7 Jul 2020

வளையம் அஞ்சு!

செய்யு - 499

            லாலு மாமா பாக்குக்கோட்டைக்குப் போயிப் பேச்சு வார்த்தைய ஆரம்பிச்சது. அது போன நேரம் வூட்டுல சரசு ஆத்தாதாம் இருந்துச்சு. அதால பேச்ச அதுகிட்டேந்து ஆரம்பிச்சது. "பாலாமணிக்கும் ஒரு கலியாணத்தப் பண்ணி வுட்டுப்புட்டா தேவலாம். வரன் எதாச்சும் வருதா அவனுக்கு? கால காலத்துல கடமெ முடிஞ்சா நல்லதுதானே?"ன்னுச்சு லாலு மாமா.
            "நீந்தாம் ஒரு நல்ல பொண்ணா பார்ரேம் யண்ணே! யில்ல அவனெ ஒரு பொண்ணப் பாத்துட்டு வந்தாலும் செரித்தாம். அவ்வேங் கொணத்துக்கு அவ்வேம் பேசுறப் பேச்சுக்கு பொண்ண ஆர்டரு பண்ணித்தாம் தயாரு செஞ்சுக் கொண்டாந்தவணும். வாரத்துல ரண்டு நாளைக்குப் பாக்குக்கோட்டைக்கு வந்துட்டுப் போறதையெ சமாளிக்க முடியல. அதுக்குத் தகுந்தாப்புல தோதா பண்ணீன்னா கலியாணத்த கட்டி வுட்டுப்புடலாம்."ன்னுச்சு சரசு ஆத்தா.
            "நம்ம சொந்தத்துலயே பாக்கலாம். அவ்வே சுந்தரிய, பிந்துன்னு சொந்தத்துலத்தான கட்டிக் கொடுத்திருக்கு. சொந்தத்துலன்னு பாத்தா நமக்குத் தோதா வெங்கு மவ்வே இருக்கா. எதிர்பாக்குறதுக்கு ஏத்தாப்புல செய்யுவாங்க. வெங்கு மவ்வே செய்யு எப்பிடி?"ன்னுச்சு லாலு மாமா.
            "பத்திரிகெ வைக்கப் போனப்பயும் பாத்தேம். கலியாணத்துலயும் பாத்தேம். பத்திரிகெ வைக்கப் போனப்பவே வெங்கு கேட்டா. நாம்ம பிந்துவோட கலியாணம் ஆவட்டம்ன்னு பட்டும் படாம சொல்லிட்டு வந்தேம். நாம்ம பாட்டுக்கு எதாச்சிம் சொல்லிட்டு வந்து நம்ம பயெகிட்டெ மொத்துப்பட முடியாது பாரு! ஒஞ்ஞ நீலு யண்ணி இருக்குல்லே. அது கூட அவளையும் அவனையும் சேத்து கொளுத்தி வுட்டுட்டுத்தாம் போயிருக்கு. எந்தப் பொண்ணப் பத்திக் கேட்டாலும் அத்து நொட்டாரம், இத்து நொட்டாரம்பாம். செய்யுவப் பத்திச் சொல்லி கேட்டப்போ பதிலு ஒண்ணும் வாரல. மனசுல என்னத்தெ இருக்கோ? ஏத்து இருக்கோ? அந்த ஆண்டவனுக்குத்தாம் தெரியும்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அவ்வேம் பாலாமணி ஒத்துக்கிட்டாம்ன்னா ஒனக்கு இஷ்டந்தானே?"னுச்சு லாலு மாமா.
            "இஷ்டந்தானேன்னு வெச்சுக்கோயேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "இஷ்டந்தாம்ன்னு வெச்சிக்கிறதுன்னா ன்னா அர்த்தம்ன்னு புரியலியே?"ன்னுச்சு லாலு மாமா.
            "அதுக்கில்லே ண்ணே! இவ்வேம் டாக்குடர்ரா இருக்காம். கை நெறைய சம்பளந்தாம், இல்லன்னு சொல்லல. இன்னும் வண்டியிலத்தாம் போயிட்டு இருக்காம். ஒரு காரு கூட கெடையாது தெரியுமா? இவ்வேம் கூட வேல பாக்குற டாக்கடருக எல்லாம் காரு வாங்கிட்டதா சொல்றாம்! நாமளும் கண்ணால பாத்தேம். அதெ கேக்குறப்பவே, பாக்குறப்பவே நமக்குக் கஷ்டமா இருக்கு. இன்னும் பாரு சின்னதா ஒரு ரூமுக்குள்ள கோழி அடையுறாப்புல அடைஞ்சிக் கெடக்குறாம். பாக்குறதுக்கே பாவமா இருக்குண்ணே! குடும்பத்துக்கா ராவு பகலுன்னு பாராம ஒழைச்சிட்டுக் கெடக்குறாம். நாம்மத்தாம் இப்பிடிக் கெடந்தேம் நல்ல வெதமா யில்லாம கடெசீ வரைக்கும் தரித்திரமா. அவனாவது ஒரு கலியாணங் காட்சின்னு ஆயாவது நல்லா இருக்கணும்னு நெனைக்கிறேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "காரு, நல்ல வூடு வேணுங்றே! அம்புட்டுத்தானே?"ன்னுச்சு லாலு மாமா.
            "ஆம்மா நாம்ம வேறென்ன பெரிசா நாம்ம எதிர்பார்க்கப் போறேம். வூடு எப்பிடியும் அவசியம் பாரு. அவனுக்கு இன்னும் ஒரு குவார்ட்டர்ஸ் கூட கெடைக்கலண்ணே! காயிதம்லாம் போட்டு வெச்சிருக்கிறதாவும், மந்திரியெல்லாம் பாத்து வெச்சிருக்கிறதாவும் சொல்றாம். பாத்து அங்கங்க பணத்தெ கொடுத்து கவனிச்சி வுட்டத்தாம் வேல ஆவுமாம். அத்து வந்துட்டுன்னா கூட பரவாயில்லெ. இவ்வேம் பொறந்தப்போ இருந்த சொந்த வூடுதாங். அந்த நேரத்துல வித்த வூடு. என்ன நேரத்துல வித்ததோ? திரும்ப வாங்கவே முடியல. அதிலேந்து குருவிக்கூடு போல வூடுதாங். அதுக்குள்ளயே அடைஞ்சி அடைஞ்சிக் காலம் ஓடிடுச்சு. இன்னிய வரைக்கும் அந்த மாதிரியான வாடகெ வூடுதாம் பாத்துக்கோ.  சொந்தமா நமக்குன்னு ஒரு எடம் இருந்தாத்தானே நமக்குன்னு ஒரு மதிப்பு இருக்கும். ஆக மொதல்ல வூடு, ரண்டாவதா காரு. இந்தக் காலத்துல எந்த டாக்கடர்ரு காரு இல்லாம இருக்காம்? இவ்வேம் ஒருத்தம்தாம் யண்ணே இன்னும் கார்ர வாங்காம இருக்காம்! நாம்ம‍ நெனைக்குறதுல எதாச்சிம் தப்பு இருக்கான்னு சொல்லு?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "வூடு, கார்ரப் பத்தில்லாம் வுடு. அதெ பேசி வுடுறது நம்ம வேல. பொண்ணப் பத்திச் சொல்லு. கொறைன்னா வேற எடம் பாப்பேம். குடும்பத்தப் பத்திச் சொல்லு. அதுலயும் கொறைன்ன வேற எடந்தாம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "பொண்ணப் பத்தியோ, குடும்பத்தெ பத்தியோ ன்னா கொறையச் சொல்ல முடியும்ண்ணே? காசு பணந்தாம் கொறையா இருக்கோ? நெறையா இருக்கோ? யாருக்குத் தெரியும்? வூடு இருக்கு. நெலம் புலம்ங்க இருக்கும்னு நெனைக்கிறேம். கேள்விப்பட்டதுதாம். வெங்குவோட மவ்வேன் வாத்தி வேலையில இருக்காம். தாக்குப் பிடிச்சிச் செய்வாங்கன்னா பாக்கலாம். ஆன்னா இதெல்லாம் நாம்ம கேட்டதா இருக்கக் கூடாது. அவுங்களா செய்யுறதா இருக்கணும். ஒனக்குத் தெரியாதது இல்ல, இன்னிக்கு ஒரு கவர்மெண்டு டாக்கடர்ன்னு சொன்னா பொண்ணு கொடுக்க, செய்மொறைகள நாம்ம கேக்குறதெ வுட நாலு பங்கா செய்ய ஆளு இருக்காம்! அப்டி இருக்குறப்ப சொந்தத்துல போயி அதெ செய்யணும்ன்னு இதெ செய்யணும்ன்னு கரைச்சல்ல நிக்க வேண்டியதில்ல பாரு. இப்பவே வரனெல்லாம் வந்துக்கிட்டுத்தாம் இருக்கு. இப்பதானே பிந்துவோட கலியாணம் முடிஞ்சது. கொஞ்சம் ஆறப்போட்டு செய்வோம்ன்னு இருக்கேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.

            "காசு பணத்துக்குக் கொறையிருக்காது சுப்பு வாத்திகிட்டெ. செலவு பண்ணத் தெரியாத ஆளு. ரிட்டையர்டு ஆன பணத்தையெல்லாம் பணமெல்லாம் பாங்கியிலத்தாம் போட்டு வெச்சிருப்பாரு. அப்பிடியே வழிச்சு எடுத்து செலவு பண்ணுறாப்புல செஞ்சிப்புடலாம். பொண்ணுக்குப் பையனுக்குன்னு கெராமத்துல தனித்தனி மனைக்கட்டுகள வாங்கிப் போட்டுருக்காம் மனுஷன். அத்துத் தெரியும் நமக்கு. நெலபுலங்களும் கணிசமா இருக்கு. பொண்ணுக்குன்னு உள்ள எடத்தெ வித்துக் காசியக் கொடுன்னு சொன்னா கொடுக்காமல போயிடப் போறாம்? அத்தெ இப்போ சொல்லப்படாது. கலியாணம்லாம் முடிஞ்சி ஒரு எடத்தெ வாங்கப் போறப்ப, வூட்ட கட்டப் போறப்ப நைச்சியமா சொல்லி முடிக்கணும்!"ன்னுச்சு லாலு மாமா.
            "அப்பிடி நெனைக்காதே யண்ணே! ஒரு வார்த்தெ சொல்லிப்புடணும். கலியாணத்தெ கட்டி வுட்டா கதெ ஆச்சுன்னு ஒதுங்கிடக் கூடாது பாரு! நாம்ம கேட்ட மாதிரியும் இருக்கக்கூடாது, கேக்காத மாதிரியும் இருக்கக் கூடாது."ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அத்து எப்பிடி ஒதுங்க முடியும்? பொண்ணப் பெத்தவனுக்கு வரிசையா செலவு இருந்துகிட்டேதாம் இருக்கும். இப்போ நாம்ம இல்லியா? ரண்டு பொண்ண பெத்துப்புட்டு. மாப்புள பத்து வருஷமா தொடர்ந்து சபரி மலெ போறதுக்குல்லாம் மோதிரம் பண்ணிப் போடணும்ன்னு அடம் பண்ணி வாங்கிப் போடுறது சம்பந்தி வூட்டுல கெடையாது பாத்துக்கோ. எல்லாம் நம்ம வூட்டுப் பொண்ணுத்தாம் பண்ணுதுங்க. ஒண்ணு பண்ணுறதப் பாத்துட்டு அஞ்ஞ மட்டும் செஞ்சுபுட்டா போச்சா? எம்மட புருஷனுந்தாம் அஞ்சு வருஷமா வடபழனி முருகன் கோயிலுக்குத் தொடர்ந்தாப்புல போயிட்டு இருக்காரு. அதுக்கு எதாச்சிம் செஞ்சிப் போடுன்னு சின்னப் பொண்ணு இருக்கே, அத்து ஒரே அடம். பெறவு போனா போயிட்டுப் போவுதுன்னு ரண்டாவது மருமவனுக்கு ஒரு மோதிரம் செஞ்சுப் போடுறாப்புல ஆயிடுச்சு. வடபழனி முருகன் கோயிலுக்குப் போறதுக்குல்லாம் யாரு மோதிரம் செஞ்சிப் போடுவா? இத்து தேவையா சொல்லு? பேரப் புள்ளைகப் பொறந்தா, காது குத்துனா, வேற தேவைன்னா செய்யலாம். தேவையே யில்லாம ஒரு தேவைன்னு உண்டு பண்ணிக்கிட்டுக் காசியப் புடுங்கலீயா? செரித்தாம் போ நம்மப் பொண்ணுக்கு யாருதாம் செய்வாங்கன்னு நெனைச்சிக்கிட்டு நாம்ம செய்யலையா? வேற வழியில்ல. அப்பிடிச் செஞ்சித்தாம் ஆவணும். அஞ்ஞ ன்னா நம்மள மாதிரிக்கி ஒண்ணுக்கு ரண்டா பொண்ணு இருக்கு? ஒத்தப் பொண்ணுதானே! நெறையாவே செய்வாரு சுப்பு வாத்தி. செய்ய வெச்சிப்புடலாம். ஒரு பயதானே கெடக்குறாம். அவனுக்கு அவ்வேம் மாமனாரு வூட்டுலேந்து செய்யட்டும். சுப்பு வாத்திப் பொண்ணுக்குச் செய்யட்டும். அதானே மொறெ!"ன்னுச்சு லாலு மாமா.
            "நீயி சொல்றபடி நடந்தா எல்லாம் நல்லதுதாங்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "ந்நல்ல கதெயெ கெடுத்தே போ! எம் பொண்டாட்டிச் செத்தாளே! அன்னிக்கு நடந்த கதெ தெரியாதா ஒமக்கு? பெத்துப் பொண்ணுகதானே அவளுக. அன்னிக்கு அம்மா காதுல போட்டுருக்குது எனக்குங்றா ஈஸ்வரி. கையில போட்டுருக்குற மோதிரம் நமக்குங்ற குயிலி. பொணத்த எடுக்குறதுக்குள்ள இவுளுகளச் சமாதானம் பண்ணுறது பெரும்பாடா போவலியா? என்னாங்கடி இப்பிடி பண்ணுறீயளேன்னா... ஒடனே யம்மா ஞாபவமா என்னத்தெ இருக்கு நம்மகிட்டன்னு ஒப்பாரிய வெச்சா, அன்னிக்கு நாம்ம என்னத்தெ பண்ண முடிஞ்சிது பாத்தீளே? பொண்ணுக எல்லாம் கலியாணத்த கட்டுற வரைக்கும்தாம் அப்பங்காரருக்குச் செலவுன்னு அழுவும். கலியாணம் ஆயி புகுந்து வூட்டுக்கு வந்துப்புட்டா அப்பங்காரரு சரியா செலவு பண்ணலேன்னு அழுவ ஆரம்பிச்சிடும். அப்பிடி அழுவலன்னா அழுவ வெச்சியே கறந்துப்புடலாம். அதெல்லாம் ஒரு பெரிய விசயமில்லே!"ன்னுச்சு லாலு மாமா.
            "நக நெட்டுன்னு பொண்ணு போட்டுட்டு வர்றது அம்பது அறுவது பவுனுக்குக் கொறைச்சலு இருக்கக் கூடாதுண்ணே! இவ்வேம் பயலுக்குன்னு இருவது பவுனாவது செயின், ப்ரஸ்லெட், மோதிரம்ன்னு செஞ்சி வுடணும்! ஒரு ஆத்திரம் அவசரமன்னா இருக்குற நகெதானே ஒதவுது. நூறு பவுனா போட்டாக் கூட நல்லதுதாங்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அதையல்லாம் நாம்ம எப்பிடிப் பேசுணுமோ அப்பிடிப் பேசிப்பேம்! ஒனக்கு வேற ஒண்ணும் அட்டியில்லையே? அதெ சொல்லு!"ன்னுச்சு லாலு மாமா.
            "நமக்கும் பத்துப் பவுன்ல ஒரு ரெட்ட வட சங்கிலிப் போட்டா கூட தேவலாம்தாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "செரி செரி புரியுது! டாக்கடரு மாப்புள்ளைக்கிப் பொண்ண கொடுக்க நெனைக்குறவேம் மொட்டையடிச்சுக்கிட்டுத்தாம் அலையணும்!"ன்னுச்சு லாலு மாமா.
            "ஒங்க மச்சாங்கிட்டெயும் ஒரு வார்த்தெ பேசிப் புடுண்ணே! சித்தெ உக்காந்தீன்னா மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்துப்புடுவாரு. பேசிடலாம்"ன்னு ராசாமணி தாத்தாகிட்டேயும் பேசணுங்றதெ சொன்னுச்சு சரசு ஆத்தா.
            "ஒட்டுமொத்தமா பேசிப்புடணும்னுதாம் வந்தது. வந்த நேரத்துல நீந்தாம் இருந்தே. அதுவும் நல்லதாப் போச்சுன்னு பொண்டுவோளுகிட்டேருந்து ஆரம்பிக்கணும்னுத்தாம் ஒங்கிட்டேயிருந்து ஆரம்பிச்சது. ஒமக்குச் சம்மதம்ன்னா மச்சாங்கிட்டெ பேசிப்புடலாம்! வாரட்டும் பேசுறேம்!"ன்னு ராசாமணி தாத்தாவுக்காக லாலு மாமா உக்காந்திருச்சு.
            "அப்புறம் ண்ணே..."ன்னு இழுத்துச்சு சரசு ஆத்தா.
            "சொல்லு?"ன்னுச்சு.
            "இத்து எதுவும் நாம்மச் சொல்லிக் கேக்குறதா தெரியக் கூடாது. ன்னா சின்னம்மாகாரியா இருந்துகிட்டெ இப்பிடிக் கேக்குறாளேன்னு பரப்பி வுட்டுப்புடுவா வெங்கு. ஒரு கலியாணங்காட்சின்னு செஞ்சாத்தாம் உண்டு. பெறவு யாருண்ணே பொண்ணுக்குப் பெரிசால்லாம் செய்யுறா? காத்தா இருக்குறப்பவே தூத்திக்கிட்டாம். ஆத்துல தண்ணிப் போறப்பவே முங்கிக்கிட்டாதாம். எரியுற கொள்ளியில பிடுங்கிக்கிட்டாதாம். அடிபடுற நேரமா பாத்து நாமளும் நாலு அடிச்சிக்கிட்டதாம். பேசுறப்ப கொஞ்சம் அதெ மனசுல வெச்சுக்கண்ணே!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "ஊரு ஒலத்துல யில்லாததையா கேட்டுப்புட்டே நீயி? நாம்ம கேக்காட்டியும் டாக்கடர்ரு மாப்புள்ளங்றேப்ப செஞ்சித்தாம் ஆவணும். அதெல்லாம் அவிய்ங்களுக்கே நல்லாவே தெரியும். அதுலயும் சில வெசயங்கள வெச்சித்தாம் இருக்கேம் பாத்துக்கிடலாம் வா! எப்பிடிக் கேக்கணும், யார வெச்சுக் கேக்கணுங்றதெல்லாம் தெரியும்!"ன்னுச்சு லாலு மாமா.
            "சொந்த பந்தமால்ல இருக்கு. நாளைக்கு ஒண்ணும் செய்யாம வுட்டுப்புட்டு நாம்ம ஏமாந்து நிக்கக் கூடாதுல்லா?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அந்தக் கவலெ ஒனக்கெதுக்கு? ஒரு சில வெசயங்க நடந்தாத்தாம் முகூர்த்தோலையேப் பாத்துக்கோ!"ன்னுச்சு லாலு மாமா.
            "அதாங் செரி! அப்பிடித்தாம் செய்யணும்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            பாலாமணிக்குச் செய்யுவக் கலியாணம் பண்ணலாங்ற அஞ்சாவது வளையமும் இப்பிடியா சங்கிலியில கோத்துக்கிடுச்சு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...