10 Aug 2020

பரிபூரணம் என்பது...

 

பரிபூரணம் என்பது...

            பரிபூரணமான மனநிலை என்பது அபூர்வமானது. அது எப்போதாவது வாய்ப்பது. அப்போது எந்தக் குறையும் தெரிவதில்லை. எல்லாவற்றிலும் நிறைவு தெரிகிறது. அதற்காக முன்பிருந்த குறைகள் நீங்கி விட்டதாக அர்த்தமில்லை. எதுவும் குறைகள் இல்லாமலும் இல்லை. மனம் அந்த நேரத்தில் எந்தக் குறைகளையும் பார்ப்பதில்லை. சொல்லப் போனால் குறைகளிலும் நிறைவை உணரும் தருணம் அது.      மனிதருக்குப் பெரும்பாலான குறைகள் மனிதர்களிடம்தான். ஒரு கட்டத்தில் மனிதர்கள் புரிந்து கொள்வார்கள், மனிதர்களை மாற்றுவது தேவையற்றது என்பதை. ஒவ்வொரு மனிதரும் அவரவர் மனநிலையில் கட்டுண்டுக் கிடக்க சபிக்கப்பட்டவர் போல நடந்து கொள்வர். அதை மாற்றுவது குறித்து அவர்களே பரிசீலிக்க முடியும். அதை மாற்றுவதற்காக மனிதர்களிடமிருந்து புறப்பட்டு நியாயம், தர்மம் போன்ற கருத்துகள் உபதேசிக்கப்படுகின்றன. அவை உபதேசிக்கப்படுகின்றன அவ்வளவே. அந்த நியாயமும், தர்மமும் பொதுவான நியாயமா, உபதேசிக்கப்படுகிறவர்களுக்கு ஏற்ற நியாயமா என்பதில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது.

            மனிதரால் பிறிதொருவரின் மனநிலையை ஏற்றுக் கொள்ள முடியுமானால் மனிதர்கள் யாரையும் மாற்ற நினைக்கப் போவதில்லை. மனிதர்களால் மனிதர்களது மனநிலையை ஏற்றுக் கொள்ள முடியாத போதுதாம் மனிதர்களை மாற்ற வேண்டும் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள். பிறிதொருவரது மனநிலையை ஏற்றுக் கொள்ள முடியாத ஒருவரது மனநிலை‍யே பிறிதொருவரை மாற்ற வேண்டும் என்று நினைக்கத் தூண்டுகிறது.

            எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும், நல்லதையே நிகழ்த்த வேண்டும் என்ற உணர்வுகள் மனிதர்களைச் சமயங்களில் மாற்றத்தை நோக்கி யோசிக்கத் தூண்டுகிறது. ஆனால் நடப்பது நல்லது இல்லை என்று யார் சொன்னது? அப்படியானால் நடப்பது கெட்டது என மனிதர்கள் உணரத் தலைவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக ஒரு கெட்டதை அகற்ற வேண்டும் என்று மனிதர்கள் போராடத் தூண்டப்படுவார்களே தவிர, நல்லதை நடக்க விடாமல் செய்யும் காரணத்தை கண்டறியவோ, அதை நீக்கவோ செய்வதற்கு மனிதர்களை மனிதர்கள் விட மாட்டார்கள்.

            பொதுவாக நடப்பது என்பது, எங்கும் ஒரு சுயநலமான மனிதர் அமர்ந்து கொண்டு நடக்க வேண்டிய நல்லதுகளை நடக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவர் தர்மம் செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அதிகம் எடுத்துரைக்கும் நிலையில் இருக்கிறார். அத்தோடும் விடாமல் நடக்கும் நல்லது நடக்காமல் இருப்பதற்கு மனிதர்கள் தர்மம் செய்யாமல் இருப்பது ஒரு காரணம் என்ற மனநிலையையும் உருவாக்கி விடுகிறார். பொதுவாக நாட்டில் நல்லது நடக்காமல் இருப்பதற்குக் காரணம் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் அதீத சுயநலம்தான் என்பதை மனிதர்களால் அவ்வளவு சுலபமாக உணர முடியாது. அதை உணர்ந்து கொள்ள மனிதர்களும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் அந்த அதீத சுயலநலம் பிடித்த மனிதர் அவராகவும் இருக்கலாம். அதீதமாக ஒருவர் சேர்த்து வைத்திருக்கும் சொத்தும், அதிகாரமும், பலமும் ஒருவருக்கு எதையும் உணரச் செய்ய விடுவதில்லை. அவர் தமக்குச் சாதமான வகையிலேயே மனிதச் சமூகத்துக்குக் கருத்துகளை உணர வைக்க தலைபடுகிறார். ஒருவர் பேசுவதில் உள்ள நியாயமும், தர்மமும் இப்பிடித்தாம் போலியாகிறது. நியாயப் போலிகளையும், தர்மப் போலிகளையும் உயர்த்திப் பிடிக்காமல் ஒருவரால் அதிகாரத்தையும், செல்வாக்கையும் நிலைநிறுத்த முடியாது.

            ஒரு தனிமனிதரிடம் அவரது தனிப்பட்ட சுயநலத்தைப் பற்றி எடுத்துப் புரிய வைப்பது என்பது சவாலானது. சமயத்தில் சாத்தியப்படாதது. அவர் தனது சுயநலத்தை மறைத்துக் கொள்வதற்குச் சமூக நியாயத்தை ஆயுதமாக எடுக்கும் அபாயம் எப்போதும் நிகழ்கிறது. அவரது சமூக நியாயம் போலியானது என்பதை ஒருவர் அவருக்கு எந்தக் காலத்திலும் புரிய வைக்க முடியாது. அப்பிடி புரிய வைக்க முயன்றால் பொதுவாக அப்படி முயல்பவரை அவர் சமூக விரோதியாக முத்திரை குத்துவதற்கான முயற்சிகளில் இறங்க ஆரம்பிக்கலாம். நிஜத்தில் அவருக்கு உண்மையை உணர வைக்க நினைக்கும் ஒருவர் சமூக விரோதியாக இல்லாவிட்டாலும் அவரது தனிப்பட்ட சுயநலத்துக்கு ஒருவர் எதிராக இருப்பதால் அவரால் சரியான நியாயத்தைப் பேசுபவர்கள் அப்பிடித்தாம் ஆக்கப்படுவார்கள்.

            இதில் அந்தச் சுயநலமான மனிதர் யார்? அவருக்குக் கருத்தை உணர வைக்க முயற்சிப்பவர் யார் என்று கேட்டால் சயமத்தில் அந்த இரண்டுமே ஒருவர்தாம். மனதுக்குள் இருக்கும் பரிபூரணத் தன்மையை உணர விடாமல் தடுப்பது இந்த வகைப் போராட்டமே. எளிமையிலிருந்து விலகும் ஒவ்வொரு சமயத்திலும் இந்தப் போராட்டத்தை மனிதர்கள் எதிர் கொண்டுதாம் ஆக வேண்டும்.

            போராடும் இருவகை மனிதர்களும் வேறு வேறாக இருக்கலாம். அந்த இருவேறு மனிதர்களில் புரிந்து கொள்ளாத ஒரு மனிதர் இருக்கிறார் என்பது நிச்சயமானது. புரிந்து கொள்ளாத ஒருவருக்காக புரிதலில் இருக்கும் மற்றொருவரும் போராட்டத்தில் இருக்க நேரிடலாம். மனிதச் சமூகத்தின் மொத்தப் போராட்டமே புரிதலின்மையால் இப்பிடி நிகழும் போராட்டங்களே. புரிதலின் நிறைவில் உருவாவதுதாம் பரிபூரணம். அது பெரும்பாலும் மனிதருக்கு எதுவும் அதிகமாக தேவையில்லை என்பதை உணரும் கட்டமாக வந்து நிற்கும்.

            மனிதர்களுக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு அதிகமாவதோ, குறைவதோ புறநிலையை மட்டுமல்ல, அகநிலையையும் பாதிக்கக் கூடியது. மற்றபடி பரிபூரணம் என்பது மனிதர்கள் தமக்குரிய சரியான அளவைப் புரிந்து வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு மனநிலைதாம். அது செல்வத்தின் மிகுதியோ, செல்வத்தின் குறைவோ, அதிகாரத்தின் மிகுதியோ, அதிகாரத்தின் குறைவோ அல்லது இன்னபிற இது போன்றவற்றின் நிறைவோ, குறைவோ கிடையாது.

            ஒரு நேரத்தில் உணரக் கூடிய பரிபூரணம் இன்னொரு நேரத்தில் உணர முடியாமல் போனால் அதை என்னவென்று சொல்வது என்று கேட்டால் அது ஒரு வகை பரிபூரண போலிதாம்.

            மனிதர்கள் எப்போதும் இப்படிப்பட்ட பரிபூரண மனநிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க முயற்சி செய்து கொண்டுதாம் இருப்பார்கள். அந்த நகர்தல்கள்தாம் உலகில் பலவிதமான மாற்றங்களை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது. அப்படி நகரும் நகர்தல்கள் பலவிதங்களில் புறநிலைகளையும், அகநிலைகளையும் மாற்றிப் போடுகிறது. பொதுவாக அந்த நகர்தல்கள் பல விதங்களில் வேறுபடலாம். சிலர் முழுமையாக நகர முயற்சிக்கலாம். ஒரு சிலர் அரைகுறையாக நகர முயற்சிக்கலாம். வேறு சிலர் நகர முயற்சிக்காமல் கூட இருக்கலாம். உண்மையில் அந்தப் பரிபூரணம் என்பதற்கு எதிரான பரிபூரணமற்ற நிலை என்பது போதுமான சரியான நிலையில் நிற்காமல் இருப்பதுதாம். சுருக்கமாகச் சொல்லப் போனால் பரிபூரணம் என்பது எளிமையை அறிந்து எளிமையில் இருப்பதும் நிற்பதுமே!

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...