28 Jul 2020

கலியாணத்துக்குச் செலவா அஞ்சு லட்சம்!

செய்யு - 519

            பாக்குக்கோட்டையிலேந்து செய்யுவப் பொண்ணு பாத்துட்டுப் போன பெற்பாடு அங்கயிருந்து சேதி ஒண்ணும் வந்த பாடில்ல. எதாச்சும் சேதி கெடைக்குங்றதுக்காக சுப்பு வாத்தியாரு ரண்டு நாளைக்கு ஒரு தடவெ முருகு மாமா வூட்டுக்கும், சித்துவீரன் வூட்டுக்குமா அலைஞ்சிட்டுக் கெடந்தாரு. கலியாணங்றது ஆயிரம் காலத்துப் பயிரு, மெதுவா நடக்குறதுதாங் நல்லது, பொண்ண வந்து பாத்த பெற்பாடு அடுத்தது தானா நடந்துதானே ஆவும்ன்னு சுப்பு வாத்தியாரு பாக்க போன ஒவ்வொரு தவாவும் ஒரு சமாதானம் அங்கேயிருந்து வந்துச்சு. சுப்பு வாத்தியாருக்கு ஒரு நல்ல சேதி கெடைச்சா ஒறவுக்கார சனங்கள அழைச்சிட்டுப் போயி மாப்புள்ளையப் பாத்துட்டு வந்துப்புடணும்ன்னு நெனைச்சிட்டு இருந்தாரு. வெங்குவுக்கும் சீக்கிரமா மாப்புள்ளையப் போயி பாத்துட்டு வந்துட்டா அடுத்ததா மூர்த்தோலைக்கான ஏற்பாடு ஆயிடும்ன்னு ஏங்கிட்டு இருந்துச்சு. அவுங்க பொண்ண பாத்துட்டுப் போயி ஒரு மாச காலம் ஓடிப் போயிடுச்சு. சேதி ஒண்ணும் வந்த பாடில்ல. முருகு மாமா வூட்டுக்கும், சித்துவீரன் வூட்டுக்கும் அலைஞ்சு அலுத்துப் போயி, ஒரு நாளு சுப்பு வாத்தியாரு விகடுவெ வெச்சு பாக்குக்கோட்டை தாத்தா ராசாமணிக்குப் போன போடச் சொல்லிப் பேசுனாரு.
            "ன்னா மாமா! செளரியமா இருக்கீயளா? பேசி நாளாச்சேன்னு அடிச்சேம்!"ன்னு ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு.
            "எல்லாம் செளரியந்தாம் மாப்ளே! நாமளே அடிக்கணும்ன்னு நெனைச்சிட்டு இருந்தேம். நல்ல வேளையா நீஞ்ஞளே அடிச்சிட்டீயே! அஞ்ஞ பேத்தியா, பேரம்லாம் எப்டி இருக்காம்?"ன்னாரு ராசாமணி தாத்தா.
            "எல்லாம் செளரியந்தாம் மாமா! நம்ம ஒறவுக்கார சனங்க எல்லாம் மாப்புள்ளைய வந்துப் பாக்கணும்ன்னு துடியா இருக்காக. ஒரு தேதியச் சொன்னியள்ன்னா அவுங்கள திருப்தி பண்ணுறாப்புல மாப்புள்ளையக் கொண்டாந்து காட்டிப்புடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நேரடியா வெசயத்துக்கு வர்றாப்புல.
            "நாமளும் அதாங் மாப்ளே நெனைச்சிட்டு இருந்தேம்! அஞ்ஞ பொண்ணப் பாத்துட்டு வந்துலேந்து இஞ்ஞ ஒரே வேலையா போயிடுச்சு. பயெ அவனுக்கும் வேல சோலி ஒழியல. லீவு ஏதும் எடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டதாக் கேள்வி. அதாங் எல்லாம் கொஞ்சம் ஓயட்டுமேன்னு பாத்தேம்!"ன்னாரு ராசாமணி தாத்தா.
            "வந்துப் பாத்துப்புட்டா இந்த ஆவணியில கூட மூர்த்தோலைய முடிச்சிப்புடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "வாஸ்தவந்தாம்! நாம்ம கொஞ்சம் வடவாதி, தஞ்சாரூர்ல கலந்துகிட்டு அப்பிடியே மவ்வேங்கிட்டெயும் ஒரு வார்த்தெ கலந்துகிட்டுச் சொல்றேமே!"ன்னாரு ராசாமணி தாத்தா.
            "நல்லதுங் மாமா! அப்பிடியே பண்ணலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "செரி மாப்ளே! எல்லாத்தையும் வெசாரிச்சதா சொல்லுங்க! வெச்சிடுறேம்!"ன்னாரு ராசாமணி தாத்தா. போன வெச்சிட்டாரு.
            சுப்பு வாத்தியாரு மொகத்துல லேசா ஒரு கலக்கம் தெரிஞ்சாப்புல இருந்துச்சு விகடுவுக்கு. "ன்னப்பா! மொகம் சுண்டுனாப்புல இருக்கே?"ன்னாம் விகடு.
            "ஒண்ணுமில்லே! பொண்ண பாக்கணும்ன்னு வந்தது! யிப்போ நாம்மப் போயி மாப்புள்ளயப் பாக்கணும்ன்னா அங்க கலந்துக்கிடணும், இங்க கலந்துக்கிடணும்ன்னு சேதி வருது! பொண்ண பிடிச்சித்தாங் பாக்க வந்ததா? ன்னான்னு புரிய மாட்டேங்குது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இத்து ல்லன்னா இன்னொரு எடம் அதுவா வரும்ப்பா! வந்தா பாப்பேம்! யில்லன்னா தங்காச்சி எம்பில் பண்ணணும்ன்னு நிக்குது. அதெ பண்ணிக்கிட்டெ கெடக்கட்டும்! வரன் வந்தா முடிச்சி வுட்டுப்புடலாங்!"ன்னாம் விகடு.
            சுப்பு வாத்தியாரு மொகம் கலவரமாயிடுச்சு. "எஞ் சக்திக்கு மீறி படிக்க வெச்சிட்டேம்! ஆம்பளெ புள்ள ஒன்னயக் கூட அந்த அளவுக்குப் படிக்க வைக்கல. நீயும் படிக்கல அத்து வேற வெசயம். பெத்தவங்கன்னா புள்ளீயோள ஒரு டிகிரி வரைக்கும்தாம் படிக்க வைக்கலாங். அதுக்கு மேல அதது சம்பாத்தியத்துல மேல மேல படிச்சிக்கிடணும். சின்ன புள்ளீயோள படிக்க வைக்குறாப்புல தோளுக்கு மேல வளந்த பெற்பாடும் படிக்க வெச்சிக்கிட்டெ இருக்க முடியா. ஒந் தங்காச்சிக்கு எம்மெஸ்ஸிய முடிச்சி, பியெட்ட முடிச்சிக் கொடுத்தாச்சு. அதெ வெச்சி இனுமே அது கதைய அத்து பாத்துக்கிட வேண்டியதுதாங். இப்போ அத்தோட கலியாணத்தெ முடிச்சு அதோட கதைய கட்டி வுட வேண்டியதுதாங். இத்து மேல மேல படிக்க படிக்க அந்தப் படிப்புக்கு ஏத்தாப்புல மாப்புள்ளயத் தேடிகிட்டு நாம்ம கெடக்க முடியாது பாரு. ஒனக்கு நடைமுறை புரியாது. ஒலகமும் தெரியாது. ஏட்டுல படிச்சிப்புட்டா ஆச்சா? பொழுதேனைக்கும் திருக்குறள படிச்சிட்டு இருக்கீயே? ஒலகத்தோடு ஒட்ட ஒழுகல்ன்னுத்தான அதுல போட்ருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            தாம் கேட்டதுக்கு இம்மாம் பெரிய விளக்கம் வரும்ன்னு விகடு எதிர்பார்க்கல. "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு!"ன்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டாம். சுப்பு வாத்தியார்கிட்டெ சொல்ல. சொன்னா மேக்கொண்டு ஒரு வெளக்கத்துல எறங்கப்புடுவாரு. விகடு அமைதியாயிட்டாம்.
            "போயி வடவாதியில வெசாரிக்கணும். ன்னா நெனைப்புல இருக்காங்கன்னு?"ன்னு சொல்லிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            அன்னிக்கு ராத்திரி முருகு மாமா வூட்டுக்குப் போனாரு சுப்பு வாத்தியாரு. பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தாகிட்டெ பேசுனதெப் பத்தி சொன்னாரு. அதெ பொறுமையா கேட்டுக்கிட்டெ முருகு மாமா, "கலியாணச் செலவே பண்ற நெலையில யில்லன்னு யோசிக்கிறாவோ பாக்குக்கோட்டையில!"ன்னு ஆரம்பிச்சிது.
            "பெறவு எதுக்குப் பொண்ணப் பாக்க வந்தது?"ன்னு மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு, ஆனா வெளியில சொல்லல.
            "கலியாணச் செலவப் பாத்து பண்ணி வுடுற மாதிரிக்கி வேற எதாச்சும் சம்பந்தம் வார்றதுன்னா அந்தக் கணக்குக்கு இன்னும் ரண்டு எடத்துல பொண்ண பாக்குறதா கேள்வி! அதெ நம்மகிட்டெ வெளிப்படையா சொன்னாக்கா, இஞ்ஞ வந்துக்கிட்டு இருக்குற ஒஞ்ஞகிட்டெ கேட்டுப்புட்டுச் சொல்லிடலாம் பாருங்க. இப்பத்தாம் சித்தெ நேரத்துக்கு மின்னாடி பாக்குக்கோட்டையிலேந்து சரசு சொன்னுச்சு. அதாங் கொஞ்சம் யோஜனெ பண்ணிட்டு இழுத்துக்கிட்டு இருக்காங்க!"ன்னுச்சு முருகு மாமா.
            "அதெல்லாம் யோஜனெ பண்ணித்தான பொண்ணப் பாக்க வந்திருப்பாவ?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நம்மகிட்டெ அரசல் பொரசலா மின்னாடி சொன்னது. ரண்டாவது பொண்ணு பிந்துவக் கலியாணங் கட்டிக் கொடுத்ததுல ஏகப்பட்ட சிலவாம். கடன ஒடன ஏகப்பட்டதெ வாங்குனதுல நெலமையச் சமாளிக்க முடியாம இருக்குறதா ஒரு கேள்வி. கலியாணத்தையும் பண்ணி வுட்டா தேவலாம்ன்னு பேசிக்கிட்டுக் கெடந்துச்சுங்க. அது கெடக்கு கழுதெ மாப்புள பாக்குறது ஒரு வேல இருக்குல்லா. அதெ முடிச்சிட்டு மூர்த்தோலையப்போ சொல்லிப்புடலாம்ன்னு நாம்ம நெனைச்சிருந்தேம்! அத்துப் புரியாம இந்தச் சனங்க ஒண்ணு கெடக்க பண்ணிட்டுக் கெடக்குதுங்க!"ன்னுச்சு முருகு மாமா.
            "அதுக்கென்ன நாம்ம கலியாணத்த முடிச்சி வுட்டுப்புடுவேம்! இதுல ன்னா இருக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதெ நாம்ம முடிச்சிப்புடலாங். பயெ டாக்கடர்ரால்லா இருக்காம். அதுக்கேத்தாப்புல செய்யணும் யில்லியா? நாம்ம ச்சும்மா நம்ம அளவுக்குச் செய்வேம். அதுல ஒரு யோஜனெ!"ன்னுச்சு முருகு மாமா.
            "ன்னான்னா கொஞ்சம் தெளிவா சொன்னா புரியும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அவ்வேம் கொஞ்சம் தடபுடலா பண்ணணும்ன்னு நெனைக்கிறாம். அவ்வேம் பாக்குக்கோட்டையாம் குடும்பத்துக்கு இதுதான கடெசீத் தேவ. பாக்குக்கோட்டையிலயே வெச்சு பெரமாதமா பண்ணிப்புடணும்ன்னு நெனைக்கிறாங். கலியாண சிலவா அஞ்சு லட்சத்துக்குக் கணக்கெ போட்டு வெச்சிருக்காங். அதுக்கான காசி பணத்தெ தெரட்டுற தோது இப்போ அஞ்ஞ யில்ல. நாம்மன்னா ஒன்றரை ரண்டு லட்சத்துக்குள்ள அதெ வெச்சி முடிச்சிப்புடுவேம். டாக்கடர்ரால்லா இருக்காங். நம்மால அவ்வேம் நெனைக்குற எதிர்பாக்குற அந்தத் தோதுக்கும் செய்ய முடியா. நாம்ம செய்யுறதுன்னா நம்ம எடத்துல திருவாரூர்லயோ, ஆர்குடியிலயோ வெச்சி செய்வோம். அவ்வேம் பாக்குக்கோட்டையில வெச்சி அந்தச் சிலவெ சமாளிச்சி வுடுறாப்புல பொண்ணு கெடைக்குமான்னு பாக்குறாம். அதாச்சி கலியாணச் சிலவுன்னு அஞ்சு லட்சத்தெ கையில காசியக் கொடுக்குறதா சொல்லிப்புட்டா மேக்கொண்டு காரியத்தெ பாருடான்னு உத்தரவெ போட்டுப்புடலாம்ன்னா பாருங்களேம்!"ன்னுச்சு முருகு மாமா.
            அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாருக்குத் தூக்கிவாரிப் போட்டுச்சு. கலியாணச் சிலவுக்கு அஞ்சு லட்சத்து காசிக்கு ஒப்பந்தம் ஆச்சுன்னா மேக்கொண்டு மாப்புள்ளயப் பாக்க வாங்கடான்னு சொல்லாம சொல்றானுவோளேன்னு நெனைச்சுக்கிட்டாரு. அஞ்சு லட்சத்துக்கு அப்பிடி என்னத்தெ கலியாணச் சிலவெ பண்ணுவானுங்கன்னு அவருக்கு யோஜனெ போயிடுச்சு. ரெண்டாயிரத்து பதினாலாவது வருஷத்துல அது ரொம்ப அதிகமான காசித்தாம். கலியாணச் சிலவுக்கு அஞ்சு லட்சம், நக நெட்டு நூத்து பவுனு, காரு வாங்கிக் கொடுக்குற சிலவு, தேக்கங் கட்டிலு, பீரோன்னு அத்து ஒண்ணரை லட்சம், பாத்திரம் பண்டம்ன்னு அது ஒரு சிலவுன்னு எல்லாத்தையும் மனசுக்குள்ள ஓட விட்டாரு சுப்பு வாத்தியாரு. மூர்த்தோலே பொண்ணு வூட்டுப் பக்கமா, மாப்புள வூட்டுப் பக்கமான்னு தெரியாதப்போ, அதெயும் பொண்ணு வூட்டுலயே பாத்து எழுதிடச் சொன்னா அது ஒரு சிலவு. போறப் போக்கப் பாத்தா அதெயும் நம்மள வுட்டுத்தாம் எழுதச் சொல்லுவான்னுவோ போலருக்குன்னு சுப்பு வாத்தியாரு எல்லாத்தையும் யோஜனெ பண்ணிக்கிட்டு தெகைச்சிப் போயி உக்காந்திருந்தாரு. அவருகிட்டெயிருந்து முருகு மாமா ஒரு பதிலெ எதிர்பாத்துச்சு. சுப்பு வாத்தியாரு எதுவும் சொல்லல. 
            முருகு மாமா யோசிக்க நேரம் எடுத்துக்கிடலெ. பட்டுன்னு அடிச்சிச்சு. "நீஞ்ஞத்தாம் சொல்லணும். மேக்கொண்டு பதிலச் சொன்னா பேசிப்புட்டு மாப்புள்ளையப் போயி பாத்துப்புடலாம்!"ன்னு.
            சுப்பு வாத்தியாரு வார்த்தைகளத் தேடிப் போட்டு கோத்துச் சொன்னாரு. "நாம்ம ரிட்டையார்டு ஆயி பென்சன் காசில்ல இருக்கேம். பொண்ணு கலியாணத்துக்குக் கொஞ்சம் சேத்து வெச்சிருக்கேம்தாம். இதுக்கு மேலன்னா மவ்வேம்ங்கிட்டெயும் ஒரு வார்த்தெ கேட்டாவணும். குடும்பத்துல சம்பாத்தியத்துல இருக்குற ஆளு அவ்வேம்தானே. வூட்டுலயும் ஒரு வார்த்தெ கலந்துக்கிடணும்."ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "வாஸ்தவந்தாம். திடுதிப்புன்னு ஒரு பதிலெ சொல்லிப்புட முடியாது. கலந்துக்கிட்டுச் சொல்லுங்க. ஒண்ணும் அவ்சரமில்ல. பதிலெச் சொன்னாக்கா நாம்ம பாக்குக்கோட்டைக்குப் போன அடிச்சி விட்டுப்புடுவேம்!"ன்னுச்சு முருகு மாமா அசால்ட்டா.
            சுப்பு வாத்தியாரு தொவண்டாப்புல எழுந்திரிச்சாரு. அப்பிடியே சித்துவீரன் வூட்டுக்கும் போயி ஒரு வெசாரிப்பப் போட்டுட்டா இதுதாங் உண்மை நெலவரமாங்றது தெரிஞ்சிடும்ன்னு நெனைச்சவரு, "வந்தது வந்துட்டேம்! அப்டியே சித்துவீரன் வூட்டுக்கும் போயி ஒரு பார்வே பாத்துட்டுப் போயிடுறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அஞ்ஞப் போனாலும் அவனும் இதெத்தாங் சொல்லுவாம்!"ன்னுச்சு முருகு மாமா. அப்பனும் மவனும் பிடிக்காத மாதிரிக்கி நடந்துகிட்டாலும், எல்லாப் பயலும் பேசி வெச்சிட்டுத்தாங் செய்யுறானுவோளான்னு ஒரு நெனைப்பு உண்டாச்சி சுப்பு வாத்தியாருக்கு.
            "அதுக்கில்லே. இஞ்ஞ வந்தா அஞ்ஞயும் ஒரு பார்வே பாத்துட்டுப் போயிடுறது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "அதுக்கென்ன பாத்துட்டுப் போயிடுங்க! கொஞ்சம் பாத்துட்டுப் பேசிட்டுப் போனா அத்து ஒரு மாதிரியாத்தாம் இருக்கும்!"ன்னுச்சு முருகு மாமா.
            சுப்பு வாத்தியாரு கெளம்புறப்போ அது வரைக்கும் பேயாம எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு உக்காந்திருந்த நீலு அத்தெ பேசுனுச்சு, "அஞ்சு லட்சத்தப் பாக்க வாணாம். பொண்ணுக்கு ன்னா சொத்துல பாகத்தையா கொடுக்கப் போறேம்? கலியாணத்தச் செய்யுறப்ப ந்நல்லா செஞ்சி வுட்டுப்புடுவேம்!"ன்னுச்சு.
            அதெ கேட்டதும், சுப்பு வாத்தியாரு அந்த ராத்திரி நேரத்து இருட்டுல கண்ணு தெரியாதவனப் போல வுடப்பட்டவர்ரா உணர்ந்தாரு. அதுக்கு என்னத்தெ சொல்றதுன்னு தெரியாம மனசுக்குள்ள அழுதுகிட்டெ மொகத்துல ஒரு சிரிப்பெ சிரிச்சிக்கிட்டாரு. டிவியெஸ்ஸ எடுத்து ஸ்டார்டு பண்ணாரு. அவரோட வண்டி சித்துவீரன் வூட்டெ நோக்கிப் போனுச்சு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...