காளமேகம் இருந்தால் வாருங்கள்!
நாள், நட்சத்திரம் பார்க்கும் பழக்கம்
பெரிய மனுஷர்களைத்தான் பிடித்து ஆட்டுகிறது என்று நினைத்தால், அது ஆள் வித்தியாசம்
பார்க்காமல் பெரிய மனுஷர், சின்ன மனுஷர் என்று வேறுபாடு பார்க்காமல் எல்லாரையும் பிடித்து
ஆட்டுகிறது.
ஒரு சோதிட நிலையத்துக்குள் நுழைந்தால்
வயசு வித்தியாசம் இல்லாமல் பல்லு போன மனுஷர்களிலிருந்து பல்லு முளைக்க வேண்டிய குழந்தைகள்
வரை வரிசை கட்டி உட்கார்ந்திருக்கின்றனர். இங்கே திருவாரூர் பக்கம் பெரும்பாலும் இந்த
சோதிட நிலையங்கள் கீற்றுக் கொட்டகைகளாகத்தான் இருக்கின்றன. கொட்டகைக்கு முன்பாக
சோதிட சிகாமணி, சோதிட மாமணி எனும் பட்டங்களில் ஏதோ ஒன்றோடு சோதிடர் பெயரைச் சுமந்து
கொண்டு ஒரு பதாகைத் தொங்குகிறது.
ஒரு மருத்துவரைப் பார்க்க அலைமோதும் கூட்டத்துக்குக்
கொஞ்சமும் குறைவில்லாமல் சோதிட நிலையங்களிலும் கூட்டம் அள்ளுகிறது. கிட்டதட்ட ஒரு
மருத்துவரைப் போலத்தான் சோதிடரும் செயல்படுகிறார். காளமேகத்துக்கு இந்தக் காட்சி
காணக் கிடைத்திருந்தால் மருத்துவரையும் சோதிடரையும் சேர்த்து வைத்து ஒன்றுக்குப் பத்தாக
சிலேடைகளைப் பாடித் தள்ளியிருப்பார். அந்த அளவுக்கு பொருத்தம் ஒன்றுகிறது சோதிடருக்கும்,
மருத்துவருக்கும். சோதிடர் பொருத்தம் பார்ப்பவர். மருத்துவர் வைத்தியம் பார்ப்பவர்.
மருத்துவரைப் பார்த்த உடனே முன்பு அவர்
எழுதிக் கொடுத்த சீட்டைக் காட்டுவது போல, சோதிடரிடம் சாதக நோட்டை நீட்டுகிறார்கள்.
அதை அவர் பார்த்துக் கட்டம் கட்டிக் கொண்டிருக்கும் போதே, வரிசையாக தங்கள் குறைகளைக்
கூடியிருக்கும் மனுஷர்கள் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். மருத்துவரிடமும் இப்படித்தானே
சொல்கிறோம். சொல்லி முடித்தவுடன் மருத்துவர் சில விசயங்களைச் சொல்வது போல கணிப்புகளைச்
சொல்கிறார் சோதிடர். முடிவில் மருந்தெழுதும் மருத்துவரைப் போல வரிசையாகப் பரிகாரங்களைச்
சொல்லிப் பட்டையைக் கிளப்புகிறார் சோதிடர். பீஸ் நூறா, இருநூறா, ஐநூறா என்பது சோதிடர்களின்
பிரபல்யத்தைப் பொருத்து வேறுபட்டது கிட்டதட்ட மருத்துவர்களைப் போலத்தான். இந்த விவரங்களையெல்லாம்
வைத்துக் கொண்டு யாராவது சிலேடை எழுத முற்படலாம். யாராவது அப்படி எழுதி அனுப்பிச்
சிறப்பாக அமைந்தால் அதற்குப் புத்தகப் பரிசு கொடுக்கவும் ஆசை இருக்கிறது. விருப்பம்
உள்ளவர்கள் எழுதிக் கருத்துப் பெட்டியில் போடுங்கள்.
எனக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எழுதிய
கணியன் பூங்குன்றனாரைப் பிடித்தாலும் காலத்தைக் கணிக்கும் இக்காலக்கணிதர்களிடம் ஈடுபாடு
இருப்பதில்லை. சோதிடர்களைத் தமிழில் காலக்கணிதர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் கிரகம்
விட வேண்டுமே! மாதத்துக்கு ஒரு சொந்தபந்தம் வந்து விடுகிறது, "அந்த ஊர்ல இருக்குற
சோசியக்காரரு ரொம்ப அருமைய சாதகம் பாக்குறாராம்ல!" என்று. அப்புறமென்ன அவரை
அழைத்துக் கொண்டு வண்டியைக் கிளப்பிக் கொண்டு ஓட வேண்டியிருக்கிறது. முடியாதென்றால்
அப்படியெல்லாம் முடியாது. "ஏம்ப்பா! பெரியவங்க. இவ்வளோ தூரம் நம்மள நம்பி வீடு
தேடி வந்துட்டாங்க. கொஞ்சம் கூப்புட்டுட்டுப் போயிக் காட்டிட்டுத்தாம் வாயேன்!"ன்னு
வீட்டில் இருக்கும் பெரிய மனுஷர்கள் படுத்தி எடுத்து விடுவார்கள். அவர்கள் படுத்தி
எடுப்பதற்குள் கிளம்பி விடுவதே உசிதம் என்று கிளம்பி விட வேண்டியிருக்கிறது.
சமீப காலமாக எனக்கும் சோதிடம் என்றால்
சட்டென்று கிளம்பும் பழக்கமும் வந்திருக்கிறது. அது சோதிடம் பார்ப்பதற்கான ஆர்வத்தால்
வந்ததன்று, சோதிடர்கள் சொல்லும் சங்கதிகளில் சில ஆச்சரியமாக ஒத்துப் போவதால் வந்தது.
அப்படியானால் சோதிடம் உண்மையா என்று கேக்கக் கூடாது. ஒரு விஷேச நிகழ்தகவு என்னவென்றால்
உங்களைப் பற்றி நான் பத்துக் கூற்றுகள் சொன்னால் அதில் நான்காவது அப்படியே ஒத்துப்
போகும். நீங்களே யோசித்துப் பாருங்கள், உலகில் இருக்கும் அத்தனை மனிதர்களை இத்தனை
நட்சத்திரம் மற்றும் இத்தனை ராசிக்குள் அடக்க முடியுமா என்று? ஆனால் சோதிடர்கள் அதைத்தானே
செய்கிறார்கள். நட்சத்திரம், ராசியை வைத்துக் கொண்டு அதற்கென இருக்கும் பொதுவான விசயங்களை
அடித்து விடுவார்கள். அதில் அநேக விசயங்கள் அப்படியே பொருந்தும். இதில் வேடிக்கை என்னவென்றால்
நீங்கள் வேண்டுமானால் உங்கள் நட்சத்திரம், ராசியை மாற்றிச் சொல்லிப் பாருங்கள். அப்போதும்
சோதிடர் சொல்லும் அத்தனை விசயங்களும் உங்களுக்கு அப்படியே பொருந்தும்.
பல பேரைச் சோதிடர்களைப் பார்க்க அழைத்துச்
செல்வதற்கு உதவியாய்ப் போய் எனக்கே அவ்வபோது அவர்களைப் போல பேச வருகிறது. உதாரணத்துக்கு
ஒன்று உங்களைப் பற்றிச் சொல்கிறேன் பாருங்களேன், "எல்லாருக்கும் வரிந்து கட்டிக்
கொண்டு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து கோதாவில் இறங்கிக் கெட்ட பெயரை வாங்கிக்
கொள்வீர்கள். உங்களால் எல்லாருக்கும் நன்மை நடக்கும். ஆனால் பாருங்கள் உங்களுக்கு
மட்டும் எதுவும் நடக்காது. உங்களால் எல்லாரும் ஆதாயம் அடைவார்கள். ஆனால் உங்களுக்கு
ஆதாயமாக யாரும் இருக்க மாட்டார்கள். நாய் போல உழைப்பீர்கள். ஆனால் உங்களைத் தெருநாய்
கூட மதிக்காது" இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படியே உங்களைப் பற்றிச்
சொல்வது போல இருக்கிறதா? அதுதான் இல்லை. இந்தச் சங்கதிகள் உலகத்தில் உள்ள அத்தனை
மனிதர்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் உலகில் உள்ள அத்தனை மனிதர்களின் மனதிலும் இப்படி
ஒரு கருத்து அவர்களையும் அறியாமல் பொதிந்து கிடக்கிறது. அதாவது இப்படி யாராவது நம்மைப்
பற்றிச் சொல்ல மாட்டார்களா என்று? அதைத்தான் சோதிடர் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
சோதிடர் என்னைப் பற்றிச் சொன்ன விசயம்
மட்டும் அப்படியே பொருந்துகிறது. அதாவது நான் கும்பராசிக்காரன் என்பதால் எனக்கு எப்போதும்
சளி இருக்கும் என்றார். கும்பம் என்றாலே தண்ணீர்தானே இருக்கும்! சளியும் தண்ணீர்தானே!
ஆதலால் எனக்கு எப்போதும் சளி இருக்கும் என்று அப்படி ஓர் அறிவியல் பூர்வமான விளக்கத்தைச்
சொன்னார் போலும் சோதிடர். அது சரி எனது நண்பன் கொட்டமுத்து கோவிந்தனுக்கும் சளி
இருக்கிறது. சளி என்றால் ஆளானப் பட்ட, நாளானப் பட்ட சளி. ஆஸ்துமா என்று போய் ட்ரீட்மெண்ட்
எடுக்காத குறை. ஆனால் அவன் விருச்சிக ராசிக்காரன். நியாயப்படி அவனுக்குச் சளி இருக்கக்
கூடாது, கொடுக்குதான் இருக்க வேண்டும். அவன் பேச்சில் கூட ஒரு சிறு கடிதல் இருக்காது.
அப்படி ஒரு குழந்தை மனசு. "அடே முட்டாள்!" என்றாலும் கோவப்பட மாட்டான்.
"இந்த அறியாமை ஒழிக்க வழியே கிடையாதா மச்சான்?" என்று புலம்புவான்.
*****
No comments:
Post a Comment