ஐயா! தூய தமிழில் பேசுகிறார்!
அரை குறை தமிழில் பேசுவதையேச் சிலாகிக்கிறார்கள்.
"சார்! சுத்த தமிள்ல பேசுறாப்புல!"ன்னு
கொண்டாடுகிறார்கள்.
அதில் சார் என்பது தமிழ் இல்லை. சுத்த
என்பதும் தமிழ் இல்லை.
ஐயா தூய தமிழில் பேசுகிறார் என்று சொல்ல
வேண்டும்.
தமிழ்நாட்டில் தோராயமாக அதாவது சுமாராகத்
தமிழ் பேசினால் அதுவே தூய தமிழ் ஆகி விடுவது வேடிக்கைதான். தமிழ்நாட்டில் தமிழில் பேசுவதை
ஆச்சரியமாகப் பார்ப்பது ஒரு வகை நகைமுரண்தான்.
இந்தத் தூய தமிழ் உந்துணர்ச்சி அதாவது
இன்ஸ்பிரேஷன் எங்களுக்கு எங்களது ஓவிய ஆசிரியர் மூலம் வந்தது. முறைப்படி இந்த உந்துணர்ச்சி
எங்களுக்கு தமிழாசிரியர்கள் மூலமாகத்தான் வந்திருக்க வேண்டும். அவர்களே ஆங்கிலம் கலந்த
தமிழில் பேசிக் கொண்டிருந்ததால் அவர்கள் மூலமாக எங்களுக்கு வராமல் போயிருந்திருக்கலாம்.
இந்தத் தூய தமிழ் உந்துணர்ச்சியைப் பாராட்டியவர்கள்
அநேகம். அதே நேரத்தில் இதைப் பார்த்து விட்டு மிதிவண்டியின் உதிரிப் பாகங்களுக்கு எல்லாம்
தூய தமிழ்ச் சொற்களைக் கேட்டவர்களும் இருக்கிறார்கள். அதை வைத்துக் கொண்டு தமிழ்
நாட்டில் தமிழில் பேச முடியாது என்று எங்களிடம் சத்தியம் வாங்கிச் சென்றவர்கள் எல்லாம்
இருக்கிறார்கள்.
தூய தமிழில் இருக்கும் அழகுணர்ச்சியையும்,
மகிழ்வுணர்ச்சியையும் குறைத்து மதிப்பிட்டு முடியாது. சான்றுக்கு பேருந்து, சிற்றுந்து
என்று சொல்வதில் இருக்கும் அழகை நீங்கள் பஸ், மினி பஸ் என்பதில் பெற்று விட முடியுமா
என்று தெரியவில்லை. அதெ போல விசையுந்து, மகிழ்வுந்து, சரக்குந்து என்று விரியும் அதன்
உந்தப்பட்ட சொல்லழகில் மயங்காமலும் இருக்க முடியாது.
எங்கள் ஓவிய ஆசிரியரை எதேச்சையாக ஒரு முறை
சந்திக்கும் வாய்ப்பு வந்தது. ஒரு தேநீர்க் கடையின் முன்பு நடந்த அந்தச் சந்திப்பில்,
"ஐயா! தேநீரா? குளம்பியா?"என்றேன் நான். அப்பிடிக் கேட்டதே அவருக்கு மிகுந்த
மகிழ்ச்சியை வரவழைத்து விட்டது. பக்கத்தில் நின்ற நண்பன் மன்னு அந்த மகிழ்ச்சியை அதிகப்படுத்தும்
நோக்கத்தில், "ஐயா! நம்ம விகடு ஒங்களப் போல எப்பயும் சுத்தத் தமிள்லத்தாம் பேசுறாப்புலய்யா!"ன்னான்.
"அடப் போப்பா! இந்தக் காலத்துல யாருப்பா
தமிழ்ல பேசுனா மதிக்கிறாங்க. பொழைக்கத் தெரியாதவன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்காங்க!"ன்னு
சொல்லி விட்டு அவர் பாட்டுக்குப் போய் கொண்டே இருந்தார்.
"ஒரு நல்ல மனிதரைத் தேநீரோ, குளம்பியோ
பருக விடாமல் செய்து விட்டாயே! உனக்கு மகிழ்ச்சிதானேடா மன்னு!" என்றேன் நான்.
"என்னடா இது மத்தவங்க ரசிக்குறாங்கன்னு
சொன்னா அதுக்குக் கூட பொசுக்குன்னு கோவப்பட்டுக்கிட்டுப் போனா நாம்ம என்னடா பண்ணுறது?"ன்னான்
மன்னு.
உண்மையில் மற்றவர்கள் ரசிக்க வேண்டும்,
சிலாகிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் தீவிர உந்துணர்ச்சியால் தூண்டப்பட்டுத் தமிழில்
பேசுபவர்கள் பேசுவதில்லை. அவர்களிடம் போய் தமிழில் பேசுவதைப் பெருமையோடு சொன்னால்
வேதனைப்பட்டுதான் போகிறார்கள் எங்கள் ஓவிய ஐயாவைப் போல.
நாமும் தமிழில் பேசக் கூடாது என்று நினைத்தெல்லாம்
ஆங்கிலம் கலந்து தமிழைப் பேசவில்லை. நமக்கு அப்பிடிப் பழகி விட்டது. அவர்கள் அப்பிடி
பழக்கிக் கொண்டு விட்டார்கள். நாமும் அப்பிடிப் பழக்கிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
பிள்ளைகளை ஆங்கில வழியில்தான் படிக்க வைப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலையும்
நமக்கு அதுக்கும் பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம். ஆனாலும் நாம் தமிழர்கள்தான்!
நான் என் குழந்தையைத் தமிழ் வழியில்தான்
படிக்க வைக்கிறேன். அவளும் ஆங்கிலம் கலந்துதான் பேசுகிறாள். பல நேரங்களில் ஆங்கிலச்
சொற்களைத் தமிழ்ச் சொற்கள் என்று சொல்லி நம்பவும் வைத்து விடுகிறாள். சான்றுக்கு
ஆப்பிள், ஆரஞ்சு என்று சொல்லி இதை தமிழிலும் இப்பிடித்தாம் சொல்ல வேண்டும், ஆங்கிலத்திலும்
இப்பிடித்தாம் சொல்ல வேண்டும் என்பாள். இப்படி இரு மொழிக்கும் பொதுவாக இருக்கும்
சொற்களை நிறையக் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
தமிழ்த்தாய் அவளுக்கு தமிழ்ப்பால் ஊட்டுவதா? புட்டிப்பால் ஊட்டுவதா? என்று யோசித்துக்
கொண்டு உட்கார்ந்திருப்பதைப் போல படுகிறது எனக்கு.
யோசித்துப் பார்த்து விட்டு, அவளை இப்போதெல்லாம்
தமிழ் திரைப்படங்களைப் பாப்பதைத் தவிரித்து விட்டு மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்களைப்
பார்க்க பரிந்துரைக்கிறேன். மொழிமாற்றம் எனும் டப்பிங் படங்களில் நல்ல தமிழில் பேசுகிறார்கள்.
தமிழ்ப்படங்களில் நல்ல தமிழை எதிர்பார்க்க முடிவதில்லை.
*****
No comments:
Post a Comment