கடைசி அல்வா!
செய்யு - 545
கலியாணத்துக்கு நாலு நாளுக்கு மின்னாடி
யோகிபாயோட பொண்ணு நிரஞ்சினி வந்து கலியாண பொண்ணுக்கு அலங்கார செட்டு நகை எடுக்கணும்ன்னு
நின்னா. நகெ நட்டெ ஏகப்பட்டது போடுறாப்புல இருக்குறதால அதெல்லாம் எதுக்குன்னு கேட்டுப்
பாத்தாரு சுப்பு வாத்தியாரு. டாக்கடர்ரு மாப்புள்ளைக்கு அதெல்லாம் போட்டுப் பாத்ததாங்
திருப்திப்படும்ன்னா நிரஞ்சனி.
நகெ நெட்டு இல்லாதவங்க அதெல்லாம் போட்டுப்
பாத்துச் செய்யுறதுல ஒரு ஞாயம் இருக்கு, நகெ நெட்டு இருக்குறவங்களும் அதல்லாம் போட்டுச்
செய்யுணும்ன்னு என்னா அவசியம் இருக்குன்னு வெங்குவும் கேட்டுப் பாத்துச்சு. இப்பல்லாம்
நகெ நெட்டுப் போடுறதெல்லாம் பேஷன் இல்லன்னும், இப்பிடி அலங்கார செட்டு வாடவைக்கு எடுத்துப்
போடுறதுதாங் பேஷன்னும் சொன்னா நிரஞ்சனி. அதெ கேட்டுப்புட்டு, அதுக்கென்ன வாடகெ முந்நூறு
நானூறு ஆவுமான்னு கேட்டாரு சுப்பு வாத்தியாரு. அதெல்லாம் ரண்டாயிரம், மூவாயிரம் ஆவுமுன்னா
நிரஞ்சனி. சுப்பு வாத்தியாரு அப்போ இருந்த நெலைக்கு அந்தத் தொகையெ அதிகமா இருந்துச்சு.
லட்சம் லட்சமா கலியாணத்துக்குத் தூக்கிக் கொடுத்தது பெரிசா தெரியல. ஆனா இப்போ ஆயிரத்துக்கும்
ரண்டாயிரத்துக்கும் கணக்குப் பாத்து செய்ய வேண்டிய நெலையில இருந்தாரு அவரு. அதென்ன
வாடகெ செட்டு நகையோட வெலையே அம்மாந்தாம் இருக்கும், அதுக்கு வாடவெயும் அம்மாம்ன்னா
அது வேற புரியாம கொழம்புனாரு சுப்பு வாத்தியாரு.
சுப்பு வாத்தியாரோட கொழப்பத்துக்கான
தெளிவையும் நிரஞ்சனி கொடுத்தா. கெராமங்கள்லத்தாம் ரண்டாயிரம் மூவாயிரத்துக்கு அலாங்கார
செட்டு நகைய வாங்கி எரநூத்துக்கும், முந்நூத்துக்கும் வாடகைக்கு விடுவாங்க, டவுன்ல
இருவதாயிரம், முப்பதாயிரம்ன்னு அலாங்கார செட்டுகள வாங்கி ரண்டாயிரம், மூவாயிரம்தான்னு
வாடகைக்கு விடுவாங்கன்னா அதுக்கு ஒரு வெளக்கத்தக் கொடுக்குறாப்புல. கலியாணப் பொடவைக்கு
எடுப்பா எந்த நகெ செட்டு பொருத்தமா இருக்குமுன்னு திருவாரூர்ல பாத்து அதெ படம் எடுத்து
பாலாமணிக்கு அனுப்பி வெச்சதாவும், அதுக்குப் பாலாமணிகிட்டெ ஒப்புதலும் வாங்கிட்டதா
சொன்னா நிரஞ்சனி.
நிரஞ்சனி பேசப் பேச சுப்பு வாத்தியாருக்கு
தாங்க முடியாத எரிச்சலா வந்துச்சு. ரண்டு காரணங்களால அவரால அந்த எரிச்சல காட்ட முடியல.
ஒண்ணாவது காரணம்ன்னு பாத்தா அவரு நிரஞ்சனியோட அப்பாவான யோகிபாய்க்கிட்டெ மூணு லட்சத்தெ மூணு வட்டிக்குக் கடனா வாங்கியிருந்தாரு.
ரண்டாவது காரணம்ன்னு பாத்தா பாலாமணித்தாம் அலங்கார நகெ செட்டுன்னு வேணும்ன்னு நிரஞ்சனி
சொன்னதெ கேட்டு அதெ மறுக்க முடியாத நெலையில இருந்தாரு. இப்படி சம்பந்தம் இல்லாத எடத்துலேந்தெல்லாம்
வர்ற நெருக்கடிக்கு பதிலச் சொல்ல முடியாத நெலைக்கு ஆளாயி கடெசீயா சுப்பு வாத்தியாரு
அதுக்கு ஒத்துக்குறாப்புல ஆயிடுச்சு.
அந்த நகெச் செட்ட எடுக்குறதுக்கு இருந்த
வேலையை எல்லாம் போட்டுப்புட்டு விகடுதாங் திருவாரூரு போவ வேண்டியதா இருந்துச்சு.
மழை வேற அடிக்கடிப் பேஞ்சு அந்தாண்ட இந்தாண்ட நவர முடியாம அடிச்சிச்சு. அந்த மழையில
சாயுங்காலமா சுப்பு வாத்தியாரோட டிவியெஸ்ஸ எடுத்துக்கிட்டு நிரஞ்சனி சொன்ன விலாசத்துல
காசியக் கட்டிட்டு மழையோட மழைய நனைஞ்சிக்கிட்டே அலங்கார நகெ செட்ட வாங்கி வந்தாம்
விகடு.
அலங்கார நகெ செட்டுச் சம்பந்தமான கொழப்பம்
முடிவுக்கு வந்து, கலியாணப் பலவாரத்துக்கான அடுத்தக் கட்டத்துல நின்னாரு சுப்பு வாத்தியாரு.
கலியாணத்துக்கான பலவாரத்தெ வூட்டுல போட்டுக் கொடுத்த காலம் வேற மாறிப் போயிருந்துச்சு.
பெரும்பாலான கலியாணங்கள்ல இப்போ கடையிலத்தாம் வாங்கிக் கொடுக்குறாங்க. வேலங்குடி
பெரியவரு உசுரோட இருந்து நடமாட்டமா இருந்திருந்தா நெலமையே வேற. அவரு கலியாணத்துக்கு
முங்கூட்டியே வந்து பலவாரத்தப் போட்டுக் கொடுத்துப்புட்டுத்தாம் மறுவேல பாப்பாரு.
அநேகமா அவரு போயிச் சேந்ததுக்குப் பின்னாடி பலவாரம்ன்னா கடெங்றதெ கதியாயிடுச்சு. அவரு
நடமாட்டமா இருந்த காலம் வரைக்கும் எந்தக் கலியாணத்துக்கும் யாரும் பலவாரம்ன்னா கடைக்குப்
போவல. கிட்டதட்ட அவரு நடமாட்டம் கொறைஞ்ச காலமும், சனங்க கலியாணப் பலவாரம்ன்னா கடைக்குப்
போற காலமும் ஒண்ணா நடந்துச்சுன்னு கூட சொல்லலாம். அதுக்கு மின்னாடி வரைக்கும் கலியாணப்
பலவாரத்தெ கடையில வாங்கிக் கொடுத்தா அதெ கேவலமா பாக்குற ஒரு மனநெல இருந்துச்சுன்னு
சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க. இப்போ சொல்றப்போ அதெல்லாம் ஒரு காலம்ன்னு சொல்றதெ
வேறு வழியில்ல.
நெலமெ இப்போ நெருக்கடிய இருந்தாலும் கலியாணப்
பலவாரத்துக்கான இனிப்பு காரத்தைச் சுப்பு வாத்தியாருக்கு திருவாரூரு சிவராமு கடையில
வாங்கிக் கொடுக்கணும்னுத்தாம் ஆசெ. அவருக்குப் பிடிச்ச கடெ அதுதாங். ஒருவேள விநாயகம்
வாத்தியாரு உசுரோட இருந்திருந்தா அந்தக் கடையெ விட்டுட்டு வேற கடையில சுப்பு வாத்தியாரால
வாங்கியிருக்க முடியாது. காசில்லன்னு சொன்னாலும் அவரு காசியப் போட்டு வாங்கிக் கொடுத்திருப்பாரு.
சுப்பு வாத்தியார்ர விட விநாயகம் வாத்தியாரு சிவராமு கடைக்கு வெறி பிடிச்ச ரசிகரு.
இப்போ சுப்பு வாத்தியாரு அங்க கொஞ்சம் வெல கூடுதலா இருக்கும்ன்னு யோஜனெ பண்ணுற நெலைக்கு
வந்துச் சேந்திருந்தாரு. கையில இருக்குற காசிய வெச்சுக் கலியாணத்து வரைக்கும் ஓட்டிட
முடியுமாங்ற கவலெ வேற அவர்ர வாட்டி எடுத்துச்சு. அடிக்கடி வேட்டியத் தூக்கிக்கிட்டு
கால் சட்டெ பையில வெச்சிருக்குற பணத்தெ எடுத்து திரும்ப திரும்ப எண்ணிப் பாத்தாரு.
அவரு எத்தனெ மொறை எடுத்து எண்ணிப் பாத்தாலும் பணம் கொறைஞ்சிட்டெ வந்துச்சே தவுர கூடுனாப்புல
தெரியல.
பேசாம கலியாணப் பலவாரத்தெ கூத்தாநல்லூர்லயே
ஒரு கடையில பாத்து வாங்கிக் கொடுத்துப்புடுவோம்ன்னு ஒரு முடிவுக்கு வந்து மவனெ அழைச்சுக்கிட்டு
டிவியெஸ்லப் போயி ரண்டு மூணு கடையில வெசாரிச்சாரு. அதுல சில செளரியங்களும் இருந்துச்சு.
பலவாரத்துக்கு அச்சாரம் பண்ண ஒரு நாளு, அதெ எடுக்க இன்னொரு நாளுன்னு ரண்டு நாளு அலைய
வேண்டியதில்ல. பலவாரத்துக்கான அச்சாரத்தெ பண்ணிப்புட்டா, கலியாணம் முடிஞ்சி வர்றப்போ
வர்ற வழியிலத்தாம் கூத்தாநல்லூரு இருக்குறதால பலவாரத்தெ அப்பிடியே கல்யாண வேன்ல போட்டுக்
கொண்டாந்துப்புடலாம்ன்னு கணக்குப் பண்ணாரு சுப்பு வாத்தியாரு. அத்தோட மழை வேற பேஞ்சிக்கிட்டெ
இருந்ததால திருவாரூர்ன்ன மழையில நனைஞ்சிக்கிட்டு டிவியெஸ் பிப்டியிலல மெனக்கெட்டு கொண்டு
வாரணுங்றதையும் யோஜனெ பண்ணாரு. அந்த வகையில பாத்தப்பவும் அவருக்குக் கூத்தாநல்லூர்ல
வாங்குறது ரொம்பச் செளரியமா பட்டுச்சு.
நாலைஞ்சு கடைங்க வெசாரிச்ச பெற்பாடு கேயெம்ட்டி
ஸ்வீட்ஸ் கடையில கிலோ நூத்து இருவதுக்கு வாங்கிக்கிடலாம்ன்னு சொன்னதுதாங் கம்மியா
இருந்துச்சு. அந்தக் கடையிலயே ஜாங்கிரி, பூந்தி, சந்திரகலா, லாடு, இனிப்புச் சேவுன்னு
இனிப்பு வகையறா இருவதஞ்சு கிலோவுக்கும், மிக்சர், காரச்சேவு, ஓல பக்கோடா, வெங்காய
பக்கோடா, காராபூந்தி வகையறா இருவத்தஞ்சு கிலோவுக்கும், முறுக்கு, அதிரசம், சீடை,
தட்டை சோமாசென்னு நாட்டுப் பலவாரம் நாப்பது கிலோவுக்கும் முன்பணத்தெ மட்டும் கொடுக்காம
மொத்தப் பணத்தையும் கணக்குப் பண்ணி எடுத்துக் கொடுத்தாரு. அத்தோட கலியாணம் முடிஞ்சி
வூட்டுக்கு பொண்ணு மாப்புள்ளையப் பாக்க வர்றவங்களுக்கு ஒரு ஜாங்கிரியும் கொஞ்சம்
மிக்சரும் வெச்சிக் கொடுக்குறாப்புல ரண்டுலயும் அஞ்சஞ்சு கிலோன்னு பத்துக் கிலோவுக்கும்
பணத்தெ கணக்குப் பண்ணி அதுக்கும் அச்சாரம் மட்டுமில்லாம மொத்தப் பணத்தையும் எடுத்துக்
கொடுத்தாரு. இத்து எல்லாத்தையும் நவம்பர் ரண்டாந் தேதி கலியாணத்த முடிச்சிட்டு வேன்ல
வார்றப்போ மத்தியானத்துக்கு மேல வாங்கிக்கிறதாவும், தயாரா தயாரு செஞ்சி வெச்சிப்புடணும்ன்னும்
சொன்னாரு கடைக்காரர்ட்ட.
கேயெம்டி கடைக்காரருக்குச் சந்தோஷமா போச்சு.
அவரு அறிஞ்ச வரைக்கும் மொத்த பணத்தையும் முன்பணமா கொடுத்து பலவாரம் ஆர்டர் பண்ண ஆட்களப்
பாத்ததில்ல போலருக்கு. அந்தப் பிரமிப்பு அவரு மெகாத்துல தெரிஞ்சிச்சு. அந்த நெனைப்போட
எதிர்பாக்குறதெ விட பெரமாதாம பண்ணித் தர்றதா சொன்னாரு. அப்ப சுப்பு வாத்தியாரு தாம்
வழக்கமா வாங்குற திருவாரூரு கடையப் பத்திச் சொல்லி ஆதங்கப்பட்டுக்கிட்டாரு. கையில
காசி இருப்பு போதாதலத்தாம் வெலைக் கம்மியா இருக்கும்ன்னு வந்ததையும் மறைக்காமச் சொன்னாரு.
அதெ கேட்டுப்புட்டு வெலை கம்மின்னு நெனைக்க முடியாத அளவுக்குத் தரமா செஞ்சுத் தர்றதா
கடைக்காரரு சத்தியம் பண்ணாத கொறையா சொன்ன பெற்பாடுதாங் சுப்பு வாத்தியாருக்கு மனசுல
கொஞ்சம் திருப்தி வந்துச்சு.
இந்தப் பலவாரத்தையெல்லாம் கலியாணம் முடிஞ்சி
வேன்ல வர்றப்போ ஞாபவமா எடுத்துட்டு வந்து வூட்டுல சேத்துட வேண்டியது விகடுவோட பொறுப்புன்னு
சொல்லி அவனெ கடைக்காரருக்கு அடையாளமும் காட்டி விட்டாரு சுப்பு வாத்தியாரு. கடைக்காரரு
இப்போ விகடுவுக்கும், சுப்பு வாத்தியாருக்கும் நெறைய அல்வாவ எலையில வெச்சி ஓரத்துல
கொஞ்சம் மிக்சர்ர வெச்சிக் கொடுத்தாரு. அப்பங்காரரு இருக்குற நெலையில அதெ வாங்கித்
தின்னு அதுக்குப் பணம் கொடுக்கணுமே யோஜனெ பண்ணிட்டு நாசுக்காக வாணாம்ன்னாம் விகடு.
அதெ புரிஞ்சிக்கிட்டவரு போல கடைக்காரரு சொன்னாரு, "எம்மாம் ஸவீட்டுக் காரம்
வாங்குதீயே மொத்தப் பணத்தையுமே மும்பணமா கொடுத்து! இத்து அந்த மருவாதிக்காகத்தாம்.
காசில்லாம் கெடையாது!"ன்னு. அதுக்குப் பெறவுத்தாம் விகடு அதெ கையில வாங்குனாம்.
விகடு அந்த அல்வாவ ஆசை தீர அதெ சாப்பிட்டாம்.
கலியாணம் ஆயி கொழந்த பொறந்த பிற்பாடும் அவனுக்கு இன்னும் அல்வா திங்குற ஆசெ மட்டும்
போவயே யில்ல. சின்னப் புள்ளையில அப்பங்காரரு வாங்கித் தந்தப்போ எப்பிடி ஆசை தீர சாப்புட்டான்னோ
அதுல இம்மி கூட கொறையாம கொழந்தைத் தனமா சாப்புட்டாம்.
சுப்பு வாத்தியாரு அதெ பாத்துக்கிட்டெ
இருந்தவரு அவருக்குக் கொடுத்த அல்வாவையும் அவ்வேங்கிட்டெ கொடுத்துச் சாப்புட சொன்னாரு.
கடைக்காரரு அதெ பாத்துப்புட்டு, "வேணும்ன்னா இன்னும் கொஞ்சம் கொடுக்குறேம்ங்யா!
நீஞ்ஞ ஏம் கொடுக்குதீயே? சுகரா?"ன்னாரு. அதுக்கு, "நமக்கு யிப்போ சாப்புடுறாப்புல
வவுறு யில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. ஒடனே கடைக்காரரு ஒரு பொட்டணத்தெ போட்டு
அல்வாவக் கட்டிக் கையில கொடுத்தாரு. சுப்பு வாத்தியாரு அதெ கையில வாங்கி மஞ்சப் பையில
போட்டுகிட்டாரு. வூட்டுக்கு வந்ததும் மவ்வேங்கிட்டெதாம் அதையும் கொடுக்கணும்ன்னு.
ஒடனே அவருக்குப் பேத்தியோட ஞாபவம் வந்ததும் பேத்திக்கிட்டெ கொடுக்குறதா மவ்வேனுக்குக்
கொடுக்குறதான்னு கொழப்பம் வந்துடுச்சு. அந்தக் கொழப்பத்த அவரால தீத்துக்க முடியல.
அந்தக் கொழப்பத்தோடயே அல்வாவச் சாப்புட்டுட்டு இருந்த மவனெப் பாத்தாரு. இன்னும் சின்னப்புள்ள
தனமாவே இருக்குறானேங்ற மாதிரிக்கி மனசுல அவனெ பாக்குறப்ப ஏக்கமா இருந்துச்சு சுப்பு
வாத்தியாருக்கு. அநேகமா எப்போ எங்க யாரு வாங்கிக் கொடுத்தாலும் அவ்வேம் கொழந்தைத்
தனமா ரசிச்சு ருசிச்சுச் சாப்புடற கடெசீ அல்வாவ அதுதாங் இருக்கும்ன்னு அவருக்கும் தெரியல,
அதெ சாப்புட்டுக்கிட்டு இருக்குற விகடுக்கும் தெரியல.
அடுத்தடுத்து கலியாணத்துக்குச் செய்ய வேண்டிய
வேலைக சுப்பு வாத்தியாரோட மனசுல சொழண்டு அடிச்சிது.
அடுத்த வேலையா கலியாணத்துக்குன்னு தெரு
சனங்க வர்ற ரண்டு வேன எடுக்கலாமா? ஒரு பஸ்ஸ எடுக்கலாமா? எதுக்குக் காசி கொறைவா இருக்கும்ங்ற
கணக்கெப் போட ஆரம்பிச்சி ரண்டு எடத்துலயும் வெசாரிச்சதுல வேனுக்கார்ரேம் வேனு ஒண்ணுக்கு
ஆறாயிரத்தெ கேட்டு ரண்டுக்கும் பன்னெண்டாயிரம் கேட்டாம். பஸ்ஸூக்காரென வெசாரிச்சதுக்கு
பத்தாயிரமும் படிக்காசா நானூத்தும் கேட்டாம். சுப்பு வாத்தியாரு விகடுவெ அழைச்சிட்டுப்
போயி பஸ்காரனுக்குப் பணத்தெ கொடுத்து பத்தாயிரத்துல படிக்காசியோட சேத்து முடிச்சிக்கச்
சொன்னாரு. அத்தோட அதுக்குப் பெறவு பைசா காசிக் கொடுக்குறதுக்கும் தம்பிடி இல்லன்னாரு.
பஸ்ஸூக்கார்ரேம் ஒத்துக்கிட்டாம். அந்தப் பத்தாயிரம் காசியையும் ஒரே நூத்து ரூவா கட்டா
எடுத்து வெச்சாரு.
"முன்பணமும் இதுதாங், முடிவுப் பணமும்
இதுதாங். படிக்காசுலேந்து எல்லாக் காசியும் இதுல இருக்கு. அதெயும் சேத்து நீஞ்ஞளே கோடுத்துப்புடுங்க!
நாளைக்கி காசின்னு யாரும் நம்மகிட்டெ வந்து நிக்கப்படாது!"ன்னு புக்கிங் ஆபீஸ்ல
சொல்லிப்புட்டு மவ்வேங்கிட்டெ பஸ்காரனோட போன் நம்பர்ர வாங்கி அதெ பரமுவோட அப்பாவப்
பாக்குறப்போ ஞாபவமா கொடுக்கணும்ன்னு சொன்னாரு. விகடு அதெ குறிச்சிக்கிட்டு ஊருக்கு
வந்து பரமுவோட அப்பாவப் பாத்தப்போ அந்த நம்பர்ர கொடுத்தாம்.
அப்போ சுப்பு வாத்தியாரு பரமுவோட அப்பாவப்
பாத்துச் சொன்னாரு, "நாம்ம சனிக்கெழமெ மத்தியானத்துக்கு மிந்தியே குடும்பத்தோட
கெளம்பிடுவேம். மறுநாளு கலியாண நாளு அன்னிக்கு காலையில யாரும் வூட்டுல இருக்க மாட்டேம். நீஞ்ஞத்தாம் நம்ம குடும்பத்துச் சார்பா நின்னு தெருச்
சனங்க எல்லாத்தையும் பஸ்ல ஏத்திக் கொண்டாந்து திரும்ப பத்திரமா பஸ்லே்நது எறக்கிப்
புடணும். பஸ்ஸுகாரங்கிட்டெ அடிச்சிச் சொல்லிட்டேம், காலங்காத்தால அஞ்சு மணிக்கெல்லாம்
வாள்பட்டறைக்கு மின்னாடி வந்து நிக்கணும்ன்னு. செரியா வந்துப்புடுவாம். மழெக்காலமா
இருக்குறதால சனங்க கொஞ்சம் மின்ன பின்ன கெளம்பும். நீஞ்ஞத்தாம் நின்னு பாத்துப் பதனமா
சூதனாமா அழைச்சாரணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதெ வுடுங்க வாத்தியார்ரே! நம்மப்
பொறுப்புல விட்டுட்டீங்களே! கலியாணத்து அன்னிக்குப் பாருங்க எப்பிடிக் கொண்டாரேம்ன்னு?
யாரு இந்தக் காலத்துல பஸ்ஸூல்லாம் எடுத்துக் கொண்டார்ரா? சனங்க அதுக்கே அலறி அடிச்சிட்டு
பஸ்ல வந்து ஏறிடும்! ன்னா ஒரு பஸ்ஸூ பத்துதான்னுத்தாம் தெரியல! கூட்டம் தாங்காதுன்னுத்தாம்
நெனைக்கிறேம்!"ன்னாரு பரமுவோட அப்பா.
சுப்பு வாத்தியாருக்கு இன்னொரு பஸ்ஸூ கூட எடுத்துக் கொடுக்கத்தாம் ஆசே. ஆனா
அதுக்கான காசித்தாம் எங்க இருக்குன்னு அவருக்குத் தெரியல.
*****
No comments:
Post a Comment