12 Aug 2020

ஆறு லட்சத்தோட ஒரு காரு பயணம்!

 

ஆறு லட்சத்தோட ஒரு காரு பயணம்!

செய்யு - 534

            வடவாதி ஸ்டேட் பாங்கியிலேந்து வாங்கியாந்த பணத்துல ஆறுலட்சத்தெ எண்ணி எடுத்து தினசரித் தாளச் சுத்தி நூலால கட்டி வெச்சு அதெ ஒரு மஞ்சப் பைக்குள்ள பத்திரம் பண்ணிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. அவரோட அண்ணங்காரரு மவனான பரசுகிட்டெ திருவாரூருலேந்து ஒரு கார்ர எடுத்துட்டு வாரச் சொல்லிருந்தாரு. மொத நாளு செவ்வாய்க்கெழமெயே பரமுவோட அப்பாகிட்டெயும் சொல்லி தொணைக்கு வாரச் சொல்லிருந்தாரு. ஒறவுக்குள்ள கலியாணத்துக்குன்னு பணத்தெ கொடுக்குறதா இருந்தாலும் பணங் கொடுக்குறதுக்கு அத்தாட்சியா இருக்கட்டும்ன்னு அது ஒரு ஏற்பாடு.

            சொன்னபடிக்கு காலையில ஆறு மணிக்கெல்லாம் காரோட வந்து நின்னுச்சு பரசு அண்ணன். பரமுவோட அப்பா அஞ்சரைக்கெல்லாம் வந்து சுப்பு வாத்தியாரு வூட்டுல உக்காந்துட்டாரு. டீத்தண்ணிப் போட்டு தயாரா இருந்துச்சு. அதெ குடிக்குறதுக்கு மட்டும் அஞ்சு நிமிஷம். பெறவு கார்ல ஏறி உக்காந்து கெளம்பிட்டாங்க கலியாணச் சிலவுக்கான பணத்தெ பாக்குக்கோட்டையில கொண்டு போயிக் கொடுக்க. 

            காரு எட்டு மணிக்கெல்லாம் பாக்குக்கோட்டைக்குப் போயிச் சேந்துடுச்சு. ராசாமணி தாத்தா நல்லா கொறட்டை வுட்டுத் தூங்கிட்டு இருந்தாரு. எல்லாரும் வந்ததெப் பாத்து சரசு ஆத்தாதாங் எழுப்பி வுட்டுச்சு. எழுந்திரிச்சவரு ஒரு அஞ்சு நிமிஷம்ன்னு சொல்லிட்டு அரை மணி நேரத்துக்கு டாய்லெட்டுக்கு உள்ளார போயிட்டு வந்தாரு.

            "ராத்திரிக்கி ரொம்ப நேரத்துக்கு உக்காந்து டிவியப் பாக்குறது. ராத்தூக்கம் பிடிக்க ஒண்ணு ரண்டு மணி ஆயிடும். விடிய விடிய நாடகம் போடுறாம்ல. மின்னாடி திருவிசாக் காலத்துல ரண்டு நாளு, மூணு நாளு விடிய விடிய நாடகமா இருக்கும். இப்பதாங் டிவி வந்தப் பெறவு தெனமும் விடிய விடிய நாடகமா போடுறானே. அதல்லாம் பாத்துப்புட்டுதாங் தூங்குறது. ராத்திரி எட்டு ஒம்போது மணி வாக்குல வந்தா, சோத்தத் தட்டுல போட்டு வெச்சா அதெ அப்பிடியே வெச்சுக்கிட்டு பன்னெண்டு மணி வரைக்கும் ஒவ்வொரு சோறா தின்னுகிட்டெ நாடவத்தெ பாத்துக்கிட்டுக் கெடக்குறது. பெறவு வெளியில காத்தாடப் போயி நாலைஞ்சு பீடியப் பிடிச்சி முடிக்கிறது. அப்புறம் தூங்குனா காலங் காத்தால எப்பிடி எழுந்திரிக்கிறது? தெனமும் இதாங் பொழைப்பு. காலைச் சாப்பாட்டா முடிச்சிட்டுப் பத்து பதினோரு மணிக்கு மேல கெளம்புனா, ரண்டு மூணு மணிக்கு வந்து சாப்புட்டுப்புட்டு ஒரு தூக்கத்தப் போடுறது. அஞ்சு ஆறு மணி வாக்குல கெளம்பிப் போறது. ராச வாழ்க்கெதாங் இவருக்கு. அஞ்ஞ பையெ தூங்காம கொள்ளாம கூட ஒழைச்சிக்கிட்டுச் சம்பாதிச்சிக்கிட்டுக் கெடக்காம். அவ்வேம் பொழப்பு அப்பிடிப் போவுது. இந்த மனுஷரு பொழப்பு ஒழைக்காம தூங்கித் தூங்கியே இப்பிடிப் போவுது!"ன்னு பெரிய பிரசங்கத்த வெச்சி முடிச்சிது சரசு ஆத்தா ராசாமணி தாத்தா டாய்லெட்டுக்குள்ள பூந்ததெப் பாத்துட்டு. அந்தப் பிரசங்கத்துக்கு எடையில காப்பித் தண்ணியப் போட்டு தட்டுல கொஞ்சம் பண்டத்தெயும் கொண்டாந்து வெச்சிது.

            "கலியாண ஏற்பாடெல்லாம் எப்பிடிப் போயிட்டு இருக்குது?"ன்னாரு பரமுவோட அப்பா.

            "அதாங் கதெயச் சொன்னேனே! விடிய விடிய கதெயக் கேட்டு ராமனுக்கு சீதெ சித்தப்பாங்ற மாரிக்கில்லா கேள்வியக் கேக்குதீயே? அவ்வேம் பயெ இஞ்ஞ வந்தாத்தாங் வேல ஆவும். இவரு ச்சும்மா? ஒண்ணுக்கும் லாயக்கிக் கெடையாது. திங்கணும், தூங்கணும், பீடியப் பிடிக்கணும், டிவிப்பொட்டியில நாடவத்தெ பாக்கணும். வேறொண்ணும் தெரியா. பணங்காசி கைக்கு வந்த பெற்பாடு மெடிக்கல் லீவப் போட்டுட்டு வந்து வேலைய ஆரம்பிக்கிறாம்ன்னு சொல்லிட்டுப் போனாம். இந்த ஞாயித்துக் கெழமெ வந்தாங். நீஞ்ஞல்லாம் வருவீயோன்னு ஒரு எதிர்பாப்பு!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            அப்பதாங் ராசாமணி தாத்தா உள்ள நொழைஞ்சாரு. பீடி நாத்தம் கொடல பெரட்டுனுச்சு. அதெ ஒண்ணும் சொல்ல முடியாம சமாளிச்சிக்கிட்டாங்க. சரசு ஆத்தாவுக்கு அது பழக்கமா போயிருக்கும் அதொட மொகத்துல அதெப் பத்தி ஒண்ணும் சுளிப்பக் காணும்.

            "யிப்பிடி பொழுது விடியறதுக்கு மின்னாடியே வந்து நிப்பீங்கன்னு எதிர்பாக்கல மாப்ளே!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "ம்க்கூம்! பொழுது விடிஞ்சு ரண்டு மணி நேரத்துக்கு மேல ஆவப் போவுது!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "அத்து ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நேரத்துல விடியும். நாம்ம நமக்கு விடியுற நேரத்ததான சொல்ல முடியும்!"ன்னு சிரிச்சுச்சு ராசாமணி தாத்தா.

            "அப்போ பத்து மணிக்கு முழிச்சா பொழுது இன்னும் ரண்டு மணி நேரங் கழிச்சுத்தாங் விடியும் போலருக்கே?"ன்னுச்சு பரசு அண்ணன்.

            "அதுல பாத்தீங்கன்னா! நாம்ம சாதவம் பாக்குற ஆளு. ராத்திரி பத்து பதினோரு மணி வரைக்கும் கூட்டம் வந்துட்டே இருக்கும். எல்லாத்தையும் பாத்து வுட்டப்புட்டுத்தாங் வூட்டுக்கு வர்றது. பிற்பாடு சாப்பாட்ட முடிச்சேம்ன்னா மணி எப்பிடியும் பன்னெண்டு ஆயிடும். ஒடனே தூக்கம் கெடையாது. ஒரு ஆழ்நெல தியானம். நம்மகிட்டெ சாதவம் பாக்க வர்றவேம் பல வெத சங்கடம், தோஷத்தோட வருவாம். எல்லாம் மனசுல கெடக்கும். அதெ அப்பிடியே ஒண்ணு குமிச்சி நெத்திப் பொட்டுக்குக் கொண்டு வருவேம். யாரு யாரு எவ்வேம் எவனுக்குத் தொந்தரவு கொடுப்பாம்ன்னுப் பாத்துப்புட்டு அதுல அவனவனுக்கு நம்மாளுக்கு ஏத்தாப்புல ஒதவி வுடுறாப்புல ஒரு ஏவல மனசுக்குள்ளேயிருந்து பண்ணி விடுவேம். இத்து மலையாள வேலம்பாங்க. அல்லாரும் பண்ணி வுட முடியாது. நாம்ம பண்ணுவேம். அதெப் பாத்தீயன்னா நல்லவனுக்கு நல்லதெ செய்யும். கெட்டவனுக்கு கெட்டதெ செய்யும். ரொம்ப உக்கிரமான விசயம். அதெ முடிச்சேம்ன்னா தூங்க மணி ரண்டும் ஆவலாம். மூணும் ஆவலாம். இதெ பண்ணுறதால பாத்தீயன்னா கூட்டம் நம்மகிட்டெ கும்மும். இந்தச் சேதி ஒருத்தன் வந்துப் பாத்தாம்ன்னா அவ்வேம் ஒறவு, சிநேகிதனுங்க, ஊருகாரனுங்கன்ன பரவி நாளுக்கு நாப்பது அம்பதுன்னு வந்து நிக்குறாம். நம்மால சமாளிச்சு ஓய மாட்டேங்குது. நாம்மள நீஞ்ஞ வந்தப்போ பாத்தீங்கன்னாலும் தூங்குறாப்புல இருக்கும். இருந்தாலும் பலவெதமான ஏவலு வேலைக மனசுக்குள்ள அது பாட்டுக்கு நடந்துகிட்டு இருக்கும்!"ன்னு ராசாமணி தாத்தா ஒரு புது கதையெ அளந்துச்சு.

            "கலியாண வேலல்லாம் எப்பிடிப் போயிட்டு இருக்கு? இப்பதாங் வூட்டுக்காரவங்கிட்டெ கேட்டேம்!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "எஞ்ஞ நமக்கு நேரம் இருக்கு சொல்லுங்க? நம்ம ஆபீஸ்ல கூட்டம்ன்னா கூட்டம் தாங்க முடியாத கூட்டம். இருந்தாலும் வேல ஆயிட்டெ இருக்கு. அவ்ளோ அலமலப்புக்கு எடையிலயும் அப்பிடி இப்பிடின்னு அலைஞ்சு மேளக்கார்ரேம், சமையல்கார்ரேம், பூக்கார்ரேம், மண்டபத்துக்கார்ரேம்ன்னு ஒரு பிடி பிடிச்சி வெச்சிருக்கேம். பத்திரிகெ வேல கூட ஆயிட்டு இருக்குதுன்னா பாருங்க! பாவம் மாப்ளே கெராமத்துல கெடந்துக்கிட்டுச் செருமம் வாணாம்ன்னு நாம்மத்தாம் நாம்ம கஷ்டப்பட்டாலும் பரவால்ல கலியாணத்தெ மெனக்கெட்டு முடிச்சிக்கிடுறேம்ன்னு சொல்லிட்டேம்! ஒறவுல ஒருத்தருக்கொருத்தரு இப்பிடி ஒத்தாசிப் பண்ணிக்கிட்டாதாங் காலியாணங் காட்சி ஆவும்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "செரி மாமா! பணத்தெ வாங்கிக்கிட்டீயேள்ன்னா நாஞ்ஞளும் கெளம்பிப் புடுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதெப் பாருங்க! நாம்ம வாணாம்ன்னுத்தாம் சொன்னேம். மாப்ளே வுட மாட்டேங்றாப்புல. கலியாணச் சிலவுல நாம்ம பாதித் தருவேம்ன்னு அடம் பண்ணா நாம்ம என்னத்தெ பண்ணுறது? குடும்பத்துல பெரிய மனுஷனா நாம்மத்தான தணிச்சி வுட வேண்டிதா இருக்கு. மனத்தாங்கல் வாணாம்ன்னு செரி நீயி கொண்டாந்து கொடுக்குறதெ கொடுன்னுட்டேம்! இப்ப அவுங்களுக்கும் ஒரு திருப்தியா ஆவுதுல்லா!"ன்னுச்சு ராசாமணி தாத்தா பரமுவோட அப்பாவப் பாத்து.

            "அத்து செரிதாங்!"ன்னு சொன்னதோட நிப்பாட்டிக்கிட்டாரு பரமுவோட அப்பா.

            "இந்தாங் மாமா!"ன்னு எழுந்து நின்னு மஞ்சப் பைய ராசாமணி தாத்தாகிட்டெ கொடுக்கப் போனாரு சுப்பு வாத்தியாரு.

            "அந்த வேலதாங் கெடையாது மாப்ளே! பணத்தெ யத்தோ சாமி மாடம் இருக்கு. அஞ்ஞக் கொண்டு போயி வெச்சிப்புடு. அதெ நாம்ம கையாலத் தொட மாட்டேம். பயெ வந்துதாங் அதெ கையில எடுக்கணும். ஒம் மாப்புள, ஒம்மட ஒறவு இனுமே. அதால ஒங்காசிய ஒம் மாப்புள வந்து கைய வெச்சி எடுத்துக்கிடட்டும். நாம்ம கைய வைக்கணும்ன்னு எதிர்பாக்காதே!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            சரிதான்னு சுப்பு வாத்தியாரு சாமி மாடத்துக்குள்ள மஞ்சப் பையக் கொண்டு போயி வெச்சிட்டு, ராசாமணி தாத்தாகிட்டெ, "ஆறு லட்சம் இருக்கு மாமா!"ன்னாரு.

            "அத்து எம்மாம் இருந்தா நமக்கென்ன? பயெ வந்துதாங் கைய வைப்பாம். இனுமே அத்து ஒமக்கும் ஒம் மாப்புள்ளைக்கு உள்ள உறவு. நாளைக்கு வந்தேன்னாலும் நீயி வெச்சது வெச்ச எடத்துல இருக்கு. அந்தாண்ட இந்தாண்ட இம்மி அசைஞ்சிருக்காது!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "இந்தாருங்க பெரியவரே! நாட்டுல திருட்டுப் பயம் அதிகமா இருக்கு. அதெ எடுத்து பாங்கியில போட்டு வெச்சுக்கிட்டு அஞ்ஞயிருந்து தேவப்பட்டப்போ பணத்தெ எடுத்துக்கிடுங்க!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "நல்ல கதெயக் கெடுத்தீயே! நம்ம வூட்டுல எவ்வேம் பூந்துத் திருடுவாம்? வூட்டச் சுத்தி தகடெ பதிச்சி வெச்சிருக்கேம். வந்து திருடணும்ன்னு நெனைச்சா கையி காலு வெளங்காமப் போயிடுவாம். ஒருத்தெம் அப்பிடித் திருடணும்ன்னு நெனைச்சா போதும் அன்னிக்குக் கனாவுல அவ்வேம் மொகம் வந்துப்புடும். அதெ அப்பிடியே ஒரு படமா வரைஞ்சு போலீசு டேசன்ல கொடுத்தா பிடிச்சி உள்ளார வெச்சி மொத்து மொத்துன்னு மொத்திட மாட்டாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "ஒஞ்ஞளுக்கும் வேல நெறையா இருக்கும். நாமளும் இவுங்கள எல்லாத்தையும் ஒரு தொணைக்கு இருக்கட்டுமேன்னு அழைச்சிட்டு வந்தேம். கெளம்புனா நீஞ்ஞளும் ஒஞ்ஞ சோலியப் பாக்கலாம். நாமளும் இவுங்களக் கொண்டு போயி வுட்டுப்புடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அட யிரு மாப்ளே! சாப்புடாம கொள்ளாம கெளம்பக் கூடாது. சித்தெ பேசிட்டு இருங்க. நாம்ம போயி ஒரு குளியலப் போட்டுட்டு சித்த நேரத்துல ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துப்புடறேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "ஒண்ணும் அவ்சரமில்லே! மெதுவாவே வாஞ்ஞ!"ன்னுச்சு பரசு அண்ணன்.

            ராசாமணி தாத்தா குளியப் போட்டுட்டு காவி வேட்டியோட, கழுத்துல ஒரு துண்டோ வந்தப்போ மணி ஒம்போது இருக்கும். சரசு ஆத்தா இட்டிலியும், பொங்கலும், சட்டினியும் பண்ணி வெச்சிருந்துச்சு.

            "நாம்ம வழக்கமா பத்து மணிக்கு மேலத்தாம் சாப்பாட்ட சாப்புடுற ஆளு. இன்னிக்குத்தாங் ஆபீசுக்குப் போற ஆளெப் போல ஒம்போதுக்கு ஆவுது!"ன்னுச்சு ராசமாணி தாத்தா.

            "வூட்டுல சொன்னாங்க!"ன்னு சொல்லிச் சிரிச்சாரு பரமுவோட அப்பா.

            "அவ்வே சொல்லுவா ஆயிரத்தெ! நம்ம வேல நமக்குத்தானே தெரியும்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            சாப்பாட்ட முடிச்சிட்டுக் கொஞ்சம் கலியாணம் சம்பந்தமா பேசிட்டு இருந்துட்டு பத்து மணி வாக்குல கெளம்புனுச்சுங்க சுப்பு வாத்தியாரோட கோஷ்டி. கெளம்புறப்போ சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "மாமா! காருக்கான காசிய ரண்டு வாரத்துக்குள்ள கொண்டாந்திடுறேம்! லோனு போட்டு தயாரா ஆயிடுச்சு. பணத்தெ கணக்குல போட்டாம்ன்னா எடுத்தாந்து கொடுக்க வேண்டியதுதாங்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதுக்கென்ன மாப்ள! கலியாணத்துக்குத்தாங் நாளிருக்கே. நெதானமா கொண்டாந்து கொடு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            "நெதானமால்லாம் யில்ல மாமா! ரண்டு வாரத்துக்குள்ள முடிச்சிப்புடுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "செரி மாப்ளே! ஒந் தோதுக்குப் பாத்துக்கோ! ஒன்னயப் பத்தித் தெரியாதா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா சிரிச்சிக்கிட்டெ.

            "ஏம் பெரியவரே! யிப்பிடி பணத்தெ ஆளெ வெச்சுக்கிட்டுக் கார்ல கொண்டாந்து கொடுக்குறதுக்கு பாங்கியில ஒஞ்ஞ நம்பர்ர சொல்லிப்புட்டா ஒத்த நிமிஷத்துல பணத்தெ மாத்தி வுட்டுப்புடுவாம். நீஞ்ஞளும் இஞ்ஞ தேவையானப்போ தேவைபட்ட பணத்தெ எடுத்துக்கிடலாம்!"ன்னாரு பரமுவோட அப்பா.

            "அந்த வேல மட்டும் வெச்சுக்கிடாதீஞ்ஞ! ஏம் சொல்றேம்ன்னா, மவ்வேம் டாக்கடர்ரு இருக்காம்லே சம்பாத்தியம் நெறைய உள்ள ஆளு. இன்காம்டாக்ஸ் இருக்குல்லா அதுக்கு பணத்தெ கொண்டு போயி மூட்டெ மூட்டையா கட்டிட்டு இருக்காம்! இதுல இந்தப் பணம் வந்துச்சுன்னா அத்து எந்தக் கணக்கு ஏது கணக்குன்னு டில்லிக்கு வார வெச்சி வெசாரணையப் பண்ணி நொங்கு எடுத்துப்புடுவாம். அதாங் இப்பிடிக் கொண்டு வாரதுதாங் மாப்புள்ளைக்கி நல்லதுங்றேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா. அதெ கேட்ட பரமுவோட அப்பா அசந்துப் போயிட்டாரு. ‍

            "செரிங்க! நல்ல நேரத்துல நாஞ்ஞ எல்லாம் கெளம்புறோம்!"ன்னு சொல்லிட்டு கார்ல ஏறுனுச்சுங்க சனங்க.

            "மாமா! கெளம்புறேம்! எதா இருந்தாலும் போன அடிங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பாத்துச் சூதானமா கெளம்புங்க. வூடு சேந்ததும் போன அடிங்க!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.

            காரு கொஞ்ச தூரம் நகந்து மெயின்ரோட்ட பிடிச்சி ஓட்டமெடுக்க ஆரம்பிச்ச ஒடனே பரமுவோட அப்பா அது வரைக்கும் அடக்கி வெச்சிருந்தா சிரிப்பெ அடக்க முடியாம சிரச்சிட்டாரு.

            "ஏம் இப்பிடிச் சிரிக்கிதீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பெறவென்ன ஒஞ்ஞ சம்பந்தி மூட்டெ மூட்டாயக் கொண்டுல்லா இன்காம்டாக்ஸ் கட்டுறாராமுல்ல. அவ்வேம் மவ்வேம் ன்னா சினிமா ஸ்டாரா கேக்குறேம்? அவனுக்கு எதுக்குப் பிசாத்துக் காசி ஆறு லட்சம்லாம், மூட்டெ மூட்டையா இன்கம்டாக்ஸ் கட்டுறவனுக்கு?"ன்னாரு பரமுவோ அப்பா. அவரு சொல்லி முடிக்கல பரசு அண்ணனும் பலமா சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு.

            "அதெ வுடுங்க! எவனாச்சும் வூட்டுல திருட வந்தாம்ன்னா அவ்வேனே கனவுல வெச்சிப் பாத்து படமா வரைஞ்சி போலீஸ் டேசன்ல கொண்டுப் போயிக் கொடுப்பேம்ன்னு சொன்னாரு பாருங்க! அப்பலேந்து நம்மாள சிரிப்பெ அடக்க முடியல. எதாச்சிம் சிரிச்சி சித்தாப்பாவுக்குச் சங்கடமா போயிடுமோன்னு, யய்யயோ முடியலீங்க போங்க. எங்கப் போயி சித்தப்பா இப்பிடி ஒரு எடத்தெ பிடிச்சே!"ன்னு பகபகன்னு சிரிக்கி ஆரம்பிச்சிடுச்சு பரசு அண்ணன்.

            "காலாங்காலமா இப்பிடியே பேசிப் பழக்கமாயிடுத்து. இனுமேலா போயி அதெ திருத்த முடியுங்? எதெ சொன்னாலும் ஆமா ஆமான்னு சொல்லிக்கிட வேண்டியதுதாங், தலெய ஆட்டிக்கிட வேண்டியதுதாங்! நமக்கென்ன மாப்புள்ள பயதானே முக்கியம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "இனுமே ஒஞ்ஞ வாழ்க்கையில சிரிப்புக்குப் பஞ்சமிருக்காது வாத்தியாரே!"ன்னாரு பரமுவோட அப்பா. அதுக்கு என்னா அர்த்தங்றது காலம் போவப் போவத்தாம் இனுமேதான தெரியும்.

*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...