10 Jul 2020

வளையம் எட்டு!

செய்யு - 502

            சித்துவீரன் வரும்ன்னு லாலு மாமா உக்காந்துப் பாத்துச்சு. சுந்தரி அதோட கதெய நிறுத்துனபாடில்ல. அனுமாரு வால வுட தாண்டி நீண்டுகிட்டெ இருந்துச்சு. லாலு மாமா வந்தப்போ சாயுங்காலம் அஞ்சரை மணிக்கு மேல இருக்கும். இப்போ மணி ராத்திரி எட்டெ தாண்டி இருட்டிருந்துச்சு. புள்ளீயோ ரண்டும் டிவியைப் போட்டுட்டு உக்காந்திருந்துச்சுங்க. லாலு மாமா டிவியைப் பாக்குறதும், சுந்தரியப் பேச்சக் கேக்குறதுமா இருந்துச்சு. பெஞ்சு மேல கழட்டிப் போட்டுருந்த சட்டைய எடுத்து மாட்டிட்டு, "போயின்னா யண்ணன பாத்துட்டு வந்துடட்டுமா?"ன்னுச்சு லாலு மாமா சுந்தரிகிட்டெ.
            "வர்ற நேரந்தாம்! அஞ்ஞப் போனா ராத்திரி சாப்பாடு அஞ்ஞல்லா ஆயிடும்! இஞ்ஞ நாம்ம சமைச்சிட்டுல்லா இருக்கேம்!"ன்னுச்சு சுந்தரி.
            "நீயி சமைச்சி வையி! அவ்வேம் சித்துவீரன் வந்தா வாரச் சொல்லேம். ஒரு எட்டுப் பேசிட்ட்டு வந்தேன்னா கருக்கல்ல எம்மெல்ஏ பஸ்ல பிடிச்சேம்ன்னா கெளம்பிடுவேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "யப்போ வெங்கு யக்கா வூட்டுக்குல்லாம் போவலியா?"ன்னுச்சு சுந்தரி.
            "நாம்ம எறங்கிப் பேசுனா எளப்பமா போயிடும்? யண்ணனையோ, சித்துவீரனையோ வுட்டுத்தாம் பேசணும்!"ன்னுச்சு லாலு மாமா.
            "இவரு சுத்தப்படுமா மாமா?"ன்னுச்சு சுந்தரி.
            "யில்லன்னா யண்ணன வுட்டுப் பேசச் சொல்றேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "அவுக அதுக்கு மேல அலுத்துப்பாக. பேசும்ங்களா சனங்க?"ன்னுச்சு சுந்தரி.
            "பேசுறதுன்னா அஞ்ஞப் போயி பேசுறது கெடையாது! இஞ்ஞ வாரச் சொல்லித்தாம் பேசணும்! நம்ம கிரிப்ப எதுக்கு விட்டுக் கொடுக்கணும்! வூடு தேடி கேட்டதா நாளைக்குப் பேச்சு வந்துப்புடக் கூடாது பாரு!"ன்னுச்சு லாலு மாமா.
            "அத்து எப்டி மாமா? சுத்தப்பட்டு வருமா?"ன்னுச்சு சுந்தரி.
            "அத்து எப்பிடின்னா... அவ்வே தேன்காட்டுக்காரி கெடக்காளே அவ்வே வந்து பேசிட்டுப் போனதெ வெச்சு, இஞ்ஞ எதார்த்தமா வந்துட்டுப் போன நாம்மல, பேச்சு வாக்குல இந்த மாதிரிக்கிப் பேச்சு அடிபட்டதாவும், விருப்பம்ன்னா சொன்னா பேசிப் பாக்கலாங்ற மாதிரிக்கித்தாம் பேசுறது! செஞ்சுப்புடலாங்ற மாதிரிக்கிக் கூட பேசுறது கெடையாது!"ன்னுச்சு லாலு மாமா.
            "அதானே பாத்தேம்! எந்த உள்குத்து யில்லாம நேரடியா போவாதே சங்கதின்னு?"ன்னுச்சு சுந்தரி.
            "இப்பிடி இஞ்ஞ பேசிட்டு இருக்குற நேரத்துக்கு ஒரு எட்டுப் போயிட்டு வந்துப்புடுவேம். எலே பயலே இந்தப் பழத்தத் தூக்கிட்டுக் கெளம்பு. தாத்தா வூட்டுக்குக் கொண்டுட்டுப் போவேம்!"ன்னு லாலு மாமா சொல்ல சுந்தரியோட மவ்வேன் வெட்டாம கெடந்த பலாப்பழத்தத் தூக்கிக்க ரண்டு பேருமா கெளம்பி முருகு மாமா வூட்டுக்குக் கெளம்புனாங்க. கடைத்தெரு வெளிச்சமா இருந்துச்சு. வண்டியில போயிட்டு இருக்குறவங்க எண்ணிக்கெ அதிகமாவும், நடந்துப் போறவங்களோட எண்ணிக்கெ கம்மியாவும் இருந்துச்சு. அந்த எண்ணிக்கையில ரண்டு கூடுனாப்புல லாலு மாமாவும், சுந்தரியோட மவனும் நடையக் கட்டுனுச்சுங்க.
            முருகு மாமா வூட்டோ ஒட்டுனாப்புல இருந்த தன்னோட கடைக்கு மின்னாடி உக்காந்திருந்துச்சு. தீவாளி நேரம்ன்னா பட்டாசு கடையா மாறிடுற கடெ. வெதைப்பு நேரங்கள்ல உளுந்து பயிறு விக்குற கடெ. மித்த நேரங்கள்ல பாத்திரங்க, பெஞ்சுக, நாற்காலிகள வாடகைக்கு வுடுற கடெ. முருகு மாமா அரையில கட்டுன ஒரு கைலியோட தோள்ல சட்டையோ, துண்டோ யில்ல. தெறந்த மேனிக்கு உக்காந்திருந்துச்சு. லாலு மாமா வர்றதப் பாத்துட்டு, "சாயுங்காலமே வந்தாப்புல தெரியுது!"ன்னுச்சு முருகு மாமா.
            "ஊருக்குள்ள வந்து நொழைஞ்சது ஒரு குஞ்சு குளுப்பானுக்குக் கூட தெரியாதே!"ன்னுச்சு லாலு மாமா. இவுங்க பேசிட்டு இருக்க சுந்தரியோட மவ்வேன் அவ்வேம் பாட்டுக்கு வூட்டுக்குள்ள நொழைஞ்சு பலாப்பழத்த வெச்சிட்டுக் கெளம்பிட்டாம். நீலு அத்தை சத்தம் போட்டுச்சு, "சித்தெ இருடா எதாச்சிம் சாப்புட்டுப் போவலாம்!"ன்னு. "யம்மா திட்டும்! கொடுத்துட்டு வந்துடணும்னு சொல்லிருக்கு!"ன்னு சத்தத்தெ போட்டுட்டே அவ்வேம் பாட்டுக்கு ஓட்டத்தெ எடுத்துட்டாம். முருகு மாமா வாயத் தொறந்தப்போ சுந்தரியோட மவ்வேன் ரோட்டுல பாதி தூரம் ஓடியிருந்தாம்.
            "ஒலகநாதென் கடைக்கு வந்தேம் டீத்தண்ணிக் குடிக்கலாம்ன்னு. பஸ்ஸூ வந்து திரும்பி நீயி பாட்டுக்கு எறங்கி வூட்டுக்குள்ள நொழைஞ்சிட்டே. நீயி நொழையுறுதுக்கு மின்னாடி கொடுக்குங்க ரண்டும் பழத்தெ தூக்கிக்கிட்டு நொழைஞ்சது. எப்பிடியும் வாரத்தானே போறேன்னு நாம்ம சத்தத்தக் கொடுக்கல. வண்டிய வுட்டு எறங்குனப்பவே பாத்துட்டேம்! அஞ்ஞ வூட்டுக்குப் போயி நாளாச்சு. எதுக்குத் தேவையில்லாம அடியெடுத்து வைக்கணும்ன்னு ஒலகநாதன் கடையில டீத்தண்ணிய குடிச்சேமா? கெளம்புனேமான்னு வந்துட்டேம்!"ன்னுச்சு முருகு மாமா.
            "யண்ணி வூட்டுல டீத்தண்ணிப் போடறது யில்லையா?"ன்னுச்சு லாலு மாமா.
            "ரண்டு பேத்துக்காக என்னத்தெ போடுறது? நாம்ம ஒரு டீத்தண்ணியக் குடிச்சேமா? இவளுக்கு ஒண்ண தூக்குல வாங்குனோமான்னு வந்துப்புடுறது! அதாங் சுலுவு. யில்லன்னா பால வாங்கிக்கிட்டு, அதுக்கு சீனிச் சக்கரெ, டீத்தூளுன்னு வாங்கி அதெ கேஸ்ல வெச்சி எரிச்சி வுட்டுக்கிட்டு, அதுக்கு ஒண்ணுக்கு நாலா பாத்திரத்தெ அலம்பிக்கிட்டு வேலையத்த வேலத்தாம்!"ன்னுச்சு முருகு மாமா.
            "யேவாரம் முடிஞ்சிட்டா?"ன்னுச்சு லாலு மாமா சிரிச்சிக்கிட்டெ.
            "யென்னத்தெ யேவாரம்? வாடகைச் சாமானுங்க எடுக்க வந்தா யேவாரம். யில்லன்னா வேடிக்கத்தாம் யேவாரம். ஏத்தோ பொழுது ஓடிட்டு இருக்கு. இனுமே நேரத்துக்கு எவ்வேம் வர்றப் போறாம்? காத்தோட்டமா உக்காந்திருக்குறதுதாங்! செரி வூட்டுக்குள்ளார போ! கடையெ அடைச்சிட்டு வர்றேம்!"ன்னுச்சு முருகு மாமா. ரோட்டுல வாகனங்க ரண்டு பக்கமும் போயிட்டு இருந்துச்சு. 
            லாலு மாமா உள்ளார நோழைஞ்சி திண்ணையில உக்காந்ததும், "கொழுந்தனாருக்கு ன்னா மவ்வேம் கலியாணம் முடிஞ்சி கையி காயிறதுக்குள்ள இஞ்ஞப் பயணம்?"ன்னுச்சு நீலு அத்தை.
            "முக்கியமான சங்கதிதாங். யண்ணனும் வாரட்டுமே. பேசிப்புடலாம்! யண்ணனோட ஒடம்பெல்லாம் எப்டி இருக்கு?"ன்னுச்சு லாலு மாமா.

            "அதுக்கென்ன ந்நல்லா குத்துக்கல்லாட்டம் இருக்கு. நமக்குத்தாங் சுகருங்றானுவோ. ரண்டு பல்ல எடுத்துட்டேம். சாப்புட கொள்ள கொஞ்சம் செருமமா இருக்கு! பயணம் போயிட்டு வந்தா நாலு நாளு படுத்தாத்தாம் ஒடம்பு எழுந்திரிக்குது!"ன்னுச்சு நீலு அத்தெ. அவுங்க பேசிட்டு இருக்குறப்பவே முருகு மாமா வந்துச்சு.
            "ஏதோ முக்கியமான சோலியாம். அதெ நம்மகிட்டெ சொல்ல மாட்டாவோளாம். நீஞ்ஞ வர்ணம்ன்னு உக்காந்திருக்காவோ ஒஞ்ஞ யம்பீ!"ன்னுச்சு நீலு அத்தெ.
            "காலங் கெட்ட கடெசீயில இனுமே நமக்கென்ன முக்கியமான சோலி. கண்ண மூடுனா போயி இடுகாட்டுல உக்கார வேண்டிய சோலிதாங்!"ன்னுச்சு முருகு மாமா.
            "இவரு ஒருத்தரு. நாம்ம ஒண்ணுத்தெ சொன்னா இவரு ஒண்ணுத்தெ சொல்றதுக்குன்னே?"ன்னுச்சு நீலு அத்தெ.
            "வெசயத்த ஆரம்பிச்சத்தாம் சுத்தப்படும். சரசு மவ்வேம் இருக்காம்ல பாலாமணி. வயசு அநியாயத்துக்கு ஆயிப் போயிடுச்சு. இனுமே ஒரு பொண்ணப் பாத்து இழுத்துட்டுப் போறதுக்கு, வெங்கு மவ்வே இருக்காளே! அவளெ பிடிச்சிக் கோத்து வுடலாம்ன்னு பாக்குறேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "ம்ஹூக்கும்! நீயென்னப் பிடிச்சிக் கோத்து வுடறது? நாம்மத்தாம் ஒம் மவ்வேன் கலியாணத்துக்கு வந்தப்பவே கோத்து வுட்டாச்சு. என்னமோ அதிசயமான சேதித்தாம் சொல்ல வந்திருக்கேன்னு பாத்தேம்!"ன்னுச்சு நீலு அத்தெ அழிச்சாட்டியமா.
            "அப்பிடின்னா விசயம் அம்புட்டுத்தாங்! வயசுல மூத்த நீஞ்ஞ. யண்ணி பேசுனதுக்குப் பெறவு நாம்ம ன்னா பேசுறதுக்கு புதுசா இருக்கு?"ன்னுச்சு லாலு மாமா.
            "செரித்தாம்! பாலாமணி டாக்கடர்ரு பயலாலா இருக்காம். வெளியெடம்ன்னு பாத்தா நகெ நட்டு கூட பாக்கலாம்ல!"ன்னுச்சு முருகு மாமா.
            "இவரு ஒங்கண்ணன் ஒருத்தரு! இந்தக் காலத்து நகெ நட்டுன்னு எவ்வேம் கொறைச்சிச் செய்யுறாம்? இந்தக் காலத்துல ஊரு ஒலகத்தெ அடிச்சி ஒலையில்லா போட்டுல்லா வாத்திக்குச் சம்பளத்தெ கொடுக்குறாம் கவர்மெண்டுல. சுப்பு வாத்திக்கு வந்தச் சம்பளம் கொஞ்சமா? இப்போ அவ்வேம் மவ்வேம் வேற வாத்தியா இருக்கானே! அவனுக்கு வர்ற சம்பளம் கொஞ்சமா? நக நெட்டுல்லாம் நெறையாத்தாம் இருக்கும். கவர்மெண்டு காசின்னா காக்காசி சிலவெ பண்ணா, முக்கா காசிய பேங்குல போட்டுட்டுல்லா அவனவனும் உக்காந்திருக்காம். சம்பாதிச்சக் காசிய பொண்ணுக்குன்னு சிலவெ பண்ணட்டுமே. இவருக்கு எஞ்ஞ வலிக்குது?"ன்னுச்சு நீலு அத்தெ.
            "நமக்கென்ன வலிக்குதான்னாடி சொன்னேம்? காசி பணம் இருக்கான்னாத்தாம் கேள்வி. இருந்தா கேக்குறதெ செஞ்சா நமக்கென்ன? வெளியில எவ்வேங்கிட்டேயே லிஸ்ட்டுப் போட்டு வாங்குறதுக்கு இஞ்ஞயே வாங்கிட்டுப் போவேம்!"ன்னுச்சு முருகு மாமா.
            "அதல்லாம் சொல்றதெத் தாண்டித்தாம் சுப்பு வாத்திச் செய்யும். ரோஷக்கார ஆளு. ஒரு பொண்ண வெச்சிக்கிட்டு, இனுமே வேற தேவையும் கெடையாது. கூப்ட்டு வெச்சுப் பேசுனா வெவரம் தெரிஞ்சிடப் போவுது!"ன்னுது நீலு அத்தெ.
            "அதுக்குத்தாம் யண்ணி! இஞ்ஞ இப்போ வந்தது. செரியா சொல்லிப்புட்டீங்க! இஞ்ஞ கூப்ட்டு வெச்சித்தாம் பேசணும்!"ன்னுச்சு லாலு மாமா.
            "பெறவு வூடு தேடி வேற பேசுவாங்களாக்கும்? ஓகையூர்ல வய சம்பந்தமா பேசணும்னு சொல்லி வாரச் சொல்லி பேசிட்டு இருக்குறப்பவே வூடால அப்பிடியே அடிச்சி வுட வேண்டியதுதாங்!"ன்னுச்சு நீலு அத்தெ.
            "யண்ணித்தாம் செரியான ஆளு! நக நெட்டு, பண்டம் பாத்திரம், கலியாணச் சிலவு, அத்தோட காரு இம்மாம் வெசயத்தையும் நொழைச்சிப் பேசியாவணும்!"ன்னுச்சு லாலு மாமா.
            "அப்பிடில்லாம் பேச முடியா. டாக்கடர்ரு மாப்புளங்றதால ஒண்ணுக்கு நாலா செய்யுற மாரித்தாம் இருக்கும்ன்னு ஒத்த வார்த்தெதாங் பேசணும். அதுலயே எல்லாம் வந்துப்புடும். ஒரு நூலத்தாம் வுடணும். சுருக்கப் போட்டு இழுத்துப்புடணும். வழவழன்னு பேசிட்டு நின்னேம்ன்னா நாம்ம வழிஞ்சிட்டு நிக்கறாப்புல்லல ஆயிடும்! நாளைக்கி மின்ன பின்ன ஒண்ணு நடந்தாலும் கொற நம்ம மேல வந்துப்புடக் வடாது பாரு. நம்ம ஊருக்கார பொண்ணு ஒருத்தி அஞ்ஞ டாக்கடர்ரக் கட்டிட்டுப் போயிக் கெடக்கட்டுமேன்னு அப்பிடித்தாம் பேசணும்!"ன்னுச்சு நீலு அத்தெ.
            "அதாம்டாம்பீ! அழைச்சாந்து வுட்டா ஒஞ்ஞ யண்ணியே பேசி முடிச்சிப்புடுவா! கலியாணத்துல கொண்டுப் போயி நிப்பாட்டிப்புட்டு மறுவேல பாப்பா!"ன்னுச்சு முருகு மாமா.
            "கோத்து வுட்டா செரிபட்டு வரும்தானே?"ன்னுச்சு லாலு மாமா.
            "ஆம்மா இம்மாம் பேசிப்புட்டு பேசுனது பத்தாதுன்னு சொல்ற மாதிரிக்கித்தாம். முழுசா நனைச்சுப்புட்டு எஞ்ஞ நனையலன்னு கேக்குறப் பாரு!"ன்னு லாலு மாமாகிட்டெ பேசிக்கிட்டே, அப்பிடியே திரும்பி நீலு அத்தைகிட்டே, "என்னத்தடி சாப்பாட்ட பண்ணிருக்கே?"ன்னுச்சு முருகு மாமா.
            "சாப்பாடுல்லாம் அஞ்ஞ சித்துவீரேம் வூட்டுல ஆயிட்டு இருக்கு. சாப்புடலன்னா ஒம் மருமவ்வே கோவிச்சிக்கும்!"ன்னுச்சு லாலு மாமா.
            "ஆம்மா மருமவ்வே பொல்லாத மருமவ்வே! யப்போ ஒரு வாயி டீத்தண்ணியாவது குடிக்கிறது கொழுந்தனாரே!"ன்னுச்சு லாலு மாமா.
            "சாப்புடற நேரத்துல சுத்தப்படாது!"ன்னுச்சு லாலு மாமா.
            "செரி நல்லதாப் போச்சு. நாமளும் இந்நேரத்துக்குப் போயி எஞ்ஞ டீத்தண்ணியப் போடுறது? பாலும் யில்ல ஒண்ணுமில்ல!"ன்னுச்சு நீலு அத்தெ.
            அந்த நேரத்துக்கு முருகு மாமா வூட்டுக்கு மின்னாடி டிவியெஸ் எக்செல் வண்டியில வந்து ப்பீம் ப்பீம்ன்னு ஹாரனக் கொடுத்துச்சு சித்துவீரன்.
            "வந்துட்டாம்டி ஒம்மட உத்தமபுத்திரன்!"ன்னுச்சு முருகு மாமா நீலு அத்தைகிட்டெ.
            "சாப்பாடு ரெடியாயிட்டுன்னு கூப்புட வந்திருப்பாம்! செரி கெளம்புங்க கொழுந்தனாரே! ஒத்த நிமிஷம் நின்னா பொசுக்குன்னுக் கோவம் வந்துப்புடும் அந்தப் பயலுக்கு. சாப்புட்டுன்னா வாங்க. பேசிட்டு இருக்கலாம்!"ன்னுச்சு நீலு அத்தெ.
            "யில்ல யண்ணி! சாப்புட்டுட்டு அஞ்ஞ படுத்துட்டுக் காத்தால கெளம்புலாம்ன்னு இருக்கேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "கெளம்பிப் போயி, அஞ்ஞ தஞ்சார்ல ன்னா இருக்கு ஒத்தையில கெடக்குறதுக்கு? காத்தால வந்து இஞ்ஞ சாப்புட்டுப்புட்டு, பேசிட்டு இருந்துப்புட்டு அப்பிடியே பலாப்பழத்தையும் ஒரு கையிப் பாத்துப்புட்டுக் கெளம்பலாம்! பழத்த வாங்கிட்டு வந்தாப் போச்சா? அறுத்துக் கொடுக்குறது யாரு?"ன்னுச்சு நீலு அத்தெ.
            "செரி கெளம்புடாம்பீ! ஆவுறதெ பாத்து வுடலாம்! ஒம்மட யண்ணிய வுட நாம்ம நைசா பேசுறேம்!"ன்னுச்சு முருகு மாமா.
            லாலு மாமா கெளம்பி வெளியில வந்து சித்துவீரனோட வண்டிக்குப் பின்னாடி ஏறுனுச்சு. யாரும் வெளியில வந்து லாலு மாமாவ வழியனுப்பல.
            "எம்மாம் நேரம் சித்தப்பா வண்டிய வெச்சுக்கிட்டு நிக்குறது? பாத்தீயா மவ்வேந்தாம் வந்திருக்கேம்ன்னு வெளியில வந்து பார்வெ பாக்குதான்னு பாருங்க சனங்க!"ன்னுச்சு சித்துவீரன்.
            "கெளம்புடா! ரோட்டுல நின்னு பேசிக்கிட்டு!"ன்னுச்சு லாலு மாமா. சித்துவீரனோட வண்டி டர்டர்ன்னு இழுக்க முடியாம இழுத்துக்கிட்டு கெளம்புனுச்சு. இப்படியா லாலு மாமா முருகு மாமாவ இதுல கோத்து வுட்டதுல சங்கிலியோட எட்டாவது வளையமும் கோத்துக்கிட்டுச்சு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...