கலியாணப் பத்திரிகை!
செய்யு - 537
கல்யாணப் பத்திரிகைய ரண்டு வூட்டுக்கும்
போதுவா இருவீட்டாரோட அழைப்பா இருக்குறாப்புல அச்சடிச்சு அதுல ஒரு முந்நூத்த கொடுத்தா
தனக்குப் போதும்ன்னு சொல்லிப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு. அதுக்குப் பாக்குக்கோட்டை
சனங்க ஒத்துக்கிடல. பாலாமணி என்னவோ தனித்துவமா பத்திரிகெ அச்சடிக்கப் போறதாவும் இருவீட்டாரோட
அழைப்பா அச்சடிச்சா அத்துச் சுத்தப்பட்டு வாராதுன்னும் பாக்குக்கோட்டை சனங்க சேதியச்
சொன்னதும் சுப்பு வாத்தியாரு சரின்னு ஒதுங்கிட்டாரு. திருவாரூர்ல நல்ல வெதமா பத்திரிகெ
அச்சடிக்கிற எடம் எதுங்றதெ பரசு அண்ணன வுட்டு விசாரிக்கச் சொன்னதுல மேலவடம்போக்கி
ஆத்தோட மேலகரையில சிஜிகே பிரிண்டர்ஸ்ன்னு ஒரு கடையக் காட்டி வுட்டுச்சு பரசு அண்ணன்.
அந்தக் கடையில த்ரீடி மொறையில சிறப்பா அச்சடிச்சுத் தர்றாம்ன்னு சொன்னதெ கேட்டுக்கிட்டு
சுப்பு வாத்தியாரு அங்கப் போயி நின்னாரு.
நாலு பக்கத்துல பத்திரிகைய கிராபிக்ஸ்ல
டிசைன் பண்ணி காட்டுனாம் சிஜிகே பிரிண்டர்ஸ்கார்ராம். மொத பக்கத்துல பிள்ளையாரு படத்தெப்
போட்டு பொண்ணு மாப்புள்ளையோட பேரை அச்சடிச்சாம். ரண்டாம் பக்கத்துல விருத்தியூரு
மாரியம்மன் படத்தெ போடணுங்றது சுப்பு வாத்தியாரோட விருப்பம். அதுப்படி அந்தப் படத்தெ
போட்டாம். மூணாம் பக்கத்துலத்தாம் பத்திரிகைக்கான கலியாணச் சேதி. நாலாம் பக்கத்துல
சொந்தக்காரவுங்க பேரு ஒண்ணு வுடாம வர்றாப்புல எல்லாரு பேத்தோட பேரையும் சேத்திருந்தாரு
சுப்பு வாத்தியாரு. பத்திரிகையோட முக்கியமான பாகம் மூணாம் பக்கத்துலத்தாம் இருந்துச்சு.
அதுலத்தாம் கலியாணங் குறித்த அத்தனெ சங்கதிகளும் இருந்துச்சு. அந்தக் கலியாணப் பத்திரிகையோட
மூணாம் பக்கம் இப்பிடித்தாம் இருந்துச்சு.
உ
ஓம் விராட் விஸ்வ ப்ரம்மனே நமஹ
அருள்மிகு உஞ்ஞினி ஐயனாரப்பர் துணை
திருமண அழைப்பிதழ்
அன்புடையீர்!
வணக்கம்!
நிகழும் மங்களகரமான ஜய ஆண்டு ஐப்பசி திங்கள்
16-ஆம் தேதி (02. 11. 2014) ஞாயிற்றுக்கிழமை தசமி திதி சதய நட்சத்திரம் சித்த யோகம்
கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் தனுசு லக்கனத்தில்
திருவாரூர் மாவட்டம், 31. விருத்தியூர் தெய்வத்திரு சாமிநாதம் ஆச்சாரி
- இரத்தினம் தையல்நாயகி இவர்களின் மகன் வழிப் பேத்தியும்,
வடவாதி தெய்வத்திரு வைத்தி ஆச்சாரி - நங்கை இவர்களின் மகள் வழிப் பேத்தியும்,
வடவாதி, திட்டை திரு. சா. சுப்பு - வெங்கு தம்பதியரின் அன்பு மகளுமாகிய திருநிறைச்செல்வி
சு. செய்யு M.Sc., B.Ed.,
தஞ்சாவூர் மாவட்டம், பாக்குக்கோட்டை, சாமிப்பாளையம் தெய்வத்திரு நாரணமணி
பத்தர் - பூர்ணத்தம்மாள் இவர்களின் மகன் வழிப் பேரனும்,
வடவாதி தெய்வத்திரு நாரணசாமி ஆச்சாரி - லட்சுமி இவர்களின் மகள் வழிப் பேரனும்,
பாக்குக்கோட்டை சிவஸ்ரீ நா.இராசாமணி - சரசு தம்பதியரின் அன்பு மகனுமாகிய
திருநிறைச்செல்வன்
டாக்டர் இரா. பாலமணி B.A.M.S.,
(அரசினர் மருத்துவமனை, சென்னை)
இவர்களுக்குத் திருமணம் செய்வதாய் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் மேற்படித்
திருமணம் பாக்குக்கோட்டை, தஞ்சை சாலை, மாடடிக்குமுளை, வைரம்
திருமண மஹாலில் நடைபெறும் திருமணத்திற்கும், உடன் நடைபெறும்
நாகவல்லி முகூர்த்தத்திற்கும் தாங்கள் தங்கள் சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை
வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.
அவ்வண்ணமே
கோரும் : தங்கள் அன்புள்ள:
சிவஸ்ரீ நா.
இராசாமணி - சரசு, சா. செயராமு -
பத்மா,
M.சித்துவீரன் - சுந்தரி, 31. விருத்தியூர்.
Dr. இலா. வேலன் M.D., - பிந்து, சா. சுப்பு - வெங்கு,
S. நலன் - S. தனஸ்ரீ, சு.
விகடபாரதி - ஆயி,
999, சாமிப்பாளையம்,
பாக்குக்கோட்டை. வி.
பவ்வு,
திட்டை, வடவாதி.
மற்றும் இனிய உறவும் இதய நட்பும்.
இப்படித்தாம்
அந்தப் பத்திரிகையோட மூணாம் பக்கத்துல இருந்த சங்கதிகள ஒண்ணுக்கு ரண்டு மொறையாப்
படிச்சித் தப்பு இருக்காங்றதெ பாத்துக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. அத்தோட அதெ வூட்டுல
இருந்தவங்ககிட்டெயும் காட்டி ஒரு தடவைக்கு நாலு தடவையா பாக்கச் சொல்லிக் கேட்டு எல்லாம்
சரியா இருக்குதுங்றதெ உறுதிப் பண்ணிட்டு பத்திரிகைய அச்சடிச்சிப்புடலாம்ன்னு பிரிண்டர்ஸ்ல
சொன்னாரு.
இந்தப் பத்திரிகைய அச்சடிக்க கையால எழுதிகிட்டுப்
போறப்ப ஒவ்வொரு நாளும் சுப்பு வாத்தியாரோட டிவியெஸ்ஸூ அடம் பண்ணாத கொறையா கெளம்ப
மறுத்துச்சு. அது ஏம்ன்னே புரியல. கெளம்புற ஒவ்வொரு நாளும் தூத்தலா வேற இருந்துச்சு.
ஒரு ரண்டு நாளு பொறுத்துப் பொறுத்துப் பாத்து, சுப்பு வாத்தியாரு என்னத்தெ நடந்தாலும்
பரவால்லன்னு கெளம்ப முடியாதுன்னு அடம் பண்ண வண்டியைப் போட்டு மிதி மிதின்னு மிதிச்சி
எப்பிடியோ கெளப்பிக்கிட்டுத் தூத்தல்ல நனைஞ்சிக்கிட்டெ போனாரு.
பத்திரிகைய இப்போ அச்சடிச்சு முடிஞ்சு
கைக்கு வர்ற அன்னிக்கு சாயுங்காலமா பள்ளியோடம் விட்டு வந்த மவ்வேன் விகடுவையும் கெளப்பிட்டுப்
போனாரு. அன்னிக்கும் அதெ கதெதாங். டிவியெஸ்ஸூ கெளம்ப மாட்டேம்ன்னு அடம் பண்ணுது.
"ந்நல்ல வண்டிதாங்! செர்வீஸ் பாக்கணும்டா!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"இதெ வித்துப்புட்டு வேற ஒரு புதுசா
டிவியெஸ்ஸூ எக்செல் சூப்பரு வாங்கிக்கிடலாம்ப்பா!"ன்னாம் விகடு.
"அடப் போடா! ராசியான வண்டிடாம்பீ!
இதெ விக்குறதா? இந்த மாதிரிக்கி வண்டிக் கெடைக்காது. எஞ்சின் அந்த மாதிரிக்கி எஞ்சினு.
விநாயகம் வாத்தியாரு சரக்கு லாரியிலேந்து எறங்குன வண்டியில கையப் பிடிச்சிட்டு ஒடியாந்து
வாங்கிக் கொடுத்தது. இந்த வண்டியப் பாக்குறப்பல்லாம் அவரு ஞாபவந்தாம். அவரோட ஞாபவமாவே
வண்டிய வெச்சிக்கிடணும்டாம்பீ! புதுசாவே வண்டிய வாங்குனாலும் இத்து இருக்கணும்டாம்பீ!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அப்பன்னா செர்வீஸாவது பாத்துப்புடணும்ப்பா!
யிப்போ பாருங்க முக்கியமான வேலயாக் கெளம்புறேம். வண்டிக் கெளம்ப மாட்டேங்குது!"ன்னாம்
விகடு.
"நாம்ம திருவாரூரு பாரத் டிவியெஸ்ல
கேட்டுப் பாத்துட்டேம்டா! இந்த வண்டில்லாம் யிப்போ தயாரிக்கிறது கெடையாது, இதுக்கான்னா
உதிரிபாகங்கள்லாம் கெடையாது, இனுமே தயவு பண்ணி இந்த வண்டியச் சர்வீசுக்குக் கொண்டு
வாராதீயேன்னு சொல்லிப்புட்டாம். நாம்ம ன்னடா பண்ணுறது? ரண்டு தடவெ கொண்டுப் போயி
திருப்பிக் கொண்டாந்துட்டேம். அதாங் இஞ்ஞ நல்ல ஆளாப் பாத்து மெக்கானிக்கிட்டெ கொடுத்து
வண்டியச் சரிபண்ணிக்கிடணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
விகடு அந்த வண்டிய எடுத்துக்கிட்டு சைக்கிள்ல
ஏறி பெடலப் போட்டு மிதிக்கிறாப்புல சாவியப் போட்டு தெருவ ஒரு சுத்திச் சுத்தி வந்தாம்.
வண்டி கெளம்புனுச்சு. அந்த நேரம் பாத்து, சரியா வானம் தூத்தலப் போட்டுச்சு. அதெ பாத்துப்புட்டு,
"ன்னப்பா?"ன்னாம் விகடு.
"கொஞ்ச நேரந்தாம் தூத்தலப் போடும்டா!
பாத்துக்கிடலாம்! வண்டிய நிப்பாட்டிப்புடாதே. திரும்ப கெளப்புறதுக்குள்ள செருமமா போயிடும்!"ன்னு
சுப்பு வாத்தியாரு பின்னாடி ஏறி உக்காந்துகிட்டு வண்டியக் கெளப்பச் சொன்னாரு. விகடு
வண்டியக் கெளப்பிக்கிட்டுப் போனாம்.
வாசல்ல நின்னுப் பாத்துக்கிட்டு வழியனுப்புன
வெங்கு ஆயிகிட்டெ சொன்னுச்சு, "இந்த வண்டி இந்த மாரில்லாம் பண்ணாது. ஆன்னா எனனான்னே
தெரியல, பத்திரிகெ அச்சடிக்கக் கெளம்புற ஒவ்வொரு தவாவும் யிப்பிடியே பண்ணுது. அதுக்கு
ன்னா கிறுக்கு வந்துச்சோ?"
"ஏம் யத்தே தும்மல்ல கெளம்புனாலும்
தூத்தல்ல கெளம்பக் கூடாதும்பீயளே?"ன்னா செய்யு.
"ஆம்மாம் தெனமும் கெளம்புறப்போ தும்மலும்
தூத்தலுமா இருந்தா ன்னத்த பண்ணுறது? மழைக்காலத்துல தூத்தலு போடாம வெயில்லா அடிக்கும்?"ன்னுச்சு
வெங்கு.
"நேத்தில்லாம் கூட இந்நேரத்துக்கு
வெயிலுதாங் யத்தெ ச்சுள்ளுன்னு. இன்னிக்குப் பாருங்க செரியா கெளம்புற நேரமா பாத்து
வண்டியும் கெளம்ப மாட்டேங்குது. தூத்தலும் வந்துத் தொலையுது!"ன்னா ஆயி. ஆயி சொன்னதும்
சரியாத்தாம் இருந்துச்சு. செர்வீஸ் பண்ணாம வண்டிக் கெடந்தாலும் அத்து எங்க கெளம்புனாலும்
டர்ட்ட் டர்ட்டன்னுங்ற சத்தத்தோட கெளம்புனுச்சு. இந்தக் காரியத்துக்குத்தாம் என்னன்னே
புரியாம அடம் பண்ணிட்டுக் கெடந்துச்சு. சுப்பு வாத்தியாரும், விகடுவும் வண்டியில போயி
பிரிண்டர்ஸ்ல எறங்குற வரைக்கும் தூத்தல் நின்ன பாடில்ல. சட்டை சுத்தமா நனைஞ்சி தலை
முடியிலேந்து தண்ணி சொட்டிக்கிட்டே இருந்துச்சு. ஆறரை மணிக்கெல்லாம் வானம் இருட்டி
ராத்திரி வந்தாப்புல இருந்துச்சு. பிரிண்டர்ஸ்க்குள்ள உள்ளார நொழைஞ்சாங்க ரண்டு பேத்தும்.
திருவாரூர்ல சிஜிகே பிரிண்டர்ஸ்ல சரியா
சுப்பு வாத்தியாரு பத்திரிகைய கையால வாங்குன நேரம் திடீர்ன்னு வானம் பொத்துக்கிட்டு
ஊத்துனுச்சு. இடிச் சத்தம் பக்கத்துல எங்கயே வந்து வுழுவுறாப்புல கேட்டுச்சு. சட்டுன்னு
கரண்டும் போயி எல்லா எடமும் இருட்டாயிடுச்சு. காத்துல சாரல் உள்ளாரயும் எட்டிப் பாக்குது.
கொளுத்தி வெச்ச மெழுகுவர்த்தி அணைஞ்சுப் போவுது. பத்திரிகெ கட்ட அந்தாண்ட வாங்கி
வெச்ச சுப்பு வாத்தியாரு கால் சட்டெ பையில கைய வுட்டுப் பாலதீன் பையில மடிச்சி வெச்சிருந்த
பணத்தெ மொல்லமா எடுத்தாரு. அதெ எடுத்து எண்ண ஆரம்பிச்சாரு. அவரால பணத்தெ எண்ண முடியல.
முந்நூத்துப் பத்திரிகைக்கும் ஏழாயிரத்து ஐநூத்துன்னு பில்லப் போட்டு ஒரு எரநூத்தக்
கொறைச்சி ஏழாயிரத்து முந்நூத்தக் கேட்டாம் பிரிண்டர்ஸ்கார்ரேம். அந்தப் பணத்தெ எண்ணிக்
கொடுக்க முடியாம, கையெல்லாம் நடுக்கமா இருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கு. ரொம்ப
தடுமாற்றமா இருந்தாரு. அதெ புரிஞ்சிக்கிட்ட விகடு அப்பங்காரரு கையில இருந்த பணத்தெ
வாங்கி எண்ணி ஏழாயிரத்து ஐநூத்தக் கொடுத்தாம்.
பிரிண்டர்ஸ்காரரு எரநூத்து ரூவாயத் திருப்பிக்
கொடுத்தாரு ரண்டு நூத்து ரூவாயா. அதெ வாங்கி அப்பங்காரர்கிட்டெ கொடுத்தாம் விகடு.
அதெ வாங்குன சுப்பு வாத்தியாரு அந்தப் பத்திரிகைய
டிசைன் பண்ணுன வேலக்காரர்கிட்டெ போயி அந்த ஆளோட சட்டைப்பைக்குள்ள திணிச்சாரு. அந்த
வேலைக்கார ஆளு பிரிண்டர்ஸ்காரர பாக்க, அவரு கண்ணால பராவல்ல வாங்கிக்கோங்ற மாதிரிக்கி
சாடையக் காட்டுனாரு.
"பத்திரிகெ எதிர்பார்த்ததெ வுட பெரமாதமா
வந்திருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஒஞ்ஞ திருப்திதாங் சார் எஞ்ஞளோட
திருப்தி. இந்தப் பத்திரிகெய வெளியில கொடுத்திருந்தீங்கன்னா பத்திரிகெ ஒண்ணுக்கு முப்பத்து
ரூவா போடுவாம். நாம்ம அஞ்சு கம்மிப் பண்ணித்தாம் போட்டுருக்கேம். பத்திரிகெ கொடுக்குறப்ப
நிச்சயம் கேப்பாங்க சார் எஞ்ஞ பண்ணீங்கன்னு? நீஞ்ஞளும் நாலு எடத்துல சொல்லி வுடுங்க
சார்! நீஞ்ஞளும் வாழ்க வளமுடன்! நாஞ்ஞளும் வாழ்க வளமுடன் சார்!"ன்னாரு பிரிண்டர்ஸ்காரரு.
"எஞ்ஞ யண்ணன் பையேன் பரசுதாங் சொல்லி
விட்டது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ரொம்ப நல்லதுங் சார்! மழையப் பத்தி
ஒண்ணும் நெனைக்க வாணாம். பக்காவா பாலீதீன் கவர்ரப் போட்ட கட்டியிருக்கேம். புயலே அடிச்சாலும்
தண்ணி உள்ளார நொழைய முடியாது. நீஞ்ஞ கட்டெ பிரிச்சாதாங் தண்ணி உள்ளார எட்டிப் பாக்க
முடியும். இதெ அப்பிடியே ஆத்துல, கடல்ல தூக்கிப் போட்டாலும் சொட்டுத் தண்ணி உள்ளார
போவ முடியாது. அந்த அளவுக்குப் பேக்கிங் பண்ணிருக்கேம். ஒண்ணும் பயப்பட வாணாம் சார்!"ன்னாரு
பிரிண்டர்ஸ்காரரு.
"பாத்துட்டே இருந்தா மழதாங் வலுக்கும்
போலருக்கு. நேரம் வேற ஆயிட்டே இருக்குது. கெளம்புவோமாடா யம்பீ?"ன்னாரு சுப்பு
வாத்தியாரு மவனெப் பாத்து.
"ம்!"ன்னாம் விகடு.
மழை மின்ன அளவுக்கு இல்லன்னாலும் பேஞ்சுகிட்டுத்தாங்
இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு இதுக்குன்னே உரச்சாக்கெ தயாரு பண்ணி எடுத்துட்டு வந்தாரு.
அதுக்குள்ள கலியாணப் பத்திரிகெ கட்டெ போட்டு அதெ அப்பிடியே சுத்தி மடிச்சி சணல்ல வெச்சிக்
கட்டி யேவாரி பையில ஒண்ணுத்துல போட்டதெப் பாத்த பிரிண்டர்ஸ்காரரு, "சார் பலமான
தயாரிப்போடுதாங் வந்திருக்கீயே!"ன்னாரு சிரிச்சிக்கிட்டெ.
"கலைநயத்தோட பண்ணிக் கொடுத்திருக்கீயே!
வேல மெனக்கெடு இருக்கு. அதெ பத்திரம் பாதுக்காப்பா கொண்டுப் போயிச் சேக்கணுமில்லா!
அதாங் கலைக்குக் கொடுக்குற மருவாதி!"ன்னு சிரிச்சிக்கிட்டெ சொல்லிக்கிட்டு வெளியில
வந்த சுப்பு வாத்தியாரு பைய மடியில வெச்சிக்கிட்டு
டிவியெஸ்ல பின்னாடி உக்காந்துகிட்டாரு. வண்டியக் கெளப்புறத்துக்குதாங் கொஞ்சம் செருமமா
இருந்துச்சு. மழையப் பாக்காம வண்டிய வுட்டதுல தொப்பரையா நனைஞ்சிகிட்டெ வூடு வந்துச்
சேந்தாங்க விகடுவும், சுப்பு வாத்தியாரும்.
*****
No comments:
Post a Comment