21 Aug 2020

நெடும்பயணங்கள்!

 

நெடும்பயணங்கள்!

செய்யு - 540

            கலியாணத்துக்குப் பத்திரிகை கொடுக்குற வேல ஒரு பெரும் வேல. தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க, ஒறவுக்காரவுங்க, பழக்கத்துல உள்ளவங்கன்னு ஒருத்தரு வுடாம கொடுக்கணும். சமயத்துல ஒருத்தருக்குக் கொடுத்து இன்னொருத்தருக்கு கொடுக்காம விட்டுடாமா அதாச்சி விடுபடாம பாத்துக்கணும். இதுக்கு சரியான வழி யாரு யாருக்குக் கொடுக்கணுமோ அவுங்க பேரையெல்லாம் பேப்பர்ல எழுதிடுறதுதாங். அதுல எழுத எழுத ஒவ்வொரு பேரா ஞாபவத்துக்கு வரும். எழுதும் போது விடுபட்டாலும் மறுநாளு அதெ பாக்குறப்போ விடுபட்டவங்க பேரு ஒண்ணு விடாம ஞாபவத்துக்கு வந்துடும். இந்த வேலைய எல்லாம் சுப்பு வாத்தியாரு பத்திரிகைய அச்சடிக்குறதுக்கு மின்னாடியே ஒரு நோட்டுப் போட்டு எழுதி அதுக்கு ஏத்தாப்புலத்தாம் பத்திரிகைய எண்ணி எதுக்கும் கூடுதலாவே இருக்கட்டும்ன்னு அத்தோட அம்பது பத்திரிகைய கூடவே அச்சடிச்சிருந்தாரு.

            ஒவ்வொரு பத்திரிகையையும் நேர்ல கொண்டுப் போயிக் கொடுக்கணுங்றதுல சுப்பு வாத்தியாருக்கு ஒரு பிடிவாதம். அத்து அவரோட கொணப்பாடு. எந்தப் பத்திரிகையையும் யார் மூலமா கொடுத்து விடுறதோ, அஞ்சல்ல அனுப்பி விடுறதோ அவருக்கு இஷ்டமில்ல. நம்மாலே நேர்ல போயி எத்தனெ பேத்துக்குப் போயி பத்திரிகெ வைக்க முடியுதோ அத்தனெ பேத்துக்குப் பத்திரிகெ வெச்சா போதும்ன்னு நெனைக்குற ஆளு. சனி, ஞாயித்துக் கெழமெ லீவு நாள்ன்னா விகடுவெ அழைச்சிக்கிட்டாரு. மித்த நாள்கள்ல அவரே கெளம்பிப் போயிப் பத்திரிகைய வெச்சிட்டு இருந்தாரு. பக்கத்துப் பக்கத்துல இருக்குற எடத்துக்கு எல்லாம் சுப்பு வாத்தியாரே டிவியெஸ் பிப்டியில போயி வெச்சிட்டு வந்துடுவாரு. தொலைவா உள்ள எடம்ன்னா மவனெ கூட தொணைக்கு அழைச்சிக்கிவாரு. அவுங்க ரண்டு பேரும் வண்டிய எடுத்தாங்கன்னா எரநூத்து முந்நூத்து கிலோ மீட்டர் வரைக்கும் சர்வ சாதாரணமா ஒரு நாளுக்கு அந்த டிவியெஸ்ல பிரயாணம் பண்ணி பத்திரிகைய வெச்சிடுவாங்க. ‍அதையெல்லாம் நெடும்பயணங்ற பட்டியல்லத்தாம் சேத்தாவணும்.

            மழைக்காலம் ஆரம்பிச்சிருந்துச்சு. அதுல சில நாட்கள் மழையாவும், சில நாட்கள் வெயிலாவும் மாத்தி மாத்தி ஒரு கொழப்பமான காலநிலை நிலவுனுச்சு. வண்டிய எடுத்துட்டா விகடுவும், சுப்பு வாத்தியாரும் எதையும் பொருட்படுத்துறதில்ல. மழை பேஞ்சாலும் செரித்தாம், வெயிலு அடிச்சாலும் செரித்தாம் வண்டி பாட்டுக்குப் போயிட்டே இருந்துச்சு. சில பிரயாணங்கள்ல கெளம்புறப்ப வெயிலு அடிச்சி, போயிட்டு இருக்குறப்ப மழையடிச்சு நனைச்சு வுட்டுப்புடும். சில பயணங்கள்ல கெளம்புறப்ப மழையடிச்சு போயிட்டு இருக்குறப்ப வெயில் அடிக்க ஆரம்பிச்சிருக்கும். எதெப் பத்தியும் எந்த நெனைப்பும் இல்லாம வானத்தெப் பாத்து ஒம் இஷ்டத்துக்கு எதெ வாணாலும் பண்ணிக்கோன்னு போயிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் அடிக்கிற மழை நனைச்சதுன்னா, அடுத்த கொஞ்ச நேரம் அடிக்கிற வெயிலும், வீசுற காத்தும் நனைச்சதெ காய வெச்சிருக்கும்.

            என்னவோ அதிசயமா ஸ்டார்ட் ஆவுறதுல பெரச்சனைப் பண்ணுற டிவியெஸ்ஸூ எந்தப் பிரச்சனையும் இல்லாம அது பாட்டுக்கு ஓடிகிட்டு இருந்துச்சு. எந்த சர்வீசும் பண்ணாமா, எந்த மெக்கானிக்குகிட்டெயும் காட்டாம அதுவா எப்பிடி சரியானுச்சுங்றது புரியல. ரொம்ப அதிர்ஷ்டமா அந்த வண்டிய வெச்சு கிட்டதட்ட நாலாயிரம் கிலோ மீட்டருக்கு மேல பத்திரிகெ வைக்கப் போயும் எந்த எடத்துலயும் பஞ்சர் ஆவவே யில்ல. வண்டிய எடுத்தா, வீடு திரும்புற வரைக்கும் அது பாட்டுக்கு ஓடிட்டே இருந்துச்சு. குதிரையில சவாரி பண்ணுறாப்புல வண்டி பாட்டுக்குப் போயிட்டே இருந்துச்சு. களைப்பே அடையா அந்த எந்திரக் குதிரைய எந்த அளவுக்கு வெரட்டி வெரட்டி ஓட வைக்க முடியுமோ அந்த அளவுக்கு மாத்தி மாத்தி ஓட வெச்சுப் பாத்தாங்க சுப்பு வாத்தியாரும், விகடுவும். அந்தக் கலியாணத்துல குடும்பத்துல ஒரு மனுஷனப் போல தொணையா தோள் கொடுத்து நின்னுச்சு அந்த வண்டி. சுப்பு வாத்தியார்ரப் பொருத்த வரையில அவரோட குடும்பத்துல அந்த வண்டியும் ஒண்ணுதாம்ங்றது வேற விசயம்.

            அதுல ஒரு பெரும்பயணம், நெடும்பயணம்ன்னா, ஒரு சனிக்கெழம ஆரம்பிச்சுப் பத்திரிகையையும், சவுளிகளையும் மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு திருவாரூரு போயி பெரும்பண்ணையூரு வழியா குறுக்க பூந்து விருத்தியூர்ல பெரிம்மா, பெரிப்பாவுக்குப் பத்திரிகையையும் சவுளிகளையும் வெச்சிட்டு, அங்கேருந்து திரும்பி மாயூரம் ரோட்டப் பிடிச்சிப் பாகூருக்குப் போயி அந்த ஊரு சித்திக்குப் பத்திரிகையையும் சவுளிளையும் வெச்சிட்டு, திரும்ப திருவாரூரு வந்து நாகப்பட்டினம் ரோட்டுல வுட்டு, கிடாரங்கொண்டான்ல வாழ்க்கப்பட்டு பெரிம்மாவோட மொத பொண்ணுக்குப் பத்திரிகையையும், சவுளிளையும் வெச்சிட்டு, அப்பிடியே அங்கயிருந்து கெளம்பி வாழ்க்கெப்பட்டு பெரிம்மாவுக்குப் பத்திரிகையையும் சவுளியையும் வெச்சு, அப்பிடியே நேராப் போயி வேதாரண்யம் ரோட்டுல உள்ளார வுட்டு பரசு அண்ணனோட மாமனாரு வூட்டுக்கு பத்திரிகையையும் சவுளிளையும் வெச்சு, அப்பிடியே அங்கேயிருந்து கரியாப்பட்டினம் ரோட்டப் பிடிச்சி தேன்காடு சித்தி வூட்டுக்குப் பத்திரிகையையும் சவுளிளையும் வெச்சிட்டு, அங்கேயிருந்து திருத்துறைப்பூண்டி ரோட்டப் பிடிச்சி, திருத்துறைப்பூண்டியிலேந்து முத்துப்பேட்டை ரோட்டு வழியா சிப்பூருக்கு வந்து பெரிம்மா, சின்னம்மா ரண்டு பேத்துக்கும் பத்திரிகையையும் சவுளிகளையும் வெச்சிட்டு, அப்பிடியே நேரா முத்துப்பேட்டைக்குப் பக்கத்துல இருக்குற சாம்புவானோடைக்கு வுட்டு வாழ்க்கெபட்டு பெரிம்மாவோட ரண்டாவது பொண்ணுக்கு அங்கப் பத்திரிகையையும் சவுளிகளையும் வெச்சிட்டு வீடு திரும்புனப்போ ராத்திரி பன்னெண்டு மணி. காலையில கெளம்புனது அஞ்சு மணி வாக்குல. அதுல இடையிடையே இருந்த சொந்தக்காரவுங்க வூட்டுக்கும் ஒண்ணு விடாம பத்திரிகைய வெச்சாச்சு. 

            அவ்வளவு பெரிய பெரும்பயணம் போயியும் சுப்பு வாத்தியாருக்கோ, விகடுவுக்கோ எந்தக் களைப்பும் இல்ல. விடிய விடிய கொடுக்குறதுக்கும் ஆசேதாம். ஒறவுக்காரவுங்கள தூக்கத்துலப் போயித் தொந்தரவு பண்ணக் கூடாதேன்னு வூடு திரும்புனவங்க, மறுநாளு ஞாயித்துக் கெழமையும் வுடாம காலங்காத்தால ஆறு மணிக்குக் கெளம்பி கொல்லம்பட்டி, தஞ்சாவூரு, திருச்சின்னு இருந்த ஒறவுக்கார சனங்க ஒருத்தரு வுடாம பத்திரிகையையும் சவுளிகளையும் டிவியெஸ்ஸூ வண்டியிலயே வெச்சிட்டு ராத்திரி பத்து மணி வாக்குல திரும்பியாச்சு. அதுல போற வழியில பெரும்பாலான ஒறவுக்கார சனங்களோட வூட்டுக்கும் வெச்சு முடிச்சாச்சு. மொத்தத்துல பெரும்பாலான முக்கிய ஒறவுக்காரவுங்களுக்கு அந்த ரண்டு நாள்ல பத்திரிகைய வெச்சு முடிச்சாச்சு. அந்த ரண்டு நாள்ல அவ்வளவு பத்திரிகைய வெச்சாவும்ன்னு சுப்பு வாத்தியாரே நெனைக்கல. வண்டியும் அந்த அளவுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கும்ன்னு எதிர்பார்க்கல. எதாச்சும் ஒரு எடத்துல பஞ்சரு ஆயிருந்தாலும் கதெ கந்தல் ஆயிருக்கும். அப்பிடி எதுவும் நடக்கல.

            வேலங்குடி குமாரு அத்தான் வூட்டுக்கும், சின்னவரு வூட்டுக்கும் பத்திரிகைய வைக்க சுப்பு வாத்தியாரும், வெங்குவும் டிவியெஸ்லயேப் போயிட்டு வந்தாங்க. சின்னவருக்குப் பத்திரிகைய வெச்சப்போ, "நம்மால மூர்த்தோல அன்னிக்கு வர முடியாத அளவுக்குச் சொலி! அதாங் சென்னைப் பட்டணத்துலேந்து மவனெ வாரச் சொல்லிட்டேம்!"ன்னாரு. அதுக்குச் சுப்பு வாத்தியாரு எந்தப் பதிலையும் சொல்லாம பத்திரிகையையும் சவுளிகளையும் வெச்சிட்டு வந்தாரு, எங் கடமெ பத்திரிகைய வைக்க வேண்டிது, வர்றதும் வர்றாம இருக்குறதும் உம் உரிமெங்ற மாதிரிக்கி நெனைச்சிக்கிட்டு.

            சுப்பு வாத்தியாரு சின்னவரு வூட்டுலேந்து பத்திரிகைய வெச்சிட்டுக் கெளம்புறப்போ ரசா அத்தெ ஒரு கேள்விக் கேட்டுச்சு, "இந்த டாக்கடர்ரு மாப்ளய மனசுல நெனைச்சிக்கிட்டுதாங் எம் மவனெ மருமவனா ஆக்கிக்கிடாம தாட்டி வுட்டீயா? நீயி யிப்போ கட்டுறது சொந்தமில்லாம பெறத்தியா?"ன்னு. சுப்பு வாத்தியாரு அந்தத் தர்மசங்கடமான கேள்விக்குப் பதிலெ சொல்ல முடியாம தடுமாறிப் போயி மொகத்தத் திருப்பிக்கிட்டாரு. வெங்கு விடல, "அதெ நெனைச்சிகிட்டுதாங் நீஞ்ஞ மாப்புள பாக்குறதுக்கும், மூர்த்தோல எழுதுறதுக்கும் வாரலியா?"ன்னு. அதுக்கு ரசா அத்தெ ஒண்ணும் பதிலெ சொல்லல, சொல்ல முடியல.

            பொண்டுகளுக்குப் பொண்டுக கேள்வி கேட்டு மடக்குற சாமர்த்தியம் ஆம்பளைங்களுக்குக் கெடையாது. ஒரு பொண்டு கேக்குற கேள்விக்கு நிச்சயமா ஒரு ஆம்பளயால பதிலச் சொல்லவும் முடியாது. அவ்வளவு நுணுக்கமாவும், மொகத்துல அடிக்கிறாப்புலவும் அவுங்களாலத்தாம் கேள்வியக் கேக்க முடியும். சொந்தம்ன்னா அப்பிடித்தாங் கேள்விக வருது, அதுக்குப் பதிலெ சொல்ல முடியாம சங்கடத்துல நிக்குறாப்புல ஆயிடுது. நடக்கற சம்பவங்க யாரு யாரு மனசு விருப்பத்துக்கு நடக்குதுங்றது தெரியாம, சம்பந்தமில்லாதவங்க சம்பந்தமில்லாத கேள்விக்கான பதிலெ எதிர்கொள்ளுறாப்புல ஆயிடுது.

            சமயத்துல தப்பு செய்யாமலே தப்பு செஞ்சாப்புலயும் ஆயிடுது, சரியா செய்யாம இருக்குறப்ப சரியா செஞ்சாப்புலயும் ஆயிடுது. ஒருத்தருக்கொருத்தரு அவுங்கவுங்க மனநெலையிலேந்து பாக்குறப்போ அப்பிடி ஒரு தோற்றம் கெடைச்சிடுது.  இங்க உண்மைன்னு நெனைக்குறது உண்மையில்லாமலும், உண்மையில்லன்னு நெனைக்குறது உண்மையாவும் ஆயிடும். அது எப்பப்போ எப்பிடி ஆவுங்றது மட்டுந்தாம் புரியாத ரகசியம். நெனைக்குற ஆசைக நடக்காமப் போறதும், நமக்காமப் போயிடும்ன்னு நெனைக்குற விசயங்க நடந்துடறதும் சொந்தத்தப் பொருத்த மட்டுல இன்னும் ஆயிரமாயிரம் காலங்க கடந்தாலும் அறிஞ்சிக்க முடியாத புதிருங்கத்தாம்.

            வர்ற வழியில வெங்கு சொன்னுச்சு, "அவுங்களுக்கு அவுங்க மவனெ கட்டி வைக்கலங்ற கோவம்!"ன்னுச்சு சுப்பு வாத்தியார்ரத் தணிக்குறாப்புல.

            "நாம்ம சொந்தத்துலயோ டாக்கடர்ரு மாப்புளயோ பாத்துக் கட்டி வைக்கணும்ன்னு நெனைக்கலையே! நமக்கு ஏம் அந்தக் கேள்வி வந்துச் சேருது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு. ஒமக்கு வந்தக் கேள்வியே நீயெ இருந்து எதிர்கொள்ளுற, அதுக்கும் நமக்கும் சம்பந்தம் யில்லாததப் போல நாம்ம மவுனமா இருந்துட்டேங்றதுதாம் அது மூலமா சுப்பு வாத்தியாரு வெங்குவுக்கு செல்ல நெனைச்ச பதிலு. ஆனாலும் சுப்பு வாத்தியாரு தர்மசங்கடமா நின்னது நின்னதுதாம். அதெ மாத்த முடியுமா இனுமே? அதாங் விதி. அதெ எதிர்கொண்டுத்தாம் ஆவணும். என்னதாம் தர்மவானா இருந்தாலும் தர்ம சங்கடத்துல நிறுத்தாம குடும்பமோ, ஒறவுகளோ வுடாது ஒரு மனுஷன. அதெ எப்பிடி எதிர்கொள்ளுறதுங்றதுலத்தாம் ஒறவுக இருக்குறதும், பிரிஞ்சிப் போறதும்.

            வேலங்குடியில விசயம் அப்பிடின்னா, வடவாதியில இருந்த குமரு மாமாவுக்கும், வீயெம் மாமாவுக்கும் பத்திரிகைய வைக்க முடியாதுன்னு பிடிவாதமா நின்னுட்டாரு சுப்பு வாத்தியாரு. ரசா அத்தெ கேட்ட கேள்வி அவரோட மனசுல உறுத்திக்கிட்டெ இருந்துச்சு. என்னதாம் தம் மேல தப்பு இல்லன்னாலும் சில கேள்விங்க மனசெப் போட்டு உறுத்தத்தாம் செய்யும். அதுலேந்து தப்பிக்க முடியாது. மாமனுங்க ரண்டு பேத்துக்கும் பொண்ணு மாப்புள பாக்குறதுக்குச் சொல்லாம, மூர்த்தோலைக்கும் சொல்லாம பத்திரிகையை மட்டும் கொண்டு போயி வெச்சா, அத்து நிச்சயம் கேள்விக்கு எடமாவுன்னு சுப்பு வாத்தியாருக்கு நல்லாவே புரிஞ்சிது. அத்தோட அவருக்கு சாமியாத்தா விசயத்துல ரண்டு மாமனுங்களும் தரங்கெட்டு நடந்துக்கிட்டது இப்போ நெனைச்சிப் பாத்தாலும் அவருக்குச் சுத்தமாவே பிடிக்கல. அருவருப்பா இருந்துச்சு அவரோட மனசுக்கு. அந்த ரண்டு பேத்தப் பத்தின பேச்சோ, ஞாபவமோ வந்தா போதும், அவுனுவோ மனுஷன்களாங்ற கேள்விய சுப்பு வாத்தியாரு கேக்கத் தவறுறது யில்ல. அவர்ர அறியாமலே அவரோட வாயிலேந்து அப்பிடி ஒரு கேள்வி வந்து விழுவ ஆரம்பிச்சிது. அதுல வீயெம் மாமா ரண்டாவதா ஒரு கலியாணத்த கட்டிக்கிட்டு அதெ நட்டாத்துல வுட்டு அத்து விட்டாப்புல நடந்துக்கிட்டது அறவே பிடிக்கல. அந்த ஒறவே வாணாம்ன்னு அத்து விட்டாப்புல ஒதுங்கிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.

            பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தா குமரு மாமாவுக்கும், வீயெம் மாமாவுக்கும் பத்திரிகை வைக்கப் போறன்னு போனுல சொன்னதுக்கு, தாரளமா வெச்சிக்கோங்கன்னுட்டாரு சுப்பு வாத்தியாரு. "நமக்கு வைக்க இஷ்டமில்ல. இஷ்டப்பட்டு வைக்க நெனைக்குற தடுக்க ஒஞ்ஞள தடுக்க நமக்கு உரிமெ யில்ல!"ன்னுட்டாரு.

            வெங்கு இதுக்கு ஒரு மாத்து யோசனையா, விகடுகிட்டெ சொல்லிப் பாத்துச்சு, "எந் தம்பியோளுக்கு யப்பா வைக்கலன்ன ன்னடா? நீயாச்சும் கொஞ்சம் போயி வெச்சிட்டு வா!"ன்னு. அதுக்குப் பத்திரிகெ வைக்கணும்ன்னுங்ற ஆசெ உள்மனசுக்குள்ள இருந்திருக்கும் போல.

            "யாத்தா வெசயத்துல ரண்டு பேரும் நடந்துக்கிட்டது நமக்கும் பிடிக்கலம்மா! அதுக்குல்லாம் பத்திரிகெ வெச்சா செய்மொறைக்கு செலவு வந்துடுச்சேன்னு வருத்தம்லா படும்! ஏம் ஒரு மனுஷர்ரப் போயி அநாவசியமா வருத்தப்படுத்தணும்?"ன்னாம் விகடு.

            "ஒங்கப்பம் மாரியே பேசுடாம்பீ! எங் குடும்பத்துலேந்து வந்து நிக்க ஒறவு யில்லாம பண்ணிப்புட்டீங்களடா! எல்லாம் ஒரு குட்டையில ஊறுன மட்டைகதானடா! எப்பிடிடா மாறுவீயே?"ன்னுச்சு வெங்கு.

            "யாரு ஒறவு யில்லாம பண்ணா? அத்து ரண்டு மட்டுந்தாம் ஒம்மட ஒறவா? வாழ்க்கப்பட்டு, சிப்பூரு, தேன்காடு, பாகூர்ல இருக்குற அக்கா தங்காச்சிக ல்லாம் ஒறவு யில்லியா? அவுங்களுக்குல்லாம் வைக்கமாலா போயிட்டேம்? வெச்சம்லா? ஒறவுன்னா ஆம்பளெகதானா? பொம்பளக கெடையாதா? நீயும் ஒரு பொண்ணுதானம்மா! நீயே இப்பிடிப் பேசுதீயேன்னா? ஒந் தம்பியோளுக்கு வைக்கணும்ன்னா, வேணும்ன்னா நீயிக் கொண்டு போயி வெச்சுக்கோ! யாரு தடுக்கப் போறா?"ன்னாம் விகடு.

            "தடுக்கி வுழுந்தாலும் தாய்மாமனுங்க ஒறவு வேணும் ஞாவத்துல வெச்சுக்கோ! தடுக்கியே வுழ மாட்டேம்ன்னு நெனைச்சிக்கிப் படாது. நாம்ம போவாட்டியும் நீயிக் கொண்டு போயி வைக்கலாம். அதுக்கான உரிமெ ஒனக்கு இருக்கு. ஆன்னா அவுங்க போவாத வூட்டுக்கு நாம்ம எப்பிடிடா போவேம்? அதுக்கு நமக்கு ன்னடா உரிமெ இருக்கு?"ன்னுச்சு வெங்கு.

            "யப்போ நாம்ம மட்டும் போவணுமா? ஒமக்கு இருக்குற ரோஷந்தானம்மா நமக்கும் இருக்கும்!"ன்னாம் விகடு.

            "அவுங்கப் போறதா இருந்தா, நாமளும் வேணா போயிட்டு வர்றேம் யத்தே!"ன்னா ஆயி.

            "யப்போ ஒண்ணு பண்ணுங்க! மாமியாரும் மருமவளுமா ரண்டு பேத்துமா கொண்டுப் போயி வெச்சிட்டு வாஞ்ஞ!"ன்னாம் விகடு.

            "பேயாதடா! போடா அந்தாண்ட!"ன்னுச்சு வெங்கு. அத்தோட குமரு மாமாவுக்கோ, வீயெம் மாமாவுக்கோ பத்திரிகெ வைக்கறதப் பத்தின பேச்சு முடிஞ்சது. சுப்பு வாத்தியாரோட மூத்த மவனான விகடவுக்கு மூத்த மாமங்காரனான குமரு மாமா யில்லாம கலியாணம் முடிஞ்சதுன்னா, ரண்டாவது பொண்ணான செய்யுவுக்கு ரண்டு மாமனுங்களும் இல்லாம கலியாணம் நடக்க இருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...