10 Aug 2020

குப்புற கவுந்த வண்டி!

குப்புற கவுந்த வண்டி!

செய்யு - 532

            மூர்த்தோலைக்கு வந்த சனங்க சன்னமா ஒவ்வொண்ணா கெளம்பிப் போக ஆரம்பிச்சதுங்க. ஆறு மணி வாக்குல கிட்டதட்ட எல்லாரும் கெளம்பிப் போனதுக்குப் பெற்பாடு சந்தானம் அத்தான் மட்டுந்தாம் குடும்பத்தோட இருந்துச்சு. அத்து ராத்திரி ஒம்போது மணி வாக்குல காரை எடுத்தா கருக்கல்ல சென்னைப் பட்டணத்துக்குப் போயிடலாங்ற நெனைப்புல கெளம்பல. அத்தோட கலியாணம் சம்பந்தமா மாமங்காரரான சுப்பு வாத்தியாருட்ட கலந்துப் பேசிட்டுக் கெளம்பலாம்ன்னு திட்டம் பண்ணிட்டு இருந்துச்சு. அந்த நேரமா பாத்து சித்துவீரனோட டிவியெஸ்ஸூ எக்செல் சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு மின்னாடி நின்னுச்சு. வூட்டுக்குள்ள வந்த சித்துவீரன் ஆம்பளைங்க எல்லாம் மாடியில உக்காந்திருக்குறதெ கேட்டுக்கிட்டு மாடியில ஏறுனுச்சு.

            மாடியேறி வந்த சித்துவீரனெப் பாத்ததும், "வாங்கம்பீ! உக்காருங்க"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியப் பக்கத்துல தூக்கிப் போட்டு. சந்தானம் அத்தான், விகடு, சுப்பு வாத்தியாரு எல்லாம் மாடியில நாற்காலியப் போட்டு உக்காந்திருந்தாங்க. "கொஞ்சம் சடவாப் போயிடுச்சு!"ன்னு சித்துவீரன் தலையச் சொரிஞ்சிக்கிட்டு.

            "பரவால்லம்பீ! சாப்பாடு நீஞ்ஞ சொன்னபடிக்குப் பெரமாதம்! ன்னா எலைக்கட்டு யில்லாம கொஞ்சம் அந்த நேரத்துக்கு அலட்டா போயிடுச்சு. பரவால்லா இருந்தாலும் சமாளிச்சி வுட்டாச்சு. சாப்பாட்டுக்காரரப் பாத்தா சாப்பாடு அருமையா இருந்ததா சொல்லிப்புடுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. 

            "அதுலதாங் சின்ன சிக்கலு வந்துப் போச்சு!"ன்னுச்சு சித்துவீரன்.

            "என்னாம்பீ சொல்லுதீயே?"ன்னு பதட்டமானாரு சுப்பு வாத்தியாரு.

            "காலிப் பாத்திரத்தெ ஏத்திட்டுப் போனானுவோல மினிடாரு வண்டியில. அத்து விளமல்கிட்டெ போறப்ப கவுந்துப் போயிட்டு. நம்மளுக்குப் போன அடிச்சானுவோ, நாம்ம அப்பத்தாங் சாப்புட்டு முடிச்சேம். ஒடனே அரக்கப் பரக்க அஞ்ஞ ஓடுறாப்புல ஆயிடுச்சு. அதாங் ஒண்ணும் சொல்லாம கொள்ளாம போயிட்டேமே, எதாச்சும் நெனைச்சுப்புடுவீங்கன்னு ஓடியாந்தேம்!"ன்னுச்சு சித்துவீரன்.

            "வண்டி டிரைவர்ர பிடிச்சி மறிச்சி பேசுனதுலயே அவ்வேம் கொல நடுங்கிப் போயிட்டாம். அந்த நெனைப்புலயே போயிருப்பாம் போலருக்கு. டிரைவர்ருல்லாம் ஒத்தப் புத்தியில போவணும். இஞ்ஞயே மனசு செரியில்லாம போயிருப்பாம். அதாங் புத்திப் பெசவி வுட்டுருப்பாம்! வண்டியோட்டுற டிரைவர்ர மட்டும் நாம்ம மனசு கோணுறாப்புல ஒத்து வார்ததெ சொல்லப்படாது. வெளியில வண்டியில ஆம்பளைங்க கெளம்புறப்பயும் வூட்டுல இருக்குற பொம்பளைக மனசு நோவுறாப்புல எதையும் சொல்லப்படாது. ரண்டுமே ஆபத்துதாங்! அந்த ரண்டு பெரியவங்கள நாமளும், தம்பியும் பிடிச்சி மேல கொண்டாரலன்னா பெரச்சனெ வேற தெசையிலல்லா போயிருக்கும்!"ன்னுச்சு சந்தானம்.

            "யிப்போ எப்பியிருக்காரு வண்டிக்கார யம்பீ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "வண்டித்தாங் ஒரு பக்கமா சாஞ்சி குப்புற கவுந்துப்புட்டு. பாத்திரங்களுக்குக் கொஞ்சம் சேதம். பெரிசா அடியில்ல. இருந்தாலும் மெடிக்கல் காலேஜூல சேத்தாச்சு. பாத்துட்டு கையில ஆயிரம் ரூவாயக் கொடுத்துட்டு வந்தேம். வேறென்னத்தப் பண்ணுறது? அத்தோட வண்டி வாடகெ ஆறுநூத்து ரூவா. அதையும் கொடுத்துப்புட்டு வந்தேம்! நல்ல வேளையா கையில காசி இருந்துச்சு!"ன்னுச்சு சித்துவீரன்.

            சுப்பு வாத்தியாரு புரிஞ்சிக்கிட்டாரு. "சித்தெ இருங்கம்பீ!"ன்னு மாடியிலேந்து எறங்குனாரு.

            "பணத்துக்கா வாரல. சொல்லாமப் போயிட்டேமேங்றது ஒண்ணு, சங்கதி இப்பிடி ஆயிடுச்சுன்னு சொல்லணுமேங்றது இன்னொண்ணு! தேவ முடிஞ்ச பெற்பாடு ன்னா ஏதுன்னு வந்துப் பாக்கணுமில்லா!"ன்னுச்சு சித்துவீரன்.

            "இருக்கட்டும்பீ! நமக்கும் வேல அலமலப்புல கொடுக்க வேண்டிய காசி மறந்துப் போயி அப்பிடியே வுட்டுப் போயிடக் கூடாது பாருங்கம்பீ!"ன்னு சொல்லிட்டு வூட்டுக்குள்ளப் போயிட்டு திரும்ப மேல வந்தவரு, சித்துவீரன் கையில ரண்டு ஆயிரம் ரூவாயி நோட்ட நீட்டுனாரு.

            "அறுநூத்து ரூவாயிப் போதும்!"ன்னுச்சு சித்துவீரன்.

            "அடிபட்ட யம்பீக்கு வேற பணத்தெ கொடுத்துருக்குறதா சொல்லிருக்கீயேளே! இருக்கட்டும். மறுக்கா பாத்தா இன்னம் ஒரு நானூத்த கொடுங்க. நம்ம வூட்டுத் தேவைக்கு வந்துப்புட்டு இப்பிடி ஆவக் கூடாது. மனசு சங்கடமா இருக்கு. ஒரு வைத்தியச் சிலவுக்கு ஆவும்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஒஞ்ஞ நல்ல மனசு யாருக்கும் வாராதுங்க!"ன்னு கண்ணு கலங்குனாப்புல பேசிட்டு, "யப்படியே திருவாரூரு கெளம்புன நாம்மத்தாம். நேர்ரா இஞ்ஞத்தாம் வந்தேம். வூட்டுலயும் தேடிட்டு இருக்குமுங்க. பெறவு கெளம்புறேம். மித்தபடி எல்லாம் திருப்திதானே?"ன்னுச்சு சித்துவீரன்.

            "மெத்தத் திருப்தி யம்பீ! கட்டிலு பீரோ வேலையையும் ஆரம்பிச்சிப்புடலாம். ரண்டு நாள்ல பணத்தெ கொஞ்சம் கையில கெடைக்கறதெ கொண்டாந்துத் தந்துப்புடுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அந்த வேலய எல்லாம் எப்பயோ ஆரம்பிச்சாச்சு. பணத்துக்கு ன்னா அவ்சரம்? கொடுக்காமலா போயிடப் போறீயே? ஒஞ்ஞகிட்டெ இருக்குற பாங்கியில இருக்குறாப்புல. அதெப் பத்தி நாம்ம ஏம் கேக்கப் போறேம்? அத்து வர்ற நேரத்துல செரியா வந்துப்புடுங்றது நமக்குத் தெரியாதா? இருந்தாலும் பணம் இருந்தா ஒரு அம்பதாயிரம் கொடுத்தா கொஞ்சம் ஒதவியாத்தாம் இருக்கும். சில சாமாஞ் செட்டுக வாங்கலாம் பாருங்க! நம்மகிட்டெ அம்மாம் இருப்பு கெடையாது பாருங்க!"ன்னுச்சு சித்துவீரன்.

            "நல்லதும்பீ! எம்மாம் வெரசா கொண்டாரணுமோ அம்மாம் வெரசா வூட்டுக்கே கொண்டாந்துக் கொடுத்துப்புடுறேம்! வூட்டுக்கு வேற போலங்கறீயே! வூட்டுல பொண்டு புள்ளைக ‍தேடுமுங்க!"ன்னு சுப்பு வாத்தியாரு சொல்லி முடிக்கிறதுக்குள்ள, வெங்கு காப்பித் தண்ணியப் பொட்டுக் கொண்டாந்து மாடியில சித்துவீரன் மின்னாடி நீட்டுனுச்சு.

            "இன்னிக்கு ஒரு நாள்ல எத்தனெ டீத்தண்ணி, காப்பித் தண்ணீங்றீயே? குடிச்சிக் குடிச்சி மாண்டுப் போயிடுச்சு!" சொல்லிட்டெ வெங்கு கொண்டாந்த காப்பித் தண்ணிய ஒரு உறிஞ்சி உறிஞ்சிட்டு, "எல்லாத்துக்கும் கெளம்புறேம்!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புனுச்சு. சுப்பு வாத்தியாரும், விகடுவும் மாடியிலேந்து எறங்கி வந்து வழியனுப்பி வுட்டாங்க.

            திரும்பவும் ரண்டு பேரும் மாடியில ஏறுனாங்க சந்தானம் அத்தானோட பேசுறதுக்காக. ஏறுறப்போ சுப்பு வாத்தியாரு கேட்டாரு, "ன்னடாம்பீ! சாப்பாடு எடுத்துட்டு வந்த வண்டி கவுந்துட்டதா சொல்லிட்டுப் போறாம்? நமக்கு மனசே செரியில்லடாம்பீ!"ன்னு.

            "யாரு இவ்வேம் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஒளறிட்டுப் போறாம்? இந்தப் பயலெ நாம்ம பாத்ததேயில்லையே? அத்தெ வகையறாவா?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "வண்டிய மறிச்சிக்கிட்டு வுட மாட்டேம்ன்னு ஒல்லியா செவப்பா ஒருத்தரு நின்னாருல்லா. அவரு பேரு முருகு. அவரோட மவ்வேம். மாப்புள்ளைக்கி மச்சாங்கார்ரேம். அஞ்ஞ பாக்குக்கோட்டைக்கு இவ்வேந்தாம் மொத மாப்புள!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஆளு பாக்குறதுக்கு டிபியில அடிபட்டவேம் மாதிரில்லா இருக்காம்! ஒடம்புல ஒண்ணுமில்லயே! எலும்பும் தோலுந்தாம் இருக்கு! நம்ம கோவில்பெருமாளு நாது சித்தப்பா பரவால்லா போலருக்கே!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அவருக்கு குடிச்சே ஒடம்புப் போச்சு. இவனுக்கு சுகர்ல ஒடம்புப் போயிடுச்சு. அதாங் வித்தியாசம். அந்த ஆளு அநியாயத்துக்கு நல்லவம்ன்னா, இந்தப் பயெ அநியாயத்துக்கு மோசமானவேம்! செரியான மோடுமுட்டிப் பயெ! எல்லாம் வந்து வாய்க்குது பாருங்கம்பீ! சேட்ட மூட்டெ செவ்வாய்க் கெழமென்னு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. 

            "அத்துச் செரி மாமா! இந்தப் பயெ உண்மையாலே வண்டிக் கவுந்துட்டுன்னு பணத்தெ வாங்கிட்டுப் போறானா? யில்லே டூப்பு அடிச்சிட்டு வாங்கிட்டுப் போறானா? அத்து தெரியாம நீயி பாட்டுக்குப் பணத்தெ எடுத்துக் கொடுக்குதீயே? அவ்வேம் வண்டிக் கவுந்தத்துக்குல்லாமா நாம்ம பணத்தெ எண்ணி வைக்க முடியும்?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அதாம்பீ! யிப்போ மேல ஏறிட்டு வர்றப்பவே நம்ம பயெகிட்டெ பேசிட்டு வந்தேம்! நம்ம வூட்டுத் தேவைக்கு வந்து இப்பிடி ஆயிடுச்சேன்னு! ந்நல்ல வேள உசுருக்குச் சேதாரமில்லன்னுச் சொன்னதுந்தாம் மனசுக்கு ஆறுதலா போச்சு. ன்னா பெரிய பணம்பீ! ஒரு மனிதாபிமானந்தாம். வேற என்னத்தெ நாம்ம ஆறுதல் பண்ண முடியும்? எம்மாமோ சிலவு அடிச்சிட்டுப் போவுது? வண்டியோட்டிட்டு வந்தவேம் புள்ளகுட்டிக்காரனா இருந்தா நெனைச்சிப் பாரு! அதெ யோஜனெ பண்ணித்தாம் கொடுத்தேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அத்துச் செரி! சம்பவம் நடந்தது உண்மையா இருந்து, பணம் ஒழுங்கா போவ வேண்டிய எடத்துக்குப் போயிச் சேந்தா செரித்தாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "சம்பவம் உண்மையில்லாம இருந்தாலும் செரித்தாம்பீ! எதுக்கு ஒருத்தெம் நம்ம வூட்டுத் தேவைக்கு வந்துபுட்டு வண்டி கவுந்து கெடக்கணுங்றேம்? ந்நல்லா இருந்துட்டுப் போவட்டும். எல்லாம் ஒரு நம்பிக்கெதாங். அதுக்கு மேலத்தாம் நாம்ம ன்னா செய்ய முடியும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "செரி அதெ வுடு மாமா! காரு வாங்கிக் கொடுக்கணும்ன்னு பேசியானுச்சே! நாலு லட்சம் அஞ்சு லட்சத்துல மாருதியிலயே பாத்து அருமையான கார்ர வாங்கிப்புடலாம். அஞ்ஞ சென்னையில வாங்கிக் கொடுக்குறதா இருந்தாலும் செரித்தாம். இஞ்ஞ வந்து வாங்கிக் கொடுக்குறதா இருந்தாலும் செரித்தாம். இஞ்ஞன்னா தஞ்சாவூர்ல வாங்கிப்புடலாம். சொல்லு வந்துடுறேம். வாங்க போற அன்னிக்கு ஒரு நாளுக்கு மின்னாடி மட்டும் போன அடி! கார்லயே நேர்ரா வந்துப்புடுறேம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அதுல கூட ஒஞ்ஞளுக்குச் செருமம் ஒண்ணுமில்லம்பீ! பணத்தெ கொடுத்தா அவுங்களே அவுங்களுக்குப் பிடிச்சாப்புல வாங்கிப்புடுறதா சொல்றாங்கம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. சந்தானம் அத்தான் ஒரு நிமிஷம் நெத்தியச் சுருக்கிட்டு யோசனெ பண்ணிச்சு.

            "நாம்ம வாங்கிக் கொடுக்குறதுன்னா பொண்ணு பேர்லயே ஒரு லோனப் போட்டு வாங்கிக் கொடுத்துட்டு மாச மாசம் நாம்ம பணத்தெ கட்டிக்கிடலாம். மொத்தமா பணத்தெ பெரட்ட வேண்டிய அவசியமில்லே. கொஞ்சம் செருமம் கொறையும் பாரு மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "யாம்பீ! வாங்கிக் கொடுக்குறதுன்னு முடிவாயிடுச்சு. இதுல கடங்கப்பியெல்லாம்? அவுங்ககிட்டெ பணத்தெ பெரட்டி மொத்தமா கொடுத்துப்புடலாங். பிடிச்சாப்புல வாங்கிக்கிடட்டும். நாளைக்கு நம்ம மேல குத்தம் ஏதும் இருக்காது பாரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அப்பிடின்னா ஒண்ணு பண்ணு மாமா! பொண்ணு பேர்லத்தாம் கார்ர வாங்கணும்ன்னு உறுதியா சொல்லிப்புடு மாமா! இதுல மாத்தம் வாணாம் மாமா! சில விசயங்கள்ல நாம்ம பிடியா இருக்கணும் மாமா! வுட்டுப்புடக் கூடாது தும்பெ வுட்டுப்புட்டு வால பிடிக்குறாப்புல! பெறவு மாமா! காசியக் கொடுத்தா கார்ர வாங்கிப்புடுவானுவோள? காசிய வாங்கி வேற எதுக்காச்சம் சிலவே பண்ணிப்புட போறானுவோ? யில்ல பெறவு வாங்கிக்கிறோம்ன்னு சொல்லிடப் போறானுவோ? நமக்குக் கலியாணத்து அன்னிக்கு மண்டபத்துல காரு நிக்கணும். வாங்கிக் கொடுக்குற நமக்கு அதுதாங் பெருமெ மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "அதுல்லாம் செஞ்சிப்புடுவாங்க யம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அப்பிடியே கலியாண ஏற்பாடுகளப் பத்திப் பேச்சு பல வெதமா சொழண்டுகிட்டுப் போனுச்சு. எல்லாத்தையும் ஒண்ணும் பேசாம ஒண்ணு விடாம பொறுமையா கேட்டுக்கிட்டெ உக்காந்திருந்தாம் விகடு.

            "ன்னடா மாப்ளே! ஒண்ணுஞ் சொல்லாம தலையாட்டி பொம்மையாட்டம் உக்காந்திருக்கீயே?"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            மெல்லிசா சிரிச்சாம் விகடு.

            "யிப்பிடி சிரிச்சே சிரிச்சே சமாளிச்சிப்புடு! காசி விசயத்துல யப்பா கூட இருந்து கொஞ்சம் ஒத்தாசியா இருக்குற நேரத்துல கொஞ்சம் விழிப்பாவும் இரு. எதா இருந்தாலும் நம்மகிட்டெ போன அடிச்சிக் கொஞ்சம் கலந்துக்க. மாமா எல்லாத்துலயும் கொஞ்சம் பெருந்தன்மையாவும், விட்டேத்தியாவும் இருந்துப்புடும்! எடையில முடிஞ்சா நாமளும் வர்றேம் அஞ்ஞ சென்னைப் பட்டணத்துலேந்து!"ன்னு விகடுகிட்டெ சொல்லிட்டு, சுப்பு வாத்தியாரு பக்கம் திரும்பி, "அப்புறம் மாமா! பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி., மிக்ஸி, கிரைண்டருல்லாம் நாஞ்ஞ தம்பியோ, யக்கா, தங்காச்சி எல்லாம் காசியப் போட்டு வாங்கிக் கொடுத்துப்புடுறேம். அதுக்குக் காசியச் சிலவு பண்ணிட்டு செருமபட்டுக்கிட்டுக் கெடக்காதே! பாத்திரம் பண்டமெல்லாம் அஞ்ஞ சென்னையிலத்தாம் குடி வைக்கப் போறேங்றதால அஞ்ஞ வெச்சி வாங்கிக் கொடுத்துப்புடலாம். மலிவா வாங்குறாப்புல, அதெ அஞ்ஞ வாங்குறாப்புல நாம்ம கடையெ காட்டி வுடுறேம்! கலியாணத்துக்கு பணம் தேவைன்னாலும் சொல்லு மாமா!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            "ஏம்பீ! ஒஞ்ஞளுக்குச் செருமம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ஏம் மாமா! நாஞ்ஞ பொறந்ததிலேந்து தோள்ல தூக்கிப் போட்டு எஞ்ஞளுக்காக எம்மாம் செருமபட்டுக்கிட்டு கெடந்திருக்கே? எம்மாம் சிலவெ பண்ணிருப்பே? அத்துவும் ஒண்ணுக்கா ரண்டுக்கா? எல்லாத்துக்கும்லா பண்ணிருக்கே! அந்தக் கடனையெல்லாம் தீக்க வாணாமா? பொண்ணுக்குக் கலியாணத்தெ வைக்கிறப்பத்தாங் அதெ தீக்க முடியும். நீயி ச்சும்மா இரு மாமா! சொன்னது ஞாபவம் இருக்கட்டும். நாம்ம சொன்ன சாமாம்ல கைய்ய வெச்சி சிலவெ பண்ணிட்டுக் கெடக்காதே! அதெல்லாம் நம்ம செட்டுகளோட கணக்கு ஆம்மாம்!"ன்னுச்சு சந்தானம் அத்தான்.

            சுப்பு வாத்தியாரு மெல்லிசா சிரிச்சிக்கிட்டாரு. மனசுக்குள்ளயும் அவருக்குச் சந்தோஷம் பிடிபடல. பாசக்கார பயலுவோளா இருக்கானுவோளேன்னு நெனைக்க நெனைக்க அவருக்கு நெஞ்சு விம்முனுச்சு.

            பேச்சு அத்தோட ஒரு முடிவுக்கு வந்து அன்னிக்கு ராத்திரி சந்தானம் அத்தான் சாப்பாட்ட முடிச்சிட்டு பத்து மணிக்கு மேலத்தாம் கெளம்ப முடிஞ்சிது. கெளம்புறப்போ, வெங்கு தனம் அத்தாச்சிக்கிட்டெ வந்து, "கலியாணம் ஆயி செய்யு அஞ்ஞத்தாம் குடித்தனம் இருப்பா. நீயிதாம் பக்கத்துல இருக்குறெ ஆளு. ந்நல்ல வெதமா பாத்துக்கிடணும் கூட மாட இருந்து!"ன்னு கண்ணுல தண்ணி வுட்டுச்சு.

            "நம்மள அஞ்ஞ வேலங்குடி வூட்டுலேந்து கொண்டாந்து வெச்சி அப்போ எப்பிடிப் பாத்துக்கீட்டிங்றது மறந்தா போச்சு யம்மா! நம்மட பொண்ணு மாதிரிக்கிக் கண்ணுல வெச்சுப் பாத்துப்பேம்மா!"ன்னுச்சு தனம் அத்தாச்சி.

            "ஆமாம்பீ! நீஞ்ஞல்லாம் சென்னைப் பட்டணத்துல இருக்குற தெகிரியந்தாம். அவ்வேம் மாப்புள யம்பீ அஞ்ஞத்தாம் சென்னைப் பட்டணத்துல வேல. கவர்மெண்டு டாக்கடர்ரு. நீஞ்ஞத்தாங் கூட இருந்து தொணையா பாத்துக்கிடணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நீயி சொல்லணுமா மாமா! யப்பா அடிக்கடி சொல்லும், எதா இருந்தாலும் மாமாகிட்டெ கலந்துகிட்டுதாங் செய்யணும்ன்னு. நீதானே மாமா நமக்கு எப்பவும். அப்பிடியிருக்க ஒம் பொண்ண வுட்டுப்புடுவேனா?"ன்னுச்சு சந்தானம் அத்தான். எல்லாருக்கும் கண்ணு கலங்கிடுச்சு.

            சந்தானம் அத்தான் கார்ல ஏறிக் கெளம்பிப் போவ காரு போற தெசையையே நெடுநேரம் பாத்துட்டு நின்னுச்சுங்க வழியனுப்ப வாசல்ல நின்ன சனங்க.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...