17 Aug 2020

கல்யாண ஜவுளி!

 

கல்யாண ஜவுளி!

செய்யு - 538

            கலியாணப் பத்திரிகையப் பாத்த எல்லாத்துக்கும் திருப்தி. உஞ்ஞினி ஐயனாருக்கு ஒரு நல்ல நாளப் பாத்து விருத்தியூரு பெரிம்மாவையும் பெரிப்பாவையும் வெங்குவையும் அழைச்சிக்கிட்டுப் போயி பத்திரிகைய வெச்சிட்டு வந்தாரு சுப்பு வாத்தியாரு. அது முடிஞ்ச கையோட பத்திரிகையோட ஒறவுக்காரவுங்களுக்கு செய்ய வேண்டிய சவுளிகளையும் வெச்சுக் கொடுத்துப்புடறதுன்னு முடிவப் பண்ணாரு சுப்பு வாத்தியாரு. அவருக்கு மவ்வேம் கலியாணத்துலேந்து அது ஒரு பழக்கமா போயிடுச்சு. கலியாணத்துல நின்னுகிட்டு அவங்கவங்களுக்குக் கொடுக்குற சவுளிகளெ பிரிச்சிக் கொடுக்குறதுல ஒரு சிரமம்ன்னா, சில பேத்துக்கு ஞாபவ மறதியில கொடுக்காம வுட்டுப் போச்சுன்னா சங்கடமா போயிடும்ன்னு பத்திரிகெ வைக்குறப்பவே அந்த வேலைய முடிச்சிடுவாரு. கலியாணத்துக்கு அன்னிக்கு அலட்டல் இல்லாம வந்தவங்கள மட்டும் வாங்க வாங்கன்னு வரவேத்து நல்ல வெதமா பந்தியில சாப்புட வெச்சி கலியாணத்தெ காண வெச்சிப்புடணும், அத்து ஒண்ணுத்தாம் அன்னிக்கு வேலையா இருக்கணும்ன்னு திட்டெத்தெ பண்ணிப்பாரு.

            கடெசி நேரத்துல எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு செருமப்பட்டுக்கிட்டுக் கெடக்க கூடாதுன்னு சொந்த பந்தங்களுக்குக் கொடுக்க வேண்டிய சவுளி, குடும்பத்துக்குப் பொண்ணுக்கு எடுக்க வேண்டிய சவுளின்னு எல்லாத்தையும் ஒண்ணா போட்டுப்புடணும்ன்னு நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு. "திருச்சிக்குப் போனம்ன்னா சல்லிசா ஜவுளியப் போடலாம்!"ன்னு சொல்லிப் பாத்தா ஆயி. "காசி மிச்சமாவுறது முக்கியமில்ல. ராசியான கடையா இருக்கணும். நமக்கு அப்போலேந்து திருவாரூரு முரா சன்ஸ்த்தாம் சுத்தப்புட்டு வாரும்! காசிக் கூட போனாலும் பரவால்ல!"ன்னு அந்த யோசனைய நிராகரிச்சிட்டாரு சுப்பு வாத்தியாரு. எல்லாத்துலயும் ஒரு மனத்திருப்திய எதிர்பாக்குற ஆளு அவரு.

            குடும்பத்துல இருக்குறவங்களுக்கு, ஒறவுக்காரவுங்களுக்கு, கலியாணப் பொண்ணுக்குன்னு எல்லாத்துக்கும் சேத்தாப்புல ஜவுளியைப் போடுறதுக்கு ஏத்தாப்புல செய்யுவையும் கெளப்பி, குடும்பத்துல வெங்கு, ஆயி, பவ்வுப் பாப்பான்னு எல்லாத்தையும் கெளப்பி, விருத்தியூரு பெரிம்மாவுக்குப் போன அடிச்சி அதையும் கெளம்பி திருவாரூரு வாரச் சொல்லிட்டாரு. அவருக்குக் கைராசியான திருவாரூரு முரா சன்ஸ் ஜவுளிக் கடெயில ஒம்போது மணிக்கெல்லாம் எட்டாம் நம்பரு பஸ்ஸப் பிடிச்சி போயி நின்னுப்புட்டாரு சுப்பு வாத்தியாரு. ஒறவுக்கார சனங்களுக்கு பத்திரிகெ வைக்குறப்ப வைக்க வேண்டிய சவுளிகளெ வெங்கு, பத்மா பெரிம்மா, ஆயின்னு மூணு பேத்தையும் வுட்டு போடச் சொன்னாரு. அத்தோட கலியாணப் பொண்ணுக்கு மட்டும் வுட்டுப்புட்டு, குடும்பத்துல இருக்குற அத்தனெ பேத்துக்கும் ஜவுளியப் போட்டு முடிங்கன்னும் சொல்லிட்டாரு.  இவரு பாட்டுக்குக் கையில பேத்தியாள வெச்சிக்கிட்டு அங்கயும் இங்கயும் வேடிக்கெ காட்டிக்கிட்டு, இவரும் வேடிக்கெ பாத்துக்கிட்டு நின்னாரு. அவுங்க அதெ போட்டுக்கிட்டு இருக்குறப்பவே செய்யுவெ பட்டுப் பொடவையைப் பாத்து வைக்கச் சொன்னாரு.

            வெங்கு, ஆயி, பெரிம்மா மூணு பேரும் சேந்து ரண்டு மணி நேரத்துக்குள்ள விருத்தியூர்ல இருக்குற அத்தனெ சொந்த பந்தம், வேலங்குடி சொந்த பந்தம், சென்னைப் பட்டணத்துல இருக்குற சொந்த பந்தம், கொல்லம்பட்டி சொந்த பந்தம், வாழ்க்கெபட்டு, சிப்பூரு, பாகூரு, தேன்காடு வகையாறவுல வர்ற அத்தனெ சொந்த பந்தத்துக்கும் சவுளியப் போட்டு முடிச்சதுங்க. அதுக்கான பட்டியல ஒரு தாள்ல தயாரு பண்ணிக் கொடுத்திருந்தாரு சுப்பு வாத்தியாரு. அந்த வகையில சொந்தக்கார சனங்கள்ல ஒரு சின்ன வாண்டுக்குக் வட வுடாம அத்தனைக்கும் சேத்துச் சவுளியப் போட்டுச்சுங்க.

            அடுத்ததா செய்யுப் பாத்துட்டு இருந்த பட்டுப்போடவைப் பிரிவுக்குப் போனா அதுல எதுவும் தனக்குப் பிடிக்கலன்னு நின்னா செய்யு. சுப்பு வாத்தியாருக்குச் சங்கடமா போயிட்டு. மொகம் தொங்கிப் போச்சு. இதுக்குன்னு நல்ல நாளுல்லாம் பாத்து வந்தா இன்னிக்கு எடுக்க வுடாம அடிக்குறாளே மவ்வேங்ற கவலெ அவருக்கு வந்துட்டு. அவருக்கு அங்கத்தாம் பட்டுப் போடவையிலேந்து சாதாரண பொடவ வரைக்கும் எடுத்தாவணும். வேற கடையில எடுத்தா திருப்திப்பட்டு வாராதுங்றது செய்யுவுக்கும் தெரிஞ்ச சங்கதிததாம். ஆன்னா என்னு தெரியாமலே அப்பிடி ஒரு அடத்தெ பண்ணிட்டு நின்னா செய்யு. வெங்குவே மவளெ திட்டுனுச்சு, "எதாச்சும் ஒண்ணுத்தெ பாத்து பட்டுன்னு எடுடி! காலங்காத்தால வந்த நாம்ம எம்மாம் நேரமா பாத்துட்டு நிக்குறது. நின்னு நின்னு காலுல்லாம் கடுக்குது! இந்தக் கடையிலத்தாம் கல்யாணப் பொடவைய எடுத்தாவணும்!"ன்னுச்சு அடிச்சிச் சொல்றாப்புல.

            மேக்கோண்டு எல்லாருமா சேந்து சில பட்டுப் பொடவைகளப் பாத்து அதுல எதுவும் பிடிக்கலன்னுட்டா செய்யு. அப்பத்தாம், செய்யு கையில இருந்த செல்போன கவனிச்சிட்டா ஆயி. பாலாமணி சுந்தரி மூலமா கொடுத்து வுட்ட மைக்ரோமேக்ஸ் டச் போன். அதெ வெச்சிக்கிட்டு அப்பைக்கப்போ பாக்குற பொடவையப் போட்டோவ எடுத்துக்கிடறதும், அதெ வாட்ஸாப்புல அனுப்புறதும் அவளுக்குத் தெரிஞ்சிக்கிட்டு. அவ்வே சுப்பு வாத்தியார்ரே ஓரமா கூப்ட்டு வெசயத்தெ சொன்னா. "மாமா! வெசயம் ன்னான்னா செய்யு பொடவையப் போட்டோ பிடிச்சி அஞ்ஞ மாப்புள்ளைக்கு நம்பருக்கு அனுப்புறா. அங்க அவருக்கு ஏதோ பிடிக்கலன்னு நெனைக்கிறேம். அதாலதாங் வேண்டாம்ன்னு சொல்றா. அவுங்களுக்குப் பிடிச்சிருக்கு. ஆன்னா அஞ்ஞ மாப்புள்ளைக்கிப் பிடிக்கல. வெசயம் அதாங்!"ன்னா.

            "அப்பிடில்லாமா போட்டோவப் பிடிச்சி செல்லுல அனுப்ப முடியும்? அதுல பேசத்தானே முடியும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒண்ணும் புரியாம.

            "முடியும் மாமா! அப்பிடில்லாம் இப்போ நெறைய வெசயங்க போனுக்குள்ள இருக்கு!"ன்னா ஆயி.

            "அதாங் வெசயம்ன்னா நாம்ம ஒண்ணும் பண்ண முடியாது. அந்தப் பயதாங் வெளங்காம பண்ணுறாம்ன்னா, நம்மப் பொண்ணுக்கு எஞ்ஞப் போவுது புத்தி? இத்தையெல்லாமா படத்தெ புடிச்சி அனுப்புவாக? இப்பிடி வெவரம் தெரியாத பொண்ணா இருக்கே! பட்டுப்போடவெ மங்கலகரமா இருக்கான்னுத்தாம் பாக்கணும். பெறவு தரமா இருக்குதான்னு பாக்கணும். அதுல வேற எதெயும் பாக்கப் படாது. செரி கலியாணங் காட்சியா இருக்குறப்ப ஊடால நாம்ம பூந்து கருத்தெ சொல்லி குந்தகம் பண்ணிடப் படாது. நீயே ன்னா ஏது வெசயம்ன்னு நீயா கேக்குறாப்புல கேளு. அதுக்குத் தகுந்தாப்புல ஆவுறதப் பாப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "ன்னா செய்யு பொடவெ வேற எங்காச்சும் எடுக்கணுமா? மனசுல வேற எதாச்சும் அதெ பத்தி நெனைப்பு இருக்கா?"ன்னா ஆயி.

            அதெ கேட்டதும் வெங்கு, "அந்த வேல வெச்சிக்காதெ ஆயி! பிடிச்சாலும் செரிதாங், பிடிக்காட்டியும் ஒங் கலியாணத்துக்குல்லாம் இஞ்ஞ எடுத்ததுதாங். வெளியில எடுக்குறதில்லே. இஞ்ஞ உள்ளதுல ஒண்ணுத்தெ பிடிச்சதெ எடுக்கச் சொல்லு ஒந் நாத்தனார்ர!"ன்னுச்சு.

            "சின்ன புள்ளீயோதான்னே! நாம்ம இருந்தக் காலத்துல கடைக கம்மி. இருக்குறதுல ஒண்ணுத்தெ எடுத்தோம். இப்போ இருக்குற புள்ளீயோ அப்பிடிக் கெடையாது. நாட்டுல ஒண்ணா ரண்டா கடைகெ? இருக்குற எல்லா கடையிலயும் ஏறி எறங்கிப்புடுவேம். எஞ்ஞப் பிடிச்சிருக்கோ அஞ்ஞ எடுத்துகிடட்டும் கலியாணப் போண்ணு!"ன்னுச்சு பத்மா பெரிம்மா.

            "அதில்ல பெரிம்மா!"ன்னு இழுத்தா செய்யு.

            "ஏதோ சொல்ல வர்றே! சொல்லு! கலியாணம் முடியுற வரைக்கும் நீந்தானே ராசாத்தி, மவராணி எல்லாம். ஒம் பேச்சதாங் கேட்டாவணும்!"ன்னுச்சு பெரிம்மா.

            "கும்பகோணத்துல ஒரு கடெ தொறந்திருக்காங்களாம். சீமந்தம்ன்னு கடெ பேரு. அஞ்ஞ நெறைய வெத வெதமா இருக்குறதா பேசிக்கிறாங்க. அஞ்ஞப் போனா பிடிச்ச மாதிரிக்கி எடுத்துப்புடலாம்!"ன்னா செய்யு.

            ஆயி மெல்ல நவந்து சுப்பு வாத்தியார்கிட்டெ வந்து, "தகவல் அஞ்ஞயிருந்து வருது மாமா!"ன்னா மொல்லமா.

            "புரியுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அஞ்ஞ ன்னா மாமனாரும் மருமவளும் பேசிக்கிட்டு?"ன்னுச்சு பெரிம்மா.

            "இந்தாருங்க யக்கா! கலியாணம் ஆவப் போற பொண்ணு ஆத்தெ அந்தாண்ட இந்தாண்ட தாண்டப்படாதும்பாவோ! ஏத்தோ நம்ம காலத்துல நாம்மத்தாம் அப்பிடி இருந்தேம். நம்மப் பொண்ணாவது பிடிச்ச மாதிரிக்கி இருக்கட்டும், பிடிச்ச மாதிரிக்கிக் பொடவைய எடுத்துக்கிடட்டும்ன்னு நெனைச்சா ன்னா பேச்சப் பேசுறா? கொண்டாந்து காட்டுறது பிடிக்க மாட்டேங்குதுறா! இதுகள எல்லாம் அழைச்சிட்டு வாரக் கூடாது. நாம்ம ஒண்ணுத்தெ எடுத்துட்டுப் போயி இதாங் கலியாணப் பொடவன்னு போடணும். அதெ பண்ணாம நாம்ம இப்பிடிப் பண்றதக்கு அவ்வே யிப்பிடிப் பண்ணுறா?"ன்னுச்சு வெங்கு.

            "நீயி சித்தெ ச்சும்மா இரு. இந்தக் காலத்துப் பொண்டுவோ கொஞ்சம் அசந்தா மாப்புள்ளையையே கட்டிட்டுக் கொண்டாந்து புடுறாளுவோ. நம்ம வூட்டுப் பொண்ணு அப்பிடியா? நாம்ம பாத்த மாப்புள்ளையத்தானே கட்டிக்கிடுவேம்ன்னு நிக்குறா. ஏதோ மனசுக்குப் பிடிச்சாப்புல பொடவைய எதிர்பாக்குறா? எம்மாமோ சிலவெ பண்ணுறோம்! அதெயும் திருப்தியா எடுத்துக் கொடுத்துப்புடுவேம் போ!"ன்னுச்சு பெரிம்மா.

            "செரி எதாச்சிம் பண்ணுங்க. பெரியவங்க ஒஞ்ஞ விருப்பம். நீஞ்ஞ சொல்லி நாம்ம ன்னத்த மறுபேச்சுப் பேசுறது?"ன்னுச்சு வெங்கு.

            "கலியாணப் பொண்ணு! திருவாரூரு பக்கத்துல இருக்குறதுங்றதால பஸ்ல கொண்டாந்துட்டேம். கும்பகோணம்ன்னா அம்மாம் தூரம்! கலியாணப் பொண்ண எப்பிடிக் கொண்டுப் போயி கொண்டாறது? ஊரு ஒலகமே வேற கெட்டுப் போயிக் கெடக்கு. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிப் போயி அதுவும் கலியாண நேரத்துல ஏம் பொண்ண அம்மாம் தூரம் அனுப்புனீங்கன்னு நாளைக்கு எவனாச்சும் பேசுனாம்ன்னா நம்ம நெல ன்னா யண்ணி?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "பொண்ணு ஆசெப்படுது. வுட்டுத் தொல. நாளைக்கி ஒரு கார்ர எடுத்துக் கொடு. நாம்ம கூடப் போயி பிடிச்சாப்புல எடுத்துக் கொடுத்து வுட்டு கொண்டாந்து வுட்டுப்புட்டுப் போறேம்!"ன்னுச்சு பெரிம்மா.

            "ன்னா இருக்குல்லாம் கார்ரா? அதுக்கு வேற சிலவெ பண்ணணுமா? அவ்வேம் எம் மவ்வேம் அங்கன இங்கனன்னு கடனெ வாங்கிட்டுக் கெடக்குறாம்! இதுல கார்ரு வேறயா?"ன்னுச்சு வெங்குவுக்கு அதுப் பிடிக்காம.

            "அப்பிடித்தாம் பண்ணணும் யண்ணி!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெங்கு சொன்னதெ சட்டைப் பண்ணாம.

            "யிப்போ எடுத்த சவுளிக்குக் காசியக் கொடுத்துட்டு நடையக் கட்டுவேம். கலியாணப் பொண்ணு கதையெ நாளைக்கி நெதானமா பாத்துக்கிடுவேம்!"ன்னுச்சு பெரிம்மா.

            எல்லாருக்கும் எந்தக் கொறையும் யில்லாம தரமா நெறைவா எடுத்ததுல அந்தச் சவுளிங்க மட்டும் லட்சத்து இருவதாயிரம் வந்துச்சு. பெரிய அளவுல சவுளிகள எடுத்ததால அதுல அஞ்சு விழுக்காட்டெ கழிச்சிக்கிறதா சவுளிக் கடையில சொல்லி மிச்சத்துக்குப் பணத்தெ வாங்கிக்கிட்டாங்க.

            "பொண்ணு கலியாணத்துக்குப் பெரும் சவுளியாத்தாம் போட்டுருக்கே!"ன்னுச்சு பெரிம்மா சுப்பு வாத்தியார்ரப் பாத்து.

            "நமக்கும் குடும்பத்துல கடெசீத் தேவையாப் போவுது. நெறைவா செஞ்சிப்புடுவேம் எல்லாத்துக்கும் திருப்தியா கொடுத்து! யிப்போ பொண்ணும் சவுளியப் போட்டிருந்தா யின்னும் நெறைவாப் போயிருந்துக்கும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.

            "அதெ வுடு. அதெ நாம்ம வூட்டுக்கு வந்து இருந்து நாளைக்கு அவ்வே சொன்னாப்புல சவுளியப் பொட்டுக் கொடுத்துச் சரி பண்‍றேம். யிப்போ நீயி எடுத்துக் கொடுக்குற சவுளிக்கு பத்திரிகைய வெக்கிறப்பவே வெச்சிக் கொடுத்தேன்னா தீவாளிக்கு எந்தச் சனமும் சவுளியே போடாது!"ன்னுச்சு பெரிம்மா.

            சுப்பு வாத்தியாரு அதெ கேட்டுச் சிரிச்சிக்கிட்டாரு. "எல்லாம் தீவாளிக்குமா நாம்ம அப்பிடிப் பண்ணப் போறம்? ஏத்தோ இந்த ஒரு தீவாளிக்கு அப்பிடி அமையுது!"ன்னாரு. பொண்ணு கலியாணத்துக்கான சவுளியப் போடலன்னாலும், இந்த ஒரு விசயம் விருத்தியூரு பெரிம்மா சொன்னது அவதோட மனசுக்கு நெறைவா இருந்துச்சு.

*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...