகி விட்டது.
            குடிப்பவர்களுக்கு மரியாதை இல்லாமல் இருந்தது ஒரு காலம். மது குடிப்பவர்களை மனிதராக கருதாத காலமெல்லாம் இருந்தது என்று சொன்னால் நம்புவதற்குச் சிரமமாகத்தான் இருக்கும். குடிப்பவர்களை கல்யாணம் காட்சி, கருமாதி என்றால் விலக்கி வைக்கும் காட்சிகளெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன என்பது கற்பனை கலந்த உண்மையன்று. நிஜமாக நடந்த ஒன்று.
            காலம் அப்படியே இப்போது எதிராக தடம் புரள்கிறது. கலியாணம் காட்சி, கருமாதி என்றால் குடி இல்லாமல் அப்படி ஒரு நிகழ்வே இல்லை என்றாகி விட்டது. குடிப் பழக்கத்தை ஆண்களுக்கானப் பழக்கமாக வைத்திருந்த காலம் மலையேறி பெண்களும் குடிக்க ஆரம்பித்து, அந்தக் குடிப் பழக்கத்தில் குழந்தைகள் வரை சேர ஆரம்பித்தாகி விட்டது.
            "குடிச்சிக்கிட்டெ இருந்தா என்னை கொரோனா வந்தாலும் ஒண்ணும் பண்ணாது. குடிக்காம மட்டும் இருந்தன்னா கொரோனா வாரட்டியும் செத்துடுவேன்" என்று சொல்லும் அளவுக்குக் குடிப் பழக்கம் இந்தக் கொரோனா காலத்திலும் மட்டுப்பட்டதாகத் தெரியவில்லை.
            உடல் உழைப்புத் தொழிலாளிகள் உடல் வலிக்கு என்று குடிக்க ஆரம்பித்து, குடல் வலி காணும் வரை குடித்துத் தள்ளுகிறார்கள். எப்போதாவது ஒரு மாற்றத்துக்காக குடிப்பதாகச் சொல்பவர்கள் எந்நேரமும் மாற்றமில்லாமல் குடிக்கும் நிலைக்குப் போய் விடுகிறார்கள். பார்ட்டி, பர்த்டே, கொண்டாட்டம்ன்னா மட்டுந்தாம் குடிப்பதாகச் சொல்பவர்கள் குடிப்பதற்காகவே பார்ட்டிகளையும், பர்த்டேக்களையும், கொண்டாட்டங்களையும் உருவாக்குபவர்களாக மாறி விடுகிறார்கள்.
            குடிப்பவர்களை அரிதாகப் பார்த்த ஒரு காலம் போயி, குடிக்காதவர்களை அரிதாகப் பார்க்கும் ஒரு காலம் உருவாகி விட்டது. ஒரு தெருவில் குடிப்பவர்கள் எத்தனை பேர் என்று கணக்கெடுப்பதை விட, குடிக்காதவர்கள் எத்தனை பேர் என்று கணக்கெடுப்பது எளிதாக இருக்கிறது.
            நிஜமாக, உண்மையாக, சத்தியமாக இந்தக் குடி என்பது தேவையா? என்றால் இந்தக் குடி மட்டும் இல்லையென்றால் பல பேர் மனநோயாளிகளாகத் திரிவார்கள் என்று அசால்ட்டாகப் பதில் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாது குடித்தே குடித்தே மனநோயாளிகள் ஆனவர்களும் இருக்கிறார்கள் என்று. குடி போதையில் அப்பனைக் கத்தியால் குத்தியவர்களும், அம்மாவைக் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்றவர்களும், கட்டிய மனைவியை அரிவாளால் வெட்டியவர்களும் இருக்கிறார்கள்.
            வீட்டில் பட்டினியாக இருக்கும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் குடிப்பதற்குக் காசைத் தேற்றிக் கொண்டு குடித்து விட்டு வருபவர்களை கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லாமல் எங்கும் பார்க்க முடிகிறது.
            பல குடும்பங்களில் சம்பாதிக்கிற சம்பாத்தியத்தில் இ.எம்.ஐ.க்குப் போவதை விடவும் அதிகமாக குடிக்குச் செலவாகிறது. போகிறப் போக்கைப் பார்த்தால் நமது தேசியப் பழக்கம் குடிப் பழக்கமாக ஆகி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. எதுவும் அளவுக்கு மிஞ்சிப் போகும் போது அங்கே ஒரு கட்டுபாடு தேவைப்படுகிறது. இந்தக் குடிப்பழக்கமோ அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதிவேகம் ஆபத்தானது. அந்த ஆபத்து அபாயத்தைக் குடி போதை ஒரு போதும் உணரச் செய்யாது என்பதுதாம் வேதனையானது.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...