9 Jul 2020

வளையம் ஏழு!

செய்யு - 501

            பாக்குக்கோட்டைய வுட்டு லாலு மாமா கெளம்பும் போது ராசாமணி தாத்தா சொன்னது, "வடவாதியில கெடக்கானே சுந்தரியோட புருஷன் சித்துவீரன் அவனெ சரிகட்டிப்புடுப்பா மொதல்ல. இல்லன்னா அவ்வேம் அடிக்குற கூத்து தாங்க முடியாம சிரிப்பாணியாச் சிரிக்குறதா, அழுகாணியா அழுகுறதான்னு போயிடும். அவ்வேம் பேச்சக் கேட்டுட்டு அதுக்கேத்தாப்புல ஆடுவாம் பாலாமணி. சுந்தரிப் புருஷன் தண்ணியப் போட்டுட்டு பேசுனாம்ன்னா வூட்டுக்குள்ள உக்காந்துட்டு தலையத் தொங்கப் போட்டுட வேண்டியதுதாங். அந்தப் பயெ எதாச்சிம் பொண்ணப் பாத்து, அந்தப் பொண்ணுக்கு மூர்த்தோல எழுதுற நேரமா மாரடைப்பு வந்துப் போயிச் சேந்துடப் போறது? அவனுவோ பாக்குறதுல்லாம் அப்பிடில்லா இருக்கு? இதுல பெருமெ பீத்தகளை வேற?"
            லாலு மாமா அதுக்கு ஒண்ணும் சொல்லாம தலையாட்டிட்டுகிட்டுச் சிரிச்சிட்டுப் போனுச்சு. அதெ பாத்துப்புட்டு, "ன்னா ஒம்மட யண்ணன் தலையாட்டிட்டுச் சிரிச்சிட்டுல்லா போறாம்? காரியத்தெ முடிச்சிடுவான்னா? அஞ்சு லட்சத்த அமுக்கித் தந்துப்புடுவானா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "எல்லாம் மனுஷன் நடந்துக்குற மொறையிலத்தாம் இருக்கு. பேசுற பேச்சுலத்தாம் இருக்கு. நீஞ்ஞ சொன்னா எல்லாம் தாறுமாறு தக்காளிச் சோறு ஏறுக்கு மாறுதாம். யண்ணன் போயிப் பேசுனாலே பொட்டிப் பாம்புத்தாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அத்துச் செரி! பொட்டிப் பாம்புத்தாம்! என்னிக்குக் கொத்தப் போறாம்ன்னு தெரியல?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "எந்த ஊர்ல பொட்டிப் பாம்ப பல்லோட வெச்சிருப்பாவோ? பல்ல பிடுங்கித்தாம் வெச்சிருப்பாவோ! பிடாரனுக்குப் பாம்போட பல்ல பிடுங்கத் தெரியலன்னா அத்து பாம்போட தப்புல்ல, பிடாரனோட தப்பு!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "ஒங்கிட்டெ வந்து ஒம்மட பொறந்த குடும்பத்தெப் பத்திச் பேசுவேனா?"ன்னு ராசாமணி தாத்தா ஒரு பீடிய எடுத்துக்கிட்டு லாலு மாமாவ பஸ்ஸூ ஏத்தி வுடுறதுன்னு கெளம்புனதுதாம்.
            லாலு மாமாவுக்கு சூட்டோட வேலைய முடிச்சாவணும். பாக்குக்கோட்டையிலேந்து கெளம்பி வடவாதிக்குப் போறதுன்னு முடிவு பண்ணுச்சு. பாக்குக்கோட்டையிலேந்து கெளம்புறப்ப பஸ் ஸ்டாண்டு முழுக்க பலாப்பழமா கண்ணுல பட்டுச்சு. அங்கங்க பலாப்பழ யேவாரிங்க நின்னு எம்பது ரூவா, அறுவது ரூவான்னு சத்தத்தெ போட்டுட்டு இருந்தாங்க. பலாப்பழத்த பாத்ததும் அதுல மூணு வாங்கி ஒண்ணுத்த ராசாமணி தாத்தாகிட்டெ கொடுத்துட்டு, ரண்ட வடவாதிக்குக் கொண்டு போறதா சொன்னிச்சு. மூணுக்கும் சேத்தாப்புல நூத்து எம்பது கேட்ட யேவாரிகிட்டெ நூத்து முப்பது ரூவாயத் தூக்கிக் கொடுத்துட்டுக் கெளம்புனுச்சு. ஒரு அஞ்சு பாத்துப் போட்டுக் கொடுத்துட்டுப் போப்பாங்ற குரல கண்டுக்கிடாம அது ஒரு பலாப்பழத்தத் தூக்கிக்க, இன்னொண்ண ராசாமணி தாத்தா தூக்கி பஸ்ல கொண்டாந்து வெச்சுச்சு. பஸ்ஸூ கெளம்புறப்போ, ராசாமணி தாத்தா அஞ்சு வெரலக் காட்டி, "முக்கியம் மச்சாம்!"ன்னுச்சு. லாலு மாமா, "பலா முக்கியம்! சரசுக்குப் பிடிக்கும்!"ன்னுச்சு.   பாக்குக்கோட்டையில ஒரு பழத்த ஏத்தி வுடவாவது ஆளு இருந்துச்சு. ஆர்குடியில வந்து எறங்கி, வடவாதி பஸ்ஸப் பிடிச்சி ஏறுறது செருமமா இருக்கு. இருந்தாலும் லாலு மாமாவுக்குப் பலாப்பழம் முக்கியம்.
            பச்சையாவே பழுக்குற பலம்ன்னா அத்து பலாப்பழம் ஒண்ணுத்தாம். பழங்கள்ல பெரிய பழம்ன்னாலும் பலாப்பழம்தாம். ஒரு பழத்தை முழுசா திங்க முடியாதுன்னாலும் அது பலாப்பழம்தாம். பழத்துக்குள்ள கறிகாயி இருக்குற பழம்ன்னாலும் பலாப்பழந்தாம். பழத்தைத் தின்னுப்புட்டா உள்ள இருக்குற பலாகொட்டையக் கறிகாயாப் போட்டுச் சாம்பார்ர வெச்சா வூடே மணக்கும். வேற்குடியில இருந்த வரைக்கும் பலாப்பழம் வாங்குறதுக்கே காவடி கட்டிட்டு எட்டுக்குடி முருகன் கோயிலுக்குப் போயிருக்கு லாலு மாமா. பலாப்பழம்ன்னா அதுக்கு அம்புட்டுப் பிரியம். அதெ வுட சித்துவீரனுக்குப் பலாப்பழம்ன்னூ இன்னும் இஷ்டம். எலுமிச்சம் பழத்துல அடிக்கடி வாசனையெ மோந்துப் பாத்துக்கிறது போல பலாப்பழத்தெ அடிக்கடி மோந்து பாத்துக்கிட்டே இருக்கணும் சித்துவீரனுக்கு.
            லாலு மாமா எங்கன பலாப்பழத்த பாத்தாலும் வாங்கிப்புடும். அதோட மேல கைய வெச்சித் தேய்ச்சிக்கிட்டு இருக்குறது அதுக்குப் பிடிக்கும். என்னவோ அந்தச் சொரசொரப்புல அதுக்கு ஒரு சொகம். வேற்குடியில இருந்த வரைக்கும் பலாப்பழம் அறுக்குறதுக்குன்னே தனி கத்தியெல்லாம் வெச்சிருந்துச்சு. பலாப்பழத்தோட பிசுபிசுப்பு ஒட்டிக்கிடக் கூடாதுன்னு கையில எண்ணெய்யத் தடவிகிட்டு உக்காந்து அறுத்ததுன்னா சொளை சொளையா எடுத்துப் போடும். ஒரு பலாப்பழத்த அறுக்குறதுக்கு மின்னாடியே அதுல எத்தனெ சொளைக இருக்குங்றதெ பழத்தோட மேல இருக்குற முள்ளுல எதோ ஒரு கணக்கு வெச்சிக்கிட்டுச் சொல்லும். கிட்டத்தட்ட அத்து சொல்ற எண்ணிக்கைக்குத்தாம் சொளைகளும் இருக்கும். தஞ்சாரூ போன பெற்பாடும் பலாப்பழத்த பாத்துட்டா வாங்கிக் கொண்டு போயி வெச்சு ஆச தீர தின்னாத்தாம் அதுக்குத் திருப்தி வரும். ஒத்த ஆளா இருந்தாலும் மொத்த பலாப்பழத்தெ காலி பண்ணிடும். அதுல தேன்ல பலாச்சொளைய ஊறப் போட்டுகிட்டு வேற வெச்சுத் திங்கும்.
            ரண்டு பலாப்பழத்துல ஒண்ணுத்தத் திங்குறதுன்னா எப்படியும் ரண்டு நாளு ஆவும். அதெ தின்னு முடிக்கிற வரைக்கும் லாலு மாமா வடவாதிய வுட்டுக் கெளம்பப் போறது கெடையாது. வடவாதி வந்து எறங்குனதும் பலாப்பழத்த ஒவ்வொண்ணா பஸ் ஸ்டாண்டுல எறக்கி ஓரமா வெச்சிட்டு சித்துவீரன் வூட்டுக்கு நடந்துச்சு. சுந்தரியோட பையனும் பொண்ணும் வெளியில எதையோ வேடிக்கெ பாத்துக்கிட்டு, வெளையாண்டுகிட்டு நின்னுச்சுங்க. பையன் நெடுநெடுன்னு கருப்பா வளத்தியா இருந்தாம். பொண்ணும் அப்பிடித்தாம் நெடுநெடுன்னு மாநிறத்துல இருந்துச்சு. லாலு மாமா பலாப்பழத்த காட்டித் தூக்கிட்டு வான்னு சொல்லிட்டு வூட்டுக்குள்ள போனுச்சு. புள்ளீயோ ரண்டுக்கும் சந்தோஷம். தூக்க முடியாம தூக்கிட்டு வந்துச்சு. லாலு மாமாவுக்குத் தெரியும் புள்ளைகள எப்பிடிச் சந்தோஷப்படுத்துறதுன்னு.
            லாலு மாமா நெலப்படியத் தாண்டி உள்ள நோழையுறதுக்குள்ள புள்ளைங்க ரண்டும் பின்னாடி தூக்குனப் பழத்தோட நொழைஞ்சதுங்க. "மாமா பலாப்பழத்தோட வந்திருக்கே!"ன்னுச்சு சுந்தரி.
            "எஞ்ஞ வூட்டுக்கார்ரேம்?"ன்னுச்சு லாலு மாமா.
            "எஞ்ஞடா யப்பா?"ன்னுச்சு சுந்தரி மவனெப் பாத்து.
            "வண்டிய எடுத்துக்கிட்டுப் போனுச்சு. எஞ்ஞன்னு சொல்லல!"ன்னாம் பயெ.
            "செரி வாரட்டும் வுடு. கத்திய எடு. ஒரு பழத்தெ அறுப்பேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "ன்னா மாமா திடீர்ன்னு? ஒண்ணும் பெரச்சனெ இப்போ இல்லேயே! சென்னைப் பட்டணம் போயிருப்பேன்னுல்ல நெனைச்சேம்!"ன்னுச்சு சுந்தரி.
            "போயிக் குடி வெச்சிட்டு வந்துதாங். தங்கலாமுன்னுதாம் பாத்தேம். கலியாணம் ஆன சோடிங்க. நாம்ம இருந்துகிட்டு எடைஞ்சல் வாணாம்ன்னு கெளம்பி வந்ததுதாங். பத்து நாளு ஆயி கெளம்புவேம்ன்னு பாத்தா, அடுத்தச் சோலி வந்துடுச்சு. பொழுதும் போவல பாரு. அதாங் கெளம்பி வந்துட்டேம்!"ன்னுச்சு லாலு மாமா.

            "தாத்தா! கத்தியில்ல. அருவாத்தாம் இருக்கு!"ன்னு அதெ கொண்டாந்தாம் சுந்தரியோட மவ்வேன்.
            "செரி கொண்டா. அப்பிடியே கிண்ணியில கொஞ்சம் எண்ணெய்யக் கொண்டா!"ன்னு சட்டையைக் கழட்டிப் பெஞ்சு மேல போட்டுட்டு லாலு மாமா எறங்கி உக்காந்து பலாப்பழத்தெ பதம் பாக்க ஆரம்பிச்சது.
            "சோலின்னீயே மாமா! பலாப்பழம் அறுக்குற சோலிதானா?"ன்னுச்சு சுந்தரி.
            "மவனுக்கு வயசென்ன இருக்கும்?"ன்னுச்சு லாலு மாமா.
            "எட்டாப்பு படிக்கிறாம். பொண்ணு அஞ்சாப்பு படிக்குறா!"ன்னுச்சு.
            "அண்ணணுக்கு வயசென்ன இருக்கும்?"ன்னுச்சு லாலு மாமா.
            "வயசுதாங் ஆயிக் கெடக்கே!"ன்னுச்சு சுந்தரி.
            "யெப்போ கலியாணத்தப் பண்ணுறதா உத்தேசம்? ஒமக்குக் கலியாணம் ஆயி கொழந்த குட்டி ஆயி அதுகளுக்கே கொழந்த குட்டி ஆயிடும் போலருக்கு! அவ்வேம் இன்னும் ஒண்டிக் கட்டையா நிக்குறாம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "பொண்ணுப் பாத்துட்டீயா? அதாங் சோலியா? பொண்ணு எந்த ஊரு? ன்னா பண்ணுது?"ன்னுச்சு சுந்தரி.
            "எல்லாம் இந்த ஊருதாங். நீயிப் பாத்ததுதாங். வெங்கு மவ்வே இருக்காளே செய்யு. அவளத்தாம் பண்ணி வுடலாம்ன்னு நெனைக்கிறேம். பாக்குக்கோட்டையில பேசிட்டேம். அப்பிடியே ஒங்கிட்டேயும், ஒம்மட வூட்டுக்காரர்கிட்டேயும், முருகு அண்ணங்கிட்டேயும் ஒரு வார்த்தெ பேசிட்டேன்னா வேல முடிஞ்சிடும்ன்னு பாக்குறேம்!"ன்னுச்சு லாலு மாமா. பேசிகிட்டே எண்ணெய்ய தடவிக்கிட்டே பழத்தெ ரண்டா பொளந்திருந்துச்சு லாலு மாமா.
            "ஒத்து வருமா மாமா?"ன்னுச்சு சுந்தரி.
            "நீயும் ஒம் புருஷனும் ஒத்து வந்துத்தாம் கலியாணத்தக் கட்டிட்டுக் குடித்தனம் பண்ணுதீயளா?"ன்னுச்ச லாலு மாமா. சுந்தரி ஒண்ணும் பேசல.
            "ன்னா பேச்சக் காணும்?"ன்னுச்சு லாலு மாமா.
            "என்னத்தெ சொல்றது? அதாங் ஒண்ணுத்தையும் சொல்ல முடியாம வாய அடைச்சிப்புட்டியே!"ன்னுச்சு சுந்தரி.
            "பாலாமணிக்குப் பொருத்தமா இல்லியாங்றதெ மட்டும் சொல்லு!"ன்னுச்சு லாலு மாமா.
            "யண்ணனப் பத்தி ஒனக்குத் தெரியும். அதோட கொணத்துக்கு அனுசரிச்சிக்கிற பொண்ணுன்னா செரித்தாம். யாரு போக்குக்கும் அனுசரிச்சி வாராத ஆளு. குடும்பத்துல இருந்தப்பவே குடும்பமே அத்து போக்குக்கு அனுசரிச்சித்தாம் ஓட்டுனது. யண்ணன நமக்குப் பிடிச்ச அளவுக்குப் பிந்துவுக்குப் பிடிக்காது. யப்பா அதெ கண்டுக்கிடாது. யம்மாத்தாம் ஆம்பளப் புள்ளன்னு கெடந்து அடிச்சிக்கும். குடும்பத்துல கெடந்த நாளு கம்மி மாமா. காசு பணம்ன்னு அலைஞ்சிக்கிட்டே இருக்கும். ஒரு பத்து ரூவா பணம் சம்பாதிக்கலாம்ன்னா வூட்டுல யாரு உசுருக்குப் போராட்டிட்டுக் கெடந்தாலும் பத்து ரூவாய்க்காக ஓடுற ஆளு. அதெயல்லாம் புரிஞ்சி அனுசரிச்சிக்கிற பொண்ணா இருக்கணும். ஆர்குடி காலேஜூல படிச்ச வரைக்கும் இஞ்ஞ சைக்கிளப் போட்டுட்டுப் போயி படிச்சப் பொண்ணுதாம் செய்யு. பழக்கவழக்கம் பேச்சுல எல்லாம் பணிவுதாம். ஒண்ணும் பெரச்சனெயில்ல. யண்ணனோட கொணப்பாட்டுக்கு ஒத்துப் போயிட்டா ஒரு பெரச்சனையும் யில்ல. ஒத்துப் போவலன்னா பெரச்சனைத்தாம். அந்த வெதத்துல வெளியிலேந்து ஒரு பொண்ண எடுத்து ஒத்துப் போவுதோ? ஒத்துப் போவாதோன்னு நெனைச்சிக்கிட்டு இருக்குறதெ வுட, சொந்தத்துல எடுத்தா அத்து செல விசயத்துக்குத் தோதாத்தாம் இருக்கும் மாமா!"ன்னுச்சு சுந்தரி.
            "அதாங் நாமளும் யோசிச்சேம். நீயும் அதெயே சொல்லிட்டே! இதாங் செரி! அகாம்பவாம் அழிச்சாட்டியும் பிடிச்சப் பயெ இவ்வேம். பொறுத்துக்கிடுற பொண்ணாவும், குடும்பமாவும் பாத்து தள்ளி வுடுறதுதாங் செரி! இல்லன்னா காலத்துக்கும் ஒங் குடித்தனப் பஞ்சாயத்து மாதிரி ஆயிடும்! இதுக்கு ஒம்மட புருஷம் என்னச் சொல்லுவாம்?"ன்னு சொல்லிக்கிட்டே பலாச் சொளைய எடுத்து புள்ளைகள்ட்டேயும், சுந்தரிக்கிட்டேயும் நீட்டுனுச்சு லாலு மாமா.
            "பழத்தெ ஒடைச்சிட்டே, சோளைய உறிச்சிட்டெ, திங்க வுடாம வுட்டுடுவீயா?"ன்னுச்சு சுந்தரி.
            "ச்சும்மா ஒம் மனசுல படுறதெ சொல்லேம்?"ன்னுச்சு லாலு மாமா.
            "நாம்ம சொல்றதுக்கு என்னிக்கு ஒத்து வந்திருக்கு அத்து? நாம்ம ஒண்ணு சொன்னா அத்து ஒண்ணுச் சொல்லும். ஒரு நாளைக்கு எத்தனெ தடவெ தேவிடியா தேவிடியான்னு சொல்றதுக்கு கணக்கே யில்ல மாமா. அத்து ன்னா மாமா வருஷத் தேவிடியான்னா? தேவிடியா சிறுக்கின்னு இழுத்துப் போட்டு அடி, ஒதெ வேற. என்னத்தெ சொல்றது?"ன்னுச்சு சுந்தரி.
            லாலு மாமா புள்ளைங்களப் பாத்துச்சு. இன்னும் ரண்டு சொளைகள உறிச்சிக் கொடுத்து வெளியில போயி தின்னுகிட்டே வெளையாடுங்கன்னுச்சு. புள்ளைங்க தெருப்பக்கமா போனதும், முந்தானையால கண்ணு ரண்டையும் தொடைச்சிக்கிட்டு அழுவ ஆரம்பிச்சிது சுந்தரி.
            "அழுவாதேங்றேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "நல்ல வேள! தேவிடியாளாவே இருந்ததால உறுத்தல. யில்லன்னா என்னிக்கோ தூக்குலத்தாம் தொங்கிருப்பேம். இவனெ கட்டிக்கிட்டதுல அதாங் ஒண்ணு. பத்தினியா இருந்துல்லாம் இவ்வேங்கிட்டெ குடித்தனம் பண்ண முடியாது மாமா! வெசத்தக் குடிச்சிட்டோ, நெருப்ப வெச்சிக்கிட்டோ சாவ வேண்டியதுதாங். கொல்லாம கொல்லுறாம் மாமா. புள்ளைங்க இருக்கே, எப்பிடிப் பேசணும்ன்னு கூட தெரியல மாமா! வாயில வந்ததெயெல்லாம் பேசுறது! அவ்வேம் பய மெரண்டு கெடக்குறாம். அப்பன் உள்ள வந்தாலே வெளியில ஓடிடுறாம். பொண்ணு கொல்லப் பக்கம் ஓடிடுது. ஏத்தோ ஓடிட்டு இருக்கு எம் பொழப்பு!"ன்னுச்சு சுந்தரி.
            "யண்ணங்காரனுக்குக் கலியாணப் பேச்ச பேசுறப்போ கண்ணக் கசக்கிக்கிட்டு? ஒமக்காகத்தானே எவனுக்கும் அடங்காதப் பயெ பாலாமணி, ஒம் புருஷனுக்கு அடங்கிட்டுக் கேக்குறதையெல்லாம் பண்ணிட்டுக் கெடக்குறாம். அவனுக்குப் பாத்து ஒரு நல்ல கெதிய பண்ணி வுடணுமா இல்லியா?"ன்னுச்சு லாலு மாமா.
            "எப்பிடியோ நீந்தாம் பாத்து ஒரு நல்ல வழியப் பண்ணி வுடணும் மாமா! நீயி பாத்தபடியே பாத்து பண்ணி வுட்டுப்புடு. இந்தப் பயெ வேற மச்சாங்காரனுக்குப் பொண்ணு அது இதுன்னு கொண்டாந்து வேற இம்செ எதாச்சும் கொடுத்துடப் போறாம்? அதுக்கு மின்னாடியே நீயி மிந்திக்கிட்டெ வரைக்கும் நல்லதுதாங்!"ன்னுச்சு சுந்தரி.
            "அந்தப் பயெ வாரட்டும்! நாம்ம பேசிக்கிறேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "அதெ வுடு மாமா! பேச வேண்டியதெ மட்டும் பேசு!"ன்னுச்சு சுந்தரி.
            சங்கிலியோட ஏழாவது வளையம் சேந்துச்சு இப்படியா!
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...