28 Aug 2020

ஆயக் கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்தவன்!

 


ஆயக் கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்தவன்!

செய்யு - 547

            பொண்ணு மண்டபத்துல நொழைஞ்சதும் ஒரு அரை மணி நேரம் அலங்காரம்ன்னு தனியா ரெண்டு பொண்டுக உள்ளார கொண்டு போனாங்க. மண்டபத்துக்கு வெளியிலேந்து உள்ளார வாசலுக்குப் போற வரைக்கும் அரைவட்டமா இருக்குறாப்புல கலர் கலர்ரா மின்னுறாப்புல ஒரு அலங்காரப் பாதைய பண்ணிருந்தாங்க. அதுக்குள்ள பூந்து போறப்பவே எனனவோ வித்தியாசமான ஒலத்துல பூந்துப் போறாப்புல இருந்துச்சு. அதுல பூந்துப் போறப்ப டாக்கடரூ வுட்டுக் கலியாணம்ன்னா ச்சும்மாவான்னு சொல்லிகிட்டெ சனங்க கடந்துப் போச்சுங்க.

            மண்படத்து வாசல்ல கேரளாவுல கட்டுவாங்கல்ல சந்தன நெறத்துல சேலைக அதெப் போல கட்டிக்கிட்டு நெறைய இளம்பொண்டுக கேரள பாணியில பூவை வெச்சிகிட்டுக் கோலத்துப் போட்டுக்கிட்டு இருந்துச்சுங்க. கேரள கோலம் போடுறதுக்குன்னே பொண்டுகள கேரளாவுலேந்து கொண்டு வந்திருப்பானோன்னு சனங்க பேசுனப்பத்தாங், அந்தப் பொண்டுக எல்லாம் பாலாமணி வேலை பாக்குற ஆஸ்பிட்டல்ல நர்சிங்கிக்குப் படிக்கிறப் பொண்ணுங்கன்னு தெரிஞ்சது. அதுக எல்லாத்துக்கும் பாலாமணித்தாம் அந்த மாதிரியான சேலைகள எடுத்துக் கொடுத்தாதவும் பெருமையாப் பேசிக்கிட்டாங்க. உள்ளார மண்டபம் முழுசும் அலங்காரமா இருந்துச்சு. அலங்காரம்ன்னா அலங்காரம் அப்பிடி ஒரு அலங்காரம். அதெ பாக்குறப்போ சமயத்துல சுப்பு வாத்தியாரோட பணந்தாம் அப்பிடிக் கட்டித் தொங்க விட்டுருக்காப்புலயும் தெரிஞ்சிச்சு.

            கொஞ்ச நேரத்துல மண்டபத்து மாப்புள்ள ரூமுலேந்து பாலாமணி வெளியில வந்தாம் கோட்டு சூட்டு கருப்புக் கண்ணாடில்லாம் போட்டுக்கிட்டு. அவ்வேம் பின்னாடியே அலங்காரம் பண்ணுறதுக்குன்னு அழைச்சிட்டுப் போன செய்யுவும் மணப்பொண்ணுக்கான ரூமுலேந்து வெளியில வந்தா. சனங்கள அவசர அவசரமா கோயிலுக்கும், மாப்புள்ள வூட்டுக்கும் கெளம்பச் சொன்னாங்க. சனங்க அததுவும் அது காதுலு வுழுவாததப் போல மண்டபத்து ஞ்ஞேன்னு வேடிக்கெ பாத்துட்டு உக்காந்து கெடந்துச்சுங்க. பொண்ண மண்டபத்துக்குக் கொண்டு வாரதுக்கு மின்னாடி மாப்புள வூட்டுக்குக் கொண்டு போயி அங்க சாமி கும்பிட வெச்சு மண்படத்துக்கு அழைச்சாரதுதாங் மொறை. பாலாமணி போன அடிச்சி வானவேடிக்கையை எல்லாம் பொண்ணோட வர்ற சனங்களுக்குக் காட்டணும்ன்னு அந்த மொறை தலைய எல்லாம் தலைகீழா  மாத்திருந்தாம். பொண்ணும் மாப்புள்ளையும் மண்டபத்து வாசல்ல தாண்டி அலங்கார வளைவுக்குள்ள போறப்ப கேரளா சேல கட்டிட்டு இருந்த பொண்டுக எல்லாம் ரண்டு பக்கமும் நின்னுகிட்டு சினிமா படத்துல வர்றதெப் போலவே பொண்ணு மாப்புள மேல பூவத் தூவுனுச்சுங்க.

            வந்திருந்த சனங்களுக்கு மொற தலெ ஒண்ணும் புரியாததால அததுவும் மண்டபத்துல போயி உக்காந்தது உக்காந்தபடியே உக்காந்துட்டு எழும்ப மாட்டேனுட்டுங்க. அதுககிட்டெ சங்கதி இன்னதுன்னு சொல்லி எல்லாத்தையும் கெளப்பி வேன்ல ஏத்தி மாப்புள வூடு இருக்குற எடத்துக்கு போறாப்புல கொஞ்சம் மெனக்கெட வேண்டியதா ஆச்சு. அங்கப் பேறாதுக்கு மின்னாடி இருந்த மாரியம்மன் கோயில்ல எல்லாத்தையும் எறக்கி ஒரு சாமி கும்பிடு நடந்துச்சு. பெறவு சனங்கள வேன்ல ஏத்தி மாப்புள்ள வூட்டுல கொண்டாந்து எறக்கி அங்க ராசாமணி தாத்தாவோட அப்பா அம்மா படத்துக்கு மின்னாடி பொண்ணு மாப்புளைகள நிறுத்தி சாமி கும்புட வெச்சு, கால்ல விழ வெச்சு வந்திருந்த சனங்களுக்கு எல்லாம் காப்பித் தண்ணியக் கொடுத்து அத்து ஒரு அரை மணி நேரத்துக்கு இழுத்துச்சு. அதெ முடிச்சி திரும்பவும் சனங்கள வேன்ல ஏத்தி மண்டபத்துக்கு அழைச்சாந்து எறக்குன்னா எப்படா சாப்பாட்ட போடுவாங்க? எப்படா தூங்கப் போவலாம்ன்னு சனங்க எல்லாம் களைச்சிப் போயிடுச்சுங்க. மணி ராத்திரி பத்தரைய நெருங்கிட்டு இருந்துச்சு.

            அப்பத்தாம் மணமேடையில நடுவுல மட்டும் குவிச்சாப்புல லைட்டுக கலர் கலரா எரிஞ்சி அதுல பாலாமணியும் செய்யுவும் போயி நின்னாங்க. மேடையில மைக்கப் பிடிச்ச பாலாமணி, "இரவு விருந்துக்கு முன் அறிவு விருந்து!"ன்னாம். சனங்க சாப்பாடு இப்போ கெடையாதுங்றதெ முடிவு பண்ணிடுச்சுங்க. விடிய விடிய நாடகந்தாம் போலருக்குன்னு பேசிக்கிட்டுங்க.

            லாலு மாமா அந்த நேரமா பாத்து மேடையில ஏறி பாலாமணி கையில இருந்த மைக்கைப் பிடிச்சி, "இந்தக் கலியாணத்துக்காக என் தங்கையின் திருமகன் ஒரு புத்தகத்தை வடித்திருக்கிறான். அதில் தம்பதியர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிகளை எழுதியிருக்கிறான். தம்பதியர்கள் தங்களது தோஷங்களைப் போக்கிக் கொள்ளவும், இணைந்து ஒற்றுமையாக வாழ்வதற்கும் செல்ல வேண்டிய திருத்தலங்களைப் பற்றியும் கூறியிருக்கிறான். பரிகாரங்களுக்காக வழிபட வேண்டியத் தெய்வங்களைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறான். இந்தப் புத்தகத்தைத் திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் இவ்வளவு விரிவாகப் பார்த்துக் கொண்டு, அந்த ஏற்பாடுகளையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள், வேலை நெருக்கடிகளுக்கு மத்தியில் எழுதி முடித்திருக்கிறான் என்பதைப் பற்றி நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஒரு புத்தகம் உங்கள் கையில இருந்தால் உலகமே உங்கள் கையில் இருப்பதைப் போல. இந்தப் புத்தகம் உங்கள் கையில இருந்தால் கடவுளர்களின் முகவரிகள் அனைத்தும் உங்கள் கையில இருப்பதைப் போல. இந்தப் புத்தகம் உங்கள் கையில் இருந்தால் ஆயிரம் கோயில்கள் உங்கள் கையில இருப்பதைப் போல. இந்தப் புத்தகத்தால் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பதிலிருந்து, திருமணத்துக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்வது வரை, செல்ல வேண்டிய கோயில்களிலிருந்து பரிகாகரம் செய்வதற்கான தெய்வங்கள் வரை பலவற்றையும் அறிந்து கொள்வீர்கள். இந்தப் புத்தகம் ஒரு அதிசயம், யாருக்கும் கிடைக்க முடியாத ரகசியம். இந்தப் புத்தகம் ஒரு புதையல். அப்பேர்ப்பட்ட சிறப்பான புத்தகத்தை, என் மருமகன் எழுதியப் புத்தகத்தை நீங்கள் நாளை செல்லும் போது திருமணப் பரிசாகப் பெற்றுச் செல்வீர்கள். தற்போது அந்தப் புத்தகத்தை இந்த மேடையில் எனது மச்சான் சிவஸ்ரீ ஜோதிட சிகாமணி ராசாமணி வெளியிட அதை நான் பெற்றுக் கொள்கிறேன்!" என்று செந்தமிழ்ல பேசி முடிச்சது. சனங்க ஒடனே கையத் தட்டுனுச்சுங்க. யாரு பேசி முடிச்சாலும் கையத் தட்டுனுங்றது சனங்களுக்கு அனிச்சைச் செயலாவே போயிடுச்சு.

            லாலு மாமா பேசி முடிச்சதும் முழு மேடையும் லைட்டால வெளிச்சமானுச்சு. ஒடனே இசைச் சத்தம் பிரமாண்டமா கேட்டுச்சு. அப்பத்தாங் மேடையில இருந்த வாத்தியங்கள வாசிக்கிறவங்க தெரிஞ்சாங்க. ராசாமணி தாத்தா மேடைக்குப் போவ அதுக்குத் தகுந்தாப்புல மார்ச் போறாப்புல இருக்குற இசையை இசைச்சாங்க ‍மேடையில இருந்த வாத்தியக்காரவுங்க.

            ராசாமணி தாத்தா மைக்கைப் பிடிச்சி, "என் மகன் பல பல ஆண்டுகள் பல விதமாக முயன்று தகவல்களைத் திரட்டி இதை உருவாக்கம் செய்திருக்கிறான். அவன் ஆயுர்வேத மருத்துவம் மட்டும் படித்தவன் அல்ல. இந்த உலகில் உள்ள அனைத்துத் தத்துவங்களையும் ‍அறிவுக் கலைகளையும் படித்து முடித்தவன். படிப்பதற்கென்றே பிறப்பெடுத்த பேரறிஞன். அறிஞர் அண்ணாவிற்குப் பிறகுத் தமிழ்நாட்டில் மிக அதிகப் புத்தகங்களைப் படித்தவன் அவன்தான். உலக நாயகன் கமலகாசனுக்கு அடுத்தாற்போல அதிகபட்ச கலைகளைக் கற்றிருப்பவன் அவன்தான். ஆயக்கலைகள் அறுபத்து நான்கும் அவனுக்கு அத்துப்படியாகும் என்றால் அது மிகையாகாது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தெல்லாம் அழைப்புகள் வந்த போதும் தன்னுடைய அறிவும், உழைப்பும் பாரதத் திருநாட்டுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து இங்கேயே இருப்பவன், சேவை செய்பவன். அவன் நினைத்திருந்தால் பல வெளிநாடுகளுக்குச் சென்று கோடி கோடியாகச் சம்பாதித்திருக்கலாம். தாய்நாடே முக்கியம், தாய் மண்ணே முக்கியம் என்று கொண்ட பற்றின் காரணமாக நம் நாட்டிலே இருந்து மருத்துவ அறிவுலகத்தை மாற்றிப் போட்டுக் கொண்டிருக்கிறான். அவன் பிறந்த போதே சோதிட சிகாமணியான நான் அதைக் கண்டு அவனை ஆங்கில மருத்துவனாக்க முடிந்த நிலையிலும் ஆயுர்வேத மருத்துவனாக ஆக்கினேன். அதனால் இன்று அவன் சுஷ்ருதர் போன்றோர் அடைய முடியாத, சாதிக்க முடியாத பல உச்சங்களை அந்தத் துறையில் செய்து வருகிறான். தன் மகனைப் பற்றி ஒரு தகப்பனே மேடையில் புகழ்வது ஒவ்வாது என்பதால் அவனது அளவிடற்கரிய புகழ் பற்றி இந்த மேடையில் பேசுவதற்குக் கூசுகிறேன் என்பதை மட்டும் உங்கள் முன் தெரிவித்துக் கொள்கிறேன். அதெ நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பெறுவதற்கரிய, கிடைத்தற்கரிய, பல ஆண்டுகள் தவம் செய்தால் மட்டுமே வரமாகக் கிடைக்கக் கூடிய இந்தப் புத்தகத்தை இந்தத் திருமணத்துக்கு வந்த பாக்கியத்தால் மட்டுமே நாளை திருமணம் முடிந்தவுடன் உங்கள் கைகளில் திருமணப் பரிசாகத் தவழும் இந்தப் புத்தகம். இதை இந்த இனிய நேரத்தில் நான் வெளியிட எனது மச்சான் லாலு ஆசிரியர்கள் பெற்றுக் கொள்வார்கள்! எனது மச்சான் லாலு ஒரு ஞான புருஷர். அவர் இந்த நேரத்தில் அந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொள்வது பல்லாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வானியல் சோதிட அதிசயம் போன்றதாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!"ன்னு செந்தமிழ்ல பேசி முடிச்சிச்சு. அதுக்கு ஒரு இசை. மைக்கைப் பிடிக்கிறப்போ வர்ற செந்தமிழுக்கு மட்டும் குறையே இருக்குறதில்ல. அது பாட்டுக்கு வழிஞ்சித்தாம் ஓடுது.

            மண்படத்துல உக்காந்திருந்த சனங்க மறுபடியும் அனிச்சைச் செயலா எல்லாம் கையத் தட்டுனுச்சுங்க. மேடையில அந்தப் புத்தகத்தப் பாக்குறப்போ நூத்தம்பது பக்கமாவாது இருக்குற புத்தகமா பட்டுச்சு. கலியாணத்துக்கு வர்ற எல்லாத்துக்கும் கொடுக்குறதுன்னா எப்படியும் ரண்டாயிரம் புத்தகங்ளாச்சும் அடிச்சிருக்கணும். இந்தச் சம்பவம் நடந்து முடிஞ்சதும் பொண்ணு மாப்புள்ளைய உக்கார வெச்சு, "நூறு வருஷம் இந்த மாப்புள்ளையும் பொண்ணுந்தாம் பேரு வெளங்க இங்க வாழணும்!"ங்ற பாட்டை பாடுனாங்க வாத்திய கோஷ்டிகாரவுங்க.

            அந்தப் பாட்டு முடிஞ்சதும், "தற்போது அகில உலக ஆயுர்வேத மருத்துவத் திலகம் டாக்டர் பாலாமணி பியெயெம்மெஸ் அவர்கள் கீபோர்டு இசைக்க மணப்பெண் செய்யு எம்மெஸ்ஸி பியெட் அவர்கள் பாடுவார்கள்!"ன்னு மேடையில வாத்தியத்தெ வாசிச்சிட்டு இருந்த ஆள்கள்ல தாட்டிகமான ஒருத்தரு மைக்கைப் பிடிச்சி எக்கோ அடிக்குறாப்புல சொல்ல, செய்யு தெகைச்சிப் போயிட்டா. திடீர்ன்னு மேடையில நிப்பாட்டிப் பாடச் சொன்னதுல கூச்சமா போயிடுச்சு அவளுக்கு. முன்ன பின்ன பாடியும் பழக்கம் இல்லாதவ. "நீங்கள் எந்த சினிமா பாடலையும் பாடலாம். அதற்கேற்றாற் போல அகில உலக ஆயுர்வேத மருத்துவத் திலகம் எனது இசையுலக வாரிசு டாக்டர் பாலாமணி பியெயெம்மெஸ் வாசிப்பார்கள்!"ன்னாம் மைக்கைப் பிடிச்சிருந்த அந்த ஆளு செய்யுவப் பாத்து. அதுவும் எக்கோ அடிக்குறாப்புலத்தாம் வந்துச்சு. செய்யு வேர்த்து விறுவிறுத்துப் போயி தயங்கிட்டெ நின்னதப் பாத்து, "மணப்பெண் கூச்சமும் தயக்கமும் கொள்கிறார்கள். ஆதலால் எனது இசையுலக வாரிசு அகில உலக ஆயுர்வேத மருத்துவத் திலகம் டாக்டர் பாலாமணி பியெயெம்மெஸ் அவர்கள் கீபோர்டு இசைப்பார்கள்!"ன்னு அந்த ஆளு மறுக்காவும் எக்கோ வர்றாப்புல பேசி முடிச்சாம்.

            பாலாமணி "உனக்கெனவே இருப்பேன்! உயிரையும் கொடுப்பேன்!"ங்ற சினிமா பாட்டுக்கு அடிக்கடி செய்யவப் பாத்துக்கிட்டெ கீபோர்டுல வாசிச்சாம். வாசிப்பு அவ்வளவு துல்லியமா இல்லன்னாலும் வாசிச்சு முடிஞ்சதும் மைக்கப் பிடிச்சு பேசுன தாட்டிகமான ஆளு ஓடிப் போயி பாலாமணியக் கட்டிப் பிடிச்சிக்கிட்டு, "என் வாரிசுங்றதெ நிருபீச்சிட்டீங்க டாக்டர்!"ன்னாம். அதுலயும் ஒரு எக்கோ அடிச்சது. ஒரு வழியா சம்பவம் முடிஞ்சிட்டு நெனைச்சப்போ, "மேலும் சில திரைப்பாடல்களுக்கு எனது இசை உலக வாரிசு அகில உலக ஆயிர்வேத மருத்துவத் திலகம் டாக்டர் பாலாமணி பியெயெம்மெஸ் கீபோர்டு வாசிக்க எமது குழுவில் இருப்பவர்கள் பாடுவார்கள்! இந்த நாள் ஒரு இனிய நாள். இனிய இசையை எமது இசையுலக வாரிசு வாசிக்கும் அந்த இன்பத் தேன் உங்கள் காதுகளில் நிறையப் போகிறது! பலருக்குப் பசி என்பதே மறந்துப் போகப் போகிறது. இந்த இசையிலே வயிறு நிறையப் போகிறது."ன்னு அறிவிச்சாம் அந்த ஆளு. அந்தப் பேசுலயும் எக்கோ அடிக்கத் தவறல. அப்படிச் சொன்னப்போ மணி எப்படியும் பதினொண்ண தாண்டி இருக்கும்.

            சனங்களுக்குப் பசி வயித்த கிள்ள ஆரம்பிச்சது. அந்த நேரத்துல வந்த இசையும் பாட்டும் அவுங்களோட காதையும் பிடிச்சிக் கிள்ளுறாப்புல இருந்துச்சாங்க. வாசிச்சப் பாட்டுக அத்தனையையும் உருகி உருகிக் காதலிக்குறாப்புலயும் அதுக்காக உசுரையும் கொடுக்குறாப்புல இருக்குற பாட்டுங்க. ஒருவழியா அந்தச் சம்பவம் பன்னெண்டு மணி வாக்குல முடிஞ்சப்போ சனங்க பாட்டுக்குப் பந்தி போட்டுருக்குற எடத்துல பூந்து சாப்பாட்ட முடிச்சி கெடைச்ச எடத்துல அடிச்சிப் போட்டாப்புல தூங்க முயற்சிப் பண்ண ஆரம்பிச்சதுங்க. செய்யு ஒருத்திதாங் அப்படி தூங்க முடியல. அவளுக்கு அலங்காரம் பண்ணுறதுக்குன்னே பியூட்டி பார்லர்லேந்து ஆளுங்க வந்திருக்கிறதாவும் அதெ முடிச்சிட்டுத் தூங்கலாம்ன்னு சொல்லிப்புட்டாங்க. அவளுக்கு எம்மாம் நேரம் அந்த அழகுகலை வேலை நடந்துச்சோ தெரியல. தூங்க முயற்சிப் பண்ண ஆளுங்களயும் அத்தனெ பேரும் தூங்கிட முடியல படுத்த ஒடனே. சாப்புட்டு படுத்தா ஒடனே தூங்கிப் போற விகடு ஒருத்தன்தாம் கண்ண மூடிட்டு அவ்வேம் பாட்டுக்கு தூங்கிட்டுக் கெடந்தாம். மித்த சனங்களால அப்பிடித் தூங்க முடியல. எடம் புதுசுங்கறதாலயும் கடிக்குற கொசுவோட ரோதன தாங்க முடியலங்றதாலயும் நெடுநேரம் கழிச்சிதுதாங் தூங்குனுச்சுங்க. 

*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...