ஏதேதோ இப்படித்தான்!
செய்யு - 535
சுப்பு வாத்தியாரு பணத்தெ கொடுத்துட்டு
வந்த மறுவாரம் சுந்தரி கையில ஒரு ஜிகினா தாளு சுத்துன டப்பாவோட வந்துச்சு. சித்துவீரன்
வண்டியில கொண்டாந்து விட்டுட்டு, "கொஞ்ச வேல கெடக்கு. வூட்டுக்கு உள்ளார வந்தா
வேல கெட்டுடும். வேலய முடிச்சிட்டு ஒடனே வந்து அழைச்சிக்கிறேம்!"ன்னு ஒடனே கெளம்பிட்டு.
விகடுதாம் வாசல்ல நின்னுகிட்டு இருந்தாம். "வாங்க! வாங்க! ரண்டு பேராவே உள்ள வந்திருக்கலாம்!"ன்னாம்.
"செய்யுவ பாக்கணும்! அவுங்களுக்கு
இங்க எங்கயோ வேல இருக்குன்னு சொன்னாங்க. அதாங் நாமளும் வந்தா செய்யுவப் பாத்துட்டுக்
கெளம்பிடலாம்ன்னு தொத்திட்டு வந்தேம்! அவுங்க வேலயக் கெடுத்தா கோவம் வந்துப்புடும்.
அதாலதாங் நாம்ம மல்லுகட்டி வற்புறுத்தல!"ன்னுச்சு சுந்தரி.
"செரி பரவால்ல! உள்ளார இருக்கு! போங்க!"ன்னாம்
விகடு.
ஆயியும் எதுக்க வந்துட்டா. அவளும்,
"வாங்க! வாங்க!"ன்னா.
"செய்யுவப் பாக்கணும்!"ன்னுச்சு
சுந்தரி அவ்வேகிட்டெயும்.
"எஞ்ஞளயல்லாம் பாக்க மாட்டீயளா? கல்யாணப்
பொண்ண மட்டுந்தாம் பாப்பீயளா? உள்ளார இருக்காங்க போங்க!"ன்னா ஆயி.
சுந்தரி சிரிச்சிக்கிட்டெ, "மொதல்ல
கல்யாணப் பொண்ணு. பெறவுதாம் ஒஞ்ஞள!" ன்னு உள்ளாரப் போனுச்சு. உள்ளார கட்டில்ல
உக்காந்து இருந்த செய்யு சுந்தரியப் பாத்ததும் எழுந்தா.
"கலியாணப் பொண்ணு எந்திரிக்கக் கூடாது.
உக்காரணும்!"ன்னு சொல்லிகிட்டெ, "யண்ணன் கொடுத்து வுட்டுச்சு. இப்ப பிரிக்க
வாணாம். நாம்ம வூட்டுக்குப் போன பெற்பாடு பிரிக்கணும்! யண்ணன் உம் மேல ரொம்ப பிரியமா
இருக்கு!"ன்னுச்சு சுந்தரி.
கொடுத்த ஒடனே, "நாம்ம கெளம்புறேம்.
அவுங்க வந்து வாசல்ல நிப்பாங்க!"ன்னுச்சு சுந்தரி.
"சித்தெ இருங்க! டீத் தண்ணி குடிச்சிட்டுப்
போவலாம்! யம்மா கொல்லையில நிக்குது கூப்புடுறேம்!"ன்னா செய்யு.
"நேரமாயிடுச்சு! அவுங்க வந்து நின்னு
நாம்ம வாசல்ல ல்லன்னா திட்டுவாங்க!"ன்னுச்சு சுந்தரி. அதுக்குள்ள செய்யு சுந்தரிக்
கொடுத்த டப்பாவைக் கட்டில்ல வெச்சிட்டு, கொல்லைக்கு ஓடி வெங்குவக் கூப்டாந்தா.
"வாடியம்மா சுந்தரி! செளக்கியமா இருக்கீயா?"ன்னுச்சு
வெங்கு.
"ந்நல்லா இருக்கேம் யக்கா! செய்யுவப்
பாக்கணும்ன்னு வந்தேம்!"ன்னுச்சு சுந்தரி.
"தாரளாமா வரலாமே! அதுக்கென்ன தயக்கம்?"ன்னுச்சு
வெங்கு.
"வூட்டுல கொஞ்சம் வேல கெடந்துச்சு.
அவுங்க இந்தப் பக்கமா வர்றதெ தெரிஞ்சிக்கிட்டு சட்டுன்னு கெளம்பி வந்துப்புட்டேம்.
இன்னொரு நாளு நெதானமா வர்றேம். அவுங்க வந்து வாசல்ல நின்னா, நாம்ம கெளம்புலன்னு தெரிஞ்சா
திட்டுவாங்க!"ன்னுச்சு சுந்தரி.
"நீயி உள்ளார உக்காரு! நாம்ம வெளியில
ஒம் வூட்டுக்கார்ரேம் வந்தா பேசிக் கொண்டாறேம்!"ன்னு வெங்கு வாசப்பக்கமா போனுச்சு.
அதுக்குள்ள ஆயி டீத்தண்ணியோட பண்டத்தெ எடுத்துக்கிட்டு சுந்தரிக்குக் கொண்டாந்து
வெச்சா.
"ஏம் இதல்லாம்?"ன்னு தயங்குனபடி
எடுத்துக்கிட்டு சுந்தரி. சுந்தரி சொன்னாப்புல வாசல்ல வந்து நின்னு ஹாரனெ கொடுத்துச்சு
சித்துவீரன். சுந்தரி டீயப் பாதிக் குடிச்சதும், குடிக்காதமுமா எழும்பப் பாத்தது. செய்யு
பிடிச்சி தடுத்து உக்கார வெச்சா.
வெளியில நின்னுகிட்டு இருந்த வெங்கு,
"ஏம்ப்பா! வந்தா வூட்டுக்குள்ள வார மாட்டீயா?"ன்னு சத்தம் போட்டதெ பாத்துப்புட்டு,
சித்துவீரன் உள்ளார வந்துச்சு. "கொஞ்ச வேல அவ்சரம்! உள்ள வந்தா ஆர அமர உக்காந்துப்
பேசிட்டுப் போவணும். வந்தோமோ போனோமான்னு கால்ல வெந்நிய ஊத்திட்டு ஓடுறாப்புல கெளம்பக்
கூடாதுன்னு பாத்தேம்!"ன்னுச்சு சித்துவீரன்.
"ஒரு நிமிஷம் டீத் தண்ணியப் போட்டுக்
குடிச்சிட்டுப் போறதுல எம்மாம் நேரமாயிடப் போவுது? அதுல என்னத்தெ கொறைஞ்சிடப் போவுது?
டீத்தண்ணியக் குடிச்ச பெற்பாடு உக்கார வைக்கலே. நாமளே கெளப்பி வுட்டுப்புடுறேம்!"ன்னு
வெங்கு சித்துவீரனெ உள்ளார கொண்டாந்தது. ஒடனே ஆயி சித்துவீரனுக்கு ஒரு தம்பளர்ல டீத்தண்ணியும்,
ஒரு தட்டுல பண்டத்தெ வெச்சியும் கொடுத்துச்சு. அதெ வாங்கி நிமிஷத்துல வயித்துக்குள்ள
தள்ளுன சித்துவீரன் கெளம்புறதுல தயாரா இருந்துச்சு. சுந்தரியும் வேகுவேகுன்னு பண்டத்தெ
உள்ளார தள்ளி, டீத்தண்ணிய ஊத்தி முடிச்சது.
"யின்னோரு நாளு நெதானமா வந்து கல்யாணப்
பொண்ணோட பேசிட்டு இருந்துட்டுப் போறேம்!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புனுச்சு
சுந்தரி.
"செரி கெளம்புடியம்மா! ஒம் புருஷன்
மின்னல்ல பிடிக்குற வேகத்துல இருக்காம்! நாம்ம ஒன்னயப் பிடிச்சி நேரத்தோட கையில கொடுத்துடுறேம்!"ன்னுச்சு
வெங்கு. ரண்டு பேரும் கெளம்பிப் போவ, வாசல்ல வந்து நின்னு அனுப்பிப்புட்டு உள்ளார
வந்ததும் விகடு அறைக்குள்ள போனாம். ஆயியும் அறைக்குள்ள வந்தா.
"ன்னா கையில டப்பா? ஒண்ணும் புரியலீயே?
வந்ததும் போனதும் தெரியாம சொவடு தெரியாம ஓடுதுங்களே?"ன்னாம் விகடு.
"ன்னா கருமாந்திரமோ? நமக்கென்ன தெரியும்?"ன்னா
ஆயி.
"அதுக்கு ஏம்டி கருமாந்திரங்றே?"ன்னாம்
விகடு.
"ஒஞ்ஞளுக்குக் கதெ தெரிஞ்சா இப்பிடியில்லாம்
பேச மாட்டீயே?"ன்னா ஆயி.
"அப்பிடி ன்னாடி நமக்குத் தெரியாத
கதெ?"ன்னாம் விகடு.
"மூர்த்தோல அன்னிக்கு நடந்த கதெ
ஒஞ்ஞளுக்குத் தெரியாதுல்லா! அதாங் இப்பிடிப் பேசுதீங்க!"ன்னா ஆயி.
"மூர்த்தோல அன்னிக்கு நமக்குத் தெரியாம
ன்னா நடந்துச்சு?"ன்னாம் விகடு.
"கதெ கேக்கறதுல ஒண்ணுங் கொறைச்சலு
யில்ல. நீஞ்ஞ அன்னிக்கு எஞ்ஞ ஓரிடத்துல இருந்தீயே? அலைஞ்சிட்டுல்லா கெடந்தீயே! கெளம்புற
நேரமா பாத்து, ஒஞ்ஞ வருங்கால மச்சாம் டாக்கடர்ரு பாலாமணி இருக்காகல்ல, அவுக தயங்கித்
தயங்கி நிக்குறாருக. ஏம்டா கெளம்புதீயா இல்லியான்னு சனங்க கேக்குறாங்க. அதுக்கு ஒஞ்ஞ
பாக்குக்கோட்டெ தாத்தா இருக்கார்லே சோசியக்கார தாத்தா, வெக்கப்படாம போயிக் கொடுத்துட்டு
வாடாங்றாரு. செரின்னு ஒஞ்ஞ வருங்கால மச்சாம் கையில ஒரு பெரும் டப்பாவ எடுத்தாந்து வூட்டுக்
கடெசியில உக்காந்திருந்த ஒஞ்ஞ தங்காச்சியப் பாக்கப் போறாரு. மூர்த்தோல முடிஞ்ச ஒடனே,
அம்மாம் நேரம் மூர்த்தோல எழுதுற வரைக்கும் பொண்ணு பக்கத்தலான ஒக்காந்திருந்தாரு.
வேனெ கெளப்பி வெச்சிகிட்டு இவ்வளவு வேலயும் நடக்குது!"ன்னு சொல்லிட்டு இருந்தா
ஆயி.
"வெசயத்தச் சொல்லுடி!"ன்னாம்
விகடு.
"அதெத்தான சொல்லிட்டு இருக்கேம்!
அவ்சரப்பட்டா ன்னாத்த சொல்றது! கேளுங்க! உள்ளார போன ஒஞ்ஞ வருங்கால மச்சாம் டாக்கடர்ரு
பாலாமணி இருக்காரே அவரு பெரும் டப்பாவக் கொடுத்துட்டுப் போயிட்டாரு. அதுல வேற அவரு
போன பெற்பாடுதாங் பிரிக்கணும்ன்னு சொல்லிட்டுப் போனதா கேள்வி. போனப்ப மூஞ்சியப்
பாக்கணுமே! என்னவோ ஒலிம்பிக் போட்டியில தங்கத்த வாங்குனதப் போல. செரித்தாம் பொண்ணுக்கு
என்னவோ ஞாபவார்த்தமா கொடுத்துட்டு போறாருன்னு நாமல்லாம் நெனைச்சிட்டு இருந்தேம்.
இருந்தாலும் என்னத்தெ கொடுத்திருக்கார்ன்னு பாக்கணும்ன்னு ஒரு ஆசெ இருக்குமுல்லா.
சனங்க எல்லாம் கெளம்புட்டும்ன்னு இருந்தேம். ஒரு வழியா எல்லா சனமும் கெளம்பி போனதுக்குப்
பெற்பாடு செய்யு அமைதியா இருந்த நேரமா பாத்து, என்னடியம்மா கொடுத்து வுட்டுருக்காரு
ஒங் வருங்கால புருஷங்காரரு அப்பிடின்னேம். பாக்கல யண்ணி. வாங்கி வெச்சது அஞ்ஞயேத்தாம்
இருக்கும் பிரிக்கலன்னா செய்யு. செரி பிரிச்சிப் பாத்துப்புட்டு அந்த அதிசயம் ன்னான்னு
சொல்லலாம்ன்னா சொல்லுன்னேம் நாம்ம வெவரங்கெட்ட தனமா. இதுல ன்னா யண்ணி அதியம் இருக்குன்னு
நம்ம கண்ணு மின்னாடியே தொறக்க ஆரம்பிச்சிட்டா செய்யு. அதுவரைக்கும் ஒஞ்ஞ தங்காச்சி
அதெ பிரிக்காம இருந்தது சத்தியமா நமக்குத் தெரியாதுங்க ஆம்மா சொல்லிட்டேம். செரிதாங்
கேக்க வந்தது வந்துட்டேம்! யிப்போ பிரிக்கிறதெ பாக்குறதுதாங் பாத்துட்டுப் போயிடுவோமோன்னு
நின்னா அந்தக் கருமெத்தா பாத்ததெ ன்னா சொல்லுறது போங்க! நாம்ம ஒரு வெவரங்கெட்ட வெளங்கா
மண்டே!"ன்னா ஆயி.
"ன்னாடி அப்பேலேந்து கருமெத்த கருமெத்தன்னா?
ன்னத்தா கொண்டாந்து கொடுத்ததுன்னு சொல்லாம?"ன்னாம் விகடு.
"ஒஞ்ஞளுக்கு ஒண்ணும் புரியாது. நமக்குச்
சொல்றதுக்கே வெக்கமா இருக்குங்க! ஒஞ்ஞ தங்காச்சிக்கும் வெவரம் புரியாம தொறந்துப்புட்டேம்ன்னு
வெக்கமா போயிடுட்டு!"ன்னா ஆயி.
"செரி சொல்லாட்டியும் போ! ஒரு விசயத்தெ
பட்டுன்னு சொல்லுதீயா நீயீ? ன்னா பீடிகெ போட்டு ன்னாம்மா கதெ அளக்குற நீயீ?"ன்னாம்
விகடு.
"யய்யோ அதெ எப்பிடிச் சொல்றது?
பொம்பளைங்க உள்ளுக்குப் போட்டு இருக்குற உள்பாடிய கொடுத்து விட்டுருக்காம் அந்த
டாக்கடர்ரு!"ன்னா ஆயி.
"என்னவோ பெரும் டப்பான்னு சொல்லிட்டு
அந்த டப்பாக்குள்ள அதாங் இருந்துச்சா?"ன்னாம் விகடு.
"வேணும்ன்னா அந்த டப்பாவக் கொண்டாந்து
காட்டவா? அப்பிடி சோடிச்சி அந்த டப்பாக்குள்ள வெச்சிருக்காம்ங்க!"ன்னா செய்யு.
"இதெ ஒரு சேதின்னு வந்து சொல்றே?"ன்னாம்
விகடு.
"யிப்போ நீஞ்ஞத்தானே டாக்கடர்ரு
தங்காச்சி எதோ டப்பா கொண்டாந்திருக்கே, ன்னா ஏதுன்னு கேட்டீயே? நாம்ம அதெ பாக்கப்
போயி இதெ மாதிரிக்கி வெக்கங் கெட்ட ஒண்ணா இருந்தா ன்னா பண்றது? யித்து டப்பா சின்னதா
இருக்குறதால பொம்பளைங்க போடுற பேண்டிசா இருந்தாலும் இருக்குமுங்க! ன்னா கருமம் பிடிச்ச
ரசனையோ ஒஞ்ஞ வருங்கால மச்சானுக்கு? இந்த ஆளெ மாப்புள்ளன்னு எஞ்ஞ கண்டு பிடிச்சீயளோ?
யத்தெ வேற அந்த ஆளெ தலையில தூக்கி வெச்சிக்கிட்டு ஆடுற ஆட்டம் இருக்கே? நமக்கு சமயத்துல
குமட்டிட்டு வருது!"ன்னா ஆயி சிரிச்சிகிட்டெ ஒரு மாதிரியா மொகத்த கோணிக்கிட்டு.
"செரி அந்த டப்பாக்குள்ள என்னவாச்சும்
இருந்து தொலைஞ்சிட்டுப் போவுது. நாம்ம ஒண்ணும் ஆராய்ச்சிப் பண்ண வாணாம்!"ன்னாம்
விகடு.
"யிப்போ சொன்னீயே இல்லீங்களா இத்து
செரி!"ன்னா ஆயி.
அதுக்குள்ள கூடத்துக்குள்ள வந்த செய்யு,
"யண்ணி! யண்ணி!"ன்னு சத்தத்தெ கொடுத்தா.
"ந்தோ வந்துட்டேம்!"ன்னு அறையிலேந்து
வெளியில போனா ஆயி.
"அவுக செல்போனு வாங்கிக் கொடுத்து
வுட்டுருக்காக! மைக்ரோமேக்ஸ் மொபைல்! சிம்கார்டெல்லாம் அதுலயே போட்டு இருக்கு! எல்லாம்
ஏற்பாட வாங்கிக் கொடுத்து வுட்டுருப்பாக போல!"ன்னு ஆயிகிட்டெ காட்டுனா செய்யு.
"நல்லவேள நாம்ம கூட வேற மாதிரியான
கிப்டா இருக்குமோன்னு பயந்துட்டேம்!"ன்னா ஆயி சிரிச்சிக்கிட்டெ.
"யண்ணன கூப்புடுங்க! காட்டலாம்!"ன்னா
செய்யு.
"இந்தாருங்க! உள்ளார இருந்து ஒட்டுக்
கேட்டுட்டு நின்னது போதும். வெளியில வந்துப் பாருங்க!"ன்னா ஆயி.
விகடு அறையிலேந்து வெளியில வந்தாம்.
"யண்ணே! போனு வாங்கிக் கொடுத்து வுட்டுருக்காக!"ன்னா செய்யு. விகடு அதெ
கையில வாங்கிப் பாக்காமலே செய்யு கையிலேந்தே பாத்தாம்.
"யிப்பல்லாம் இதாங் பேஷன்! மூர்த்தோல
முடிஞ்ச கையோட, ன்னா மூர்த்தோல முடிஞ்ச கையோட பொண்ணு பாத்த ஒடனே கையில போன வாங்கிக்
கொடுத்துடுறாங்க. நீஞ்ஞ இன்ன வரைக்கும் கலியாணம் ஆயி இம்மாம் நாளேச்சே? நமக்கு ஒரு
போன வாங்கிக் கொடுத்திருக்கீயளா? நீஞ்ஞளும் இந்த மாரிக்கி வாங்கிக்கிடாம இன்னும்
நோக்கியா டபுள் ஒன் டபுள் சீரோலேந்து இம்ப்ரூவ்மெண்ட் ஆவாம இருக்கீயே! ஒஞ்ஞ மச்சாங்காரரு
பாத்துக்கங்க. டச் போனு. வருங்கால பொண்டாட்டிக்கிகாரிக்கு. சிம் கார்டெ போட்டு வாங்கிக்
கொடுத்திருக்காரு! என்னத்தெ யிருந்தாலும் டாக்கடர்ரு மாப்ளே டாக்கடர்ரு மாப்ளேதாங்!"ன்னா
ஆயி.
"ஆரம்பிச்சிட்டீயா? இனுமே ஒம் வாய
நிப்பாட்டுறது கஷ்டம் ஆயி!"ன்னாம் விகடு.
"எதுக்கெடுத்தாலும் இதெ ஒண்ணு சொல்லிப்புடுங்க!"ன்னு
மொறைச்சிக்கிட்டுப் போனா ஆயி.
அடுத்த சில நாட்கள்ல அதுல வாட்ஸ் அப் வரைக்கும்
தெரிஞ்சிக்கிட்டு மின்னேறி வந்தா செய்யு. அதுல வெங்குவுக்கு பெருமெ தாங்கல. செய்யு
அந்த போன் மூலமா பாலாமணிகிட்டெ பேசுனதோட, வெங்குவும் தம்பிக்காரங்கிட்டெ பேசிக்கிட்டு
கெடந்துச்சு. சுப்பு வாத்தியாரு ஒருத்தரு, "இதல்லாம் ன்னா கருமம்டா! போனுன்னா
பேசுறதுக்குத்தானே. இதுல ன்னா எப்ப பாத்த்தாலும் அதுலயே நோண்டிக்கிட்டு ஒத்த வெரலே
கழண்டுப் போயி அந்தாண்ட வுழுந்துடுறாப்புல!"ன்னாரு.
*****
No comments:
Post a Comment