செய்யு - 527
ரெண்டாயிரத்து பதினாலாவது மாசம் ஆவணி மாசத்துல
நல்ல நாளா வர்ர ஒரு ஞாயித்துக் கெழமெயத் தேடிக் கண்டுபிடிச்சி மூர்த்தோலை வைக்குறதுன்னு
முடிவாச்சு. அதுக்குப் பெறவு சித்துவீரன் அடிக்கடி திட்டைக்கு சுப்பு வாத்தியாரோட
வூட்டுக்கு வர ஆரம்பிச்சிது. மூர்த்தோலைய நல்ல வெதமா பண்ணுங்றதுக்காக மெனக்கெடுறதா
அடிக்கடி வந்து கலந்துக்கிறதா சொன்னுச்சு. மூர்த்தோலை எழுதுற அன்னிக்குத் தேவையான
நாற்காலிக, பெஞ்சுக எல்லாத்தையும் அப்பங்காரரான முருகு மாமா வெச்சிருக்குற வாடகெ கடையிலேந்து
எடுத்துகிடலாம்ன்னுச்சு. அதெ சித்துவீரன் சொல்றதுக்கு மின்னாடியே அப்படித்தாம் முடிவெடுத்திருந்தாரு
சுப்பு வாத்தியாரு.
மூர்த்தோலைய எழுதப் போற வாத்தியாருக்கும்,
மூர்த்தோலை அன்னிக்குக் கொட்டப் போற மேள தாளத்துக்குக்கும் நல்ல வெதமா ஏற்பாடு பண்ணி
வுட்டுப்புடுறதா சொல்லி அதுக்கு முன்பணம் கொடுக்கணும்ன்னு பணத்தெயும் சித்துவீரன்
வாங்கிட்டுப் போனுச்சு. சுப்பு வாத்தியாருக்கு வேல மெனக்கெடு இல்லாம சுலுவா முடியுறாப்புல
இருந்துச்சு. காசு கூடவோ கொறைச்சலோ செலவானாலும் அலட்டல் இல்லாம போறதா அவரு நெனைச்சாரு.
மூர்த்தோலைக்கு எரநூத்து சொச்சம் பேத்து கலந்துப்பாங்கன்னு கணக்கு வெச்சு, எதுக்கும்
கொஞ்சம் உஷாரா கூடவே கணக்குப் பண்ணி எரநூத்து ஐம்பது பேத்துக்கான சாப்பாட்டுக்குச்
சமையல்கார்ர வெச்சித் தயாரு பண்ணிப்புடலாம்ன்னு பேசிட்டு இருக்குறப்ப சித்துவீரன் ஊடால
பூந்து ஒரு யோசனைய சொன்னுச்சு.
"அப்பிடில்லாம் ஒரு சமையல்காரனெப்
போட்டுச் செருமப்பட்டுக்கிட்டு கெடக்க வாணாம். ஒரு தேவையில ந்நல்லா சமைக்குற சமையக்கார்ரேம்
இன்னொன்ணுல சொதப்பிடுவாம். ஒண்ணு உப்பு அள்ளிக் கொட்டிப்புடுவாம், யில்லன்னா ஒரைப்ப
அள்ளிக் கொட்டிப்புடுவாம். அதெ வுட அவனுக்குச் சாமாஞ் செட்டுகள வாங்கிப் போட்டுக்கிட்டு
நாம்ம ஒரு ஆளு வேற பக்கத்துல கெடந்துக்கிட்டு மெனக்கெட்டுக்கிட்டும் அல்லாடிகிட்டும்
இருக்கணும். திருவாரூர்ல நமக்குத் தெரிஞ்ச ஆளு ஒருத்தெம் இருக்காம். எத்தனெ பேத்துக்குச்
சாப்பாடுன்னு சொல்லிப்புட்டா போதும் நேரத்துக்கு வண்டியில கொண்டாந்து எறக்கிப்புடுவாம்!
நாம்ம சமையலுக்குன்னு இஞ்ஞ ஒரு எடத்தெ ஏற்பாடு பண்ணித் தர்றணும், அதுக்கான சாமாஞ் செட்டுகள
வாங்கிப் போடணும், கூட ஒத்தாசைக்கு ரண்டு ஆள நிப்பாட்டணுங்ற அவசியமில்லாம போயிடும்
பாருங்க. சாப்பாடும் ஏக்கிளாஸா இருக்கும். நாம்ம அதெ எடுத்து பரிமாறிக்கிட வேண்டிய
சோலி ஒண்ணுதாம். அதாம் நாம்மல்லாம் இருக்கேம்ல. பரிமாறிக்கிடலாம், ஜமாய்ச்சுப்புடலாம்!"
ன்னுச்சு.
இதுவும் நல்ல யோசனையா இருக்குன்னு சுப்பு
வாத்தியாரு, அப்பிடின்னா அப்பிடியே சொல்லி வுட்டுப்புடலாம்ன்னு ஒத்துக்கிட்டாரு. அதுக்குச்
சொல்லி விடுறதுக்கு சித்துவீரன் சுப்பு வாத்தியார்ர தன்னோட வண்டியில பின்னாடி வெச்சு
அழைச்சிக்கிட்டு திருவாரூருக்குப் போனுச்சு. அங்கப் போயி விசாரிச்சா ஒரு சாப்பாடு
நூத்து இருவது ரூவா கணக்குக்கு எரநூத்து அம்பது சாப்பாட்டுக்கு முப்பதாயிரத்தெ எடுத்து
வையுங்கங்றான் அந்த ஆளு. என்னதாம் சாப்பாட்ட பெரமாதமா செஞ்சி வுட்டாலும் எம்பது ரூவாய்க்கு
மேல வராதுங்றது சுப்பு வாத்தியாருக்குப் புரியுது. இந்த ஆளு என்னா நாப்பது ரூவாய்ய
அநியாயத்துக்கு ஒரு சாப்பாட்டுக்குக் கூட சொல்றானேன்னு யோசனப் பண்ண சுப்பு வாத்தியாரு,
சித்துவீரனெ கண்ணக் காட்டித் தனியா அழைச்சிட்டு வந்து அதெ கேட்டாரு.
அதுக்குச் சித்துவீரன், "இந்த ஆளு
சாதாரணமா எல்லாத்துக்கும் சாப்பாடு தயாரு பண்ணிக் கொடுக்குற ஆளு கெடையா. நாம்ம வந்து
சொல்றதாலத்தாம் அன்னிக்குச் சமைச்சிக் கொடுக்கவே ஒத்துக்கிடுறாம். அன்னிக்குன்னு
பாருங்க ஏகப்பட்ட விஷேசங்க வேற. இந்த ஆள வுட்டோம்ன்னா வெச்சுக்குங்க வேற ஆள பிடிக்குறதுங்
செருமம். நாம்ம ன்னா சொல்றேம்ன்னா, நீஞ்ஞ சாப்பாட்ட சாப்பிட்டுப் பாத்தாதாங் ஏம் ஒரு
சாப்பாட்டுக்கு நூத்து இருவது ரூவா கேக்குறாம்ன்னு புரியும். சாப்பாட்டுக்கான அரிசி,
சாமாம்ல்லாம் நம்பர் ஒன் சாமானாத்தாம் போடுவாம். ரொம்ப பெரமாதமா இருக்கும். அதாங்
காசுக்கேத்தப் பண்டங்றது. தொழில்காரங்றப்போ கூட கொறைச்சல்தாம் கேப்பாம். அவ்வேம்
டாக்கடர்ருப் பயலுக்கு இந்த மாதிரிச் சாப்பாடா இருந்தாத்தாம் பிடிக்கும். அவ்வேம் வேறு
அவ்வேங் கூட இருக்குற டாக்கடர்மார்கள அழைச்சிட்டு வார்றதா சொல்லிருக்காம். அவுங்க
வர்றப்போ சாப்பாட்டுல நாம்ம கோட்டை வுட்டுப்புட்டா நல்லாவா இருக்கும்? காசிக் கூட
போறதெ பத்திப் பாக்க வாணாம். தேவை அன்னிக்கு
செமத்தியா இருக்காங்றத மட்டுந்தாம் இப்போ நாம்ம பாக்கோணும். அன்னிக்குப் பாத்து சாப்பாடு
சரியில்லன்னு நாலு பேத்துச் சொன்னா மானம் போயிடும். பெறவு நாமெல்லாம் கூட இருந்து
இப்பிடி ஆயிடுச்சேன்னு பேரு ஆயிடும். அத்து நமக்கு ஒத்துக்கிடாது பாத்துக்கோங்க!"ன்னுச்சு
சித்துவீரன்.
சுப்பு வாத்தியாரு ஒரு நிமிஷம் யோசிச்சுப்
பாத்துட்டு, ஒரு தேவை செய்யுறப்போ சாப்பாட்டுல கொறை வந்துட்டா நல்லா இருக்காதுன்னு
செரின்னுட்டாரு. அப்பவே சுப்பு வாத்தியார்கிட்டேயிருந்து பத்தாயிரத்த முன்பணமா வாங்கிக்
கொடுத்துடுச்சு சித்துவீரன். மிச்சப் பணத்தையும் ரண்டு நாள்ல கொடுத்துடுறதா பேசிட்டு
அச்சாரம் பண்ணிட்டு வந்தாங்க ரண்டு பேரும். வர்ற வழி முழுக்க சுப்பு வாத்தியாரு மனசுல
கேள்வி என்னான்னா, நூத்து இருவது ரூவாய்க்கு அப்பிடி ன்னா பெரமாதமான சாப்பாட்ட பண்ணித்
தொலைக்கப் போறாம் அந்த ஆளுங்றதுதாம். அப்போ ஓட்டல் கடையில அம்பது ரூவா இருந்தா அளவில்லாம
மத்தியானச் சாப்பாட்ட ஒஸ்தியா சாப்புடலாங்ற காலம்.
இந்த விசயத்தெ சுப்பு வாத்தியாரு சாயுங்காலமா
பள்ளியோடம் விட்டு வந்த, மவ்வேங்கிட்டெ சொன்னப்ப அவனுக்கும் ஆச்சரியமாத்தாம் இருந்துச்சு.
எப்பிடிப் பாத்தாலும் எழுவது ரூவாய்க்கு மேல ஒரு சாப்பாட்டுக்கான காசி ஆவதேன்னு அடிச்சிச்
சொன்னாம் விகடு. திருவாரூர்ல யாரு அப்பிடி நூத்து இருவது ரூவாய்க்கு சாப்பாடு தயாரு
பண்ணுற ஆளுங்ற வெவரத்தக் கேட்டுக்கிட்டு விகடு அவனுக்குத் தெரிஞ்ச திருவாரூர்ல இருக்குற
வாத்தியாருமாருகள வுட்டு வெசாரிச்சா அந்த ஆளு சமையக்குறதுல ஒஸ்தியான ஆளுங்றதுதாங்ற
உண்மெ தெரிய வந்துச்சு. அத்தோட அவரு ஒரு சாப்பாட்டுக்கு எம்பது ரூவாயத்தாம் வாங்குறாங்ற
சேதியும் தெரிய வந்துச்சு. பெறவெப்படி ஒரு சாப்பாட்டுக்கு நூத்து இருவது ரூவாய்ங்ற
விசயங்ற குட்டும் ஒடைஞ்சது.
சித்துவீரன் சுப்பு வாத்தியார்ர வந்துப்
பாக்குறதுக்கு மின்னாடியே திருவாரூரு போயி அந்த ஆளெ பாத்திருக்கு. பாத்து இந்த மாதிரிக்கி
ஒரு ஆள அழைச்சிட்டு வருவேம், அவருகிட்டெ ஒரு சாப்பாடு நூத்தி இருவதுன்னு சொல்லு. ஒமக்குச்
சாப்பாட்டு காசியான ஒரு சாப்பாட்டுக்கு எம்பது ரூவாய எடுத்துகிட்டு மிச்சத்தெ நம்மகிட்டெ
கொடுத்துப்புடுன்னு ஒரு பேச்சு வார்த்தெ நடந்திருக்கு. இந்த விசயத்தையும் வெவரம் தெரிஞ்ச
வாத்தியார்மாருக கறந்துப்புட்டாங்க. விசயம் தெரிய வர்ற விகடுவுக்குக் கொஞ்சம் கொதிப்பா
இருந்துச்சு. "நாமளே எம்மாம் கஷ்டப்பட்டு காசியப் பெரட்ட அல்லாடிட்டு இருக்கேம்.
இதுல சொந்தக்காரனா இருந்துக்கிட்டு இப்பிடி ஒறவுக்கார்ரேங்கிட்டெய கமிஷன் காசியப்
பாக்க நெனைச்சா எப்பிடிப்பா?"ன்னாம் விகடு. சுப்பு வாத்தியாரு அவனெ அமைதியா இருக்கச்
சொன்னாரு.
"எப்டிப்பா அமைதியா இருக்குறது? ஒரு
சாப்பாட்டுக்கு நாப்பது கூடுதலுன்னா எரநூத்து அம்பது சாப்பாட்டுக்கும் பத்தாயிரம்லா
கூடப் போவுது. அஞ்சா பத்தா கூட போவுதுன்னு வுடுறதுக்கு? யில்ல அம்பது நூத்தா கூட
போறதுன்னு வுடுறதுக்கு? நமக்கு ஒண்ணும் புரியலப்பா! ஏம் அமைதியா இருக்கணும்ன்னு? இந்த
ஆளு கூட கேட்டா கொடுத்த அச்சாரத்த வாங்கிட்டு வேற எடத்துல கொடுப்பேம்! எழுவது ரூபாய்க்கு
அதெ சாப்பாட்ட தயாரு பண்ணித் தர்ற திருவாரூர்ல ஆளுக இருக்காங்க. அதுவும் இல்லியா சமையக்கார்ர
பிடிச்சிப் போட்டு சமைச்சிட்டுப் போவேம்!"ன்னாம் விகடு.
"நமக்கும் புரியுதுடாம்பீ! அவ்வேம்
சித்துவீரன் மாப்புள்ளையோட மச்சாங்கார்ரேம். அந்தக் குடும்பத்துக்கு மொத மாப்ளே அவ்வேம்.
அவனெ போட்டு இப்போ தொந்தரவு பண்ணிடக் கூடாது. அவ்வேம் சொல்றதெ கேட்டு ஆடுறப் பயலுவோ
அந்தப் பாக்குக்கோட்டைப் பயலுவோ! இதெப் போயி அந்தப் பயகிட்டெ கேட்டாக்க, நம்மள நம்பாம
ரகசியமா வெசாரிக்குறீங்களான்னு குதியாட்டம் போடுவாம்! அப்படிப்பட்ட பயெ அவ்வேம். இப்போதைக்கு
அத்து வாணாம்! போன பெறவியில அவனுக்குக் கடன்பட்டிருக்கோம்ன்னு நெனைச்சுக்கோ! கோவம்
வர்றாது! இதுல கோவப்பட்டு ஒண்ணும் ஆவப் போறதில்ல."ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அப்பிடில்லாம் நெனைச்சிக்கிட முடியாதுப்பா!"ன்னாம்
விகடு.
"எலே சொல்றதெ கேளுடாம்பீ! யிப்போ
கல்யாண தரகர வெச்சு மாப்புள்ளைய இந்த மாதிரிக்கித் தேடுனா தரகருக்கு பத்தாயிரம் இருவதாயிரம்ன்னு
கொடுத்துதாங் ஆவணும். அந்த மாதிரிக்கி நெனைச்சுக்கோ. இந்தக் கலியாணத்துக்குச் சித்துவீரன்தாம்
கல்யாணத் தரகர்ன்னு!"ன்னு விகடுவெ அமைதிப் பண்ண பாத்தாரு சுப்பு வாத்தியாரு. அப்போ
விகடு ஒரு கேள்வியக் கேட்டாம், "ஏம்ப்பா இந்தச் சின்ன சாப்பாட்டு விசயத்துலயே
இப்பிடி பத்தாயிரம் தண்டமா அடிச்சிட்டுப் போவுதுன்னா, தேக்கங் கட்டிலு, பீரோ செய்யுறதுல
எம்மாம்பா அடிச்சிட்டுப் போவும்?"ன்னாம் விகடு.
"அவ்வேம் கேக்குறதுதாங் வெல. வைக்குறதுதாங்
காசி. கொடுத்துத்தாங் ஆவணும்! அதுவும் போன பெறவியில வாங்குன கடங்காசியோ, யில்ல அவ்வேனுக்குக்
கொடுக்க வேண்டிய தரகு காசியோத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நமக்கென்னவோ இத்து ஞாயமா படலப்பா!"ன்னாம்
விகடு.
"ன்னா ஞாயம் வைசேடிகம் போ! ஒரு தேவையப்
பண்ணுறப்போ எல்லாத்தையும் அனுசரிச்சும், பொறுத்தும்தாம் போயி ஆவணும். சொந்தக்காரன்ல
இப்பிடி நாலு பேத்து இருக்கத்தாங் செய்வாம். அவனோட பழக்கம் வெச்சிக்காமலும் இருக்க
முடியாது, வெட்டி வுடவும் முடியாது. எல்லாத்தோடயும் கலந்து கட்டி வாழ பழகித்தாம் ஆவணும்.
தேவை முடிஞ்ச பெற்பாடு வேணும்ன்னா ஒம்மட ஒறவும் வாணாம், தொடர்பும் வாணாம்ன்னு இருந்துக்கிடலாம்!
அதுவரைக்கும் யிப்போ அதாச்சி காரியம் முடியுற வரைக்கும் வாயைத் தொறக்கிறது உசிதமில்ல!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு. மேக்கொண்டு விகடு அதுக்கு எதுவும் பேசல. அதெ ஏத்துக்கிட்டாப்புல
அடங்கிட்டாம். ஆனா மனசுக்குள்ள கொஞ்சம் காட்டமா விகடு இருக்குறதெ புரிஞ்சிக்கிட்டாரு
சுப்பு வாத்தியாரு.
அதெ சமாளிச்சி வுடுறாப்புல, "அவனுவோ
அப்பிடித்தாம்டாம்பீ! ஒரு விசயத்துக்காக மெனக்கெடுறதுக்கு அத்துச் சொந்தக்காரனுக்காக
மெனக்கெட்டாலும் அதுக்கு ஒரு ரூவாயக் கணக்குப் பண்ணி அதெ இப்பிடி நைச்சியமா எதாச்சிம்
வேல பண்ணி வாங்குறது பழக்கமாப் போயிடுச்சு. இனுமே அவனுகளப் போயி என்னத்தெ திருத்துறது
போ! நமக்கும் சாப்பாட்டுக்குன்னு மெனக்கெடுற ஒரு வேல மிச்சம்ன்னு நெனைச்சிட்டுப் போ!
இதுல இன்னொரு செளரியம் பாரு! சாப்பாடு நல்லா இருந்தாலும் செரித்தாம், மோசமா இருந்தாலும்
செரித்தாம்! பாக்குக்கோட்டையானுவோ எவனும் இனுமே வாயைத் தொறக்க முடியாது. ஏற்பாடு
பண்ணது அவ்வேம் ஆளா போயிடுறாம்லா. எல்லாம் நல்லதுக்குத்தாம் போ! இப்போ அவ்வேம் ஏற்பாட்ட
பண்ணி வுடுறதால நாப்பீயைப் போட்டாலும் நல்லா இருக்குன்னு தின்னுட்டுப் போயிடுனுவோ.
இதெ இனுமே மாத்தி வேற எடத்துல இதெ விட பெரமாதமான சாப்பாடா வாங்கிப் போட்டாலும் நாப்பீயைத்
திங்குறாப்புல மொகத்தச் சுளிச்சிக்கிட்டுக் காறிக்கிட்டு போவானுவோ!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
வெங்குவும் இதெ பக்கத்துல இருந்து கேட்டுக்கிட்டு
இருந்துச்சு. அதுவும் தம் பங்குக்குப் பேசுனுச்சு. "ஆம்மா எம்மாம் தின்னுப்புட
போறாம் போ! எவனோ திங்குறதுக்கு நமக்குத் தெரிஞ்ச சாதிக்காரப் பயெ, சொந்தக்கார பயெ
தின்னுறாம்ன்னு நெனைச்சிக்கோ. காரியத்துல கமிஷம்ன்னு வந்துப்புட்டா இப்போ எவ்வேம்
ஊருக்கார்ரேம், சொந்தக்கார்ரேம்ன்னு பாக்குறாம்? அள்ளிச் சுருட்டத்தாம் நிக்குறாம்.
எவ்ளோ காலத்துக்குத் திம்பாம் போ! இந்தக் கலியாணம் முடியுற வரைக்குந்தாம். அதுக்குப்
பெறவு நாம்ம யாரோ? அவ்வேம் யாரோ? அது வரைக்கும் ஆடிட்டுக் கெடந்துட்டுப் போவட்டும்
போ! இனுமே வேற எந்த காரியத்துலயும் அவ்வேம் சித்துவீரனெ கலந்துக்கிட வாணாம். இத்தொட
விட்டுத் தொலையுங்க. என்னவோ நம்ம நேரம் இப்பிடிப் போயி விழுவுறாப்புல இருக்கு!"ன்னுச்சு
வெங்கு.
இப்பிடி ஒரு வெளக்கத்த ஆளாளுகிட்டேயிருந்த
கேக்குறதுக்குக் கேக்காமலே இருக்கலாம்ன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு. நமக்குத் தெரியாத
வெளியாளு கமிஷன்ங்ற பேர்ல திங்குறதுல கூட ஒரு ஞாயம் இருக்கலாம், சொந்தக்கார்ரேம் இப்பிடி
அநியாயமா மலையப் பிடுங்கித் திங்குறாப்புல தாட்சண்யம் இல்லாம திங்குறதுல என்னா ஞாயம்
இருக்கோன்னு நெனைச்சாம் விகடு. அதெ பத்தி மேக்கொண்டு கேட்டுக்கல. கேட்டா மேக்கொண்டு
மேல மேல ஒரு பயங்கரமான வெளக்கமால்ல வரும்.
*****
No comments:
Post a Comment