8 Jul 2020

வளையம் ஆறு!

செய்யு - 500

            ராசாமணி தாத்தா ஒரு பழைய சைக்கிள உருட்டிக்கிட்டு வந்து எறங்குனப்போ மதியானத்த நெருங்குறாப்புல மணி பன்னெண்டு இருக்கும். உள்ள நொழையுறப்பபே வாசல்ல கெடந்த செருப்பைப் பாத்துச்சு. நல்ல தோல் செருப்பா வாங்கி அதெ கிழிஞ்சுப் போன தோல் செருப்பா போட்டுக்கிறது லாலு மாமாவோட வழக்கமா இருந்துச்சு. அந்தத் தோலு செருப்ப பாத்த ஒடனே, "தஞ்சாரூக்கார பய வந்துட்டான்னா? பிச்சை எடுத்ததாங் பெருமாளு, அதயும் பிடுங்கித் தின்னுச்சாம் அனுமாருங்ற கணக்கா, மவனெ கொண்டாந்து கலியாணத்தப் பண்ணிட்டு ஒத்தச் காசு இல்லாம மொத்தமா தொடைச்சி அள்ளிட்டுப் போயிட்டாம்!"ன்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கிடுச்சு. மனசு நெனைக்கிறதெ வாயால சொல்லிக் கேக்க முடியாதுங்றதுக்காக, "அடடே! யாரு மச்சானா? எப்போ வந்தாப்புல? ன்னா சேதி? நல்ல சேதிதான்னா?"ன்னு சத்தம் கொடுத்துட்டேதாங் நொழைஞ்சது.
            "ஆமா! அவ்வேம் பாலாமணியோட கலியாண வெசயமா பேசிட்டு இருக்கேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "அவனுக்கென்ன அவ்சரம்? இஞ்ஞ ஒரு வூட்டெ வாங்கிப் போட வுட்டுப்புட்டு கலியாணத்தெ பண்ணி வுடு! கலியாணம் ஆச்சுன்னா வெச்சுக்கோ யிப்போ அனுப்புற பத்தாயிரம் பணத்தையும் அனுப்ப மாட்டாம். பெறவு நாஞ்ஞ ன்னா இஞ்ஞ உக்காந்து சிங்கி அடிச்சிட்டு இருக்குறதா? பொண்ண வேற நீயி உம் மவ்வேனுக்கு கலியாணங் கட்டிட்டுப் போயிட்டீயா? எல்லாஞ் சென்னைப் பட்டணத்துல இருக்குறதால ஒமக்கு ஒண்ணும் செருமமில்ல. தஞ்சாரூ வூட்டெ வித்துப்போட்டு நீயி பாட்டுக்கு அஞ்ஞ போயிடுவே! பொண்ணு பிடிச்சா பொண்ணு வூடு அஞ்ஞ இருக்கு. மவ்வேன் பிடிச்சாலும் மவ்வேன் வூடு ஒமக்கு அஞ்ஞ இருக்கு. ஒமக்கொண்ணும் கவலெ யில்ல. எஞ்ஞப் போனாலும் பென்சன் காசு தேடில்லா வந்து கொட்டும். இப்பிடில்லா அமையணும் அமைப்பு. நம்மால பாக்குக்கோட்டைய வுட்டுப்புட்டு அந்தாண்ட இந்தாண்ட நவுர முடியாது. இஞ்ஞனாச்சும் நாலு பேத்தத் தெரியும். அவனுங்கள வெச்சு சோசியத்துல கட்டம் போட்டு காரியத்தெ அத்து இத்துன்னு சாதிச்சிப்பேம். ஒரு ஓட்டல்காரப் பயலுக்கு நாளு குறிச்சிக் கொடுத்தேம். யேவாரம் பிய்ச்சிக்கிட்டுப் போவுது. அந்தப் பக்கம் போனா சாப்பாடு ஓசிக்கு ஆவுது. இத்து நமக்கு சென்னைப் பட்டணத்துல ஆவுமா சொல்லு? இந்தச் சிங்கப்பூரு காலனி வூட்டெ காலி பண்ணச் சொல்லிட்டு என்னைக்கு ஒம்மட மருமவ்வேன் மதகடிப் பக்கத்துல வாடகைக்குப் போவச் சொல்லப் போறானோ தெரியல! அதுக்குள்ள நீயி வந்து கலியாணத்தெ கட்டி அனுப்பிப்புட்டீன்னா வெச்சுக்கோ வேற வெனையே வாணாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "எங்காச்சிம் புள்ளையப் பெத்தவரு போல பேசுறாரா பாருண்ணே?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "நடைமொறையத்தானே பேச முடியும்டி! நமக்கென்ன காவி வேட்டியக் கட்டி நாளாச்சு. நாம்ம பாட்டுக்குப் போயிட்டே இருப்பேம் சித்தன் போக்கு சிவம் போக்குன்னு. ஒன்னோட நெலைய நெனைச்சுப் பாரு. அதெ நெனைச்சித்தாம் ஒமக்காகத்தாம் பேசிட்டு இருக்கேம்! இந்தப் பேச்சு நமக்கில்லா!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "கஞ்சா அடிக்குறதுக்குல்லாம் காசியக் கேட்டா அவ்வேம் எப்பிடிக் கொடுப்பாம்? கொடுக்குற காசிக்குல்லாம் கஞ்சாதாங். கொடலப் பொரட்டுற அந்த நாத்தம் வேற தாங்க முடியல. மத்தியானங் சாப்புட வர்றப்போ அப்படியே அடிச்சிட்டுப் படுத்துடுறது. எப்போ ஒறக்கம் கலையுதோ அப்பப் போயி பேருக்குக் கொஞ்ச நேரம் கொட்டாய்ல உக்காந்திருக்கிறது. இப்பிடி இருந்தா கதைக்கு ஆவுமா? அதாங் இதெ கைய கழுவிப்புட்டு போறதுல நிக்காம். நாம்ம ஒருத்தி ல்லன்னா அவ்வேம் இந்தப் பக்கம் எட்டிப் பாக்க மாட்டாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "ஆம்மா நீயிப் பாத்தே? கஞ்சாவ அடிக்கிறதே?"ன்னுச்சு ராசமாணி தாத்தா.
            "நாம்ம எஞ்ஞ பாத்தேம்? அன்னிக்கு மருந்து காய்ச்சணும்ன்னு வாங்கி வெச்சிருந்த கஞ்சா கொறைஞ்சிருக்கிறதா அவ்வேம் சண்டையப் போட்டாம்ல. அன்னிக்கு அவ்வேம் சொன்னப்ப வாயை மூடிட்டு உக்காந்துருந்துப்புட்டு. நல்லாத்தாம்னே கேட்டாம், பிடிக்குற பீடியில ஏம் கஞ்சாவச் சுருட்டி வெச்சி அடிக்கிறேன்னு?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அதெ வுடுடி. வெவரம் புரியாத பயெ. அப்பிடித்தாம் கேப்பாம். கலியாணங் காட்சின்னா, ஆச்சுன்னா வெச்சுக்கோ, வூட்டோட மாப்புள்ளையா போயிட்டாம்ன்னா நம்ம கதியெ யோசிச்சியா? வாராவாரம் துணிய தொவைக்குறதுக்கும், மருந்தக் காய்ச்சுறதுக்கும் வருவான்னு பாத்தீயா? பொண்ணக் கொடுக்குறவேம் துணிய தொவைக்குறதுக்கு ஒரு எந்திரத்தெ வாங்கிப் போட்டுட்டா கதெ முடிஞ்சது. அத்தோட சென்னைப் பட்டணத்துலயே இன்னும் ரண்டு கிளினிக்க வெச்சுக் கொடுத்தா சோலி முடிஞ்சது. நாம்ம சோசியத்தப் பாத்து ஒனக்கென்ன சம்பாதிச்சுக் கொண்டாந்து கொட்ட? நீயி வூட்டுல கெடந்து என்னத்தெ நொட்ட? சோசியத்துக்குன்னு ஏமாந்த சோனகிரிங்க எந்நேரத்துக்குமா கெடைப்பானுவோ? பெறவு ஒண்ணும் இல்லன்னு ஆச்சுன்னா, ஒம்மட அண்ணன் வூட்டோட போயிக் கெடக்க வேண்டியதுதாங். அப்பிடியே சொன்னீன்னா நாமளும் வந்துக் கெடப்பேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "பாருண்ணே! ஒன்னய வெச்சுட்டே ன்னா பேச்சுப் பேசுறதே?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "வெளி எடத்துல பொண்ணு எடுத்தா அப்பிடில்லாம் ஆவுந்தாம். சொந்தத்துலயே நம்ம சுப்பு வாத்திப் பொண்ணு இருக்காளே! அவளெ எடுத்துப்புட்டா ன்னா? தாத்தா மொற, ஆத்தா மொற வருதுன்னு ஒஞ்ஞளயும் நல்ல வெதமா பாத்துக்கிடும். விட்டுக் கொடுக்காது."ன்னு ஆரம்பிச்சது லாலு மாமா.
            "வயசு வித்தியாசம் ரொம்பல்லா இருக்கும். பன்னெண்டு வயசாவது வித்தியாசம் இருக்கும்லா. சின்னப் பொண்ணால்லா இருக்கு அத்து? சாதகம் ஒதுக்கிடுதான்னு வேற தெரியலயே! ஒரு தவா எப்பயோ சாதகத்த பாத்ததா ஞாபவம். அதுக்கு பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி. பயலுக்கும் பூராட நட்சத்திரம், தனுசு ராசி. ஏக நட்சத்திரம், ஏக ராசி ஒத்துக்கிடாதே! இத்து வாண்டாம் மச்சானே! நெதானிச்சப் பண்ணணும்!"ன்னுச்சு ராசமாணி தாத்தா.
            "பொருத்தம் இருக்கான்னு பாருன்னா... ஒத்த நட்சத்திரம், ஒத்த ராசின்னுகிட்டு? கலியாணம் பண்ணி வைக்குற செலவுக்கே பொண்ணு வூட்டுலேந்து அஞ்ச லட்சம் வாங்குன்னா ஒரு லட்சத்தெ நீயி ஒம்மட பேருக்குப் பேங்கியில போட்டுக்கிட்டு மிச்சத்தெ வெச்சு கலியாணத்தப் பண்ணி வுடுறது!"ன்னுச்சு லாலு மாமா.

            "சாதகம் பாக்குறத மட்டும் பேயாதே. அத்து நாம்ம கேரளா போயிக் கத்துக்கிட்டது. கத்துக் கொடுத்தவங் கூட இதுக்குன்னே நம்ம பொறப்புல்ல கட்டம் இருக்குறதெ பாத்துப்புட்டுக் கத்துக் கொடுத்திருக்காம். இன்னிக்கும் பாக்குக்கோட்டையில பல பெரும்புள்ளிக்கு நாம்மத்தாம் பாத்துக் கொடுத்தாவணும். அதாலத்தாம் இதெ வுட்டுப்புட்டு அந்தாண்ட இந்தாண்ட வர முடியாதுங்றேம். நாம்ம வந்துட்டேம்ன்னா வெச்சுக்கோ இந்த எடத்தெ பிடிக்கிறதுக்குன்னே நாலஞ்சு பேரு கெடக்காம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "பெறவு ஏம் பயல எதிர்பாக்கணும்னுங்றேம்?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "சாதகம்ன்னா அப்பிடித்தாம்டி! சாதகமா இருக்குறப்பத்தாம் சாதவம். மித்த நாள்ல பொகையப் போட்டுக்கிட்டு, போடியப் பொட்டுக்கிட்டு நாம்ம பாட்டுக்குப் படுத்துடுவேம். ஒம்மால முடியுமான்னு யோஜசிச்சுச் சொல்லு?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "அதெ வுட்டுத் தள்ளுங்க! பொடிக்குப் போயலெ சிக்காதப் பேச்சு. அஞ்சு லட்சத்துக் கதெக்கு வாஞ்ஞ மொதல்ல. வர்ற சீதேவிய வுட்டுப்புட்டு, உருப்படாத மூதேவியப் பத்தியப் பேசிக்கிட்டு!"ன்னுச்சு லாலு மாமா.
            "அஞ்சு லட்சத்துக்கு எவ்வேம் நாட்டுல கலியாணத்தப் பண்ணுவாம்? ரண்டு லட்சத்துலயே முடிச்சிப்புடலாம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "அத்து ஒஞ் சாமர்த்தியம். மிச்சத்தெ அப்பிடின்னா ஒம் பேருக்கு கூடுதலா போட்டுக்கோ! மூணு லட்சம் ஒம் பேருக்குன்னா அதெ வெச்சே ஒத்திக்கு ஒரு வூட்டப் பிடிச்சி காலத்தெ ஓட்டு!"ன்னுச்சு லாலு மாமா.
            "அத்துச் செரி! ஒரு வேள நாம்ம கலியாணத்தப் பண்ணி வுடுறேம்ன்னு அந்த வாத்திப் பயெ நின்னாம்ன்னு வெச்சுக்கோயேம்! பணம் கைக்கு வாராது. அப்போ ன்னத்தா பண்ணுவே?"ன்னுச்சு லாலு மாமா.
            "அஞ்ஞத்தானே வெசயம் இருக்கு. மூர்த்தோலைய அவுங்களத்தாம் பண்ணச் சொல்லப் போறேம்! பண்ணட்டும். அதுல குத்தம், இதுல குத்தம்ன்னு சொல்லி கலியாணத்தையும் இப்பிடிப் பண்ணுனா டாக்கடர்ரா இருக்கறவனுக்கு இத்தெல்லாம் சுத்தப்பட்டு வாராதுன்னு சொல்லி கதெயெ திருப்ப வேண்டியதுதாங்!"ன்னுச்சு லாலு மாமா.
            "ஒரு வேள மூர்த்தோலை நல்ல வெதமா முடிஞ்சிடுச்சுன்னு வெச்சுக்கோ! நாம்ம ன்னா தலையில துண்டெ போட்டுட்டுப் போறதா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "எப்பிடி முடிஞ்சா நமக்கென்ன? நொட்டாரம் சொல்றதுன்னு முடிவு ஆன பெற்பாடு எதுல வாணும்னாலும் சொல்லலாம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "அதல்லாம் வாண்டாம். பேசுறப்பவே கலியாணத்துக்குன்னு அஞ்சு லட்ச ரூவாயா தனியா எடுத்துக் வைக்குறதுன்னா கலியாணப் பேச்சப் பேசு. இல்லாட்டி அப்பிடிக் கொடுக்குறாப்புல வேற எடம் இருந்தா பாத்துட்டு வா. நாளைக்கே கலியாணத்த வெச்சி முடிச்சிப்புடுவேம்."ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "அப்டிப் பாத்துட்டு வார்ற பொண்ணுக்கு மவ்வேன் ஒத்துக்கிடணுமே?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அவ்வேம் கெடக்குறாம் சோதாப் பயெ. இந்நேரத்துக்கு ஒரு டாக்கடர்ரு பொண்ணா பாத்து இழுத்துட்டு வந்திருக்கணுமா இல்லியா? தொணைக்குத் தொணையாவும் ஆச்சு. தொழிலுக்குத் தொழிலாவும் ஆச்சு. இந்தப் பயலுக்குல்லாம் பொண்ணுக்குப் பொண்ணையும் கொடுத்துக் காசியையும் தர்றோம்ன்னு சொன்னாக்க வாயைப் பொளந்துட்டு கட்டிக்கிறேம்பாம்! நமக்குல்லா தெரியும் அவ்வேன எந்த எடத்துல வெச்சி அடிக்கணும்ன்னு! யப்பா மச்சானே! அஞ்சு லட்சம்ன்னு பேசி முடி. கலியாணத்துக்கு நாம்ம உத்திரவாதம் பண்ணித் தர்றேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "மச்சானுக்கு அஞ்சு லட்சத்துல மூணு லட்சம். சரசுவுக்கு ரெட்டை வட சங்கிலி. பொதுவா பொண்ணு மாப்புள்ளைக்கு நக நெட்டு சீரு சனத்தி செய்யுறது வழக்கம். ரொம்ப சிறப்பா இஞ்ஞ சம்பந்திகளுக்கும் செய்யுறதெ இந்தக் கல்யாணத்துலத்தாம் பாக்கணும் போலருக்கு!"ன்னு சொல்லி சிரிச்சிது லாலு மாமா.
            "டாக்கடர்ரு மாப்புள்ளன்னா அப்பிடித்தாம் மச்சாம்! கூழுக்கும் ஆசெ, மீசைக்கும் ஆசென்னா? மீசெ முடிய மழிச்சி எடுத்துக்கோ சொல்லு! ஏம் ஊருல ஒரு பய கூட இல்லியாமா? எம் பயத்தாம் டாக்கடர்ருக்கு வேலையில இருக்காம்ன்னு இவ்வம்தாம் வேணுமாக்கும்? இவ்வேம் டாக்கடர்ரா இல்லன்னா வெச்சுக்க ஒரு மசுத்துக்குக் கூட இந்தப் பக்கம் எட்டிப் பாக்க மாட்டானுவோ? நமக்கா தெரியாது? நாலு எடத்துல உக்காந்து பீயப் பேளுறதுன்னா நாலு தட்டு கூடுதலா சாப்புட்டவம்தானே செய்ய முடியும். திங்குறவம்தானே மச்சாம் பேள முடியுது. டாக்கடர்ரு உத்தியோகத்துல இருக்குற மாப்புள்ளய வெச்சிருக்குறவாசித்தானே மச்சாம் கேக்க முடியுது? எல்லாம் இருக்குறவாசித்தாம்! இல்லன்னா வாயையும் சூத்தையும் பொத்திட்டுக் கெடக்க வேண்டியதுதாங். கேட்டுப் பாரு மச்சாம். வந்தா மலெ. போனா மசுருதானே. போவட்டும் போ!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "அப்போ மச்சானுக்கும் சம்மதந்தாம்!"ன்னுச்சு லாலு மாமா.
            ராசாமணி தாத்தா அஞ்ச வெரலக் காட்டி, "இதுக்குச் சம்மதம்ன்னா அதுக்கும் சம்மதம் பாத்துக்கோ!"ன்னுச்சு.
            "மவனுக்குக் கலியாணப் பேச்சு முடிஞ்சதுன்னு நெனைச்சிக்கோ!"ன்னுச்சு லாலு மாமா. அந்த வகையில ராசாமணி தாத்தாவோட சம்மதத்தோட பார்த்தா சங்கிலியோ ஆறாவது வளையமும் கோத்தாப்புல ஆனுச்சு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...