ஒசத்தியா ரெண்டு புடவை!
செய்யு - 539
ஒரு கிராமத்து மனுஷனுக்கும், நகரத்து மனுஷனுக்கும்
இருக்குற வித்தியாசம் அவனோட நம்பிக்கைகளும், நெனைப்புகளுந்தாம். நகரத்து மனுஷனப் போல
கிராமத்து மனுஷனுக்கு சட்டுபுட்டுன்னு கடெய மாத்திக்கிட்டு இருக்க முடியாது. மளிகைக்
கடென்னா ஒரு கடெ, ஜவுளிக் கடென்னு ஒரு கடெ, பலகாரக் கடென்னா ஒரு கடெ, உளுந்து பயிறு
போடுறதுக்குன்னா ஒரு கடென்னு ஒரு கணக்கு இருக்கும். கடெசீ வரைக்கு அந்தக் கணக்கு மாறாது.
அந்தக் கடையில வேலை பாக்குறவங்க வரைக்கும் ஒரு ஒட்டுதலும் ஒறவும் இருக்கும். கடையில
வாடிக்கை வாங்குறவங்கன்னாலும் பண்ணுறவங்ன்னாலும் எங்கப் பாத்தாலும் அந்நியோன்யமான
பேச்சுக்கு எந்தக் கொறையும் இருக்காது.
திருவாரூரு டவுனு வளந்த பெற்பாடு நெறைய
மளிகைக் கடைக, ஜவுளிக் கடைக, பலவாரக் கடைக வந்த பெற்பாடும் சுப்பு வாத்தியார்ரப் பொருத்த
வரையில அவருக்குன்னு சில கடைக இருக்கு. இனிப்புக் காரம்ன்னு சிவராமு கடையில வாங்கியாந்த
பிரியமா சாப்புடற அளவுக்கு பிற கடைகள்ல வாங்கியாந்ததச் சாப்புட மாட்டாரு. தீவாளி, பொங்கல்ன்னு
ஜவுளிப் போடுறப்போ வேட்டியும், சட்டையும் முரா சன்ஸ்ல எடுத்தாத்தாங் கட்டிப்பாரு.
யில்லாட்டி அது பாட்டுக்கு பீரோல்ல தூங்கிட்டெ கெடக்கும். மளிகெ கடென்னா மின்னாடி
நேஷனல்ல வாங்கணும், அந்தக் கடெ போனதுக்குப் பிற்பாடு பழனி விலாஸ்ல வாங்கணும். திருவாரூர்ல
எவ்ளோவோ கடைக இருந்தாலும் அவர்ரப் பொருத்த மட்டுல கடைகங்றது அவ்ளோதாங். திருவாரூரும்
அவருக்கு அவ்ளோதாங். அதுக்கு மேல திருவாரூர்ரப் பத்தித் தெரியாது. தெரிஞ்சிக்கவும்
விரும்பல. அப்பிடியே இருந்துட்டாரு. அப்பிடியே இருக்கவும்தாம் பிரியப்படுறாரு.
இப்போ மவளுக்காக மொத மொதலா கும்பகோணத்துல
இருக்குற சீமந்தம் கடைக்கு அனுப்ப அரை மனசுதாம் அவருக்கு. கும்பகோணத்துல வாங்குறதா
இருந்தாலும் பாரம்பரியமா இருக்குற கடைகளாப் பாத்து வாங்கணும்ன்னு சொல்ல நெனைக்குறாரு.
சொல்லத் தோணல. புதுசா தொறந்தவேம் கடையில வாங்குனா கைராசி இருக்குமான்னு பல வெதமான
யோசனெ அவருக்கு. எதையும் வெளியில சொல்லிக்கிட முடியல. அன்னிக்கு ராத்திரி மவ்வேங்கிட்டெதாங்
இதெப் பத்திக் கொஞ்சம் கலந்துக்கிட்டாரு. மாடியில கட்டியிருந்த கொட்டகெ மனசுல பட்டதையெல்லாம்
பேசிக்கிட அவருக்குத் தோதா இருக்கு.
"தங்காச்சி என்னவோ கும்பகோணத்துல
பொடவய எடுக்கணும்ன்னு நிக்குறா! அவளுக்கு மட்டும் எடுக்கலடாம்பீ! நீயி ஒரு ஆளு. ஒனக்கும்
எடுக்கல. நீயி வராததால ஒனக்கு என்னிக்குத் தோதோ அன்னிக்குப் போயி எடுத்துக்கோ!
நமக்கு என்னவோ கும்பகோணத்துலப் போயி எடுக்குறது பிடிக்கலடாம்பீ!"ன்னாரு சுப்பு
வாத்தியாரு.
"இனுமே கலியாணம் ஆச்சுன்னா நம்ம வூட்டுல
இருக்கப் போற பொண்ணு கெடையாது. நம்ம வூட்டுல இருந்து நாம்மகிட்டெயிருந்து எடுத்துக்குற
கடெசீ பொடவன்னா அத்து இதுதாங். அதால அத்து விருப்பத்துக்கு வுட்டுப்புடுங்கப்பா! நமக்கு
மொத்தம் ஏழு நாளைக்கும் ஏழு அத்தோட ஒண்ணு கூடுதலா எட்டு உடுப்புக இருக்குப்பா! வாரத்துல
ஏழு நாளைக்கும் தொடர்ச்சியா வேல இருந்தாலும் ஏழு நாளைக்கும் போட்டுக்க அத்துப் போதும்.
அத்தோட ஒண்ணு கூடுதலா ஏழு நாளைக்கும் தொவைக்க முடியாட்டியும் போட்டுக்க எட்டா ஒண்ணு.
அதாங் கணக்கு. அந்த ஏழு நாளு சொழல்ல போட்ட சட்டைக அத்தனையைும் தொவைச்சிப்புடணும்.
மேலுக்கு மேல வாங்கிப் போட்டா தொவைக்காம போடுற சட்டை துணி அதிகமாயிடும். அத்துச்
சுத்தப்பட்டு வாராது. ஆக அத்துக் கிழிஞ்சாத்தாம் மேக்கொண்டு துணி எடுப்பேம்ப்பா!"ன்னாம்
விகடு.
"நீயி இதெத்தாங் சொல்லுவேம்ன்னு
நெனைச்சேம். அப்பிடியே சொல்றே! அதுவும் சரிதாங். ஆன்னா பாரு, தங்காச்சிக் கலியாணத்துக்குப்
புதுசா எடுத்து உடுத்தணும்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"நம்மட கலியாணத்துக்கு எடுத்த பட்டுச்
சட்டெ, பட்டு வேட்டி உடுத்தாமத்தாம் கெடக்கு. அதெ உடுத்திக்கிடுறதா முடிவு பண்ணிட்டேம்ப்பா!"ன்னாம்
விகடு.
"ஒங்கிட்டெயும் ஒண்ணும் சொல்ல மிடியாது.
ஒந் தங்காச்சிக்கிட்டெயும் ஒண்ணும் சொல்ல மிடியாது. பிடிச்சா பிடிவாதந்தாம். அது கெடக்கட்டும்.
கலியாணப் பொண்ணா இருக்குறதால நாளைக்கி கார்ர வாரச் சொல்லிருக்கேம்! அதுல பெரிம்மாவையும்
தங்காச்சியையும் அனுப்பி பிடிச்சாப்புல எடுத்துட்டு வந்துப்புடச் சொல்லிப்புடலாம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"யம்மாவையும் ஆயியைும் கூட அனுப்புங்களேம்
யப்பா!"ன்னாம் விகடு.
"சொல்லிட்டேம்ப்பா! போவ முடியாதுன்னுட்டுங்க
ரண்டும். நாம்ம கலியாணக் காசிக்குக் கொஞ்சம் கடனுக்குச் சொல்லிருக்கேம்லா யோகிபாயி.
அவரோட பொண்ணு ஒண்ணு இருக்காம்லா. இத்தோட ஆர்குடி காலேஜ்ல படிச்சதாங். அத்து கூட
வாரதா சொன்னிச்சாம். அதெயும் கார்ல கூப்பிட்டுட்டுப் போறதா சொல்றா ஒந் தங்காச்சி!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"நம்ம குடும்பத்துலேந்து போனாதாங்
செரிபட்டு வாரும். பெறத்தியா குடும்பத்துலேந்து செரிபட்டு வாராதுப்பா!"ன்னாம்
விகடு.
"சொல்லிட்டேம்ப்பா! யாரும் கேக்குறாப்புல
யில்ல. இவ்வே ஒந் தங்காச்சி முடிவு யாருக்கும் பிடிக்கல. நமக்குமே பிடிக்கல. நீயி சொல்றாப்புல
கலியாணமாயி போவப் போறது. இனுமே வந்தா நமக்கு அத்து வேணும், இத்து வேணும்ன்னு கேட்டுக்கிட்டு
நிக்கப் போவுது? அதாங் யோஜிச்சேம். சரின்னு வுட்டாச்சு. நீயி வேணும்ன்னா போயிட்டு
வாயாம்டா ஒரு நாளு லீவப் போட்டுக்கிட்டு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ச்சும்மா யிருங்கப்பா! பொடவ எடுக்குறதுக்குப்
போயி நம்மளப் போவச் சொல்லிட்டு!"ன்னாம் விகடு.
"அதுக்கில்லடா யம்பீ! காசிய யாரு
கையிலாச்சும் கொடுத்து விடணுமுல்லா. அதாங் ஒங் கையில கொடுத்து வுடலாம்ன்னு பாக்குதேம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"பெரிம்மாட்டேயே கொடுத்து வுடுங்கப்பா!
பாத்துக்கிடலாம்!"ன்னாம் விகடு. அவுங்க ரண்டு பேத்தும் பேசிட்டு இருக்குறப்பவே
ஆயி மாடிக்கு மேல ஏறி வந்தா, "ன்னா மாமா! பொடவெ சங்கதியல்லாம் பேசி முடிச்சாச்சா?"ன்னா.
"நாஞ்ஞ ஒண்ணும் அதெல்லாம் பேசல! கலியாணம்
சம்பந்தமா வேற இதெ பேசிட்டு இருக்கேம்!"ன்னாம் விகடு.
"ச்சும்மா காதுல பூவச் சுத்தாதீயே?
நீஞ்ஞ ன்னா பேசிருப்பீயேன்னு புட்டு புட்டு வைக்கவா?"ன்னா ஆயி.
சுப்பு வாத்தியாரு சிரிச்சிக்கிட்டெ,
"அதல்லாம் வாணாம். நீயுந்தாம் நாளைக்கிப் போயிட்டு வாயேம்!"ன்னாரு.
"யில்ல மாமா! மின்னாடியே முடியாதுன்னுட்டேம்லா
மாமா! நாம்மத்தாம் ஒஞ்ஞகிட்டெ கும்பகோணம் போவ வுடாம தடுக்குறதா நெனைச்சிக்கிட்டு
இருக்காங்க செய்யு. அத்தோட நாம்மப் போயி நாம்ம ஒரு டிசைன சொல்ல, அவுங்க ஒரு டிசைன
சொல்ல, செரிபட்டு வாராது மாமா! ரிமோட் கன்ட்ரோல் சென்னைப் பட்டணத்துல இருக்கு மாமா
இதுக்கு. நாம்ம போனா சுத்தப்படாது. நாம்ம போறது எடைஞ்சலாவும் போயிடும்!"ன்னுச்சு
ஆயி.
"ஒம் மாமியாருக்குப் போறதுக்கு ன்னா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"பாத்தீயளா மாமா! நம்மள மாட்டி வுடுறதுலயே
நிக்குதீயே? யத்தெக்கு இதுல சுத்தமாவே இஷ்டம் யில்ல மாமா! ஒண்ணுஞ் சொல்ல வுடாம நிக்குறாங்க.
நீஞ்ஞ ஏம் விருத்தியூர்லேந்தெல்லாம் வாரச் சொன்னீயே? அவுங்களாளத்தாம் யிப்போ கும்பகோணம்
போறது மாதிரி ஆவுது. யில்லன்னா யத்தே எதாச்சிம் சமாளிச்சி இன்னிக்கே திருவாரூர்ல பொடவைய
எடுக்குற மாதிரிக்கிப் பண்ணிருப்பாங்க! நமக்கும் அவுங்க வந்தது சுத்தமாவே பிடிக்கல
மாமா! அவுங்க வூட்டுச் சனங்களுக்கு மட்டும் கூட காசியில்லா எடுத்துப்புட்டாங்க மாமா.
அதாங் காசிக் கூட போனதுக்குக் காரணம்!"ன்னா ஆயி.
"அத்து ஒரு கதெ ஓடுதா? அதெ வுடு!
வாங்கியாச்சு. முடிஞ்சாச்சு. நம்ம பொண்ணு சரியில்லா! பிறாத்தியார்ர கொறைச் சொல்ல
முடியா. நெனைச்சபடி வாங்கிக்கிடட்டும். நாளைக்கி இன்னொரு வூட்டுக்குப் போற பொண்ணு!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அதெத்தாம் மாமா நாமளும் சொல்ல நெனைச்சேம்!
அத்தோட யிப்போ ரண்டு பேத்தும் வந்துச் சாப்புட்டீங்கன்னா நம்ம வேல முடியும். பாத்திரத்தெ
அலம்பி வெச்சிட்டுப் படுப்பேம்!"ன்னா ஆயி. அத்தோட அந்தப் பேச்சு முடிவுக்கு வந்து
மறுநாளு செய்யுவ விருத்தியூரு பெரிம்மாவோடயும், யோகிபாயோட பொண்ணு நிரஞ்சனியோடயும்
கார்ல அனுப்பி வெச்சாரு சுப்பு வாத்தியாரு.
பொடவைக்குன்னு முப்பதாயிரத்தெ கொடுத்து
எதுக்கும் கூடுதலா கையில காசி இருக்கட்டும்ன்னு இருவதாயிரத்தச் சேத்து ஐம்பதாயிரமா
கொடுத்து விட்டாரு சுப்பு வாத்தியாரு. அவரு கணக்கு எப்படியும் இருவது இருவத்தஞ்சாயிரத்துல
பட்டுப் பொடவையும், நாகவல்லி முகூர்த்ததுக்கு ரண்டாயிரம் மூவாயிரத்துல பொடவையும்
முடிஞ்சி கையில இருவதாயிரத்து ரூவா திரும்ப வந்துப்புடும்ன்னு நெனைப்பு.
காலங்காத்தால ஏழு மணிக்கெல்லாம் கும்பகோணம்
போயி சீமந்தத்துல போடவெ எடுத்துட்டு ராத்திரி ஏழு மணி வாக்குல திரும்புன பெரிம்மா
திரும்ப வந்து சுப்பு வாத்தியாருகிட்டெ ரண்டாயிரத்த மட்டுந்தாம் கொடுத்துச்சு. அந்த
ரண்டாயிரத்த கையில வாங்கிட்டு சுப்பு வாத்தியாரு பாத்த பார்வைய புரிஞ்சிகிட்டெ பெரிம்மா
சொன்னுச்சு, "முப்பத்து ஒம்பதாயிரத்துல ஒம் மவ்வே போயி பொடவைய எடுக்குறா! நீயி
காசியக் கொடுத்து வுட்டதுதாங் வுட்டெ முப்பதாயிரத்தோட நிறுத்த வேண்டியத்தானே. எதுக்கு
நம்ம கையில அம்பதாயிரத்தெ தூக்கிக் கொடுத்தே. பெறவு நாகவல்லி மூர்த்தத்துக்குன்னு
எட்டாயிரத்து ஐநூத்துல எடுத்தா. கொஞ்சம் காசி சாப்பாட்டுச் சிலவுக்கு ஆச்சுப்பா! மிச்சத்தெ
கொடுத்தாச்சு ஒங் கையில!"ன்னுச்சு விருத்தியூரு பெரிம்மா. சுப்பு வாத்தியாருக்கும்
அந்த வெலைக்குப் போடவெ எடுத்தது அதிர்ச்சியாத்தாம் இருந்துச்சு. அவராலயும் ஒண்ணும்
சொல்ல முடியல.
செய்யுவும், நிரஞ்சனியும் வாங்கிட்டு வந்த
ரண்டு பொடவையையும் எல்லாத்துக்கிட்டேயும் காட்டிட்டு இருந்துச்சுங்க. சுப்பு வாத்தியாரு
அந்த எடத்தெ வுட்டு அந்தாண்டப் போயிட்டாரு.
"அடி ஏம்டியம்மா கேக்குறே? இந்த ரண்டுப்
போடவைக்காகவும் ரண்டு குட்டியளும் நம்மள போட்டு ஏறாத எடமெல்லாம் ஏற வுட்டுப்புட்டுட்டாளுவோ.
அஞ்ஞ ஒரு எடத்துல பூந்தா இன்னொரு எடம் தெரிய வேற மாட்டேங்குது. அத்து வேற நமக்குப்
பயமா போயிட்டு, எங்காச்சும் காணாமப் போயிடுவோமான்னு?"ன்னச்சு பெரிம்மா.
"அந்த மாரி கடையில எடுத்தாத்தாம்
பெரியவங்களே நெறைய வெரைட்டீஸ் பாக்க முடியும்!"ன்னா நிரஞ்சினி.
"நாம்ம கூட சின்னப் பொண்ணு ஆசெப்
படுதுன்னு நெனைச்சேம். அஞ்ஞ பூந்தா எதெ எடுக்குறதுன்னு மண்டெயப் பிச்சிக்கிட்டு பைத்தியமாத்தாம்
அலையோணும். இப்பிடியாடி ரண்டு குட்டியளும் தேடுவீயோ பொடவைய? தரமா இருக்கான்னு பாத்து
ரண்டு எடுக்கறதெ வுட்டுப்புட்டு, ஊரு ஒலகத்துல உள்ள அத்தனெ துணி மணியையும்லா போட்டு
பெரட்டுதீயே? இதல்லாம் எந்த ஊருல அடுக்கும்?"ன்னுச்சு பெரிம்மா.
"அதல்லாம் ஒங்க காலம் பெரியவங்களே!
இப்பல்லாம் பொடவென்னா எந்தக் கடையில எடுத்தீங்கன்னுத்தாம் மொதல்ல கேப்பாங்க. நம்ம
ஊரு டவுனு கடெ பேர்ர சொன்னால்லாம் சென்னையில இருக்குறவங்களுக்குத் தெரியாது. இதெ கும்பகோணம்
சீமந்தம்ன்னு சோல்லிப் பாருங்க. சட்டுன்னு எங்க இருக்குறவங்களுக்கும் தெரியும்! அதுக்குத்தாங்
அங்க எடுக்கறது!"ன்னா நிரஞ்சினி.
"ன்னா கருமமோ! நாஞ்ஞல்லாம் இஞ்ஞ
இருக்குற கடையில எடுத்துதாங் உடுத்திக்கிறேம்! கட்டிக்கிறேம்! இஞ்ஞ எடுத்தாங் கலியாணங்
காட்சி தேவையும் பண்ணிக்கிடுறேம்! நாஞ்ஞல்லாம் ந்நல்லா யில்லாமா போயிட்டேம்?"ன்னுச்சு
பெரிம்மா.
"பட் பேஷன்னு ஒண்ணு இருக்குப் பெரியவங்களே!"ன்னா
நிரஞ்சனி.
"ன்னா பேஷனோ கேசனோ? ஒண்ணும் புரிய
மாட்டேங்குது!"ன்னு அந்த எடத்தெ வுட்டு எழும்பிப் போயிட்டு பெரிம்மா. ஆயியும்
வெங்குவுந்தாம் இப்போ இருந்தாங்க. வெங்கு எதுவும் பேசல. எதுவும் பேசாம இருக்குங்றது
அதோட கோவத்த காட்டற அடையாளமா அத்து நெனைச்சிக்கிட்டது. செய்யு ரண்டு தடவெக்கு மேல
வெங்குகிட்டெ பேச எத்தனிச்சி பேசலன்ன ஒடனே ஆயிகிட்டெ பேசுனா.
"இஞ்ஞ திருவாரூர்ல ன்னா கலெக்சன்
யண்ணி? ஒண்ணு கூட செரியில்ல. அஞ்ஞ சீமந்தத்துல புதுசா ஆரம்பிச்சிக்கிறாம்லா! யப்பப்பா
ஏகப்பட்ட கலெக்சன். நிரஞ்சனிய அழைச்சிட்டுப் போனது ஒதவியா இருந்துச்சு யண்ணி! செமயா
செலக்ட் பண்ணுறா! நீஞ்ஞளும் வந்திருந்தா ஒஞ்ஞளுக்கும் புது டிசைன்ல ஒரு பொடவ எடுத்திருக்கலாம்!"ன்னா
செய்யு.
"நமக்கு இஞ்ஞ எடுத்த போடவெயேப் போதும்!
இஞ்ஞ இருந்ததெ வுட நீஞ்ஞ எடுத்துட்டு வந்தது ஒண்ணும் அம்மாம் பெரமாதமா யில்ல. இதுக்கா
நீஞ்ஞ அம்மாம் தூரம் போனீயே? அதுவும் காலையில ஏழு மணிக்குக் கெளம்பி, ராத்திரி ஏழு
மணிக்கு வரைக்கும் தேடிக் கொண்டாந்திருக்கீயே?"ன்னா ஆயி.
"அத்து மட்டும் யில்ல அண்ணி!"ன்னா
நிரஞ்சனி ஆயியையும் அண்ணின்னு. "மேட்டர் ன்னான்னா டாக்கடருக்குப் பிடிக்கணுமே!
அவுங்களுக்கு இந்த ஊரு டவுனுக் கடையில இருக்குறதல்லாம் பிடிக்காதுங்க அண்ணி! அவுங்களோட
டேஸ்ட்டே வேற லெவல். தட் டேஸ்ட் என்னான்னு நமக்குத்தாங் தெரியும். கும்பகோணம் போனதுல
அவுங்களுக்குப் பிடிச்ச மாதிரி சாரிஸ்ஸ தி பெஸ்ட் செலக்ட் பண்ணியாச்சு!"ன்னா நிரஞ்சனி.
"டாக்கடர்ர ஒனக்கு எப்பிடித் தெரியும்?
அவுங்களோட டேஸ்ட் பேஸ்ட்டுன்னு பேசுதீயே?"ன்னா ஆயி.
"அப்பாவுக்குச் சுகர் இருக்குல்ல
அண்ணி! அதுக்கு ட்ரீட்மெண்ட் டாக்கடர்தாங். அப்பா சென்னைக்குப் போயே ட்ரீட்மெண்ட்
எடுத்துப்பாங்க. சில சமயங்கள்ல நாமளும் கூட அழைச்சிட்டுப் போயிருக்கேன். அப்பிடிப்
போறப்ப டாக்கடர் வூட்டுல இருந்தார்ன்னா அவரு கையாலயே சமைச்சி வரைக்கும் போடுவார்ன்னா
பாத்துக்குங்களேம். சாம்பார் வெச்சார்ன்னா சூப்பரா வைப்பாரு அண்ணி. என்னன்னவோ மூலிகைகளை
எல்லாம் போட்டு. செம டேஸ்ட்டா இருக்கும்!"ன்னா நிரஞ்சனி.
ஆயிக்கு இப்போ கும்பகோணம் போனதோட காரணம்,
அங்கப் போயி புடவைய எடுத்ததோட காரணம், அந்தச் செமத்தியான வெலைக்கு எடுத்ததோட காரணம்
எல்லாம் அரையும் கொறையுமா வெளங்கியிருந்தது முழுசுமா வெளங்கிடுச்சு.
பிறவு ஒரு சந்தர்ப்பத்துல இந்தச் சங்கதிய
ஆயி மாமனாரு சுப்பு வாத்தியாருகிட்டெ சொன்னப்போ அவரு சொன்னாரு, "நம்ம பொண்ணுக்கு
அம்மாம் புத்திக் கெடையாதுன்னு தெரியும்! யாரோ ஆட்டி வைக்குற வேலைங்றதும் தெரியும்.
முப்பத்து ஒம்போதாயிரத்துக்குப் பட்டுப் பொடவைய எடுத்து என்னா பண்ண முடியும்? ஒரு
நாளு கட்டிக்கிடலாம். மிச்ச நாளு பூரா பீரோல்லத்தாம் தூங்கிட்டுக் கெடக்கும்! ஓம்
புருஷம் என்னான்னா காசி ரொம்ப சிலவாவுதுன்னு நெனைச்சிக்கிட்டு புதுசா கலியாணத்துக்கு
சட்டதுணி எடுக்குறதுக்கு வித்தியாசமான வெளக்கத்தச் சொல்லிட்டு இருக்காம். ஓம் நாத்தனாரு
ன்னான்னா யப்பங்காரரோட கஷ்டம் ன்னான்னே புரியாம கொடுத்த அம்பதாயிரத்துக்கும் கணக்கெ
முடிச்சிட்டு வந்து நிக்குறா!"ன்னாரு விரக்தியா.
"அதுல விசயம் ன்னான்னா மாமா! அய்யாயிரம்
இருக்கும் மாமா அவரு அதாங் அந்த டாக்கடர்ரு தங்காச்சி மூலமா கொடுத்து வுட்ட மொபைலு.
அதெ வெச்சிக்கிட்டு செமத்தியா கணக்கெ போட்டு பல ஆயிரத்துக்குக் காசிய செலவழிக்குறாப்புல
பண்ணிப்புட்டாரு மாமா டாக்கடரு!"ன்னா ஆயி. சுப்பு வாத்தியாரு வறண்டு போனாப்புல
ஒரு சிரிப்பெ சிரிச்சிக்கிட்டாரு. அந்தச் சிரிப்புல கொஞ்சம் கூட ஜீவன் இல்ல.
*****
No comments:
Post a Comment