செய்யு - 515
சுப்பு வாத்தியாரு முருகு மாமா வூட்டுல
போயி நின்னாரு. பத்து பதினோரு மணி வாக்குல நல்ல வெயிலு நேரம். நல்ல வேளையா முருகு
மாமா கடையத் தொறந்துப் போட்டுக்கிட்டு வூட்டுக்குள்ள நின்னதால வூட்டுக்குள்ளார பேசுறாப்புல
ஆனுச்சு. நீலு அத்தையும் இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு மெதுவா ஆரம்பிச்சாரு. எப்படியாச்சும்
பொண்ணு கலியாணத்தெ பேசி முடிச்சிடணுங்ற முடிவுக்கு அவரு வந்திருந்தாரு. இந்த நேரத்துல
கூட வாகா ஒரு வரன் வருதுன்னா இதெ தூக்கிப் போட்டுட்டு அதெ வம்படியா முடிக்கிற மனநெலையிலயும்
இருந்தாரு. இப்போதைக்கு அப்பிடி வானத்துலேந்து குதிச்சி எந்த வரனும் வாராதுங்றதால
அவருக்குப் பாக்குக்கோட்டையோட சம்பந்தம் பத்திப் பேசுறதெ வேற வழியில்லாம இருந்துச்சு.
போன தடவெ போல சுத்தி வளைச்செல்லாம் விசயத்துல எறங்காம, நேரடியாவே வார்த்தையப் போட்டு
பேசுனாரு சுப்பு வாத்தியாரு.
"தஞ்சாவூர்க்காரரு பொண்ணு ஈஸ்வரி
வந்துட்டுப் போனதா வூட்டுல சொன்னுச்சுங்க. பொண்ணு பாக்குறது சம்பந்தமா பேச்சு நடந்திருக்குப்
போலருக்கு. அதாங் பெரியவங்க ஒஞ்ஞள கலந்துக்கிட்டுப் போவலாம்ன்னு வந்திருக்கேம்!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு.
"இந்தக் காலத்துல சின்ன புள்ளைங்க
வெவரமா இருக்குங்க. பெரியவங்க நாம்மத்தாம் தடுமாறிட்டுக் கெடக்குறேம். வெண்ணெய்ய கையில
வெச்சுக்கிட்டு நெய்யிக்கு அலையுறாப்புல நாம்ம கெடக்கேம். நேத்திக்குக் கூட சரசு போன்
பண்ணிச்சு. மவ்வேன் என்னவோ பொண்ண வந்துப் பாக்கணுங்றானாம். பாத்துட்டுப் பிடிச்சாதாங்
கலியாணங்றானாம். சொந்தத்துல வந்துப் பாத்துட்டுப் பிடிக்கலன்னு சொன்னா மொறையா இருக்காது,
நல்லா யோஜிச்சு முடிவெ பண்ணிட்டு வான்னு நாம்ம சொன்னேம். நாமளே இத்துச் சம்பந்தமா
வாரச் சொல்லி பேசணும்னுத்தாம் நெனைச்சிட்டு இருந்தேம். அதுக்குள்ள நீஞ்ஞளே வந்துப்புட்டீங்க!
கால நேரம் கூடி வந்தா நடக்க வேண்டியது தானா நடக்கும். அதெ நடத்த நாம்ம யாரு சொல்லுங்க?"ன்னுச்சு
முருகு மாமா.
"இதுலப் பிடிக்காமப் போறதுக்கு ன்னத்த
இருக்கு? டாக்கடர்ரா இருக்காம். அந்த அளவுக்குச் செய்வாங்களாங்ற நெனைப்பத்தாம் இருக்கும்!"ன்னு
எடுத்து வுட்டுச்சு நீலு அத்தெ.
"செய்வென கொடுப்பென எதிர்பார்ப்பு
என்னான்னு சொன்னா நம்மால முடியுதான்னு பாக்கலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"என்னத்தெ பெரிசா எதிர்பாக்கப் போறானுங்க?
டாக்கடர்ரா இருக்காம்லா! அதாங் பவுன்னு நூத்துக்கு மேல எதிர்பாப்பானுவோ! ஒண்ணுமில்லாத
பயலுகளுக்கே வண்டிய வாங்கிக் கொடுக்குறப்போ கார்ரு ஒண்ணு கணக்குல இருக்கும். பீரோ,
கட்டிலு, டைனிங் டேபிள், டிரெஸ்ஸிங் டேபிளு, பாத்திர பண்டம், சீரு சனத்தில்லாம் செஞ்சு
கலியாணத்தெ முடிச்சி வுட்டுப்புடணும்! வேற என்னத்தெ எதிர்பார்ப்பு இருக்கப் போவுது?
அதாங்! இத்து இப்போ ஒலக வழக்கமா போயிடுச்சு. வேலையில்லாத பயலுவோ கூட வண்டிய வாங்கிக்
கொடுத்தாதாங் பொண்ண கட்டிக்கிடுவேன்னு நிக்குறப்போ டாக்கடர்ரு பயெ எதிர்பாக்குறதுல
ஒண்ணும் குத்தமில்லே!"ன்னுச்சு முருகு மாமா.
"அப்பிடின்னா நம்ம தோதுக்குக் கொஞ்சம்
பெரிசின்னாலும், கொஞ்சம் சமாளிச்சிச் செஞ்சிப்புடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஒரு பொண்ண வெச்சிக்கிட்டு அதெ கூட
செய்ய மாட்டீயளான்னு நாம்ம மின்னாடியே சொல்லியாச்சு. ரண்டு பொண்ணுன்னா கூட யோஜிக்கலாம்.
ஒண்ணுத்தெ வெச்சுக்கிட்டு என்னத்தெ யோஜிச்சுக்கிட்டு? சொத்தெ சேத்து வெச்சக்கிட்டு
அதெ போறப்ப கொண்டுட்டுப் போவவா போறேம்? பொண்ணு புள்ளைக நல்லா இருக்குறதுக்குத்தாங்
அதெ சேத்து வைக்கிறேம். சேத்து வெச்சதெ பொண்ணு புள்ளைகளுக்குச் செய்யாம வேற யாருக்குச்
செய்யப் போறேம்? கூட கொறைச்சல செய்யுறப்பத்தாங் பொண்ணு புள்ளைகளுக்கும் திருப்தி
உண்டாவும். ஊரு ஒலகத்துலயும் நாலு பேத்து மதிப்பா பாப்பாம். அதெல்லாம் அளந்துப் பாத்தா
செய்யுவாவோ? நம்ம சனத்துல இது வரைக்கும் நமக்குத் தெரிஞ்சி எவனும் கார்ர வாங்கிக்
கொடுத்து கலியாணத்தப் பண்ணல. வாங்கிக் கொடுத்தா பெருமெ யாருக்கு ஒஞ்ஞளுக்குத்தாம்.
வாத்தியாரு கார்ர வாங்கிக் கொடுத்துல்லா பொண்ண கட்டிக் கொடுத்திக்கார்ன்னு ஊரெல்லாம்
பேச்சா கெடக்கும். அதெ விட பொண்ணப் பெத்தவருக்கு வாழ்க்கையில வேற என்ன வேணும் சொல்லுங்க?
அத்தெ என்னவோ பெரிசா யோஜனெ பண்ணிட்டுக் கெடக்குதுங்க பாக்குக்கோட்டைச் சனங்க. நம்மப்
பேச்ச யாரு கேக்குதா சொல்லுங்க? அதாங், எதாச்சும் பண்ணிட்டுப் போங்கன்னு நாமளும்
அதெ பெரிசா கண்டுக்கிடல!"ன்னுச்சு நீலு அத்தெ.
"டாக்கடர்ன்னா அந்தக் கெளரவத்துக்கு
ஏத்தாப்புல நாமளும் செஞ்சித்தானே ஆவணும்! நாளைக்குக் கொறையா போயிடக் கூடாதுல்லா!
ஒரு வார்த்தைக்கு எடம் இல்லாம செஞ்சிப்புடணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதெயும் நாம்ம சொல்லிட்டேம். வெங்குவோட
புருஷங்கிட்டெ கலந்துகிட்டீங்கன்னா வெசயம் வெளங்கிடும்ன்னு! முடியும்ன்னு முடியும்
சொல்லுவாரு, முடியாட்டியும் நம்மால ஆகாதுன்னு ரண்டுல ஒண்ணுத்தெ சொல்லிப்புடுவாருன்னு.
அதெ செய்யாம ஆளாளுக்கு யோஜனெ. இப்போ கலந்தா வெசயம் வெரசா முடியுதுல்லா! அதெ வுட்டுப்புட்டு
ஆளாளுக்கு யோஜனெயப் பண்ணிட்டுக் கொழம்பிக்கிட்டுக் கெடக்கறதுல ன்னா இருக்குச் சொல்லுங்க?
ஒரு பேச்சக் கலந்துக்கிடுறதுல ன்னா இருக்கு? யார்ரு நம்ம ரத்தம், யாருரு நம்ம ஒறவு,
யார்ரு நம்ம சொந்தம், ஒண்ணுக்குள்ள ஒண்ணு, கேக்குறதுல யார்ரு ன்னா கொறைஞ்சிப் போயிடப்
போறா? புள்ளயப் பெத்து வெச்சிக்கிறவங்க கூட கொறைச்சிக் கேக்கறதெ இந்தக் காலத்துல
யாரு தப்பா நெனைக்கப் போறாக? அத்துவும் டாக்கடர்ரு மாப்புளன்னா அப்பிடித்தான்னு நாம்ம
படிச்சிப் படிச்சிச் சொல்லிட்டேம்!"ன்னுச்சு நீலு அத்தெ.
"செரி யிப்போ ஒஞ்ஞளுக்குத் தோதுபாடுன்னா
பாக்குக்கோட்டைக்குப் போன அடிச்சிச் சொல்லிப்புடலாம்!"ன்னுச்சு முருகு மாமா.
"பாத்து பெரியங்வக ஒஞ்ஞ ஆசிர்வாதத்தோட
நீஞ்ஞத்தாம் நல்ல வெதமா முன்ன இருந்து பண்ணி வுடணும்! கலியாணங் காட்சி நல்ல வெதமா நடக்குறதுக்கு
நமக்கு மின்ன நின்னு யோஜனெ சொல்லி ஒத்தாசி ஒதவி பண்ணணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"காலங் காலமா அதெ செஞ்சிட்டுத்தானே
நாம்ம கெடக்கேம். நம்மளோட ஆசிங்றது எல்லாத்துக்கும் எப்பவும் உண்டு. எல்லாத்துக் குடும்பத்துலயும்
நல்லது நடக்கணுங்றதுக்குத்தாம் நாம்ம உசுர வெச்சிக்கிட்டுப் பாடுபட்டுக்கிட்டுக் கெடக்கேம்.
இந்த வயசுக்கு மேல நமக்கு வேற ன்னா ஆசெ சொல்லுங்க? ஒரு நாளுக்கு ஒரு நல்லதையாவது செய்யாட்டியும்
நமக்குத் தூக்கம் பிடிக்காது. நாலு பேத்துக்கு ஒத்தாசி ஒதவியா இருந்தாத்தான அவ்வேம்
மனுஷம். அதால நல்லதெ நடக்கலன்னாலும் மெனக்கெட்டு நடாத்தி வைக்குற ஆளு நாம்ம. நல்லது
அதுவா நடக்குற ஒண்ணுத்தெ நடாக்கமா வுட்டுப்புடுவேமே ன்னா? வரிஞ்சிக் கட்டிட்டுக் காரியத்தெ
முடிச்சிட்டுத்தாம் மறுவேல பாப்பேம்!"ன்னுச்சு முருகு மாமா.
"ரொம்ப சந்தோஷம்! ரொம்ப சந்தோஷம்!
யம்பீ சித்துவீரன் இதுல ரொம்ப மெனக்கெட்டதா கேள்வி! யம்பீயையும் ஒரு பார்வெ பாத்துட்டு
விசயத்தச் சொல்லிப்புடுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அவ்வேம் கெடக்குறாம் சோதாப் பயெ!
அவ்வேம் என்னத்தெ மெனக்கெட்டாம்? நாம்மத்தாம் மொத மொதலா யிந்த கலியாணப் பேச்சையே
இழுத்து வுட்டு ஆளு!"ன்னுச்சு நீலு அத்தெ.
"சித்தே நீயி ச்சும்மா கெட!"ன்னு
நீலு அத்தைய அதட்டுன முருகு மாமா, "நீஞ்ஞ சொல்றதுதாங் செரி! அவனெயும் பாத்து
ஒரு வார்த்தெ சொல்லிப்புடுங்க. அவ்வேம் ஒரு கோட்டிக்கார பயெ. அத்தோட அந்தக் குடும்பத்துக்கு
அவ்வேந்தாம் மூத்த மருமவனா வேற இருக்காம். இதெல்லாம் எதிர்பாக்குற பயெ. பாக்குக்கோட்டையில
ஒரு முடிவுன்னா இவனயும் ஒரு வார்த்தெ கலந்துக்கிட்டுத்தாம் செய்வாங்க. இல்லன்னா இவ்வேம்
பாட்டுக்கு தாட் பூட் தஞ்சார்ன்னு தலெ தெறிக்க ஆடுவாம்! இவ்வேம் அடிக்குற கூத்துல அஞ்ஞ
பாக்குக்கோட்டெ சனங்களே அரண்டு போயிக் கெடக்குறதா ஒரு கேள்வி! நம்ம மவ்வேன்னாலும்
இன்னிக்குக் கலியாணங் காட்சி ஆயி புள்ளக் குட்டிகப் பொறந்து ஆளாயி நிக்குறாம். ஒரு
நல்ல காரியத்தெ செய்யுறப்போ நாலு பேத்த நாலு வெதமா அனுசரிச்சுப் போயிடணும்!"ன்னுச்சு
முருகு மாமா.
"அதுக்குன்னா வேணா கலந்துக்கிடுங்க!
வேற ஒண்ணுத்துக்கும் ஒதவாதப் பயெ அவ்வேம்!"ன்னுச்சு நீலு அத்தெ.
"அவ்வேம் குடும்பத்தோட இஞ்ஞ சேந்து
யில்லாம, தனியாப் போயிக் கெடக்குறாங்ற கோவத்துலப் பேசுது நீலு! பேரப் புள்ளையோள
கூட வுடுறதில்லங்ற கோவம். அதெ ஒண்ணும் கண்டுக்கிட வாணாம்! நீஞ்ஞப் போயி கலந்துக்கிடுங்க.
அதாங் பின்னாடியும் எல்லாத்துக்கும் நல்லது!"ன்னுச்சு முருகு மாமா.
"மொறையா உள்ளதெ எதையும் வுட்டுப்புட
முடியா. போயிப் பாத்து கலந்துக்கிடுறதெ வுட நமக்கு ன்னா வேல? அதுவும் நீஞ்ஞ சொன்னதுக்குப்
பெறவு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"கடெயத் தொறந்துப் போட்டு ரொம்ப
நேரமாவுது. தாகமா இருந்துச்சுன்னு உள்ளார வந்தேம். காலையில தோசையச் சுட்டுப் போட்டா
தண்ணித் தவிக்காம ன்னாத்தா பண்ணும். நெஞ்சு கரிச்சாப்புல வேற ஆயிடுச்சு. செரின்னு உள்ளார
வந்து தண்ணியக் குடிச்சா கொஞ்சம் ஒரு மாரியா இருக்குன்னு உக்காந்தேம். அதுக்குள்ள
வந்துப்புட்டீங்க. பேசுனது நல்ல வெசயந்தாம். பெரிசா யேவாரம் ஒண்ணுங் கெடையாது. ஆன்னா
பாருங்க நாம்ம உள்ள வந்த நேரமா பாத்து எவனாச்சும் வருவாம்! கடையில யாரும் இல்லன்னு
பாத்துட்டு வேற கடைக்குப் போயிடுவாம். எல்லா பயலும் அவ்சரக்காரப் பயலுகளா போயிட்டாம்.
வந்தா வந்ததும் வாங்கி முடிச்சிட்டுக் கதையெ கட்டணும்ன்னு நிக்குறாம். அதுக்குத் தகுந்தாப்புல
நாம்ம கடையிலயே உக்காந்துக் கெடக்க வேண்டிதா இருக்கு. யேவாரம் பண்ண வர்றவங்களுக்குத்
தகுந்தாப்புல யேவாரம் பண்றவந்தானே யேவாரி. நாமளும் மாறிக்கிட வேண்டிதா இருக்கு. வாங்களாம்
கடைக்கு வெளியில உக்காந்துட்டுன்னா பேசுவேம்!"ன்னுச்சு முருகு மாமா.
"நீஞ்ஞ யேவாரத்தப் பாருங்க. நாம்ம
யிப்போ போயி சித்துவீரனெ பாக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"அதுவுஞ் செரித்தாம்! நீலு! டீத்தண்ணியப்
போடுதீயா?"ன்னுச்சு முருகு மாமா.
"இப்பத்தாங் குடிச்சிட்டுக் கெளம்புனேம்.
வயசான காலத்துல போட்டு தொல்ல பண்ண வாணாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"யார்ர வயசானக் காலத்துல தொல்ல பண்ணுறேம்?
போட்டுக் கொடுத்தா அப்பிடியே நாமளும் குடிப்பேம்ல!"ன்னுச்சு முருகு மாமா ஏதோ
பெரிய ஜோக்கைச் சொன்னாப்புல சிரிச்சிக்கிட்டெ.
"செரித்தாம்! அப்பிடின்னா போட்டு
வையுங்க. நாம்மப் போயி சித்துவீரனோட வூட்டுக்குப் போயிட்டு வார்றப்ப அப்பிடியே குடிச்சிட்டுப்
போறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
"ஆம்மா இப்பிடித்தாம் சொல்லுவீயே!
எஞ்ஞ வார்றப் போறீயே? உக்காந்துப் பேசுனா பேச்சுப் போன எடத்துல உக்காந்துடுவீயே!
இஞ்ஞ போட்ட வெச்சு டீத்தண்ணி ஆயிப் போயித்தாம் கெடக்கப் போவுது"ன்னுச்சு நீலு
அத்தெ சிரிச்சிக்கிட்டெ. சுப்பு வாத்தியாரும் சிரிச்சிக்கிட்டெ கெளம்பிட்டாரு. முருகு
மாமா கடைக்கு வெளியில வந்து நின்னுச்சு, யாராச்சும் யேவாரத்துக்கு வார்றாங்களான்னு
பாத்துகிட்டு. அதோட மனசுல ஒரு பெரிய யேவாரத்த முடிச்சி விட்ட மெதப்பு இருந்துச்சு.
பெரிய யேவாரம் முடிஞ்ச ஒடனே தன்னோட சின்ன யோவரத்தையும் வுட்டுப்புடக் கூடாதுங்ற சாக்கிரதெ
அதோட கண்ணுல தெரிஞ்சிச்சு. அவரோட கண்ணுலேந்து விடுபட்டு, சுப்பு வாத்தியாரோட டிவியெஸ்ஸூ
சித்துவீரன் வூட்டப் பாக்க நகர ஆரம்பிச்சது. குடும்ப யேவாரத்தோட மொத கட்டப் பேச்சு
வார்த்தெய அப்பங்காரங்கிட்டெ முடிஞ்சி, அடுத்ததா மவ்வேங்காரங்கிட்டெ பேசுறதுக்கு அடிய
எடுத்து வெச்சிருந்தாரு சுப்பு வாத்தியாரு.
*****
No comments:
Post a Comment