11 Aug 2020

வேற எவனும் கொள்ளையடிச்சிடக் கூடாது!

 

வேற எவனும் கொள்ளையடிச்சிடக் கூடாது!

செய்யு - 533

            சந்தானம் அத்தான் கெளம்பிப் போன பிற்பாடு மவனெ அழைச்சிக்கிட்டு அந்த ராத்திரியில மாடிக்குப் போனாரு சுப்பு வாத்தியாரு. சமீப நாட்களா அவரு மவ்வேங் கூட பேசுறது அதிகமா இருந்துச்சு.

            "யம்பீ! அவனுவோ கெளம்புறப்ப நீயி யில்ல. எலெ வாங்கப் போயிருந்தே. அவ்வேம் பாக்குக்கோட்டையாம் கெளம்புறப்போ பணத்தெ சீக்கிரமா கொடுத்துப்புட்டா வேலையச் சீக்கிரமா ஆரம்பிச்சிப்புடலாங்றாம், என்னவோ செலவுக்குப் பைசா காசி யில்லாதவம் போல, நாம்ம கொடுத்தாங் வேலைய ஆரம்பிக்க முடியுதுங்றது போல! எதுக்கெடுத்தாலும் பணம் பணம்ன்னே நிக்குறானுவோடாம்பீ! நமக்கென்னவோ பிடிக்கல! எல்லாம் ஓம் யம்மாவால வந்த வெனெ!" ன்னாரு சுப்பு வாத்தியாரு. அவருக்குச் சமீபமா வெங்கு மேல ஒரு வெறுப்பு தட்டியிருந்துச்சு. அதெ யாரு கூடவாச்சும் பேசணும்ன்னு தோணியிருக்கணும்.

            விநாயகம் வாத்தியாரு இருந்த வரைக்கும் அவருக்கு எந்தக் கொறையும் யில்ல. எதாச்சிம் மனசெ அரிச்சிக்கிட்டுக் கெடந்தா, மனசுக்குள்ள பாரமா கெடந்தா வண்டிய எடுத்துக்கிட்டுக் கெளம்பிப் பேசிட்டு வந்துப்புடுவாரு. மன அரிப்பும் கொறைஞ்சாப்புல இருக்கும், மனபாரமும் எறங்குனாப்புல இருக்கும். அவரு இறந்துப் போனது சுப்பு வாத்தியாருக்குப் பெரும் எழப்பா இருந்துச்சு.மனசெ யாருகிட்டெ சொல்லி ஆத்திக்கிறதுன்னு பல நேரத்துல அவருக்குக் கொழப்பமா இருந்துச்சு. மவ்வேங் கூட இப்போ அதிகமா பேசுறதுக்கு அதுவும் ஒரு காரணமா இருக்கலாம். அப்பாரு மவன்னாலும் பல விசயங்கள்ல சுப்பு வாத்தியாருக்கும், விகடுவுக்கும் நெறைய கருத்து வேறுபாடுக உண்டு. அவரு சொல்றதெ இவ்வேம் ஒத்துக்கிட மாட்டாம். இவ்வேம் சொல்றதெ அவரு ஒத்துக்கிட மாட்டாரு.

            இப்போ என்னவோ விகடு அப்பங்காரரு எது சொன்னாலும் செரித்தாம், அவனுக்குப் பிடிக்காட்டியும் அதெ பத்திப் பெரிசா எதுப்பா எதையும் சொல்றதில்ல. செரித்தாம் செரித்தாம்ன்னு தலைய ஆட்ட ஆரம்பிச்சிருந்தாம். தான் எப்போ இப்பிடி மாறிப் போனோம்ன்னு அவனுக்கே புரியல. ஏம் இப்பிடி மாறிப் போனோங்றதும் அவனுக்குப் புரியல. ஒரு மகன் எத்தனெ காலம் மகனாவே இருக்க முடியும்? அவனுக்கு ஒரு கொழந்தெ போறந்து அவ்வேம் ஒரு அப்பங்காரனா ஆவுறப்போ, அவ்வேம் அப்பங்காரருக்குச் சாதகமா நெனைக்க ஆரம்பிச்சிடுறானோ என்னவோ!

            சுப்பு வாத்தியாரு பேசுனதுக்கு அவர்ர சாமாதானம் பண்ணுறாப்புல விகடு ஆரம்பிச்சாம், "எப்போ கொடுத்தாலும் பணத்தெ கொடுத்தானே ஆவணும். கொடுக்குறதா சொல்லியாச்சு. அதெ கால காலத்துக்குக் கொடுத்துப்புட்டா நமக்கும் பளு கொறைஞ்சாப்புல இருக்கும்!"ன்னாம்.

            "நீயி சொல்றதும் வாஸ்தவந்தாம்டா மவனே! மொதல்ல டிபாசிட்டு கணக்குல இருக்குற பணத்தெ எடுத்து முடிச்சிட்டு, பெறவு லோன்ல வர்ற பணத்துக்குனான ஏற்பாட பண்ணிக்கிடலாம். ஒரே நேரத்துல பணத்தெ போட்டு குமிச்சிக்கிட வாணாம். ஒவ்வொண்ணா ஒவ்வொரு அடியா எடுத்து வைக்கிறதுதாங் நல்லது. நாட்டுல திருட்டு பயம், கொள்ளைக்கார பயம் வேற அதிகமா இருக்கு. கொஞ்ச கொஞ்சமா பணத்தெ எடுத்து நாலைஞ்சு கட்டமா கழிச்சி வுடுறதாங் செரியா இருக்கும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "செரித்தாம்பா! கொஞ்ச கொஞ்சமா பைய பையவே வேலைய ஆரம்பிச்சிடலாம் யப்பா!"ன்னாம் விகடு.

            அன்னிய ராத்திரி கழிஞ்சி மறுநாளுக்கான பொழுது விடிஞ்சது.

            கலியாணத்துக்கான வேலைய ஒடனே சுப்பு வாத்தியாரு ஆரம்பிச்சிட்டாரு. கலியாணத்துக்குப் பெரட்ட வேண்டிய பணத்தெ பத்தி ஏற்பாடுகளப் பண்ணி வெச்சிட்டதால அதெ எடுத்து கொடுக்க வேண்டிய எடத்துல எடுத்து, கொடுக்க வேண்டிய எடத்துல கொடுக்க வேண்டியதுதாங் அவரோட மொத வேலையா இருந்துச்சு. வடவாதி ஸ்டேட் பாங்கியிலத்தாம் அவரோட ரிட்டையர்டு ஆனதுக்கான காசி, மவ்வேம் சம்பாத்தியத்தலு சேத்தக் காசின்னு எல்லாம் ஒட்டு மொத்தமா பன்னெண்டு லட்சப் பணம் கெடந்துச்சு. அதுலேந்து ரண்டு லட்சத்துப் பணத்தெ எடுத்துதாங் மாப்புளப் பாக்கப் போனதிலேந்து, மூர்த்தோல வரைக்குமான சிலவுகள சன்னஞ் சன்னமா செஞ்சிக்கிட்டுக் கெடந்தாரு. அதுல கொஞ்ச பணமும் கையில இருந்துச்சு. அப்பிடி எடுத்த ரண்டு லட்சம் போவ இப்போ பத்து லட்சம் கெடந்துச்சு. அதெ எடுக்கலாம்ன்னு சுப்பு வாத்தியாரு போனா பாங்கி மானேஜரு, ஏம் எடுக்குதீயே? எதுக்கு எடுக்குதீயே? அதுவும் திடுதிப்புன்னு பெருந்தொகையா?ன்னு ஆயிரத்தெட்டுக் கேள்விகளக் கேட்டுப் பணத்தெ எடுக்க வுட மாட்டேங்றாரு, டிபாசிட்டுக் கொறைஞ்சிப் போயிடு‍முன்னு.

            மவளுக்குக் கலியாணத்த வெச்சிருக்கிற வெவரத்த எடுத்துச் சொல்லி மானேஜர்ர ஒரு வழியா சம்மதிக்க வைக்கிறதுக்குப் போதும் போதும்ன்னு ஆயிடுச்சு சுப்பு வாத்தியாருக்கு. அப்படியும் பத்து லட்சப் பணத்தையும் ஒரே அடியா எடுக்க முடியாதுன்னுட்டாரு மானேஜர். அஞ்சு லட்சப் பணத்தை பொதன் கெழமையும், மிச்ச அஞ்சு லட்ச பணத்தை வெள்ளிக் கெழமையிலயும் எடுக்கலாம்ன்னு சொல்லியிருந்தாரு.

            செரின்னு திங்கக் கெழமெ பணத்தெ எடுக்கப் போன சுப்பு வாத்தியாரு அதெ எடுக்க முடியாம வூட்டுக்குத் திரும்பி, திரும்ப வூட்டுலேந்து கெளம்பி புதன் கெழமெதாம் போயி எடுக்க முடிஞ்சது. பணத்தெ எடுத்ததும் மொத வேலையா வூட்டுக்குக் கொண்டாந்து சாமி மாடத்துக்கு மின்னாடி வெச்சாரு. வூட்டுல அப்போ இருந்த எல்லாத்தையும் கூப்புட்டு அதெ கும்புட போட வெச்சாரு. பெறவு அந்தப் பணத்தெ பவ்வியமா எடுத்து பீரோல்ல வெச்சிக்கிட்டு, அதுலேந்து ஒன்றரை லட்சத்துப் பணத்தெ எடுத்து சித்துவீரேனோட வூட்டுக்குப் போனாரு சுப்பு வாத்தியாரு.

            எல்லாம் ஆயிரும் ரூவா நோட்டுக. அதெ எண்ணி எடுத்து ஒரு தினசரித் தாள்ல சுத்திக் கட்டி மஞ்சப் பையி ஒண்ணுல போட்டு எடுத்துக்கிட்டு, இவரு போன நேரத்துல வீட்டுக்கு எதுத்தாப்புல இருந்த பட்டறையில கட்டெ அடிச்சிட்டு வேலயப் பாத்துட்டு இருந்துச்சு சித்துவீரன். அதெ வூட்டுக்கு வாரச் சொல்லி, "கலியாணத் தேவைக்குன்னு காசிய எடுத்து மொத பணமா கட்டிலு, பீரோ செய்யுறதுக்கு ஒங்கிட்டதாம்ப்பா கொடுக்குறேம்! கேட்டபடிக்கு ஒண்ணரை லட்சம் இருக்கு!"ன்னு சித்துவீரனோட கையில கொடுத்தாரு.

            "பணத்துக்கு ன்னா இம்மாம் அவ்சரம்? ரண்டு நாள்ல தர்றேன்னு சொல்லிட்டதா வாக்கு மீறக் கூடாதுன்னு இப்பிடி வந்து நிக்குதீயளே? நாம்ம அம்பதாயிரம் போதும், மிச்சத்தெ பெறவு தரலாம்ன்னு சொன்னேம்! இப்பிடியா மொத்தத்தையும் ஒத்தையாக் கொடுத்திட்டீயளே!"ன்னுச்சு சித்துவீரன்.

            "யிப்போ ஒரு வேள முடிஞ்சிதுல்லா. எப்ப கொடுக்குறதா இருந்தாலும் கொடுத்துதானே ஆவணும். பணத்தெ முங்கூட்டியே எல்லாத்தையும் கொடுத்துப்புட்டா ஒஞ்ஞ வேலையும் தடெ படாது பாருங். பணத்தெ எதிர்பாத்துக்கிட்டு வேலைய நிறுத்தி வைக்க வேண்டியதில்லே. கட்டிலு, பீரோன்னு செய்ய வேண்டிய சாமாஞ் செட்டுகள அத்தனையையும் நீஞ்ஞ சொன்னாப்புல தேக்கத்துல பண்ணி கலியாணத்து அன்னிக்கு மொத நாளு கலியாண மண்டபத்துல வெச்சிட வேண்டியது இனுமே ஒஞ்ஞ கடமெ. இஞ்ஞயிருந்து பாக்குக்கோட்டைக்குக் கலியாண மண்டபத்துக்குச் செய்யுற சாமாஞ் செட்டுகள கொண்டு போறதுக்கு வாடவெ தனியா கொடுக்கணும்ன்னாலும் சொல்லிப்புடுங்க! கொடுத்துப்புடுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதல்லாம் ஒண்ணும் வாணாம். இந்தக் காசியே போதும். இதுக்கே சென்னைப் பட்டணம் வரைக்கும் கொண்டு போயி வெச்சிப்புடலாம். நீஞ்ஞ வேற? கொஞ்ச வேல ஆயிருக்கு! வந்து எப்பிடியிருக்குன்னு பாக்க வாங்களேம் பட்டறைக்கு, பாத்துப்புட்டுப் போயிடலாம்!"ன்னுச்சு சித்துவீரன்.

            "ஒஞ்ஞ வேலையப் பத்தித் தெரியாதா? பெரமாதமா பண்ணுங்க. யிப்பவும் வந்து பாக்க மாட்டேம், எடையில எப்பயும் வந்துப் பாக்க மாட்டேம். கலியாண மண்டபத்துல நீஞ்ஞ கொண்டாந்து வைக்கிற அன்னிக்குத்தாம் பாப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பெரியவங்கன்னா பெரியவங்கத்தாம்! அந்த மொறையோட நடந்துக்குதீயே! பேசுதீயே! ஏய் சுந்தரி! காப்பித் தண்ணியக் கொண்டா!"ன்னுச்சு சித்துவீரன் உள்ளார ஒரு சத்தத்தெ கொடுத்து. சித்துவீரன் சொல்லி முடிக்கிறதுக்குள்ள காப்பித் தண்ணி வந்துச்சு. அதெ குடிச்சிட்டுக் கெளம்புனாரு சுப்பு வாத்தியாரு, கலியாணத்துக்கான ஒரு வேலய ஒப்படைச்சு முடிச்சாச்சுன்னு திருப்தியா. அந்தக் கட்டிலு, பீரோ, டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிள் எல்லாம் வேல சரியா நடந்து கலியாணத்துக்கு மொத நாளு மண்டபத்துக்கு வந்துடுமாங்றதெ பத்தி அவரு பெரிசா யோசிக்கல. எல்லாம் வந்துப்புடும்ங்ற நம்பிக்கையிலயே இருந்துட்டாரு.

            அடுத்ததா பாங்கியில வெள்ளிக் கெழமெ மிச்சப் பணத்தெ எடுக்கலாம்ன்னு சொன்னாங்கன்னு அன்னிக்குப் பணத்தெ எடுக்கலாம்ன்னு போனாரு. அதெ எடுத்துப்புட்டா, ஞாயித்துக் கெழமெ கார்ர வெச்சிட்டுப் பாக்குக்கோட்டையில கொண்டுப் போயிக் கொடுத்துப்புடலாம்ன்னு முடிவு பண்ணிருந்தாரு. அதுப்படி வெள்ளிக்கெழமெ பாங்கிக்குப் போன சுப்பு வாத்தியார்ரப் பாத்து மேனேஜரு சொன்னாரு, "தப்பா நெனைச்சுக்காதீங் சார்! வெள்ளிக் கெழமயா இருக்கு! இன்னிக்குப் பணத்தெ எடுக்க வாணாம். திங்க கெழமெ வாஞ்ஞ. மொத வேலையா பணத்தெ போட்டுத் தந்துப்புடுறேம்!"ன்னு.

            சுப்பு வாத்தியாரு, "செரிங்க!"ன்னு வாயால சொன்னாலும், மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டாரு, "வூட்டுல இருக்குறவங்க பணத்தெ, சாமாஞ் செட்டுகள வெள்ளிக் கெழமெ கொடுக்க யோஜனெ பண்ணுவாங்க! அதுவும் பொழுது மசங்குன பெற்பாடுதாங். பட்டப் பகல்ன்னா வாங்கிப்புடலாம். பாங்கியிலுமா இப்பிடி யோஜனெ பண்ணுவாங்க, அதுவும் பட்டப்பகல்ல?"ன்னு.

            அதுக்குள்ள சனிக்கெழமெ ராத்திரிக்கு பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தா போன அடிச்சிட்டு, "ன்னா மாப்ளே! நாளைக்கு பணத்தோட வர்றதா சொன்னீயளே? வாறீயளா?"ன்னு.

            சுப்பு வாத்தியாரு நெலமைய எடுத்துச் சொல்லி, "திங்கக் கெழமெ பாங்கியில பணத்தெ வாங்கிப்புட்டு, பொதங் கெழமெ வார்ரேம்!"ன்னாரு.

            "செவ்வா கெழமெ வாரக் கூடாதுன்னு நெனைக்குதீயே போல! செரி வாஞ்ஞ. ஏம் சொல்றேம்ன்னா பணம் வந்துப்புட்டா பாக்க வேண்டிய வேலயப் பாக்க ஆரம்பிச்சிப்புடலாம். கொடுக்க வேண்டிய முன்பணத்தெ கொடுத்துப்புடலாம் பாருங்க மாப்ளே!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "பொதங்கெழமெ வாரதில்ல மாத்தமில்ல மாமா! கார்ர எடுத்துக்கிட்டுக் கருக்கல்லயே கெளம்பி ஏழு மணி எட்டு மணிக்குள்ள அஞ்ஞ பாக்குக்கோட்டையில இருப்பேம் மாமா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அவ்சரம் யில்ல. மொதுவா எழும்பி மொல்லமாவே வாரலாம். பொதங் கெழமெ வாரதா இருந்தா நாம்ம வெளியில எஞ்ஞயும் கெளம்பாம வூட்டுலயே இருப்பேம். ஏம் ஞாயித்துக் கெழமென்னு போன அடிச்சிக் கேட்டேம்ன்னா அன்னிக்கு டாக்கடரு  பயலும் வந்திருப்பாம். அவனெப் பாத்து அவ்வேம் கையில கொடுத்தாப்புல இருக்கும்லா! ஒஞ்ஞளுக்கும் திருப்தியா போயிடும்ன்னு பாத்தேம். வேறொண்ணும் யில்ல. பாருங்க மாப்ளே! பாங்கியில நம்ம பணத்தெ எடுக்குறதுக்கு எம்மாம் கணக்கெ சொல்றானுவோன்னு? செரி பரவால்ல. எல்லாம் நல்லதுக்குன்னே நெனைச்சிக்கிடுவேம். பொதங் கெழமெ பணம் வர்றது நிச்சயந்தானே? அதால நாம்ம பாக்க வேண்டிய வேலய சன்னமா செஞ்சிட்டுக் கெடக்குறேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "பொதங் கெழமெ கார்ல வூட்டுக்கு மின்னாடி வந்து நிப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "எதுக்கு மாப்ளே காருக்குல்லாம் தண்டத்தெ பண்ணிட்டு! பஸ்ஸூலயே அவ்சரம் யில்லாம நெதானமா வாஞ்ஞளேம்! மத்தியானத்துக்கு மேல வந்தாலும் பரவால்லா!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "ஆறு லட்சத்திப் பணம் மாமா! பஸ்ஸூல வார்றப்ப எவனாச்சு அடிச்சிட்டாம்ன்னா பெறவு என்னத்தெ போலம்புனாலும் வாராது. ஆயிரமோ ஆயிரத்து ஐநூத்தோ ரூவாக் காசியக் கொடுத்தா கார்ல பாதுகாப்பா வந்துப்புடலாங். அண்ணன் மவனெத்தாம் கார்ர எடுத்துட்டு திருவாரூர்லேந்து வாரச் சொல்லிருக்கேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆம்மா மாப்ளே! பணத்தெ எவனும் வர்ற வழியில கொள்ளையடிச்சிப் படாது! சூதானம் முக்கியம்!"ன்னு ராசாமணி தாத்தா சொன்னது, பணத்தெ வேற எவனும் கொள்ளையடிக்கக் கூடாது, நாங்கத்தாம் அடிக்கணும்ன்னு சொல்றதெப் போலத்தாம் இருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...