2 Jul 2020

ஒரு கல்! ஒரு மாங்காய்!

செய்யு - 494

            லாலு மாமா மாப்புள்ள வூட்டுப் பக்கம் தனியாவும், பாலாமணி பொண்ணு வுட்டுப் பக்கம் தனியாவும் பத்திரிகைய அடிச்சிக்கிட்டுங்க. லாலு மாமா பத்திரிகை அடிச்சிக் கொடுக்குறதுல ரொம்ப வேகம். சுப்பு வாத்தியாரு வூட்டுக்கு மொதல்ல பத்திரிகையைக் கொண்டாந்து வெச்சது லாலு மாமாதாம். தஞ்சாவூரு ஜாகையா போனதிலேந்து லாலு மாமா சுப்பு வாத்தியாரு வூட்டுப் பக்கம் அடிக்கடி வாரது கெடையாது. ரண்டாவது மவ்வே குயிலியோட கலியாணத்துக்குக் குடும்பத்தோட சுப்பு வாத்தியாரு வாராம போனதுல கொஞ்சம் வருத்தமும் இருந்துச்சு லாலு மாமாவுக்கு. அதால வடவாதிக்கு முருகு மாமா வூட்டுக்கு வந்தாலும் அப்பிடியே கெளம்பிடுறதுதாங் அதுக்கு வழக்கம். லாலு மாமவப் பொருத்தமட்டுல அதுக்கு மவனோட கலியாணந்தாம் கடெசீ தேவ. வேலனுக்குக் கலியாணத்த முடிச்சிட்டா அதடெ கடமெ முடிஞ்சி மாதிரிக்கி. ஒருத்தரு பாக்கி இல்லாம ஒறவுக்காரவுங்க, தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு எல்லாத்துக்கும் பத்திரிகைய வெச்சு மவ்வேன் கலியாணத்துக்குக் கொண்டு வந்துப்புடணும்னு கங்கணத்தக் கட்டிட்டு பத்திரிகைய வெச்ச அலைஞ்சதுல, இப்போ சுப்பு வாத்தியாரு வூட்டுக்குப் பத்திரிகை வைக்குறதுக்காக வந்திருந்துச்சு. அத்து வந்த நேரம் எல்லாமும் வூட்டுல இருந்தாங்க.
            லாலு மாமா திடீர்ன்னு ரொம்ப நாளுக்குப் பெறவு வந்ததும் எதுக்கு வந்திருக்குன்னு யாருக்கும் மொதல்ல புரியல. வடவாதியிலேந்து ஆட்டோவுல வந்து எறங்குனுச்சு. கனத்த ஒடம்பு கொஞ்சம் கூட கொறையில. அத்து நடந்து உள்ளார வந்ததப் பாத்தப்போ விகடுவுக்கு அப்பிடியே சாமியாத்தா, "யே யங்கச்சி!"ன்னு சொல்லிட்டு உள்ளார நடந்து வர்றது போலவே இருந்துச்சு. ரண்டு பேத்துக்கும் ஒடம்பு, நடெல்லாம் ஒரே மாதிரியா இருக்கும். ன்னா சாமியாத்தா கொஞ்சம் மாநெறம், லாலு மாமா கொஞ்சம் செவப்பு அதுதாங் வித்தியாசம். வூட்டுக்குள்ளார வந்ததும் வாரதுமா விகடுவோட மவ்வே பவ்வுவ வாங்கிக் கொஞ்சுனுச்சு லாலு மாமா. செய்யு லோட்டாவுல் கொடுத்த தண்ணிய வாங்கிக் கபக் கபக்ன்னு குடிச்சிச்சு. சாமியாத்தாவும் அப்பிடித்தாம் குடிக்கும். அதெ பாத்தப்போ லாலு மாமா வாத்தியார்ரா இருந்த காலத்துல கள்ளுக் குடிச்சது அப்பிடியே நெனைவுக்கு வந்துச்சு விகடுவுக்கு. இந்த நேரத்துல இப்பிடி ஏந்தாம் ஒரு நெனைப்பு வந்து தொலையுதுன்னு இருந்துச்சு விகடவுக்கு. அந்த நெனைப்ப அவனால கத்திரிச்சி அந்தாண்ட போட முடியல. லாலு மாமா தாம்பாளத்த கொண்டு வாரச் சொன்னப்பத்தாம் விசயம் குத்துமதிப்பா வெளங்குனுச்சு. பத்திரிகைய வெச்சப்பத்தாம் சுப்பு வாத்தியாருக்கே வேலனுக்கும், பிந்துவுக்கும் கலியாணங்ற சங்கதியெ தெரியுது.
            "ரண்டு பேத்துக்கும் கூட கலியாணத்தெ கட்டி வைக்கலாம்ன்னு இஞ்ஞ வூட்டுல நாஞ்ஞல்லாம் பேசிட்டுத்தாம் இருந்தோம்! ஆன்னா யாருகிட்டெ எப்பிடிச் சொல்றதுன்னு ஒரு யோஜனெ! கடவுள் செயலா அப்பிடியே நடந்து இப்போ பத்திரிகையே வந்துடுச்சு!"ன்னுச் சுப்பு வாத்தியாரு பேசுனது லாலு மாமாவுக்குப் பிடிச்சிப் போயிடுச்சு. இப்பிடி லாலு மாமாவுக்குப் பிடிக்குறாப்புல சுப்பு வாத்தியாரு எப்பவாச்சும்தாம் பேசுவாரு. இப்போ பேசுனாரு.
            "யாராச்சும் ஒருத்தரு பேசித்தானே ஆவணும்! அதாங் நாமளே எறங்கிப் பாக்குக்கோட்டைக்குப் போயி தங்காச்சிக்கிட்டே பேசுனேம்!"ன்னுச்சு லாலு மாமா.
            அப்போ விகடுவும் பக்கத்துலத்தாம் இருந்தாம். "ஏம்டா தங்காச்சிக்கும் கலியாண வயசு போயிட்டு இருக்கு. எப்படா மாப்புள்ளயப் பாத்துக் கலியாணத்தப் பண்ணி வைக்கப் போறே? அப்பாரையெல்லாம் போட்டு ரொம்ப அலட்ட கூடாது. இனுமே பொறுப்பல்லாம் நீந்தாம் எடுத்துக்கிட்டுச் செய்யணும். அஞ்ஞ பாக்குக்கோட்டையில பாரு பாலாமணித்தாம் எல்லாம். கலியாணம்ன்னு நாம்ம போயி நின்னவுடனே சகல வேலையையும் பாத்து ஏற்பாடுகள பெரமாதாம பண்ணிட்டு இருக்காம். கலியாணத்துக்கு நீயி வாரப் போறல்ல அப்பப் பாரு!"ன்னுச்சு லாலு மாமா.
            விகடு தலையக் குனிஞ்சிச் சிரிச்சிகிட்டதோட செரி. ஒண்ணும் சொல்ல.
            வெங்குதாம், "ஏம் மாமா! நீந்தாம் ஒரு மாப்புள்ளப் பையனப் பாத்து நல்ல எடமா பாத்துச் சொல்றது?" அப்பிடினிச்சு.
            "நாம்ம என்னவோ ச்சும்மா இருக்குறாப்புலல்ல பேசுறே? நம்மப் பயலுக்கு நாம்மத்தாம் போயிக் கேட்டேம். பொண்ண வெச்சிருக்கிறவங்க அவுங்களா வந்துக் கேப்பாங்கன்னு பாத்தேம். வாரல. அதுக்காவ வுட்டாப் புட்டேம்? நம்ம தங்காச்சித்தானே, மச்சாம்தான்னேன்னு எதெயும் யோசனெ பண்ணாம கேட்டேம். ஒமக்குச் சம்மதம்ன்னா சொல்லு, அதெ போல ஒம் பொண்ணுக்கு நம்ம பாலாமணி பயலுக்குப் போயிக் கேக்குறேம்! பயலும் கவர்மண்ட்ல டாக்கடர்ரா இருக்காம். நம்ம பயலப் போலயா தனியாரு காலேஜ்ல புரபஸரா இருக்காம்? கை நெறைய சம்பளம் வேற. அத்து பத்தாதுன்னு கிளினிக்கப் போட்டு, மருந்தெ தயாரு பண்ணி சம்பாதிச்சுத் தள்ளிட்டு இருக்காம். போற எடத்துல ஒம் பொண்ணு மவராணியாட்டாம் இருப்பா. டாக்கடரு மருமவ்வன்னா ஒனக்கென்ன கசக்காவா போவுது?"ன்னுச்சு லாலு மாமா.
            "நம்மட வவுத்துல பால வாத்தே மாமா! நமக்கும் அப்பிடி ஒரு நெனைப்புத்தாம். நாமாளப் போயி எப்பிடிக் கேக்குறதுன்னு யோஜனெ. மாமா! நீயி மனசு வெச்சா காரியம் ஆயிடும்! நீயிப் பாத்துச் சொன்னா நமக்குச் சம்மதம்ந்தாம்!"ன்னுச்சு வெங்கு.
            வெங்கு இப்பிடி அதுவா பேசுனுதல சுப்பு வாத்தியாரு அதிர்ந்துப் போயிட்டாரு. என்னத்தெ ஊடால பூந்து சொல்றதுன்னு ஒரு நிமிஷம் கொழப்பம் அவருக்கு. எதுவா இருந்தாலும் இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல வாணாம்ன்னு நின்னுப்புட்டாரு. என்னா இருந்தாலும் புருஷங்கார்ரேன்னு ஒரு வார்த்தே நம்மகிட்டெ கேக்காம பேசிட்டுப் போவுதேங்ற ஒரு நெனைப்போ என்னவோ! ஆனா லாலு மாமாவும், வெங்குவும் அவுங்கப் பாட்டுக்குப் பேசிட்டே போனாங்க.
            "யாரு சரசு? ஒம்மட சின்னம்மாக்காரித்தானே? நீயி போயிக் கேட்டா இல்லன்னா சொல்லிப்புடுவா? செரி பரவால்ல. ஒனக்குக் கேக்க யோஜனென்னா வுடு. நாமளே கேக்குறேம். நாம்ம அண்ணங்கார்ரனா மட்டுமில்லாம, சம்பந்தியா வேற ஆயாச்சு! அத்தோட தாய்மாமேங்ற மொறை வேற இருக்குல்லா. நம்மள மீறி அங்ஙன யாரு என்னத்தெ சொல்லிப்புட போறா? இவ்வேம் சித்துவீரம்தாம் ஆயி ஊயின்னுட்டுக் கெடப்பாம். அவனும் நாம்ம பேசுனதா தெரிஞ்சா வாயையும் சூத்தையும் பொத்திப்பாம்!"ன்னுச்சு லாலு மாமா.

            "ஆம்மா மாமா! ஒன்னத்தாம் மலெ போல நம்பிருக்கேம். பாத்து எதாச்சிம் செஞ்சி வுடு மாமா!"ன்னுச்சு வெங்கு. இதெ கேட்டுகிட்டெ இருந்த ஆயிக்கும் மொகத்துல ஆச்சரியம். "அத்தெ ன்னா இப்பிடி மாமாகிட்டெ ஒரு வார்த்தெ கலந்துக்கிடாம அவுங்க பாட்டுக்கு பேசுறாங்களே?"ன்னு அதுவும் மனசுக்குள்ள நெனைச்சிகிடுச்சு. இந்தப் பேச்சப் பத்தி ஒண்ணும் நெனைக்காம லாலு மாமா கள்ளுக் குடிச்சதையே இன்னமும் நெனைச்சிட்டு இருந்தாம் விகடு. பள்ளியோடத்துலயே கள்ளுப்பானை பொங்கி நொரை நொரையா வழிஞ்சிக் கெடந்தது நெனைவுல அலை அலையா வந்ததுல அவனுக்குள்ள களுக்குன்னு சிரிப்பு வேற வந்துப்புடுச்சு. அதெ லாலு மாமா கவனிச்சிட்டு, "பாரு! இப்பவே ஒம் மவனுக்கு டாக்கடருகார்ரேம் மச்சாங்கார்ரனா வர்றப் போறதெ நெனைச்சு சிரிப்பாணிய!"ன்னுச்சு. என்னடா இது நம்ம சிரிப்புக்கு வந்த சோதனென்னு இதுக்கு மேல எந்த உணர்ச்சியும் மொகத்துல தெரியக் கூடாதுன்னு மொகத்த அப்பிடியே பாறாங்கல்லு போல வெச்சிக்கிட்டாம் விகடு.
            "இருக்காதே பின்னே மாமா! அவனுக்கும் ஒரு கெளரவமா போயிடும் டாக்கடரு மச்சாம்ன்னா! நமக்கும் ஒரு பாரம் எறங்கி கடமெ முடிஞ்சிடும்!"ன்னுச்சு வெங்கு.
            "கலியாண ஆவட்டும். பாத்துப் பேசிப்புடுறேம். அதுக்குள்ளயே பாக்குறப்பெ ஒரு கல்ல வீசுறாப்புல, ஒத்தச் சொல்ல வீசி வைக்கிறேம். விழுந்தா மாங்கா, இல்லாட்டியும் எறிஞ்ச கல்லுதானே விழுவப் போவுது. யாருக்கென்ன நட்டம் பாத்துக்கோ!"ன்னுச்சு லாலு மாமா.
            "அப்பிடில்லாம் சொல்லாத மாமா! பாத்து எப்பிடியாச்சும் முடிச்சு வுட்டுப்புடு!"ன்னு வெங்கு பேசப் பேச சுப்பு வாத்தியாருக்கு மனசுக்குள்ள சொல்ல முடியாத கோவம். இருந்தாலும் மனசுக்குள்ள என்ன இருக்குங்றதெ காட்டிக்காத அளவுக்கு அவரும் விகடுவப் போல மொகத்த அப்படியே பாறங்கல்லப் போல வெச்சிக்கிட்டாரு.
            "சித்தெ பொறுத்து யிரு! இந்தக் கலியாணம் முடியட்டும். நாமளே மின்னாடி நின்னு முடிச்சி வைக்கிறேம் போதுமா? நீயி ஒண்ணும் கவலெப்படாதே. கலியாணத்துக்கு மொத நாளு மின்னாடியே குடும்பத்தோட எல்லாமும் வந்துப்புடுங்க. இப்போ ஆவ வேண்டியதெ மொதல்ல பாப்பேம். பெறவு அவனுக்குத்தாம் கலியாணத்த முடிச்சாவணும். வயசாயிப் போயிக் கெடக்கு. சட்டுபுட்டுன்னு முடிச்சித்தாம் ஆவணும். அவ்வேம் பாலாமணியும் நாம்ம சொன்னா மீறுற பயக் கெடையாது. நீயி மனசுல ஒண்ணும் கொழப்பிக்காம கெட. கலியாணத்துக்கு வந்துச் சேரு! பாத்துக்கிடலாம்! நெறையப் பேத்துக்குப் பத்திரிகெ வெக்க வேண்டிய வேல வேற கெடக்கு. பேசிட்டே இருந்தா நேரம் போறது தெரியாது. கலியாணத்தெ முடிச்சிட்டு ஒரு நாளு வந்து நெதானமா உக்காந்துப் பேசுவேம்!"ன்னுச்சு லாலு மாமா. சொல்லிட்டு டீத்தண்ணியக் குடிச்சிட்டு, தட்டுல வெச்சிருந்த பண்டத்தெ ஒரு வாயி அள்ளிப் போட்டுக்கிட்டு கெளம்புனுச்சு லாலு மாமா.
            "யப்பாடி உஞ்சினி அய்யனாரே! எப்படியாச்சிம் மவளுக்கு நெனைச்சபடிக்கு கலியாணம் ஆயிடணும்!"ன்னு எல்லாத்துக்கும் கேக்கறபடியே மெல்லமா முணுமுணுப்பா சொன்னிச்சு வெங்கு.
            லாலு மாமாவ வெளியில கொண்டு போயி வழியனுப்பி வெச்சிட்டு வந்து சுப்பு வாத்தியாரு வெங்குவப் பாத்துப் பேசுனாரு. "யார்ர கேட்டுகிட்டு டாக்கடரு பயலப் பாத்து கட்டி வெச்சிப்புடுன்னு கேக்குறே?"ன்னு.
            "ஆம்மா என்னவோ இதுகிட்டெ சொன்னா காரியும் ஆவுறாப்புலல்ல பேசுதீயே? ஒரு வார்த்தையெ வுட்டு வைக்குறதாங். அப்பிடியே ஆன்னா சந்தோஷம். இல்லாட்டி வேற எடத்தெ பாப்பேம்!"ன்னுச்சு வெங்கு.
            "ஒஞ்ஞளுக்கு இதுல இஷ்டந்தாம் அத்தெ. உஞ்சினி அய்யானாருகிட்டெ நீஞ்ஞ வேண்டிக்கிட்டது எல்லாரு காதுக்கும் கேட்டிச்சு!"ன்னுச்சு ஆயி.
            "ஆம்மா வேண்டிக்கிட்டேம்தாம். உந் நாத்தனாருக்கு ஒரு டாக்கடருகார்ரேம் புருஷனா வாரக் கூடாதா?"ன்னுச்சு வெங்கு.
            "யய்யோ யத்தே! நாம்ம அப்பிடிச் சொல்லல. அப்படி வந்தா ரொம்ப சந்தோஷந்தாம். ஆன்னா மாமா சொல்றதெ கவனிச்சிங்களா? அதெ வெச்சிக்கிட்டுக் கேட்டேம்!"ன்னுச்சு ஆயி.
            "அவரு சொல்லுவாரு உருப்படாததெ. பாத்துட்டு வந்தாரே செல செய்யுற ஒருத்தனெ? அத்தெ மாதிரித்தாம் கொண்டாருவாரு! ஒரு கவர்மெண்டு வேலையில இருக்குறவனெ பாத்தா நல்ல வெதமா பொண்ண வெச்சிருப்பானா? இப்பிடி தெனக்கூலியா இருக்குறவனெ பாத்தா பொண்ண நல்ல வெதமா வெச்சிருப்பானா? இவருல்லாம் வாத்தியார்ரா இருந்தவருதானே? ஒஞ்ஞ அப்பங்காருல்லாம் எம்மாம் வெவரமா நம்மட பயலுக்கு ஒன்னயக் கொடுத்துருக்காரு!"ன்னுச்சு வெங்கு.
            "யத்தெ சொல்றதுங் சரித்தாம் மாமா!"ன்னுச்சு ஆயி இப்போ அத்தைக்காரிப் பக்கமா சாஞ்சிகிட்டு.
            "ஒண்ணு அந்தப் பக்கம் பேசுறது, யில்ல இந்தப் பக்கம் பேசுறது. இதுவே வேலையாப் போச்சு ஒனக்கு. சரியா பேசணுமா யில்லயா? அவ்வேம் டாக்கடரு. பொண்ணு கொடுக்க அவனவனும் வரிஞ்சிக் கட்டிட்டு நிப்பாம். நம்மாள அம்மாம் செய்ய முடியுமா? அதெ வுடு. டாக்கடருன்னா அவனோட நெலப்பாடு, கொணப்பாடுங்றது வேற. கஷ்டப்பட்டு படிச்சி மின்னுக்கு வந்தவந்தாங். இல்லங்கல. நம்மள மாதிரிக்கி இருந்த குடும்பத்துல இருந்ததாம் வந்திருக்காம். அதயும் இல்லங்கள. இருந்தாலும் இனுமே அவனோட நெலப்பாடும், கொணப்பாடும் வேறத்தாம். டாக்கடரு ஆயிட்டாம்ல்லா. அதுக்குத் தகுந்தாப்புல இருக்குற குடும்பத்துலேந்து பொண்ணு எடுக்கப் பாப்பானா? நம்மக் குடும்பத்துலேந்து பொண்ண எடுக்கப் பாப்பானா? நாம்ம நடுத்தர வர்க்கங்றதெ மறந்துப்புடக் கூடாது. நாம்ம அதுக்குத் தகுந்தாப்புல நடுத்தர குடும்பமா பாத்து பொண்ணு கொடுத்தாத்தாம் நாளைக்கி பல வெசயங்கள்ல நல்லது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இவரு ஒருத்தரு இப்பிடித்தாம் பேசுவாரு. வாத்தியார்ரா இருந்துருக்காரு. ரிட்டையர்டு ஆயி ச்சும்மா வாந்தாரு? காசி பணமெல்லாம் கெடக்குல்லா. நகெ நட்டுல்லாந்தாம் சேத்து இருக்கு. மவனுந்தாம் வாத்தியார்ரா இருக்காம். அதெ வெச்சி ஒரு டாக்கடருக்கு எம் பொண்ண கட்டி வெச்சா கொறைஞ்சா போயிடப் போவுது? சந்தர்ப்பம் இருக்குங்றதால கேக்குறேம். யில்லன்னா யாரு கேக்கப் போறா? எதெ ஆரம்பிச்சாலும் பாரு! அதுக்கு எகுடுதகடாவே பேசுறது? நல்ல வார்த்தெ ஒரு நாளாச்சிம் வாயிலேந்து வருதான்னு பாரு!"ன்னு வெங்கு அது பாட்டுக்கு ஆரம்பிச்சிடுச்சு. அதெ கேக்க ஆரம்பிச்ச ஒடனே விகடு அவ்வேம் எடத்த விட்டு நைசா கொல்லைப் பக்கமா வந்துட்டாம். ஆயயும் நைசா நகந்து அவ்வேங் கூட வந்தா. "ந்நல்ல வேளையா ஒண்ணும் வார்த்தயெ வுடாம நீஞ்ஞ தப்பிச்சிப்புட்டீங்க. நாம்மத்தாம் வாய வெச்சிட்டு ச்சும்மா இருக்க முடியாமா..."ன்னுச்சு ஆயி.
            "ன்னாடி ஆயி! அஞ்ஞ புருஷங்கார்ரன்ன தள்ளிகிட்டுப் போயி என்னத்தெ பேசுறே? கலியாணச் சிலவு ரொம்ப ஆயிடும்ன்னா?"ன்னு கொல்லப் பக்கம் பாத்து ஒரு சத்தத்தெ வுட்டுச்சு வெங்கு.
            "நாம்ம ஒண்ணும் சொல்ல யத்தே! கொல்லப் பக்கம் வந்தாங்களேன்னு வந்தேம். இத்தோ ஒஞ்ஞகிட்டயே வந்துட்டேம் யத்தே!"ன்னு வூட்டுப்பக்கமா உள்ளார ஓடிப் போனா ஆயி.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...