26 Jul 2020

காலங்கள் தோறும் கலங்கள்!

காலங்கள் தோறும் கலங்கள்!

            ஈயத்தைப் பாத்து பித்தளை இழிச்சதாம் - எனது அம்மா அடிக்கடி சொல்லும் வாசகம். இந்த ஒற்றை வாசகத்தை வைத்தே எனது அம்மா யாரும் தன்னையும் இழிவு செய்து விடாமல் கவசத்தோடு அலைவதைப் போலத் தோன்றும் எனக்கு.
            எவர்சில்வர் பாத்திரங்கள் வந்தப் புதிதில் அதை எளவுசில்வர் என்று சொல்லி ரொம்ப நாட்கள் வரை எனது ஆத்தாவோட சேர்ந்து அம்மாவும் அலுமினியப் பாத்திரங்களோடே வெகுநாள் வரை புழங்கிக் கொண்டிருந்திருக்கிறாள்.
            ஒரு கட்டத்துக்கு மேல எளவு சில்வர் எவர் சில்வராக அலுமினியப் பாத்திரங்கள் போன இடம் தெரியாமல் வீட்டில் இருந்த அனைத்துப் பாத்திரங்களும் எவர்சில்வராக மாறி விட்டன. இப்போது நெல் அவிக்கும் வட்டா ஒன்றும், அவிப்பதற்கு முன் நெல்லை ஊறப் போடுவதற்கான பெருங்குவளைகள் நான்கும் வீட்டில் அலுமினியமாக இருக்கின்றன. அத்தோடு சோறு பொங்கும் பொங்குபானை ஒன்று அலுமினியத்தில் இருக்கிறது.
            எவர் சில்வர் காலத்தைக் கடந்த பின் ப்ளாஸ்டிக் மேல அப்பிடி ஒரு வெறுப்பு அம்மாவுக்கு. அதுவும் ப்ளாஸ்டிக் குடங்களை என் அம்மா அளவுக்கு யாரும் இழிவாகப் பேசியிருக்க மாட்டார்கள். "அந்த நாத்தம் பிடிச்சக் கொடத்துல எப்பிடித்தாம் தண்ணிய தூக்கியாந்து குடிக்கிறாளுவோளோ?"ங்ற அளவுக்குப் பேசியிருக்கிறாள். கிராமத்தில் இருந்த வரை ப்ளாஸ்டிக் பாத்திரங்களும், குடங்களும் என் அம்மாவிடம் அந்த அளவுக்குத் திட்டு வாங்கியிருக்கிறது.
            ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் காரணமாக என் அம்மாவுக்கு தாராசுரத்தில் மூன்று நான்கு மாதங்கள் இருக்க வேண்டிய சூழ்நிலையில், அதுவும் மாடியில் இருக்க வேண்டிய சூழலில் ஒரு ப்ளாஸ்டிக் டிரம்மிலும், ஏழெட்டு ப்ளாஸ்டிக் குடங்களிலும் தண்ணீர் பிடித்து பொக்கிஷத்தைப் போல வைத்துக் கொண்டிருந்தாள்.
            "எப்பிடிம்மா இப்பிடி மாறிட்டே?" என்பேன்.
            "அடப் போடா கொழாயில்ல வரிசையா நின்னு தண்ணியப் பிடிச்சா ஒனக்குக் கஷ்டம் தெரியும்!" என்பாள் சலிப்பாக.
            கிராமத்திலிருந்து தாராசுரத்துக்கு இரவு சென்று தங்கி விட்டுக் காலையில் கிளம்பும் போது, "குளிச்சிட்டுப் போடா!" என்று தாராள மனதோட ரண்டு ப்ளாஸ்டிக் குடத்துத்த தண்ணீரைத் தூக்கித் தருவாள்.
            திரும்ப தாராசுரத்திலிருந்துக் கிராமத்திற்கு வந்து போது அந்த குடங்களையும் பத்திரமாக எடுத்து வந்திருந்தாள். நாங்கள் அதைத் தூக்கிக் கொண்டுப் போய் வயக்காட்டில் இருந்த போர்க் கொட்டகையில் போட்டு அதில் தண்ணீர் பிடித்து வைத்திருப்போம். சமயத்தல் போரைப் போடும் போது காற்று வாங்கினால் அந்த ப்ளாஸ்டிக் குடத்துத் தண்ணீரை ஊற்றித்தாம் போரைப் போட்டு விடுவோம்.
            காலப்போக்கில் தண்ணீருக்கானப் புட்டிகளாக ப்ளாஸ்டிக் மாறிப் போயி விட்டது. தண்ணீர் பாக்கெட், தண்ணீர் பாட்டில், தண்ணீர் கேன் தொடங்கி தண்ணீர் அடைபடுவதெல்லாம் ப்ளாஸ்டிக்கோ பாலிதீனோ என்று மாறி விட்டது.
            இதில் என் மனதில் தொக்கி நிற்கும் கேள்வி, எனது அம்மா மாறினாளா? மாற்றப்பட்டாளா? என்கிற கேள்விதான்.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...