14 Aug 2020

அதிசயமான வேல சோலிக்காரன்!

 

அதிசயமான வேல சோலிக்காரன்!

செய்யு - 536

            காருக்கான பணமா பத்து லட்சத்தெ கொடுத்து வுடுறது தொடர்பான அடுத்த கட்ட வேலைக ஆரம்பமானுச்சு. அதுக்கான எல்லா வேலையும் செஞ்சு தயார் நிலையில இருந்ததால ஆர்குடி சொசைட்டியில விகடு போயிச் சொன்னதும் ஒரு வாரத்துல ஆறு லட்சத்துக்கான செக்கைப் போட்டு கொடுத்துட்டாங்க. அதெ ஒரு ரண்டு நாளு மெனக்கெட்டு பாங்கியில நின்னு பணத்தை எடுத்துட்டு வந்தாம் விகடு. வடவாதி ஸ்டேட் பாங்கியில ஒம்போது லட்சத்துக்கான கடனுக்கான தஸ்தாவேஜூக்களும் தயாரா இருந்ததால அதெ ஒரு ரண்டு நாள்ல முடிச்சிக் கொடுத்தாரு மேனேஜரு. அந்தப் பணமும் கைக்கு வந்துச்சு. ரண்டு எடத்துலேந்தும் பாஞ்சு லட்சம் கைக்கு வந்ததும் அதுலேந்து பத்து லட்சத்தெ எடுத்து வழக்கமான மொறையில தெனசரித் தாள்ல மடிச்சி, மேல நூலால கட்டி, மஞ்சப் பையில போட்டுத் தயாரு பண்ணாரு சுப்பு வாத்தியாரு.

            கலியாணச் சிலவுக்குன்னு ஆறு லட்சத்தெ கொடுக்கப் போனப்போ எப்பிடிப் போயிக் கொடுத்தாரோ அதெ மொறையிலத்தாம் பத்து லட்சத்தையும் கொண்டுப் போயிக் கொடுத்தாரு. இந்த மொறை பாலாமணி பாக்குக்கோட்டைக்கு வந்துட்டுப் போற ஞாயித்துக் கெழமெயில போனாரு சுப்பு வாத்தியாரு. மொத நாளு ராத்திரியே பணத்தோட வர்றப் போற சங்கதிய ராசாமணி தாத்தாவுக்குப் போன அடிச்சிச் சொல்லிட்டாரு சுப்பு வாத்தியாரு. பரசு அண்ணன் காலங்காத்தால ஆறு மணிக்கு காரோட வந்து நின்னுச்சு. பரமுவோட அப்பாவும் செரியா கெளம்பி வந்தாரு. எட்டு மணிக்குல்லாம் பாக்குக்கோட்டையில கார்ல போயி எறங்குனாங்க.

            பாலாமணி வெள்ளிக் கெழமெ விடியக்காலையில வந்திருந்தாம். அவ்வேம் வந்ததும் வழக்கமா நடக்குற மருந்துக் காய்ச்சுற வேல சனிக்கெழம ராத்திரியிலேந்து விடிய விடிய நடந்திருக்கும் போலருக்கு. வூடு முழுக்க ஏதோ மருந்து நாத்தமா அடிச்சிது.

            எந்த நாத்தத்தையும் ஏத்திக்கிடாம கொறட்டைச் சத்தத்தோட தூங்கிட்டுக் கெடந்துச்சு ராசாமணி தாத்தா. சரசு ஆத்தா ஓடியாந்து எழுப்பி விட்டுச்சு. பாலாமணி குளிச்சி முடிச்சிட்டு வெள்ளெ வேட்டியும், பனியனுமா நின்னாம், கிளினிக் போவணும்ன்னு.

            "போன தவா வந்தப்போ பீடி நாத்தம் தாங்கல. இந்தத் தவா ன்னா நாத்தம்னெ தெரியலயே, குடலு கழண்டு வந்து வெளியில விழுந்துடும் போலருக்கு. இந்த நாத்தம் பிடிச்சப் பயலுவோளுக்குத்தாங் பணத்தெ லட்சம் லட்சமா கொண்டாந்து கொடுக்குறீங்களா வாத்தியார்ரே!"ன்னாரு பரமுவோட அப்பா சுப்பு வாத்தியாரோட காதுல மெதுவா.

            பரசு அண்ணனும், "பணத்தெ கொடுத்துட்டு வெளியில வா சித்தப்பா! வெளியில நாற்காலியப் போட்டுகிட்டு உக்காந்துகிடலாம்!"ன்னுச்சு சுப்பு வாத்தியாரோட காதுல மெதுவா. 

            சுப்பு வாத்தியாரு மஞ்சப் பையோட பணத்தெ ராசாமணி தாத்தாகிட்டெ நீட்டுனாரு, "இந்தாங் மாமா! இதுல பத்து லட்சம் இருக்கு!"ன்னு.

            "அதெ ஏங் எங் கையில கொடுக்கப் பாக்கிறே மாப்ளே? ஒம் மாப்புளத்தாம் நிக்குறானே அவ்வேங் கையில கொடு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "பெரியவங்க நீஞ்ஞ இருக்குறப்போ பணத்தெ அஞ்ஞ கொடுக்குறது சரியா இருக்காதுங்க பெரியவரே!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "நாம்ம பணத்தெ கையால தொட்டு பல வருஷங்க ஆவுது. சாதவம் பாத்தாலும் செரித்தாம் சாமி படத்துக்கு மின்னாடி சனங்க பணத்தெ வெச்சிப்புட்டுப் போயிடுவாங்க. பணத்தெ எடுத்து எண்ணி பையில வெச்சி வுடுறதுக்குன்னே ஒரு ஆளெ போட்டுருக்கேம்ன்னா பாருங்களேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அதெ கேட்டதும் பரசு அண்ணனுக்குச் சிரிப்பு வந்துடுச்சு.

            "அதெ கெடக்கட்டும் சித்தப்பா! பணத்தெ கண்ணுல காட்டிட்டே யில்ல! நேரா கொண்டுப் போயி சாமி மாடத்துல போன தவா போல வெச்சிட்டு வந்துப்புடு!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            அஹ்ஹ அஹ்ஹான்னு ஒரு சிரிப்பெ சிரிச்சிக்கிட்டு ராசாமணி தாத்தா, "செரியா சொல்லிப்புட்டெ சின்ன புள்ளையா இருந்தாலும்!"ன்னுச்சு. சுப்பு வாத்தியாரு போன முறைப்படியே பணத்தெ கொண்டுப் போயி வெச்சாரு.

            "நம்ம கடமெ முடிஞ்சிட்டுன்னு நெனைக்கிறேம் மாமா! கலியாணத்துக்குன்னு ஆறு லட்சம் மின்னாடி கொடுத்தானுச்சு. இப்போ காருக்கான பணம் பத்து லட்சம் கொடுத்தாயிடுச்சு. அஞ்ஞ வடவாதியில தேக்கத்துல கட்டிலு பீரோ செய்யுறதுக்குன்னு ஒண்ணரை லட்சத்தெயும் கொடுத்து ஆயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதெ நீயிச் சொல்லணுமா மாப்ளே? எல்லாத்தையும் செரியா செய்யுற ஆளு இல்லியா நீயி! பேஷ் பேஷ் பெரமாதம்!"ன்னு மறுபடியும் அஹ்ஹ அஹ்ஹான்னு ஒரு சிரிப்பெ சிரிச்சிக்கிட்டது ராசாமணி தாத்தா.

            சரசு ஆத்தா காப்பித் தண்ணியப் போட்டாந்து கொடுத்துப்புட்டு, "மண்டபமெல்லாம் பாத்தாயிடுச்சு. ஆயிரத்து எண்ணூத்து பேரு வரைக்கும் கொள்ளுற மண்டபம். பாக்குக்கோட்டையிலயே பெரிய மண்படம். கட்டி முடிச்சி மூணு மாசந்தாம் ஆவுது. தஞ்சாவூரு ரோட்டுல மாடடிக்குமுளையில வைரம் கல்யாணம் மண்டபம்ன்னு பேரு. மண்டபெ வாடவெ மட்டும் ஒண்ணரை லட்சம். நீஞ்ஞ எத்தனெ பேத்துக்கு வாணும்ன்னாலும் பத்திரிகெ கொடுக்கலாம். மண்டபத்துக்கு மின்னாடியும் பந்தல பெரிசா போடணும்ன்னு சொல்லிப்புட்டாம் பாலாமணி!"ன்னுச்சு.

            "மவ்வேம் கலியாணத்துக்கே எரநூத்து அம்பது பத்திரிகெ கொடுத்ததுதாங். ஒரு முந்நூத்துப் பத்திரிகெ அவ்வளவுதாங் நம்ம தரப்புல கொடுக்குறது. அத்துப் போதும். வர்றவங்களுக்கு நல்ல வெதமா வரவேற்ப பண்ணிக் கவனிச்சிச் சாப்பாட்ட பண்ணி வுட்டா போதும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நம்ம பக்கத்துல எப்பிடியும் ஆயிரத்து ஐநூத்துக்கு மேல பத்திரிகெ போவும்! ஒஞ்ஞப் பக்கம் அஞ்ஞ கலியாண வேலல்லாம் எப்பிடிப் போவுது?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "பத்திரிகைய அடிச்சிக் கொடுத்துட்டு, கலியாண சவுளியப் போட்டுட்டா கலியாணத்துக்குக் கெளம்பி வர்ற வேண்டியதுதாங்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நமக்கு அப்பிடியா? எல்லா கலியாண சோலியையும் இஞ்ஞ தள்ளிப்புட்டீயளே? கலியாணம் முடியுற வரைக்கும் நமக்கு இஞ்ஞ நிக்கக் கூட நிமிஷ நேரம் இருக்காது!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "இந்தக் காலத்துல கலியாணத்துக்கு ன்னா பெரிசா சொலி? பணத்தெ கொடுத்தாதாம் அததெ செய்யுறதுக்கு ஆளு இருக்காம்ல. பணந்தாம் வந்துப்புடுச்சு. பெறவென்னா கஷ்டம்?"ன்னாரு பரமுவோட அப்பா.

            "இருந்தாலும்‍ மெனக்கெடுறது மெனக்கெடுறதுதானே. அதெ கொறைக்க முடியுமா?"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "அத்துச் செரித்தாங்!"ன்னு முடிச்சிக்கிட்டாரு பரமுவோட அப்பா.

            "சவுளின்னு சொன்னப்பவே சொல்லணும்ன்னு நெனைச்சிட்டு இருந்தேம். மாப்புள்ளைக்கு கோட் சூட்டுல்லாம் அவனெ எடுத்துக்கிடறேம்ன்னு சொன்னாம். அதுக்குக் காசி இருவதாயிரம் ஆவும்ன்னாம்! நேத்திக்குப் போன அடிச்சப்பவே சொல்லி வுடணும்ன்னு நெனைச்சதுதாங். மறந்துப் போக்சுது!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "யிப்போ பணம் கையில யில்ல. நாம்ம கொண்டாந்துக் கொடுத்துட்டுப் போறோமே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஏம் ஒவ்வொண்ணுத்துக்கும் அலைஞ்சிக்கிட்டு? அடுத்த வாரம் சித்து இஞ்ஞ வார்ரேன்னாம். அவ்வேங்கிட்டெ அஞ்ஞ வடவாதியில கொடுத்து வுட்டா கொண்டாந்துப்புடுவாம்! வேற சோலி யிருந்தா கூட நீஞ்ஞ அதெ பாக்கலாம் இதுக்காவ அலைய வேண்டியதில்லா!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "அப்பிடி ஒரு தோது இருந்தா அப்பிடியே பண்ணிப்புடுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "வேற எதாச்சும் கலியாணம் சம்பந்தமா பேசணுமா? நமக்குக் கிளினிக்குல ரண்டு கேஸூ வந்து உக்காந்திருக்கு. நேரமாயிட்டு இருக்கு. அதெ பாத்துட்டு வந்துதாங் சாப்புடணும். நீஞ்ஞல்லாம் வந்ததும் கெளம்புறதெ நிப்பாட்டிப் புட்டேம்!"ன்னு இப்பத்தாம் பேச ஆரம்பிச்சாம் பாலாமணி.

            "நீஞ்ஞ கெளம்புறபடிக் கெளம்புங்க. எஞ்ஞளுக்கும் வந்த வேல முடிஞ்சிடுச்சு. நாஞ்ஞளும் நேரத்தோட கெளம்புறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யாரும் சாப்புடாம போவக் கூடாது! யப்பா இருந்துப் பாத்துக்கோ! ஒரு மணி நேரம் இருந்தீயன்னா கிளினிக்கப் பாத்துப்புட்டு வந்துப்புடுவேம். யில்லன்னா வாங்களேம் கிளினிக்கப் பாத்துட்டு உக்காந்தீயன்னா அந்தக் கேஸ முடிச்சிட்டு உக்காந்துப் பேசிட்டுப் போவலாம்!"ன்னாம் பாலாமணி.

            "நீஞ்ஞ ஒஞ்ஞ தொழிலப் பாருங்க மாப்ளே! நாஞ்ஞ சாப்புட்டெ கெளம்புறேம். நமக்கென்ன வந்து சோலி முடிஞ்சாச்சு. மொல்லமா கார்ல கெளம்பிப் போயிட்டு இருப்பேம்!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "செரி யப்போ நாம்ம கெளம்புறேம் எல்லாத்துக்கும்!"ன்னு சொல்லிட்டு அறைக்குள்ளார போயி பேண்ட், சட்டையப் போட்டுக்கிட்டு நிமிஷத்துல கெளம்பிட்டாம் பாலாமணி.

            "அவ்வேம் எப்பயும் இப்பிடித்தாம். வேல வேலன்னு நிப்பாம். அப்பிடி அவ்வேம் சம்பாதிக்கலன்னாலும் இஞ்ஞ குடும்பத்தெ ஓட்ட முடியாது!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "வாஸ்தவந்தாம்! நீஞ்ஞ சொல்றது!"ன்னுச்சு அதெ கேட்டுப்புட்டு பரசு அண்ணன். அங்க பாக்குக்கோட்டையில கால சாப்பாட்ட குமட்டுற நாத்தத்துக்கு மத்தியில முடிச்சிக்கிட்டுக் கார்ல கெளம்புனாங்க சுப்பு வாத்தியாரும், பரமுவோட அப்பாவும், பரசு அண்ணனும்.

            காரு கெளம்புன பெற்பாடு பரசு அண்ணன் சொன்னுச்சு, "ஒவ்வொரு தவாவும் இவனுவோ அடிக்குற காமெடிக் கூத்து தாங்க முடியல சித்தப்பா! ஒம் பொழுதுதாங் இனுமே ரொம்ப வேடிக்கையாப் போவப் போவுது. பணம் ன்னா கொஞ்ச நஞ்சமா கொடுக்குறே? பத்து லட்சத்தெ கொடுக்குறே! இருந்துப் பேசிப்புட்டு நாம்ம கெளம்புன பெற்பாடுதாங் கெளம்புன்னா ன்னா?"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "டாக்கடர்ன்னா அப்பிடித்தாங் யம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ச்சும்மா யிரு சித்தப்பா! எந்த ஊர்ல காலங்காத்தால அதுவும் ஆயுர்வேத டாக்கடர்கிட்டெ காட்டன்னு எட்டு ஒம்போது மணிக்குல்லாம் வந்து உக்காந்திருக்காம். அந்தப் பயெ வேணும்ன்னே பண்ணுதாங்றேம்! அத்துப் புரியாம பேசிக்கிட்டு!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "மூர்த்தோலல்லாம் எழுதி முடிச்சி, கலியாணத்துக்கான பணத்தையும் கொடுத்து, பத்திரிகெ வரைக்கு அச்சாவப் போவுது. இனுமே அதெப் பத்திப் பேயக் கூடாது. பொண்ணும் மாப்புள்ளையும் சந்தோஷமா இருக்காங்களா அதெ பாக்கணும். மாப்ளே முறுக்கும்பாவோ, அத்தெ ஒண்ணும் பண்ண முடியாது!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "ன்னா முறுக்கோ? இந்த முறுக்கு ஆவாது சித்தப்பா! முறுக்கெ முறிச்சி வுட்டுப்புடலாம்ன்னுத்தாம் நெனைச்சேம்! ஒமக்காக யோஜனெ பண்ணிட்டுத்தாம் வேண்டாம்ன்னு விட்டுட்டேம். அதுல வேற நம்மள வந்து கிளினிக்குல உக்காரச் சொல்றாம்ன்னே! நாம்ம ன்னா நோயாளிங்களா? வைத்தியம் பாக்கவா வந்திருக்கேம்? கலியாணத் தேவைக்குன்னு சோலிக்கு வந்தா பேச்சப் பாருங்க பேச்சு? ன்னவோ சித்தப்பா! வருங்காலத்துல பாத்து நடந்துக்கோ! யிப்பிடியே அவனுவோ பேச்சுக்குல்லாம் ஓடிட்டும் ஒடியாந்துகிட்டும் இருக்காதே. இருவதாயிரத்துக்கு அப்பிடி ன்னா சித்தப்பா கோட்டும் சூட்டும்?"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "பொண்ணுக்கு நாம்ம அந்த வெலைக்குப் பட்டுப் பொடவ எடுக்குறதில்லையா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அத்து பொம்பளைக்கு அம்மாம் ஆவும் சித்தப்பா! ஆம்பளைக்கு ஆவாது சித்தப்பா!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "ஆம்மாம் போம்பீ! லட்சம் லட்சமா கோடுத்தாச்சு! இதுல இருவதாயிரத்துலத்தாம் வந்துட்டுப் போவப் போவுது! வுடும்பீ!"ன்னாரு பரமுவோட அப்பா பரசு அண்ணனப் பாத்து. "அதெயும் கொடுத்து முடிச்சி வுட்டுப்புட்டு நம்மப் பக்கத்துல ஆவ வேண்டிய கலியாணச் சோலியப் பாருங்க வாத்தியாரே! பணத்தெ கொடுக்குறதுக்குன்னே எத்தனெ தவா அலைஞ்சிட்டுக் கெடக்குறது? அதெ கூட வந்து வாங்கிக்கிட மாட்டானுவோ? மெனக்கெட்டு கார்ர வெச்சிக் கொண்டாந்து கொடுக்க வேண்டியதா இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியார்ரப் பாத்து.

            "இந்தாரு சித்தப்பா! நாம்ம வவுத்துக் கொமட்டல்ல சரியா சாப்புடல சொல்றேம்! ஆர்குடி வந்ததும் ஓட்டல்ல எறக்கிச் சாப்பாட்ட வாங்கிக் கொடுத்துப்புடு. நம்மால அதுக்கு மேல பசியத் தாங்க முடியாது!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "நமக்குந்தாம் வாத்தியாரே! நீஞ்ஞத்தாம் அந்த நாத்தத்தெ சகிச்சிக்கிட்டு எப்பிடிச் சாப்பிட்டீயளோ? சம்மந்தியா ஆவப் போற நீஞ்ஞ சகிச்சிக்கிட்டுச் சாப்புடலாம், நம்மால முடியலப் பாருங்க!"ன்னு பரமுவோட அப்பாவும் சொன்னாரு. அத்து என்னவோ குறியீடா வேற எதையோ சொல்றாப்புல இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. சுப்பு வாத்தியாருக்கு காருக்கி மின்னாடி ரோட்டேப் பாத்தாரு.

            காரு எடுத்த வேகம் கொறையாம பாஞ்சு போயிக்கிட்டெ இருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...