அதைப் படிக்காமல் இருக்க முடியாது!
அநேகமாக ஜோசியத்தில் நம்பிக்கைப் போய்
நாளாகி விட்டது. ராசிபலன் பார்ப்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. தின பலன், வார பலன்,
மாத பலன், என்று ஆரம்பித்து அது ஆண்டு பலன் வரை போய்க் கொண்டிருக்கிறது.
தின ராசி பலன் உள்ள காலண்டர்தான் சுவரில்
தொங்கிக் கொண்டிருக்கிறது. டிவிப் பெட்டியிலும் தின ராசி பலன் ஓடிக் கொண்டிருக்கிறது.
நமக்கு வரும் சில பத்திரிகைகளில் மாத ராசி
பலன்கள் உண்டு. அதை நான் படிப்பதில்லை என்று தெரிந்தும் அச்சிட்டு அனுப்புகிறார்கள்.
ஆனால் வீட்டில் ஒருத்தர் பாக்கியில்லாம் படித்து முடித்து விடுவார்கள். அதில் போட்டா
போட்டி வேறு. சில நேரங்களில் பக்கங்களைக் கிழித்துக் கொண்டு போய் விடுவது வரை நடக்கிறது.
இது ஒரு பக்கம் என்றால் தமிழ் புத்தாண்டு
ராசி பலன் போதாது என்று ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன், தெலுங்கு புத்தாண்டு ராசி
பலன் வரை வீட்டில் பார்த்து பார்த்து மாய்ந்து போவார்கள்.
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி வந்தால்
இதற்கென வரும் புத்தகங்களைப் பிரித்து மேய்ந்தால்தான் வீட்டில் இருப்பவர்களுக்குத்
திருப்திப்படுகிறது. அந்த நேரங்களில் மட்டும்தான் மனைவி பேப்பர் கடை பக்கம் போகும்
போது அதீதத ஆர்வமாக போய் அவளே வாங்கி வருகிறாள். மற்ற நேரங்களில் வண்டியை நிறுத்தி
இறங்கிப் போய் வாங்க வேண்டுமென்று பின்னாடி உட்கார்ந்திருப்பவளிடம் பத்திரிகைகளின்
பேரைச் சொல்லி போய் வாங்கி வா என்றால், இறங்கிப் போய் நீங்களே வாங்கி வாருங்கள்
என்கிறாள். அப்படி ஒரு ஆர்வம் பலன்களைப் படிப்பதில். பலன்களைப் படிப்பதற்காகவேனும்
நாட்டு மக்கள் வாசிக்கும் பழக்கத்தை விடாமல் வைத்திருக்கிறார்கள்.
இப்பிடி எல்லாவற்றையும் பார்த்து விட்டு,
படித்து விட்டு அதில் சொன்னபடி நடப்பதில்லை என்று அங்கலாய்ப்பதுதான் இதில் கிளைமாக்ஸாக
நடக்கக் கூடியது. அதற்கு ஏன் அதையெல்லாம் படிக்க வேண்டும் என்று கேட்டால், அதுதான்
முடியவில்லை என்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து அவர்களே இப்பிடி ஒரு
விளக்கத்தையும் சொல்கிறார்கள். அதாவது, அதெல்லாம் சாமர்த்தியமான பொய்கள்தான், இருந்தாலும்
அந்தப் பொய்களைக் கேட்காமல், படிக்காமல் முடிவதில்லை என்கிறார்கள். இதையெல்லாம் கேட்க
கஷ்டந்தான் இல்லையா?! ஒவ்வொருத்தர் மனதுக்கும் ஒரு விதமான
ரிலாக்சேஷன் கேட்கிறது. பல பேருடைய ரிலாக்சேஷனே இப்பிடி பலன்கள் பார்த்து அப்பிடி நடப்பதில்லை
என்று அங்கலாய்த்துக் கொள்வதுதான் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
*****
No comments:
Post a Comment