கொடுத்து வெச்ச மாமியா!
செய்யு - 543
கிட்டதட்ட கலியாணத்துக்கான எல்லா சிலவுகளையும்
செஞ்சு முடிச்சாச்சுன்னு சுப்பு வாத்தியாரு நெனைச்சப்பத்தாங் பாக்குக்கோட்டை சரசு
ஆத்தா திட்டைக்கு கலியாணத்துக்கு ஒரு வார காலத்துக்கு மின்னாடி ஆட்டோவுல வந்து எறங்குனுச்சு.
கலியாணம் சம்பந்தமா எல்லாத்துக்கும் ஏதோ ஒரு வேல இருந்துச்சு. அதெ மெனக்கெட்டுப் பாத்துக்கிட்டு
சனங்க கெடந்துச்சுங்க. விகடு பள்ளியோடம் போயிருந்தாம். சுப்பு வாத்தியாரு பந்தல்
போடுறதுக்கும், டியூப் லைட்டு கட்டுறதுக்கும் ஆளப் பாத்துச் சொல்லி வுடப் போயிருந்தாரு.
திடீர்ன்னு சரசு ஆத்தா வந்து நின்னதுல வெங்கு, ஆயி, செய்யு எல்லாம் போட்ட வேலையப்
போட்டபடி வந்து நின்னுச்சுங்க. செய்யுவப் பாத்ததும் சரசு ஆத்தா மொகத்துல கையக் கொண்டுப்
போயி நெட்டி முறிச்சிது. "எங் கண்ணே பட்டுடும் போலருக்கே!"ன்னுச்சு சரசு
ஆத்தா.
சரசு ஆத்தாவ கொண்டுப் போயி கடைசீ அறையில
உக்கார வெச்சு கலியாணத்துக்குன்னு எடுத்த ஜவுளிகள காட்ட ஆரம்பிச்சது வெங்கு. கலியாண
ஜவுளிகளப் பாத்த சரசு ஆத்தா, கலியாணத்துக்குன்னு இதெ விட பிரமாதமான பட்டுப் பொடவைய
எடுத்துருக்கிறதாவும் அதுக்கேத்தாப்புல ஜாக்கெட்ட தைக்கணும்ன்னு சொன்னுச்சு. இங்க
எடுத்துருக்குற பட்டுப்பொடவையப் பாத்து அதுக்கு தைச்சிருந்த ஜாக்கெட்டைப் பாத்து,
"யிப்படி தைச்சா எம் மவ்வேனுக்குப் பிடிக்காதே! அவனுக்கு டிசைன்லாம் வெச்சி அதுல
மணியல்லாம் கோத்து வேலைப்பாடோட பண்ணணும்!"ன்னுச்சு. இருக்குற ஒரு வார காலத்துல
திடீர்ன்னு அப்படி எந்த தையல்கார்ரனப் பிடிச்சி தைக்க வைக்கிறதுங்க யோசனையில வெங்கு
சொன்னுச்சு, "கலியாணம் ஆன ஒம் வூட்டுக்கு வரப் போறவெ! அஞ்ஞ வந்ததும் வெத வெதமா
தைச்சுப் போட்டுக்கோ!"ன்னு.
"அதென்ன கலியாணத்துக்குப் பின்னாடி?
இப்பவே அதுக்குத்தாங் வந்திருக்கேம். பொண்ணோட ஜாக்கெட்ட ஒண்ணு கொடு அளவுக்கு. எப்பிடித்
தைக்கிறேம் பாருடி ஜாக்கெட்ட! கலியாணத்துல நீயி தெச்ச ஜாக்கெட்டா? நாம்ம தைச்ச ஜாக்கெட்டான்னு
போட்டி வெச்சுப்போமா போட்டி?"ன்னுச்சு சரசு ஆத்தா. செரின்னு வெங்கு ஒரு ஜாக்கெட்ட
எடுத்துக் கொடுத்துட்டு, "ஒம் பேத்தி! ஒம் மருமவளுக்கு நீயி பண்ணுற. ஒம் அளவுக்கு
முடியாட்டியும் ஏதோ நம்மட அளவுக்கு நாம்ம பண்ணி வுடுறேம்! இனுமே அவளெ பாத்துக்கிட
வேண்டியது நீந்தானே?"ன்னுச்சு வெங்கு. அப்போ வெங்கு கண்ணக் காட்டவும் ஆயி சமையல்கட்டுக்கு
ஓடியாந்து டீத்தண்ணியப் போட்டுட்டு இருந்தா.
"அப்பிடியில்லடி வெங்கு! கலியாணத்துல
பொண்ணப் பாக்குற சனங்க அசந்துல்லா போவணும், டாக்கடர்ரு பொண்டாட்டி எப்பிடி இருக்கான்னு!
அதுக்குல்லா நாம்ம மெனக்கெடுறேம். அப்பிடிச் சொன்னத்தான நமக்குப் பெருமெ! கலியாணங்றது
ஒரு தடவெதானே! ஒரு மொறைதானே! அதெ கொஞ்சம் பெருமெபடுற மாதிரிக்கிப் பண்ணுறதுல என்னத்தெ
கொறைஞ்சிப் போயிடப் போறேம்?"ன்னுச்சு சரசு ஆத்தா.
"அத்துச் செரித்தாம் சின்னம்மா! நீயி
டவுன்ல இருக்கே. நாம்ம கெராமத்துல இருக்கேம். நமக்கு அந்த அளவுக்கு வெவரம் பத்தாது
பாரு இந்தப் பொடவெ ஜாக்கெட்டு வெசயத்துல எல்லாம். ஏதோ பொடவைய எடுத்துக் கொடுத்தா
கட்டிக்கிடறது, ஜாக்கெட்ட தைச்சுக் கொடுத்தா போட்டுக்கிடறது. அம்மாந்தாங் தெரியும்
நமக்கு. ஜாக்கெட்டுல்ல டிசைன்ன வெச்சித் தைக்குறது, சன்னல்ல வெச்சித் தைக்குறது, மணிய
கோத்து தைக்குறதுல்லாம் நமக்கு என்னத்தெ தெரியுது? அப்பிடில்லாம் நாம்ம கேட்டதுமில்ல,
காண்டதுமில்ல!"ன்னுச்சு வெங்கு.
"பெறவு பொண்ணுக்குக் கலியாண அலங்காரம்லாம்
பாக்குக்கோட்டையில பெரமாதமா பண்ண ஏற்பாடு ஆயிட்டு இருக்கு. பொண்ண சனிக்கெழம மத்தியானத்துக்குல்லாம்
பொண்ணு அழைப்புக்கு அனுப்பிச்சிடு. அதுக்குன்னெ மூணு வேன ஏற்பாடு பண்ணிருக்காம் மவ்வேம்!"ன்னுச்சு
சரசு ஆத்தா.
"செரி சின்னம்மா! அப்பிடியே பண்ணிப்புடுறேம்!"ன்னுச்சு
வெங்கு.
"இன்னும் பத்திரிகெதாம் வைக்காம கெடக்கு!"ன்னுச்சு
சரசு ஆத்தா.
"ஏஞ் சின்னம்மா?"ன்னு படபடப்பா
கேட்டுச்சு வெங்கு. அதுக்குள்ள டீத்தண்ணியப் போட்டுகிட்டு ஒரு தட்டுல பண்டத்தெ எடுத்துக்கிட்டு
வந்தா ஆயி. அதெ பாத்ததும் சரசு ஆத்தா, "அட எம் விகடுப் பொண்டாட்டியே!"ன்னு
கிட்டக்க கூப்புட்டு வெச்சி மொகத்த தடவி நெட்டி முறிச்சது. முறிச்சிட்டு, "சித்தெ
கலியாணப் பொண்ண வெளியில அழைச்சிக்கிட்டுப் போயி பேசிட்டிரு. கலியாணம் சம்பந்தமா ஒம்மட
மாமியாகிட்டெ சில முக்கியமான சங்கதிகளப் பேசணும்!"ன்னுச்சு சரசு ஆத்தா. ஆயிக்கு
ஒண்ணும் புரியல. கலியாணம் விசயம் பேசுறப்ப நாம்ம கூட இருக்குறதுல என்ன ஆயிடப் போவுது?
கலியாணப் பொண்ணு இருக்குறதுல என்ன ஆயிடப் போவுதுன்னு நெனைச்சா. வெங்குவுக்கும் அது
புரிஞ்சது. இருந்தாலும் ஆயியப் பாத்து, "நீயி சித்தெ செய்யுவ அழைச்சிக்கிட்டுப்
போயி கொல்லையிலயோ கூடத்துலயோ பேசிட்டு யிரு. சின்னம்மா ஏதோ தனியா சொல்லணும்ன்னு
நெனைக்குறேம்!"ன்னு வெங்கு சொன்னதும் ஆயி செய்யுவ அழைச்சுக்கிட்டு கொல்லைப்
பக்கம் போனுச்சு.
ரண்டு பேத்தும் வெளியில போயிட்டதெ பாத்துக்கிட்டு,
"கலியாணச் சிலவுக்குக் காசிப் பத்தலையாம்டி! அதெ யாருகிட்டெ கேக்குறதுன்ன யோஜனையெ
பண்ணிட்டு உக்காந்திருக்குதுங்க வூட்டுல! அதாங் பத்திரிகெ வைக்காம கெடக்குதுடி!"ன்னுச்சு
சரசு ஆத்தா.
"ன்னா சின்னம்மா! கலியாணத்துக்கு
ஒரு வார காலந்தானே இருக்குது. யிப்போ வந்து பத்திரிகெ வைக்காம கெடக்குதுங்றீயே? இஞ்ஞ
ஒருத்தரு பாக்கியில்லாம எல்லா எடத்துலயும் பத்திரிகெ வெச்சு முடிச்சாச்சு. ஏஞ் சின்னம்மா!
இஞ்ஞயிருந்து கலியாணச் சிலவுக்குன்னே ஆறு லட்சத்தெ சொளையா கொண்டாந்து கொடுத்து வூட்டுக்காரரு.
அத்துப் பத்தலையாமா?"ன்னுச்சு வெங்கு.
"கல்யாணப் பொண்ணோட அளவு ஜாக்கெட்ட
வாங்கிட்டு அப்பிடியே அதெயும் சொல்லிப்புட்டுப் போவம்னுத்தாம் வந்தேம். ஒம்மட வூட்டுக்காரர்கிட்டெ
பாத்துப் பதனமா நீயேச் சொல்லுதீயா? நாம்ம சொல்லட்டுமா?"ன்னுச்சு சரசு அத்தா.
"கடெசீ நேரத்துல வந்து இப்பிடிச்
சொன்னீயேன்னா எப்பிடிச் சின்னம்மா பொரட்டுறது? ஒமக்குத் தெரியாததா? இப்பதாங் நகெ
எடுத்து முடிஞ்சது. கலியாணத்தக்கான சாமாஞ் செட்டுக வாங்கி முடிச்சது. வூட்டுக்குப்
பெயிண்ட் வெச்சு வேல முடிஞ்சது. ஜவுளிகள எல்லாத்தையும் போட்டாச்சுது. பத்திரிகெ வைக்கன்னு
அலையோ அலைன்னு அலைஞ்சு உக்காந்திருக்காக. மிச்ச சிலவுக்கு வட்டிக்கு வாங்கித்தாம்
சின்னம்மா கதெ ஓடுது!"ன்னுச்சு வெங்கு.
"அப்பிடின்னா ஒண்ணு பண்ணலாமாடி?"ன்னுச்சு
சரசு ஆத்தா.
"சொல்லு சின்னம்மா!"ன்னுச்சு
வெங்கு.
"கார்ர வேணும்ன்னா பெறவு வாங்கிக்கிடலாம்.
அந்தக் காசிய எடுத்து கலியாணச் சிலவெ முடிச்சிக்கிடலாமா?"ன்னுச்சு சரசு ஆத்தா.
"ன்னா சின்னம்மா சொல்றே? கார்ரும்
இன்னும் வாங்கலியா? அதுக்குத்தாம் அம்மாம் சீக்கிரமா பணத்தெ கொண்டாந்து கொடுத்தமா?
காருக்குன்னு பத்து லட்சம் கொடுத்திருக்கே! பத்து லட்சமா மேக்கெண்டு கலியாணச் சிலவுக்குத்
தேவ?"ன்னுச்சு வெங்கு.
"பத்து லட்சமில்லடி வெங்கு! ரண்டு
லட்சந்தாங் தேவப்படுது. ஆன்னா காரு பத்து லட்சத்துல கம்மியா வாங்குனா செரியா இருக்காதுன்னு
நெனைக்குறாங் டாக்கடர்ரு. அதாங் யிப்போ இதுல ரண்டு லட்சத்தெ எடுத்துக்கிட்டு மிச்சத்தெ
பாங்கியில போட்டு வெச்சி ரண்டு லட்சம் சேந்தப் பெற்பாடு நல்ல வெதமா பத்து லட்சத்துக்கே
வாங்கிப்புடுவேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
"ன்னா சின்னம்மா யிப்போ வந்து திடீர்ன்னு
யிப்பிடிச் சொன்னா என்னத்தெ பண்ணுறது? என்னத்தெ முடிவு எடுக்குறதுன்னே புரிய மாட்டேங்குதே!"ன்னுச்சு
வெங்கு.
"புரியாம போறதுக்கு ஒண்ணும் இல்ல.
முடிஞ்சா ரண்டு லட்சத்தெ கொடு. கலியாணத்துக்குப் பெறவு கூட காசியக் கொடுக்கச் சொல்லிடுறேம். யில்லன்னா வேற வழியில்லா. காரு கலியாணத்துக்குப்
பெறவு தோதுபட்டப்ப வாங்கிக்கிடலாம். நாம்ம பொம்பளைங்களுக்குள்ள பேசி ஆம்பளைங்ககிட்டெ
சொல்லிப்புட்டா பதனமா போயிடும். அவுங்க ஆம்பளைங்ககுள்ள பேசிக்கிட்டு ஒண்ணு கெடக்க
ஒண்ணு வார்த்தைய வுட்டுப்புட்டா, அதுவும் கலியாணம் நடக்குற நேரத்துல அதெல்லாம் தேவையான்னு
யோஜனெப் பண்ணிப் பாருடி வெங்கு? அதுக்குதாங் இந்த விசயத்தப் பேசுறப்ப ஒம்மட மருமவ்வே
உட்பட ஒம் பொண்ணு கூட இருக்கக் கூடாதுன்னு வெளியில அனுப்பி விட்டேம். இத்துச் சுத்தப்படாதுன்னா
சொல்லு. ராத்திரிக்கி எம்மட வூட்டுக்காரரெ வுட்டு ஒம்மட வூட்டுக்காரருக்குப் போன
அடிக்கச் சொல்லுறேம். என்னவோ நமக்கு ன்னா தோணுதுன்னா நம்மகுள்ள நாம கொண்டுப் போயி
தீத்துக்கிறதுதாங் நல்லதுன்னு தோணுது!"ன்னுச்சு சரசு ஆத்தா.
"சித்தப்பாவ வுட்டுல்லாம் போனு பண்ண
வாணாம் சின்னம்மா. நாம்மப் பேசிப் பாக்குறேம். ரண்டு லட்சம்தானே. எங்கயாச்சும் பொரட்ட
முடியுமான்னு பாக்குறேம்?"ன்னுச்சு வெங்கு.
"அதுக்குதாம்டி தங்கம் செருமப்பட்டாலும்
நேர்ல வந்துச் சொல்லிட்டு அப்பிடியே அளவு ஜாக்கெட்டை வாங்கிட்டுப் போயிடுவேம்ன்னு
மெனக்கெட்டு வந்தேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
வெங்கு இப்பிடி சரசு ஆத்தாகிட்டெ சொல்லிட்டாலும்
அதோட மனசுக்குப் பகீர்ன்னுத்தாம் இருந்துச்சு. கடெசீ நேரத்துல வெச்சுக் கழுத்தறுக்குறததாங்
பட்டுச்சு. என்னவோ பல விசயங்க திட்டம் போட்டு நடக்குறதாவும், அதுல தெரியாத்தனமா போயி
குடும்பத்தெயே சிக்க வெச்சிப்புட்டதாவும் மனசுக்குள்ள பயமும் வந்துடுச்சு வெங்குவுக்கு.
இந்தக் கலியாணத்துக்காகப் புருஷனும், மவனும் சக்திக்கு மீறி கடனெ வாங்கி வெச்சிருக்காங்றது
அதுக்குப் புரிஞ்சிருந்துச்சு. இதுல இன்னும் சக்திக்கு மீறி ரண்டு லட்சம்ன்னா அதெ கேக்குறதுக்கே
வெங்குவுக்கு ரொம்ப தயக்கமாவும், யோசனையாவும் இருந்துச்சு. "உஞ்சினி ஐயனரப்பா!
இதெ எப்பிடிக் கேக்குறது? எப்பிடிப் புரிய வைக்குறதுன்னே புரியலையப்பா! நீந்தாம் கூட
மாட தொணைக்கு நின்னு ஒதவணும். இதெ சொல்லுறப்போ எந்த வெதமான பெரச்சனையோ மனச் சங்கடமோ
வாராம பாத்துக்கிடணும்!"ன்னு வேண்டிகிட்டு வெங்கு.
வெங்கு வேண்டுறதப் பாத்துப்புட்டு சரசு
ஆத்தா சொன்னுச்சு, "அதல்லாம் ஒரு கொறையும் வாராதுடி ஒம் நல்ல மனசுக்கு! கேட்டுப்பாரு!
முடிஞ்சாத்தானே? முடியாட்டியும் காரு காசில்லா பாத்துக்கிடலாம். இதல்லாம் ஒருத்தருக்கொருத்தரு
கலந்துக்கிடறதுதானே. கலந்துக்கிடுறோம். முடிஞ்சா பாப்பேம். யில்லன்னா அதுக்காக வுட்டுப்புடவா
போறேம்? கார்ர பெறவு வாங்கிப்பேம். கலியாணத்தெ நாலு பேத்து மூக்குல வெரல வைக்குறாப்புல
வெச்சி செஞ்சிப்புடுவேம்! செரிடியம்மா! வந்து ரொம்ப நேரமாவப் போவுது! ஆட்டோக்கார்ரேம்
காத்துட்டு வேற கெடப்பாம்! கெளம்பிப் போனம்ன்னா வேல கொஞ்சம் ஆவும். நீயி ன்னா ஏதுன்னு
கேட்டுக்கிட்டு சங்கதிய நமக்குப் போன அடி. அதாங் பொண்ணுக்குப் போன வாங்கிக் கொடுத்திருக்காம்ல்லா.
அதுல நம்மட போனு நம்பரு இருக்கு. அதுக்கு அடிச்சிச் சொல்லு! நாம்ம கெளம்புறேம்!"ன்னுச்சு
சரசு ஆத்தா.
கெளம்புறப்ப கொல்லைப் பக்கம் போயி ஆயி,
செய்யு ரண்டு பேத்தையும் பாத்துட்டு, "செரி நாம்ம கெளம்புறேம்டி! அடியே விகடு
பொண்டாட்டி கலியாணப் பொண்ண நல்ல வெதமா பாத்துக்கோ! நீயி நல்ல வெதமா வெச்சிக்கிறதெப்
பொருத்துதாங் கலியாண நாளு அன்னிக்கு அவ்வே மொகம் பூரிப்பா இருக்கும் பாத்துக்கோ!"ன்னு
சொல்லிட்டுக் கெளம்புனுச்சு. வெங்கு, ஆயி, செய்யு மூணு பேத்தும் ஆட்டோவுல ஏறிப் போன
சரசு ஆத்தாவப் பாத்துக்கிட்டெ நின்னுச்சுங்க. ஆட்டோ அது பாட்டுக்கு போயிகிட்டெ இருந்துச்சு
புகைய வுட்டுக்கிட்டு. சரசு ஆத்தா சொல்லிட்டுப் போன விசயத்தெ சுப்பு வாத்தியார்கிட்டெ
எப்பிடி ஆரம்பிக்கிறதுன்னு அது பாட்டுக்கு வெங்குவோட மனசுலயும் யோசனெ போயிட்டெ இருந்துச்சு
நெஞ்சுல பதற்றத்த உண்டு பண்ணிக்கிட்டு.
"கொடுத்து வெச்ச யாத்தா! வந்து மெனக்கெட்டு
ஜாக்கெட்டு தைக்கல்லாம்லா ஆட்டோவுல வந்துட்டுப் போவுது. அந்த டிசைன்னப் பத்தி தெரிஞ்சிடக்
கூடாதுனுல்லா நம்மள வெளியில போவ வுட்டுடுச்சு. கொடுத்து வெச்ச மாமியா! கொடுத்து
வெச்ச மருமவ்வே!"ன்னா ஆயி.
"ஆம்மா கொடுத்து வெச்சவதாங். அதாங்
வந்து வந்துக் கேட்டுட்டுப் போயிட்டு இருக்கா!"ன்னு மனசுக்குள்ள கருவிக்கிட்டு
வெங்கு.
*****
No comments:
Post a Comment