செய்யு - 517
சுப்பு வாத்தியாரு போயி முருகு மாமாவையும்,
சித்துவீரனையும் பாத்துட்டு வந்ததுல வெங்குவுக்கு ரொம்பவே சந்தோஷம். காரு வாங்கிக்
கொடுக்குறதப் பத்தியோ, நகை நெட்டு நூத்து பவுனு அளவுக்குப் போடுறதெ பத்தியோ, தேக்கங்
கட்டிலு, பீரோ செஞ்சு கொடுக்குறதெப் பத்தியோ அதுக்கு எந்தக் கவலையும் இல்லே. சுப்பு
வாத்தியாருக்கு அந்தக் கவலெ இருந்துச்சு. புதுசா டிவியெஸ்ஸூ எக்செல் வாங்குனா செலவாயிடுமேன்னு
அவரு பாஞ்சு வருஷத்துக்கு மின்னாடி வாங்குன டிவியெஸ்ஸூ பிப்டியையோ போட்டு உருட்டிட்டு
இருந்தாரு. அவருட்ட போயி காரு வாங்கிக் கொடுக்கணும்ன்னு சொன்னா எப்பிடியிருக்கும்?
தங்கிட்டெ இருக்குற பணம், மவ்வேம் சம்பாத்தியத்துல சேந்திருக்குற பணம், வூட்டுல இருக்குற
நகெ நட்டுன்னு எல்லாத்தையும் மனசுக்குள்ளயே ஒரு கணக்குப் போட்டுக்கிட்டு உக்காந்திருந்தாரு.
செய்யுறேன்னு சொல்லிட்டு வந்துட்டாரே தவுர, அவருக்கு யோசனெ பலமா போயிருந்துச்சு.
இருக்குறதுக்குள்ள செலவு பண்ணுறாப்புல
இருந்தா எப்பயும் இல்லாததெப் பத்தி நெனைக்க வேண்டிய அவசியமில்ல. ஆன்னா சுப்பு வாத்தியாரு
தன்னோட தகுதிக்கு மீறுன ஒண்ண ஒத்துக்கிட்டு வந்ததெ நெனைச்சு அதெ சமாளிக்கணும்ங்ற எண்ணத்துல
மூழ்கிப் போயிருந்தாரு. வெங்குவோட தொந்தரவு இல்லன்னா நகெ நட்டுப் போடாம கட்டிக்கிறேன்னு
சொன்னாலும் அவரு இதுக்கு ஒத்துக்கிட மாட்டாரு. சமயத்துல வூட்டுல பொண்டுகப் பிடுங்கி
எடுக்குறப்போ ஆம்பளைகளால ஒண்ணுத்தையும் பண்ண முடியுறதில்ல. அந்த நேரத்துல ஆம்பளைக
சொல்றது எதுவும் எடுபடுறதில்ல. அவுங்கப் போக்குக்குப் போறதெத் தவுர வேற வழியில்லாமப்
போயிடுது. அவருக்கு இப்போ கலியாணத்துக்குச் செய்ய வேண்டிய ஒவ்வொண்ணுத்தையும் பத்தியும்
சிந்தனெ ரொம்ப ஆழமா போவ ஆரம்பிச்சிது. அப்போ ராத்திரி பத்து மணி இருக்கும். படுத்துக்கிட்டெ
தூக்கம் பிடிக்காம யோசனையில ஆழ்ந்து கெடந்தாரு. அப்பத்தாங் விகடுவோட செல்போன் ஒலிக்க
ஆரம்பிச்சிது.
விகடு எந்த கவலையும் இல்லாம அவ்வேம் பாட்டுக்கு
ஆழ்ந்த ஒறக்க நெலைக்குப் போயிருந்தாம். ஆயிதாம் செல்போன் அடிக்கிறதெப் பாத்துட்டு
எடுத்து அவனெ எழுப்பிக் கொடுத்தா. எடுத்துக் காதுல வெச்சவனுக்குக் கணீர்ன்னு பாக்குக்கோட்டை
ராசாமணி தாத்தாவோட கொரல் கேட்டுச்சு. "ன்னா மாப்ளே செளரியமா இருக்கீயளா? நாம்ம
பாக்குக்கோட்டையிலேந்து பேசுறேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
"தாத்தா நாம்ம வெகடு பேசுறேம்! செளரியமா?"ன்னாம்
விகடு பதிலுக்கு.
"பேராண்டிப் பேசுதீயா? செளரியம்தாம்டா!
யப்பா இல்லியா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
"கொடுக்குறேம்!"ன்னாம் விகடு.
"கொடு! முக்கியமானா சங்கதியப் பேசணும்!"ன்னுச்சு
ராசாமணி தாத்தா.
விகடு செல்போன எடுத்துக்கிட்டு ரூமுலேந்து
கதவெத் தொறந்துகிட்டு சுப்பு வாத்தியாரு படுத்திருக்குற கூடத்துக்கு வந்தாம். கூடத்து
லைட்டுக்கான சுவிட்சைப் போட்டு வெளிச்சம் பாய்ஞ்சதும், "யப்பா!"ன்னாம் விகடு.
சுப்பு வாத்தியாரு தூங்காம யோசிச்சுக்கிட்டுக் கெடந்ததால, "ன்னடாம்பீ?"ன்னாரு
கூப்புட்ட கொரலுக்கு.
"பாக்குக்கோட்டை தாத்தா போன்ல!
ஒஞ்ஞ கூட பேசணுமாம். முக்கியமான வெசயமாம்!"ன்னு சொல்லி செல்போனக் கொடுத்தாம்.
சுப்பு வாத்தியாரு வாங்கிக் காதுல வெச்சிட்டு,
"ன்னா மாமா செளரியமா இருக்கீயளா? குடும்பத்துல எல்லாம் செளரியமா?"ன்னாரு.
"யார்ரு மாப்ள பேசுதீயளா? எல்லாம்
செளரியந்தாம்! வடவாதியிலேந்து முருகு மச்சானும், பெறவு பொண்ணு சுந்தரியும் பேசுனுச்சு.
மாப்ள வந்து பேசுனதெ சொன்னாங்க. நாமளும் பயெ பாலாமணிகிட்டெ பேசிட்டேம். அவனுக்கும்
பொண்ண பாக்க சம்மதம்ன்ட்டாம்! ஒரு நல்ல நாளா பாத்தேம். அடுத்த வாரத்துல ஞாயித்துக்
கெழமெ நாளு பரவாயில்ல. அன்னிக்கு வந்துப் பாத்துப்புடலாமா? தோது எப்பிடி?"ன்னுச்சு
ராசாமணி தாத்தா.
"சாதவம் பாக்குற நீஞ்ஞ சொன்னா செரிதாங்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அதுக்கில்ல மாப்ள! ஒஞ்ஞளுக்கும்
தோது பட்டு வாரணும்லா! அதுக்காகக் கேட்டேம்!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
"நமக்கென்ன மாமா தோது? பெரியவங்க
நீஞ்ஞ சொல்றதுதாங் தோது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"இருந்தாலும் ஒஞ்ஞளுக்கும் ஒரு கருத்து
இருக்குமில்லா?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
"அடுத்த வாரமா..."ன்னு சொல்லிக்கிட்டெ
காலண்டர்ர போயிப் பாத்தவரு, ஞாயித்துக் கெழமயெ விட பொதன் கெழம நாளு இன்னும் நல்லா
இருக்குல்லா மாமா!"அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு.
"செரிதாங் மாப்ளே! நாமளும் அதெ பாத்தேம்!
ஆன்னா பாருங்க பயலுக்கு ஞாயித்துக் கெழமென்னு லீவு போட வேண்டியதில்லா. லீவு நாள்லயே
லீவு போடாம வந்துட்டுப் போயிடுவாம். அதெ கணக்குப் பண்ணிச் சொன்னேம்!"ன்னுச்சு
ராசாமணி தாத்தா. பெறவு எதுக்கு ஒரு நாள சொல்லிப்புட்டு, அதெ நாம்ம ஒத்துக்கிட்ட பிற்பாடும்
நம்மள ஒரு நாளா சொல்லச் சொல்றாரு பாக்குக்கோட்டையாருன்னு சுப்பு வாத்தியாருக்கு
கொஞ்சம் எரிச்சலா வந்துச்சு. இருந்தாலும் அதெ காட்டிக்கிடாம, "அதுக்குதாங் மாமா!
பெரியவங்க சொன்னா செரியா இருக்கும்ன்னு நாம்ம மிங்கூட்டியே சொன்னது!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"இருக்கட்டும் மாப்ளே! இருந்தாலும்
ரண்டுப் பக்கமும் கலந்துக்கிடணும் பாருங்க. மித்தபடி வூட்டுல எல்லாதுக்கும் சம்மதம்தானே!
வூட்டுல எல்லாம் ந்நல்லா கலந்துக்கிட்டீங்களே?"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
"வெங்குவுக்குத்தாங் இதுல ரொம்ப
இஷ்டம். போட்டு நச்சரிச்சுட்டுச்சு. அதுக்கு ஒத்துக்கிட்டா வூட்டுல எல்லாத்துக்கும்
ஒத்துக்கிட்டெ மாதிரிதாங்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"இருக்கட்டும்! இருக்கட்டும்! பொண்டுக
அப்பிடித்தாங் இருக்கும்! அதுக திருப்திதான நம்மளோட திருப்தி! பெறவென்ன மாப்ளே?"ன்னுச்சு
ராசாமணி தாத்தா.
"பெரியவங்க நீஞ்ஞத்தாம் சொல்லோணும்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"அப்புறம் மாப்ள! பொண்ணு பாக்க வர்றேங்றதுக்காக
ரொம்ப சிலவெ பண்ணிச் செரமப்பட்டுக்க வாணாம். சிம்ப்ளா காப்பி, காரம் போதும். ரொம்ப
மெனக்கெடு வாணாம். நாஞ்ஞ வந்தா பாத்துட்டுக் கெளம்பிடுவேம்! மாப்புள்ளைக்கு ரொம்ப
சிலவெ இழுத்து விட்டுப்புடக் கூடாதுல்லா!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
"வர்றவங்களுக்கு மருவாதி பண்ணணும்
இல்லியா மாமா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதாங் சொல்றேம்! போட்டு ரொம்ப
இழுத்துக்கிட வாணாம்ன்னு!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
"மாமா சொல்றாப்புலயே செஞ்சிப்புடுவேம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"பெறவென்ன மாப்ள! ஞாயித்துக் கெழமெ
நல்ல நேரத்துக்குள்ள 10 மணிக்கு மேல வந்து பதினொண்ணரைக்குள்ள வந்துட்டுத் திரும்பிடுறோம்
பொண்ண பாத்துட்டு! வெறொண்ணும் சேதி இல்லியே? வெச்சிடட்டுமா?"ன்னுச்சு ராசாமணி
தாத்தா.
"நல்லதுங் மாமா! வெச்சிடுங்க!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு. சுப்பு வாத்தியாரு கூடத்துக்கு அந்தாண்ட இருக்குற சமையல் கட்டெ
தாண்டி இருக்குற ரூமுல படுத்திருந்த வெங்குவையும், செய்யுவையும் எழுப்பி வுட்டுச் சேதியச்
சொன்னாரு. வெங்குவுக்கு ரொம்ப நெறைவா இருந்துச்சு. "நாம்ம கும்புட்ட ஆண்டவேம்
கண்ணத் தொறந்துட்டாம்! எல்லாம் உஞ்சினி அய்யனார்ரே ஒம் தொணைதாம்!"ன்னுச்சு வெங்கு.
"இனுமே யத்தெ நிம்மதியா உண்பாங்க,
ஒறங்குவாங்க!"ன்னுச்சு ஆயி.
"ன்னாம்மா இப்பிடி யல்லாம் திடீர்
திடீர்ன்னு?"ன்னா செய்யு.
"ன்னாடி திடீர் திடீர்ன்னு? வெகு
நாளா பேசிட்டு இருந்ததுதானடி! பேயாம இரு, பெரியவங்க சொல்றதெ கேட்டுக்கிட்டு!"ன்னுச்சு
வெங்கு.
"இனுமே நம்மக் குடும்பத்துக்கு ஒண்ணும்
கவலெ யில்ல! யாருக்கும் ஒடம்பு முடியலன்னாலும் ஓசியிலயே டாக்கடர்கிட்ட பாத்துக்கிடலாம்!"ன்னா
ஆயி. எல்லாருக்கும் சிரிப்பாணியப் போச்சு.
எல்லாரும் சிரிக்க ஒருத்தருக்கொருத்தரு
செய்யுவ கிண்டல் பண்ணிக்கிட்டு, ராத்திரி நெடுநேரம் இதெப் பத்தியே சிரிப்பும் கும்மாளமா
பேசிட்டு இருந்தாங்க. சுப்பு வாத்தியார்ரு ஒருத்தரு மட்டும் இதுல கலந்துக்கிடாம கூடத்துக்கு
வந்து பாயில படுத்தவரு, தூங்கவும் முடியாம, முழிச்சிட்டு இருக்கவும் முடியாம யோசிச்சுகிட்டு
இருந்தாரு.
*****
No comments:
Post a Comment