5 Jul 2020

வளையம் மூணு!

செய்யு - 497

            சத்தம் இல்லாம கொண்டாட்டம் கெடையாது. ரண்டுமே உசுரும் ஒடம்பும் மாதிரி. கொண்டாடங்ற ஒடம்புக்கு சத்தங்ற உசுரு தேவயா இருக்கு. எழுந்து ஆடுறோமோ இல்லியோ சத்தம் தேவைபட்டுகிட்டெ இருக்கு. கலியாணம் ஆரம்பிச்சு சாவு வரைக்கும் சத்தம் இருக்கு. வாசிக்கிற கருவிகளோ, வாத்திய முறைகளோத்தாம் வித்தியாசமா இருக்கு. மத்தபடி சத்தங்றது பொது. சத்தம் இருந்தா போதும் மனுஷன் தனிமையில இருக்க சம்மதிப்பாம். சத்தம் இல்லாம இருக்குறதுதாங் உண்மையான தனிமை. அப்பிடி ஒரு தனிமை மனுஷனுக்குப் பிடிக்காது. மனுஷன் கல்யாணம், சாவு மாதிரியான கொண்டாட்ட விரும்புறதுக்கு அது ஒரு காரணம். அங்க நெறைஞ்சிருக்க சத்தம் அவனோட தனிமைய ஒடைக்குது. நடக்குற கூத்துக அவனுக்குத் தனிமையில இல்லங்றதெ சொல்லுது. சொந்தத்துக்காகவும் பந்தத்துககாவும் மட்டும் மனுஷன் விஷேசங்கள்ல கலந்துக்கிறது இல்ல. இது மாதிரியான காரணங்களுக்காதத்தாம். சத்தத்தெ உண்டு பண்ணுற நவீனமான கருவிங்க வந்த பெற்பாடு விஷேசங்கள்ல சத்தத்துக்குப் பஞ்சம் இருக்குறதில்ல. அந்த எந்திரங்களுக்குக் களைப்போ, சோர்வோ தெரியறதில்ல. மின்சாரத்தெ உறிஞ்சிக்கிட்டு குடிபோதையில எந்நேரத்துக்கும் ஆடிப் பாடுற மனுஷனப் போல சத்தத்தெ போட்டுகிட்டே இருக்கு.
            ராத்திரி முழுக்க மண்டபத்துல "ஏ லலலே ஏ லலலே!          "ன்னு ஒரே சத்தம். மண்டபம் இசையால நெறைஞ்சிருக்கணும்னு பாலாமணியோட ஏற்பாடு. கொஞ்ச நேரம் கேக்குறதுக்கு அது மனசுக்கு இதமாத்தாம் இருந்துச்சு. எவ்வளவு நேரம் அதையே கேக்க முடியும். திரும்ப "ஏ லலலே ஏ லலலே!"ன்னா, அய்யோ போதும்டா சாமின்னு ஆயிடுச்சு. ஒரு கட்டத்துக்கு மேல அந்த இசைக்கு மனசு இசைய மாட்டேனுச்சு. வேற எதாச்சிம் பாட்டையாப் போட்டுத் தொலைங்கடா பன்னாடைகளான்னு வந்திருந்த சனங்க மொகத்துல அடிச்சாப்புல கேட்டுப்புட்டுங்க. எல்லாம் பாலாமணியோட ஏற்பாடுங்றதால எதெயும் மாத்த முடியாதுன்னு பதிலு வந்துட்டு. பாலாமணி இந்தக் கலியாணத்த பாத்து பாத்துச் செதுக்கி செதுக்கிச் செய்யுறதா பேசிக்கிட்டாங்க. அதுக்குப் பெறவு யாரும் எதையும் சொல்ல. கொஞ்ச நேரங் கழிச்சு அந்தச் சத்தம் பழகிப் போனாப்புல ஆயிடுச்சு. யாரோட காதுக்கும் அப்பிடி ஒரு சத்தம் கேட்டப்பயும் கேட்காதது போல காதே மறத்துப் போச்சு. காதுக்கு மரத்துப் போனாலும் செத்தப் பாம்ப அடிக்குறாப்புல ராத்திரி பன்னெண்டு மணி வரைக்கும் அந்தச் சத்தத்துக்குக் கொஞ்சம் கூட இடைவெளி கொடுக்காம மண்டபத்தைக் கொலைகுத்து குத்தித்தாம் அந்தச் சத்தம் நின்னுச்சு.
            அந்தச் சத்தம் நின்ன பிற்பாடுதாம் சனங்களுக்குத் தூக்கம் வர்றாப்புல தோணுச்சு. அவ்வளவு சத்தத்துக்கு மத்திலயும் ஒவ்வொண்ணும் தன்னோட சொந்தக் கதெ சோகக் கதெயப் பேசத் தவறல. சத்தம் பாட்டுக்குச் சத்தம், பேச்சுப் பாட்டுக்குப் பேச்சு. எல்லாம் ஒரு வழியா ஓஞ்ச பெற்பாடு, ஒவ்வொண்ணும் கெடைச்ச இடத்துல படுத்துகிட்டா, ங்கொய்ஙற அடுத்த சத்தத்தோட கொசுக்க ஒவ்வொண்ணும் கெடைச்ச எடத்துல எல்லாம் கடிச்சித் தூங்க வுடாம பண்ணுச்சுங்க. இது மாதிரியான கல்யாண மண்பத்துல தூங்குறவேம் ஒண்ணு மகாஞானியா இருக்கணும், இல்லன்னா மாட்டுச் சாணியா இருக்கணும். இந்த ரண்டுமா இல்லாதவேம் தூங்குறாப்புல விடிய விடிய கண்ண மூடிட்டுக் கெடந்து கலியாணம் முடிஞ்ச கையோட ஓடியாந்து வூட்டுல படுத்துத் தூங்குனாத்தாம் உண்டு. அதிகாலை நேரமா நாலு மணி வாக்குலயோ, அஞ்சு மணி வாக்குலயோ கொஞ்சம் அசந்துப் போயி தூக்கம் பிடிச்சா, கலியாணத்துக்குத் தயாராவணும்ன்னு எழுப்பி வுட்டுப்புட்டாங்க.
            குளிச்சி முடிச்சு காலைச் சாப்பாட்ட முடிச்சி தயாரான எட்டு மணி வாக்குல கலியாணத்தப் பண்ணி வைக்குற வாத்தியாரு சடங்குகள செய்ய ஆரம்பிச்சிருந்தாரு. அதுல பல நடைமுறைக, மந்திரங்க ஒண்ணும் புரியாது. புரியுதோ புரியலையோ நாகவல்லி முகூர்த்தம் முடியற வரைக்கும் ரண்டு மணி நேரத்துக்கு மேல ஒண்ணும் பண்ண முடியாது. அதெயெல்லாம் கேட்டு, அதெயெல்லாம் செஞ்சாத்தாம் கலியாணம் ஆனதா அர்த்தம். வாத்தியார்ன்னாவே அப்பிடித்தாம் கையக் கட்டிட்டு உக்காந்துப்புடணும். லாலு மாமாவுக்கு அந்த ஆஷ்டார அனுஷ்டானுங்களுக்கு அர்த்தம் புரியுதோ இல்லியோ அதையெல்லாம் கடைபிடிக்குறாப்புல காட்டணுங்றதுல குருட்டாம்போக்கா நிக்குற ஆளு.
            பொண்ணுக்கும் மாப்புள்ளைக்கும் மஞ்ச தண்ணியில நனைச்சு காயப்போட்டு வெச்சிருக்குற மஞ்ச வேட்டியும், மஞ்ச சேலையும் கட்டணுங்றதுல அதுல ஒண்ணு. பொண்ணு மாப்புள்ளையும் அதெத்தாம் கட்டிருந்துச்சுங்க. தாலி கட்டுற வரைக்கும் அதுதாங். அதால நாகவல்லி முகூர்த்ததுக்குப் பெறவு பட்டு வேட்டியும், பட்டுப் போடவையும் கட்டிருந்துச்சுங்க பொண்ணும் மாப்புள்ளையும். ஒம்போது மணிக்கு மேல தாலி கட்டி முடிஞ்சது. பதினொண்ணரைக்கு மேல நாகவல்லி முகூர்த்தம் முடிஞ்சது. மத்தியானச் சாப்பாட்ட மண்டபத்துல போட ஆரம்பிச்சிருந்தாங்க.  சனங்க ஒவ்வொண்ணும் சாப்பாட்ட முடிச்சுக் கெளம்ப ஆரம்பிச்சதுங்க.
            ஊரோட ஒத்துப் போயி கெளம்பிடுறதுதாங் பல வெசயத்துல நல்லதுங்றதால, சுப்பு வாத்தியாரும், "ன்னா கெளம்புவமா?"ன்னாரு வெங்குகிட்டெ.
            "சின்னம்மா, பாலாமணி எல்லாத்தையும் பார்த்து ஒரு வார்த்தெ சொல்லிட்டுக் கெளம்பிடலாம்!"ன்னுச்சு வெங்கு.
            "கல்யாணச் சோலியில இருப்பாவோ! நாம்ம போயி சொலியக் கொடுக்குறாப்புல ஆயிடக் கூடாது. யாராச்சும் ஒருத்தர்ரப் பாத்துட்டு சொல்லிட்டுக் கெளம்பிட்டா போதும். நல்ல புள்ளைக்கு அழகு சொல்லாம கொள்ளாம கெளம்புறதுதாம்பாங்க. வந்தது போனது சொவடு தெரியக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அவரோட கண்ணுக்கு ராசாமணி தாத்தா தெரிய, நேரா போனவரு, "அப்பறங் மாமா கெளம்புறேம். கலியாணச் சாப்பாடுல்லாம் ஏக பிரம்மாதம். கலியாணத் தேவ நல்ல வெதமா முடிஞ்சதுல ரொம்ப சந்தோஷம். ஒரு நாளு சாவகாசமா உக்காந்துப் பேசுவேம்!"ன்னாரு.
            "ரொம்ப சந்தோஷம் மாப்புள. குடும்பத்தோடு வந்து ஜமாய்ச்சுப்புட்டீங்க!"ன்னு சொல்லி அனுப்பி வெச்சுது ராசாமணி தாத்தா. அதுக்கு அடுத்தடுத்து இப்படிச் சொல்லிட்டு கெளம்புன சொந்தக்கார சனங்க ஒவ்வொண்ணையும் சொல்லி வழியனுப்பி வைக்க வேண்டியதா இருந்துச்சு. ராசாமணி தாத்தா வாயில பீடி நாத்தம் கொடல புடுங்றாப்புல வந்துச்சு. அவ்வளவு அலமலப்புக்கு மத்திலயும் அத்து எங்ஙனப் போயி அந்தக் கருமத்தெ பிடிச்சுத் தொலைஞ்சதோ தெரியல. அந்த நாத்தத்தோட அத்து பேசுறதெ கேக்குறப்பவோ விழுந்தடிச்சு வூட்டுலப் போயி விழணும்ன்னு தோணியிருக்கும் சொல்லிட்டுப் போறவங்களுக்கு. சொல்லாம கொள்ளாம கெளம்புனவங்க புத்திசாலிங்கத்தாம். சுப்பு வாத்தியாருக்கு அந்த நாத்தம் பிடிக்கலன்னாலும் சொல்லிட்டுக் கெளம்புனதுல ஒரு திருப்தி இருக்கு. சொல்லாம கெளம்பியிருந்தா இன்னும் கூட திரும்பதியா இருந்திருக்கும், அது வேற.
            குடும்பத்து மொத்தத்தையும் அழைச்சிட்டுக் கெளம்ப ஆயத்தமானாரு சுப்பு வாத்தியாரு. அந்த நேரமா பாத்து தேன்காடு சித்தி ஓடியாந்துச்சு. "என்னத்தாம் கெளம்பியாச்சா? நாமளும் வாரணும்னு நெனைச்சிட்டு இருந்தேம்! பொம்பளப் புள்ள யில்லாத கொறை நமக்கு. அவ்வே செய்யுவும் இப்போ மின்ன மாதிரிக்கு வாரதில்ல. பாக்கணும் பாக்கணும்னு நெனைப்பு. கலியாணத்துல பாத்த பெற்பாடுதாம் மனசுக்குக் கொஞ்சம் தேவலாம். ஒரு ரண்டு நாளைக்கு அழைச்சிட்டுப் போயி வெச்சிட்டுக் கொண்டாந்து வுடறேனே!"ன்னுச்சு.
            "கலியாணத்துக்கு வந்து நல்ல வெதமா வூடு திரும்பிடுறேம். ஒரு ரண்டு வாரம் கழிச்சாந்து வேணும்ன்னா கொண்டாந்து வுடுறேனே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இப்பிடித்தாம் சொல்லுவீங்க. கொண்டாந்து விட மாட்டீயே! செரி நமக்கும் எஞ்ஞ வந்துப் போவ நேரமிருக்கு? நாமளாவது அப்பிடியே ஒஞ்ஞ கூட வந்து தங்கிட்டுப் பாத்துட்டுப் பேசிட்டு மறுநாளாச்சும் கெளம்புறேம்!"ன்னுச்சு‍ தேன்காடு சித்தி.
            "அவ்வேம் பெரியவந்தாம்டி வந்திருக்காம், சின்னவேம் ஊர்ல இருக்குறாம் போலருக்கே. நேத்திக்குக் கெளம்பி வந்த நீயி. அவ்வேம் சாப்பாட்டுக்கு என்னத்தெ பண்ணுவானோ? நீயி இப்பிடிக் கூட வார்றீயேங்றீயேடி?"ன்னுச்சு வெங்கு.
            "எவ்வேம் இப்போ வூட்டுல சாப்புடுறாம்? வேலைக்குப் போறவனுவோ அஞ்ஞஞ்ஞ கடையில சாப்புட்டுப்புட்டு வந்துடுறதுதாம். ராச்சாப்பாடோ, காலச் சாப்பாடோ ஏத்தோ ஒரு வேள சாப்பாடுத்தாம் நடக்குது வூட்டுல. இந்த ரண்டு நாளு பாத்துக்கிட்டவேம் ஒரு நாளு பாத்துக்கிட மாட்டானா? அவ்வேம் பெரியவெம் இப்பிடியே சென்னைப் பட்டணத்துக்குக் கெளம்புறாம்னு நிக்காம். நாமளும் இப்ப இத்து மாதிரிக்கு வந்ததாத்தாம். பெறவு கெளம்புணும்னு நெனைச்சாலும் கெளம்ப முடியாது. எதாச்சிம் சோலி வந்துப்புடும்!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            தேன்காடு சித்தி இப்பிடிச் சொன்னதும், "நானும் கூட வந்து யக்காவ ஒங் கூட பாத்துட்டு சென்னைப் பட்டணம் கெளம்புறேம்மா! நாம்ம ஒண்ணும் இந்தக் கலியாணத்துக்காக வாரல. வந்தா செய்யு யக்காவப் பாக்கலாம்னுத்தாம் வந்தேம். போன் பண்ணிக் கேட்டேம். யக்காவும் கலியாணத்துக்கு வர்றதா சொன்னுச்சு. சரித்தாம்ன்னு கெளம்பி வந்தேம்!"ன்னாம் பக்கத்துல வந்து நின்ன தேன்காடு சித்தியோட மூத்த மவ்வேன் வேலுமணி. அவ்வேம் பாலிடெக்னிக்க முடிச்சிட்டு சென்னைப் பட்டணத்துல ஒரு கம்பெனியில வேலப் பாத்துட்டு இருந்தாம். கலியாணங்றதுக்காக நேரா சென்னைப் பட்டணத்துலேந்து பாக்குக்கோட்டைக்கு வந்தவம் கூட வர்றதா நின்னாம்.
            "அதாங் இஞ்ஞ இருக்குல்லடா. பாத்துட்டுப் பேசிட்டுக் கெளம்புடா. போயி வேலச் சோலியப் பாருடா!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "அதாங் யக்காவ இஞ்ஞ நீயும் பாத்துட்டல்லே, பேசிட்டல்லே. நீயும் வூட்டுக்குக் கெளம்பியாந்து வேலச் சோலியப் பாரு!"ன்னாம் வேலுமணி.
            "எலே நீயி இந்தக் கலியாணத்துக்கு வந்திருக்கவே வேண்டியதெ யில்ல. அநாவசியமா வந்து அநாவசியமா திரும்புறே! ரண்டு நாளு லீவெ போட்டது பத்தாதுன்ன இப்போ மூணாவது ஒரு நாளா?"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "வந்தது வந்தேம். யக்காவ மட்டுமா பாத்தேம்? ஒன்னயும்தாம் பாத்தேம்!"ன்னாம் வேலுமணி.
            "செரி வந்துத் தொல! எலெ யம்பீ கருத்தா இருந்து சம்பாதிக்கிறதுல குறியா இருக்கணும்டா! அப்பத்தாம் நாளைக்கி பின்னக்கி ஒருத்தெம் பொண்ண கொடுப்பாம் பாத்துக்கோ!"ன்னுச்சு தேன்காடு சித்தி மவனெ பாத்து.
            "அதல்லாம் யக்கா நமக்கு ஒரு பொண்ணப் பாத்து கலியாணத்தப் பண்ணி வைக்கும்!"ன்னாம் வேலுமணி சிரிச்சிக்கிட்டெ.
            "அதுக்கே ஒரு கலியாணத்தப் பண்ணணும்னு நின்னா, இவ்வேம் ஒருத்தம்?"ன்னுச்சு தேன்காடு சித்தி.

            "யக்காவுக்கு இருக்குற அறிவுக்கும் அழகுக்கும் தானா வந்து கட்டிட்டுப் போவானுங்க! நீந்தாம் பெரிசா மாப்புள்ளயப் பாத்து கலியாணத்தப் பண்ணி வைக்கப் போறீயாக்கும்?"ன்னாம் வேலுமணி.
            "பாத்தியா யக்கா இவ்வேம் பேசுற பேச்சு? ஒரு ஆம்பள புள்ளன்னா, ஒரு பொம்பள புள்ள இருக்கணும். அதாங் குடும்பத்துக்கு அழகு. நமக்கு ரண்டுமல்லா ஆம்பளப் புள்ளயா வந்துப் பொறந்திருக்கு. ஒமக்குத்தாம் யக்கா சரியா இருக்கு! மவனுக்குப் பொறந்ததும் பேத்தியால்லா இருக்கு. பொம்பள புள்ள இருந்ததாத்தாம் யக்கா வூடு கலகலன்னு அழகா இருக்கும். இவனுக இருக்கானுவோளே சண்டிப்பயலுவோ எந்நேரத்துக்கும் அடாவடி பண்ணிட்டுக் கெடக்கானுவோ! சொன்னதெ கேக்குறானுவோளா? அவனுங்க போறப் போக்குதாம். நாமளும் ஒண்ணுஞ் சொல்ல முடியாம கேட்டுட்டு கேடக்க வேண்டிதா இருக்கு. இத்தே ஒரு பொம்பளப் புள்ளன்னா நாம்ம சொல்றதெ ஆச ஆசயா கேட்டுக்கும். இவுனுங்க மாதிரியா? இவனுகளயே பார்ரேம்! அண்ணம் தம்பின்னு ஒருத்தருக்கொருத்தம் பாசமா இருக்க மாட்டேங்றானுவோ. யக்கா யக்கான்னு ஒம் பொண்ணு மேலத்தாம் பாசமா இருக்கானுவோ! அதாங் யக்கா பொம்பள புள்ளங்றது. ஒரு புள்ளன்னாலும் பொம்பள புள்ள இருந்தாத்தாம் குடும்பமே அழகா இருக்கும். இந்தத் தடிமாட்டுப் பயலுவோளால குடும்பத்தோட அழகே போயிடுது. எம்மட மனுஷன் ஒரு பொம்பளப் புள்ளையக் கொடுக்கமா போயிச் சேந்துட்டாரு! அத்தனெ பொம்பளப் புள்ளைகளா நாம்ம வளர்ந்த குடும்பத்துல, எங் குடும்பத்துல ஒரு பொம்பள புள்ள இல்லாம போச்சே!"ன்னுச்சு தேன்காடு சித்தி வெங்குவப் பாத்துக் கலங்குனாப்புல.
            "விகடு ஒரு பயெ கெடந்தாம். கலியாணத்த முடிச்சது தெரியாம முடிச்சிட்டேம். பொண்ணு வெச்சிக்கிட்டுக் கலியாணத்த எப்பிடிப் பண்ணுறதுன்னு தவிக்குற தவிப்பு நமக்குல்லா தெரியும்?"ன்னுச்சு வெங்கு.
            "அவளுக்கென்ன செப்புச் செலையாட்டம் இருக்கா. வேலுமணி சொன்னாப்புல மாப்புள அவனா வந்துக் கட்டிட்டுப் போவாம் யக்கா! நல்ல எடமா பாத்துக் கட்டிக் கொடுக்கணும்! நம்ம அப்பங்காரரு ஆறு பொண்ணுகள வெச்சுக் கட்டிக் கொடுக்கலையா?"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "ஆம்மா அவரு எங்க கட்டிக் கொடுத்தாரு? இதெயல்லாம் பாத்துச் செஞ்சு கொடுக்கன்னே அவருக்கு ஆளுங்க வந்து சேந்தாங்க, இருந்தாங்க. நமக்கு யாரு இருக்கா சொல்லு?"ன்னுச்சு வெங்கு.
            "ஏம்க்கா நாம்ம இல்லியா? அவ்வே செய்யுவக் கலியாணத்தப் பண்ணிக் கட்டிக் கொடுக்குறது நம்ம பொறுப்பு!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "ஏம்டி நீயே வூட்டுக்காரரு யில்லாம செருமப்பட்டுட்டுக் கெடக்குறே! இப்பத்தாம் மவ்வேம் தலையெடுத்து இருக்காம்! இதுல எஞ் சொமையில வேற பங்குப் போட்டுக்கிட்டு நிக்கப் போறீயா?"ன்னுச்சு வெங்கு.
            "ஏம்க்கா நமக்கு ஒரு பொண்ணு இருந்தா செய்ய மாட்டாமா? இவ்வே செய்யுதாம் நமக்கு மூத்தப் பொண்ணு!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            பேச்சு அது பாட்டுக்குச் சவட்டிக்கிட்டு வசவசன்னு நீண்டுகிட்டு போறதப் பாத்து, "இதுக்கு மேல பேசுறதா இருந்தா வூட்டுக்குப் போயிப் பேசுவோம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஆம்மா யத்தெ! கெளம்பலாம்னு நின்னு நின்னு கால்ல வலிக்குது! இதுல புள்ளய வேற தூக்கிட்ட்ட்டு எம்மாம் நேரமா நிக்குறது?"ன்னா ஆயி.
            "அட ராசாத்திய எங்கிட்டெ கொடு! நீயேம் கால் கடுக்க, கையி கடுக்க தூக்கிட்டு நிக்குறே?"ன்னு பவ்வுப் பாப்பவ வாங்கிக்கிட்டு தேன்காடு சித்தி.
            பஸ்ஸூ நிக்குற எடமா பாத்து சனங்க எல்லாமும் நடந்துச்சுங்க. வேலுமணி செய்யுவோட பேசிகிட்டே வந்தாம். "ஒனக்காகத்தாம் யக்கா இப்போ ஊருக்கே வர்றேம்! ஏத்தோ பேசணும்னு சொன்னீயே?"ன்னாம் செய்யுவப் பாத்து. "அவரசப்படாதடா வூட்டுல வந்துச் சொல்றேம்டா!"ன்னா செய்யு. அதுக்கு ‍மேல வேலுமணி பேசல. நிப்பாட்டிட்டாம்.
            பாக்குக்கோட்டையிலேந்து ஆர்குடிக்குப் போற பஸ்ஸூ எல்லாம் நெரம்பி வழியுற கூட்டத்தோட போனுச்சு. சில பஸ்கள்ளல மேல ஏறியும் சனங்க உக்காந்துப் போனுச்சுங்க. இப்பிடியே பாத்துப் பாத்து நாலைங்சு பஸ்ஸ வுட்ட பிற்பாடு வேற வழியில்லாம, அடுத்த வந்த வந்து பஸ்ஸூல ஏறுனா கூட்டம்ன்னா கூட்டம் அதுலயும் தாங்கல. முகூர்த்த நாள்கள்ல பஸ்ஸூல போயி வர்றது மாசமா இருக்குற புள்ளதாச்சிப் பொண்ணு வயித்துச் சொமையோட எறங்கிப் போயி ஏறி வர்றததப் போலத்தாம். ஏன்னா பஸ்ஸே அந்த நாள்ல மாசமான பொண்ணப் போல கூட்டத்தால நெரம்பித்தாம் போவும். பஸ் ஸ்டாண்டுக்குப் போயி கூட்டத்தெ பிரசவம் பண்ணாத்தாம் பஸ்ஸூக்கே போன உசுரு திரும்ப வரும். அப்பிடி மூச்சு வுடக் கூட எடம் இல்லாத அளவுக்குக் கூட்டமா இருக்கும். ஒரு வழியா இப்படியா பாக்குக்கோட்டையிலேந்து கெளம்பி ஆர்குடி வந்து வடவாதி பஸ்ஸப் பிடிச்சு, வடவாதியிலேந்து ஆட்டோவப் பிடிச்சி வூடு வந்து சேர்ந்தா அப்பாடான்ன இருந்துச்சு எல்லாத்துக்கும். வந்து பேசலாம்ன்னு உக்காந்து அத்து முடியாம அசர ஆரம்பிச்சதுங்க. அதுல அசராம தூக்கம் வாராத ரண்டு ஆளுன்னா வேலுமணியும் செய்யுவுந்தாம். ரண்டு பேரும் கொல்லைப் பக்கமா போயி பேச ஆரம்பிச்சதுங்க. மித்த எல்லாமும் தூக்கத்தப் போட்டுச்சுங்க.   
            கொல்லைப் பக்கமா போன செய்யுவும் வேலுமணியும் பேச ஆரம்பிச்சதுங்க.
            "கலியாணத்துல பாத்தியேடா சரசு ஆத்தாவோட பையேம்!"ன்னுச்சு செய்யு.
            "யாரு அந்த டாக்கடர்ரா? பாலாமணியோ தோலாமணியோன்னு? அகில ஒலக ஆயுர்வேதத் திலகம்தானே?"ன்னாம் வேலுமணி.
            "அந்த மாமாவத்தாம்டா கலியாணம் செஞ்சு வைக்கப் போறதா பேசிக்கிறாங்க!"ன்னா செய்யு.
            "அய்யே முடியெல்லாம் பாத்தியா? அங்கங்க நரைச்சிருக்கு. வயசு எப்பிடியும் நாப்பதுக்கு மேல இருக்கும்!"ன்னாம் வேலுமணி.
            "ன்னடாம்பீ இப்பிடிச் சொல்றே? தங்காச்சிகளுக்கு கலியாணத்தெ முடிச்சிட்டுத்தாம் கலியாணம் பண்ணிக்கிறதா சொன்னதால வயசு ஆயிடுச்சோ?"ன்னா செய்யு.
            "அவ்வேம்லாம் ஒனக்கு வாணாம்க்கா! நாம்ம சென்னைப் பட்டணத்துல ஒமக்கு ஒரு நல்ல மாப்புள்ளையா பாக்குறேம்! பாக்குறதுக்கு நம்ம பர்சனாலிட்டிக்கு இல்லாட்டியும், கொஞ்சம் கம்மியாவது இருக்கணுமில்லையா?"ன்னாம் வேலுமணி.
            "ஒதத்தாம்டா வாங்குவே!"ன்னா செய்யு.
            "யப்போ பிடிச்சிருக்கா?"ன்னாம் வேலுமணி.
            "அதுல்லாம் யப்பா யம்மா பண்ணுற முடிவுதாங்!"ன்னா செய்யு.
            "யேய் ஒனக்கும் பிடிச்சிருக்குதானே! ன்னா கொஞ்சம் கெழடுதாங். செரி ன்னா பண்ணுறது ஒந் தலையெழுத்து? மூஞ்செல்லாம் சதெ தொங்கிப் போயிக் கெடக்கு. கவனிச்சியா? அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ போ!"ன்னாம் வேலுமணி.
            "நெசமாத்தாம் சொல்லுதீயடா யம்பீ?"ன்னுச்சு செய்யு.
            "யிப்பிடி ஒரு அப்பாவியா இருந்தா நீயல்லாம் மாமன கட்டிக்கிட்டுச் சென்னைப் பட்டணத்துல குப்பைக் கொட்டப் போறீயோ? ஒந் தலையில ந்நல்லா மொளவாய வெச்சு அரைச்சிப்புடுவாம் பாத்துக்கோ மாமேம்!"ன்னாம் வேலுமணி.
            "நீயுந்தாம் சென்னைப் பட்டணத்துல இருக்கீல்ல. வந்துட்டுப் போனீன்னா தலையில அரைச்சு வெச்சுருக்குற ‍மொளவாய்ல இட்டிலிக்குத் தொட்டுக்க தொவையல அள்ளிட்டுப் போவலாம். ந்நல்லா காரமா இருக்கும்!"ன்னா செய்யு. அப்படியும் இப்படியுமா அங்க செய்யுவுக்கும் வேலுமணிக்கும் கேலியும் கிண்டலுமா பேச்சு வளந்து, அவுங்க இப்பிடிப் பேசிட்டு இருக்குறப்பவே இங்க தூங்கி முழிச்ச சனங்க எழும்பிப் பேச ஆரம்பிச்சதுஞ்க.
             வெங்குதாம் தேன்காடு சித்திக்கிட்டெ பேச ஆரம்பிச்சிது. "அவ்வேம் பாலாமணிய செய்யுவுக்குக் கட்டி வெச்சா தேவலாம்டி!"ன்னு.
            "அதுக்கென்னக்கா சாதகம் பொருந்துனா கட்டி வெச்சிப்புடலாம். யாரு நம்ம சின்னம்மதானே! சொன்னா மீறவா போவுது? அங்ஙன கலியாணத்துலேந்து கவனிச்சிட்டுத்தாம் இருக்கேம். இதையே சொல்லி அலமலந்துப் போறீயே யக்கா! அப்பிடி அலையுறாப்புல நாம்ம காட்டிக்கக் கூடாது யக்கா!"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "அதுக்கில்லடி யிப்போ அவ்வேம் டாக்கடர்ரா ஆயிட்டாம். மாட்டேம்ன்னு சொல்லிட்டாம்ன்னா?"ன்னுச்சு வெங்கு.
            "வேணும்ன்னா தஞ்சார்ல இருக்கே லாலு மாமாட்டெ சொல்லிப் பேசுவோம். லாலு மாமா பேச்ச மீறியா ஒண்ணு நடக்கப் போவுது? பாரு அந்தப் பொதுக்கப் பயலுக்கு எஞ்ஞெஞ்சயோ பொண்ணு தேடி கெடைக்கலன்ன ஒடனே சின்னம்மாட்டெ பேசி கட்டி வெச்சிப்புட்டுல்ல. அது மாதிரிக்கி பண்ணி வுட்டுப்புடும். நீயேம் கவலப்படுறே?"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "நடக்குமாடீ?"ன்னு கேட்ட வெங்குவோட கண்ணுல தண்ணியா ஊத்த ஆரம்பிச்சிடுச்சு.
            "ஏம்க்கா இப்போ அழுவுறே? நாம்ம இருக்குறப்ப நடக்காம வுட்டுப்புடுவேமா? ஒமக்குப் பிடிச்சிருந்தா சொல்லு. அவ்வேம்தாம் மாப்புள. முடிச்சிப்புடலாம். அவ்வே ஒமக்கு மட்டுந்தாம் பொண்ணா? நமக்கும் அவ்வதாம் பொண்ணு. அவ்வே எம் பொண்ணு. ஒமக்கென்ன அவ்வேம் பாலாமணியத்தான கட்டி வைக்கணும். நாம்ம தஞ்சாரூ போயி மாமாகிட்டெ பேசுறேம்! போதுமா? அடுத்தச் சேதியா பொண்ணு பாக்க வர்ற சேதித்தாம் ஒங் காதுல வுழுவும்!"ன்னுச்சு தேன்காடு சித்தி. வெங்கு ஒடனே தேன்காடு சித்தியக் கட்டிக்கிடுச்சு.
            "என்னக்கா இதுக்குப் போயி இப்பிடி மனசெ வுட்டுப்புட்டுப் பேசுறே? கலங்கிப் போயி நிக்குறே? சொந்தத்துல ஒண்ணுக்கொண்ணு வுட்டுப்புடுவாங்களா? ரண்டு அக்காக்காரிக, மூணு தங்காச்சிக்காரிக இருக்கேம் ஒனக்கு. அப்பிடில்லாம் வுட்டுப்புடுவோமா?"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            "நீஞ்ஞல்லாம் இருக்குற தெகிரியத்துலத்தாம்டி பொண்ணப் பெத்துட்டு கவலெ யில்லாம இருக்கேம்!"ன்னுச்சு வெங்கு.
            "புருஷங்காரரு வாத்தியார்ரா இருந்தவரு. இப்போ மவ்வேம் வாத்தியாரு. நீயே கலங்குனா எப்பூடி?"ன்னுச்சு தேன்காடு சித்தி.
            சங்கிலியோட மூணாவது வளையமா இப்பிடியா தேன்காடு சித்தி சேந்துச்சு. தேன்காடு சித்தி சொன்னாப்புல, அடுத்த வாரத்துல ஒரு நாளு மெனக்கெட்டு அத்து ரண்டாவது மவ்வேன் தனிக்கொடிய அழைச்சிட்டுப் போயி தஞ்சாவூர்ல இருந்த லாலு மாமாகிட்டெயும் பேசுனுச்சு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...