27 Jul 2020

ஒரு அல்வா துண்டும் சில வறுத்த முந்திரிகளும்!

செய்யு - 518

            செய்யுவ பொண்ணு பாக்க வர்றப் போறாங்க. வூட்டெ சுத்தம் பண்ணுற வேல ஆரம்பமானுச்சு. வூடு முழுக்க ஒட்டடை அடிச்சி, அலசி வுட்டு வேல மும்மரமா ஆச்சு. அழகா தெரியணுங்றதுக்காக அங்கங்க அலங்காரம் பண்ணியாச்சு. ஒரு வார காலமா இதெ நெனைப்புத்தாங், இதெ வேலைத்தாம். வூட்டுல ஒருத்தரு மாத்தி ஒருத்தரு எதாச்சும் செஞ்சிக்கிட்டுக் கெடந்தாங்.
            ராசாமணி தாத்தா காப்பியும் காரமும் இனிப்பும் போதும்ன்னு சொன்னாலும் சுப்பு வாத்தியாரு திருவாரூரு சிவராமு கடைக்குப் போனாரு. அம்பது பேத்துக்குக் கணக்குப் பண்ணி இனிப்ப வாங்குனாரு. அவரோட பண்ட கணக்குல அல்வா யில்லாம இருக்காது. ஒவ்வொருத்தருக்கும் நூறு கிராம் அல்வா துண்டு இனிப்பு, அத்தோட ஒரு சந்திரகலா, நெய் மைசூர்பாகு. காரத்துக்கு வறுத்த முந்திரிய அம்பது பேத்துக்குக் கணக்குப் பண்ணி வாங்கிக்கிட்டாரு, செய்யுறதெ சிறப்பா இருக்கட்டுமேன்னு. இனிப்புக் காரத்தோட பழங்களையும் வெச்சிப்புடணும்ன்னு ஆப்பிளு, ஆரஞ்சு, திராட்சையையும் அத்தோட அம்பது பேத்துக்கு பச்சை வாழைப் பழங்களையும் வாங்கிக்கிட்டாரு. காப்பிக்குப் பதிலா பாதாம்பால் போட்டுக் கொடுத்துப்புடலாம்ன்னு அதுக்கேத்த சாமானுங்களையும் வாங்கிக்கிட்டாரு.  அதெ வெச்சிக் கொடுக்குறதுக்கு ஏத்தாப்புல பெரிய பேப்பர் தட்டு, பேப்பர் கப்புகளையும் வாங்கிக்கிட்டாரு.
            அந்த ஞாயித்துக் கெழமெ வந்தப்போ முருகு மாமா கடையிலேந்து வந்தவங்க உக்காரதுக்கு ஏத்தாப்புல வாடகைக்கு புது ப்ளாஸ்டிக் நாற்காலிகளாப் பாத்து அம்பதெ டாட்டா ஏஸ்ஸ வெச்சு காலங் காத்தாலேயே எடுத்தாந்தாரு. அதெ அழகா திண்ணையிலேந்து ஆரம்பிச்சு கூடத்து வரைக்கும் போட்டு ஏற்பாடுக தயாரா இருந்துச்சு.
            வாசல்ல ஒரு மேசையைப் போட்டு அது மேல ஒரு போர்வைய அழகா மடிச்சிப் போட்டு ஒரு தட்டுல சந்தனப் பேழாவும், குங்குமச் சிமிழும் இருந்துச்சு. சந்தனப் பேழாவுல சுத்தமான சந்தனத்தெ வாங்கியாந்து பன்னீரு கலந்து கலக்கி இருந்துச்சு. அதெ தொட்டுப் பாத்தாலே பன்னீரு வாடை சொகந்தமா வந்துச்சு. பக்கத்துல இன்னொரு தட்டெ வெச்சு அதுல ரோசாப் பூவு இருந்துச்சு, பொண்டுக வந்தா எடுத்து தலையில வெச்சுக்க. அதுக்குப் பக்கத்துல இன்னொரு தட்டுல டைமண்டு கல்கண்டும் காய்ஞ்ச திராட்சையும் கலந்தாப்புல வர்றவங்க சந்தனத்தெத் தொட்டுக்கிட்டு இனிப்பெ எடுத்துக்கிறாப்புல இருந்துச்சு.
            பத்து மணிக்கு மேல பதினோண்ணரை மணிக்குள்ள வார்றதா சொன்னாலும் சுப்பு வாத்தியாரு வூட்டுல எல்லாரும் காலையில ஒம்போது மணி வாக்குல காலைச் சாப்பாட்டையெல்லாம் முடிச்சிட்டு தயாரா ஆயிட்டாங்க. தெருவுலேந்து தம்மேந்தி யாத்தா, பக்கத்து வூட்டு அய்யாவு, அம்மாசி, பரமுவோட அப்பா, தாடி தாத்தா, எதிர் வூட்டு சத்தியமூர்த்திப் புள்ளெ, தேசமணியாருன்னு பத்து பேத்துக்கு மேல அந்தந்த குடும்பத்துலேந்து பத்து மணி வாக்குல வந்திருந்தாங்க.
            வடவாதியில குமரு மாமாவோடயும், வீயெம் மாமாவோடயும் தொடர்பு அந்துப் போயிருந்ததால, சுப்பு வாத்தியாரு மாமங்ற மொறையில யாராச்சும் இருக்கணுங்றதால மொத நாளே கோவில்பெருமாள் நாது மாமாவையும், நாகு அத்தையும் வாரச் சொல்லிருந்தாரு. தேன்காடு சித்தியும், சிப்பூரு பெரிம்மா, பெரியப்பாவுக்கும் சேதி சொல்லி அவுங்களும் வந்திருந்தாங்க.
            என்னத்ததாங் கடையிலேந்து வாங்கியாந்து பண்டங்கள வெச்சாலும், வூட்டுல செஞ்சதும் அதுல கலப்பா இருக்கணுங்றதுக்காக பஜ்ஜியும், கேசரியும், காரச் சேவும் செய்திருந்துச்சுங்க வெங்குவும் ஆயியும்.
            ராசாமணி தாத்தா சனிக்கெழமெ ராத்திரியே போனப் போட்டுச் சொல்லிருந்துச்சு, "மாப்புள! வந்தோமா பாத்தோமான்னு கெளம்புற மாதிரிக்கி இருக்கணும். ரொம்ப போட்டு இழுத்து வுடறாப்புல எதுவும் பண்ணிடக் கூடாது. நேரம் முக்கியம். அவ்வேம் பாலாமணிக்கு நேரந்தாம் முக்கியம். ல்லன்னா வெசனக் கடுப்பெடுத்துப் பேச ஆரம்பிச்சிடுவாம். நல்ல நேரத்துக்குள்ள வந்துப்புட்டு நல்ல நேரத்துக்குள்ள கெளம்பிப்புடணும். அதுல நாம்மளும் உறுதியா இருக்குற ஆளு. அதால அதுக்கேத்தாப்புல எல்லாத்தையும் தயாரு பண்ணி தயாரு நெலையில வெச்சுக்குங்க. வேன்ல வந்துட்டு வேன்ல கெளம்பிடுவோம் பாத்துக்குங்க!"ன்னுச்சு.
            "நீஞ்ஞ சொன்னபடிக்கு எல்லாம் செரியா நடக்கும்ங்க மாமா! வூட்டுல எல்லாத்தையும் தயாரு பண்ணித்தாம் வெச்சிருக்கேம்! தெருவுலேந்தும் எல்லாம் தொணைக்கு இருக்காங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            ஒம்போது மணியிலேந்து சுப்பு வாத்தியாரு வூட்டுல காத்திருக்க ஆரம்பிச்ச சனங்க கண்ணு சோர்ந்து போற அளவுக்கு பத்தரை மணி வரைக்கும் காத்திருந்துச்சுங்க. "பத்து மணிக்கு வார்றதா சொன்னாங்களே!"ன்னு வெங்கு நெலை கொள்ளாமல அங்ஙனயும் இங்ஙனயும் அலைஞ்சிட்டு இருந்துச்சு.
            "சனங்க எல்லாத்தையும் கெளப்பிக்கிட்டு வர்றதுன்னா மின்ன பின்ன ஆவத்தாம் செய்யும். எப்பிடியும் பதினோரு மணிக்குள்ள வந்துப்புடுவாங்க! நீயி சித்தெ பதட்டம் பண்ணாம உக்காரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெங்குவப் பாத்து.
            "அவுங்க வார்றப்படி மெதுவா நெதானமா வாரட்டும். யிப்போ ன்னா? ஞாயித்துக் கெழமதானே?"ன்னாரு தாடி தாத்தாவும்.
            "எலே யம்பீ! நீயி போனப் போட்டு எஞ்ஞ வந்துட்டு இருக்காங்க ன்னான்னு கேளுடாம்பீ?"ன்னுச்சு வெங்கு விகடுவப் பாத்து. விகடு செல்போன எடுத்து நம்பர்ர போடப் போனவனெ, சுப்பு வாத்தியாரு தடுத்துப்புட்டாரு. "வர்றவங்க நெதானமா வாரட்டும். அதாங் நேத்திக்கே சொல்லிட்டாங்களே. அவுங்களப் போட்டு அலமலப்பு பண்ணப் படாது! பேயாம இரு சித்தே! வார்ரன்னு சொன்னவங்க வார்ராம எஞ்ஞப் போயிடப் போறாங்க! இதுல எல்லாம் பொறுமையா இருந்தாத்தாங் காரியம் ஆவும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யிப்போ ன்னா ஆச்சுன்னு ஆளாளுக்குப் பரபரக்குதீயே?"ன்னாரு பரமுவோட அப்பாவும் சிரிச்சிக்கிட்டெ.
            ராசாமணி தாத்தா சொன்ன பத்து மணிக்கு மேலயும் இல்லாம, சுப்பு வாத்தியாரு சொன்ன பதினோரு மணிக்குள்ளங்ற கணக்குக்கும் இல்லாம பொண்ணு பாக்க வந்து பாக்குக்கோட்டை சனங்க பதினோண்ணரை மணிக்குத்தாங் வந்துச்சுங்க. ஒரு வேன்லயும், ஒரு கார்லயுமா நெருக்கி அடிச்சிக்கிட்டு முப்பது சனத்துக்கு மேல வந்து எறங்குனுச்சுங்க.
            முருகு மாமா, நீலு அத்தெ, சித்துவீரன், சுந்தரி அவுக புள்ளைக ரண்டு, லாலு மாமா, அதோட மூத்தப் பொண்ணு, மருமவ்வே புள்ளே, லாலு மாமாவோட ரண்டாவது பொண்ணு, மருமவ்வே புள்ளே, வேலன், பிந்து, பஞ்சு ஆச்சாரி மவனுங்க மூணு பேரு அவுங்க குடும்பம், ராசாமணி தாத்தா, சரசு ஆத்தா, பாலாமணி, பாலாமணியோட சிநேகிதனுங்க அஞ்சு பேத்து, பாக்குக்கோட்டையிலேந்து அவுங்க ஒறவுக்கார சனங்க அஞ்சாறு பேரு, பாக்குக்கோட்டையில அக்கம்பக்கத்துல இருக்குற சனங்க அஞ்சாறு பேருன்னு ‍நெறைய டிக்கட்டுக. அதுங்க எறங்கி வந்து அதுகள வாங்க வாங்கன்னு வரவேற்பு பண்ணி, சந்தனம், குங்குமம், ரோசாப்பூ, கற்கண்டெ எடுத்துக்க வெச்சு, பெறவு உக்கார வெச்சு அதுகளுக்குத் தண்ணிக் கொடுக்கவே பத்து நிமிஷத்துக்கு மேல ஆனுச்சு.
            வந்து நொழையுறப்பவே, "வந்தாச்சு! மாப்புள வூட்டுலேந்து வந்தாச்சு! நம்ம குடும்பத்துக்கு எல்லாம் சொந்தத்துலத்தாம் ஆவும் போலருக்கு. ஒங்கிட்டெயும் ஒரு பொண்ணு இருக்கு. நம்மகிட்டெயும் ஒரு மவ்வேம் இருக்காம். இந்த ரண்டுக்கும்தாம் ஆவும்ன்னு நெனைச்சேம். அப்பிடியே ஆவுது. ஒண்ணுத்துக்கும் வெளியில ஆவாது போலருக்கு வெங்கு!"ன்னு சத்தமா சொல்லிட்டெ நொழைஞ்சது சரசு ஆத்தா.
            "கடெசீ நேரத்துல நா வர்றேம், நீயி வர்றேன்னு டிக்கெட்டுக சேந்துப் போச்சு மாப்புள! வர்றன்னு சொன்ன டிக்கெட்டுக வெரசா கெளம்புணுமா இல்லியா? ஒண்ணும் கெளம்ப மாட்டேங்குது. எல்லாத்தையும் கெளப்பியடிச்சுக் கொண்டாரதுக்குள்ள நேரம் இம்மாம் ஆயிட்டு!"ன்னு ராசாமணி தாத்தா சொல்லிட்டு இருக்குறப்பவே சடசடன்னு பேப்பர் ப்ளேட்டுல அல்வா, சந்திரகலா, நெய் மைசூர் பாகு, கொஞ்சம் கேசரி, பக்கத்துலயே வறுத்த முந்திரி, ஆப்பிள் துண்டுக, ஆரஞ்சு சொளைக, கொஞ்சம் திராட்சைக, பஜ்ஜி ஒண்ணு, பச்சை வாழைப் பழத்தோட காரச்சேவு கொஞ்சம் வெச்ச தட்டெ கொடுத்து பாதாம்பால் இருந்த கப்பையும் கொடுத்தாச்சு. வேக வேக இந்த வேலைய விகடு, ஆயி, வந்திருந்த தெரு சனங்கன்னு ஆளாளுக்குப் பாத்து நொடியில முடிச்சாங்க.
            "ன்னா மாப்புள்ள நீயி ஒரு சாப்பாட்டு கணக்கா இம்புட்டுப் பண்ணி வெச்சிருக்கே? இத்தெ எல்லாத்தையும் சாப்புட்டா மத்தியானச் சாப்பாட்டா சாப்புடறதா ன்னா? ன்னா வேல பாத்து வெச்சிருக்கே நீயி?"ன்னு சிரிச்சிக்கிட்டெ சொன்னாரு ராசாமணி தாத்தா தன்னோட தாடிய நீவி விட்டுக்கிட்டெ.
            "யிப்பிடி எல்லாத்தையும் ஆளாளுக்குக் கொடுத்துப்புட்டா பொண்ணு கையில என்னத்தெ கொடுத்து வுடுவீங்க?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "பலவாரத்தக் கொண்டாந்துக் காட்டிட்டு! மொதல்ல பொண்ணக் கொண்டாந்து காட்டுங்கப்பா!"ன்னாம் பாலாமணி.
            சுப்பு வாத்தியாரோட நடுக்கூடத்துல வைத்தி தாத்தா வூடு குடி போனப்போ ஒரு போட்டோ எடுத்திருந்தாங்க. அந்தப் போட்டோவப் பெரிசு பண்ணி மாட்டியிருந்தாரு. அதுல வைத்தித் தாத்தா குடும்ப வகையறாவுல வர்ற எல்லாரும் இருந்தாங்க. அந்தப் போட்டோவுல வைத்தித் தாத்தா, சாமியாத்தா பக்கத்துல சுப்பு வாத்தியாரு உக்காந்திருக்க அவரு பக்கத்துல செய்யு சின்ன புள்ளையா உக்காந்திருந்தா. அதெ பாத்துப்புட்டு சரசு ஆத்தா, "இந்தப் படத்துல கூட இருக்காளே செய்யு! சின்ன புள்ளையா?"ன்னுச்சுப் பாருங்க, அதுக்குப் பாலாமணி சொன்னாம், "படத்துல இருக்குறதெ காட்டிட்டெ இதாங் பொண்ணப் பாக்குறதுன்னு கெளப்பிடுவீயே போலருக்கே!"ன்னாம் சிரிச்சிக்கிட்டெ. அதுக்கு எல்லா சனங்களும் சேந்து சிரிச்சதுங்க.
            "சித்தெ பொறுமையா இருடா! பொண்ண அலங்காரம் பண்ணித்தானே கொண்டாரணும். கலியாணம் பண்ணிட்டுக் கூடவேதானே இருக்கப் போறே? அதுக்குள்ள ஏம்டா அவ்சரப்படுறே?"ன்னுச்சு நீலு அத்தெ.
            மணி ஆயிட்டெ இருந்துச்சு. ராசாமணி தாத்தா, "பன்னெண்டு மணிக்குள்ள கெளம்பியாவணும். அதுக்குப் பெறவுன்னா எமகண்டம் வர்றதால, தங்கியாவுறப்புல ஆயிடும். அத்து செரிபட்டு வாராது. சித்தெ சட்டு புட்டுன்னு முடியுங்க காரியத்தெ!"ன்னு சொன்னப்ப கடியாரம் பதினொண்ணு அம்பதெ காட்டுனுச்சு.
            செய்யுவ நடுக்கூடத்துக்கு அழைச்சாந்தாங்க. அழைச்சாந்து கூடத்து நடுவுல போட்டுருந்த பாயில உக்கார வெச்சாங்க. பாலாமணி செய்யுவ அதுவரைக்கும் பாக்காதது போல பாத்தாம். செய்யுவுக்கு வெக்கத்துல நிமுந்துப் பாக்கத் தோணல. தலைய குனிஞ்சிட்டெ இருந்தா.
            "தலைய குனிஞ்சிட்டெ இருக்குறதால மொகத்தெ சரியா பாக்க முடிய மாட்டேங்குதே!"ன்னாம் பாலாமணி.
            "ச்சும்மா கெடடா! பொம்பளெ புள்ளே! வெக்கப்படாம ன்னா பண்ணும்! பொண்ண பாத்துட்டீளே! நேரமாயிடுச்சு. கெளம்புன்னா சரியா இருக்கும்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "மணி பன்னெண்டு ஆவுறதுக்குள்ள சனங்க எல்லாம் போயி வண்டியில ஏறி வண்டிய ஒரு ரண்டடி கெளப்பிப்புடுங்க, குத்தம் வாராது!"ன்னாரு முருகு மாமா. மெதுவா உள்ளார வந்த சனங்க இப்போ சட்டுபுட்டுன்னு போன வேகம் தெரியாம எடத்தெ காலி பண்ணிட்டுப் போயி வண்டியில ஏறுனுச்சுங்க.
            "மாப்ள! நாமளும் கெளம்புறேம். எதா இருந்தாலும் போன்ல பேசுறேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "எம கண்டம் வந்தா ன்னா? இருங்க! மத்தியானச் சாப்பாட்டெ செஞ்சிப்புடுவேம்! இருந்துச் சாப்புட்டுப்புட்டு எம கண்டம் முடிஞ்ச பெற்பாடு கெளம்பலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "யில்ல மாப்ள! திட்டெம் இதுதாங். இதெ மாத்த முடியா. நாம்ம பேசுறேம்! அவ்வேம் பயலுக்குக் கோவம் வந்துப்புடும்! பெறவு நம்மால நெலமெயச் சமாளிக்க முடியா!"ன்னு சொல்லிட்டு வேக வேகமா கெளம்புனுச்சு ராசாமணி தாத்தா.
            சுப்பு வாத்தியாரு குடும்பமும், தெரு சனங்களும் வாசல்ல வந்து வழியனுப்புனுச்சுங்க. எல்லாம் கெளம்பி வண்டிய எடுத்தப்போ மணி எப்பிடியும் பன்னெண்டு பத்து இருக்கும். எம கண்டத்துக்கு மின்னாடி கெளம்புறதா சொல்லிட்டு எம கண்டம் ஆரம்பிச்சுக் கெளம்புனுச்சுங்க.
            "இவுனுவோ செரியான முட்டாப் பய தாதியா இருப்பானுவோளா? ஒண்ணு நேரத்துக்குச் சரியா வந்து சரியா கெளம்பணும். அத்து முடியாட்டி வந்ததுக்குத் தகுந்தாப்புல அனுசரிச்சிக்கிட்டுக் கெளம்பணும். ரண்டும் இல்லாம ரண்டுங்கெட்டான் பயலுவோ மாரில்லா கெளம்புறானுவோ!"ன்னு எரிச்சல் வந்துச்சு விகடுவுக்கு. அதெ வெளியில சொல்லிக்கிட முடியல.
            வழியனுப்பிச்சிட்டு உள்ளார வந்தா, "பாருங்க மாமா! நீஞ்ஞ மெனக்கெட்டு வாங்கியாந்த பண்டங்க ஒண்ணும் உள்ளார போவல. எல்லாம் அப்பிடியே கெடக்குது பாருங்க. அல்வாவ மட்டும் தின்னுப்புட்டு அத்தோட முந்திரிய முழுங்கிட்டு பாதாம்பால்ல ஊத்திட்டுக் கெளம்புதுங்க சனங்க!"ன்னா ஆயி.
            "நேரமில்லல. ல்லன்னா எல்லாத்தையும் சாப்புட்டுக் கெளம்புற சனங்கத்தாம்!"ன்னுச்சு வெங்கு.
            "இனுமே ஒஞ்ஞ மருமவ்வேன் குடும்பத்தெ வுட்டுக் கொடுப்பியளா?"ன்னா ஆயி.
            "வூட்டுக்கு வர்றவங்க கூட கொறைச்ச சாப்புடுவாங்க. சாப்புடாம ‍எழும்புவாங்க. அதெ ஒண்ணும் சொல்றதுக்கில்ல. அவுங்களப் போயி கட்டாயம்லாம் பண்ண முடியா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதுக்கில்ல மாமா! நேரத்தோட வந்திருந்தா எல்லாம் சாப்புட்டுக் கெளம்பிருக்கலாம். இப்போ பாருங்க செலதுல்ல அல்வா துண்டும் சாப்புடமா கெடக்கு, வறுத்த முந்திரியும் அப்பிடியே கெடக்கு. சரியா செல பேத்து சாப்புடல மாமா, கெளம்பணும், கெளம்பணுங்ற நெனைப்புல!"ன்னுச்சு ஆயி.
            "அதெ வுடு! நம்ம பக்கத்துல கொறையில்ல. எல்லாம் செரியா செஞ்சாச்சு. கெளம்பி வர்றதுல அவுங்க தாமசம் பண்ணத்துக்க நாம்ம ன்னா பண்ண முடியும்? நம்ம அளவுல எல்லாம் செரியா இருந்துச்சுல்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பக்கா மாமா!"ன்னா ஆயி.
            "அத்துப் போதும்! அவ்வளவுதாங்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            வந்திருந்த தெரு சனங்களும் நல்ல வெதமா முடிஞ்சிடுச்சு, சுபந்தாம் வாத்தியாரேன்னு சொல்லிட்டுக் கெளம்ப ஆரம்பிச்சாங்க.
            "பெறவு ன்னக்கா டாக்கடர்ரு மாப்புளயக் கொண்டாந்துச்சு!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "கடெசீயில நெலையா நின்னு சாதிச்சுப்புட்டாளே வெங்கு!"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "இப்பிடியே அடுத்தடுத்து நடக்க வேண்டியதும் நல்ல வெதமா ஆண்டவேம் புண்ணியத்துல நடக்கணும்!"ன்னுச்சு நாது மாமாவும், நாகு அத்தையும்.
            கலியாணமே நடந்து முடிஞ்சாப்புல ஒரு சந்தோஷம் வந்துச்சு வெங்குவோட மனசுல.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...