25 Aug 2020

வானமே எதுக்கு அழுகிறாய்?

வானமே எதுக்கு அழுகிறாய்?

செய்யு - 544

            சுப்பு வாத்தியாரு வந்ததும் வெங்கு, "பணங்காசி ஏதும் கையில இருக்கா?"ன்னு ஆரம்பிச்சது. நம்ம படுற கஷ்டத்தெ நெனைச்சி பொண்டாட்டிக்காரி அப்பிடி கேக்குறான்னு நெனைச்சிக்கிட்ட சுப்பு வாத்தியாரு, "சமாளிச்சிப்புடலாம்!"ன்னாரு. வெங்கு கேட்ட கேள்விக்கு அப்பிடி ஒரு அர்த்தமும் உண்டுனாலும், யிப்போ அது கேக்குற அர்த்தம் வேற யில்லையா? அதால மேக்கொண்டு, "எம்மாம் இருக்கும்?"ன்னு கேட்டுச்சு வெங்கு. அந்தக் கேள்வியையும் கஷ்டத்தெ நெனைச்சுத்தாம் பொண்டாட்டிக் கேக்குறான்னு நெனைச்சுக்கிட்டு சுப்பு வாத்தியாரு, "பாத்துக்கிடலாம்!"ன்னாரு.

            "யில்லங்க! அது வந்து..."ன்னு வெங்கு ஆரம்பிச்சப்போதாங் அந்தக் கேள்வியோட தெசெ நாம்ம பதிலு சொன்ன பக்கத்துல இல்லங்றது சுப்பு வாத்தியாருக்கு ஒரைச்சது. சுதாரிச்சிக்கிட்டெ சுப்பு வாத்தியாரு, "கலியாணச் சிலவுல எதாச்சும் வுடுபட்டுப் போச்சா?"ன்னாரு. இப்பதாங் புருஷங்காரரு விசயத்துக்கு வர்றாங்றது புரிஞ்சி மெல்லமா கேக்க ஆரம்பிச்சிது வெங்கு, "நம்மப் பக்கத்துல எதுவும் வுடுபடலங்க. அஞ்ஞ அவுங்கப் பக்கத்துலதாங் கலியாணச் சிலவுக்குக் காசி பத்தலன்னு பாக்குக்கோட்டை சின்னம்மா வந்து சொல்லிட்டுப் போச்சுது!"ன்னுச்சு வெங்கு.

            "அத்து எப்போ வந்துச்சு? காசிப் பத்தலன்னா? வெளங்க மாட்டேங்குதே? அந்தக் காசிய நம்மகிட்டெ கொடுத்தா இன்னும் நாலு பொண்ணு இருந்தாலும் கலியாணத்தெ ஜாம் ஜாம்ன்னுல்ல நடத்தலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கொஞ்சம் காட்டமா.

            "நீஞ்ஞ வெளியில போயிருந்தீயே! அந்த நேரமா வந்துச்சு. இருந்து சொல்லிட்டுப் போறதாதாம் சொன்னிச்சு. நாம்மத்தாம் வாண்டாம்ன்னு அனுப்பி விட்டேம். கலியாணத்தெ பெரமாதாம பண்ணுறதால காசி கொஞ்சம் இடிக்கிறதா சொன்னுச்சு!"ன்னுச்சு வெங்கு குரல் ஒடைஞ்சிப் போயி.

            சுப்பு வாத்தியாருக்கு மனசுல வந்தக் கோவத்த அடக்கிக்கிட்டு, "எம்மாம் கொறையுதாங்?"ன்னாரு.

            "ரண்டு லட்சமாம்!"ன்னுச்சு வெங்கு. அதுவரைக்கும் அடக்கிக்கிட்டு இருந்த கோவத்து அதுக்கு மேல அடக்க முடியல சுப்பு வாத்தியாரால, "அந்த ரண்டு லட்சத்தெ மட்டுமே வெச்சு இஞ்ஞ திருவாரூர்ல பெரிய மண்டபமா பாத்து பெரமாதமா கலியாணத்தப் பண்ணுவேம்லா! அதயும் பண்ண வுடாம அடிச்சானுவோ! என்னவோ டாக்கடருங்றதால அவனுக்குத்தாங் கலியாணத்தெ பண்ணத் தெரியும்ன்னு சொன்னானுவோ! ஊரு ஒலகத்துல டாக்கடர்க்கு ல்லாம் கலியாணம் ஆவலையா? என்னவோ இவ்வந்தாம் அதிசயமா கலியாணத்தப் பண்ணுற மாரில்லா பேசுறாம்? பெரமாதம் பெரமாதம்ன்னு பேசுறாம்ன்னா சொந்த வூடு இருக்கா அவனுக்கு? நாலு சென்ட் நெலம் இருக்கா அந்தப் பயலுகளுக்கு? அதெயல்லாம் கஷ்டப்பட்டு ஒழைச்சிச் சம்பாதிச்சி வாங்கிருந்தா காசியோட அருமெ தெரியும்! ச்சும்மா வூட்டுல உக்காந்துக்கிட்டு சமைச்சிச் சாப்புட கூட அலுப்புப்பட்டுக்கிட்டு ஓட்டல்ல வாங்கித் திங்குற பயலுவோளுக்கு எப்பிடிக் காசியோட அருமெ தெரியும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "முடிஞ்சா கொடுன்னுத்தாம் சொன்னிச்சி சின்னம்மா! முடியாட்டியும் காரு வாங்க கொடுத்த காசியில ரண்டு லட்சத்தெ எடுத்துக்கிடறேம்ன்னு சொன்னுச்சு! நம்மளப் போட்டு நெருக்கடி பண்ணல!"ன்னுச்சு வெங்கு.

            "இதுல நெருக்கடி வேறயா? காரு வாங்கிட்டானுவோளா இல்லியா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "காரு பத்து லட்சத்துலத்தாம் வாங்கணுமாம். ரண்டு லட்சத்தெ இதுல எடுத்துட்டா பாங்கியில போட்டு வெச்சு, காசு சேந்தப் பெறவு வாங்கிக்கிறதா சொன்னுச்சு!"ன்னுச்சு வெங்கு.

            "வக்குல்லைன்னாலும் வக்கனையால்லா பேசிக்கிறானுவோ! பழையச் சோத்த மாஞ்சி மாஞ்சி வழிச்சி நக்கிக்கிட்டு பிரியாணிய தின்னாப்புலல்லா பீத்திக்கிறானுவோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "போன் பண்ணச் சொல்லிட்டுப் போச்சு. போன் நம்பரு கூட செய்யுகிட்டெ கொடுத்த போன்ல இருக்காம். சொல்லிட்டுப் போச்சு!"ன்னுச்சு வெங்கு.

            "நம்மக் காசிய வாங்கி, அதுல நம்மப் பொண்ணுக்கே போன அவ்வேம் காசியில வாங்கிக் கொடுத்தாப்புல நேக்கா கொடுத்து வுட்டு, அதுல நம்பர்ர வெச்சிக் கொடுத்துருக்காம்னா? இனுமே எஞ்ஞ கடனெ வாங்குறதுன்னு தெரியாத அளவுக்கு அத்தனெ எடத்துலயும் வாங்கியாச்சு. இனுமேலும் கடனெ வாங்கலாம்ன்னாலும் திருப்பிக் கொடுத்தாவணுமேன்னு யோஜிக்கிறப்பத்தாங் நடுக்கமா இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "நம்மட்ட இருக்குற நகைய வாணும்ன்னா அடவு வெச்சிட்டு வாங்களேம்!"ன்னுச்சு வெங்கு.

            "இருக்குறதே அதாங். ஒரு ஆத்திர அவ்சரத்துக்கு அத்தும் ல்லன்னா என்னத்தப் பண்ணுறது? அதுவுமில்லாம நாலு பவுனெ அடவு வெச்சா எவ்வேம் ரண்டு லட்சத்தெ கொடுப்பாம்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "யப்போ பணத்தெ கொடுக்கலாம்ங்குதீயளா?"ன்னுச்சு வெங்கு.

            "வேற வழி! கொடுத்ததெல்லாம் கொடுத்தாச்சி. கடெசீயில எதுக்கு அத்து ஒரு கொறை? அதெயும் செஞ்சிப்புட்டா கொறையில்லாம போயிடும் பாரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "கோவமா பேசுனீயளே!"ன்னுச்சு வெங்கு.

            "பொண்ணப் பெத்துப்புட்டு கோவப்பட்டு என்னத்தெ ஆவுறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பணத்துக்கு என்னத்தெ பண்ணப் போறீயே?"ன்னுச்சு வெங்கு.

            "பள்ளியோடம் வுட்டு பயெ வாரட்டும். எதாச்சும் தோது இருக்குமான்னு கலந்துப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அவ்வேம் பாவமுங்க. பாஞ்சு லட்சத்தெ எப்பிடியோ பெரட்டிக் கொண்டாந்தாம். இதுல இன்னும் ரண்டு லட்சம்ன்னா என்னத்தெ பண்ணுவாம்? வாங்குன கடனெ வேற எத்தனெ வருஷம் கட்டித் தொலையணும்ன்னு தெரியலையே?"ன்னுச்சு வெங்கு. 

            "முடிஞ்சா பாப்பேம். முடியலன்னா காருக்கான காசிப் பணத்துல எடுத்துக்கிட சொல்ல வேண்டியதுதாங். குருவி தலையில பனம்பழத்தெ சொமக்கச் சொல்ல முடியாது. நாலைஞ்சுப் பொண்ணப் நாம்ம பெத்து அவ்வேம் நாலைஞ்சு தங்காச்சிகளுக்கு கலியாணத்தப் பண்ணி வுட்டு, அவ்வேம் அப்பிடி நின்னாலும் பரவால்லா. ஒத்தத் தங்காச்சிக்குப் பயெ அந்த மாரில்லாம் நிக்கக் கூடாதுடி! அந்த டாக்கடரு பயெ ரண்டு தங்காச்சிகளெ கட்டிக் கொடுத்து அப்பிடி என்னத்தெ பெரமாதமா பண்ணிப்புட்டாம் கேக்குறேம்? இவ்வேம் நம்ம பயெ டாக்கடர்ரா? வாத்தியாருதானே? அவனால எம்மாம் முடியும்ன்னு கூடவா தெரியாது! நாம்ம ரிட்டையர்டு ஆயிக் கெடக்குறேம். நமக்கு எம்மாம் வருமானம் வரும்ன்னு கூடவா தெரியாது? அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில கொடை பிடிப்பாம்ன்னு சொல்றது சரியாத்தாம்டி இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அவரோட வார்த்தைக தடிச்சிட்டுப் போறதெ தெரிஞ்சிக்கிட்டு மேக்கொண்டு ஒண்ணும் பேசாம நிறுத்திக்கிட்டு வெங்கு. "உஞ்சினி ஐயனாரே ஒன்னத்தாம் மல போல நம்பிருக்கேம் மனசுல!"ன்னு மட்டும் சொல்லிக்கிடுச்சு தனக்குத் தானே.

            சாயுங்காலம் பள்ளியோடம் விட்டு விகடு வந்ததும், இந்தப் பேச்சு துவங்குனுச்சு. அவ்வேம் அப்பாவும், அம்மாவும் சொல்ல சொல்ல ஒவ்வொண்ணா கேட்டுக்கிட்டாம். ஒரு விசயத்த மூணு கேள்விய கேட்டாம். "பணம் கொடுக்குறதா? வாணாமா? என்னத்தெ முடிவெடுத்து இருக்கீயே?"

            "கொடுத்ததெல்லாம் கொடுத்தாச்சு. நெறைவா கேக்குறதையும் கொடுத்துப்புட்டா கொறையில்லாமப் போயிடும். நாளைக்குக் கலியாணம் ஆயிப் போயி அஞ்ஞ குடித்தனம் நடத்தப் போறது ஒந் தங்காச்சித்தாங். இதெ நெனைக்கிட்டு அவ்வே மேல கருவி கருவிக்கிட்டெ இருப்பானுங்கடாம்பீ! நம்ம வூட்டுலேந்து அஞ்ஞப் போற பொண்ணு நல்ல வெதமா இருக்கணும்டா!"ன்னுச்சு வெங்கு.

            அதெ தொடந்தாப்புல விகடு எதையும் பேசல, "செஞ்சிப்புடுவேம்!"ன்னு ஒரு வார்த்தைய மட்டுந்தாம் பேசுனாம்.

            மறுநாளே ஆயிகிட்டெ இருந்த நகெ நெட்ட வாங்கிக் கொடுத்தாம் சுப்பு வாத்தியாருகிட்டெ. சுப்பு வாத்தியாரும் வெங்குகிட்டெ இருந்த நாலு பவுனையும் வாங்கிக்கிட்டாரு. வடவாதி ஸ்டேட் பாங்கியில ஒரு நாளு முழுக்க உக்காந்து ரண்டு லட்சத்தெ பாங்கியிலேந்து நகைக்கடன்ல வாங்குனாரு சுப்பு வாத்தியாரு. பாங்கியில அந்த நகைக்கு ரண்டு லட்சத்து நாப்பதினாயிரத்தெ நகைக்கடனா போட்டு எடுத்துக்கிடலாம்ன்னு சொன்னப்பயும் ரண்டு லட்சமே போதும்ன்னுட்டாரு. நாப்பதாயிரம் கூடுதலா வாங்குனா கட்டப் போறது மவ்வேம்லா, அந்தச் செருமத்தெ கொடுக்கக் கூடாதுன்னு நெனைச்சாரு. அப்பிடின்னா நாப்பதாயிரத்துக்குக் கூடுதலா இருக்குற நகைய வாங்கிக்கிடுங்கன்னு பாங்கியில சொன்னதுக்கு, வாணாம் யெல்லாம் அடவுலயே இருக்கட்டும்னுட்டாரு. அதெ வூட்டுல வாங்கி வெச்சி அதுக்கு அடவு வைக்குறாப்புல எதாச்சிம் பாக்குக்கோட்டைப் பயலுவோ சிலவெ வெச்சிப்புட போறானுவோன்னு அவருக்குள்ள பயம் வந்துப்புட்டு.

            பாங்கியில வாங்குன ரண்டு லட்சத்துப் பணத்தெ மறுநாளே எடுத்துக்கிட்டு காலங்காத்தால எம்மெல்ஏ பஸ்ல கெளம்பி ஆர்குடியில எறங்கி, அங்கேயிருந்து பாக்குக்கோட்டைக்குப் பஸ்ஸப் பிடிச்சிக் கொண்டு போயிக் கொடுத்துட்டு வந்தாரு. பணத்தெ கொண்டுப் போயி கொடுக்குற வரைக்கும் மஞ்சப் பையில வெச்ச கைய அந்தாண்ட இந்தாண்ட எடுக்கலே. கஷ்டப்பட்டு அடவு வெச்சு கொண்டு போற காசிய எவனும் லவட்டிடக் கூடாதுங்ற பயம் அவருக்குக் காசியக் கொண்டு போயி கையில கொடுக்குற கடெசீ நேரம் வரைக்கும் இருந்துச்சு. ஒரு கார்ரப் பிடிச்சா அதுல ஆயிரத்து எரநூத்து செலவாமுன்னே கணக்குப் பாக்க ஆரம்பிச்சிட்டாரு சுப்பு வாத்தியாரு. கலியாணச் சிலவுன்னு ஆரம்பிச்சப்ப இருந்த தெம்பு சுத்தமா வடிஞ்சிப் போயித் தொவண்டுப் போயிருந்தாரு. கார்ல ரண்டு பேத்து தொணையோடு பணத்தெ கொடுக்கப் போயி, யிப்போ பஸ்ல யாரு தொணையும் யில்லாம தனியா போயி, கடெசீயா நடக்க வுட்டு திரிய வுடத்தாம் போறானுவோ பாக்குக்கோட்டையானுவோன்னு நெனைப்பு மேல நெனைப்பு வந்து மோதுனுச்சு சுப்பு வாத்தியாரு மனசுக்குள்ளார. 

            அந்தப் பணத்தெ கொடுத்தப்போ பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தா சொன்னுச்சாம், "மாப்ளே! எப்பிடியும் நீயி பணத்தோட வருவேன்னு தெரியும். ஒன்னய செருமப்படுத்துனதா மட்டும் நெனைச்சுக்காதே. கலியாணத்துல பாரு. ஒமக்கே தெரியும் ஏம் இம்மாம் காசி செலவாச்சுன்னு?"ன்னு.

            இனுமே இதுக்கு மேல வூட்டுல இருந்த நகையையும் அடவு வெச்சப் பெறவு எதுக்கு எந்த கணக்கெ பாக்குறதுன்னு புரியாம அதெ கேட்டுக்கிட்டு வந்தாரு சுப்பு வாத்தியாரு. ஏதோ பொண்ணுக்குக் கலியாணம் நல்ல வெதமா நடந்து முடிஞ்சா போதும்ன்னு ஒரு நெனைப்பு மட்டுந்தாம் அவரோட மனசுல இருந்துச்சு.

            கலியாணம் பாக்குக்கோட்டையில நடக்குறதால அங்க கலியாணத்துக்கு வார முடியாதவங்க வெசாரிக்க நிச்சயம் கலியாணத்து அன்னிக்குச் சாயுங்காலமும் சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு வருவாங்க. அப்பிடி வர்றவங்களுக்கு மாடியில வெச்சு ஒரு டிபன் சாப்பாட்ட போட்டுப்புடலாம்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. இப்போ கையில இருந்த நகெ இருப்பு சுத்தமா கொறைஞ்சதப் பாத்துப்புட்டு, கையில இருந்த காசியும் கணிசமா செலவழிஞ்சதப் பாத்துப்புட்டு வர்றவங்களுக்கு இனிப்புக் காரத்தெ வாங்கி ஒரு பேப்பர் தட்டுல வெச்சி, ஒரு பேப்பர் கப்புல கொஞ்சம் காப்பியக் கொடுத்துப்புட்டா போதும்ன்னு முடிவெ பண்ணிக்கிட்டாரு. அவருக்குப் பாக்குக்கோட்டையிலேந்து பொண்ணு பாக்க வந்தப்போ அல்வா துண்டுமா, முந்திரிப் பருப்பும், பாதாம் பாலுமா வந்தவங்களுக்குச் செஞ்சது மனசுல வந்துப் போனுச்சு. அதெ நெனைக்க நெனைக்க அவர்ர அறியாமலே கண்ணுல தண்ணித் தண்ணியா பொங்கி வந்துச்சு. விகடுவ நெனைச்சப்போ அந்தத் தண்ணி அதிகமாப் போச்சு.

            "ஒரு பொண்ண வேற பெத்து வெச்சிருக்காம்! எப்படிக் கொறைச்சலா பாத்தாலும் ஆறு வருஷக் காலத்துக்கு கடனெ கட்டுறதுலேந்து மீளுறதுங்றது செருமமாச்சே! இருந்த நெலத்தையும் அடவுக்கு வுட்டாச்சு. அதுலேந்து வர்ற நெல்லுக்கும் வக்கில்லாமப் போயி, அரிசியுமில்லா கடையில வாங்கித் திங்குறாப்புல வெச்சுப்புட்டேம். வாழ்நாள்ல கடனெ வாங்கப்படாதுன்னு கொள்கைவாதியா இருந்தவனெ வேற கடங்காரனல்லா ஆக்கிப்புட்டேம். சூத்து ஓட்டையில எந்த வெரலு வேணாம்லும் நோழையுங்றதுக்கா காலு வெரலயா பிடிச்சி நொழைச்சி வுடுறது? இனுமே அவ்வேம் நிக்குறதும் செருமம், நடக்குறதும் செருமம்!"ன்னு நெனைச்சிக்கிட்டு வெளியில பாத்தாரு. அவர்ர வுட மோசமா வானம் கண்ணுத் தண்ணிய வுட்டுக்கிட்டு இருந்துச்சு. வெளிவானம் தூத்தல் போட்டுக்கிட்டு இருந்ததப் பாத்த அவருக்கு, "ஏம்டா வருணா எதுக்குடா அழுவுறே? ஒமக்கு ன்னடா நம்மளப் போல பொண்ணப் பெத்தா வெச்சிருக்கே? யில்ல எம் மவ்வனே போல தங்காச்சிக்குக் கலியாணத்தையா வெச்சிருக்கே? பெறவு எதுக்குடா அழுவுறே கொசக் கெட்ட பயலே?"ன்னு சத்தம் போட்டுக் கத்தணும்னு போல இருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...