கிராமங்களுக்கு வரும் சோதனைகள்!
கிராமங்களுக்கு வரும் சோதனைகளுக்கு அளவே
இல்லை. கிராமம் பாட்டுக்குப் பேசாமல் கிடக்கட்டும் என்றால் விட மாட்டார்கள். கிராமத்தை
மேம்படுத்துகிறேன் என்று ரோட்டைப் போடுவதில் ஆரம்பிக்கிறது முதல் சோதனை. ரோட்டைப்
போடுகிறேன் என்று பெயரில் போட்டார்கள், போடுகிறார்கள், போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்,
போட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று ரோடு போடப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
ஒன்றரை வருடத்துக்கு முன்பாக ரோடு போடப்
போகிறோம் என்று ஜேசிபியைக் கொண்டு வந்து வீட்டுப் படிகட்டுகளையெல்லாம் இடித்துத்
தள்ளினார்கள். சரிதான் வேலை சீக்கிரமாக ஆகி விடும் என்று நினைத்து வீட்டிலிருந்து ரோட்டுக்கும்,
ரோட்டிலிருந்து வீட்டுக்கும் இருசக்கர வாகனத்தை ஏற்றி இறக்கி, இறக்கி ஏற்றி அதில்
உள்ள சிரமத்தைப் பொருட்படுத்தாமல் இருந்தால் அதை அப்பிடியே பொருட்படுத்தாமல் தொடர
வேண்டியதாகி விட்டது.
பிறகு ஒரு ஒன்பது மாதத்துக்கு முன்பாக
மறுபடியும் ஜேசியைக் கொண்டு வந்து சாலையைப் பெயர்த்துப் போட்டு விட்டு அவர்களுக்கும்
அதுக்கும் சம்பந்தம் இல்லாதது போல் போய் விட்டார்கள். அதில் அப்பிடியே நடந்தப் பழகி
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பது போல சபரிமலைவாசிகளாகி விட்ட பிறகு அது குறித்த
சிரமம் யாருக்குத் தெரியாமல் போன பிற்பாடு ஆறு மாதத்துக்கு முன்பாக நெய்வேலிச் சாம்பலைக்
கொண்டு வந்து கொட்டி கலந்து விட்டுப் போனார்கள்.
தற்போது மூன்று மாதம் இருக்கும் ஜல்லியும்
அரளையுமாகக் கொண்டு வந்து கொட்டி விட்டுப் போய், ஒரு மாதம் கழித்து வந்து நிரவி
விட்டுப் போனார்கள். அதுவரைக்கும் அந்த அரளைகள் ரோட்டில் ஆங்காங்கே மலை முளைத்ததுப்
போல கிடந்ததை ஒரு புகைப்படம் எடுக்காமல் விட்டு விட்டேன். பிறகு இருபது நாள் கழித்து
ரோடு ரோலர் வந்து சமன்படுத்தி விட்டுப் போனது.
போன மாதத்தில் ஒரு நாள் என்ஜினியர் ஒருத்தர்
வந்து அங்கங்கே சரியாக ஜல்லியைக் கொட்டிச் சமன்படுத்தியிருக்கிறார்களா என்று நோண்டிப்
பார்த்து ஓரடி மெட்டல் ஸ்கேலால் அளந்துப் பார்த்துப் போட்டுப் போனார்.
போன வாரம் ஒரு அதிகாரி வந்து மறுபடியும்
அதே அளவை வேலையைப் பார்த்துப் கொண்டுப் போனார். அவர் இரண்டு ஆட்களை வைத்துக் கொண்டு
அங்காங்கே பார்வையிட்டுக் கொண்டே கொண்டே போனார். அதில் ஒரு ஆள் சாலையை நோண்டிக்
கொண்டுப் போக, அதை இன்னொரு ஆள் மெட்டல் ஸ்கேல் வைத்து அளவு பார்த்தார். அதை வேடிக்கைப்
பார்த்தபடி செல்பேசியில் படம் பிடித்துக் கொண்டார் அதிகாரி. அவர்கள் முன்னால் போகப்
போக பின்னால் அவருக்கான வாகனம் போய்க் கொண்டே இருந்தது.
இதற்கு மேல் ஒன்றரை ஜல்லியைப் போட வேண்டும்,
அதன் மேல் சிவப்புக் கப்பியை அடிக்க வேண்டும், அதன் மேல் தார் போட வேண்டும் என்று
நிறைய சொல்கிறார்கள். அதைக் கேட்க கேட்க மிரட்சியாக இருக்கிறது. அது ஒவ்வொன்றும்
நிகழ்வதற்கு சில மாதங்களோ, பல மாதங்களோ ஆகி விடும் என நினைக்கிறேன். அது குறித்து
நிகழ நிகழ எழுதுகிறேன். மொத்தத்தில் ஒரு கிராமத்தில் ஒரு ரோடு உருவாக இரண்டு வருடங்களுக்கு
மேலாகி விடும் என்பது ஒரு குத்து மதிப்பான குறைந்தபட்ச கால அளவாக இருக்கலாம். ஒரு மனுஷக்
குழந்தையைப் பெத்தடுக்க பத்து மாதம் ஆகிறதென்றால், ஒரு கிராமத்து ரோட்டைப் பெற்றெடுக்க
இரண்டு வருடங்களுக்கு மேலாவது ஆகும் போலிருக்கிறது.
ரோடு சும்மா கிடந்தாலும் கிடக்கும், இல்லையென்றால்
இப்பிடி ரோடு போடுகிறோம் என்ற இழுவை வேலைகள் வந்து பாடாய்ப் படுத்தும். நீங்கள்
உங்கள் ஊரில் நடந்த ரோடு வேலைகள் குறித்து எழுதுங்கள். ஊருக்கு ஊர் இது எப்படி வேறுபடுகிறது
என்பதைப் பார்ப்போம்!
*****
No comments:
Post a Comment