4 Jul 2020

வளையம் ரெண்டு!

செய்யு - 496

            பாக்குக்கோட்டை தெக்கூரு ரோட்டுல இருக்குற செளந்தரா மகால்ல வேலனுக்கும், பிந்துவுக்கும் கல்யாணம். வெங்குவோட அடத்தால மொத நாளு ராத்திரியே கலியாண மண்டபத்துக்குக் குடும்பத்தோட கெளம்ப வேண்டியதா ஆயிடுச்சு சுப்பு வாத்தியாருக்கு. ஆர்குடி போயி அங்கேயிருந்து பாக்குக்கோட்டை பஸ்ஸப் பிடிச்சுப் போனா பாக்குக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்கு அஞ்சு ஸ்டாப்பிங்குக்கு மின்னாடியே மண்டபம்.
            மண்டபத்துக்கு மின்னாடி பெரிய ப்ளக்ஸூ . எடது மேல் மூலையில ராசாமணி தாத்தாவோட படம் பெரிசா. அதுக்குக் கீழே வரிசையா அவரு படத்துக்குள்ள அடங்குறாப்புல சரசு ஆத்தா, பாலாமணி, சித்துவீரன், சுந்தரியோட படங்க. அதுக்குக் கீழே சித்துவீரனோட ரண்டு கொடுக்குங்களோட படம். கீழேந்து மேல பாக்குறப்போ ராசாமணி தாத்தா குடும்பத்துல எல்லாத்தையும் உள்ளடக்கியிருக்குற பேருருவம் போல தெரியுது. அதுதாம் ஆதிமூலங்ற மாதிரிக்கும் அதுலேந்து பொண்டாட்டி, புள்ளை, மருமவனெல்லாம் கெளைச்சி வராப்புலயும், அதுக்குக் கீழே பேரப் புள்ளைங்க தழைச்சு வராப்புலயம்  ப்ளக்ஸ் இருக்கு. ப்ளக்ஸப் போட்டவேம் ரசனையான ஆளாவும், தத்துவும் புரிஞ்ச ஆளாவும் இருப்பாம் போலருக்கு.
            இந்தப் படங்களுக்கு வலது பக்கமா 'சிவஞானச் சுடர்! சோதிட சிகாமணி! பாக்குக்கோட்டை புகழ் ராசாமணி மற்றும் 'அகில உலக ஆயுர்வேத மருத்துவத் திலகம்' பாலாமணி இல்லத் திருமண விழான்னு எழுதி இருக்கு. அந்த எழுத்துக்குக் கீழே வேலனும், பிந்துவும் ஒருத்தரையொருத்தரு பார்த்து சிரிக்குறாப்புலயும் நடுவுல ஒரு ரோசாப்பூ இருக்குறாப்புலயும் படம். அதுக்குக் கீழே பொண்ணு மாப்புள்ளையோட பேரு, கல்யாண நாளு, மண்டபத்தோட பேரு எழுதிருக்கு. அதுக்குக் கீழே 'சோடி ரெண்டு சேர்வதற்குக் கூடி வந்து வாழ்த்துங்கள்! தேடி வரும் உள்ளங்களை நாடி நிற்கும் நெஞ்சங்கள்!'ன்னு எழுதிருக்கு. அதுக்குக் கீழே வாழ்த்தும் நெஞ்சும் நெஞ்சங்களை வாஞ்சையுடன் வரவேற்கும்ன்னு ஏகப்பட்ட பேருங்க சிங்கம் பாய்ஸ், பாக்குக்கோட்டை டைகர்ஸ், மதகடி ஸ்டார்ஸ், தெக்கூர் ஹீரோஸ்ன்னு போட்டு. இன்னிக்குப் படிக்க ஆரம்பிச்சா நாளைக்குக் கலியாணம் முடியுறப்பத்தாம் படிச்சி முடிக்கலாம் போலருக்கு.
            ஒரு சனம் பாக்கி வுடாம எல்லாத்துக்கும் பத்திரிகை வெச்சிருந்ததுல எல்லா சனமும் வந்திருந்துச்சுங்க. வாழ்க்கப்பட்டு பெரிம்மா, சிப்பூரு பெரிம்மா, சின்னம்மா, தேன்காடு சித்தி, பாகூர் சித்தின்னு எல்லாரும் ஆஜராயிருந்துச்சுங்க. அதுகளப் பாத்ததும்தாம் வெங்குவுக்கு ஆசுவாசமா இருந்துச்சு. "பாத்தீங்களா? என்னவோ நாமத்தாம் மொத நாளு மின்னாடியே வர்றதா நெனைச்சுக்கிட்டீங்களே! இஞ்ஞப் பாருங்க ஒருத்திப் பாக்கியில்லாம வந்துக் கெடக்கறாளுவோ!"ன்னுச்சு வெங்கு. சுப்பு வாத்தியாருக்கும் அத்து ஆச்சரியந்தாம். அவரு ஒண்ணும் புரியாம பாத்தாரு.
            சிப்பூரு பெரிம்மத்தாம் சொன்னுச்சு, "என்னத்தாம்! அசந்துப் போயிப் பாக்குதீயளே? மாமம் பயனோட கடெசீத் தேவ. சின்னம்மாவோட பொண்ணு கலியாணம். அத்து சின்னம்மா நம்ம வடவாதி வூட்டுலயே கெடந்து வளந்தது. பத்திரிகெய வெச்சிட்டு மொத நாளே வந்துப்புடுணும்னு சொல்றப்பவே அதுக்குக் கண்ணு தண்ணி தெரண்டுடுச்சு. பாவம்த்தாம் அத்து இஞ்ஞ பாக்குக்கோட்டையில வந்து ரொம்ப செருமப்பட்டுப் போச்சு. இப்பத்தாம் அதுக்கு நல்ல காலம் வந்திருக்கு. ரண்டு வகையிலயும் முக்கியமான தேவையா இருக்குல்லா. இப்பிடி ஒரு வகையில பாத்தா மாமாங்கார்ரேம் வூட்டுக் கலியாணமா! அப்பிடி அந்த வகையில பாத்தா சின்னம்மா வூட்டுக் கலியாணமா! அதாங் மொத நாளே வந்தாச்சு. வந்ததும் நல்லதாப் போச்சு. ஒங்களயெல்லாம் பாத்துப் பேசுறதுக்கும் ஒரு வாகால்லா போயிடுச்சு! அத்தாங் நீஞ்ஞ குடும்பத்தோட வருவீங்கன்னு நாம்ம எதிர்பாக்கல!"
            அந்த நேரமா பாத்து முருகு மாமாவும், நீலு அத்தையும் வந்துச்சுங்க. "என்னாடி இத்து வைத்தி ஆச்சாரிக் குடும்பத்துக் கொடுக்குகளா ஒண்ணா நிக்குது! எங் கண்ணே பட்டுப்புடும் போலருக்கே!"ன்னு சொல்லி நெட்டி முறிச்சுச்சு நீலு அத்தை. எல்லாத்தையும் ஒரு பார்வே பாத்துட்டு, "நீஞ்ஞல்லாம் எப்போடி ஒம்மட புள்ளீயோளுக்குக் கல்யாணத்தப் பண்ணி கல்யாண சாப்பாட்ட போட போறீயே? அதாங் வெங்குவோட மவ்வே இருக்காளே. அவளுக்கும் பாலாமணிக்கும் ஒண்ணு கோத்து அடுத்த கலியாணச் சாப்பாட்ட போடச் சொல்லிட வேண்டியதுதாங்!"ன்னு சொல்லிச் சிரிச்சுச்சு நீலு அத்தை.
            சிப்பூரு பெரிம்மா வுடாம கேட்டுச்சு. "ஏம் அத்தே கலியாணத்துக்கு வந்தோமா? சாப்பாட்ட ந்நல்லா ஒரு முக்கு முக்குனோமான்னு போயிட்டு இரு. அவ்வேம் டாக்கடரு ஆயிட்டாம். நம்மப் பொண்ணுகள ஏறெடுத்துப் பாப்பானா? அவ்வேம் அவனுக்குத் தகுந்தாப்புல ஒரு டாக்கடர்ரத்தாம்னே பாப்பாம். அப்போ லாலு மாமா வாத்தியார்ரா இருந்தப்பவே நம்மள ஒருத்திய கட்டிக்க மாட்டேன்னு வாத்திச்சியா பாத்து கட்டிச்சு. அப்பவே அப்படின்னா இப்ப சொல்லணுமா? இப்போ ஊரு ஒலகம் அப்பிடித்தானே கெடக்குது!"ன்னு.
            "அடிப் போடி இவளே! இதெல்லாம் பொறப்புலயே முடிவு பண்ணதடி. வெங்கு மவ்வே என்னிக்குப் போறந்தாளோ அன்னிக்கே அவ்வே பாலாமணிக்குன்னு முடிவு பண்ணியாச்சு. வேணும்ன்னா பாரு அடுத்தக் கலியாணம் அவுங்க ரண்டு பேத்துக்கும்தாம். நீஞ்ஞல்லாம் நாலு நாளுக்கு மின்னாடி கெளம்பி விருந்துச் சாப்பாட்டுக்கு வந்துத் தொலைங்கடி முண்டங்களா! யாருகிட்டெ கதெ சொல்றாளுவோ இவுளுக!"ன்னு சொல்லிட்டு நீலு அத்தைப் பாட்டுக்குக் கெளம்பி அடுத்ததா மணப்பொண்ணு அறை இருக்குற எடமா பாத்துப் போனுச்சு.
            "நீலு அத்தெ சொல்றது கூட நல்லாத்தாம் இருக்கு. நீயி எதாச்சிம் சின்னம்மாகிட்டெ கேட்டீயாடி?"ன்னுச்சு சிப்பூரு பெரிம்மா வெங்குவப் பாத்து.
            "ந்தா வாயெ வெச்சிக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டே. அத்து இப்பிடித்தாம் இஞ்ஞ ஒரு மாதிரியா கொளுத்தி வுட்டுப்புட்டுப் போவும். அஞ்ஞப் போயி வேற மாதிரியா கொளுத்தி வுட்டுப்புட்டுப் போவும். அதெ ஒரு வழக்கமா போயிடுச்சு அதுக்கு. இத்துப் புரியாம நாம்மப் போயி கேட்டுத் தொலைச்சி அசிங்கப்பட்டு நிக்க முடியாது பாரு! அதுக்கென்ன ஊரு ஒலகம் அமைதியா இருந்தா பிடிக்காது. எதாச்சிம் வில்லங்கத்தெ உண்டு பண்ணி அதுல ஒரு கலாட்டா உண்டானத்தாம் அதுக்கு சந்தோஷம். அப்போலேந்து அப்பிடி அத்து!"ன்னுச்சு சிப்பூரு சித்தி.
            "சிப்பூரு சின்னப் பொண்ணுத்தாம் நாம்ம நெனைக்கிறதெ சரியா சொல்லிருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. சுப்பு வாத்தியாரு அப்பிடிச் சொன்னது வெங்குவுக்கு மட்டும் பிடிக்கல. மற்ற எல்லா சனமும் சிரிச்சதுங்க அதெ கேட்டுப்புட்டு.

            "அப்பிடில்லாமாடி ஒலகத்துலப் பண்ணுவாங்க?"ன்னு ஆச்சரியப்படுறாப்புல கைகள மொகத்துக்குக் கொண்டு போனுச்சு சிப்பூரு பெரிம்மா.
            "என்னவோ அத்து கதெ தெரியாத மாதிரிக்கி வாயப் பொளக்குறா பாரு. கொழந்தையையும் கிள்ளி வுட்டுப்புட்டு, தொட்டிலையும் ஆட்டி வுட்டுப்புட்டு நாம்ம ஒரு ஆளு இல்லன்னா இந்த ஒலகத்துல கொழந்தைகள பாக்குறதுக்கு ஆளில்லன்னு சொல்ற ஆளுல்ல அத்து."ன்னுச்சு சிப்பூரு சித்தி. செரித்தாம் பேச்சு ஒரு தெசைக்குப் போவுதுன்னு வெங்கு நெனைச்சவே, அதுக்குப் பெறவு பேச்சு தெச மாறி குடும்ப ஒறவுகளப் பத்தி, யாரு யாரு எப்பிடியெப்படி இருக்குறாங்கன்னு ஆரம்பிச்சிது. வெங்குவுக்குத் தொடர்ந்தாப்புல மவ்வே கலியாணத்தப் பத்தி பேசுவாங்களான்னு ஒரு எதிர்பார்ப்பு. தெச மாறுன பேச்சு தெச மாறுனதுதாம். அது பாட்டுக்கு அத்தனெ நாளும் பேசாம கெடந்த அத்தனெ கதைகளையும் வெளியில கொண்டாந்து கொட்டிக்கிட்டே இருந்துச்சு.
            பவ்வு பாப்பா அப்போ ரண்டரை வயசுக் கொழந்தையா இருந்ததால ஒரு எடத்துல நிக்க வுடாம அடம் பண்ணிக்கிட்டு இருந்ததுல விகடுவுக்கும், ஆயிக்கும் கொழந்தைய வெச்சு வேடிக்கெ காட்டுறதெ பெருவேலையா இருந்துச்சு. அப்பைக்கப்போ செய்யுவும் வந்து இதுல கலந்துகிட்டா. சுப்பு வாத்தியாரு பொதுப்படையா கலியாணத்துல கண்ட எல்லாருகிட்டேயும் பேசிட்டு இருந்தாரு. வெங்கு அடுத்ததா யாராச்சிம் மகளோட கலியாணத்தப் பத்தி பேசுவாங்களான்னு நெலைகொள்ளாம கெடந்து தவிச்சுகிட்டு இருந்துச்சு.
            கலியாண வேலையில அங்கனயும் இங்கனயும் ஓடிட்டு இருந்த பாலாமணி வெங்குப் பாத்த ஒடனே நின்னு, "யக்கா! செளரியமா இருக்கீயா?"ன்னு ஒரு வார்த்தெ கேட்டுட்டுப் போனது வெங்குவுக்கு ரொம்பப் பெரிசா தெரிஞ்சுச்சு. கலியாணத்துக்கு வந்ததோட நோக்கம் நெறைவேறிப் போனாப்புல மொகத்துல அப்பிடி ஒரு பூரிப்பு அப்பதாம் வந்துச்சு வெங்குவுக்கு.
            நீலு அத்தை மணப்பொண்ணோட அறைக்குப் போனது. அடுத்ததா அங்கயும் இதே மாதிரிக்கு பேச ஆரம்பிச்சது. சரசு ஆத்தாவப் பாத்ததும், "ஒனக்கென்னடி காசி இருக்குற பசையுள்ள ஆளு. இன்னொரு கலியாணத்த நடத்தி இன்னொரு கலியாணச் சாப்பாட்ட போடுவே!"ன்னு ஒரு போடு போட்டு நிப்பாட்டுனுச்சு. சரசு ஆத்தாவுக்கு ஒண்ணும் புரியாம, "என்னண்ணிச் சொல்லுதீயே வந்ததும் வாரதுமா?"ன்னுச்சு.
            "ஆம்மா போ! சொரக்காய்க்கு உப்பில்லன்னு சொன்னேம்! என்னத்தெ சொல்றேன்னு புரியலயாக்கும்?"ன்னு சொல்லி மொகத்த முறுவலிச்சுச்சு.
            "புரியுறாப்புல சொன்னத்தான யண்ணி?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அடப் போடி! ஒண்ணுந் தெரியாத பாப்பா! கதவ மூடிட்டுப் போட்டாளாம் தாப்பா!"ன்னுச்சு நீலி அத்தை.
            "போங்கண்ணி! ஒஞ்ஞளுக்கு இதெ வேலையாப் போச்சு! கலியாணம் வேல ஆயிரத்தெட்டுக் கெடக்கு. பாலாமணிப் பயெ வேற வூட்டுக்குப் போயிட்டு வாரணும்னு நின்னாம்! போவலன்னா கொன்னுப்புடுவாம். நீஞ்ஞ சித்தெ இஞ்ஞயே இருங்க. நகெ நட்டு சாமானுல்லாம் இருக்கு. ஒரு எட்டு வூட்டுக்குப் போயி வாத்தியாரு வாங்கியார்ர சொன்ன சாமானுங்க வூட்டுல கெடக்கு அப்பிடியே. அவனோட போயி எடுத்துட்டு வந்துப்புடுறேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "நில்லுடி! அத்து சம்பந்தமாத்தாம் பேச வாயெடுத்தா கெளம்புறதுல நிக்குதீயே?"ன்னுச்சு நீலு அத்தை.
            "சீக்கிரமா சொல்லுங்க யண்ணி! அவ்வேம் பாலாமணி வெசனக்கடுப்பெடுத்த பயெ! சத்தம் போடுவாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அதாம் வெசயம்! இந்த மேடையிலயே அவ்வேம் பாலாமணிக்கும், வெங்கு மவ்வே இருக்காள்ல செய்யுவுக்கும் வெச்சு கலியாணத்தெ முடிச்சிருந்தா கலியாணச் செலவு ஒரு செலவா போயிருக்குமுல்லா. அவனுக்கும் வயசாயிட்டு இப்போ பாக்கவே கெழட்டுப் பயெ போல இருக்காம். அவ்வே பொண்ணப் பாத்தியா தளதளன்னு என்னமா இருக்கா? அதத்தாம்படி பேச வந்தேம்!"ன்னுச்சு நீலு அத்தை.
            "அதானே பாத்தேம்! யண்ணியோட அக்மார்க்குப் பேச்சு இன்னும் வாரலியேன்னு? இப்போ வந்துப்புட்டு. வந்துப் பேசிக்கிறேம். இப்போ கெளம்புறேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            நீலு அத்தை சரசு ஆத்தாவோட கையப் பிடிச்சி நிறுத்துனுச்சு. "நெசமாத்தாம்டி சொல்றேம்! என்னவோ மனசுல பட்டுச்சு. கட்டுன்னா சரியா இருக்கும்ன்னு. நீயும் நம்மப் பேச்ச வேடிக்கன்னா வேடிக்கையா எடுத்துக்கோ. அதுக்கு நாம்ம ன்னத்தா பண்ணுறது? ஒமக்குச் சம்மதம்ன்னா சொல்லு! இந்த மேடையிலயே கலியாணத்தெ முடிச்சிப்புடுறேம்!"ன்னுச்சு நீலு அத்தை.
            "ச்சும்மா இருங்க யண்ணி! இந்தக் கலியாணத்தெ மொதல்ல முடிப்பேம். இதுக்கே மவ்வேம் ஆறு லட்சத்து ரூவாய அங்கன இங்கனன்னு கடனெ வாங்கிருக்குறதா சொன்னாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அதுக்குத்தாம்படி சொல்றேம்! நீயி சம்மதம்ன்னு சொல்லு. அந்தப் பணத்தெ வுட தாண்டி அப்பிடியே வெங்குகிட்டெ கறந்துப்புடலாம். இப்பத்தாம் சுப்பு வாத்தி ரிட்டையர்டு ஆயி கை நெறைய காசி பொரளுறதா கேள்வி. அந்தப் பயெ வெகடு வேற வாத்தியா இருக்காம். கறந்தா அடிமடியிலயே வெச்சு கறந்துப்புடலாம். நம்ம பயத்தாம் டாக்கடர்ரா இருக்காம்லா. கேட்டதெ கொடுத்தா கலியாணம்போம், இல்லன்னா வேற எடத்தெ பாத்துக்கிடுவோம்ன்னு ஒரு கோதாவக் காட்டுவோம். இதெ பத்தி பேசுனப்போ வெங்குவோட மொகத்தப் பாத்தேம். தூண்டில போட்டா வசமா சிக்கிக்கும் மொத்த குடும்பமே!"ன்னுச்சு நீலு அத்தை.
            "யண்ணி! நேரமாவுது. கலியாணத்துக்கு வந்தவங்கள வேற வாங்கன்னுச் சொல்லி சாப்புட உக்கார வெச்சாவணும். அதுக்கு ஆளில்லன்னா சனங்களுக்கு மொகம் முறிஞ்சாப்புல ஆயிடும். நாம்ம இப்பப் போயிட்டு வந்தாத்தாம் திரும்பி வந்து அதெ செய்யுறதுக்குச் சரியா இருக்கும். கலியாணத்த முடிச்சிட்டு ஒரு ராத்திரி தங்குங்க. நாம்ம வெலா வாரியாப் பேசிக்கிடலாம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "இவ்வே யாருடி புரியாதவளா இருக்கா? சுக்கு கண்ட எடத்துல கொழந்தெ பெத்துக்கிடணும்டி!"ன்னுச்சு நீலு அத்தை.
            "கலியாணம் ஆனாத்தாம் கொழந்தெ பெத்துக்கிறதெல்லாம். அதெ மொதல்ல பாப்பேம் யண்ணி!"ன்னு சொல்லிட்டு அதுக்கு மேல பேசாம வெளியில கெளம்புனுச்சு சரசு ஆத்தா. பொண்ணு மாப்புள அழைப்பு முடிஞ்சி இந்நேரத்துக்கு அதுக கூட போன சனங்க திரும்பிட்டு இருக்கும்னு நெனைச்சுச்சு சரசு ஆத்தா. அதுக வர்றதுக்குள்ள திரும்பியாவணும். திரும்புனாத்தாம் பேருக்கு மூர்த்தோலைய எழுதிட்டா அத்து ஒரு வேல முடிஞ்சி ராச்சாப்பாட்டத் தொடங்கலாம்ன்னு மனசுக்குள்ள நெனைச்சுச்சு சரசு ஆத்தா. மனசுக்குள்ள கலியாணத்துக்கான பரபரப்பு இருந்தாலும் நீலு அத்தை சொன்னது அதோட மனசுல ஒண்ணு தெரண்டு விசுவரூபம் எடுத்துச்சு.
            "யம்மா! எம்மாம் நேரமா பாத்துட்டு நிக்குறது? கெளம்பு சீக்கிரமா!"ன்னு மண்டபத்துக்கு வெளியில யுனிகார்ன் பைக்க ஸ்டார்ட்டு பண்ணிகிட்டு வண்டி மேல இருந்துச்சு பாலாமணி. அந்த யுனிகார்ன் பைக்குத்தான் பொண்ணு வூட்டுச் சார்பா வேலனுக்கு வாங்கிக் கொடுக்குற பைக்கு. சரசு ஆத்தா வேகமா ஓடியாந்து பின்னாடி ஏறுனுச்சு. "ன்னடா பைக்கு இத்து? ஒது பக்கமா தூக்கி வெளியில அடிச்சிறாப்புல இருக்கு? இதெப் போயி வாங்கிக் கொடுக்குதீயே? அங்ஙன நீலு அத்தெ பேச்சுல பிடிச்சிக்கிட்டு வுட மாட்டேனுச்சு!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "வண்டியக் கெளப்புறேம்! ந்நல்லா பிடிச்சிக்கோ!"ன்னுச்சு பாலாமணி.
            "ஏம்டா வெங்குவோட மவ்வே செய்யுவப் பாத்தே?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "யார்ரு திட்டையில இருக்கே வெங்கு யக்காவோட மவளையா?"ன்னுச்சு பாலாமணி.
            "அதாங் சரியா சொல்லுதீயேடா!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "ச்சும்மா இரும்மா!"ன்னு பாலாமணி சொல்லுறதுல ஒரு வெக்கம் தெரிஞ்சிது சரசு ஆத்தாவுக்கு. யுனிகார்ன் பைக் இப்போ பாக்குக்கோட்டை தெக்கூரு மெயின் ரோட்டுல சீறிப் பாய ஆரம்பிச்சது. "எலே மெதுவா போடா!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            நீலு அத்தை கோத்துவிட்ட வளையம் சேர்ந்து சங்கிலியில ரண்டு வளையம் சேந்தாப்புல இருந்துச்சு இப்போ.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...