6 Aug 2020

தும்மல்ல கெளம்புனாலும் தூத்தல்ல கெளம்பாதே!

செய்யு - 528

            ஆவணி மாசத்து ரண்டாவது ஞாயித்துக் கெழமென்னு வெச்ச மூர்த்தோலைக்குச் சொல்றதுக்குன்னு சுப்பு வாத்தியாரு ஒரு அலைச்சல் அலைய வேண்டியதா இருந்துச்சு. மூர்த்தோலைக்கு அழைக்குறதுக்குன்னு எரநூத்துப் பத்திரிகையையும் அடிச்சிக்கிட்டாரு. வேலங்குடி போனவரு குமாரு அத்தான் வூட்டுல சொல்லிட்டு அப்பிடியே சின்னவரு வூட்டுக்கும் போயிச் சொன்னாரு. சொல்லிப்புட்டுப் பத்திரிகையையும் வெச்சாரு. மாப்புளப் பாக்குறதுக்கு வாராட்டியும் நாம்ம சொல்றதெ சொல்லிடுவோம்ன்னு சொல்ல போனப்போ, அன்னிக்குன்னு பாத்து ஒரு முக்கியமான வேல வந்துட்டதால வார முடியலன்னு ஒரு சாமாதானத்த சின்னவரு சுப்பு வாத்தியாருகிட்டெ கதெ அளந்தாரு. சுப்பு வாத்தியாரு அதுக்கு ஒண்ணும் கருத்துச் சொல்லாம கெளம்பிட்டாரு. அது அப்பிடியே முக்கியமான சோலியா போயிருந்தாலும் பெறவு ஒரு நாளு வந்து வெசாரிச்சிட்டுப் போயிருக்கலாமேன்னு நெனைச்சிக்கிட்டாரு. அடுத்ததா விருத்தியூருக்கும், கோவில்பெருமாளுக்கும் போயிச் சேதியச் சொல்லிட்டு, வாழ்க்கபட்டு, தேன்காடு, பாகூரு, சிப்பூரு, கொல்லம்பட்டின்னு ஒரு சுத்து வந்து சேதியச் சொல்லிப் பத்திரிகையெ வெச்சி முடிச்சாரு.
            சென்னைப் பட்டணத்துல இருக்குற அக்கா மவன்களுக்குப் போன்ல சொன்னதோட நிறுத்திக்கிட்டாரு. பத்திரிகைய மட்டும் அவுங்கவுங்க பேர்ரப் போட்டு தபால்ல போட்டு வுட்டுப்புட்டாரு. அங்கப் போயிட்டு வார்றதுன்னா அத்து ரண்டு நாளு ஆயிடும்ன்னு கல்யாணப் பத்திரிகெ வைக்குறப்போ பாத்துகிடலாம்ன்னு நெனைச்சுக்கிட்டாரு. அடுத்தால மூர்த்தோல பத்திரிகைய எடுத்துக்கிட்டு பாக்குக்கோட்டை, தஞ்சாவூரு, திருச்சின்னு ஒரு சுத்த அடிச்சி மாப்புள வூட்டுச் சம்பந்தமான ஒறவுகளுக்கும் சேதியச் சொல்லி முடிச்சாரு. அந்தப் பக்கம் அழைச்சிட்டுப் போறதுல சித்துவீரன் கூட நின்னு ஒத்தாசிப் பண்ணி டிவியெஸ் எக்செல்லயே வெச்சிக் கொண்டுட்டுப் போனுச்சு. சித்துவீரன் மூர்த்தோல சம்பந்தமா எங்க அழைச்சிட்டுப் போயி வூடு கொண்டாந்துச் சேத்தாலும் எரநூத்து முந்நூத்து ரூவாய்க்கிப் பெட்ரோலையும் வாங்கி வண்டியில அன்னன்னைக்கு ஊத்தி வுட்டாரு சுப்பு வாத்தியாரு, பின்னாடி ஒரு பேச்சு எக்குத் தப்பா வந்துடக் கூடாதுன்னு.
            இதுக்கு இடையில மூர்த்தோலைக்கான தேதி நெருங்க நெருங்க விகடு வடவாதி ஸ்டேட் பாங்கிக்கும், ஆர்குடி சொசைட்டிக்கும் அலைஞ்சிட்டு இருந்தாம். ஆர்குடி சொசைட்டியில சொல்லி விண்ணப்பம் பண்ணி ஆவணி முடியறதுக்குள்ள லோனைப் போட்டுத் தந்துடுங்கன்னு கேட்டுகிட்டாம். அவனுக்குத் தெரிஞ்ச பழக்கமான வாத்தியாருமாருகள விட்டும் அதுக்குத் தோதா சொசைட்டியில சொல்ல வெச்சாம். ஆர்குடிக்கு இது சம்பந்தமா அஞ்சாறு தடவெ அவ்வேன் அலைஞ்சு திரிஞ்சி அந்தக் காரியத்தெ முடிச்சாம்.
            வடவாதி ஸ்டேட் பாங்கிலத்தாம் காரியம் லேசுல முடிவேனான்னு இருந்துச்சு. அந்தப் பாங்கிக்குத் தெனமும் பள்ளியோடம் வுட்டு சாயுங்காலமா போயிடுவாம். வடவாதி பாங்கியில பாங்கிக்கான நேரம் முடிஞ்சாலும் கணக்கெ முடிச்சிட்டு அவுங்க கெளம்ப எட்டு மணி ஒம்போது மணி வரைக்கும் ஆவும். அது வரைக்கும் அங்கயே காத்துக் கெடந்து மேனேஜரு பாக்க வர்றச் சொல்ற வரைக்கும் கெடப்பாம். ஒரு வாரம் இப்பிடி அலைஞ்சத்துக்குப் பிற்பாடு மேனேஜரு பீல்ட்டு ஆபீசர்கிட்டெ அனுப்பி வெவரங்களைப் பாத்து வாங்கச் சொன்னாரு. அவரு ஒவ்வொண்ணாப் பாத்துட்டு சிபில் ஸ்கோர் கூடுதலா இருக்குறாப்புல இருக்கணும்ன்னா மூணு வருஷத்துக்கான வருமான வரி செலுத்துனதுக்குகான வெவரங்களையெல்லாம் கொண்டான்னதுல விகடு ஆர்குடி ஆபீஸூக்கு அலைஞ்சு ஏயியோவப் பாத்து அதெ வாங்குறதுக்கு நாலு நாளு ஆனுச்சு. ஒரு வழியா அதெ வாங்கிக் கொண்டு போயிக் கொடுத்தாம். ஒரு கட்டத்துல அவனுக்கே சந்தேகமாத்தாம் இருந்துச்சு, இப்பிடி அலைய வுடறது கடனெ கொடுக்காம அடிக்கிறதுக்கான்னு. அதெ நெனைச்சப்போ இங்க கடன் கெடைக்கலன்னா மேக்கொண்டு என்னத்தெ பண்ணுறதுங்ற பயமும் வந்துடுச்சு.
            பாங்கியில கேட்ட எல்லாத்தையும் மொறையா கொடுத்து முடிச்சி அவுங்க பதிலச் சொல்றதுக்கு ஒரு பாஞ்சி நாளு வரைக்கும் எடுத்துக்கிட்டாங்க. அது வரைக்கும் ஒவ்வொரு நாளும் விகடு பாங்கியில போயித் தவமாய்த் தவமிருந்தாம். ஒரு வழியா எல்லாம் முடிஞ்சி ஆறு லட்ச ரூவா கடன் தரலாம்ன்னு மேனேஜரு முடிவு பண்ணப்போ, அதெ கொஞ்சம் கூட்டித் தர முடிஞ்சா உபயோகமா இருக்குமுன்னு கேட்டுப் பாத்தாம் விகடு. மேனேஜரு அப்போ இவ்வேம் நாயலைச்சல் பேயலைச்சல் அலைஞ்சிட்டுக் கெடந்ததெப் பாத்துப்புட்டு, திடீர்ன்னு ஒரு யோசனப் பண்ணிப் பாத்துட்டு சுப்பு வாத்தியாரையும் ஜாயிண்ட் அடிச்சா ஒம்போது லட்சத்துக்குத் தர்லாம்ன்னாரு. அப்பிடின்னா இன்னும் கொஞ்சம் உபயோகமா இருக்குமேன்னு நிரப்புன விண்ணப்பத்த அந்தாண்ட தூக்கிப் போட்டுட்டு, சுப்பு வாத்தியார்ர அழைச்சுக்கிட்டு ரண்டு நாளுக்கு பாங்கிக்கு அலைஞ்சு புதுசா ஒரு விண்ணப்பத்தப் போட்டு அதெ ஒம்போது லட்சக் கடனா மாத்துனாம். எல்லாத்தையும் தயாரு பண்ணி முடிச்சி வெச்சி மூர்த்தோல முடிஞ்சி பிற்பாடு, ஆவணி மாசத்து மூணாவது வார வாக்குல போட்டுத் தந்துப்புடுங்கன்னு கேட்டுக்கிட்டாம் விகடு.
            சொசைட்டியில ஆறு லட்சம், வடவாதி ஸ்டேட் பாங்கியில ஒம்போது லட்சம்ன்னு பதினைஞ்சு லட்சத்த பெரட்டுறதுக்கான எல்லா வேலையையும் செஞ்சு முடிச்சாம் விகடு. சுப்பு வாத்தியாரு பாங்கிக் கணக்குல அவரோட ரிட்டையர்டு ஆனதுக்குக் கெடைச்சப் பணம், விகடுவோட சம்பாத்தியத்துல சேந்தப் பணம்ன்னு போட்டு வெச்சிருந்த பன்னெண்டு லட்சமும் சேர்ந்தா இருவத்து ஏழு லட்சத்துக்கான பணத்தெ பெரட்டுற கணக்கு முடிஞ்சிது. அத்தோட சுப்பு வாத்தியாரு போஸ்ட் ஆபீசு டிபாசிட் கணக்கு, ஆர்டி கணக்குன்னு போட்டு வெச்சிருந்ததுல அதுலேந்து ஒரு லட்ச ரூவா தேறுனுச்சு. மிச்ச அஞ்சு லட்சத்தெ மூணு காசு வட்டிக்கு யாராச்சும் கடன் தருவாங்களான்னு பாத்து அலைஞ்சிட்டுக் கெடந்தாரு சுப்பு வாத்தியாரு. அதுக்கு வடவாதியில வட்டிக்கு விடுற யோகிபாய பிடிச்சாரு. அவரு மூணு வட்டிக்கு மூணு லட்சத்தெ தர்றதாவும், மாசம் பொறந்தா சாக்கப் போக்குச் சொல்லாம ஒம்பதாயிரத்தெ எடுத்து வெச்சிடணும்ங்ற நிபந்தனையோட தர்றதா சொன்னாரு. அந்தப் பணத்தெ மூர்த்தோல முடிஞ்சி கலியாணம் நெருங்குறப்ப வாங்கிக்கிடுறதா சொல்லிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            இன்னொரு ரண்டு லட்சத்துக்குதாங் என்ன பண்ணுறதுன்னு தெரியாம மண்டெய ஒடைச்சிக்கிட்டு யோஜனெ பண்ணிட்டு முழிப் பிதுங்கிப் போயித் தனக்குத் தெரிஞ்ச ஒரு எடம் வுடாம அலைஞ்சுட்டுக் கெடந்தாரு. அதுக்கு மட்டும் ஒரு வழி கெடைக்காததால விகடு ஆயியியோட நகையெ அடவு வெச்சிக்கிடாம்ன்னு அவரோட அலைச்சல மட்டுப் பண்ணுனாம். சுப்பு வாத்தியாரு மொதல்ல அதுக்கு ஒத்துக்கிட மாட்டேன்னுட்டாரு. இருந்தாலும் வேற வழியையும் பாப்பேம், முடியாட்டியும் கடெசீ வழியா அத்து இருக்கட்டுங்ற முடிவுக்கு வந்தாரு. பணத்த பொரட்டுறதுக்கான அத்தனெ ஏற்பாடுகளையும் பண்ணி இப்படியா முடிஞ்சிது.
            ஆவணி மாசத்து ரெண்டாவது ஞாயித்துக் கெழமெயும் நெருங்குனுச்சு. மூர்த்தோலைக்கான அத்தனெ வேலைகளையும் சன்னம் சன்னமா பாத்துக்கிட்டுக் கெடந்தாங்க விகடுவும், சுப்பு வாத்தியாரும். வூட்டுக்கு மின்னாடி பெரிசா பந்தல போட்டு ஆனுச்சு. மாடியிலயும் மழை பேஞ்சாலும் பெரச்சனெ இருக்கக் கூடாதுன்னு ரண்டு பக்கமும் வாட்டமா இருக்குறாப்புல ஏ டைப்புல மூங்கில வெச்சிக் கட்டி ஒரு கொட்டாயாவே மாடி முழுக்கவும் போட்டாரு சுப்பு வாத்தியாரு.
            ஆவணி மாசத்து ரண்டாவது ஞாயித்துக் கெழம மூர்த்தோலைக்கு மொத நாளு சனிக்கெழம மத்தியானம் ரண்டு மணிக்கெல்லாம் முருகு மாமாவோட கடைக்குப் போயி ஒரு டாட்டா ஏசிய வெச்சு தேவையான நாற்காலிக பெஞ்சுக அத்தனையையும் கொண்டாந்து எறக்கிட்டு, மூணு மணி வாக்குல மூர்த்தோலைக்கும் சடங்கு சுத்துறதுக்கும் தேவையான சாமாஞ் செட்டுகள வாங்க சுப்பு வாத்தியாரு விகடுவெ பின்னாடி பிடிச்சிப் போட்டுக்கிட்டு திருவாரூருக்கு டிவியெஸ்ல கெளம்புனாரு.  இவுங்க கெளம்புற நேரமா பாத்து மழெ நச நசன்னு ஆரம்பிச்சது. அதெ பெரிசு பண்ணாம நனைஞ்சுகிட்டெ ரண்டு பேத்தும் போனாங்க. இனுமே இருக்குற நேரம் கொஞ்சமா இருக்குறதால தூத்தல பாக்க முடியாதுன்னு நெனைச்சிட்டுக் கெளம்புனதுதாம் அது.

            திருவாரூரு போயிச் சேர்ற வரைக்கும் நசநசன்னு தூறுன மழெ நின்னபாடில்ல. ரண்டு பேத்தோட சட்டையும் நனைஞ்சி ஒடம்போட ஒட்டிப் போயிக் கெடந்துச்சு. நசநசன்னு பேஞ்ச மழையில ரோட்டுல கெடந்ததெல்லாம் போயிட்டுக் கெடந்த வாகனங்களோட டயர்ல மிதிப்பட்டு கூழாப் போயி டவுனெ நாறிக் கெடந்துச்சு. மொதல்ல ரண்டு பேருமா ஜவுளிக் கடையில நொழைஞ்சி தேவையானதெ எல்லாத்தையும் எடுத்து முடிச்சாங்க. அடுத்ததா மளிகைக் கடையில வேலைய முடிச்சி, பழ வகெ, வெத்தலைப் பாக்கு, பந்தி பரிமாறதுக்குத் தேவையான தாளு விரிப்புக, பேப்பர் கப்புக எல்லாத்தையும் வாங்கிக்கிட்டுக் கெளம்புன்னா டிவியெஸ்ஸோட மின்னாடி வைக்குறாப்புல மூணு பெரிய யேவாரி பையி நெரம்பி, வண்டியோ ரண்டு பக்கமும் மாட்டி வுடுறாப்புர ரண்டு பெரிய யேவாரிப் பையி அளவுக்குச் சாமாஞ் செட்டுக இருக்கு. அத்தோட விகடுவோ கையிலயும் ரண்டு பெரிய யேவாரிப் பையி அளவுக்கு சாமாஞ் செட்டுக இருக்கு. வண்டியில ஏறி உக்காந்து கெளப்புனா வண்டியப் பாக்குறதுக்கு சர்க்கஸ்கார்ரேம் வண்டியப் போல இருக்கு. அத்தனைக்கும் சேத்தாப்புல ஒரு ஆட்டோவ எடுத்திருந்தா செரியா இருந்திருக்கும்.
            கையில வண்டிய வெச்சுக்கிட்டு என்னத்தெ ஆட்டோவ எடுக்கணும்ன்னு சுப்பு வாத்தியாரு நெனைச்சாரோ என்னவோ, நசநரன்னு தூற்ர மழையப் பொருட்படுத்தாம, மவ்வேங்கிட்டெ, "எலேம்பீ! எல்லாத்தையும் மேல பாலீதீனு தாள்ளப் போட்டு ந்நல்லா மூடிருக்குல்லா. சூதானமா வெச்சிக்கிட்டு உக்காந்துக்கோ! மொல்லமா உருட்டிட்டுப் போயிடலாம்!"ன்னாரு. "செரிப்பா!"ன்னு பின்னாடி உக்காந்துகிட்ட விகடுவுக்குக் கால எங்க வைக்குறதுன்னு தெரியல, கைய எங்க பிடிச்சிக்கிறதுன்னு தெரியல. சீட்டுக்கு ரண்டுப் பக்கமும் மாட்டி விட்டுருந்த பையத் தாண்டி அவனால பாதத்துத் தாங்கியில கால செரியா வைக்க முடியல. பின்னாடி உக்காந்துகிட்டு ரண்டு பக்கமும் மடியில பெரும் யேவாரிப் பைய வெச்சிக்கிட்டதுல்ல பையப் பிடிக்குறதா, பிடிமானத்துக்குப் பிடிக்குறதாங்றதும் புரியல.
            அத்தோட வண்டிய ஸ்டார்டு பண்ணுறப்பவே சுப்பு வாத்தியாரு தடுமாறிப் போயிட்டாரு. டிவியெஸ்ஸூ பிப்டிய ஸ்டாண்டு போட்டு நிப்பாட்டில்லா பெடலெ ஒரு சுத்துச் சுத்தணும். அதெ சுத்தணும்ன்னா மின்னாடி மாட்டி நடுவுல வெச்சிருக்குற பையிங்க இடிக்கிது. அந்த பைய எல்லாத்தையும் எறக்கி வெச்சிட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு பெறவு மாட்டிக்கிட்டு, விகடுவெ பின்னாடி ஏற வெச்சுக்கிட்டு ஆக்சிலேட்டர்ர கொடுத்த கெளம்பப் போற வண்டி கெளம்பாம நின்னுக்குது. பெறவு மறுக்கா மொதல்லேந்து விகடுவெ எறக்கி விட்டுப்புட்டு, பைய எறக்கி ஓரமா வெச்சிக்கிட்டு திரும்பவும் ஸ்டார்ட் பண்ணி திரும்பவும் ஏறி உக்காந்து வண்டி அது வேற ரண்டு மூணு தடவெ கெளம்ப மாட்டேம்ன்னு கெளம்புற நேரத்துல ஆப் ஆவுது. நசநசன்னு தூற்ர மழையில மழைத்தண்ணி வண்டியில எஞ்சின்ல எந்த எடத்துல பூந்துச்சோ தெரியல. ஸ்டார்ட் ஆவுறதுல அப்பப்போ பெரச்சனெ பண்ணுது.
            திருவாரூரு டவுன்லேந்து வண்டிக் கெளம்பி வாழவாய்க்காலுக்கு வர்றப்போ நசநசன்னு தூறிட்டு இருந்த மழெ பெருமழையப் பிடிச்சிடுச்சு. அடிச்சா மழெ மொகத்துல ஈட்டிய வெச்சுக் குத்துறாப்புல அடிக்கிது. சுப்பு வாத்தியாரு ஒதுங்க எடம் இருக்குறாப்புல ஒரு கடையப் பாத்து வண்டிய ஓரங் கட்டிப்புட்டாரு. திருவாரூருக்கு நாலு மணி வாக்குல வந்து ஏழு மணி வாக்குல காரியத்தெ முடிச்சி வாழவாய்க்கால்ல ஒதுங்குனவங்க வண்டிய எடுத்துட்டுக் கெளம்ப மழை எட்டு மணி வாக்குல ஒரு இடைவெளியக் கொடுத்துச்சு. நல்லதாப் போச்சுடான்னு வண்டிய நாலைஞ்சு தடவெ ஸ்டார்ப் பண்ணி ‍செருமப்பட்டு கெளப்பிட்டு மாங்குடி வாரதுக்குள்ள மறுமழெ பிடிக்கிது.
            திரும்பவும் எடம் பாத்து ஒதுங்கி பைய ஒவ்வொண்ணா எடுத்து வெச்சி நிக்க வேண்டியதா ஆயிடுச்சு. அதுவும் மழைன்னா மழெ பேய் மழைதாங். அந்த மழையில சட்டுன்னு கரண்டு நின்னுப் போவ எடமெல்லாம் இருட்டாயிடுச்சு. பாக்குற எடமெல்லாம் கருப்ப அப்பிடியே அப்பி வெச்சாப்புல இருக்கு. பக்கத்துல இருக்குற எவனாச்சும் ஒரு பையத் தூக்கிட்டுப் போனாலும் கண்டுபிடிக்க முடியாத கும்மிருட்டு. விகடு தன்னோட பையில இருந்த செல்போன்ல டார்ச்ச எடுத்து அடிச்சிக்கிட்டு ஒடனே உஷாராயிக்கிட்டாம்.  அங்கப் பிடிச்ச மழையும் ஒரு மணி நேரத்தத் தாண்டி அடிக்கிது. "தும்மல்ல கெளம்புனாலும் தூத்தல்ல வெளியில கெளம்பக் கூடாதுன்னு சொல்லுவாவோடாம்பீ! அத்து உண்மையாப் போச்சுடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            கொஞ்சம் மழை கொறைஞ்சி தூத்தலா போட்ட நேரமா பாத்து, இதுல நனைஞ்சட்டுப் போனாலும் பரவாயில்லன்னு கெளம்புனா வண்டிய ஸ்டார்ட் பண்ண முடியல. சுப்பு வாத்தியாரு நொந்துப் போயிட்டாரு. விகடுவும் அவ்வேம் பங்குக்கு பெடல பிடிச்சி சுத்துறாங். பெறவு வண்டிய அந்தாண்ட இந்தாண்டன்னு வண்டியில ஏறி உக்காந்து சைக்கிள மிதிக்குறாப்புல மிதிச்சி பெரயத்தனம் பண்ணி முயற்சிப் பண்ணா வண்டிய ஸ்டார்ட் ஆனுச்சு. ஒடனே வேக வேகமா அத்தனெ பைகளையும் மாட்டிக்கிட்டு சுப்பு வாத்தியாரு பின்னாடி ஏறி உக்காந்துகிட்டு ஸ்டார்ட்டு ஆன வண்டிய நிப்பாட்டிப்புடாதேன்னு  கெளம்புனா ராயநல்லூர வர்றதுக்குள்ள மறு மழெ அடிக்கிது. அங்க கொஞ்ச நேரம் ஒதுங்கி, அப்பிடியே ஒவ்வொரு எடமா ஒதுங்கி ஒதுங்கி நின்னு வூட்டுக்கு வந்துச் சேர்றப்பப் பாத்தா மணி பத்தே முக்காலுக்கு மேல ஆயிடுச்சு. அதுக்குப் பெறவு சாமாஞ் செட்டுகள எடுத்து வெச்சி சாப்புடுறதுக்குள்ள மணி பன்னெண்டு ஆவுது.
            "ன்னடாம்பீ! இந்த மாதிரிக்கி நம்ம வாழ்நாள்ல சாமாஞ் செட்டுகள வாங்கிக்கிட்டு அல்லாடுனது ல்லடாம்பீ! நேரஞ் சரியில்லையா? நாம்ம எடுத்து முடிவு சரியில்லையான்னு வெளங்க மாட்டேங்குது!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            விருத்தியூரு பெரிம்மாவும், பெரிப்பாவும், தேன்காடு சித்தியும், கோவில்பெருமாள் நாது மாமாவும், நாகு அத்தையும் சாயுங்காலமா இவுங்க திருவாரூரு கெளம்புன பிற்பாடு வந்திருச்சுங்க. ‍அதுகளும் சாப்புட்டு முடிச்சிப்புட்டு பேச்சுல கலந்துக்கிடுதுங்க. பேச்சு பெரும்‍ பேச்சா போவுது. பேச்சுல பிடிச்சா வுடுறா சனங்களா அந்தச் சனங்க! அதெ எழுதப் பூந்தா இன்னொரு ராமாயணத்தையோ, மகாபாரதத்தையோ எழுதறாப்புல ஆயிடும்.
            "இந்த மாதிரி வேலைகள எல்லாத்தியும் இப்பிடியா உய்யத்துல வெச்சிக்கிடறது? ரண்டு நாளைக்கி மின்னாடியே வாங்கிப் போடுறது இல்லியா?"ன்னுச்சு நாது மாமா.
            "பழத்தெ எப்பிடி ரண்டு நாளுக்கு மின்னாடி வாங்கிப் போடுறது? வாங்குறதுதாங் வாங்குறோம் ஒண்ணா வாங்கிப்புடுவேம்ன்னு நெனைச்சதுல இப்பிடி ஆயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            இப்பிடி ஆளாளுக்குச் சாமாஞ் செட்டுகள வாங்கிட்டு வந்ததெப் பத்தி அந்த நேரத்துலயும் வுடாமப் பேசிட்டு அதுகளும் பேச்சுல சேந்துக்கிட்டதுல படுத்து கண்ண மூடுனப்போ மணி எப்பிடியும் ரண்டுக்கு மேல இருக்கும். மறுநாளு காலங்காத்தால எழும்பி சடங்கு சுத்துறதெ முடிச்சி மூர்த்தோலைக்குத் தயாராவணுங்ற நெனைப்புல சனங்க ஒவ்வொண்ணும் கண்ண முடினுச்சுங்க. அந்த ஒரு வேல மட்டும் காலையில இல்லன்னா விடிய விடிய சிவராத்திரியாவோ, வைகுண்ட ஏகாதசியாவோ ஆக்கியிருக்குமுங்க சனங்க.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...