4 Aug 2020

கொரோனா குறித்துத் திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார்?

கொரோனா குறித்துத் திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார்?

            திருக்குறளில் எல்லாம் இருக்கிறது என்று சொன்னால் போதும். உடனே, கொரோனா குறித்துத் திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.
            2020 இல் கொரோனா வரும் என்றெல்லாம் திருவள்ளுவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கொரோனா என்றில்லை, பொதுவான எத்தகைய கொடிய கொள்ளை நோய்கள் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் சில குறட்பாக்களைப் பொதுமைப்படுத்தி வள்ளுவர் எழுதிச் சென்றிருக்கிறார்.
            வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
            வைத்தூறு போலக் கெடும்           (435)
என்று குறட்பா அதில் முக்கியமான ஒன்று. இதில் நோய் என்ற சொல்லே வரவில்லை என்றால் அப்படி வரும்படியும் இந்தக் கொரோனா சூழலுக்குப் பொருந்தும்படியும் ஒரு குறட்பாவையும் படைத்திருக்கிறார் வள்ளுவர்.
            எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
            அதிர வருவதோர் நோய்               (429)
என்ற குறட்பாவில் நீங்கள் நோய் என்ற வார்த்தையைக் காணலாம். அத்தோடு அச்சரம் பிசகாமல் இந்தக் கோரோனா காலச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் அதன் அர்த்தப் பொதிவு அமைந்திருப்பதையும் காணலாம்.
            பல குறட்பாக்கள் இப்பிடி வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளுக்குப் பொருந்திப் போவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. 'உலகப் பொதுமறை' என்று திருக்குறளைச் சொல்லுவது சாதாரணப்பட்ட அர்த்தத்தில் இல்லைதானே!
            கொரோனா நோய்ச் சிகிச்சைக்குப் பொருந்தும் வகையிலும் ஒரு குறட்பா திருக்குறளில் இருக்கிறது.
            உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
            அப்பால்நாற் கூற்றே மருந்து       (950)
என்பதுதான் அந்தக் குறட்பா. இந்தக் குறட்பாவின் பொருளைத் தேடிப் பிடித்து அறிந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். இக்குறளுக்குப் பல உரையாசிரியர்கள் பலப்படியாகக் கூறியிருக்கும் விளக்கம் உங்களை நிச்சயம் அசர அடிக்கும்.
            கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தியதாக இடைக்காடர் பாடியதற்கும், அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தியதாக ஒளவையார் பாடியதற்குமான அர்த்தத்தை இந்தக் குறட்பாவுக்கு உரையாசிரியர்கள் வழங்கியுள்ள விளக்கத்தை அறியும் போது அறியலாம்.
            இது போன்று கொரோனா சூழலை எதிர்கொள்ளும் வகையிலும், கொரோனா சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் பல குறட்பாக்கள் இருக்கலாம். அது குறித்துக் கருத்து வழங்கும் பெட்டியில் (Comment Box) இல் எழுதுங்கள்.
அன்புடன்,
விகடபாரதி.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...