6 Jul 2020

வளையம் நாலு!

செய்யு - 498

            தேன்காடு சித்தி தன்னோட ரண்டாவது மவ்வேன் தனிக்கொடிய அழைச்சுகிட்டு தஞ்சாவூரு மெடிக்கல் காலேஜூ ரோட்டுல எறங்கி வெசாரிச்சுக்கிட்டே போயிருக்கு லாலு மாமா வூட்டுக்கு.
            போறப்பவே தனிக்கொடிக்கிட்ட சொல்லிருக்கு, "நம்ம வூட்டு மொத தேவ போலடா செய்யு பொண்ணோட கலியாணம்!"ன்னு.
            "யண்ணனையும் வாரச் சொல்லிருக்கலாம் யம்மா!"ன்னிருக்காம் தனிக்கொடி.
            "சொன்னா வருவாம்தாம். நாம்ம மொதல்ல போயி நெலமெ எப்பிடிங்றதெ தோது பாத்துப்போம்! ஒஞ்ஞ அப்பங்காரரு இருந்தா இந்நேரத்துக்குக் கலியாணத்தையே முடிச்சிருப்பாரு! அவருக்கு அந்தப் பொண்ணு மேல அம்புட்டுப் பாசம்! அவரு போயிச் சேந்து நாம்மப் போயி பேசணும்ன்னு எழுதிருக்கு! எழுத்துல இருக்குறதெ யாரு மாத்த முடியும்? இந்தாருடா நாம்ம பேசுறப்ப ஊடால வார்த்தையக் கொடுத்துப்புடக் கூடாது. பேயாம நல்ல புள்ளையா கேட்டுக்கிட்டு மட்டும் இருக்கணும். ஏன்னா கலியாணப் பேச்சுல்லா. பெரியவங்கத்தாம் பேசணும்!"ன்னுச்சு தேன்காடு சித்தி மவ்வேங்கிட்டெ.
            "செரிம்மா நமக்கென்ன பேசத் தெரியும்? ஒத்தையா வந்துப் பேசப்படாதுன்னுத்தாம் தொணைக்கு நீயி நம்மள அழைச்சிட்டு வந்திருக்கே! பொம்மெ மாதிரிக்கி வந்துப்புட்டுப் பொம்மெ மாதிரி வந்துப்புடுவேம்!"ன்னாம் தனிக்கொடி.
            தேன்காடு சித்தி போன நேரம் லாலு மாமா மட்டுந்தாம் வூட்டுல இருந்துச்சு. மத்தியான நேரம். என்னத்தெ போயி வெளியில சாப்புடணும்னு நெனைச்சதோ என்னவோ கருக்கி கருக்கித் தோசையச் சுட்டுட்டு இருந்துச்சு. எல்லாம் ஒரே கருகலு. வெள்ளையான தோசை மாவுக்கு அப்பிடி ஒரு கருப்ப எப்பிடி தோசைக்கல்லுல போட்டுக் கொண்டாந்துச்சோ லாலு மாமா! தேன்காடு சித்தி அதெ பாத்ததும், பையில வாங்கிட்டு வந்த பழம், பூவு, இனிப்புக் காரத்தெ அப்பிடியே கீழே வெச்சுப்புட்டு, லாலு மாமாவ அந்தாண்ட போவச் சொல்லிட்டு மொறையா தோசையச் சுட்டு, அப்பிடியே சட்டினியும் அரைச்சு வெச்சுச்சு. சாப்புடுறதுல லாலு மாமா ஒரு கையி பாக்குற ஆளு. பத்து பன்னெண்டு தோச வரைக்கும் போவுது தேன்காடு சித்தி சுட்டுப் போட்டதுல.
            "ந்நல்ல வேள வந்தே ஆயி! நாம்மன்னா நாலு தோச சுட்டு அம்புட்டுத்தாம் சாப்பிட்டு இருப்பேம். இப்போ ஒரு புடி புடிச்சாச்சு. ஒண்டிக்கு என்னத்தெ சமைச்சுக்கிட்டுன்னு ஒரு மாவு பாக்கெட்ட வாங்கியாந்து ஊத்திக்கிட்டு பொடியத் தொட்டுக்கிடறது. என்னைக்காவது நெனைச்சேம்ன்னா ஓட்டல்ல பார்சல் சாப்பாடு எடுத்தாந்தா மத்தியானத்துக்குக் கொஞ்சம் சாப்புட்டுட்டு, ராத்திரியும் வெச்சிக்கிறது. ரொம்ப அலுத்துப் போச்சுன்னா திருச்சி மவ்வே வூட்டுக்குப் போயி கொஞ்ச நாளு கெடக்குறது. அப்பிடியே கெளம்பி சென்னைப் பட்டணத்துல குயிலி வூட்டுல போயிக் கெடக்குறது. இப்பத்தாம் வேலம் பயலும் கலியாணம் ஆயிக் கெடக்குறான்னா. இனுமே அஞ்ஞனயும் போயிக் கெடக்க வேண்டியதுதாங். இப்பிடி எப்புத்தப்பா தஞ்சார்ல எடத்தெ வாங்கிப் போட்டுட்டு அல்லாடிட்டுக் கெடக்கேம்!"ன்னு ஒரு மூச்சுல பேசி நிப்பாட்டுன்னுச்சு லாலு மாமா.
            "தேன்காடுதாங் வாங்களேம் மாமா! ஒரு மாசம் இருந்துட்டு வாரலாம்! எங்க யக்காவுல எவளாச்சியிம் ஒருத்தியா கட்டிருந்தேன்னா இந்த நெலமெ ஒமக்கு ஏம் மாமா வருது?"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "ஆம்மா இப்போ வந்துச் சொல்லு அதெ! பேரங் குட்டிகளப் பாத்தாச்சு. இனுமே எளமெ திரும்பி கடந்த காலத்துல போயி கலியாணத்தப் பணிக்கச் சொல்றீயாக்கும்? செரி ஒமக்கென்ன? ஒரு பயதாம் சென்னைப் பட்டணத்துல கெடக்குறாம்னு கேள்விப்பட்டேம். இவ்வேம் சின்னவேம் மட்டுந்தான ஊருல கெடக்காம். நீந்தாம் இஞ்ஞ வந்து தங்கிக்கிட்டு நமக்கு சமைச்சசிப் போடேம். பயலும் இஞ்ஞ எதாச்சிம் வேலயப் பாத்துட்டுக் கெடக்கட்டும்!"ன்னுச்சு லாலு மாமா.
            "ம்ஹூக்கும்! அப்போ எஞ்ஞ யக்காவ ஒருத்தியெ கட்டுனதுக்கு அந்தக் கணக்கப் பாத்துப்புட்டு இப்போ நாம்ம இஞ்ஞ வந்து கெடந்து ஒமக்குச் சமைச்சிப் போடணமாக்கும்?"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "நாக்குக்கு ஒனக்கையா இருந்தா நாலு படிச் சோறு திம்பேம். இப்பல்லாம் பார்சல் சாப்புட்டுல பாதிக் கூட எறங்க மாட்டேங்குது. எதெ தின்னாலும் சக்கையத் திங்குறாப்புல வெறுப்பா இருக்குது. வேற வழியில்ல. என்னத்தெ பண்ணச் சொல்றே? தலயெழுத்து பொண்டாட்டி மொதல்ல போயிச் சேந்து நாம்ம உசுரோட கெடந்து சின்னாபின்ன படணும்னு!"ன்னுச்சு லாலு மாமா.
            "இதுல ஒண்ணும் கொறைச்சல் யில்ல. அத்தெ இருந்தப்பவும் நீந்தானே சமைச்சிப் போட்டுக்கிட்டு கெடந்தே?"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "ஒருத்தருக்கு ரண்டு பேத்து இருந்தாலும் சமைக்குறதுக்கு ஒரு ஆசெ இருக்கும். தனிகட்டென்னு ஆன பெறவு சமைக்குறதுக்கே பிடிக்க மாட்டேங்குது. ஏத்தோ உசுர வெச்சுக்கிட்டுக் கெடக்கணும்ன்னு சாப்புட்டுட்டுக் கெடக்க வேண்டிதா இருக்கு! அத்துச் செரி! வாராத ஆளு இந்தப் பக்கம் வந்திருக்கீயே?"ன்னுச்சு லாலு மாமா.
            "ஏம் நாம்மல்லாம் வாரக் கூடாதா? வெரட்டி அடிச்சிப்புடுவீயா மாமா?"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "வெரட்டி அடிக்கிற நெலையிலயா இருக்கேம் நாம்ம. ஆடி அடங்கிப் போயிக் ‍கெடக்கறேம். ஒரு நாலு நாளு தங்கி சமைச்சிப் போட்டீன்னா செத்துப் போன நாக்குக்கு உசுரு வந்தாப்புல இருக்கும்ன்னு நெனைச்சிட்டு இருக்கேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "அத்து வந்து மாமா..."ன்னு ஒரு இழுப்ப இழுத்து தேன்காடு சித்தி பேச ஆரம்பிச்சிது, "யக்கா வெங்கு மவ்வே இருக்கால்ல செய்யு! அவ்வே கலியாணம் சம்பந்தமாத்தாம் யோஜனெ பண்ணிட்டு வந்தேம்!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "அதெப் பத்தித்தாம் நாமளும் நெனைச்சிட்டு இருக்கேம். ஒம்மட சின்னம்மக்காரி பாக்குக்கோட்டையா இருக்காளே அவ்வேம் மவ்வேன் பாலாமணியப் பிடிச்சிப் போட்டுட்டா தேவலாம். கோபக்கார பயலா வேற இருக்காம். பொறுமையான பொண்ணாத்தாம் பாக்கணும். வெங்கு மவ்வேதாம் தேவல. அவரு சுப்பு வாத்தியாரும் ரொம்ப பொறுமெ. பொறுமெயா இருந்தே காரியத்தெ சாதிச்சிப்புடுவாரு. விகடு பயலும் அப்பிடித்தாம் நெனைக்கிறேம். ஆளு இருக்குறது தெரியாது. பயலுக்கும் வேற வயசாயிக் கெடக்குது. நாமளே நெனைச்சிட்டு இருந்தேம். மவ்வேன் கலியாணம்லாம் முடியட்டும்ன்னு. இப்பத்தாம் விருந்து சம்பந்தம் கலக்குறதுல்லாம் முடிஞ்சி வூட்டுல கெடக்கேம். சென்னைப் பட்டணத்துப் பயலுவோளா போயிட்டானுவோளா? வுட்டப் போதும்ன்னு துண்டக் காணும் துணியக் காணும்ன்னு பறந்துட்டானுவோ. கல்யாணம் ஆயி நாலு நாள்லே மொத்தக் கதையையும் முடிச்சிட்டானுவோ. நாமளும் ஒண்ணுத்தையும் சொல்லல. போனப் போக்குக்கு போங்கடான்னு வுட்டுப்புட்டேம்!"ன்னுச்சு லாலு மாமா.

            "நாமளும் அதெ நெனைச்சித்தாம் மாமா இஞ்ஞ வந்தேம்! எங்க எஞ்ஞ யக்காவ ஒருத்தியக் கட்டிக்கச் சொன்னதுக்கு முடியாதுன்னு நீயி நின்னுட்டியா? அத்தோட ஒம் பொண்ணையும் நம்மட யம்பீகளுக்குக் கொடுக்க முடியாம போயிடுச்சா? அதாங் ஒரு தயக்கம். ஒன்னய வுட்டாலும் இதெ யார்ர பிடிச்சிப் பேசுறது? யக்கா வெங்குவுக்கு இதெ நெனைப்பா இருக்கும் போலருக்கு. பாலாமணிய ரொம்பப் பிடிச்சிப் போச்சு அதுக்கு. வேலன் கலியாணத்துக்கு வந்துட்டு அப்பிடியே திட்டைக்குப் போனப்ப ஒன்னயப் பாத்து பேசுனாத்தாம் காரியம் ஆவும்ன்னு பேசிட்டு வந்தேம்!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "செரியாப் போச்சு போ! அத்து ஒரு காலம். நாம்ம நெனைச்சுத்தாம் கலியாணங் நடக்குதாக்கும்? அதுல்லாம் மேல ஒருத்தெம் நிச்சயம் பண்ணப்படி நடக்கது. நமக்கும் வேற எடத்துல ஆவணும்னு நிச்சயம். நம்மடப் பொண்ணுகளுக்கு அப்பிடி ஆவணும்னு நிச்சயம். வேலனுக்கு இப்பிடி ஆவணும்னு நிச்சயம். இதுகளுக்கு எப்பிடி நிச்சயம் ஆயிருக்குன்னு யாருக்கு என்னத்தத் தெரியும் சொல்லு? இருந்தாலும் பாரு, கலியாணங்றது ஒருத்தரு சம்மதம் மட்டும் கெடையாது. எல்லாத்துககும் மனசு ஒத்து வந்துப்புட்டா பின்னாடி ஒரு பேச்சு வாராது. அதெதாங் பாக்குறேம். சரசுகிட்டெயும் மச்சாங்கிட்டேயும் பேசிட்டா வெவரம் புரிஞ்சிடும். அப்பிடி இப்பிடின்னு பேசித்தாம் வெச்சிருக்கேம். கல்யாண அலமலப்புல கேட்டது. மறுக்கா பேசுனாத்தாம் மனசுல என்ன இருக்குங்றது தெரியும். நாம்ம சொன்னா தட்டாதுன்னுத்தாம் நெனைக்கிறேம். இருந்தாலும் கலந்துக்குறதுதாங் மொறெ! பயெ வேற டாக்கடர்ரால்லா இருக்காம். பெரிசா செஞ்சாவணும் பாத்துக்கோ! சொந்த பந்தம்ன்னு சொல்லிப்புட்டு செய்மொறையில கொறை வெச்சிடப்படாது!"ன்னுச்சு லாலு மாமா.
            "மொறெ, நிச்சயம் அத்து இத்துன்னுல்லாம் பேசிட்டு நிக்காத மாமா! பாத்து முடிச்சி வுட்டுப்புடு! செய்மொறையில கொறையின்னா நாம்ம நம்மகிட்டெ இருக்குற சொத்த வித்துப்புட்டு செஞ்சி வுடறேம். அவுங்களும் டாக்கடரு மாப்புள்ளைன்னா கொறையாவா செய்யுவாங்க? என்னத்தெ செய்யணும்னு நீயே கலந்துகிட்டுப் பேசி வுடேம். நீயி சொல்த மீறி கொறைச்சா செஞ்சிப்புட போறேம்? யாருக்குச் செய்யுறேம்? மவளுக்குத்தானே செய்யுறேம். திட்டையில இருக்குற அத்தானப் பத்தித்தாம் தெரியும். கேக்கக் கூச்சப்படுவாரு. யாராச்சும் பேசுலாம்ன்னு சொன்னாலும் தடுத்துப்புடுவாரு. அதால நானும் வெங்கு யக்காவும் இதெ அவரு காதுக்குப் போவாமலேயே கொண்டுட்டு வந்து ஒங் காதுல போட்ருக்கேம்! அத்தானப் பத்தி வேறென்ன ஒமக்குத் தெரியாததா? ஒரு வார்த்தெ சொன்னா சொன்னபடி தலைய அடமானம் வெச்சாவது செய்யுவார்ங்றது தெரியும்ல. சொத்து பத்துல என்னத்தெ கொறைச்சல கண்டே அவுங்ககிட்டெ? ஒரு பயெ, நாளைக்குக் கலியாணம் ஆனாலும் ஒரே மருமவ்வேம்தாம். பொண்ணு புள்ளைன்னுல்லாம் பாக்காம சொத்துல பேர் பாதிப் பொண்ணுக்கும் புள்ளைக்கும் பிரிச்சிக் கொடுக்குற ஆளு. ஒமக்குத் தெரியாதா ன்னா அவர்ரப் பத்தி நாம்ம பாட்டுக்குக் கதெ சொல்லிட்டு இருக்கேம்? "ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "செரி பாக்கலாம் வா! நம்மள மீறி என்னத்தெ ஆவப் போவுது? இருந்தாலும் ஒரு கலப்பு கலந்துக்கிடணும். நாளைக்கு நாம்ம பேசி வுட்டதால நகெ நட்டு சீரு சனத்தில சொந்த பந்தம்ன்னு பாத்துப்புட்டு சின்ன கொறை கூட வந்துப்புடாது. அதாங் முக்கியம். ஏன்னா நமக்கு ரண்டு பக்கமும் முக்கியம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "நீயி எத்தனெ பவுனு போடச் சொல்லுதீயோ, அதெ விட ரண்டு பங்குப் போடச் சொல்றேம். சீரு சனத்தி செய்மொறையும் அப்பிடித்தாம் எல்லாம் ஒண்ணுக்கு நாலா செஞ்சி வுடும் யக்காவும் யத்தானும். அதுக்கு நாம்ம உத்தரவாதம் தர்றேம். வேணும்ன்னாலும் சொல்லு பத்திரத்தெ வாங்கிக் கையெழுத்துப் போட்டுத் தர்றேம்!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "அப்பிடிங்கிறீயா? அப்போ அத்து கெடக்கட்டும் வுடு. அது பாட்டுக்கு ஆவுறது ஆவும். சின்ன பயலன்னா இஞ்ஞ அனுப்பி வுடுறதுன்னா வுடு. இஞ்ஞ இருந்து எதாச்சிம் வேலயப் பாக்குறதுன்னாலும் பாக்கட்டும். நமக்கும் தொணையா இருக்கும் பாரு! ஒத்த ஆளுதாம். வூட்டப் பாத்துக்கோ பெரிசு!"ன்னுச்சு லாலு மாமா பேச்ச வேற ஒரு தெசையில கொண்டுப் போயி.
            "யில்ல மாமா! ஊர்ல அவுங்க பிடிச்ச வேலைகளப் பிடிச்சிட்டு இருக்காம். அவுங்க இருந்த எடத்துல இவனெ வெச்சிப் பாக்கணும்னு ஆசெ. அவ்வேம் மூத்தவனும் சென்னைப் பட்டணத்துக்குப் போயிட்டாம். அவுங்க இருந்த கெராமத்துல இருந்து பேரு சொல்றதுக்கு ஒருத்தம் வேணும்னுத்தாம் ஊர்லயே வெச்சிருக்கேம். அத்தோட இவனெயும் வுட்டுப்புட்டா வேற நமக்கு தொண ன்னத்தா இருக்குச் சொல்லு மாமா?"ன்னுச்சு தேன்காடு சித்தியும் அதெ தெசையில கல்யாணத்தப் பத்தித் தொடந்தாப்புல பேச வாணாம்னு பேசுனுச்சு.
            "அதுவுஞ் செரித்தாம்! ரண்டு நாளு தங்கிட்டுப் போயேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            "யில்ல மாமா! ஒமக்கு ராத்திரிக்கிச் சமைச்சி வெச்சிட்டு நாம்ம கெளம்புறேம். முடிஞ்சா அப்பிடியே பாக்குக்கோட்டைக்கும் ஒரு எட்டுப் போயிட்டு நேரத்தோட தேன்காட்டுக்குப் போவலாமுன்னு நெனைக்கிறேம்!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "அப்பிடிங்றீயா? அப்பிடின்னா கெளம்பு. ராத்திரிச் சாப்பாடுதானே நாம்ம பாத்துக்கிடறேம்! பாக்குக்கோட்டைக்கெல்லாம் போயி அலைஞ்சிட்டுக் கெடக்க வாணாம். ரண்டு மூணு நாள்ல நாமளே போயாவணும். வேல கெடக்கு. நீயிப் பேசுனா சரிபட்டு வாராது. அதுக்குன்னு பேசுறதுக்கு செல மொறைக இருக்கு. அதுப்படி பேசணும். எடுத்தேம் கவுத்தேம்ன்னு பண்ணிட முடியாது. நாம்ம பேசுறதுங்றது வேற. நீயி பேசுறதுங்றது வேற. வேற செல விசயங்களும் இருக்கு. அந்தப் படிக்குப் பேசணும். அப்பிடியே பேசிப் பாத்துடுறேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            லாலு மாமாவோட இந்தப் பதிலு கொஞ்சம் திருப்தியா இருந்துச்சு தேன்காடு சித்திக்கு. இருந்தாலும் நகெ நட்டு சீர் சனத்தின்னு லாலு மாமா பீதியக் கெளப்புறது புரியாம நாம்ம பாட்டுக்கு எதெ வேணாலும் செஞ்சிப்புடுறதா சொல்லிட்டேம்ன்னு ஒரு பயமும் தேன்காடு சித்திக்கு. அந்த யோசனையிலயே லாலு மாமா கெளம்பச் சொல்லியும், வேற இன்னும் எதாச்சிம் சொல்லு‍மோன்னு ஒரு எதிர்பார்ப்புல தேன்காடு சித்தி பிடிவாதமா இருந்து ராத்திரிச் சமையலுக்குச் சோறும், கொழம்பும் வெச்சு அத்தோட ஒரு தொடுகறியும் செஞ்சு வெச்சிட்டுத்தாம் கெளம்புனுச்சு.
            "வூட்டுல சமைச்சு ராத்திரி தண்ணி ஊத்தி காலையில பழையச் சோறு சாப்புட்டு நாளாச்சு. ராத்திரிச் சாப்புட்டுப்புட்டு தண்ணிய ஊத்தி வெச்சு நாளைக்குக் காலையில ஒரு பிடி பிடிக்கணும்!"ன்னு கடெசியில அதத்தாம் சொன்னுச்சு லாலு மாமா.
            "வத்தக் கொழம்புதாம் வெச்சிருக்கேம் மாமா! ஒங் கதெ தெரிஞ்சி நெறையா வெச்சிருக்கேம். பிரிட்ஜ் பொட்டியில எடுத்து வெச்சிக்கிட்டீன்னா ஒரு வாரத்துக்கு வரும். கொழம்புக்குக் கொறையிருக்காது!"ன்னு சொல்லிட்டுத் தனிக்கொடிய அழைச்சிட்டுக் கெளம்புனுச்சு தேன்காடு சித்தி. அப்போ லாலு மாமாவுக்குக் கண்ணுல தண்ணிக் கோத்துக்கிடுச்சு. "மாசத்துக்கு இப்பிடி வந்திட்டுப் போனீன்னா நல்ல சாப்பாடு கெடைக்கும்! யாரு வந்துப் பாக்குதீயே?"ன்னுச்சு லாலு மாமா.
            "தேன்காடு வா மாமா! கறியும் சோறுமா, மீனும் வறுவலுமா செஞ்சுப் போடுறேம்! நீயி பெருங்கையி. எஞ்ஞள மாதிரி ஏழை பாழை வூட்டுக்குல்லாம் வருவீயா?"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "அடிக் கழுதெ! வர்றேம் போ! நல்ல சேதியோட வர்றேம்! நாட்டுக்கோழியா பாத்து வையி!"ன்னுச்சு லாலு மாமா.
            "பட்டச் சரக்கையே வாங்கி வைக்கிறேம்! நல்ல சேதியோட வந்துச் சேரு!"ன்னு சொல்லிட்டு அதுக்கு மேல தங்காம கெளம்புனுச்சு தேன்காடு சித்தி.
            என்னத்தாம் பொண்ணு வூட்டுல புடுங்கி வாங்கித் தின்னாலும் கடெசீக் காலத்துல இப்பிடிச் சோத்துக்கு அலைய வேண்டிருக்கேன்னு புரியாமலயே லாலு மாமா இப்பிடி இன்னும் இந்த வயசுலயும் மாறாம இருக்குறது தேன்காடு சித்திக்கு மனசுக்குள்ள பஸ்ல போறப்ப ஆச்சரியமாத்தாம் இருந்துச்சு. அது மனசுல பல வெதமான நெனைப்பு. பாத்துக் கலியாணத்த முடிச்சி வுடாம இன்னும் நகெ நட்டு காசு பணத்து மேல உள்ள ஆசெ போவலங்றது அதொட நெனைப்பு. அத்தோட அத்துக் கூடப் பொறந்து ரத்தத்தோட ரத்தமா ஊறுனதெல்லாம் எப்பிடி மாறும்ன்னு இன்னொரு நெனைப்பும் கூடவே வருது தேன்காடு சித்திக்கு. கூட கொறைச்சலோ செய்யுறதப் பத்தி ஒண்ணுமில்ல, கலியாணம் ஆயி சோடிங்க ரண்டும் நல்ல வெதமா குடித்தனம் பண்ணா சரித்தாம்ன்னு மனசுக்குள்ள வேற ஒரு நெனைப்பையும் நெனைச்சிகிடுச்சு. எவனுக்குக் கட்டிக் கொடுத்தாலும் தட்சணைக் கொடுக்காம கட்டி வைக்க முடியாதுங்றப்போ, அதெ சொந்தக்காரப் பயலுக்குச் செஞ்சதா நெனைச்சிக்கிட வேண்டியதுதாங்ன்னு அப்பிடியும் ஒரு நெனைப்பு அதுக்குள்ள. இப்பிடி நாலா வெதமா தேன்காடு சித்தி யோசிக்கிறதெப் பாத்து தனிக்கொடிக்கு ஒண்ணும் புரியல. எதுக்கு அம்மாக்காரி இப்பிடி ஒண்ணுமே பேசாம அது பாட்டுக்கு யோசிக்குதுன்னு அவனுக்குள்ள தனியா அது ஒரு யோசனையா ஓடுது. அவுங்க ரண்டு பேத்தோடு இன்னும் பல பேத்தையும் சொமந்துகிட்டு பஸ்ஸூ ஓடிக்கிட்டெ இருந்துச்சு. வாழ்க்கையில எல்லாம் ஓட்டம்தாம். மனசப் போலவே வாகனங்களும், வாகனங்களப் போல மனசும் ஓடிட்டே இருக்குது திரும்பத் திரும்ப போன பாதையிலயே சுத்தி சுத்திக்கிட்டு ஓடிகிட்டு.
            இப்போ ஒங்களுக்குப் புரிஞ்சிருக்கும், இந்தக் கலியாணச் சங்கிலியோட மொத வளையம், மூல வளையம் எல்லாம் லாலு மாமாதான்னு. இருந்தாலும் கலியாணம்ன்னு முடிவாயிக் கலியாணப் பேச்சப் பேசி காரியத்துல எறங்கிப்புடலாம்னு முடிவெடுத்த வெதத்துல நாலாவது வளையமா இப்போ லாலு மாமா சேர்றத வெச்சிப் பாக்குறப்போ நாலு வளையம் கொண்ட சங்கிலி பூர்த்தியாவுது. ஒரு வகையில இந்த நாலாவது வளையம்தாம் காந்த வளையம். இந்த வளையத்துக்கிட்டெதாம் மித்த வளையங்களக் கோத்துச் சங்கிலியிலேந்து வெலக வுடாம செய்யுற கணக்கு வழக்கு எல்லாம் இருக்கு.
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...