3 Jul 2020

வளையம் ஒண்ணு!

செய்யு - 495

            லாலு மாமா பத்திரிகை வெச்சுட்டுப் போயி ரெண்டு வாரம் கழிச்சு பாக்குக்கோட்டையிலேந்து ராசாமணி தாத்தாவும், சரசு ஆத்தாவும் கார்ல பத்திரிகை வைக்க வந்துச்சுங்க. "நொழையாத விருந்தாளி அழையாம வந்திருக்கேம்!"ன்னு சொல்லிட்டேதாம் சரசு ஆத்தா உள்ள நொழைஞ்சுச்சு. சரசு ஆத்தா வந்தது தெரிஞ்சதுமே வெங்கு விழுந்தடிச்சிக்கிட்டு ஓடியாந்து, "வா! சின்னம்மா!"ன்னுச்சு. என்னிக்கு பாக்குக்கோட்டை சரசு ஆத்தா வருங்ற நெனைப்புலயே இருந்திருக்கும் போலருக்கு.
            "மவளுக்குக் கலியாணம் வெச்சிருக்கேம். குடும்பத்தோட மொத நாளே வந்துடு. எல்லாத்தையும் கூப்புடுடி. பத்திரிகெ வைக்கணும்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            வெங்கு ரண்டு பேத்தையும் ப்ளாஸ்டிக் நாற்காலியில உக்கார வெச்சு, காத்தாடிய சொழல விட்டுட்டு, தண்ணியக் கொடுத்துட்டு வூட்டுல இருந்த எல்லா சனத்தையும் கூடத்துல கொண்டாந்து நிறுத்துனுச்சு. தொடைச்சு நல்லா பளபளன்னு இருந்த பித்தளைத் தாம்பாளத்தையும் கொண்டாந்து வெச்சுது. முங்கூட்டியே தயாரா வெச்சிருந்துக்கும் போல. அதுல ரண்டு பழம், கொஞ்சம் பூவு, வெத்தல, நிசாம் பாக்க வெச்சு அத்தோட பத்திரிகையை வெச்சுது சரசு ஆத்தா.
            ராசாமணி தாத்தா தாம்பாளத்த எடுத்து சுப்பு வாத்தியார்கிட்டெ கொடுத்து, "மாப்ளே! கலியாணத்துக்குக் குடும்பத்தோட வந்துப்புடணும்!"ன்னுச்சு சிரிச்சிக்கிட்டே.
            "வந்துடறோம் மாமா!"ன்னு சிரிச்சிக்கிட்டே வாங்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            "பத்து நாளு இருக்கும்னு நெனைக்கிறேம். ரண்டாவது திங்கன்னு நெனைக்குறேம். லாலு மாமா வந்து பத்திரிகெ வெச்சுட்டுப் போனுச்சு!"ன்னு ஆரம்பிச்சிது வெங்கு.
            "அண்ணேம் எப்பவும் அப்பிடித்தாம். காரியம்ன்னா எறங்கி படபடன்னு முடிச்சிட்டே இருக்கணும் அதுக்கு. கலியாணத்துக்கு ஒரு மாசத்துக்கி மின்னாடியே பத்திரிகைய வெச்சு முடிச்சுப்புட்டு. நம்மகிட்டெ பாக்குக்கோட்டையில கலியாணத்தெ வெச்சு முடிச்சுப்புடுன்னுச்சு. பாரு அதால எல்லா கலியாண வேலையும் நம்மகிட்டயே சேந்துப் போச்சு. அவ்வேம் பாலாமணிக்கு அஞ்ஞ லீவு கெடைக்கல. அஞ்ஞயிருந்தே இவருகிட்டெ சொல்லி சொல்லி வேலையப் பாத்துட்டு இருக்காம். அதுல அலைஞ்சுட்டுக் கெடந்ததுல பத்திரிகெ வைக்குற வேல ஆவாமலே கெடந்துச்சு. அதாங் பாத்தேம். ஒரு கார்ர எடுத்துக்கிட்டு ஒரே மூச்சா வெச்சு முடிச்சிப்புடலாம்னு கெளம்பியாச்சு!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "லாலு மாமா வேற எதாச்சிம் சொன்னுச்சா இவ்வே மவ்வே செய்யுவப் பத்தி?"ன்னுச்சு வெங்கு.
            "அண்ணேம் பேசுனுச்சு. இந்தக் காரியத்தெ மொதல்ல முடிப்போம்டி! அவனயும் பாலாமணியையும் ஒரு வார்த்தெ கலந்துகிட்டு நல்லா முடிவெ எடுப்பேம்!"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "பாத்து எப்பிடியாச்சும் பண்ணி வுடு சின்னம்மா. இவ்வேம் பயலுக்குக் கலியாணம் ஆயி மூணு வருஷத்துக்கு மேல ஆவப் போவுது. மருமவ்வே வந்தப் பெற்பாடு பொண்ண எத்தனெ நாளைக்கு வூட்டுல வெச்சிக்கிட முடியும் சொல்லு. ஒண்ணும் பெரச்சன இல்லத்தாம். இருந்தாலும் ஊர்ல ஒரு பேச்சாவும் பாரு. வெளியில எங்கனாச்சும் கொடுக்கலாம்ன்னா இந்தக் காலத்துல எவ்வேம் எப்பிடியிருப்பானோன்னு அத்து வேற யோஜனயாவும், பயமாவும் இருக்கு. சொந்தத்துலன்னா கவலெ யில்ல பாரு சின்னம்மா! சித்தப்பா என்னத்தெ சொல்லுது?"ன்னுச்சு வெங்கு.
            "அவரு சாதகம் அத்து இத்தெல்லாம்ல பாப்பாரு!"ன்னு வெங்குகிட்டெ சொல்லிக்கிட்டு, "என்னங்க சாதகத்தெ பாத்தாச்சா?"ன்னுச்சு சரசு ஆத்தா ராசாமணி தாத்தாகிட்டெ.
            "ஏம்டி பத்திரிகெ வைக்குற வேல அம்புட்டுக் கெடக்கு. அதெ மொதல்ல பாக்குறதா? சாதகத்தப் பாக்குறதா? மொதல்ல இப்போ ஆவ வேண்டிய காரியத்தெ பாத்துப்புட்டு அதெ பாக்கலாம்டி!"ன்னாரு ராசாமணி தாத்தா.
            "அப்பைக்கப்போ உள்ள காரியத்தெ அப்பைக்கப்போ பாத்துட்டுப் பெறவு நெதானமா அதெ பாக்கலாம் மாமா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அதெ சொன்னதும் வெங்குவுக்கு மொகம் மாறிப் போச்சு.
            "மாப்ள சரியாச் சொல்லிப்புட்டாரே. பெறவென்னா கெளம்புறோம் மாப்புள! இன்னும் நாலு எடத்துக்குப் போனா நாலு பாத்திரிகெய வெச்சுப்புடலாம். இந்தச் சொலிய முடிச்சுப்புட்டா மித்த மித்த வேலைகளப் பாக்கலாம் பாரு! கலியாணம் முடியுற வரைக்கும் கால்ல சக்கரத்த கட்டிட்டு அலையுறதா? றெக்கைய கட்டிட்டு அலையுறதான்னு புரியல மாப்ள!"ன்னுச்சு ராசாமணி தாத்தா.
            "ன்னாடி மவ்வே, மவ்வேன், மருமவ்வே, பேத்தின்னு ஒண்ணும் ஒரு வார்த்தையும் பேச மாட்டேங்குதுங்களே?"ன்னுச்சு சரசு ஆத்தா.
            "அதுங்க அப்பிடித்தாம். பேசுறதுக்குக் கூடவா நாம்ம சொல்லிக் கொடுக்க முடியும்?"ன்னுச்சு வெங்கு.
            "அப்புறம் எல்லாத்துக்கும் கெளம்புறோம். எல்லாம் கலியாணத்துக்கு வந்துப்புடணும்!"ன்னு சொல்லிட்டு ராசாமணி தாத்தா கெளம்ப, சரசு ஆத்தாவும் கெளம்புனுச்சு. வெங்கு வாசல் வரைக்கும் மொத ஆளா வந்து, "பாத்து பத்திரமா போயிட்டு வா சின்னம்மா!"ன்னுச்சு. சுப்பு வாத்தியாரு ரண்டாவதா பின்னாடி நின்னுட்டு இருந்தாரு. காரு கெளம்புனுச்சு.
            உள்ளார வந்ததும், வெங்குவுக்குக் கோவம். "பட்டுன்னு அவ்வே செய்யுவோட சாதகத்த எடுத்து நீட்ட வேண்டித்தானே! அந்தக் காரியத்தெ அந்தந்த நேரத்துல பாத்துக்கிடாம்ன்னா என்னத்தெ அர்த்தம்? இன்னும் எத்தனெ நாளுக்கு வூட்டுல வெச்சிருக்கிறதா உத்தேசம்? சூட்டோட சூடா காரியத்தெ முடிச்சாவணும்! கால நேரம் கூடி வர்றப்போ கப்புன்னு பிடிச்சுக்கோணும்!"ன்னுச்சு வெங்கு.

            "ஏம் இப்பிடிப் பறக்குறேன்னு தெரியலயே? இதெல்லாம் நெதானமா பாக்க வேண்டிய காரியம்ங்க. அவசரப்பட முடியாது. ஒண்ணு அவுங்களாவும் வந்து கேக்கலாம். நாமளாவும் போயிக் கேக்கலாம். ஆன்னா கலியாண சோலியில இருக்குறவங்களப் போட்டு நெருக்கப் படாது. அதுவும் நாமளாப் போயிக் கட்டிக் கொடுன்னு நிக்குறதாவும் இருக்கப்படாது. அத்துச் சுத்தப்பட்டு வாராது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஏம் வாயத் தொறந்து ஒரு வார்த்தெ கேக்குறதுல என்னத்தெ கொறைஞ்சிப் போயிடுதாங்? யாருக்காக கேக்குறது? பொண்ணுக்குத்தானே! அதுக்குப் போயி அம்மாம் யோஜனெ பண்ணா? வெளியில கொடுக்குறதுன்னாலும் கேட்டுத்தானே ஆவணும். ச்சும்மா வாய மூடிட்டே இருந்துட முடியுமா? நம்ம பொண்ணுக்கு என்ன கொறைச்சல்? அழகா, படிப்பா, கொணமா? எதுலயும் எந்தக் கொறைச்சலும் இல்ல. கட்டி வெச்சா ரண்டுக்கும் பொருத்தமால்ல இருக்கும்! ந்நல்ல சோடிங்றப்ப மெனக்கெட்டுத்தாம் சேத்தாவணும்!"ன்னுச்சு வெங்கு.
            "ஒலக நடப்பு, ஒறவு நடப்பு தெரியாம பேசப்படாது. ஒறவுன்னாலும் கேக்குற மொறை இருக்கு. அந்த மொறைப்படிப் போறதுதாங் பிற்காலத்துல நமக்கு நல்லது. நாமளா போயி நின்னதா ஒரு வார்த்தெ பின்னாடி வந்துப்புடக் கூடாது. கனியுறது தானா கனிஞ்ச மாதிரிக்கித் தெரியணுமே, நாமளா கனிய வெச்சதா இருக்கப் படாது. வேலங்குடி சின்னவரு பண்ணது போல பண்ணிப்படக் கூடாதுன்னு பாக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "எதுக்கெடுத்தாலும் இப்பிடி பேசிட்டே இருந்தா, பேசிட்டே இருக்க வேண்டியதுதாங். காரியம் ஆன பாடா இருக்காது. என்னத்தெ பேசப் போறேம்? இந்த மாதிரிக்கி இந்த மாதிரிக்கி சூழ்நெல இருக்கு. பிடிச்சிருந்தா காரியத்தெ முடிப்பேம்ன்னு ஒரு வாசகத்த வுடுறதுல ஒண்ணும் கொறைஞ்சிப் போயிடாது. பேயாமல்லாம் எந்தக் காரியமும் ஆவாது. கூட கொறைச்சிப் பேசித்தாம் காரியத்தெ பண்ணியாவணும்!"ன்னுச்சு வெங்கு.
            "அதாங், நாம்ம பேசுறதுக்கும் சேத்து நீயி பேசுறல்லா! பெறவென்ன நாம்ம வேற பேசுறதுக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இதுக்கொசரம் கொறைச்சலு யில்ல! நமக்கென்ன கண்ணுக்குப் பட்ட நல்ல எடத்தெ சொல்றேம். கேட்டா கேட்டுகிடட்டும். இல்லாட்டி சாதகத்தெ தூக்கிட்டு அலயட்டும். நமக்கென்ன?"ன்னு அலுத்துக்கிடுச்சு வெங்கு.
            "ன்னவோ இன்னிக்கே சம்பந்தம் பேசி நாளைக்கே கலியாணத்த முடிக்கிறது போல பேசுறத பாரு! இந்த அவ்சரம் எதுக்கும் ஒதவாது பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இப்பிடிப் பேசிட்டே இருந்தா மறுமாமாங்கம் வரைக்கும் பேசிட்டே இருக்க வேண்டித்தாம்!"ன்னுச்சு வெங்கு.
            "ஏம்டா குடும்பத்துக்கு மூத்தவம்தானே! ஒரு வார்த்தே எதாச்சும் பேசுதீயா? நாமளே பேசணும்ன்னா எப்பிடிடா? குடும்பம் தாங்குற வயசு தாண்டிடுச்சு. இன்னமும் அப்பிடியே இருந்தா எப்பிடியோ?"ன்னுச்சு வெங்கு, விகடுவப் பாத்துத் தன்னோட பேச்சுக்கு அவ்வேன் சப்பக்ககட்டு கட்டாததால.
            "யப்பாவுக்குத் தெரியும்மா! பாத்துச் செய்யுவாங்க! இதுக்குன்னு சில மொறை தலைகள்லாம் இருக்குல்லா!"ன்னாம் விகடு.
            "மொறை தலைகளப் பத்தி ஒனக்கு ன்னடா தெரியும்? பேசுறாம் இவனும் தாளாளிச்சாப்புல பேச்ச! ஏம்டி ஆயி நீயாச்சும் ஒரு வார்ததே மாமாட்ட எடுத்துச் சொல்லுடி?"ன்னுச்சு வெங்கு.
            "ச்சும்மா கெடம்மா! கடெசீல தங்காச்சியையும் ஒரு வார்த்தெ பேசுன்னு சொல்லுவே போலருக்கு! சித்தெ பொறு!"ன்னாம் விகடு.
            "ஒனக்குப் பொண்ணுன்னு போயிப் பாத்தது ஒரு எடந்தாம். முடிஞ்சிடுச்சு. அதெ போல இவளுக்கும் முடிஞ்சிடணும்!"ன்னுச்சு வெங்கு.
            "அதல்லாம் மின்னாடியே முடிஞ்சிருக்கும் திருமருகல்லேந்து பொண்ண பாத்துட்டுப் போவ வந்தப்பவே! ஒனக்குத்தாம் இஷ்டம் இல்லாம போச்சுது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நீஞ்ஞப் போயி பாத்துட்டு வந்தீங்க. நம்மகிட்டெ ஒரு வார்த்தெ கலந்துக்கிட்டீங்களா? யில்ல நம்மள அழைச்சிட்டுப் போயித்தாம் காட்டுனீயளா?"ன்னுச்சு வெங்கு.
            "அதெ வுடு. இப்போ கலியாணத்துக்குப் போறதப் பத்திப் பாப்பேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஆம்மா கலியாணத்துக்கு மொத நாளே போயாவணும்!"ன்னுச்சு வெங்கு.
            "ஒம்போது மணி கலியாணத்துக்குக் காத்தால கெளம்புனாலும் போயிடுலாமே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதல்லாம் முடியா! நாம்ம கலியாணத்துக்கு மின்னாடி மொத நாளே போயி செலத பேசியாவணும்!"ன்னுச்சு வெங்கு.
            "நீயி ஒண்ணுத்தையும் பேசித் தொலையாத. மறுக்கா மறுக்கா சொல்றேம். இதல்லாம் மொறையா பேசிப் போவணும். நாளைக்கு ஒரு சொல்லுக்கு எடம் இருக்கக் கூடாது, நாம்ம பொண்ண பெத்து வெச்சிட்டுக் கட்டிக்க கட்டிக்கன்னு போயி நின்னதா பேச்சு வந்துப்புடக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஏம் வந்தா ன்னா தப்பு? யாருகிட்டே போயிக் கேக்குறேம்? அவனவனும் பொண்ணுக் கலியாணத்துக்காக கையில கால்ல வுழுந்தெல்லாம் எழுந்திரிக்கிறாம். இவரு என்னவோ பொண்ணுக்காக ஒரு வார்த்தே கேக்க இம்மாம் யோஜிக்கிறாரு. இவரால முடியலன்னா சொல்லட்டும். நாம்ம போயிப் பேசிக் கேட்டு பண்ணுறேம்!"ன்னுச்சு வெங்கு. சுப்பு வாத்தியாரு ஒண்ணும் சொல்ல முடியாம வாயடைச்சு நின்னாரு.
            ஏன் இப்பிடி வெங்கு அவசரம் காட்டுது? சுப்பு வாத்தியாரு இப்பிடி நெதானமா இருக்காரு?ன்னு எல்லாத்துக்கும் யோசனைத்தாம். அதெ கேட்டா சுப்பு வாத்தியாரு உடனடியா பதிலெச் சொல்ல மாட்டாரு. வெங்குகிட்டெ கேட்டா ஓராயிரம் பதிலெச் சொல்லிப் பொறிஞ்சித் தள்ளிப்புடும். அதால ரண்டு பேத்துக்கிட்ட கேக்குறதுலயும் கேக்காம இருக்குறதெ நல்லதுன்னு விகடுவும், ஆயியும் அதெ பத்தி ஒண்ணும் கேக்கல. பேசாமலே நின்னுபுட்டாங்க. நாம்மதாம் பாத்தோமே கலியாணங்றது கொறைஞ்சது அஞ்சு வளையமாவது கோக்க வேண்டிய சம்மதச் சங்கிலின்னு. இப்போ சங்கிலியோட ஒத்த வளையந்தாம் சுத்திக்கிட்டு இருக்கு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...