கொரோனா காலத்தில் எங்கள் கிராமம்
வணிக நிறுவனங்களின் உத்திகள் எப்போதும்
வாய் பிளக்க வைப்பதாகவே உள்ளது. உதாரணத்துக்கு இந்தக் கொரோனா காலத்தில் அரை பிளேட்
பிரியாணி வாங்கினால் ஒரு மாஸ்க் இலவசம், ஒரு பிளேட் வாங்கினால் சானிடைசர் இலவசம், இரண்டு
பிளேட் வாங்கினால் கபசுர குடிநீர் இலவசம் என்ற வணிக உத்தியைப் பார்த்து அசந்து விட்டேன்.
ஒரே ப்ளாட்பாரத்தில் இப்பிடி ஒரு விளம்பரத்தையும்,
மாஸ்க்கோடு நின்றிருந்த மூதாட்டி ஒருத்தியையும் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த
மூதாட்டி நெருங்கி வந்து, "ஒரு பத்து ரூவா இருந்தா கொடுய்யா! ஒரு வாயி டீத்தண்ணிக்
குடிச்சிக்கிறேன்!" என்ற போது சட்டைப் பையிலிருந்து பத்து ரூவாயை எடுத்து நீட்டினேன்.
அதை வாங்கிக் கொண்டு நனைந்த கண்களோடு பார்த்த மூதாட்டி சொன்னது, "மாஸ்க், சானிடைசர்
எல்லாம் கிடைக்குது. பசிக்குச் சோறுதாம்யா கிடைக்க மாட்டேங்குது!"
நகரத்தைப் பார்த்தப் போது நடந்த சம்பவம்
இது. இதே காலத்தில் கிராமம் எப்பிடி இருந்ததென்றால்...
கொரோனா காலத்தில் உங்கள் கிராமம் எப்படி
இருக்கிறது என்று கேட்டு எத்தனையோ பேர் கேட்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே போய் விட்டார்கள்.
ஊரடங்கின் முழுமையான கட்டுபாடு அச்சரம் பிசாகம் கடைபிடிக்கப்பட்டது இந்தியாவிலேயே,
ஏன் உலக அளவிலேயே அநேகமாக எங்கள் கிராமமாகத்தான் இருக்கும்.
ஊரடங்கு அறிவிப்பு வருவதற்கு முன் கிராம
சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் எங்கள் கிராமத்துச் சாலைகளைப் பொக்லைன் வைத்து பெயர்த்துப்
போட்டார்கள். ஊரடங்கு வந்ததும் பெயர்த்துப் போட்ட சாலையை அப்பிடியேப் போட்டு விட்டுப்
போய் விட்டார்கள். இதனால் எங்கள் கிராமத்துச் சாலை வழியாக யாரும் வெளியே செல்லவும்
முடியவில்லை, வெளியிலிருந்து யாரும் உள்ளே வரவும் முடியவில்லை. அதற்குப் பின் எங்கள்
கிராமத்துச் சாலையில் ஒரு இரு சக்கர வாகனத்தைப் பார்ப்பதற்கு இரண்டு மாத காலத்திற்கு
மேல் ஆனது. ஒரு நாள் ஒப்பந்தகாரர் பெரிய மனது வைத்து ரோடு ரோலரை வைத்து கொஞ்சம்
சமப்படுத்தி விட்டுப் போனார். எங்கள் கிராமத்தின் ஊரடங்கு முழுமையாக அமைந்ததற்கு நாங்கள்
அந்த ஒப்பந்தக்காரருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
மற்றபடி பெயர்த்துப் போட்ட சாலையின் வழியாகச்
சென்று வயல் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். உளுந்து அடித்தோம், பயிறு அடித்தோம்,
எள்ளு அடித்தோம். அடித்த உளுந்து, பயிறு, எள்ளை மூட்டையாகத் தலையில் சுமந்து கொண்டு
பெயர்ந்துப் போன சாலையின் வழியாக வீடு வந்து சேர்ந்தோம். உளுந்து, பயிறு, எள்ளைத்
தொடர்ந்து சில வாரங்களில் பருத்தி எடுக்கும் வேலை ஆரம்பித்தது.
ஆற்றில் தண்ணீர் வந்த போது குறுவைக்கான
வேலைகள் ஆரம்பித்தன. ஒரு சில வயல்களில் தண்ணீர் பாயாமல் ஆற்றிலிருந்து பம்புசெட்டை
வைத்து வயலுக்கு பாய்ச்சினோம். இது நடந்தது திட்டை கிராமத்தில். அது வெண்ணாற்றுப்
பாசனம். ஒரு சில வயல்களில் தண்ணீர் அதிகமாகப் பாய்ந்ததில் வயலிலிருந்து தண்ணீரை ஆற்றுக்குப்
பாய்ச்சினோம். இது நடந்தது ஓகையூர் கிராமத்தில். அது வெள்ளையாற்றுப் பாசனம். இப்பிடியாகக்
கிராமத்தில் ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது.
அத்துடன் கொரோனா அச்சத்தில் கிராமத்தில்
பலரும் கபசுரநீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது பிடிக்காதவர்கள் டாஸ்மாக் வடிநீர்
குடித்துக் கொண்டிருக்கிறார்கள். டாஸ்மாக் வடிநீரில் இருக்கும் ஆல்கஹால் கொரோனாவைக்
கொன்று விடும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
இதைத் தவிர்த்துக் கிராமம் கிராமமாகத்தான்
இருக்கிறது. காகம் கரைகிறது, குருவிகள் கீச்சிடுகின்றன, அணில்கள் அங்கும் இங்கும் ஓடுகின்றன.
கிராமத்திற்கு வந்துப் போகும் பேருந்துகள் மட்டும் ஓடவில்லை.
*****
No comments:
Post a Comment