24 Jul 2020

தேக்குல சோக்கா பெரமாதம் பண்ணுற ஆளு!

செய்யு - 516

            சுப்பு வாத்தியாரு போன நேரம் சித்துவீரன் வேலைக்குப் போவல. கூடத்துல ஒரு பாய விரிச்சிப் போட்டுப் படுத்துக் கெடந்துச்சு. திண்ணையில அதோட டிவியெஸ்ஸூ எக்செல் கெடந்துச்சு. பட்டறையச் ஒரு சுத்து சுத்தி வூட்டுப் பக்கம் வந்தவரு அதெ கவனிச்ச பிற்பாடுதாங் வண்டிய நிப்பாட்டி உள்ளார நொழைஞ்சாரு சுப்பு வாத்தியாரு. அவரோட காலடிச் சத்தம்  கேட்டதுமே, பாயச் சுருட்டிக்கிட்டு எழுந்துடுச்சு சித்துவீரன். சுப்பு வாத்தியார்ரப் பாத்ததுமே, "வாஞ்ஞ வாஞ்ஞ என்னிக்கு வருவீயோன்னு எதிர்பாத்துட்டுக் கெடக்கேம்! நாமளும் ஒஞ்ஞள எதிர்பாக்காத நாளு கெடையாது!"ன்னுச்சு சித்துவீரன். ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலிய எடுத்துப் போட்டு உக்கார சொன்னுச்சு. கூடத்துல கெடந்த ஒரு சோபா முழுக்க துணிமணிகளா கெடந்துச்சு.
            "தூக்கத்தெ கெடுத்துப்புட்டேன்னா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு அந்த நாற்காலியில உக்காந்தபடியே.
             "ஆம்மா தூக்கத்தெ கெடுத்துப்புட்டீயே? வேலைக்குப் போவாம இப்பிடிப் படுத்துக் கெடந்தா என்னத்தெ பண்ணுறது சொல்லுங்க?"ன்னு சொல்லிக்கிட்டெ சமையல்கட்டுலேந்து சத்தங் கேட்டு உள்ளார வந்துச்சு சுந்தரி.
            "ச்சும்மா கெடடி! வேல இருந்தா போவாமலா இருக்கேம்! நாம்ம ன்னா கவர்மெண்டு வேலயப் பாக்குறேம்? வேல வந்தா ஒண்ணா வாரும். இல்லன்னா இப்பிடித்தாம் ஒண்ணு ரண்டு நாளைக்கு வேல யில்லாம‍ கெடக்கும். அப்பிடி வேல யில்லாத நாள்ல ரெஸ்ட்டா கெடந்துட்டா வேல ஒண்ணா வந்தாலும் பாத்துக்கிட்டுக் கெடக்கலாம்! அதுக்கு இப்போ என்னாங்றே?"ன்னுச்சு சித்துவீரன் சுந்தரியப் பாத்துக்கிட்டு.
            "அப்பிடி இருந்தாத்தாம் சந்தோஷப்படலாமே! வேலைக்குப் போற நாளு கம்மியாவும், ரெஸ்ட்டு எடுக்குற நாளு அதிகமாவம்லா இருக்கு. அதெ நெனைச்சுல்லா சொல்றாப்புல இருக்கு! எங்கண்ணே ஒண்ணு இருக்குறதால சமாளிச்சிக்கிட்டு கெடக்குது. ல்லன்னா என்னத்தெ பண்ணுறது?"ன்னுச்சு சுந்தரி.
            "யம்பீ! வேலைக்குப் போவாம இருக்குறதுல நமக்கும் தோதா போச்சு. வூட்டுல இருக்கோ? பட்டறையில இருக்கோ? வேலையில எங்கனாச்சும் இருக்கோ?ங்ற யோஜனையிலயத்தாம் வந்தா, திண்ணையில யம்பீயோட வண்டியப் பாத்தப்பத்தாம் நமக்கு மனசு நெறைவாச்சு. எல்லாம் நல்லதுக்குதாங்! நல்ல வெசயம் பேச வர்றப்போ நல்ல வெதமாவே நடக்குது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            ‍அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல சித்துவீரன், "ஒரு நல்ல வெசயம் பேச வர்றப்பத்தாம் ஒண்ணு கெடக்க பேசுறது! சித்தெ பேயாம கெட! எப்பப் பாத்தாலும் எதாச்சும் பேசிட்டுக் கெடக்கறது!"ன்னுச்சு சுந்தரியப் பாத்து.
            சுப்பு வாத்தியாரு இந்த எடத்துலேந்து பேச ஆரம்பிச்சாரு. "நீஞ்ஞ வந்துப் பேசிட்டுப் போனீயே! பாருங்க நாம்ம கெளம்பலாம்ன்னு நெனைச்சிட்டு இருக்குறப்ப மறுநாளு வேற்குடி வாத்தியாரு போயிச் சேந்துட்டதா தகவல் வர்ருது. நம்மோட ஒண்ணுக்குள்ள ஒண்ணா தோஸ்த்தா பழகிட்டு இருந்தவரு. அவரோட சாவ்வ நம்மால தாங்க முடியல. ஒரு மாசம் மனசு செரியில்லாம படுத்த நாம்மத்தாம். நம்மள தேத்திக் கொண்டாறதுக்குள்ள காலம் தள்ளப் போயிடுச்சு. இப்பவும் வேற்குடி வாத்தியாரு கண்ணுக்குள்ள நிக்குறாப்புலத்தாங் இருக்கு. இப்பதாங் கொஞ்ச கொஞ்சமா வெளியில கெளம்பி வர்றேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதால ஒண்ணுமில்ல வுடுங்க. மச்சானுக்கு நல்ல எடமா பாத்துக் கலியாணத்தப் பண்ணணும்ன்னு நாம்மத்தாம் பிடிவாதமா இருந்து ஒஞ்ஞ பொண்ணத்தாம் கட்டணும்ன்னு சொல்லிட்டேம். சொந்தத்துல நமக்குத் தெரிஞ்ச வகையில பொண்ணு இருக்குறப்போ வேற எடுத்துல போயி தேவையில்லாம ஏம் பாத்துக்கிட்டுச் சொல்லுங்க?"ன்னுச்சு சித்துவீரன்.
            "யண்ணங் கொஞ்சம் முன்கோவக்கார ஆளு. அதுக்குக் கொஞ்சம் பதிவிசா பணிவா பொண்ணு இருந்ததாங் சரிபெட்டு வரும். முன்கோவம்ன்னா ஆளே தவுர பாசமா வெச்சிக்கிறதுல அதெ போல ஆளு கெடையா. யப்பாவப் பத்தித்தாங் ஒஞ்ஞளுக்குத் தெரியுமே. படிக்குற காலத்துலேந்தே குடும்பத்தையும் பாத்துக்கிட்டு, படிப்பையும் பாத்துக்கிட்டு அது பட்ட செருமம் ஒலகத்துல வேற யாரும் படக் கூடாது. டாக்கடர்ருக்குப் படிச்சக் காலத்துலயே சிலவு ஆயிடக் கூடாதுன்னு டீத்தண்ணியக் குடிச்சிட்டு சாப்புடாம கெடந்த ஆளு. இன்னிக்கு நல்ல வெதமா இருக்குன்னாலும் நல்ல வெதமா நல்ல எடமா பாத்துக் கலியாணத்தெ முடிக்க வேண்டியது எஞ்ஞ கடமெ இல்லியா?"ன்னுச்சு சுந்தரி.
            "நமக்குத் தெரியா கதையா அதெல்லாம்? கஷ்டப்பட்டு வளந்து வந்தவங்களுக்குத்தாங் குடும்பத்தோட கஷ்ட நஷ்டம் தெரியும். கஷ்டம்ன்னாலும் அத்து சொல்லித் தற்த பாடத்தெ மனுஷரால சொல்லித் தந்துட முடியாது. நாமளும் அப்பிடிக் கஷ்டப்பட்டு வந்து ஆளுதானே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அப்பிடிக் குடும்பத்தெ நெனைச்சி நெனைச்சி எஞ்ஞ கலியாணத்தெ முடிக்குறதுக்குள்ளார அதுக்கு வயசு கொஞ்சம் ஆயிப் போச்சு. அத்து ஒண்ணுதாம் கொறையா நெனைக்கலாமெ தவுர, வேற எந்தக் கொறையும் கெடையாது! அத்து நெனைச்சிருந்தா கை நெறைய சம்பாதிக்கிற வேல கெடைச்சப்பவே கலியாணத்தப் பாத்து முடிச்சிருக்கலாம். அவ்வே பிந்து படிப்பு, கலியாணம்ன்னே இவ்ளோ காலங் தள்ளிப்புடுச்சு!"ன்னுச்சு சுந்தரி.
            "நாமளும் வேல கெடைச்சி கலியாணம் ஆவுறப்போ வயசு கொஞ்சம் கடந்து ஆளுதானெ. அதெ பத்தியெல்லாம் நாம்ம ஒண்ணும் நெனைக்கல. எல்லாம் ஒரு வெதத்துல நல்லதுதாம்ன்னு நெனைக்கிறேம். அப்பத்தானே நம்மளோட நம்மளச் சாந்தவங்களும் நல்ல வெதமா இருக்க முடியுது! பெறவு ன்னா ஒஞ்ஞ தோதுல நீஞ்ஞ பாத்து முடிச்சி வுட வேண்யடிதுதாங்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சம்மதத்தெ தெரிவிக்குறாப்புல.
            "ன்னவ்வோ தெரியாத கதையெ தெரிஞ்சிக்கிறாப்புலல்லா பேசிட்டு இருக்கீயே? பொண்ணப் பாக்குறது, மாப்புள்ளயப் பாக்கறது, மூர்த்தோலைய எழுதுறது, கலியாணத்தெ முடிக்கிறதெல்லாம் ஒஞ்ஞ வேல. கலியாணத்துக்கு கட்டிலு, பீரோ, டைனிங் டேபிளு, டிரஸ்ஸிங் டேபிளுன்னு சாமாஞ் செட்டுகள செஞ்சி முடிக்கிறதெல்லாம் நம்ம வேல. மாப்புள்ள டாக்கடர்ங்றதால எல்லாத்தையும் தேக்குலத்தாம் செஞ்சாவணும். ஏப்ப சாப்பையான மரத்துலல்லாம் செய்யுறதில்ல. தேக்கு மரத்தெ வாங்குறதுலேந்து அறுக்குறதுலேந்து செஞ்சி முடிக்கிற வரைக்கும் அத்தனையும் நம்ம வேலைப்பாடுதாங். சின்ன டீப்பாயிச் செய்யுற வரைக்கும் எல்லாம் தேக்குதாங். நீஞ்ஞ காசியக் கொண்டாந்துக் கொடுத்துப்புடணும். நாம்ம வேலைய முடிச்சிப்புடணும். அதாங் இதுல வெசயம் பாத்துக்கிடுங்க!"ன்னுச்சு சித்துவீரன்.
            "ரொம்ப சந்தோஷம்! ரொம்ப சந்தோஷம்! நமக்கும் கலியாண வேலைல்ல ஒரு வேல கொறைஞ்சது. ஒஞ்ஞ மச்சானுக்கு ஒஞ்ஞளுக்கு பிடிச்சாப்புல நெறைவா பண்ணிக் கொடுத்துப்புடுவீயே! நாம்ம கெடந்து அல்லாடிட்டுக் கெடக்க வேண்டியதில்லா. செய்யுற சாமாஞ் செட்டுகப் பிடிச்சிருக்கோ? பிடிக்கலையோன்னு யோஜனெ பண்ணிட்டுக் கெடக்க வேண்டியதில்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சந்தோஷத்துல.
            "வந்து எம்மா நேரமாவுது? காப்பித் தண்ணியப் போடு! பண்டத்தெ கொண்டா!"ன்னுச்சு சித்துவீரன்.
            "கலியாண வெசயந்தானேன்னு பேசிட்டு நின்னுட்டேம். இந்தா இருங்க சித்தெ நேரத்துல வந்துப்புடுறேம்!"ன்னு உள்ளார போனுச்சு சுந்தரி.
            அதுக்கு மேல என்னத்தெ பேசுறதுன்னு சுப்பு வாத்தியாரு ப்ளாஸ்டிக் நாற்காலியில உக்காந்தது உக்காந்தபடியே இருந்தாரு. காப்பியும் பண்டமும் வர்ற வரைக்கும் ஒண்ணும் பேச்சு நடக்கல.
            காப்பித் தண்ணியையும், ஒரு தட்டுல மிக்சரையும் கொண்டாந்து கொடுத்ததும், சுப்பு வாத்தியாரு கொஞ்சம் மிக்சரை அள்ளி வாயில போட்டுக்கிட்டு, காப்பித் தண்ணிய கொஞ்சம் ஊத்திக்கிட்டாரு.
            "மச்சாங்காரோனோ கலியாணத்தப் பெரமாதம் பண்ணிப் புடணும்! ரொம்ப நாளா இதெ பத்தி வெத வெதமா யோஜனெ பண்ணிட்டுக் கெடக்குறேம்! இந்தாரு சுந்தரி! நீயிப் பாக்குக்கோட்டைக்குப் போன போட்டுச் சொல்லிப்புடு, இந்த மாதிரிக்கிச் சமாச்சாரம்ன்னு. அப்பிடியே போனு நம்பரையும் கொடுத்துப்புட்டீன்னா அவுங்க அஞ்ஞ கலந்துகிட்டு வெசயத்த சொல்லிப் புடுவாங்க பாரு!"ன்னுச்சு சித்துவீரன். 
            "செரி!"ன்னுச்சு சுந்தரி.
            "யப்பா சோசியம்லாம் பாக்கறதால நாளு கெழம பாத்துத்தாம் சொல்லும். நாம்ம பேசிடுறேம்! யப்பாவப் பேசச் சொல்றேம்!"ன்னுச்சு சுந்தரி.
            "நல்ல வெசயம். நல்ல பேச்சு. நல்ல நேரத்துல நாமளும் கெளம்புறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு காப்பியக் குடிச்ச முடிச்சதும்.
            "இருந்து சாப்புட்டுப் போங்களேம்!"ன்னுச்சு சித்துவீரன்.
            "அதுக்கென்ன கலியாணச் சாப்பாடாவே சாப்புட்டுப் புடுவேம்!"ன்னு சொல்லிப் பெரமாதமா சிரிச்சிக்கிட்டெ, "எல்லாத்துக்கும் கெளம்புறேம்!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புனாரு சுப்பு வாத்தியாரு. சுந்தரியும், சித்துவீரனும் வெளியில வரைக்கும் வந்து வழியனுப்புனுச்சுங்க. சுப்பு வாத்தியாரு வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஒலகநாதன் டீக்கடையத் தாண்டித் திரும்புனதுமே, தேக்குக் கட்டிலு, பீரோ, டைனிங் டேபிள், டிரஸ்ஸிங் டேபிள், டீப்பாய்ன்னு செய்ய எவ்வளவு ஆவும்ன்னு மனசுக்குள்ள கணக்கப் போட ஆரம்பிச்சாரு. எப்படியும் ஒண்ணரை லட்சத்துக்குக் கொறைச்சால செஞ்சிட முடியாதுன்னு அவருக்குள்ள அவரே சொல்லிக்கிட்டெ வண்டிய ஓட்டிட்டு இருந்தாரு. வண்டி முருகு மாமா கடையக் கடந்தப்போ முருகு மாமா வெத்து ஒடம்போட ஒரு விசிறிய வெச்சு விசிறிகிட்டு இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு லேசா வண்டிய நிறுத்துறாப்புல போறதுக்குக்குள்ளார, முருகு மாமா தலைய அசைச்சு, "சாயுங்காலமா கழிச்சி வாஞ்ஞ! பேசிட்டுப் போவலாம்!"ன்னுச்சு. சுப்பு வாத்தியாரு நிறுத்த வந்த வண்டிய இப்போ நிறுத்தாம, நேரா வூட்ட நோக்கி வுட ஆரம்பிச்சாரு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...